சில நாட்களுக்குமுன் ஒரு அமீரகச் செய்தித்தாளில், வாசகர் ஒருவர் ஒரு பெரிய ஹோட்டலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருந்தார். அதாவது, அவர் முழு சைவமாம். ஹோட்டலில் நடந்த ஆஃபீஸ் பார்ட்டியின்போது, சைவ, அசைவ சமோசா இரண்டையும் ஒரே ப்ளேட்டில் வைத்துப் பரிமாறினார்களாம். சர்வரைக் கூப்பிட்டுக் கேட்டபோது, இரண்டையும் ஒரே எண்ணெயில் பொறிக்கும்போது, ஒரே ப்ளேட்டில் வைப்பதில் என்ன தவறுன்னு திருப்பிக் கேட்டாராம். முன்பே கேட்டுக் கொள்ளப்பட்டாலொழிய, தனி எண்ணெயில் பொறிப்பதில்லையாம்!! எல்லா ஹோட்டல்களிலும் இப்படித்தானா என்று தெரியவில்லை. சரியாகவும் படவில்லை. அசைவ ஹோட்டல்களில் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் உண்டே? இங்கேயே இப்படின்னா, இந்தியாவில்?
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
கூகிள் பிளஸ்ஸைத் திறந்துவிட்டாலும் விட்டார்கள், தினமும் அதிலிருந்து, “இன்னார் உங்களைச் சேர்த்துக் கொண்டார்” என்று தவறாமல் ஐந்தாறு “added you" மெஸேஜ் வந்துவிடுகிறது. இவர்களில் யாரையும் அறிந்திருக்கவுமில்லை. ஒவ்வொருவராக ஆராய்ந்துகொண்டிருக்கவும் முடியவில்லை. ஃபேஸ்புக்கிலாவது “friend request"தான் வரும். ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் நம் விருப்பம். முன்பு, “LinkedIn, Quepasa" போன்ற தளங்களிலிலிருந்து அனுப்புனரின் அனுமதியில்லாமலேயே “Invited"னு ஸ்பாம் மெயில்கள் வரும். இப்போ இது!! ”ஙே”னு நான்!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
துபாயில், மக்களின் கவனத்தை ஈர்த்து, நகரைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்யும் ஒரு புதின முயற்சியாக, குப்பைத் தொட்டிகளின்மீது அழகிய வண்ணக் காட்சிகளை தீட்டி வைத்துள்ளார்கள். இப்படியெல்லாம் செய்துதான், நம் கடமையைச் செய்ய வைக்க வேண்டியிருக்கிறது என்பது வருத்தமானது என்றாலும், அப்படியாவது மக்கள் மாறிடமாட்டாங்களான்னு ஒரு ஆசை. தொட்டதுக்கெல்லாம் அபராதம் விதிக்கும் துபாய் நகராட்சியின் இந்த மென்மையான அணுகுமுறை ஆச்சர்யம் தந்தாலும், இதுக்கும் அபராதம் விதிக்கப்படும்னு அறிவிச்சிருந்தா கண்டிப்பாக் கூடுதல் பலன் இருந்திருக்கும்!! குப்பைத் தொட்டிக்கு ஆன பெயிண்ட் செலவும் மிச்சமாகியிருக்கும் இல்லையா? முதல்ல, இவ்ளோ ‘அழகான’ குப்பைத் தொட்டியில் குப்பை போட மனசு வருமா?
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
அமீரகத்தில் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் இளைய தலைமுறையின் அதிவேகம்தான்னு இன்னொரு முறை நிரூபித்துள்ளது, அடுத்தடுத்த நாட்களில் இறந்திருக்கும் இரு கால்பந்துவீரர்களின் மரணம். அமீரக அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்கள் இருவரும். இதில், சமீபத்தில் “back heel penalty kick" என்ற முறையில் பின்னங்காலால் கோல் போட்டுப் பரபரப்பு ஏற்படுத்திய “தியாப் அவானா” என்ற 21 வயது வீரரும் ஒருவர். முன்தினம் விபத்தில் இறந்த இன்னொரு கால்பந்து வீரரான 19 வயது சயீத் அல் நூபியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து!! இரண்டுமே பயங்கர வேகத்தினால் நடந்தவை என்பதால், இளைஞர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும்; விபத்துக்கு மிகச் சற்றுமுன் எஸ்.எம்.எஸ்.-ம் அனுப்பியிருக்கிறார் என்பதால், வண்டியோட்டும்போது மொபைல் பயன்பாடு குறித்தும் குரல்கள் எழுந்துள்ளன. எப்பவும் சொல்வதுதான் என்றாலும், இம்முறை கொஞ்சமாவது பலன் இருக்கும் என்ற நம்பிக்கை.
