Pages

வலியெனும் வரம்




வல்லமை” இணைய இதழில் நேற்று வெளியானது:
 
பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அரசு மருத்துவச் சமூக ஆர்வலர் ஒருவர் வந்திருந்து, தொழுநோய்க்கான விளக்கவுரை நிகழ்ச்சி நடத்தினார். உரை முடிந்ததும், கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று கூறவும், பலரும் பல கேள்விகள் கேட்டனர். அமுதா என்கிற என் சக மாணவி, “இந்நோய் வந்தால் வலி இருக்காதா?” என்று கேட்டாள். “நல்ல கேள்வி” என்று மிகவும் சிலாகித்துப் பாராட்டிச் சொன்ன அவர், எல்லாரையும் கைதட்டவும் சொன்னார். எனக்கோ இந்த கேள்வியில் பாராட்டுமளவு அப்படியென்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று வியப்பாக இருந்தது.

அவர் தொடர்ந்தார், “எந்த ஒரு நோய்க்குமே வலிதான் அதன் முதல் அறிகுறியாக இருக்கும். அதை வைத்துத்தான் நாம் எச்சரிக்கையடைந்து உடனே சிகிச்சை எடுக்க மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இந்தத் தொழுநோய்க்கு மட்டும் வலி என்பதே கிடையாது. வலி இல்லாததாலேயே, இந்நோய் தாக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருந்து விட நேரிட்டு, நோய் முற்றிக் குணப்படுத்தச் சிரமமான நிலைக்குச் சென்று விடுவதால் கை, கால் விரல்களை இழந்து விடுகிறார்கள்” என்று கூறினார். சட்டென்று பிடிபடவில்லை என்றாலும், ‘உக்காந்து யோசித்த’போதுதான் வலி என்பது நமக்கு ஒரு வரமே என்பது புரிந்தது.

சமீபமாக விகடனில் ஒரு கதை வந்தது, “வலி” என்ற தலைப்பு என்பதாகத்தான் ஞாபகம். கிராம மக்களைப் பலவித அடி, உதை என்று சித்ரவதை செய்து, வலிக்கு அஞ்ச வைத்து, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பண்ணையாருக்கு, வலி என்கிற உணர்வே இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த உணர்வு இல்லாததால் அக்குழந்தை படும் பாடுகள் விவரிக்கப்பட்டு, அவர் தன் குழந்தைக்கு ‘வலி’ கிடைக்க வேண்டி மருத்துவர்களையும் தெய்வங்களையும் வேண்டி அலைவதாகப் போகும் கதை.

உடலில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், அது நமக்கு ஏதேனும் ஒரு சிரமத்தைத் தராத வரை அப்பாதிப்பை நாம் அறிய மாட்டோம். அது தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி, கால்வலி, காதுவலி என்று ஏதேனும் ஒரு வலியாக ரூபமெடுக்கும்போதுதான் அதனைக் குறித்து யோசிப்போம்.

உதாரணமாக, உயர் இரத்த அழுத்த நோய். இதன் இன்னொரு பெயரே “சைலண்ட் கில்லர்” என்பதுதான். ஆரம்ப நிலையிலோ, சற்று முற்றிய நிலையிலோ இதனால் எந்தப் பாதிப்பும் வெளிப்படையாகத் தெரியாது. மிகவும் முற்றிய நிலைக்குச் சென்ற பின்னர் வாதம், சிறுநீரகப் பாதிப்பு முதற்கொண்டு கோமா உள்ளிட்ட விளைவுகளை ஏற்படுத்திய பின்பே பி.பி. வந்திருப்பதைக் கண்டறிய முடியும். இதுபோலவே சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவையும் ஆரம்ப கட்டங்களில் வலி இன்மையால் கண்டறிவது தாமதப்படும். ஏன், கேன்ஸர் கூடச் சிலருக்குக் கடைசி நேரத்தில் கண்டறியப்படுவது இந்த வலியின்மையால்தானே?

