Pages

டில்லிக்கு ராஜான்னாலும்...

ம்மாவிடம் தொலைபேசிக்கொண்டிருந்தேன். நலம் விசாரித்துவிட்டு அப்படியே மாத்திரை சாப்பிட்டியான்னு விஜாரிச்சு அதுக்கு நிச்சயம் “மறந்துட்டேன்” அல்லது “இப்பத்தான் டிஃபன் சாப்பிட்டு முடிச்சேன். மாத்திரை சாப்பிடத்தான் நிக்கிறேன்” என்றுதான் பதில்வரும்னு தெரியும். எப்படின்னு கேக்குறீங்களா? தாயைப் போலப் பிள்ளை..... ஹி.. ஹி.. . அதைச் சாக்கு வச்சு அம்மாவுக்கு ரெண்டு டோஸ் விடுறதும் (சின்ன வயசுல நாம வாங்கின டோஸுக்கெல்லாம் பழிக்குப் பழி வாங்கக் கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணலாமா..), அதை அப்படியே அம்மா இந்தக் காதில வாங்கி அந்தக் காதுவழியா விட்டுர்றதும் வழக்கம்.  (பிள்ளையைப் போலத் தாய்...  ஹி..ஹி..) அப்படியே கொஞ்சம் ஊர், உறவு கதைகளும் பேசிக்குவோம்.

ஒருநாள் அம்மாகிட்ட, “சாச்சிகிட்டயெல்லாம் பேசினியா? அவங்க ஃபோன் பண்ணாங்களா? நல்லாருக்காங்களா?”ன்னு கேட்டேன். என்னைமாதிரியே அம்மாவும் மூத்தப் பொண்ணு வீட்ல. அம்மாவுக்கும் என்னைமாதிரியே மூணு தங்கச்சிகள். (நோ... நோ.. இதுல தாயைப் போல.. வை இழுக்கக் கூடாது. ஏன்னா அம்மாவீட்ல தம்பிகள், தங்கைகள்னு ஒரு ஃபுட்பால் டீமே உண்டு!!)  அதுக்கு அம்மா, “எங்கே? எல்லாரையும் எப்பவும் நான்தான் கூப்பிட்டு பேசணும். அப்பிடியே நான் ஃபோன் பண்ணாலும் பேசமுடியாத அளவு பிஸியா இருக்காளுங்க. அதான் இந்த வாரம் ஃபோன் பண்ணலை” என்றார். எனக்கும் ஒரு விஷயம் புரியலை. எல்லா சித்தியும் பேரன், பேத்தி எடுத்து பாட்டியாகிட்டாலும், இப்பத்தான் படுபயங்கர பிஸியா  இருக்காங்க!! சரி, பேக் டு த பாயிண்ட். இந்த சான்ஸையும் விடக்கூடாது என்று, அவசரமாக, “இங்கேயும் அப்படித்தான். நாந்தான் என் தங்கச்சிகளுக்கும் ஃபோன் பண்ணிப் பேசணும். அவங்களும் எப்பவும் பிஸிதான்” என்று சந்தோஷமா போட்டுக்குடுத்தேன்!!

அம்மா உடனே அடிச்சாங்களே பாக்கணும் ஒரு பல்டி, அந்த்த்த்தர்பல்டி!! “அவங்கள்லாம் சின்னப் பொண்ணுங்க. கையில் எல்லாருக்கும் சின்னப் புள்ளைங்க இருக்குது. அதனால ஃபோன் பண்ண முடியலையாயிருக்கும். நீதானே பெரியவ. நீதான் பொறுப்பா எல்லாரையும் பாத்துக்கணும்”!! ஆத்தீ, நல்லவேளை, உங்க வாப்பா - அதான் என் தாத்தா - மாவட்ட லெவலோட அரசியலை நிறுத்திக்கிட்டாங்கன்னு மனசுல நினைச்சுகிட்டேன்.  மாநில லெவல்ல போயிருந்தா, என்னென்ன சர்க்கஸ்லாம் பண்ண வேண்டியிருக்கும்!! இதையெல்லாம் அம்மாகிட்ட வாய்விட்டு சொல்லமுடியாதபடி இன்னும் ஒரு மரியாதை (ச்சே.. ச்சே.. பயம்லாம் இல்லை) இருக்குது.

