Pages

நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்....
நம் நாடு விடுதலை அடைந்தபோது, நாட்டின் ஆட்சி நிர்வாகம், நீதி அமைப்பு, இராணுவ அமைப்புகள், சட்ட அமைப்பு இவை எல்லாமே, ஆங்கிலேயர் ஆட்சியில் எப்படி இருந்தனவோ அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் மாற்றங்கள் வந்தாலும்,  ஆங்கிலேயர் பயன்படுத்திய அடிப்படை கட்டமைப்பைத்தான் அப்படியே இன்றும் பயன்படுத்துகிறோம்!! சரி, ஆங்கிலேயர் அந்த நிர்வாகக் கட்டமைப்புகளை எங்கிருந்து எடுத்து வந்தனர்? அவர்கள் நாட்டிலிருந்தா? இல்லை.... அவர்களுக்கு முன் ஆண்ட முகலாயர்களின் நிர்வாக முறை அது!! முகலாயர்களுக்கு யார் சொல்லித் தந்தது....?? “சூரி” வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷா என்ற மன்னர் வகுத்த நிர்வாக அமைப்பைத்தான், முகலாயர் காலம் தொடங்கி இன்றுவரை (தேவையான மாற்றங்களோடு) இந்திய நாடு பின்பற்றுகிறது.

அவரது ஆட்சி நிர்வாக முறையைக் கண்டு வியந்துபோன அக்பர், அதை அப்படியே சுவீகரித்துக் கொண்டதுடன், ஷெர்ஷாவின் அமைச்சரவையில் இருந்த ராஜா தோடர்மால் உள்ளிட்ட அரசவைப் பிரதானிகளை அப்படியே தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்!!

2003-ஆம் ஆண்டு, “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், பேராசிரியர் (பெரியார்தாசன்) அப்துல்லாஹ், ஷெர்ஷாவின் ஆட்சி சிறப்புகளையும், செய்த நிர்வாகச் சீர்திருத்தங்களையும் விரிவாக விளக்கினார். அதனால் ஈர்க்கப்பட்ட திரு. க. குணசேகரன், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டு, அவற்றை "நிர்வாக இயலின் தந்தை ஷெர்ஷா"  என்று  ஒரு புத்தகமாகவே  இயற்றியுள்ளார்.


 ஷெர்ஷாவின் ஆட்சிக்கு முன்பு வரை, வரி வசூலிப்பு, போர் வீரர்கள், நீதிமன்றம், போக்குவரத்து, நிர்வாகம் என்று எதிலுமே ஒரு ஒழுங்கு முறை வகுக்கப்படாமல், மன்னர்கள் அல்லது அந்தந்த பகுதி நிர்வாகிகள் இஷ்டப்படி நடந்து வந்தது.

உதாரணமாக, விளைநிலங்களின் மீதான வரி, விளைபொருட்கள் விளைந்து வருமுன்பே குத்துமதிப்பாக வசூலிக்கப்பட்டது. விளைச்சல் பாதிக்கப்பட்டாலும் வரி தள்ளுபடியோ, நிவாரணமோ இருக்காது. நாட்டின் போர்வீரர்கள் என்றால், முறையாக்த் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் கிடையது. ஒவ்வொரு போரின்போது மட்டும் சேரும் கூலிப்பட்டாளங்கள்தாம். ஆகவே நாட்டுப்பற்றுடன் அல்லாமல், யார் அதிகக் கூலி தருகிறார்களோ அவர்கள் பக்கம் சேருவதே வாடிக்கையாயிருந்தது.

நிர்வாகங்களில், திறமுடையவர்களாகப் பார்த்து நியமிக்காமல், வம்சாவழிகளில் வந்தவர்களை நியமித்தல் அல்லது சிபாரிசுடன் வருபவர்களை நியமிப்பதே வழக்கமாக இருந்தது.

இவை எல்லாவற்றையும் மாற்றி அமைத்தவர் ”ஷெர்ஷா சூரி” என்றழைக்கப்பட்ட ஃபரீதுத்தீன். ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர், அரசப்பணி நிமித்தமாக பீஹார் வந்த தந்தையுடன்  வந்தார். பள்ளியில் இவரது ஆர்வத்தையும் அறிவையும் கண்டு வியந்த ஆசிரியர்கள், உலக வரலாறுகள், இலக்கியங்கள், வீர விளையாட்டுகள் எல்லாம் கற்றுக் கொடுத்து ஒரு இளம் தலைவனாக வார்த்தெடுத்தனர்.