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
உண்ணாவிரதம் - இந்த வார்த்தையைக் கேட்டாலே எரிச்சல் வருமளவுக்கு ஒரு நல்ல போராட்ட முறையை இப்படி காமெடியாக்கிட்டாங்க. தெலுங்கானாவுக்கும் உண்ணாவிரதம் இருக்கப் போறதா இப்ப யாரோ அறிவிச்சிருந்தாங்க. இந்தத் தெலுங்கானாவால ஆந்திரத்து மக்கள் படுற பாட்டை நினச்சா, பரிதாபமா இருக்கு.
இந்த உண்ணாவிரத முறைய ஆரம்பிச்சு வந்த காந்தி இப்போ இருந்தா, யாரும் இனி உண்ணாவிரதம் இருக்கக்கூடாதுன்னு உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ? இன்னொரு ஆச்சர்யத் தகவல், காந்தி ஒருமுறைகூட (ஆங்கிலேய) அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தனக்கான தண்டனையாகவோ அல்லது இந்திய மக்களின் நடவடிக்கைகளைக் கண்டித்தோதான் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
ஒளியின் வேகம்தான் அதிகபட்ச வேகம்; அதை மிஞ்சவே முடியாது என்ற ஐன்ஸ்டீனின் கூற்றும், தொடர்ந்த theory of relativityயும்தான் இன்றைய பல அறிவியல் ஆய்வுகளுக்கு ஆதாரம். ஆனால், சென்ற வாரம் விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வில் ஒளிவேகத்தை மிஞ்ச முடியும் என்று நிரூபிக்கத்தக்க வகையில் ஆதாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பிரபஞ்சப் பெருவெடிப்பை மறுநிகழ்வு செய்வதற்கென்று ஜெனிவாவில் பெருவெடிப்பு உலை செய்தார்களே நினைவிருக்கிறதா - CERN, Large Hadron Collider - இதெல்லாம் சொன்னால் நினைவு வரலாம். அங்கிருந்து, இத்தாலிக்கு அனுப்பிய அணுவைவிடச் சிறிய நியூட்ரினோ நுண்துகள்கள், 60 நேனோ செகண்டுகளில் 730 கி.மீ. தூரத்தைக் கடந்ததாம். (ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்கள். கணக்கு சரியான்னு போட்டுப் பாத்துச் சொல்லுங்க)
இது மட்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டால், ஐன்ஸ்டீனின் பிரபலமான சார்புக் கோட்பாடும் (theory of relativity) கேள்விக்குள்ளாகும் என்பதால் அதை அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆர்வத்தோடு கவனித்து வருகின்றனர்.
