Pages

கல்லூரிப் படிப்பு





சமரசம்  என்ற பத்திரிகையில், செப்டம்பர் மாதம் வெளிவந்த எனது சிறுகதை. எனது முதல் பத்திரிகைப் படைப்பு!

 

ஹாஜா மைதீன் பெரியாப்பாவின் இளைய மகள் சகீனாவுக்குக் கல்யாணம். காலை கல்யாணம் சிறப்பாக முடிந்து, மதிய விருந்தும் முடிந்து, எல்லாரும் சற்றே இளைப்பாறிக் கொண்டிருந்தனர். ஊர் வழக்கப்படி வீட்டில் வைத்துத்தான் திருமணம். ஹாஜா மைதீன் பெரியாப்பா, பெரியம்மா ரெண்டு பேருக்குமே பெரிய குடும்பப் பிண்ணனி.  அதனாலும் வீடு முழுக்க,  நெருங்கிய உறவினர்களால் நிரம்பி வழிந்தது. கல்யாண மண்டபம் போல பெரிய, அந்தக் காலத்துக் கல்வீடு. குழந்தைகள் ஓடியாட, இளைஞர்கள் வீட்டுவாசலில் அணிவகுத்திருந்த பைக்குகளின் மீதமர்ந்து மொபைல்களில் விட்டுப்போன அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் பார்க்க, பெண்கள் நடுவீட்டில் ஓய்வெடுக்க,  மற்ற ஆண்கள் தெருவீட்டில் பாய்களிலும், சேர்களிலும் நிரவியிருந்தனர்.

மாலை நேரத்துத் தேநீர் தயாரென்று சமையல் கட்டிலிருந்து அழைப்பு வர, பெண்கள் அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்கள். குடித்த தேநீர் தந்த சுறுசுறுப்பில் எல்லோரும் ஹாலில் குவிய, கலகலப்பானது வீடு. சற்றே கட்டைக் குரல் உடைய செய்ராத்து பெத்தும்மா, “எலே கபூரு, உம்மவ கமருன்னிஸா பண்ணெண்டாப்புல எம்புட்டு மார்க்கு?” என்று கேட்க, எல்லார் கவனமும் அதில் திரும்பியது. கஃபூர், “ஆயிரத்து நூத்தி முப்பது மாமி” என்றதும், “மாஷா அல்லாஹ். நல்ல மார்க்காச்சே. எந்த காலேஜ்? என்ன கோர்ஸ்ல சேத்திருக்கீயோ காக்கா?” என ஜெய்னம்பு சாச்சி கேட்டார். சாச்சி துபாயில் வசிக்கிறார். அங்கே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறார். அவரது கலகலப்பாலும், தெளிந்த சிந்தனைகளாலும், இளையவர் எல்லாருக்குமே அவர் “சாச்சி”தான். வயது “சாச்சி”க்குரிய நாற்பதுகளில் என்றாலும், பேச்சும், செயல்களும் ஒரு ஆச்சியின் அனுபவத்தைக் கொண்டதாயிருக்கும்!!

“ஊர் கிடக்க கிடப்புல, பொம்பளப்புள்ளய படிக்க வக்கிறது, வவுத்துல நெருப்பக் கட்டிகிட்டு இருக்கமாதிரி இருக்கும். அதான் படிச்சது போதும்னு, மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டேன் ஜெய்னம்பு” என்று சொல்ல, அங்கே ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது.

“என்ன காக்கா சொல்றியோ? இந்தக் காலத்துல பொம்பளப் புள்ளயளுவோ என்னென்ன படிப்பெல்லாம் படிக்குதுவோ. எம்புட்டுப் பெரிய வேலலெல்லாம் இருக்குதுவோ. நீங்க என்ன, படிக்க வக்கதுக்கே இப்படி யோசிக்கிறியோ?”

”வேற என்ன செய்யம்மா? நீயே பாரு, ஒரே எங்கப்பாத்தாலும், அந்தூட்டுப் பிள்ள இவன்கூட ஓடிப்போயிட்டு, இந்தூட்டுப் புள்ள அவன்கூட ஓடிப்போயிட்டுன்னுதான் ஊருல பேச்சாக் கிடக்கு. அதுவும் இப்பும்லாம், கல்யாணம் ஆன பிள்ளையளே ஓடிப்போவுதுவோ. நீ வெளிநாட்டுல இருக்கதுனால உனக்கு வெவரம் கிடக்கலபோல. அந்தப் பிள்ளையளும் படிச்சதுகதான்.”

