Pages

வரலாற்றை மாற்றி எழுதும் கீழடி




"கீழடி” - தமிழகத்தில் இந்தப் பெயர் ஏற்படுத்திய சலசலப்பும், பரபரப்பும் யாருக்கும் மறந்திருக்காது.

இது குறித்து, எழுத்தாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள், சென்ற மாதம் அபுதாபியில் தமிழர்களிடையே உரையாற்றினார்.

21 வயது வரை மும்பையில், தமிழ் எழுத வாசிக்கத் தெரியாமல் - சாதி குறித்து அறியாமலும் வளர்ந்த அவர்,  தமிழகத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தபோது, இங்கு நிலவும் சாதி பேதங்களைக் கண்டு அதிர்ந்து, அது குறித்து ஆராயத் தொடங்கி... தமிழர் வரலாறுகளை வாசித்து - எழுதி,  அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழர் வரலாற்றுச் சின்னங்களை ஆராயும், அறிமுகப்படுத்தும் “பசுமை நடை” என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்.

சமீபத்திய பரபரப்பான கீழடி அகழ்வாராய்வின் முக்கியத்துவம் குறித்த அவரது உரை, இதுவரை சாமான்ய மக்கள் அறிந்திராத பல தகவல்களைத் தந்தது.

முதலில் தொல்லியல் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் ஏன் உணரப்படவேண்டும் என்று விளக்கி, அத்துறையை மக்கள் புறக்கணிப்பது குறித்தும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

தொல்லியல் என்பது, முதன்மையாக, பழமையான ஆதாரங்களைச் சேகரிப்பது ஆகும். உதாரணமாக, கல்வெட்டுகள், இலக்கியங்கள்; இவை தவிர, பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்கள்தாம் மிக முக்கியமான தொல்லியல் ஆவணங்கள்.

இவ்வாறு சேகரிக்கப்படும் ஆவணங்களை, ஒன்றை வைத்து ஒன்றை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் வரலாறு எழுதமுடியும். ஒரே ஒரு ஆதாரம் மட்டும் முழுமையாகாது. அதாவது ஒரு கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கும் ஒரு தகவல், இன்னொரு இலக்கியத்திலோ அல்லது வேறு ஒரு அகழ்வாராய்வில் கிடைத்த பொருள் மூலமோ உறுதிசெய்யப்பட வேண்டும்.

தொல்லியல் துறை இந்தப் பணியைத்தான் செய்கிறது.

னி, கீழடி!

தமிழகத்தில் கிடைத்த ஒரு அகழ்வாராய்வு இடம். இது முதன்முதலாகக் கிடைத்த இடமல்ல. இதற்கு முன்பே அரிக்கமேடு, காவிரிபூம்பட்டிணம், ஆதிச்சநல்லூர், அனுப்பாநடி போன்ற இடங்கள் அகழ்வாராய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அரிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.



சுமார் 3000 ஆண்டுகள் தொன்மையான மதுரை முழுவதுமே தொல்லியல் ஆராய்ச்சிக்கேற்ற இடம். ஆனால், நகர் முழுதும் மனிதர்களால் பயன்பாட்டுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதால் சான்றுகள் எடுப்பது கடினம். மதுரையின் வைகை நதியின் கரைகளில் மட்டுமே, சுமார் 293 இடங்களில் அரிய தொல்லியல் பொருட்கள் மற்றும் சான்றுகள் கிடைத்துள்ளன.  

ஆகையால்தான், மற்ற தொல்லியல் இடங்களைவிட கீழடி மிகவும் சிறப்புக்குரியது. எவ்வாறெனில், இதுதான் 110 ஏக்கர் அளவுக்கு மிகப்பெரிய தொல்லியல் ஆதாரமுள்ள இடம் - அதுவும் எந்த சேதமும் இல்லாமல், மனிதப்புழக்கம், கட்டிடங்கள் இல்லாமல் முழுதாக லட்டு போலக் கிடைத்த இடம்!! Culturally undisturbed என்று தொல்லியல் மொழியில் சொல்வார்கள்.

 

தற்போது அதில் ஒரு ஏக்கர் அளவுக்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதிலேயே சுமார் 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. முறையாக வடிவமைக்கப்பட்டு, சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், செங்கற்கள், பெரிய தண்ணீர்த் தொட்டிகள், கால்வாய்கள், கிணறுகள், நீர்க்குழாய்கள் ஆகியவை அங்கிருந்த மக்களின் நாகரீகத்தைப் பறைசாற்றுகின்றன.

தமிழகத்தில் முதன்முதலில் கிடைத்த முதல் முழு Civilization site-ஆன இது , தமிழகத்தின் நாகரீகம் மிக முன்னேறியது என்று நிரூபணம செய்கின்றது.

மேலும், அங்கு கிடைத்த தாழிகள், தானியக்கலங்கள், பெயர் பொறிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆகியவை சிலகாலம் முன் வரை தமிழர்களிடம் புழக்கத்தில் இருந்தவைதாம்... இப்போதும் பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் நம்மிடம் உண்டு!!

