Pages

வாய்ச்சொல்லில் வீரர்கள்





வெள்ளிக்கிழமை, ஷர்ஜாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கப் போகலாம் என்று திட்டமிட்டபோது, அதே வெள்ளியன்று, திரு.ஸ்டாலின் மற்றும் திரு. எஸ்ரா இருவரும் அந்தக் கண்காட்சியில் உரையாற்றுகின்றனர் என்றறிந்தபோது அட! என மகிழ்ச்சியாக இருந்தது.  இந்தியா செல்லும்போது இம்மாதிரி நிகழ்வுகளுக்குச் செல்லும் “பாக்கியம்” கிட்டுவதில்லை. அமீரகத்திலோ அது ஒரு “நீல நிலவு” சம்பவம்.... எல்லாம் ஒன்றாகக்கூடி வந்ததில்,  கண்டிப்பாக இருவர் உரையையும் கேட்க வேண்டும் என்று  சில நண்பர்களோடு இணைந்து திட்டமிட்டுக் கொண்டோம்.

அரசியல்வாதியின் நிகழ்ச்சியில் எனக்கென்ன வேலை என்றால்... ஆர்வக்கோளாறுதான், வேறென்ன? மேலும், நம்ம ஊரில் நேரம் பேணாமல்  இழுத்தடிப்பதைப் போல,  இங்கே அமீரகத்தில் செய்ய வாய்ப்பில்லை என்று நம்ம்ம்ம்பிப் போனேன்!! :-( 

மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க வேண்டும். ஆனால்.... ம்ஹூம்.....  நம்ம ஊரைப் போலவே “வருகிறார், வந்துகொண்டிருக்கிறார், வந்தே விட்டார்....” என்று அறிவிப்புகள்தான் வந்துகொண்டிருந்ததே தவிர.... 
 
 
மிழ்நாட்டைப் போல இல்லை இங்கு - எத்தனை மணியென்றாலும் காத்து இருக்க.  திமுக - கலைஞர் - தமிழகம் மீது கொண்ட நேசத்தினால் தானாக வந்தவர்கள்.  முக்கியமாக, ஒவ்வொருவரும் அமீரகத்தின் ஒவ்வொரு முக்கு மூலையிலிருந்து வந்திருப்பவர்கள். அனைவரும்  வாகன வசதி கொண்டவர்கள் அல்ல.  குறித்த நேரத்திற்குள் செல்லவில்லை என்றால், தம் கையிலிருந்து அதிகப்பணம் கொடுத்து தம் இருப்பிடம் சென்று சேர வேண்டிய நிலையில் உள்ளவரக்ள். இது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். இருப்பினும் இவ்வளவு தாமதம் செய்தது மிக்க ஏமாற்றமளிக்கிறது.

ஒருவழியாக அவர் மேடையேறிய பின்பாவது அவர் உரை உடனே தொடங்கியதா என்றால்.... அதுவுமில்லை.... வரவேற்புரை, அறிமுக உரை ( அதுவும் ஸ்டாலினுக்கு?? தமிழர்கள் மத்தியில்??) என்று ஆரம்பித்து, பின்னர் புத்தகம் பரிசளிப்பு என்று சொல்லி பெருந்திரளானோரையும் மேடையேற்றி.....  கிட்டத்தட்ட திமுக நிகழ்ச்சி போலவே நடந்தது நிகழ்வுகள்!! :-( 

இனி அமீரகமேயானாலும், தமிழக பெருந்தலைகளின் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்ற பாடம் கிடைத்தது. 


ஸ்டாலின் அவர்களின் உரையைப் பற்றிப் பலரும் பேசும்போது, தந்தை கலைஞரைப் போல ஈர்க்கும் திறமை இல்லை என்று கூறுவார்கள். அவர் தந்தையோடு அவரை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான  திறமை. 

மேலும், மேடைப்பேச்சைக் கொண்டுதான் ஒருவரின் செயல்திறனைத் தீர்மானிக்க  வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. பேச்சுத்திறமைக்கு முக்கியவத்துவம் கொடுப்பதால்தான், இன்று விவாத மேடைகளில் சத்தமாகப் பேசுபவர்களே வல்லவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

இந்த எண்ணத்தினால்தான் மன்மோகன்சிங் என்ற திறமையாளரை இழந்து, இப்போது பேச்சில் மட்டும் மன்னர்களைக் கொண்டுள்ளது  இந்நாடு.  வாய்ச்சொல்லில் வீரர்கள் அல்ல நமக்குத்  தேவை.  அதிகம் பேசாமல், செயலில் சாதிப்பவர்களே நம் நாட்டுக்கு  இன்றைய அதிவசரத் தேவை. 

(எனக்குலாம் பேசவே தெரியாது என்பதையும் இத்தருணத்தில் இந்நாட்டுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ) 

எனினும்,  ஒரு திறமையான தலைவரை தந்தையாகக் கொண்டு இருப்பவர், அவரிடமிருந்து எத்தனையோ நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வாழ்நாள் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பது உண்மை. 

ந்த விழாவில் கலந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது நம் நாட்டு தேசிய கீதத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாட, வெகு காலங்களுக்குப் பிறகு ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்பதுதான்!! தமிழ்த்தாய் வாழ்த்து மறந்து போயிருக்குமோ என்று அச்சத்தோடுதான் வாயைத் திறந்தேன்....  ஒரு வார்த்தைகூட மறவாமல், பிறழாமல் பாட முடிந்ததில் எனக்கும்,  உடன் வந்திருந்த  யாஸ்மினுக்கும் பேரதிர்ச்சி!! 
 


டுத்து, சிறிது நேரத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையைக் கேட்கச் சென்றோம். முந்தைய நிகழ்ச்சியைப் போலல்லாது இவரது உரை சற்று ஆறுதலாக இருந்தது. 

எழுத்தாளர்களுக்குப் பெரிதாகச் சம்பாத்தியம் கிடையாது, மனத்திருப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்றார். ஒரு கதைக்கு நூறு ரூபாய்தான் தருகிறார்கள், சரவணபவனில் தோசைகூட நூறு ரூபாய்க்கும் அதிக விலையாம். அவர் இதுவரையிலும் வேறு வேலைக்கும் போனதில்லையாம். அப்படின்னா... அப்படின்னா... சில கேள்விகள்.... யாரிடம் கேட்க? கேள்வி நேரத்தில்,   அவரது எழுத்தைப்  பற்றித்தான் அவரிடம் கேள்விகள் கேட்கச் சொன்னார்கள் என்பதால்  இக்கேள்வியை மனதினுள்ளே பூட்டிக் கொண்டேன். 
 

ரு பெரிய  ஆதங்கம் என்னன்னா,  எழுத்து - புத்தகங்கள் - வாசிப்பு சம்பந்தப்பட்ட தமிழகத்தின் இரு பெரும் பிரபலங்கள் ஒரு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்காங்க...  எனினும், புத்தகக்கண்காட்சியில் தமிழ்ப்புத்தகங்களுக்கு என்று கடை இல்லை.  கடைகளில்தான் தமிழ்ப்புத்தகங்கள் இல்லை;  இருவரின் நிகழ்ச்சி அரங்குகளிலாவது தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருக்க ஆவண செய்திருக்கலாம்!!
 
மாலைநேரம் மட்டுமே திறந்திருந்த புத்தகக் கண்காட்சியில் , இரு நிகழ்ச்சிகளுக்குப் போனதில், புத்தகக் கடைகளைப் பார்வையிட நேரம் கிட்டவில்லை என்பதில் எனக்குக் கவலை; வீட்டுக்காரருக்கோ பர்ஸ் தப்பியதில் கன மகிழ்ச்சி!!
 

Post Comment

2 comments:

ஸ்ரீராம். said...

மனசு குமாரும் எஸ்ரா வருகை பற்றி எழுதி இருக்கிறார்.

பூ விழி said...

நடந்தை டீவியில் பார்த்திருக்கலாம் ஆனால் நேரில் சென்றவர் விவரிக்கும் போது அந்த அனுபவம் படிப்பது சுவராஸ்யம் அங்கேயும் அரசியல் நிகழ்வுகள் விடாமல் எபோதும் செயர்கை தனத்தை கைவிடமாட்டார்கள் போல் மிக வருத்தமான விஷயம் தமிழ்புத்தகங்களுக்கு கடையை அமர்த்தாதது தெளிவான பகிர்வு