இன்னொன்று, வலி ஏற்பட்டாலும், அதற்குச் சுய மருத்துவம் செய்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. முதுகுவலி என்றால், எடு ஒரு ப்ரூஃபனை; தலைவலியா இந்தா ஒரு பெனடால்; சளிக்காய்ச்சல்தானே, ஒரே ஒரு ‘அட்வில்’ போதுமே என்று நாமே திறமையான மருத்துவர்களாக இருக்கிறோம். இது பெண்களுக்கே மிக மிகப் பொருந்தும் என்றாலும், ஆண்களும் பல சமயங்களில் இதில் பெண்களுக்கு நிகராகவே அலட்சியமாக இருக்கின்றனர்.

இன்றைய சூழலில், ஒரு நெடும் பயணம் செய்து அலுவலகம் சென்று, வீடு வந்து சேருவதற்குள் அலுத்துச் சலித்துப் போய் விடுகிறது. அதற்கு மேல், மருத்துவமனைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடந்து மருத்துவரைப் பார்க்கவும், பரிசோதனைகள் செய்யவும் எரிச்சல்பட்டு “தினம் பைக்கில் போய்ட்டு வரதுனால வர்ற முதுகுவலிதான். ரெண்டு நாள் ப்ரூஃபன் சாப்டுக்கிட்டாச் சரியாயிடும்” என்கிற சமாதானங்களால் மனசைத் தேற்றிக் கொள்கிறோம்.

ஏற்கனவே சொன்னதுபோல, ‘வலி’ என்பது ஒரு அடையாளக் குறியீடு. எங்கோ, எதுவோ சரியில்லை என்பதற்கான அபாயமணி. என்ன சரியில்லை என்று சரி பார்க்காமல் வெறுமே வெளியே தெரியும் அடையாளங்களை மட்டும் அழித்துக் கொண்டிருந்தால், உள்ளே புரையோடிப் போகும். நோய் நாடுவது மட்டுமல்ல, “நோய்முதலும்” – காரணமும் – கண்டறிந்து அகற்றினாலேயொழிய வலியிலிருந்தும் நிவாரணமில்லை; கடும் விளைவிலிருந்தும் தப்பிக்க முடியாது.

அதை விடுத்து, ”இது ஒண்ணுமில்லை; ஒரு மாத்திரையப் போட்டுட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா வலி சரியாய்டும்” என்றே சொல்லிக்கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால், குடலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுக் கூடுதல் விளைவுகளைத்தான் இழுத்துப் போட்டுக் கொண்டதாக ஆகிவிடும். வலி மருந்துகளின் விளைவுகள் மிகக் கடுமையானவை. இவற்றை அதிகமாக, தக்க அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்வதென்பது நம் சிறுநீரகத்தை நாமே அழிப்பதற்குச் சமம்.

“இல்லை, நாங்கல்லாம் ஆயின்மெண்ட்தான் தடவுறோம். மாத்திரைலாம் சாப்பிடுறதேயில்லை தெரியுமா” – இப்படிப் பெருமையாகச் சொல்லிக்கிறீங்களா? வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். ஆயின்மெண்ட்களும் நம் சருமம் வழியாக நம் உடம்பில் ஊடுறுவிப் போய்த்தான் வலியைக் குறைக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்கள் எல்லாமும் கூடத் தொடர்ந்து வழமையாக உபயோகிக்கக் கூடாதவையே!!

வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்களினால் ஏற்படும் விளைவுகள் குறைவாக இருக்குமென்று சொல்லமுடியாதபடிக்கு, இவையும் சரும அரிப்புகள், அல்சர், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு தருபவையாக இருக்கின்றன.

