Pages

வாலை வெட்டணுமா வேண்டாமா?







தலைப்பைப் பார்த்துவிட்டு, என்னவோ ஏதோ என்று வந்திருப்பீங்க!! இதுவும் நல்ல பாடம் சொல்லும் பதிவுதான். தொடர்ந்து படிங்க!!

அப்பெண்டிக்ஸ் என்ற குடல் வால்: இதைப் பற்றி நம்ம எல்லாருக்கும் எந்தளவு தெரியும்?

குடலின் நுனியில் இருக்கும் வால் போன்ற அமைப்பு. இது ஒரு தேவையில்லாத உறுப்பு; திட கழிவுகள் அதில் போய்த் தங்கும். சிலருக்கு திடீரென்று பிரச்னை கொடுக்கும்; வலி வந்துவிட்டால், அறுவை சிகிச்சை செய்து அதை வெட்டியெடுப்பதுதான் ஒரே வழி என்ற வரைதான் எனக்கும் தெரியும், போன வருடம் இந்தியா போயிருந்தபோது என் மகனுக்கும் (12 வயது) இந்தப் பிரச்னை வரும்வரை!!




அப்பெண்டிக்ஸில் பிரச்னை என்றால் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் மட்டுமே வலிக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். என் மகனுக்கு முதலில் சாதாரண வலி போல வயிறு முழுதும் வலி. அடுத்த நாள், தொப்புளைச் சுற்றி வலி அதிகம் இருந்தது. வாந்தி தொடங்கியது.  அதற்கடுத்த நாள் வலி வலது அடிவயிற்றில் மட்டும் இருந்தது.

முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், வாந்தியும் இருந்ததால், ஃபுட் பாய்ஸன் என்றே கருதி, மருந்துகள் கொடுத்தனர். மூன்றாம் நாள், வலது அடிவயிற்றில் வலி என்ற பிறகுதான், அப்பெண்டிக்ஸாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, ஸ்கேன் செய்யச் சொன்னார். ஸ்கேன் ரிப்போர்ட், எதிர்பார்த்தபடியே, “Acute appendicitis" என்று வந்தது.

பிறகு, வேறொரு மருத்துவமனையில் அனுமதித்தோம். நான் லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்யும்படிக் கேட்டுக் கொண்டிருந்தேன். சாதாரணமாக அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்; ஆனால் (வயிற்றின்) உள்ளே உள்ள  நிலைமையைப் (!!) பொறுத்து 2 மணிநேரம் வரை ஆகலாம் என்று டாக்டர் சொன்னார். 

ஆனால் ஆபரேஷன் முடிய 3 மணி நேரம் ஆனது. மருத்துவர் மீண்டும் ஒரு அதிர்ச்சிச் செய்தி சொன்னார். அதாவது அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல்வாலை நீக்க முடியவில்லை என்று!! ஏன்?

அப்பெண்டிக்ஸ் எனும் குடல்வால் பிரச்னை வந்தால், அறுவை சிகிச்சை செய்து, அவ்வாலை வெட்டி எடுப்பதுதான் அதற்கான சிகிச்சை என்றே நாம் அறிந்திருக்கிறோம். அவ்வாறு உடனே செய்யாவிட்டால், அது வெடிக்கும் சாத்தியமுண்டென்றும், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும் என்றும் அறிந்திருக்கிறோம். அதனாலேயே இதுதான் நோய் என்று கண்டறியப்பட்ட உடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், இங்கே அவ்வாறு செய்ய முடியவில்லை என்று சொல்கிறாரே, அப்படியானால்...