அவருடைய நிர்வாகத் திறமையினால், கி.பி.1522-ல் பீஹார் அமைச்சரைவில் அமைச்சராகச் சேர்ந்த அவர், மன்னனின் பிரதிநியாக ஆக்கப்பட்டார். பீஹாரை ஆண்டுவந்த காலத்தில், தொடர்ந்து நடந்த பல்வேறு போர்களினால் மன்னனாகி, டெல்லியில் ஆட்சி நடத்திய முகலாய மன்னர் ஹூமாயுனையும் தோற்கடித்து, கி.பி.1539-ல் 54 வயதில் பேரரசரானார்.


பல போர்களினால் எல்லையை விரிவாக்கிய அதே காலத்தில், நிர்வாகத்தில் ஒரு ஒழுங்குமுறையைத் திட்டமிட்டுச் செயலாற்றி, மக்களின் வாழவாதாரத்திலும் ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தார். அதன்மூலம், பின்வந்தவர்களுக்கு நிர்வாக இயலில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்பது அவரின் தனிச்சிறப்பு!!

## முதலில் பண்ட மாற்றத்திற்கு உதவும் வகையில், “ரூப்யா”, “பைசே” என்ற பெயர்களில் நாணயங்களை அறிமுகம் செய்தார். இன்றுவரை, இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலும் “ரூபாய்” என்று நிலைத்திருப்பது அவர் சூட்டிய பெயர்தான்.

## நாட்டை,நிர்வாகம் செய்ய வசதியாக ”சர்க்கார்” எனவும், “பர்கானா” எனவும் பிரித்தார். “முன்சீஃப்”, ”ஷேக்தார்” என அலுவலர்களை நியமித்தார். இன்றைய அரசு ஊழியர்களைப் போலவே, மூன்றாண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யபப்ட்டனர்.

## இன்றுள்ள கலெக்டர், நீதிபதிகள், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வரிவசூலிப்போர், கருவூலக் கணகக்ர் ஆகிய அதிகாரிகள் அடங்கிய நிர்வாக அமைப்பு முறை ஷெர்ஷா உருவாக்கியதே.

## ஒவ்வொரு ஊரிலும் வாழும் மக்கள், நிலங்கள், வேளாண்மை, உள்ளிட்ட எல்லா விபரங்களும் அவ்வூரின் “கிராம பொதுச் சபை” பதிந்து வைத்துக் கொள்ளும். இதன்மூலம், சட்ட ஒழுங்கு சிக்கல்கள் எளிதில் தீர்க்கபப்ட்டன. நில உரிமையாளர்களுக்கு “பட்டா” வழங்கப்படது.

## வர்த்தகம் நடைபெறுவதற்கு ஏதுவாக சுங்கவரி போன்ற தேவையற்ற வரிகளை நீக்கினார்.


## வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிரயாணிப்பதற்காகவும், தகவல் தொடர்புக்காகவும் வங்க தேசத்திலிருந்து, லாகூர் வரை நீண்ட Grand Trunk Road எனப்படும் நாற்கரச் சாலைகளை அமைத்தார். சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டு, தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டன.

## இராணுவத்தில் அதுவரை இருந்த “கூலிப்பட்டாள முறை”யை மாற்றி, முறையாக வீரர்களைத் தேந்தெடுத்து, அவர்களை அரசு ஊழியராக்கினார். போர்கள் இல்லாத காலத்திலும் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் எனப்தால், ராஜவிசுவாசம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

## ஒவ்வொரு இராணுவ வீரருக்கும், அவரது அங்க அடையாளங்கள் உள்ளிட்ட விபரங்கள், மற்றும் ஈடுபட்ட போர்கள், ஈற்றிய வெற்றிகள் முதலான பணி விபரங்களையும் பதிவு செய்யும் “சர்வீஸ் ரெக்கார்ட்” முறையும் இவர் தொடங்கியதுதான்.

## பட்டாலியன், ரெஜிமெண்டுகள் எல்லாம் அவர் உருவாக்கியவையே. இனவாரியாக அவர் பிரித்து வைத்த முறையில்தான், இன்று “மெட்ராஸ் ரெஜிமெண்ட்”, “ரஜபுத்ர - கூர்க்கா” ரெஜிமெண்ட்கள் அழைக்கப்படுகின்றன.

## உள்நாட்டு பாதுகாப்பிற்காக கிராமங்களில் வீதிவலம் வரும் “கூர்க்கா” முறை அப்போது ஏற்படுத்தப்பட்டதுதான். தேவைப்படின் அவர்கள் இராணுவத்தை அழைப்பார்கள்.

## நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்க  நிதித்துறை, நீதித்துறை, இராணுவத்துறை, உளவுத் துறை, வெளியுறவுத் துறை, வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி ஆகியவை அதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன் இருந்ததோடு, முத்னமுதலாக ”ஆவணத்துறை” இவர்காலத்தில்தான் ஏற்படுத்தபப்ட்டது!!