பயமுறுத்துவதாகத் தோன்றுகின்றதா? இல்லை, நம்மில் பலரும் இந்த வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியத்தை அறியாதவர்களாக இருக்கிறோம். அறிந்திருந்தாலும், நேரமின்மை, வேலைப்பளு, இன்னபிற காரணங்களின்மீது பழியைப் போட்டுவிட்டு இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதனை அதிகமாகச் செய்பவர்கள் பெண்கள்தான். குடும்பத்திற்காக ஓடாய்த் தேயும் பெண்கள், தம் நலன் என வரும்போது ‘அடுத்த வாரம் பார்க்கலாம்’; ‘பசங்களுக்கு லீவு வரட்டும்’ என்றே தள்ளிப் போட்டு விடுகின்றனர்.

ஒரு சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழுக் குணமடையவேண்டுமேயல்லாது; தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும் பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப்பட வேண்டாமே.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். அச்சமயங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றுங்கள். இதை நம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண்களிடமும், தெருவில், அண்டை அயலில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்!! பெண்கள் நலன் காப்போம்!!

Post Comment

42 comments:

அம்பலத்தார் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு ஒன்று தந்ததற்கு நன்றி.

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

ADHI VENKAT said...

ரொம்ப நல்ல பதிவுங்க. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

Riyas said...

ஐய்யய்யோ ரொம்ப பயமாயிருக்குங்க இதை படித்து முடித்ததும்..

தலைவலி காய்ச்சலுக்கெல்லாம் ஹாஸ்பிட்டல் போனா பண்டோல்தான் டாக்டர் தருவார்னு நாங்களாகவே முடிவெடுத்து, பல பனடோல்களை காலிபண்ணிருக்கேன்..ஹாஸ்பிட்டல் போகாமலே..

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சின்ன வியாதிகளுக்கு உடனடி நிவாரணம்தான் தேடுகின்றனர்...

மிகச்சிறப்பான பதிவு.. நிறையப்பேருக்கு சென்றடைய வேணும்..

கௌதமன் said...

மிகவும் பயனுள்ள, மருத்துவப் பதிவு. பயனுள்ள தகவல்களுக்கு / பகிர்வுக்கு நன்றி.

வலையுகம் said...

அருமையான பதிவு
உலவு, தமிழ் 10 இரண்டிலும் இணைத்து விட்டேன்

கோவை நேரம் said...

சரியான...பதிவு...வலி ஒரு அறிகுறி என்பதை தெரிந்து கொண்டேன்

பாச மலர் / Paasa Malar said...

வலி இருக்கிறதோ இல்லையோ..வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லிக்கிட்டு மாத்திரை போடுறவங்களும் உண்டு....பக்க விளைவுகளை யோசித்து கவனமாக இருக்க வேண்டும்..

ஸ்ரீராம். said...

வலி மட்டுமல்லாமல் ஜுரம் என்பதும் ஏதோ ஒரு கோளாறின் அறிகுறிதான். நாம் செய்யும் இன்னொரு தவறு தவிர்க்க முடியாத சமயங்களில் எடுக்க வேண்டியிருந்தாலும் வலி நிவாரணியோடு ரானிட்டிடின் அல்லது ஆன்டாசிட் போன்ற ஆன்டி அசிடிட்டி மருந்துகளை உடன் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் படித்து முடிக்கும்போது என்னதான் பெண்கள் வாரம் கொண்டாடினாலும் 'பெண்களுக்கு சொல்வோம், பெண்கள் நலன் காப்போம் என்று முடித்திருப்பது என்ன நியாயம்...!!! இது எல்லோருக்கும் பொதுவன்றோ.... :))))

வெங்கட் நாகராஜ் said...

//தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். //

மிகவும் தேவையான ஒரு விஷயம். நிறைய பேர் என்னமோ சாக்லேட் சாப்பிடுவது போல இந்த வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகிறார்கள்....

நல்ல கட்டுரை. வல்லமையில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள்.

Menaga Sathia said...

அருமையான விழிப்புணர்வு பதிவு!!

தெய்வசுகந்தி said...

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!!

Seeni said...

Nalla pathivu!