ரி, நாந்தான் மூத்தது. என்னவர் கடைக்குட்டி.  என் பக்கம்தான், “மூத்தவள்”ங்கிற பொறுப்பால நானே ஃபோன் பண்ணனும். அவர் பக்கம், அந்தப் பொறுப்பு, பருப்பெல்லாம் இல்லியே, ஜாலின்னு இருந்தா, அதுக்கும் குட்டு வைக்கிறாங்க.  பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து நாங்க சின்னவங்கதான் ஃபோன் பண்ணிப் பேசணுமாம். அதுவும் வெளிநாட்டுல இருக்கவங்கதான் உள்ளூருக்கு ஃபோன் பண்ணனுமாம். அவ்வ்வ்வ்வ்.... எல்லா ஊருக்குக்கும் ஒரே ரூல்ஸா வக்கப்பிடாதா? ஆக, ரெண்டு பக்கமும் நாங்கதான் எல்லாருக்கும் ஃபோன் பண்ணனும். நல்ல நியாயம்!!

எல்லா வீட்லயுமே மூத்தப் பிள்ளைன்னா, ஒழுக்கம், பொறுப்பு, படிப்பு எல்லாம் அதிகமா இருக்கணும்கிற எதிர்பார்ப்பினால பொதுவாகவே அதிகக் கண்டிப்பு இருக்கும். அதக்கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, கடைசில உள்ள பிள்ளைகளுக்குக் கிடைக்கிற செல்லம் இருக்கே...ரெண்டு வருஷம் முன்னே அம்மாவும், நாங்க நாலுபேருமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தோம். அம்மா தன் பிளேட்ல இருந்த ஈரல் துண்டை எடுத்து, கடைக்குட்டி மகளிடம் கொடுத்தாங்க.  கடைக்குட்டின்றதாலே இன்னும் செல்லமான்னு நாங்கல்லாம் கிண்டல் (மட்டும்) பண்ணிகிட்டோம்.

அந்த அருமை கடைக்குட்டி என்ன செஞ்சா தெரியுமா? (கடைக்குட்டின்னவுடனே கன்னுகுட்டி சைஸுக்குச் சின்னப் பப்பான்னு நினச்சுக்ககூடாது.  அவளுக்கே ஒரு பிள்ளை இருக்கு). அம்மா  தந்த ஈரலை ப்ளேட்ல ஓரமா ஒதுக்கி வச்சா. ஏற்கனவே எங்களுக்கெல்லாம் தராம, அவளுக்கு மட்டும் கொடுத்ததால,  தர்மசங்கடத்துல இருந்த அம்மா இதைப் பார்த்து டென்ஷனாகிட்டாங்க. “ஏய், ஏன் அதைச் சாப்பிடலை”ன்னு அதட்டுனாங்க. அவ ரொம்பக் கூலா, ”என் பிள்ளைக்கு ஈரல் பிடிக்கும். அதுக்குத்தான் வச்சேன்”னு சொன்னா. ஓ.... அந்தத் தாய்ப்பாசம் சீன் இருக்கே... தமிழ்ப்படங்கள்ல வழக்கமா இதுக்கு குஞ்சுகளுக்கு தாய்ப்பறவை சாப்பாடு ஊட்டுற சீனைக் காட்டுவாய்ங்க.. நீங்களும், “க்கீ..கீ... க்வி.. க்கீ.. க்வி...” ந்னு பேக்ரவுண்ட் ம்யூஸிக்கோட அந்த ஸீனை மைண்ட்ல ஓடவிட்டுக்கோங்க.. அம்மாவுக்குத்தான் செம பல்பு!!

எங்கம்மா, அவங்க மாமியாருக்கு ஒரே மருமக. ஹை, இதென்ன புதுசா இருக்குன்னு கேட்டா. மாமியாருக்கு ஒரே மகன்; ஸோ, ஒரே மருமக. லாஜிக் கரெக்டா இருக்கா? அம்மாப்பாக்கு ஒரே புள்ளைன்னா, ரொம்பப் பாசமாவும் இருப்பாங்க. அதுகூட ஓகே. ஒரே புள்ளைங்கிறதால, ரொம்ப நல்ல்ல்ல்ல ஸ்கூல்லச் சேத்து விடுவாங்க. அங்க படுத்துற பாடு காணாதுன்னு, பாட்டு க்ளாஸ், டிராயிங் க்ளாஸ், கராத்தே க்ளாஸ், யூஸிமாஸ் (UCMAS), ட்யூஷன் க்ளாஸ் அதுஇதுன்னு அவங்க எல்லாக் கனவையும் அந்த ஒர்ரே புள்ளை மேலே திணிப்பாங்க. புள்ளைங்களுக்கு ஏண்டா ஒத்தையா வந்து சேந்தோம்னு இருக்கும்.