காரணத்தை விளக்கினார் மருத்துவர். குடல்வால் என்பதில் இன்ஃபெக்‌ஷனே வலி உண்டாவதற்குக் காரணம். பெரும்பாலும் உணவின் மூலம் வரும் பாக்டீரியாக்களே அதன் காரணமாக இருக்கும். வாலில் நோய்த்தொற்று ஏற்பட்டு, பின் உடனடி சிகிச்சை அளிக்காமல் விட்டால், வெடிக்கும் நிலைக்குச் செல்லும். இந்த இரண்டிற்கும் நடுவே ஒரு நிலை உண்டு. அதுதான் “Appendicular mass”. அதாவது, தொற்று அதிகரித்து, வாலில் சீழ்பிடித்து, அது அருகில் உள்ள Cecum  என்ற பகுதியுடனும், குடலின் மற்ற சில பகுதிகளுடனும் ஒட்டிக் கொண்டு ஒரு பந்து போல காணப்படும்.

இச்சமயத்தில் இதனை வெட்டி எடுப்பது மிக ஆபத்தானது. குடலில் ஓட்டை விழும் அபாயம் இருப்பதால் அதனை நீக்காமல், சீழை முடிந்த அளவு எடுத்துவிட்டு, சலைன் வாட்டரால் அப்பகுதியைக் கழுவிவிட்டு, அப்படியே மூடிவிட்டார்கள்.

இதற்கு சலைன் மூலம் அதிக வீரியமுள்ள ஆண்டி-பயாடிக் மருந்துகள் ஏற்றுவது மட்டுமே தகுந்த சிகிச்சை. தொற்று முழுமையாகக் குணமாகும் வரை உணவு, தண்ணீர் ஏதும் கொடுக்கக்கூடாது. இவ்வாறாக ஒரு வாரம் படுக்கையிலேயே கழிந்தது. லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்வதற்காக மூன்று சிறிய துளைகள் வயிற்றில் இட்டிருந்தார்கள். அதில் ஒரு துளை வழியே புண்ணைக் கழுவிய சலைன் வாட்டர் மற்றும் சீழ் (இருந்தால்) வெளியேற என்று ஒரு டியூப் மாட்டியிருந்தார்கள். புண் ஆறி வருவதை அறிய அதையும் கண்காணித்து வந்தார்கள்.

சரி, இப்படி Appendicular mass ஆகிவிட்டது என்று அறுவை சிகிச்சைக்கு முன்பே அறிந்துகொள்ள முடியாதா? தெரிந்திருந்தால் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்த்திருக்கலாமே? இனி மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகள் என்னென்ன? இன்னும் பல சந்தேகங்கள் வந்தன. அந்த மருத்துவரிடமும், பின்னர் நான் சந்தித்த சில மருத்துவர்களிடமும் கேட்டும், இணையத்திலும் கண்டு அறிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அறிகுறிகள்:
1.       தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம்.
2.       முதலில் வயிற்று வலி, பின்னரே வாந்தி. (இது முக்கிய அறிகுறி. வயிற்றுக்கோளாறு, ஃபுட் பாய்ஸன் போன்றவற்றில்  வாந்தி முதலிலும், வலி பின்னரும் வரும்).
3.       வயிற்றின் வலது அடிப்பாகம் வலி.


பரிசோதனைகள்:
வலி வந்தவுடன் மருத்துவர் கைகொண்டு வயிற்றைப் பரிசோதித்தல் நலம். அல்ட்ரா-சவுண்ட் ஸ்கேனிலும் குடல்வால் நோயுற்றிருப்பதை ஒரு உத்தேசமாகத்தான் காணமுடியுமாம். ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த ரேடியாலஜிஸ்டால்தான் அது என்ன நிலையிலிருக்கிறது என்று சரியாகக் கணித்துச் சொல்ல முடியும்.

அந்தப் படங்களைக் காணும் மருத்துவருக்கும் அதேதான். சி.டி.ஸ்கேன் எடுத்தாலும் தெளிவாகத் தெரியாது. அனுபவமே கைகொடுக்கும்.