“அஸ்தஃபிருல்லாஹ்!! இந்தப் பிள்ளையளுக்கு ஏன் இப்படி கூறுகெட்டுப் போச்சு?” என்று ஆதங்கத்துடன் சொன்னாள் ஜெய்னம்பு. ”சரி, அதுக்கும் நம்ம வீட்டுப் புள்ளய படிக்க வக்கதுக்கும் என்ன சம்பந்தம்? நம்ம பிள்ளைய நாமே நம்பாம இருக்கலாமா?”

“என்ன ஜெய்னம்பு நீ பேசுற? படிக்க பிள்ளையள வழிகெடுக்கதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குது. பொம்பளப் பிள்ளையள வளத்தமா, கட்டிக்குடுத்தமான்னு நம்ம கடமைய முடிச்சமான்னுகூட இப்பம் இருக்க முடியல. அம்புட்டு தலாக்கு நடக்குது ஊருல. அதுக்கும் புள்ளெயளு படிக்கதத்தான் காரணம் சொல்றா.”

“இதென்ன விவரங்கெட்டத்தனமா இருக்கு? படிச்சா பிள்ளைகளுக்கு திமிர் கூடும்னு சொல்ற மாதிரில்ல இருக்கு இது? தப்பு பண்ற பிள்ளைக எதனால அப்படிச் செய்யுதுவோன்னு பாத்து அதுகளத் திருத்த வழிபாக்காம, மொத்தமா, அம்புட்டுப்பேரையும் தண்டிச்சா எப்புடி காக்கா?”

”இதுல என்ன தப்பு? படிக்கதுனாலத்தான ரொம்ப விவரந் தெரிஞ்சுபோவுது இதுகளுக்கு. இப்ப எல்லாம் காலெஜில ஆம்பள, பொம்பள சேந்து படிக்குதுவோ. பயலுவோகூட வரமுறயில்லாமப் பழவுறது. அப்புறம் அந்தப் பயலுவோ குடுக்க தைரியத்துல இதுக இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணியுதுவோ. அதனால, படிக்க வக்காம இருக்கதுதான் சரி. வேணுன்னா, மார்க்கக் கல்வி படிக்கட்டுமே? குடும்பம் நடத்த மார்க்கம் தெரிஞ்சாப் போதாதா?” இடையில் விழுந்து ’கருத்து’ சொன்னான், இளந்தாரியான கரீம்.

“அதானே? காணாததுக்கு இந்த செல்ஃபோனும், கம்ப்யூட்டரும்!! அதுக அதுல என்ன செய்யுதுன்னு உம்மாமாரும் கவனிக்கதே இல்ல..” பாய்ந்தது இன்னொரு வீரன், ஜலீல்.

“ஆகக் கடைசியில, எல்லாத் தப்புக்கும் காரணம் பொம்பளைகதான்னு வழக்கமா வர்ற முடிவுக்கு வந்தாச்சா?”; ”பையங்க மட்டும் என்னவாம்? நாலஞ்சு மாசத்துக்கொருக்க மாத்திக்கிற லேட்டஸ்ட் மொபைல் என்ன, காஸ்ட்லி வாட்ச் என்ன, பிராண்டட் ஷர்ட்-பேண்ட் என்ன, பல்ஸர் பைக் என்ன..”;  “எங்க அடுத்தூட்டு மம்மாத்து மூணு புள்ளை பெத்ததுக்கப்புறம், எவனோடயோ ஓடிப்போச்சு. அவ எந்த காலேஜில படிச்சா? மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவ அவ.”  பெண்கள் தரப்பிலிருந்தும் கொதிப்புடன்  பதில்கள் வந்தன.

“அடடா.. இருங்க.. இருங்க.. இப்படி ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி குத்தம் சொல்லிகிட்டா, எல்லாம் சரியாகிடுமா? சரி, இப்ப காலேஜில படிச்சா உடனே காதல் வந்துடும்னு என்ன கட்டாயம்? நூறு பேர் படிச்சா, ஒண்ணுரெண்டு அப்படி இருக்கும். அதிலும்கூட, நம்ம வளர்ப்பு சரியா இருந்து, இஸ்லாம்ங்கிற வாழ்க்கை நெறியை சரியாப் புரிஞ்சுகிட்டா, பாதிப் பிரச்னை தீர்ந்துடும்.” ஜெய்னம்பு சற்றே நிறுத்தினாள்.

காத்திருந்த கரீம், “அதத்தான் நாங்களும் சொல்றோம். மதரஸா போதும், காலேஜ்லாம் வேண்டாம்னு.”

“ம்க்கும்.. நம்ம பஹ்ரைன் சாச்சா மகன் ஜெய்லானி தெரியுமா சாச்சி? ‘படிச்ச புள்ளன்னா திமிரா நடக்கும், ஓதுன பொண்ணுதான் வேணும்’னு சொல்லி,  மதரஸாவில ஓதி, அங்கேயே வேலைபாக்ற நஸ்ரினைக் கட்டினான்.  பெண்கள் சம்பாத்தியம் பெண்களுக்கேன்னு குர் ஆன்ல சொல்லிருக்குதுல்ல. அதைச் சுட்டி,  சம்பளத்தக் கணவனிடம் தரத் தேவையில்லனு நஸ்ரின் சொல்ல, ‘அப்படின்னா, வேலைக்கே போவேணாம்’னு ஜெய்லானி சொல்ல... இப்படியே ஆரம்பிச்சு ரெண்டு பேருக்கும் சண்டை. மதரஸாவோ, காலேஜோ.. பெண்களுக்கு இப்ப விழிப்புணர்வு அதிமாகிட்டதைப் பொறுக்க முடியாதவங்கதான், இப்படிலாம் சட்டம் போடுறது” ஃபாயிஸா பதிலுரைத்தாள்.

“ஆமா, பெரிய விழிப்புணர்வு.. எதுக்கெடுத்தாலும் வூட்டுல ஆம்பளைங்ககிட்ட மல்லுக்கு நிக்கது.. நம்ம உம்மாமாரெல்லாம் படிக்கவா செஞ்சாங்க? அழகா, வாப்பாவுக்கு, மாமா-மாமிக்கு அடங்கி குடும்பம் நடத்தலையா? இந்தக் காலத்துலதான், படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லிட்டு, இவளுவோ செய்ற அட்டகாசம் தாங்க முடியல..” நாட்டமை பாணியில் நாசர் சொல்ல, ஜெய்னம்புக்கு இவ்வளவு நேரம் இருந்த பொறுமை போய், கோபம் வந்துவிட்டது.

“படிச்சாதான் திமிர் வரும், அட்டகாசம் பண்ணனும்னு இல்லை. படிக்காமலயே அப்படி இருக்கவங்களும் உண்டு.   படிக்கிறது நம்ம அறிவை விசாலமாக்க. கல்விங்கிறது ஆணுக்கு மட்டும்தான்னு இஸ்லாத்துல எங்கயும் சொல்லல. மார்க்க அறிவு, உலக அறிவு இரண்டையும் அறிஞ்சுதெரிஞ்சு, வாழ்க்கைக்கு, குடும்பத்துக்குத் தேவையான விஷயங்கள்ல சரியாப் பயன்படுத்திக்கறதுலதான் படிச்ச புள்ளையோட திறமையே இருக்கு. இது புரியாத சிலர், தப்பு பண்றாங்க. அதுக்காக, படிக்கவே கூடாதுன்னா எப்படி? படிக்க வைங்க, கூடவே இஸ்லாமையும் சரியாச் சொல்லிக் கொடுங்க. அதுக்கு, முதல்ல பெற்றோர் சரியான இஸ்லாமிய அறிவோட இருக்கணும். எத்தனை பெற்றோர் இங்க அப்படி இருக்காங்க சொல்லுங்க? அதுதான் முதல் தப்பு. இஸ்லாம்னா, தொழுறது, நோன்பு பிடிக்கிறது, பர்தா போட்டுக்கிறது அப்படின்ற அளவுலதான் நிறைய பெண்கள் இருக்காங்க. உங்க வீட்டுப் பெண்கள் அப்படி இருக்காங்கன்னா, தவறு வீட்டு ஆண்கள் மேலத்தான். ஏன் அவங்களுக்குத் தெரியாததைத் தெரிஞ்சுக்க வழிவகைகள் செஞ்சுக் கொடுக்கல?”

“எங்க? சமைக்கிற நேரம் போக, டிவியே கதின்னு இருந்தா எப்படித் தெரியும்?”

“எல்லாரும் பொதுவாச் சொல்ற குற்றச்சாட்டு இது. ஆண்களும் டிவி பாக்கிற விஷயத்தில் திருந்த வேண்டியிருக்கு.  பெண்களுக்கு ஃப்ரீடைம் நிறைய இருக்கதால டிவியில் அதிகம் ஈடுபாடு காட்டறாங்க. அந்த நேரத்தை அவங்க ஆர்வத்துக்கேத்த மாதிரி, பயனான விஷயத்துல கவனம் செலுத்த வசதி செஞ்சு கொடுங்க. உங்க பிஸினஸ்களில், ஆஃபீஸ் வேலைகளில்கூட சிறிய அளவில் உதவச் சொல்லலாம். நிறைய வீடுகள்ல, ஆண்கள் வீட்டுக்கு வர்றதே, சாப்பிடவும், தூங்கவும்தான். மனைவிட்ட மனசுவிட்டுப் பேசுறதே கிடையாது. வெளியே நாலு இடத்துக்கு வேலையாப் போயிட்டு வர ஆண்கள், தம் மனைவியிடம் தான் பார்த்த இடம், ஆட்களைப் பத்திப் பேசுனா, அவங்களுக்கும் டிவி-சினிமாவுல வர்றது போல, உலகம் அவ்வளவு சொகுசு கிடையாதுன்னு புரியும். மேலும், உங்க வேலையின் தன்மை, அதிலுள்ள கஷ்டநஷ்டம் புரியும். பாசம் கூடும். அவங்களையும் பேசவிட்டுக் கேளுங்க.”

“இதெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கும், நாம பேசுற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?” அத்துலக் (அப்துல் ஹக்) சின்னாப்பாதான் எரிச்சலோடு கேட்டார்.

“இப்படித்தான் சின்னாப்பா, நிறைய ஆம்பளைங்க புரியாம இருக்கீங்க. முதல்ல கணவன் -மனைவிக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும். ஒரு கணவன், தன் வருமானம், செலவுகள், சேமிப்பு, கடன், நட்புனு எல்லாத்தையும் தன் மனைவிகிட்ட மறைக்காமச் சொல்லணும். முடிஞ்சா அவ ஆலோசனையையும் கேட்டுக்கிடணும். இது அவங்களுக்கிடைல பந்தத்தை இறுக்கமாக்குறதோட, மனைவிய தன் வருமானத்துக்குள்ள குடும்பம் நடத்த வைக்கவும் உதவும். இப்படி இல்லாம, மனைவிய வேலைக்காரி போல நடத்துனா, அவ படிச்சா என்ன படிக்காட்டி என்ன - மனசு வெறுத்துதான் போகும். இந்தச் சமயத்துல, யாராவது கொஞ்சம் சிநேகமாப் பேசினாலும், தெளிவில்லாதவங்க தவறு செய்ய வாய்ப்பாயிடுது. இப்படி ஆம்பளங்கட்டயும் தப்பை வச்சுகிட்டு, பெண்களை மட்டும் குத்தம் சொன்னா எப்படி?”

“அது சரி. இப்ப நாம பேசிகிட்டிருக்கது, படிக்கிற புள்ளைங்க ஓடிப் போறதுபத்தி..” கரீம் முடிக்குமுன், ஜெய்னம்பு தொடர்ந்தாள்.

“இதச் சரின்னு நீ ஒத்துகிட்டதே சந்தோஷம். எப்பவும் ஃபவுண்டேஷன் ஸ்ட்ராங்கா இருந்தா, பில்டிங்கும் ஸ்ட்ராங்கா இருக்கும். தெளிவான இஸ்லாமிய சிந்தனையோடும், தங்களுக்குள்ள இறுக்கமான பாசத்தோடயும் இருக்க பெற்றோர்கள் வளர்க்கிற பிள்ளைகளும், அதே தெளிவோட இருப்பாங்க. தப்பு செய்ய மாட்டாங்க.  பெத்தவங்களுக்கும் பிள்ளைகளின் நண்பர்கள் யாராரு, ஈ-மெயில், ஃபேஸ்புக் அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும். இதையெல்லாம் உங்ககிட்ட தயக்கமில்லாமப் பகிர்ந்துக்கிற அளவுக்கு நீங்க அவங்ககிட்ட அந்நியோன்யமாப் பழகணும்.  ஃபேஸ்புக்கில என்ன பண்றாங்கன்னு மேலோட்டமா பாக்கற அளவுக்காவது பெற்றோர்கள் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கணும்.  பிள்ளைக மேலே கொஞ்சம் கண்காணிப்பும்  இருக்கணும். அதுக்காக, எப்பவும் அவங்க தோள் பின்னாடி நின்னு எட்டிப் பாத்துகிட்டே இருக்கணும்னு சொல்லல. சுதந்திரமோ, கட்டுப்பாடோ, ரெண்டுமே அளவோட இருக்கணும். அளவுக்கு மிஞ்சினா, அமிர்தமே நஞ்சில்லியா?”

“ஆமா, ஒரேடிக்குக் காலைக் கட்டிப்போட்டா, புள்ளையளுக்கும் எரிச்ச வராதா?” ஆமினா மாமி.

“இதயும் மீறி, ஒண்ணுரெண்டுபேர் காதல்,கத்தரிக்கானு போகலாம். அப்படிப் போனா, உடனே தாம்தூம்னு குதிக்காம, கூப்பிட்டு வச்சிப் பேசுங்க. பிள்ளைக சந்தோஷமும் முக்கியம்தானே? பையனோ, குடும்பமோ, சூழ்நிலைகளோ சரியில்லன்னா, எடுத்துச் சொல்லுங்க. புரிஞ்சுக்கிடுவாங்க. இல்லன்னாலும், சமாளிக்க நிறைய வழிகள் இருக்கு. சம்மதமில்லாம வேற மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுக்கதுதான் இந்த மாதிரி தவறான முடிவெடுக்க வைக்கும்.”

யாரும் ஒன்றும் பேசாமல் இருக்க, இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டிக் கேட்டாள். “சரி, பொண்ணுங்க படிச்சதுனால ஓடிப்போறாங்கன்றது ஒரு வாதத்துக்கு சரின்னு வச்சுகிட்டாலும், கூடப் போற முஸ்லிம் பையங்களும் படிச்சவங்கதானே? கரீம் சொன்ன மாதிரி, அவங்க குடுக்கிற தைரியம்தானே, பொண்ணுகள எதுவும் வேணாம்னு உதறிட்டு வர வைக்குது? அப்ப ஆம்பளப் பசங்களுக்கும் படிச்ச திமிர் இருக்குதா இல்ல மார்க்க அறிவு இல்லையா? அந்தப் பசங்க செஞ்சத எப்படி நியாயப் படுத்துவீங்க? சொல்லுங்க?”

“தப்புதான். ஆனா, ஒரு ஆம்பள இத ஈஸியா தாண்டிப் போயிடமுடியும்...” நாஸர் முடிக்குமுன் ஜெய்னம்பு இடைமறித்தாள்.

“ஆங், இதத்தான் “ஆம்பளைன்னா சேறு கண்ட இடம் மிதிச்சு, தண்ணி கண்ட இடம் கழுவுவான்”ன்னு சொல்வாங்க. இந்த எண்ணந்தான் முதல்ல  மாறணும்.  இந்த மாதிரி பேச்சுகள்தான், பையங்களுக்கு தப்பு பண்ணிப் பாக்கலாம்கிற தைரியத்தைக் கொடுக்குது. இந்த உலகத்துக்கு இதுசரி வரும். ஆனா, முஸ்லிம்களுக்கு, நாம செய்ற நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நாளைக்கு மஹஷர்ல ஆண்டவன்ட்ட பதில் சொல்லியே ஆகணுமே? இஸ்லாத்தில, ஆம்பளை, பொம்பளை எல்லாருக்கும் ஒரே கேள்வி கணக்குதான்கிற அச்சம் பையங்களுக்கும் இருக்கணும். தப்புப் பண்ற பெண்களைக் குற்றப்படுத்துவதுபோல, உடந்தையாருக்க பையங்களுக்கும் தண்டனை கொடுக்கணும். அப்பத்தான், இனியும் இது நடக்காது. இல்லன்னா, ”உங்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்”னு அல்லாஹுத்தாலாவால கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்கள், அதைத் தவறுகள் செய்றதுக்குக் கொடுத்த உரிமையா நினைக்கிற அளவு சமூகம் பொறுப்பில்லாம இருக்குதுன்னு அர்த்தமாகாது?”

”அதில்ல சாச்சி, பிராக்டிகலாப் பாத்தா, பாதிப்பு ஆணைவிட பெண்ணுக்குத்தானே அதிகம்?”

”இல்லைன்னு சொல்லல. ஒரு முஸ்லிம் ஆண் தப்பு செஞ்சாலும், அங்கயும் பெற்றோர்கள் இணக்கம்-வளர்ப்பு முறை-இஸ்லாம் அறிவு- சரியில்லன்னுதான் அர்த்தம். நான் மேலே சொன்ன ரூல்ஸ் ஆண்பிள்ளைகளுக்கும்தான். ஆம்பளப் பிள்ளன்னு பெருமைய்யா கண்டிக்காம இருந்துட்டு, நாளைக்கு அவன் நரகத்துக்குப் போவ பெத்தவங்களும் ஒரு காரணமாயிடக்கூடாது.”

“என்னத்த சொல்லி என்ன, முஸ்லிம் பயலுவோகூடப் போனதுபோயி, இப்பம் மத்த மதத்துக்காரன்கூடயுமில்லா போவ  ஆரம்பிச்சுட்டாளுவ? ஏற்கனவே டாக்டர்மாரெல்லாம் பணத்தாசையால சிஸேரியனாச் செஞ்சி, நம்ம சனத்தொகையைக் குறைக்கப் பாக்குறாவ. இப்ப இதுவும் அதிகமாகிடுச்சுன்னா?”  வேற யார் இப்படி யோசிக்க முடியும்? அத்துலக் சின்னாப்பாதான்.

“அட ரஹ்மானே!!  சிஸேரியன் அதிகமாறதுக்கு இந்தக்காலத்து உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறையும்தான் முக்கிய காரணம்.  ஆப்ரேஷன்ல அனஸ்தீஷியா உட்பட நிறைய ரிஸ்க் இருக்கதனால, நினச்சமேனிக்குப் பண்ணிட முடியாது.  டாக்டர்ஸ் கவனமாத்தான் இருப்பாங்க. அப்படில்லாம் அநியாயமாப் பேசக்கூடாது.” சொல்லிவிட்டு, யாரும் பதிலுரைக்க முற்படுமுன், அர்த்தம் பொதிந்த கேள்வியை முன்வைத்தாள்.

”சரி, மாற்றுமத டாக்டர்ஸ் பிரசவம் பாக்கறதனாலத்தானே இப்படிப் பழி சொல்றீங்க. அப்ப ஏன் நாம நம்ம பெண்பிள்ளைகளப் படிக்க வெச்சு டாக்டர் ஆக்கக்கூடாது?” ஊஹூம்... மூச்... பதிலில்லை!! ஜெய்னம்புவே தொடர்ந்தாள். 

“நம்ம பிள்ளைக படிக்கவுங்கூடாது. ஆனா, நமக்கு சேவை செய்றவங்களையும் நாம குத்தம் சொல்வோம். அப்படித்தானே? நாம படிச்சு, எல்லாத் துறைகளிலும் கால்பதிச்சா, மத்தவங்ககிட்ட இதுபோல எதையும் எதிர்பார்க்காம, நம்ம மக்களை நாமளே காக்க முடியுமே? அந்தக் குறிக்கோளுக்காக நம்ம சமுதாயத்து ஆண், பெண் எல்லாரையும் முழுமுனைப்போடு தயார்படுத்துறத விட்டுட்டு, சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் பயந்து, இப்படி கட்டுப்பெட்டித்தனமா கட்டுப்பாடுகள் விதிச்சா, நஷ்டம் நம்ம சமூகத்துக்குத்தான். “எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை”னு அல்லாஹ் சொல்லிருக்கான். புரியறவங்க புரிஞ்சிப்பாங்க.” முத்தாய்ப்பாய்ச் சொல்லிவிட்டு எழுந்தாள் ஜெய்னம்பு.

“நான் புரிஞ்சுகிட்டேம்மா” கஃபூர் காக்காவின் பதிலில், ஒரு டாக்டரை உருவாக்கும் உறுதி தெரிந்தது, அல்ஹம்துலில்லாஹ்!!

Post Comment

22 comments:

நட்புடன் ஜமால் said...

அல் ஹம்துலில்லாஹ், நல்ல பதிவுங்க,

தவறு செய்தால் - தவற்றை மட்டுமே பார்க்கனும் யாரு செஞ்சாங்கன்னு அதுல பார்க்க ஆரம்பிச்சா, இப்படித்தான்

அப்புறம் ...

அந்த "சாச்சி" நீங்க தானே :P

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் சிறப்பான விழிப்புணர்வுக் கதை.ஒவ்வொரு வரியினையும் ரசித்துப்படித்தேன்.

சமரசம் பத்திரிக்கையில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள், ஹுஸைனம்மா.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.ஹுசைனம்மா..

///படிக்கவே கூடாதுன்னா எப்படி? படிக்க வைங்க, கூடவே இஸ்லாமையும் சரியாச் சொல்லிக் கொடுங்க. அதுக்கு, முதல்ல பெற்றோர் சரியான இஸ்லாமிய அறிவோட இருக்கணும்.///

அருமையான ஆக்கம்...
அமர்க்களமான உரையாடல்கள்...
அழகிய தீர்வு...
வாழ்த்துகள்... சகோ.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பெண்களுக்கான கல்வியின் அவசியத்தை அழகுற வாத-பிரதிவாதங்களுடன் கதையில் வடித்தீர்கள். வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

மிகநல்ல கதை,பாராட்டுக்கள்!!

PUTHIYATHENRAL said...

* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!

* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!

* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை

* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!

அப்பாதுரை said...

வீட்டுக் கூட்டத்தில் இத்தனை விஸ்தாரமான பேச்சா.. கல்யாணக் கலாட்டா சுவாரசியம் தான். ஊடே அருமையான செய்திகளைத் தூவியிருக்கிறீர்கள். "என்னத்த சொல்லி என்ன..." para வாய்விட்டுச் சிரித்தேன்.

ADHI VENKAT said...

நல்ல பல கருத்துக்களை கொண்ட கதை.

பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன கேள்வி என்ன கேள்வி.. :))
சரியான ஆளு உங்க கதையில் வர ஜெய்னம்பு..
ஜெய் ஜெய் ஃபார் ஜெய்னம்பு..நம்புங்கப்பா மாற்றம்வரும்..:)

சாந்தி மாரியப்பன் said...

பேபி மாத்தாஜீ.. இடுகையை இணைக்கறதில்லையா??. தமிழ் மணத்துல இணைச்சுட்டேன். பேசினபடி அமவுண்டை வெட்டுங்க :-)))))

கதை ஜூப்பர். பத்திரிகையில் வெளியானதுக்கு வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

பேபி மாத்தாஜீ.. இடுகையை இணைக்கறதில்லையா??. தமிழ் மணத்துல இணைச்சுட்டேன். பேசினபடி அமவுண்டை வெட்டுங்க :-)))))

கதை ஜூப்பர். பத்திரிகையில் வெளியானதுக்கு வாழ்த்துகள்.

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள் ஹுஸைனம்மா.

எளிய, இயல்பான மொழி நடை.

VANJOOR said...

//“நம்ம பிள்ளைக படிக்கவுங்கூடாது. ஆனா, நமக்கு சேவை செய்றவங்களையும் நாம குத்தம் சொல்வோம். அப்படித்தானே?

நாம படிச்சு, எல்லாத் துறைகளிலும் கால்பதிச்சா, மத்தவங்ககிட்ட இதுபோல எதையும் எதிர்பார்க்காம, நம்ம மக்களை நாமளே காக்க முடியுமே?

அந்தக் குறிக்கோளுக்காக நம்ம சமுதாயத்து ஆண், பெண் எல்லாரையும் முழுமுனைப்போடு தயார்படுத்துறத விட்டுட்டு, சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் பயந்து, இப்படி கட்டுப்பெட்டித்தனமா கட்டுப்பாடுகள் விதிச்சா, நஷ்டம் நம்ம சமூகத்துக்குத்தான்.

“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை”னு அல்லாஹ் சொல்லிருக்கான். புரியறவங்க புரிஞ்சிப்பாங்க.” முத்தாய்ப்பாய்ச் சொல்லிவிட்டு எழுந்தாள் ஜெய்னம்பு.

“நான் புரிஞ்சுகிட்டேம்மா” கஃபூர் காக்காவின் பதிலில், ஒரு டாக்டரை உருவாக்கும் உறுதி தெரிந்தது, அல்ஹம்துலில்லாஹ்!!//



புரியறவங்க புரிஞ்சிப்பாங்க


.

கோமதி அரசு said...

“இப்படித்தான் சின்னாப்பா, நிறைய ஆம்பளைங்க புரியாம இருக்கீங்க. முதல்ல கணவன் -மனைவிக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும். ஒரு கணவன், தன் வருமானம், செலவுகள், சேமிப்பு, கடன், நட்புனு எல்லாத்தையும் தன் மனைவிகிட்ட மறைக்காமச் சொல்லணும். முடிஞ்சா அவ ஆலோசனையையும் கேட்டுக்கிடணும். இது அவங்களுக்கிடைல பந்தத்தை இறுக்கமாக்குறதோட, மனைவிய தன் வருமானத்துக்குள்ள குடும்பம் நடத்த வைக்கவும் உதவும்//

ஆம் நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை.

கணவன் மனைவி இடையே ஒளிவு மறைவு இருக்க கூடாது. சின்ன விஷயமாய் இருந்தாலும் கலந்து பேசி முடிவு எடுக்க் வேண்டும்.

ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகளும் நல்லபடியாக வளருவார்கள்.

பெற்றோர் தான் ஒவ்வொருவருக்கும் ரோல் மாடல்.

குழந்தைகளுக்கு ஆன்மீக கல்வியும் வேண்டும்.

பதிவு அருமை.

பத்திரிக்கையில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஹீஸைனம்மா.

கோமதி அரசு said...

முதல் சிறுகதையே அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//பேபி மாத்தாஜீ.. இடுகையை இணைக்கறதில்லையா??. தமிழ் மணத்துல இணைச்சுட்டேன். பேசினபடி அமவுண்டை வெட்டுங்க//

எப்படி மறந்தேன்னு தெரியலை. இணைத்ததற்கு ரொம்ப நன்றிக்கா!!

என்னது ... அமவுண்டா...!!! மாத்தாஜிக்கு சிஷ்யர்கள்தான் காணிக்கை கொடுக்கணும். மாத்தாஜி கொடுப்பது ஆசிகள் மட்டுமே!! ;-)))))

சாந்தி மாரியப்பன் said...

//மாத்தாஜிக்கு சிஷ்யர்கள்தான் காணிக்கை கொடுக்கணும்.//

என்னாது.. போச்சு கதை கந்தல் :-)

பக்த கேடி.. ச்சே தப்பு தப்பு பக்த கோடிகள் காணிக்கை தருவாங்க. அத அப்டியே சிஷ்யர்கள் கிட்ட மாத்தாஜி தந்துடுவாங்க :-)

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
// நம்ம பிள்ளைக படிக்கவுங்கூடாது. ஆனா, நமக்கு சேவை செய்றவங்களையும் நாம குத்தம் சொல்வோம். அப்படித்தானே? நாம படிச்சு, எல்லாத் துறைகளிலும் கால்பதிச்சா,..//

இது தான் மேட்டரு....

மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்...
என்னமா சொல்லியிருக்கிங்க., நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டப்பதிவாக இருந்தாலும்.

ஆமா இது எந்த ஊரு மொழி வழக்கு? ...

வல்லிசிம்ஹன் said...

எத்தனை அருமை ஹுசைனம்மா. ஒரு மதத்துக்கு என்று இல்லாமல் எல்லாப் பெற்றோரும் உணர வேண்டிய பதிவு. வரிக்கு வரி உண்மை விழித்தெழுகிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் ஹுசைனம்மா.

பாச மலர் / Paasa Malar said...

கல்யாண அரட்டைக் கச்சேரி முடிவில் நல்லதொரு விஷயம்...சிறப்பாக வந்துள்ளது வட்டார வழக்கு..வாழ்த்துகள்..

கீதமஞ்சரி said...

சாச்சியின் துணிவாலும் சாதுர்யமான வாதத்தாலும் ஒரு பெண் மட்டுமல்ல, பல பெண்களின் கல்வி சமுதாயத்துக்குப் பயனுள்ள வகையில் மேம்படப்போகிறது. பேச்சு வழக்கு கதையோடு ஒன்றச் செய்துவிட்டது.. பத்திரிகையில் வெளியானதற்குப் பாராட்டுகள் ஹூஸைனம்மா..

ஹுஸைனம்மா said...

வருகை தந்து, கருத்து தெரிவிச்சு, பாராட்டிய அனைஅவருக்கும் மிகவும் நன்றி. தனித்தனியே சொல்ல விட்டுப் போனதுக்கு மன்னிக்கணும்.