இதுவே ஒரே மருமகன்னா எப்படி இருக்கும்? நாலஞ்சு இருந்தா, ஒருத்திகிட்ட கொஞ்சமா கோவப்படலாம். அடுத்தவ கிட்ட, முந்தினவளை வெறுப்பேத்தறதுக்காகவாவது, கொஞ்சம் அன்பா இரு(க்கிற மாதிரி காட்டி)க்கலாம். ஆனா, ஒரே புள்ளையா பிறக்கறத விட கொடுமையானது, சிலரிடம் ஒரே மருமகளா போய் மாட்டிக்கிறது. அந்த வகையில எங்கம்மாவும் கொஞ்சம் பட்டுட்டாங்களா, அதுனால, தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகளும் படக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தாங்க.

எங்க நாலுபேருக்கும் வரன் பாக்கும்போது, ஒரே மகனா இருந்தா, முடியவே முடியாதுன்னு மறுத்துடுவாங்க. “டில்லிக்கே ராஜான்னாலும், ஒரே பையன்னா டாடாதான்”னுட்டாங்க. என் தங்கச்சிகளுக்கு மாப்பிள்ளை பாக்கும்போதுதான் நான் வெறுத்திட்டேன். கஷ்டப்பட்டு அலசி, அரிச்சு, வடிகட்டி யாரைக் கொண்டு நிறுத்தினாலும், இந்தக் காரணத்தைச் சொல்லி முடியாதுன்னுடுவாங்க. ஊர் உலகத்துல எல்லாரும், ஒரே மகனா இருக்கணும், சின்னக் குடும்பமா இருக்கணும்னு நினைக்கும்போது எங்கம்மா மட்டும் ஒரே மகனா இருக்ககூடாதுன்னு அடம் பிடிச்சது முரணாகத் தெரிஞ்சுது. அவங்ககிட்டயே ”வொய் மம்மி, வொய்?”னு கேட்டப்பதான், சிங்காரவேலன்ல கமலுக்கு அவங்கம்மா ஃப்ளாஷ்பேக் சொன்னாமாதிரி தன் கதையைச் சொல்லி “இளைய மருமக வந்தாத்தான், மூத்த மருமக அருமை தெரியும்”னு அருமையா, ஒரு வாக்குன்னாலும் திருவாக்காச் சொன்னாங்க.

சொன்னபடியே, தன் நாலு மகள்களுக்கும் பெரிய குடும்பங்களில் கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் தங்கச்சிங்க மூணு பேரும் அவங்கவங்க குடும்பத்துல மூத்த மருமகளுங்களா ஆகிட்டாங்க. அவங்க அருமை பெருமையெல்லாம் அடுத்த மருமக வரும்போது, அம்மா கணிச்ச மாதிரியே,  இன்னும் அதிகமா நல்லாப் புரிஞ்சுடுச்சு.

என் அருமை தெரிஞ்சுதான்னுதானே கேக்கறீங்க?.... எங்க வீட்லயும், எனக்கு முன்னே உள்ள மூணு மருமகள்களோட அருமையை, நாலாவதா தி க்ரேட் நான் மருமகளா வந்ததுக்கப்புறம் என் மாமியார் ரொம்ப ரொம்ப நல்லாவே தெரிஞ்சுகிட்டாங்க. ஆனா, என் அருமை..... ஹூம்... எங்காத்துக்கார் கடைக்குட்டி!!


Post Comment

30 comments:

demo said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... மிகப்பெரிய கூட்டுக்குடும்பம் போலிருக்கே... (எங்களைப் போல்)

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

ஸ்ரீராம். said...

:)))

மூத்த குழந்தைக்குப் பொறுப்பு இருக்கணும், கடைக்குட்டிக்குப் பாசமும் அதே சமயம் மரியாதையும் இருக்கணும்....அப்போ என்னை மாதிரி நடுவுல பொறந்தவங்களுக்கெல்லாம் பொறுப்பு ஒண்ணுமில்லையோ...!

நாஞ்சில் பிரதாப்™ said...

டைரக்டர் விக்ரமன் படம் மாதிரி ஏகப்பட்ட கேரக்டர்ஸ் வந்துபோது... புரியுது ஆனா புரியுல...:)

கீதமஞ்சரி said...