## தாய்மொழியான ஆஃப்கானின் “பஷ்டு” மொழியை நேசித்தாலும், இந்தியாவில் பெருமளவு புழங்கிவந்த பார்ஸி மற்றும் இந்துஸ்தானி மொழிகளையே ஆட்சி மொழிகளாக்கினார்.

## அவரது தந்தையோடு இணைந்து குடும்ப நிலத்தில் வேளாண்மையை நேரிடையாக மேற்பார்வை செய்த அனுபவம் இருந்ததால், உழைப்பின் கஷ்டம் புரிந்திருந்தது. ஆகையால், இடைத்தரகர்களான  வரி வசூலிப்பவர்களைத் தவிர்த்து, விவசாயிகளே நேரடியாகக் கருவூலத்தில் வரி செலுத்தும் முறை உருவாக்கினார்.

## வறட்சி, வெள்ளக் காலத்தில் வரி முற்றிலுமாக இரத்து செய்யபப்ட்டு, நிவாரணம் வழங்கப்பட்டது.

## ஒருகிராமத்தில் குற்றச்செயல் நடந்தால், குற்றவாளியை அரசிடம் ஒப்படைப்பது கிராமத்தின் பொறுப்பு. ஆகவே, குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்தன.

## அரசில், எந்த அதிகாரியும் நேரடியாக உயர் பொறுப்பில் நியமிக்கப் படுவதில்லை. கீழ்மட்ட பொறுப்பில் இணைந்து, பின் படிப்படியாகத்தான் முன்னேறி வரவேண்டும் என்பது கட்டாயம். அவரது மகனையே, படையில் சிப்பாயாகத்தான் முதலில் இணைத்துப் பயிற்சிக் களம் புகுத்தினார்.

## மக்களை நேரடியாகச் சந்திக்காமல், மாடங்களில் இருந்து கையாட்டி “பாய்யோ.. பெஹனோ..” என்று தனக்குத்தானே உரையாற்றிவிட்டுச் செல்லும் மாடப்புறாவாக இல்லாமல், தினமும் சாமான்ய மக்களைத் தனிமையில்  சந்தித்து குறைகளைக் கேட்பதையும் தம் அலுவல்களில் ஒன்றாக வைத்திருந்தார் ஷெர்ஷா.  ஒருமுறை, ஒரு பொற்கொல்லனின் மனைவி ஷெர்ஷாவின் மருமகன் (தடுப்பின்பின் அப்பெண் இருந்ததைக் கவனிக்காமல்) தன் மீது வெற்றிலைச் சாறைத் துப்பியதாகப் புகார் கூறியதை அடுத்து, தக்க நீதி வழங்கினார்!!

சிறப்புற நீதியுடன் ஆட்சி நடத்துவதற்கு ஏதுவாக, ஆட்சி நிர்வாகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த ஷெர்ஷா பேரரசராயிருந்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? ஐந்தே வருடங்கள்தாம்!! ஆம்!! அதற்கு முன், எத்தனையோ வருடங்கள் எத்தனையோ பேர் ஆட்சி செய்திருந்தாலும், யாரும் செய்யாத சீர்திருத்தங்களை வெறும் ஐந்தே ஆண்டுகளில் செய்து விட்டார்!!

ஷெர்ஷா, அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர் என்பதால், போர்க்களங்களிலும் முதல் வரிசையில் நிற்பார். வீரர்களை மோதவிட்டு கோட்டையில் இருது கண்காணிப்பவர் அல்ல அவர். அவ்வாறு ஒரு போரில், வெடிகுண்டுக்கான வெடிமருந்தைத் தானே தயாரித்துக் கொடுத்தபோது நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்தார்!!

அவரது மரணத்தை அறிந்த, அவரிடம் தோற்ற - அவரது எதிரியான மன்னர் ஹுமாயுன், “ஓ!! அந்த அரசர்களின் ஆசிரியன் இறந்துவிட்டானா??!!” என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்!! எதிரியும் மதிக்குமளவு சிறந்த ஆட்சி செய்தவர் ஷெர்ஷா!!
 

Further Ref.:http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/32049-1
http://www.importantindia.com/2987/sher-shah-suri-achievements/
https://www.gktoday.in/administration-of-sher-shah-suri/
https://selfstudyhistory.com/2015/01/28/the-establishment-of-the-north-indian-empire-the-surs/Post Comment

2 comments:

ஸ்ரீராம். said...

அரசர்களின் ஆசிரியன்! ஸூப்பர்.

சுவாரஸ்யமான தகவல்கள்.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
வரலாறு சிறப்பு பாடம் எடுத்து படித்த போது இவருக்கு பின் இவர் , என்று சாட் போட்டு வைத்து இருக்கிறேன். அதை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது பதிவு.
நல்லாட்சி அரசர். அரசர்களின் ஆசிரியர் தான்.