சிகிச்சைகள்: (for appendicular mass)
1.       மேலே சொன்னதுபோல உணவு இல்லாமல், டிரிப் மூலம் மருந்துகள் மட்டுமே. தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஒரு மாதமும் ஆகலாம்..
2.       பின்னர், சிறிது காலம் (3 மாதங்கள்) கழித்து, நமக்கு வசதிப்படும் சமயத்தில், அறுவைசிகிச்சை செய்து வாலை வெட்டி எடுப்பது.

இதுகுறித்து மருத்துவர்கள் கருத்து வேறுபடுகிறார்கள். இந்தியாவில் நான் பார்த்த மருத்துவர்கள், ரிஸ்க் வேண்டாம், மீண்டும் ஆபரேஷன் செய்துவிடுவதே நலம் என்றார்கள். பின்னர் இங்கு அபுதாபி வந்து சந்தித்த மருத்துவர்களோ (இந்தியர்கள்தான்) பிரச்னை வரும்வரை அதைத் தொடாமல் இருப்பதே நல்லது; நல்லா இருப்பவனுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்வதில்லை என்று சொல்கிறார்கள்.

எனக்கும் இதுவே திருப்தி தருவதால், அறுவை சிகிச்சை வேண்டாம் என்றே முடிவு செய்துள்ளோம். இணைய புள்ளிவிவரங்களும், மீண்டும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றே சொல்கின்றன.

நாகர்கோவிலில் எங்களின் அண்டை வீட்டில் ஒரு பெண்ணும் அவர் மகளுக்கு 5 வயதிருக்கும்போது இதே போல Appendicular mass ஆனதாகவும், டிரிப் மூலம் மருந்து எடுத்துக் கொண்டதில் சரியாகிவிட்டது, த்ற்போது மகளுக்கு 20 வயதாவதாகவும், ஒரு பிரச்னையும் இல்லை என்றும் சொன்னார்.

ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் சிகிச்சைதானே என்று நினைத்த எங்களுக்குப் பல அதிர்ச்சிகளையும், அனுபவ அறிவுகளையும் தந்த நிகழ்ச்சி இது!! அதுகுறித்த சம்பவங்களையும் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

Post Comment

30 comments:

Anonymous said...

எவ்வளவு முக்கியமான விஷயம். பகிர்ந்தமைக்கு நன்றி ஹுஸைனம்மா.
மகன் இப்போது நலம்தானே.

pudugaithendral said...

ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் சிகிச்சைதானே என்று நினைத்த எங்களுக்குப் பல அதிர்ச்சிகளையும், அனுபவ அறிவுகளையும் தந்த நிகழ்ச்சி இது!! //

எனக்கு வெடிச்சு உடலெல்லாம் பரவி செத்து புழைச்சு வந்தேன் ஹுசைனம்மா. அப்பெண்டிக்ஸை சாதரணமா நினைக்ககூடாது. ஒரு தடவை வெட்டினா அடுத்த முறை ஆட்ட அப்பெண்டிசுக்கு வால் இருக்காது என்பது சந்தோஷமான செய்தி

நாஸியா said...

கொஞ்சம் பயமா தான் இருக்கு.. உங்க மகன் இப்போ நல்லா இருக்காங்களா?


ஜசகல்லாஹு க்ஹைர்.

S.A. நவாஸுதீன் said...

இது ஒரு அனுபவப்பகிர்வாக இருந்தாலும் நிறைய விசையங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. பயனுள்ள இடுகை தான் சகோதரி

SUFFIX said...

விபரமா விளக்கமா எழுதியிருக்கீங்க, பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதி முடித்து அடுத்த நாளே எனக்கும் இந்த அப்பென்டிக்ஸ் ஆபரேஷன் செய்து விட்டார்கள்.

Prathap Kumar S. said...

இதுநார்மலா எல்லாருக்கும் வர்றதுதான்னு கேள்விபட்டிருக்கேன்.வாலை எடுத்தான் தீர்ந்துடும்னுதெரியும். அதுக்குள்ள இப்படி வேறஒரு பிரச்சனை வேற இருக்குங்றது இப்பத்தான் தெரியும்.
அதிகமாக ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களுக்குத்தான் வரும்னு எனக்கேள்பிபட்டிருக்கேன். சின்னபசங்களுக்கு ஏன் வருது.?

மாதேவி said...

அனுபவத்துடன் சிகிச்சைகளையும் விரிவாகப் பதிந்துள்ளீர்கள்.

பீர் | Peer said...

அனுபவ பகிர்வுக்கு நன்றி ஹூசைனம்மா,

தெளிவாக விளங்கியது, இதுதான் (மருத்துவம் படிக்காத) நாம் எழுதுவதற்கும் மருத்துவர்கள் எழுதுவதற்கும் இருக்கும் வித்தியாசம். டெக்னிகலாக விஷயத்தை எழுதும் போது, வாசிப்பவர் சற்று குழம்ப வாய்ப்புள்ளது.

நன்றி

Rithu`s Dad said...

அவசியமான பதிவு.. இங்கு வாழும் நம் நாட்டவருக்கு இந்த பாதிப்பு அடிக்கடி நிகழ்கிறது.. முதலில் கண்டுபிடித்தால் நலம்.. நாளாகிவிட்டால் கொஞ்சம் கஸ்டம் தான்..

எனது அலுவலகத்திலும் இருவருக்கு இதுபோல் அன்மையில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.. ஒருவர் ஆரம்ப நிலை.. இன்னொருவரோ மிக முற்றிய நிலை.. கண்டுபிடித்த அன்று மாலையே ஆபரேசன் செய்தார்கள்..

வயிற்றுவலியை மிக சாதரனமாக எடுத்துக்கொள்ளக்கூடது + உண்னும் உணவில் கவணம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை..

சிகிச்சைக்கு பின் எவ்வாறு இருக்கிறான் உங்கள் அன்பு மகன்? நலமுடனே வாழ வாழ்த்துக்கள்..

சிங்கக்குட்டி said...

உண்மையில் தலைப்பைப் பார்த்துவிட்டு, என்னவோ ஏதோ என்றுதான் வந்தேன்.

நல்ல பகிர்வு.

ஹுஸைனம்மா said...

சின்ன அம்மிணி அக்கா - நன்றி; இறையருளால் மகன் நலமே.

தென்றல் - //எனக்கு வெடிச்சு உடலெல்லாம் பரவி செத்து புழைச்சு வந்தேன்// அய்யோ, கேட்கவே பயமாருக்கு. எப்படி என்னன்னு விவரமா ஒரு பதிவு போடுங்களேன், தெரிஞ்சுக்கலாமே.

நாஸியா - பயமெல்லாம் வேண்டாம். வயிற்று வலியைச் சாதாரணமா நினைச்சு ரொம்ப கவனமில்லாம இருக்கக்கூடாது.

நவாஸ் - நன்றி.

ஷஃபிக்ஸ் - அப்பவே வாலை ஒட்ட வெட்டிட்டாங்களா? ஆனாலும், மறுபடி வளந்துட்ட மாதிரிதான் இருக்குது.

பிரதாப் - வலி வந்து, உடனே வெட்டிட்டா, நார்மல்தான். கவனிக்காம விட்டுட்டாதான் பிரச்னையே. உணவுகளின் மூலம் வரும் தொற்றும் முக்கியக் காரணம். அதனால் ஹோட்டல் சாப்பாடும் காரணமாக இருக்கலாம்.

மாதேவி - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

பீர் - நிஜமாவே புரியறா மாதிரி எழுதியிருக்கேனா? ரொம்ப நன்றி. அப்ப நிறைய மருத்துவ இடுகைகள் எழுதலாம்கிறீங்க? (கைவசம் நிறைய அனுபவங்கள் இருக்கு!!)

ரீத்து அப்பா - நன்றி. //வயிற்றுவலியை மிக சாதரனமாக எடுத்துக்கொள்ளக்கூடது + உண்னும் உணவில் கவணம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.. // மிகச் சரி!!

இறையருளால் மகன் நலமே. சிலகாலம் உணவுக் கட்டுப்பாடு பின்பற்றினோம். இப்ப இல்லை. இப்ப அவன் சிறிதாக வயிறுவலி என்று சொன்னாலும், நமக்கு வயிறு கலங்கும்!!

அண்ணாமலையான் said...

மிக அருமையான காலத்துக்கேற்ற பதிவு... புத்தாண்டில் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்... தொடரட்டும் உங்கள் பணி...........

ராமலக்ஷ்மி said...

மிக விளக்கமாக அறியத் தந்திருக்கிறீர்கள் ஹுசைனம்மா. இந்த வாலைத்தான் சமீபத்தில் நானும் வெட்டிக் கொண்டு விட்டேன்:)! தெரியாத சில தகவல்களையும் உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். நன்றி.

சுந்தரா said...

மகன் நலமாகிவந்ததில் மகிழ்ச்சி ஹுசைனம்மா.

ரொம்ப அவசியமான பதிவு. விளக்கமா புரியும்படி எழுதியிருக்கீங்க.

பதிவையும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது இந்த வால் நிறையபேரை கஷ்டப்படுத்தியிருக்குதுன்னு தெரியுது.

enrenrum16 said...

It was thrilling to read your posting. Hope your son is fine now.

All of your postings are good & encourage to be a follower.

(Dont know how to type in tamil.. Why not send a post on "Should type in tamil?")

Enrenrum16

ஹுஸைனம்மா said...

அன்பு ”என்றும்”,

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி. தமிழில் டைப் செய்ய http://tamileditor.org/ என்ற தளத்துக்குப் போங்க. அதில் சொல்லப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகளில் டைப் செய்து, இங்கே காப்பி-பேஸ்ட் செய்யுங்க.

ரொம்ப ஈஸியா இருக்கும். இதில் பழகியபிறகு, தமிழ் எழுத உதவும் ஸாஃப்ட்வேர்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

வால்பையன் said...

தலைப்பை பார்த்து பயந்துட்டேன்!

படிச்ச பிறகு தான் தெளிஞ்சது!

வால்பையன் said...

உடனே நானும் செக் பண்ணிக்கிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒ கடவுளே. ம் குழந்தைகளூக்கு எனும்பொழுது மிகவும் கஷ்டமான நேரமாக அது இருந்திருக்கும்.. :(

ஹுஸைனம்மா said...

அண்ணாமலை சார் - நன்றி.

ராமலக்‌ஷ்மி அக்கா - நன்றி. உங்களுக்கும் வாலை நறுக்கிட்டாங்களா? ;-)

சுந்தரா - முன்னாடியெல்லாம் ஒருத்தர் ரெண்டுபேர் தான் இதச் செஞ்சிருப்பாங்க. இப்ப யாரப்பாத்தாலும் சகஜமா செஞ்சாச்சுன்னு சொல்றாங்க!

என்றும் 16 - நன்றி.

வால்பையன் - என் பதிவைப் படிச்சதிலயே உங்களுக்குத் தெளிஞ்சிடுச்சா? சந்தோஷம்!!

முத்தக்கா - ஆமாக்கா, அதிலயும் அந்த டாக்டர்ஸ் பண்ணதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்துது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

என்னென்னமோ சொல்லுறீங்களே ஹூசைனம்மா!! வயித்துல கிலி கிளம்புது :)

நல்லா எழுதியிருக்கீங்க..

Vijiskitchencreations said...