உறவுச்சங்கிலியின் பிணைப்பை அழகா சொல்லியிருக்கீங்க. முதல் பத்தி டயலாக் அப்படியே நானும் எங்கம்மாவும் பேசியதைப் போலவே இருந்தது. மூத்தவர்களோ, இளையவர்களோ, ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்து நடந்துகொண்டால் புகுந்தவீட்டிலும் நம்மைக் கொண்டாடி மகிழ்வார்கள். அருமையான பகிர்வு ஹூஸைனம்மா. தலைமுறைகளாய் கடத்தப்படும் கடைக்குட்டிப் பாசம், அந்த ஈரலைப் போன்றே விசேஷ குணம் கொண்டது.

வல்லிசிம்ஹன் said...

எங்க வீட்டுக்கதைய அப்படியே புட்டு புட்டு வைக்கறீங்களே. அதெப்படி நம்மளைத் தவிர எல்லோரும் எப்பவும் பிஸியா இருக்காங்க???????
அதென்ன மூத்த மருமகதான் ஃபோன் செய்யணும். அவங்க ஒரே ஒருதரம் திருப்பி செய்யக் கூடாதா:(எங்க வீட்ல நான் ஒரே மகள் புகுந்த வீட்ல இவர் ஒரே மகன் அது கடைசிநான்கு பெண்களுக்கு அப்புறமா:)
இதைவிஅக் கொடுமை என்ன தெரியுமா....அடுத்த தலை முறைக்கும் நாந்தான் ஃபோன் போட்டு நல்லா இருக்கீங்களான்னு கேக்கணும். நல்லவேளை நான் பெத்ததுகளாவது அம்மான்னு கூட்டுக்கிடறாங்க.:)))))))))))))))
நல்ல கதை போங்க.

T.N.MURALIDHARAN said...

உங்களுக்கு முன்னாடி உள்ள மருமகள்கள் எப்படி?

துளசி கோபால் said...

//சரி, நாந்தான் மூத்தது. என்னவர் கடைக்குட்டி. என் பக்கம்தான், “மூத்தவள்”ங்கிற பொறுப்பால நானே ஃபோன் பண்ணனும். அவர் பக்கம், அந்தப் பொறுப்பு, பருப்பெல்லாம் இல்லியே, ஜாலின்னு இருந்தா, அதுக்கும் குட்டு வைக்கிறாங்க. பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து நாங்க சின்னவங்கதான் ஃபோன் பண்ணிப் பேசணுமாம். அதுவும் வெளிநாட்டுல இருக்கவங்கதான் உள்ளூருக்கு ஃபோன் பண்ணனுமாம். //

ஹாஹா... இது அப்படியே ரிப்பீட்டு நம்மூட்லே! ஒரே ஒரு சின்ன மாற்றம். நான் கடைக்குட்டி. கோபால் மூத்தவர்:-)

ஸோ நான் மூத்தமருமகள். அதுலேயும் கண்காணா நாட்டுலே இருப்பவள். அதனால் நான்தான் எப்பவுமே நல்லவள்:-)))))

அப்பாதுரை said...

சுவாரசியமான ஆய்வு. இப்படியெல்லாம் தோணுதே?

ஈரல் விவகாரம் நைஸ். கடைசிலே என்னாச்சு? எப்படி சமாளிச்சாங்க? காரைக்கால் நாட்கள்ல நண்பர்கள் வீட்டில் ப்ளேட் ப்ளேட்டா தாவும் ஈரல்.. நினைவுக்கு வருது. என்னடா உசிரு வந்திருச்சாம்பாரு நண்பரோட அப்பா.

அமுதா கிருஷ்ணா said...

செம அலசல்..

ஸாதிகா said...

ஹி..ஹி.ஹி..

Naazar - Madukkur said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அருமையாக விவரித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் (உங்கள் எழுத்துக்கு

ராமலக்ஷ்மி said...

பகிர்வை ரசித்தேன்:)!

உங்களைப் போலவே நானும் மூத்த பொண்ணு. கடைக்குட்டி மருமகள்:)!

மாதேவி said...

ரசனையான பகிர்வு. :)

மனோ சாமிநாதன் said...

//எனக்கும் ஒரு விஷயம் புரியலை. எல்லா சித்தியும் பேரன், பேத்தி எடுத்து பாட்டியாகிட்டாலும், இப்பத்தான் படுபயங்கர பிஸியா இருக்காங்க!! //
இன்னும் கொஞ்ச நாட்களில் புரியும் ஹுஸைனம்மா! நம் முன்னோர்களின் கதையெல்லாம் இப்போதில்லை! எடுக்க முடிகிற ஓய்வையெல்லாம் இப்போதே எடுத்துக்கொள்ளுங்கள்!