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
பெரியவன், இப்போது(தைக்கு) கிளாஸ் லீடராம். மற்ற மாணவர்களைப் பேசாமல் இருக்கச் செய்வது ரொம்பக் கஷ்டமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். (உன்னாலயே பேசாம இருக்க முடியாதேடா?) வெளியே திட்டிகிட்டாலும், அம்மாவாச்சே, சும்மா இருக்க முடியுமா, பிள்ளை கஷ்டப்படுறதைப் பார்த்து? (செண்டிமெண்ட் சீன்) ஆக்கப்பூர்வமா, அறிவுப்பூர்வமா யோசனை சொல்லலாம்னு (நினைச்சு), “நீ சும்மா, பேசாதே, பேசாதேன்னா யாரும் பேசாம இருக்க மாட்டாங்க. கிளாஸ் முன்னாடி நின்னு இண்ட்ரெஸ்டிங்கா அன்னிக்கு நடத்துன ஏதாவது ஒரு பாடத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணு”னு சொல்லிகிட்டிருக்கும்போதே குறுக்கேப் பாஞ்ச சின்னவன், “அப்போ எல்லாரும் தூங்கிடுவாங்க. அப்புறம் உனக்கு ஜாலி!!”ன்னானே பாக்கணும்!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
|
Tweet | |||
36 comments:
உங்க மகன்களை பற்றி சொல்லும் போதே கடைசியில் எப்படி பல்பு வாங்குனீங்க என யோசித்து கொண்டே தான் வாசித்தேன்
//இங்கேயே இப்படின்னா, இந்தியாவில்?//
ஹே..ஹுசைனம்மா என்னான்னு நினைச்சீங்க.இந்தியாவில் வெஜ்ஜுக்கும் நான் வெஜ்ஜுக்கும் தனித்தனி பாத்திரங்களாக்கும்.
பெட்டி இம்முறையும் கனமாத் தான் இருக்கு.
அழகான குப்பை தொட்டியில் குப்பை போட மனசே வராதே....:)
சின்னவன் சொன்னது சூப்பர்...
நிறைய விஷயங்களை அழகாக தொகுத்து இருக்கிறீர்கள் சகோ.
நிறையா எழுதுங்க
காந்தி ஒருமுறைகூட (ஆங்கிலேய) அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தனக்கான தண்டனையாகவோ அல்லது இந்திய மக்களின் நடவடிக்கைகளைக் கண்டித்தோதான் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்!! //////
ஆச்சர்யமான, அறியாத தகவல்.
டிரங்குப் பொட்டி.... வழமை போல, மிக நன்றாக இருக்கிறது.
உங்கள் மகன் சொன்ன விஷயம் கேட்டு உங்கள் முகம் பிரகாசம் அடைந்தது இங்கே தெரிகிறது :))
அசைவத்தில் சைவம் தேடுவது என்றுமே ரிஸ்க்குதான்!
//”ஙே”// --- பதிவுலகில் இந்த எழுத்தை சரியாக உபயோகிக்கும் மிகச் சிலரில் நீங்களும் ஒருவர்!
இந்த மாதிரி விபத்தில் இறந்தவரின் இறுதிச் சடங்குக்குச் சென்று அதுவும் 'கவனமாக இருக்க வேண்டும்' என்று குறுஞ்செய்தி அனுப்பியவரே அதே போல விபத்தில் மரணம் என்பது வேதனையான செய்தி. இதற்குத்தான் அசாருதீன் செய்தி எடுத்து வைத்திருந்தீர்களோ...
உங்க ரெண்டு பசங்களுமே செம கில்லாடிங்க போலேருக்கு!
//அப்போ எல்லாரும் தூங்கிடுவாங்க///
உங்க பிள்ளைக்கு நல்ல திறமை இருக்கு இங்கே அமெரிக்காவில் பாதிபேர் தூக்கம் வராமல் தவித்து கொண்டிருகிறார்கள்.இங்கே அனுப்பி வையுங்க நல்லா நாலு காசு பார்க்கலாம்.
வேகம் ஆபத்துன்னு எத்தனை பேர் இறந்தாலும் புரிவதில்லை.. இளைஞர்களுக்கு .
:(
-------------
காந்தி ஆச்சரியம் தான் , கேள்விபட்டமாதிரியும் இருக்கு.. ஆனா முழுவிவரமா அப்பறம் எழுதுங்களேன்..
டிரங்குப்பெட்டி ரொம்ப கனமா இருக்கு...சின்னவருடைய பஞ்ச் சூப்பர்ர்!!
அழகான பல்பு..
//வண்டியோட்டும்போது மொபைல் பயன்பாடு குறித்தும் குரல்கள் எழுந்துள்ளன.//.