அக்கா நான் இன்றைக்கு தான் இங்கு வந்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல ப்ளாக், அருமையான கருத்துக்கள், தகவல்கள். தொடர்ந்து வந்து பட்க்கிறேன்.
நல்ல தகவல். அப்பெண்டிக்ஸ் இப்போ சர்வ சதாரணமாக வருகிறது. என் தோழியின் 7 வயது பென்னுக்கு 4 மாதம் முன்பு சர்ஜரி செய்தாங்க. அந்த குழந்தை துடி துடித்தாள். அப்பா. இப்ப நினைத்தாலும் கஷடமா இருக்கு, ஆனால் ஒன்று சர்ஜரி செய்ததும் சரியாகிவிட்டது.

சாந்தி மாரியப்பன் said...

மகன் நலம்தானே ஹுசைனம்மா.

என் பையனுக்கும் எட்டு வருஷம் முன்னே வாலை ஒட்ட வெட்டியாச்சு. ஆனா அதுக்கு முன்னே, இதுதான்னு தெரியாம பட்ட பாடு இருக்கே..
http://amaithicchaaral.blogspot.com

பாத்திமா ஜொஹ்ரா said...

அனுபவத்துடன் சிகிச்சைகளையும் விரிவாகப் பதிந்துள்ளீர்கள்.

Jaleela Kamal said...

அல்லாஹு கேட்கவே ரொம்ப பயமாக இருக்கு.இவ்வளவு விளக்கமா எழுதி இருக்கிங்க.
யாருக்கு பெரிய மகனுக்கா? இப்ப ஒன்றும் பிரச்சனை இல்லையே?

நல்ல இருக்காறா?

நல்லதொரு பகிர்வு, அல்சர் பற்றிய விழுப்புணர்வை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, தொடருங்கள்.

goma said...

முதலில் உங்கள் மகன் ஆரோக்கியத்துக்கு அனைவரும் வேண்டிக் கொள்கிறோம்.
நாம் எந்த வலியையும் தாங்கிக் கொள்ளலாம்.குழந்தைகள் கஷ்டப் படும் பொழுது .அதை நாம் ...தாங்கிக் கொள்வது கஷ்டம்.
உங்கள் பதிவு பலருக்கு உபயோகமான ஒரு முன்னெச்சரிக்கை தரும் மருத்துவ பதிவு

PPM said...

INTHA KATTURAI UODAKA UNKAL VALAI TALAM PADITHEN.VERY USEFUL INFORMATION.I READ YOUR ARTICLE AT RIGHT TIME.I WANT TO KNOW ABOUT IT BECAUSE MY BROTHER AND HIS DAUGHTER UNDER GO OPERATION RECENTLY. IF U EXPLAIN THE ROOT CAUSE FOR THE DECEASE, ALL PEOPLE WILL TAKE PRECAUTION.WHAT KIND FOOD WE MUST AVOID LIKE THAT.ANY HOW THANK U VERY MUCH HUSAINAMMA.I LIKE YOUR NAME BECAUSE MY GRANDMA NAME IS HASANAMMA.

NANRI VALTHUM SALAMUM

YOURS BROTHER IS ISLAM

HASANGANI2008@GMAIL.COM

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை . இன்று என் உறவினருக்கு பிரச்னை வந்து வாலை வெட்டி விட்டோம்

ஹுஸைனம்மா said...

நீடூர் வாப்பா:

உறவினர் நலமாக இருக்கிறாரா இப்போது?

ஆஷிக் அஹமதுவின், அப்பெண்டிக்ஸ் குறித்த வியப்பான தகவல்கள் அடங்கிய இந்தப் பதிவையும் படியுங்க:

உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..

Unknown said...

Romba romba useful. Thanks

Enoda casela oru doctor kidneyla kallu nu sollitaaru, sari nu naanga vidala, athuvum antha doctor Ultra sound scan eduthu sonnaar. Irunthum Naan Gastra Intrologist doctor paarthaayn. Appuram than ithu Appendix endtru therinthu, udanadiyaga operation seithu ippothu veetla rest eduthukitu irukayn.