நடுவில் பிறந்தவர்களுக்கெல்லாம் நிறைய கதைகள் இருக்கின்றனவே, அது உங்களுக்குத் தெரியுமா?

ஹுஸைனம்மா said...

மனோ அக்கா!

//நம் முன்னோர்களின் கதையெல்லாம் இப்போதில்லை!//
புரிகிறது அக்கா.

//நடுவில் பிறந்தவர்களுக்கெல்லாம் நிறைய கதைகள் இருக்கின்றன//
எழுதுங்க, தெரிஞ்சிக்கிறோம். எப்பவுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானேக்கா. :-))))

கோமதி அரசு said...

எல்லா சித்தியும் பேரன், பேத்தி எடுத்து பாட்டியாகிட்டாலும், இப்பத்தான் படுபயங்கர பிஸியா இருக்காங்க!! //

ஹுஸைனம்மா, வரிக்கு வரி அப்படியே ஒத்துக் கொள்கிறேன் பதிவை.

பேரன், பேத்தி எடுத்தபின் தான் ரொம்ப வேகமாய் ஓடுகிறது காலம், பொழுது எல்லாம், நிற்க நேரமில்லை. பிஸியோ, பிஸி.
போன் செய்வதும் நானதான் எல்லோருக்கும் பேச வேண்டும்.
அருமையான பதிவு தாய்மை, உற்வுகளின் பாசம், நேசம் எல்லாம் நிறைந்த பதிவு.
வாழ்த்துக்கள்.
படம் வெகு அழகு.

நட்புடன் ஜமால் said...

நாஞ்சிலார் ராக்ஸ்

முடியலை மேடம், முடியலை ...


அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஹுஸைனம்மா said...

டெமோ - நன்றிங்க தகவலுக்கு.

திண்டுக்கல் தனபாலன் -கூட்டுக் குடும்பம் இல்லீங்க. தனித்தனியாத்தான் இருக்கோம். அவ்வப்போது எல்லாரும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்வதுண்டு. நன்றிங்க -கருத்துக்கும், ஓட்டுக்கும்.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //நடுவுல பொறந்தவங்களுக்கெல்லாம்// உங்களுக்கெல்லாம் முன்னே பிறந்தவங்க, பின்னே பிறந்தவங்கன்னு ஒரு குஷன் உண்டு. எதுலயும் உங்களை ரொம்பப் பொறுப்பாக்கிடமாட்டாங்க, கண்டுக்கவும் மாட்டாங்க. அதிக சுதந்திரம் இருக்கும். அதே சமயம், பெற்றோர் பாசத்துலயும் குறைவிருக்காது!! :-))))

பிரதாப் - //புரியுது ஆனா புரியுல...//
அமீரக வெயிலிலும் விடாமல் வெளியே ஊர்சுத்தினா அப்படித்தான், “புரிஞ்சும் புரியாத மாதிரி” தான் இருக்கும். :-)))

ஹுஸைனம்மா said...

கீதா - //தலைமுறைகளாய் கடத்தப்படும் கடைக்குட்டிப் பாசம்//
அழகாச் சொல்லிருக்கீங்க. நன்றி.

வல்லிமா - உங்க வீட்டுக் கதையும் எங்கதைதானா!! :-)))
நீங்க ரெண்டுபேருமே ஒரே புள்ளையா... அப்ப ரொம்ப பொறுப்பா இருக்கணுமே!!

ஹுஸைனம்மா said...

முரளிதரன் - //உங்களுக்கு முன்னாடி உள்ள மருமகள்கள் எப்படி?//

அவங்கல்லாம் சொக்கத் தங்கம்!!
அப்ப நான்? அது... அது... பி..பி.. என்ன்னது, பித்தளையா?
ஹலோ!! பிளாட்டினம்னு சொல்ல வந்தேன்!!

விலைமதிப்பானது, அதே சமயம் ஆடம்பரமாவும் தெரியாது!!

(ஹூம்... என் பெருமையை நானே சொல்லிக்கிட வேண்டியிருக்கு!!) :-)))))

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - //கண்காணா நாட்டுலே இருப்பவள். அதனால் நான்தான் எப்பவுமே நல்லவள்//

ஆமா டீச்சர், வெளிநாட்டுல இருப்பதினால இது ஒரு அட்வாண்டேஜ்!! ஊருக்குப் போற ஒரு மாசம் மட்டும்தானே சந்திப்போம். அதனால, நம்ம சுயரூபம் ரொம்பத் தெரியாது.