மொபைல் பயன்பாடு, முன்பு பேசுவது மட்டும்தான் ஆனால் இப்போதோ சாட்டிங், எல்லோருக்கும் தாம் நல்ல டிரைவர் என்றும் தன்னால் எதையும் சமாளிக்க முடியும் என்றும் நம்பிக்கை
பையன் கிட்ட பல்புன்னு முதல் வரி ஆரம்பித்த உடனேயே புரிஞ்சுது. எங்க க்ளால, இருக்கற கபேட்ல எல்லோரும் மாதம் ஒரு முறை புது புக் கொண்டு வந்து வைக்கணும். அதனை எடுத்து மத்தவங்க வாசிப்பார்கள். அதனால் சத்தம் குறைவாக இருக்கும். இல்லேன்னா, யாராவது ஒரு பொண்ணை பாட வைச்சுட்டு கேட்போம். மெதுவாகவே பாடுவாங்க. குட் ஓல்ட் டேய்ஸ்.
குப்பை கூடைக்கு பெயின்டிங் நல்லா இருக்கே.
டிரங்கு பொட்டி சுவரசியமான விஷயங்களை கொண்டிருக்கிறது.
ஆனால் இம்முறை மனதை கலங்க செய்யும் சில விஷயங்கள்.....
உங்க சின்ன பையனின் presence of mind அருமை.குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
சுவாரசியமான தகவல்கள்
// ஒரே எண்ணெயில் பொறிக்கும்போது, ஒரே ப்ளேட்டில் வைப்பதில் என்ன தவறுன்னு திருப்பிக் கேட்டாராம். முன்பே கேட்டுக் கொள்ளப்பட்டாலொழிய, தனி எண்ணெயில் பொறிப்பதில்லையாம்!!//
இனி அசைவ ஓட்டலில் சைவம் உண்டு என்றாலும் சாப்பிட மாட்டேன் ஹீஸைனம்மா.
விளையாட்டு வீரர்களின் மரணம் மனதை வருத்துகிறது.
குப்பை தொட்டி அழகாய் இருக்கு.
சின்னவர் நன்றாக உங்களை மாதிரி சிரிக்க வைக்கிறார்.
வகைக்கு ஒரு செய்தியா டிரங்குப்பெட்டி சுவாரசியமான, சோகமான, அறியாத, ஆச்சர்யமான பல செய்திகளைத் தாங்கி வந்திருக்கு. பகிர்ந்த விதமும் அபாரம்.
ட்ரங்குப்பொட்டி நிறைய சுவாரஸ்யங்கள்தான்... நீங்க வாங்குன பல்பு உட்பட :-))
// காந்தி ஒருமுறைகூட (ஆங்கிலேய) அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. //
விவரம் தெரிஞ்ச நீங்க சொன்னா தப்பவா இருக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்
செண்டிமெண்ட் சீன்- உண்மையிலேயே super :)))
yellaame nallaayiruku.
vaazhthukal.
வேகம் பற்றி எத்தனை முறை அறிவுறுத்தினாலும் தவறில்லை:(!
சின்னவன்:))!
டிரெங்கு பெட்டி ரொம்ப ஸ்வாரசியமா இருந்தது
ஹா சின்னவர் சரி வாலு போல
ஒளியின் வேகம் நானும் படித்தேன்...ஆனால் இதெல்லாம் டுபாக்கூர்னு நினச்சு வாசிக்காம விட்டுட்டேன் (என்னது.... அந்த நியூஸ் பேப்பர்ல வாசிக்கும்போது எனக்கு புரியல...உங்க ப்ளாக்ல வாசிக்கும்போதுதான் புரிஞ்சுதா... அவ்வ்வ்வ்... எப்டி கரக்டா புரிஞ்சு வச்சிருக்கிறீங்க..ஹி..ஹி..)
ஆக்ஸிடன்ட் மேட்டர்...ரொம்ப வருத்தத்திற்குரியது....
ஆஹா....நம்ம ரகசியத்த இப்டி டப்புன்னு போட்டு உடச்சிட்டாரே சின்னவர்....அவ்வ்வ்வ்..
ட்ரங்க்பெட்டி நிறைய பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டிருக்கீங்க. நல்லா இருக்கு.
