Pages

அது ஒரு அழகிய நிலாக்காலமாம்!!

குழந்தைப் பருவம், ஓடியாடும் பருவம், குமரி(ரன்) பருவம்... இவற்றைத்தான் அநேகமாக எல்லாருமே தத்தம் வாழ்நாளில் அழகிய நிலாக்காலமெனக் கொள்வோம்!!

கவலை ஏதுமிலா பாலகப் பருவமே மிக இனிது. நாம் நம் கையால் சாப்பாடை எடுத்து உண்ணக்கூடத் தேவையிலா காலம். நேரங்காலத்தில் கணவனுக்கு மனைவி உணவு பரிமாறி பணிவிடை ( :-D ) செய்கிறாரோ இல்லையோ, குழந்தைக்குத் தாய் மணியடித்தால் சோறு படைக்கும் காலம் அது.

காண்பதெல்லாம் இனிதாகத் தெரியும் குமரப் பருவமோ அதனைவிட இனிது. எதிர்காலம், அது கொண்டுவரக்கூடிய கவலைகள், சுமைகள் என்று எதுகுறித்தும் கவனம் கொள்ளாமல், நண்பர்களே உலகம் என வாழ்ந்த சுகமான பருவம்.

திருமணமான புதிதில் இதைவிட இனிமை வாழ்வில் உண்டோ என்று நினைத்த (காலமாகிவிட்ட) காலம். இந்த இனிமையும், ரசனையும், சுதந்திரமும் இனி நம் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் என்று நம்ம்ம்ம்பிய அப்பாவிக் காலம்!!

சுகமான சுமையைக் கருவில் ஏந்தி, பின்னர் அப்பூங்கொத்தைக் கையில் ஏந்தி, ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேன் எனப் பெருமை கொண்ட காலம்.

ப்படி ஒவ்வொரு பருவமாகத் தாண்டி வரும்போதெல்லாம், அப்போதைய பருவமே அழகானதாக, மனதுக்குப் பிடித்ததாகத் தோன்றும். ஆனால், அது பாரமான சுமைகளைச் சுமக்கத் தொடங்கும் இந்தப் பருவம் வரைதான்.

அதுவும் பிள்ளைகள் வளர வளர, நம் வயது தேயத்தேய, காலம் கரையக் கரைய, கவலைகள் பிரச்னைகள் வளருங்காலமாகிவிட்டது இப்போது. ஒவ்வொன்றாக சிக்கவிழ்த்து முடித்து வைத்து நிமிரும்போது, அடுத்த சிக்கல் காலைக்கட்டத் தயாராக இருக்கும் காலமிது.

இந்தப் பருவத்தில்தான், நாம் கவலைகளின்றிப் பட்டாம் பூச்சிகளாகத் திரிந்த அந்தக் காலங்களெல்லாம் நம் நினைவுக்கு வந்து, “ஹூம்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...!!” என்று பெருமூச்சு விட வைக்கும்!!

ம்மிடம் டைம் மெஷினோடு ஒருவர் வந்து, “சரி, நீ அழகிய நிலாக்காலமாக நினைக்கும் அந்தக் காலத்திற்கே உன்னை மீண்டும் அனுப்பி வைக்கிறேன், வா!!” என்று அழைத்தால் இப்போதைய பிரச்னைகளிலிருந்து விடிவு கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து அவரின் டைம் மெஷினுக்குள் ஓடிவிடுவோமா? இல்லையே, அவரிடமிருந்து தப்பித்து, வேறு பக்கமாகத்தான் ஓடுவோம்!!

எவ்வளவோ மூச்சுமுட்டுமளவு பிரச்னைகள் இருந்தாலும், இந்த நொடியை - நிகழ்காலத்தை விட்டுப் பிரிய மனம் வருவதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சிலர், “அந்தக்காலத்துல காற்று சுத்தமாருந்துது; தண்ணி சுத்தமாருந்துது; சாப்பாடும் விஷங்கள் கலக்காம இருந்துது... இண்டர்நெட் கிடையாது... ஸ்மார்ட் ஃபோன்கள் கிடையாது.. அதுதான் ஆரோக்கியமான காலம்...” என்று நீட்டி முழக்கி, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை....” என்ற வியக்கியானத்தோடு முடிப்பார்கள்.

அவர்களை மின்சாரம் இல்லாத... அட, குறைந்தபட்சம் ஏசி மட்டும் இல்லாத, ஓவர்ஹெட் டாங்க் இல்லாத, இண்டர்நெட் இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்து வீட்டில் இருக்கச்சொன்னால் அலறி விடுவார்கள்!!

தேபோலத்தான், (என்னைப் போல) இருக்கும் காலத்தைவிட்டு பழையதைப் போற்றுபவர்களும்!! இவர்களேதான், நாளை தத்தம் பேரப்பிள்ளைகளிடம் “நாங்கலாம் அந்தக் காலத்துல...” என்று ஆரம்பித்து.... இந்த - இதே பாரமான காலத்தையும், அதை தான் வெற்றிகரகமாகக் கடந்து வந்ததையும் பெருமையோடு பிரஸ்தாபிப்பார்கள்!!

நிலா வரும் காலமெல்லாம் - நிலா வரும்வரையான காலமும் - அதை நாம் பார்க்க முடிகிற ஒவ்வொரு காலமும் அழகான நிலாக்காலம்தான்!!

தென்ன “#நிலாக்காலம்”? ஏன் சூரியக்காலம் இல்லை? அல்லது நட்சத்திரக்காலம்?

நிலா, அதன் எல்லா அமைப்பிலும் அழகுதான். சிறு பிறையாக இருக்கும்போது, வளர்ந்து அரை வட்டமாக இருக்கும்போது, முழு நிலவாக இருக்கும்போது என, அதன் எல்லாப் பருவங்களிலுமே நிலவு அழகுதான். நிலாவே வராத அமாவாசை இரவுகூட ஒரு விதத்தில் அழகு!! இது நிலாவுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. அதனாலதான் நிலாக்காலம்!!

வாழ்க்கையும் அதன் எல்லாப்பருவங்களிலும் சிறப்புத்தான்!!

படத்தில்: #காலை நிலா!! இதிலும் நிலாதான் வித்தியாசமானது. இரவுதான் அதற்கானது என்றாலும், பகலில்கூட சில சமயங்களில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்!!   

இரவில் சூரியன் வந்தா அது இரவே இல்லியே!! எட்டிப் பாத்தாக் கூட அது பகல் ஆகிடும். நட்சத்திரத்துக்கு அத்தனை பவர் கிடையாது.


(எப்படி இப்படிலாம்? எனக்கே தாங்கலை.... )

“டீக்கடை”  ஃபேஸ் குழுமத்தில் ” உங்கள் வாழ்வின் நிலக்காலம் எது?” என்ற போட்டிக்காக எழுதியது.

Post Comment

2 comments:

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

இப்படி அடிக்கடி வந்து பதிவு போடுங்கள் ஹுஸைனம்மா.
அந்த அழகிய நிலாக்காலமாம் தலைப்பே சூப்பர்.
சொல்லிய விஷயங்கள் மிக நன்று.

ஹுஸைனம்மா said...

நன்றி கோமதிக்கா.

மொபைல் பயன்பாடு அதிகமாகிவிட்டதால் இந்தப் பக்கம் வருது குறைந்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் பதிவுகள் எழுதுவதை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறேன்.