இன்னும், கடல் கடந்த வணிகத்தைச் சொல்லும் ரோமானிய நாணயங்கள், முத்துகள், தந்தத்தினால் செய்யப்பட சீப்புகள், சதுரங்கக் காய்கள், எழுத்தாணிகள்,  முத்திரை அச்சுகள் (seals), எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

அவை அனைத்தும், அவ்விடத்தில் சுமார் 15,000 மக்கள் கொண்ட ஒரு வசிப்பிடம் (habitat) இருந்ததற்கான சான்றுகள். 15,000 என்பது அன்றைய நாளில் ஒரு பெரிய மக்கள் தொகை!!

கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்களும், பொருட்களின் எண்ணிக்கையும் இதுவரை வேறு எங்கும் கிட்டாத அளவிலானவை. சுமார் ஒரு ஏக்கர் அளவிலான இடத்திலேயே 5300 பொருட்கள் மொத்தமாகக் கிடைத்திருப்பது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்பொருட்கள் சொல்லும் சேதி என்னவென்பதுதான் அதைவிட மிக மிக முக்கியமானது. கிடைத்த பொருட்களிலிருந்து, தமிழர்கள் அன்றே கல்வி-கேள்வி, கலை, வணிகங்களில் சிறந்து விளங்கினார்கள் எறு அறியவருகின்றது. அதேபோல அங்கு கிடைக்காத பொருட்களிலிருந்தும் நமக்கு தமிழர்கள் குறித்த சிறந்த செய்திகள் கிடைத்துள்லன. ஆம்!! உருவ வழிபாடுகள், வன்முறை - போர்  சம்பந்தப்பட்ட  எதுவுமே அங்கிருந்து கிடைக்கவில்லை!! மக்கள் இயற்கையோடு இயைந்து, அமைதியைப் போற்றுபவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்!!

இப்பொருட்களைக் கொண்டு மட்டுமே இச்செய்திகள் தீர்மானிக்கப்படுபவை அல்ல. மேற்சொன்னதுபோல,  மேலும் சில தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்தாலே அவற்றின் செய்தி நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும். இங்கு கிடைத்த பொருட்கள் தொடர்பான/சம்பந்தப்பட்ட குறிப்புகள் நெடுநல்வாடை போன்ற சங்க இலக்கியங்களிலும், வைகையின் கரைகளில் கிடைத்த கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றனவாம்!!

வைகையின் கரைகளில் கிடைத்த பிற்காலத்திய சிலைகள், புத்தர் மற்றும் சமணரின் சிலைகள். ஆனால், அங்குள்ள மக்கள் அவற்றை பிள்ளையார் என்று சொல்லி வணங்குவதாக ஆய்வுகளை மேற்கொள்ளும் திரு. அமர்நாத் கூறியுள்ளார்.

மேலும், இடுகாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது திரு. முத்துகிருஷ்ணன்  கூறியதாவது: கிட்டத்தட்ட பதினைந்து ஊர்களுக்கு ஒரேயொரு சுடுகாடு மட்டுமே காணப்படுவதாகவும் அதுவும் மலைகளில், எனக் குறிப்பிட்டார்!! எனில், இனசாதிமத பேதங்களும் இல்லாமலிருந்த காலம் அது!! இப்போதோ ஒரு ஊருக்கே பல சுடுகாடுகள்!! இறந்தவர்களை, அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் மலைகளில் ”கற்பதுக்கைகளில்” வைப்பதென்பது எகிப்து (பிரமிட்), சீனா போன்ற தொன்மை வாய்ந்த நாகரீகங்களிலும் காணப்படும் பழக்கம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்பொருட்களை Carbon Dating செய்து பார்த்ததில், 2300 வருடங்கள் பழமையானவை என்று தெரிய வந்தது. 2300 வருடங்களுக்கு முன்பே செங்கற்களால் கட்டிய ஒரு நகரம் இருந்தது என்பது இந்திய வரலாற்றையே மாற்றி அமைக்கக்கூடியது.

கீழடி ஆய்வு முடிவுகள்??

தமிழின் - தமிழர்களின் தொன்மை குறித்தும், உருவ வழிபாட்டுகள், இனபேதங்கள் இல்லாமை குறித்தும் கீழடி தரும் செய்திகள்  பெரும் ஆச்சர்யத்தையும், (கூடவே பேரதிர்ச்சியையும்) தருவதாக இருகின்றன. கீழடி ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், அதற்கு சிறிது காலம் பிடிக்கும். ஏனெனில் இதற்கு முன்பு தமிழகத்தில் பல இடங்களில் செய்யப்பட்ட 54 தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகளே இன்னும் பதிவு செய்யப்படவில்லை. அவற்றிற்குப் பிறகுதான் கீழடி.   இனி அடுத்த கட்ட ஆராய்ச்சி கீழடியில் எப்போது தொடங்கும் எனத் தெரியாது. தொடங்கினாலும், முடிவுகள் எப்படி வரும் என்றும் தெரியாது.