Avargal Unmaigal said...

வலியை பற்றிய வலிமையான நல்ல பதிவு

baleno said...

பயனுள்ள தகவல்கள். காய்ச்சல் வந்தால் பனடோல் அஸ்பிரின் நானாகவே எடுத்திருக்கிறேன்.

pudugaithendral said...

உபயோகமான பதிவு.

வாழ்த்துக்கள் ஹுசைனம்மா

ஸாதிகா said...

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். அச்சமயங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றுங்கள்.//அவசியமன இடுகை ஹுசைனம்மா.விழிப்புணவூட்டும் அனைவரும் படித்து ஞாபகத்தில் கொள்ள வேண்டியவை.பகிர்வுக்கு நன்றி!

கீதமஞ்சரி said...

வலி என்பது ஒரு வரம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. தலைவலி என்பது வியாதியல்ல. வியாதிக்கான ஒரு அறிகுறி மட்டுமே என்று மருத்துவர்கள் சொல்வதுண்டு. ஆனால் நம்மில் பலர் அதை அலட்சியப்படுத்தி தலைவலிக்கு மட்டும் அவ்வப்போது நிவாரணம் எடுத்துக்கொள்வோம். அது கடைசியில் பெரிய பிரச்சனையில் கொண்டுபோய்விட்டுவிடும். ஆரம்பத்திலேயே கவனமாய் இருப்பது மிகவும் நல்லது அல்லவா!

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. பாராட்டுகள் ஹூஸைனம்மா.

கோமதி அரசு said...

ஏற்கனவே சொன்னதுபோல, ‘வலி’ என்பது ஒரு அடையாளக் குறியீடு. எங்கோ, எதுவோ சரியில்லை என்பதற்கான அபாயமணி. என்ன சரியில்லை என்று சரி பார்க்காமல் வெறுமே வெளியே தெரியும் அடையாளங்களை மட்டும் அழித்துக் கொண்டிருந்தால், உள்ளே புரையோடிப் போகும். நோய் நாடுவது மட்டுமல்ல, “நோய்முதலும்” – காரணமும் – கண்டறிந்து அகற்றினாலேயொழிய வலியிலிருந்தும் நிவாரணமில்லை; கடும் விளைவிலிருந்தும் தப்பிக்க முடியாது.//

ஏன் இந்த நோய் வந்தது என்று ஆராய்ந்து பின் மருந்து எடுத்துக் கொள்வது நல்லது தான்.

நல்ல விழிப்புணர்வு பதிவு.

பெண்கள் தங்களை நன்கு பார்த்துக் கொண்டால் தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள முடியும்.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வல்லமையில் வெளி வந்ததிற்கு வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.

Unknown said...

அருமையான விழிப்புணர்வுப் பதிவு,

எனக்கு விக்ஸ் தடவும் பழக்கம் உள்ளது (இல்லையெனில் உறங்கும் பொழுது மூக்கடைப்பு ஏற்படும்), இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டா?

Roomil said...

assalamu alaikum
nalla pathivu thevayanthu.atthudan padaithavanaal manitharukku kidaitha arulkodaikal eeraalam avathaanitthu nithaanamaaka paarthaal athu vilankum.marathiyum oru atputhamaana arule.marathi enra oru vidayam manithanukku illaavittaal thinam thinam kavalyaleye setthu viduvaan illaiya?
nanri thankal pathivukku
roomil

Vijiskitchencreations said...

நல்ல பயனுள்ள தகவல். நானும் முதலில் மாத்திரை இல்லாமல் தள்ளி கொண்டிருந்தேன், இப்ப அடிக்கடி தலைவலிக்கு மாத்திரை சாப்பிடும் வழக்கமாகிவிட்டது.
நல்ல விழிப்புணர்வு பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வலி ஒரு வரம்..நல்லா இருக்கு ஹுசைனம்மா.. நேத்து பாத்த படத்துல எல்லாமிருகங்களையும் மனுசனாக்க முயற்சி செய்துட்டுஅவங்களுக்கு ஒரு சிப் பொருத்தி அவங்க தவறு செய்யும் போது வலியை ஏற்படுத்தி .. திருத்தறமாதிரி இருந்தது..:)

The Island of Dr. Moreau (1996)

அம்பிகா said...

மிக அவசியமான பதிவு ஹூசைனம்மா. வலிமாத்திரைகள் மட்டுமின்றி, லோஷன், க்ரீம் போன்றவையுமே என்பது பலர் அறியாதது.
நன்றி .

சாந்தி மாரியப்பன் said...

அருமையானதொரு கட்டுரை ஹுஸைனம்மா..

தனக்குத்தானே டாக்டர்கள் ஆகறதுங்கறது எவ்ளோ அபாயகரமானதுங்கறதையும் சேத்தே சொல்லியிருப்பது அசத்தல்..

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

வல்லிசிம்ஹன் said...

நல்லதொரு வலி'யுறுத்தும் பதிவு.
என் கிட்ட இருக்கும் எல்லாப் பொக்கிஷங்களுக்கும் இது பொருந்தும். என்ன ஒண்ணு...வலி வந்தால் பாராமீட்டர்ஸ் எகிறிடும். ஜாக்கிரதையாக இருக்கணும். மிக நன்றிமா.

அப்பாதுரை said...

பயனுள்ளப் பதிவு.

ஹுஸைனம்மா said...

அம்பலத்தார் - நன்றி.

ஸாதிகாக்கா - நன்றீக்கா.

தமிழ்மகன் - நன்றிங்க.

கோவை2தில்லி - நன்றிப்பா.

ரியாஸ் - அடிக்கடி பெனடால் சாப்பிடுவது முறையில்லை. ஆகையால் இனி கவனமாக இருக்கவும்.

ஹுஸைனம்மா said...

கௌதமன் சார் - மிகவும் நன்றி.

ஹைதர் - நன்றிங்க - கருத்துக்கும், திரட்டியில் இணைத்ததற்கு நன்றி.

கோவைநேரம் - நன்றிங்க.

பாசமலர் - கரெக்டுங்க, சிலர் ஏதோ முட்டாய் சாப்பிடுற மாதிரி சிலர் மாத்திரை சாப்பிடுவாங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - ஆமாம், காய்ச்சலும் அறிகுறியே. //வலி நிவாரணியோடு ரானிட்டிடின் அல்லது ஆன்டாசிட் போன்ற ஆன்டி அசிடிட்டி மருந்துகளை உடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.//
இவற்றை ஆண்டிபயாடிக்கோடும் எடுத்துக் கொள்ளவேண்டும். தகவலுக்கு நன்றிங்க.

//பெண்கள் நலன் காப்போம் என்று முடித்திருப்பது என்ன நியாயம்...!!! இது எல்லோருக்கும் பொதுவன்றோ....//
எல்லாருக்கும் பொதுதான். ஆனால், பெண்கள் (பெரும்பானயோனோர்) அரிதாகவே தம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றனர். முற்றிய நிலையில்தான் நோய் வந்திருபப்தையே அறிகின்றனர். ஆண்கள் (அனைவரும்) அப்படியல்ல, சீக்கிரம் சுதாரித்துவிடுகின்றனர். அதனால்தான்.

ஒரு பெண் படித்தால், குடும்பமே படித்தமாதிரி. அதேபோலத்தான், பெண்ணுக்கு நோய் வந்தால், குடும்பமே பாதிப்படையும்.

ஹுஸைனம்மா said...

வெங்கட் - நன்றிங்க.

மேனகா - வாங்கப்பா. ரொம்ப நன்றிப்பா.

தெய்வசுகந்தி - நன்றிங்க.

அவர்கள் உண்மைகள் - நலமா? நன்றிங்க அழகிய கருத்துக்கு.

ஹுஸைனம்மா said...