(”நம்ம”ன்னு உங்களயும் கூட்டு சேத்துட்டேனே, தப்பில்லையே? :-)))) )

ஹுஸைனம்மா said...

அப்பாத்துரை - //சுவாரசியமான ஆய்வு. இப்படியெல்லாம் தோணுதே?//

நீங்க கேக்கிறதைப் பாத்தா, “இப்படிலாம்கூட வெட்டி ஆராச்சி பண்ணமுடியுமா”ன்னு கேக்கிறமாதிரி இருக்கு.... ஹி.. ஹி.. வெட்டியா இருக்கும்போது, ஆராச்சிகளும் அப்படித்தானே இருக்கும்!! An idle mind is a devil's workshop. :-)))))

”ஈரல் விவகாரம்” - கர்நாடகா காவிரி விவகாரமா என்ன தீர்க்க முடியாமப் போறதுக்கு? நீங்க சொன்னமாதிரி, விருந்துகளில், ஈரல் மற்றும் இன்னும் சில ஸ்பேர் பார்ட்ஸ்களும் பிளேட் விட்டு ப்ளேட் தாவிக்கிட்டேதான் இருக்கும்.


ஹுஸைனம்மா said...

அமுதா - நன்றிப்பா.

ஸாதிகாக்கா - ஹா.. ஹா.. ஹா...

நாஸர் மதுக்கூர் - வ அலைக்கும் ஸலாம். நன்றிங்க.

ராமலக்ஷ்மிக்கா - ஆ... ஸேம் ப்ளட்!! :-)))

ஹுஸைனம்மா said...

மனோக்கா - //நம் முன்னோர்களின் கதையெல்லாம் இப்போதில்லை! //
அக்கா, என் அம்மா தனியா இருக்காங்க, அதனால அவங்கதான் வீட்டு வேலை பார்க்கணும்கிறதால பிஸியா இருப்பதில் ஆச்சர்யமில்லை. என் சித்திகள் எல்லாருமே கூட்டுக் குடும்பமாகத்தான் இருக்காங்க - மருமகள், மகள்கள், பேரன்பேத்திகள் என்று. ஆனாலும், பிஸியா இருக்காங்கன்னு ஆச்சர்யம். பொதுவாக் கூட்டுக்குடும்பங்களில் பெரியவர்கள் “ஒன்லி சூப்பர்விஷன்”தானே செய்வாங்க? அதனால், ஓரளவு ஃப்ரீயா இருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்க்கா.

ஹுஸைனம்மா said...

மாதேவி - நன்றிங்க.

கோமதிக்கா - ரொம்ப நன்றிக்கா.

ஜமால் - ஏன்? ஏன்? :-)))

அமைதிச்சாரல் said...

நல்லா உக்காந்து ஆராய்ச்சி செஞ்சுருக்கீங்கன்னு புரியுது
:-)

சதீஷ் முருகன் . said...

நீங்க எனக்கு அக்காவோ சித்தியோ, (எப்படியோ ஒன்னு, பாசமா கூப்பிட்டா சந்தோசம் தானே), ஒரு குடும்ப படத்த குடும்பத்தோட பார்த்த சந்தோசம்.... உங்களின் எத்தனையோ பதிவு படித்து (அதுல கொஞ்சத்த சமைச்சு, ரூம் மேட்டுகிட்ட அடி... சரி அத விடுங்க..) இருந்தாலும், இந்த பதிவ படிச்ச உடனே பின்னூட்டம் போடணும்னு தோணிச்சு, போட்டாச்சு... காச பாக்காம எல்லோருக்கும் போன் பண்ணுங்க.... போயிட்டு வாரனுங்க....

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - ஆராச்சிலாம் நமக்குப் புதுசா என்ன? :-)))

சதீஷ் முருகன் - தம்ம்ம்ம்பி!! (”சித்தீஈஈஈ” மாதிரி வாசிக்கணும்)
என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிச்சுகிட்டு இருக்கீங்கன்னு பாத்து சந்தோஷம்!!

//உங்களின் எத்தனையோ பதிவு படித்து (அதுல கொஞ்சத்த சமைச்சு, ரூம் மேட்டுகிட்ட அடி... சரி அத விடுங்க..)//

என் பதிவுகளில் எதெல்லாம் சமைச்சீங்க நீங்க? கொஞ்சம் ரெஸிப்பி சொன்னா, நானும் சமைப்பேன்ல!! :-)))))))