பெட்டியை லேட்டா திறந்து பார்த்தாலும் உள்ள சரக்கு புதுசா நிறைய இருந்தது. நன்று.
மோகன்குமார் - பல்புகள் வாழ்க்கையை ஒளிமயமாக்கும்!! :-)))
ஸாதிகாக்கா - தனித்தனி பாத்திரங்கள்னு என்னால நம்ப முடியலைக்கா. அதுகூட சாத்தியம்தான்னாலும், இதுமாதிரி, சைவ, அசைவ வகைகளை வேறுவேறு எண்ணெயில் பொறிப்பார்களா என்பது நிச்சயம் சந்தேகத்திற்குரியதுதான்.
கோவை2தில்லி - நன்றிப்பா.
ஹைதர் அலி - நன்றி தம்பி.
பட்டர்-கட்டர் (அப்படின்னா மொன்னைக் கத்தியா? :-))) ) - நன்றிங்க ஊக்கத்திற்கு.
தமிழ் உதயம் - இது முன்பே எங்கோ படித்ததுதான், இப்ப மறுபடியும் உறுதிப்படுத்துவதற்காகச் சில தளங்களில் வாசித்துக் கொண்டேன்.
வெங்கட் - நன்றி. பின்னே, பல்பு இல்லியா?
ஸ்ரீராம் - //இந்த எழுத்தை சரியாக உபயோகிக்கும்// - அதுக்காக “ஙே ஹுஸைனம்மா” என்று பட்டம் தந்துவிட மாட்டீங்களே? :-))))
//குறுஞ்செய்தி அனுப்பியவரே// - தன் இன்னொரு நண்பருக்கு, ‘ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவேன்; வீட்டைவிட்டு வெளியே வந்து தயாராக நில்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாராம்!! :-(((
அவர்கள் உண்மைகள் - அங்கே மட்டுமா, இங்கே அமீரகத்திலும், தூக்கம் வராமல் தவிப்பவர்கள் குறித்துத்தான் சில நாட்களாகச் செய்தித்தாட்களில் பேச்சு!!
முத்து அக்கா - காந்தி பத்தி, அங்கங்க வாசிச்சதுதான்க்கா.
மேனகா - நன்றிப்பா.
அமுதா - நன்றி.
நாசர் - கரெக்டாச் சொன்னீங்க. எல்லாருக்குமே நமக்கு இது நடக்காதுங்கிற “over confident"!!
அனாமிகா - அட, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, வாங்க நலம்தானே? என் பசங்க ரெண்டு பேருமே ஃப்ரீ பீரியட்ல வாசிக்கான்னே கதை புக்ஸ் வீட்டுலருந்து கொண்டு போயிடுவாங்க.
ராம்வி - நன்றிப்பா.
வித்யா மேடம் - நன்றிங்க.
கோமதிக்கா - எனக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்துதுக்கா அந்த அசைவ மேட்டர்.
//சின்னவர் நன்றாக உங்களை மாதிரி சிரிக்க// அவர்களிடமிருந்துதான் நான் சிரிக்க(வைக்க)க் கற்றுக் கொள்கிறேன்க்கா.
கீதா - நன்றிப்பா.
அமைதிக்கா - பல்புகள் நித்தம் ஒண்ணாவது வாங்கிடுவோம்ல!!
அப்துல்காதர் - நன்றி.
இரசிகை - முதல் வரவுக்கும் நன்றி.
ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா.
ஜலீலாக்கா - நன்றிக்கா.
என்றென்றும் 16 - நன்றி.
லக்ஷ்மி மேடம் - நன்றி.
ஆதிமனிதன் - வாங்க, தொடர்ந்து வருக. நன்றி.
குப்பை தொட்டி என் கைல கெடச்சா நடுவீட்ல வச்சு அழகு பொருள்ன்னு சொல்லுவேன். தூசு படாம பாதுகாக்குறதுலேயே டைம் போய்டும்
____
க்ளாஸ் லீடர் மேட்டர் சூப்பர்
உங்கள விட உங்க பசங்க செம அறிவாளி :-)
______
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html
Post a Comment