பலேனோ - சாதாரணக் காய்ச்சல் எனில் ஓரிரு நாள் மட்டும் எடுத்தால் ஒன்றுமில்லை. தொடர்ந்து காய்ச்சல் குறையாவிட்டாலோ, மீண்டும் மீண்டும் காய்ச்சல் வந்தாலோ மருத்துவரிடம் செல்வதே நல்லதுங்க.

புதுகைத் தென்றல் - நன்றிப்பா.

கீதமஞ்சரி - சரியாச் சொல்லிருக்கீங்கப்பா. நன்றி.

கோமதிக்கா - கருத்துக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

செய்யது இப்ராம்ஷா - விக்ஸில் கற்பூரவல்லி போன்ற இயற்கைப் பொருட்கள் இருந்தாலும், ‘ப்ரிஸர்வேடிவ்ஸ்’ நிச்சயம் இருக்கும். ஆகவே தினமும் தேய்க்காமல் இருப்பது நல்லது.
//இல்லையெனில் உறங்கும் பொழுது மூக்கடைப்பு ஏற்படும்//
காரணம் என்னவென்று கண்டுபிடித்தீர்களா? ஃபேன் அல்லது ஏஸி காற்று அதிகம் இருந்தாலோ, ஏஸி/ஃபேனுக்கு நேராகப் படுத்தாலோ இந்த மாதிரி இருக்கலாம். தவிர்த்துப் பாருங்கள். இல்லையெனில் சற்று ஆவிபிடித்துப் பார்க்கலாம். மூச்சுப் பயிற்சிகள் செய்யுங்கள். மூக்கடைப்பு நீங்கலாம்.

ஹுஸைனம்மா said...

இப்ராஹிம் ரூமில் சார் - நிச்சயமாக, வலியும் மறதியும் இறைவன் மனிதனுக்குத் தந்த வரங்களே.

விஜி - நலமாப்பா? ஆளையேக் காணோம்? அடிக்கடி தலைவலி ஏன் வருதுன்னு பாருங்கப்பா முதல்ல.

முத்தக்கா - வித்தியாசமான கதை.
அக்கா, வரவர உங்க ரசனை, பார்க்கும் படங்கள், படிக்கும் புத்தகங்கள், எழுத்து எல்லாமே உலகத் தரத்துல போய்க்கிட்டிருக்கு. :-))))) வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

அம்பிகாக்கா - நலமா? கொஞ்ச நாள் முன்னே கேன்ஸர் குறித்த பதிவு எழுதியபோது ‘பாராபென்’ என்ற வேதிப் பொருள் பற்றி அறிந்தேன். எல்லா க்ரீம்களிலும் தவறாமல் காணப்படும் இது கேன்ஸர் உண்டாக்கும் தன்மையுடையது என்றறிந்தபோது அதிர்ந்துதான் போனேன்!!

அமைதிக்கா - நன்றிக்கா.

கூகுள்சிறி - வித்தியாசமான திரட்டி முறையா இருக்கு. முயற்சிக்கிறேன். நன்றி.

வல்லிம்மா - நன்றிமா.

அப்பாதுரை - நன்றிங்க.

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது இந்த இடுகையை, இன்றைய வலைச்சரத்தில் ”காந்தள் மலர் - விழிப்புணர்வுச் சரம்” என்ற தலைப்பின் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_07.html

வலைச்சரத்திற்கு வந்து பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.

இமா க்றிஸ் said...

//வலி என்பது நமக்கு ஒரு வரமே// உண்மைதான் ஹுஸைனம்மா. நல்லதோர் இடுகை, பாராட்டுக்கள்.

அனைவருக்கும் அன்பு  said...

அருமையான விழிப்புணர்வு பதிவு சுவாரசியான விடயமும் கூட வாழ்த்துக்கள் தோழி

ஹுஸைனம்மா said...

வெங்கட் - வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி.

இமா - நன்றி.

கோவை மு.சரளா - நன்றிங்க.