கீழடியின் ஆராய்ச்சி முடிவுகள் பெருமளவில் வெளிவந்ததற்குக் காரணம், வழக்கமாக இம்மாதிரியான தொல்லியல் இடங்கள் ஜனசந்தடியற்ற இடத்தில் இருப்பது போலல்லாமல், நகரத்திற்கு - மக்கள் புழக்கம் நிறைந்த இடத்திற்கு வெகு அருகில் கீழடி இருந்ததுதான். மக்களும் ஊடகங்களும் பெருமளவில் வந்து பார்வையிட்டுச் சென்றதால், முடிவுகள் மறைக்கப்பட முடியவில்லை.

அதேபோல, அவ்வாறு நகரத்திற்கு அருகில் இருந்தது ஒரு தேவையற்ற பரபரப்புக்கும் காரணமாகிவிட்டது. உணர்ச்சி மிகுதியால் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டன. விளைவு, அவசர அவசரமாக ஆராய்ச்சி நிறுத்தப்பட்டது.

நாம் என்ன செய்யவேண்டும்?

“தமிழேண்டா” என்றும், “தமிழ்தான் தொன்மையானது” என்று பேச்சளவில் மட்டுமே பெருமை பேசும் நாம், அதன் பழமையை அறிந்துகொள்ள என்ன முயற்சிகள் செய்திருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். இனியேனும், இது போன்ற தொல்லியல் இடங்களைப் போய்ப் பார்த்து வரவேண்டும்.
இது போன்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை, தொல்லியல் அலுவலங்களில் போட்டு வைத்திருக்கின்றனர். இவற்றையெல்லாம் பாதுகாக்கவும்,  காட்சிப்படுத்தி வைக்கவும், அதன் மூலம் மக்களுக்கு வரலாற்றைத் தெரிய வைக்கவும் நம் நாட்டில் அருங்காட்சியகங்கள் இல்லை என்றும் மிகவும் வருத்தப்பட்டார். அபுதாபியில் உள்ள பிரபல “லூவர்” அருங்காட்சியகத்தைப் பார்த்து, இது போன்று ஒன்று நம்மிடம் இல்லையே என்று மிகவும் ஆதங்கப்பட்டார். அங்குள்ள பொருட்கள் போன்று நம்மிடமும் உள்ளன, ஆனால் பாதுகாப்பு-பராமரிப்பு இல்லை.

காரணம், மக்களாகிய நாம், கிரிக்கெட்-சினிமா-ஷாப்பிங் மால்கள் மீது காட்டும் ஆர்வத்தை, தொல்லியல் துறையில் காட்டுவதில்லை. :-(  இனியாவது, பிள்ளைகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்லாமல், இது போன்றுள்ள தொன்மையான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்; 

நம் வாழுமிடம் பற்றி நிறைய வாசிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தின் தொல்லியல் அலுவலகத்திலும், அம்மாவட்டத்தைப் பற்றிய வரலாறுகள், சான்றுகள் விளக்கமாக ஒரு புத்தகமாகப் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலை (ரூ. 40 - 50) என்றாலும் வாங்கிப் படிக்க ஆளில்லை. அவற்றை வாங்கி வாசிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

2000-ம் ஆண்டில் மதுரையின் புகழ்பெற்ற ஆனைமலை வணிக நோக்கில் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, மக்கள் திரண்டு அதைத் தடுத்தனர். அப்போது முதல், நம் தொல்லியல் சின்னங்கள் - புராதனங்கள் குறித்த மக்களின் அறிவை வளர்க்கும் விதமாக “பசுமை நடை” என்ற இயக்கத்தை இவரும் சேர்ந்து நடத்தி வருகிறார். மக்களை குழுக்களாக அழைத்துச் சென்று மதுரையின் புராதன இடங்களையும், அவற்றின் வரலாற்றையும் விளக்கிக் கூறுகிறார்கள். அதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

நம் வரலாற்றை அறிந்தால்தான், நம் சமூகத்தில் இருக்கும் குறைகளைக் களைந்து, நம்மை ஆதிக்கம் செலுத்த வரும் சக்திகளை அறிந்துணர்ந்து, ஒற்றுமையுடன் முறியடித்து, உயர முடியும்.

வரலாற்றை முறையாக அறிந்தவர்களால்தான் வரலாறு படைக்க முடியும்!!!! 

மேலும் தகவல்களுக்கு:
1. கீழடி ஆய்வை இரு வருடங்களாக நடத்தி வந்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் உரையைக் கேளுங்கள்:
https://www.youtube.com/watch?v=L7wI5PQzp_A
https://www.youtube.com/watch?v=sNs3Pn1TkIU

2. https://ta.wikipedia.org/s/4ojt
3. http://tamil.thehindu.com/general/literature/article22916759.ece
4. http://www.bbc.com/tamil/india-40761846
5. பசுமை நடை குறித்து எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணனின் அவர்களது கட்டுரை: https://tinyurl.com/yb5hfxul

Post Comment

0 comments: