Pages

வாழ்வும், சாவும்
ரணம்... உலகப் பற்று நீங்கிய துறவியோ, அல்லது அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரோ அல்லது இடைப்பட்டவரோ - எப்பேர்ப்பட்டவரையும் கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிடும். நிகழ்வாக இல்லாவிடினும், இந்த வார்த்தையே போதும் நெஞ்சைக் கொஞ்சம் ஆட்டி வைக்க. 

மரணமில்லா வீடு உலகில் இல்லையென்றாலும், நம் வீட்டை அது தொட்டுவிடுமோ என்கிற அச்சமும்தான் நம்மைக் கொஞ்சமாவது 
நல்லவர்களாக இருக்க வைக்கிறது என்றால் மிகையில்லை. மரணங்களில் சில, மரணித்தவருக்கோ அல்லது வேறு சிலருக்கோ விடுதலையாக இருக்கும். சில மரணங்கள் இருப்பவர்களின் வாழ்வை சுமையாக்கும். எதுவாகிலும், எல்லாருக்குமே மரணம் பல கேள்விகளை எழுப்புகின்றது. 

சென்ற வாரங்களில் தொடர்ச்சியாக இரு மரணச் செய்திகள். ஒன்று பிறந்து இரு நாளே ஆன சிசு. கருவிலேயே ஏற்பட்ட, பிறக்கும்வரை அறியப்படாத குறைபாடுகளால் மரணம். இன்னொன்று, சில குறைபாட்டுகளுடன் பிறந்து, 17 வருடங்கள் வாழ்ந்த ஒரு குழந்தை - ஆம், அவன் அப்போதும் குழந்தைதான். 

இந்தக் குழந்தை ஏன் பதினேழு வயது வரை வாழ்ந்து மரணிக்க வேண்டும்? அந்தக் குழந்தை ஏன் இரு நாட்களிலேயே வாழ்வை முடித்துக் கொண்டது? அவன் போட்ட புதிர்களின் விடை அவனன்றி யாருக்குத் தெரியும்?

திர்பாராத இந்த இரண்டுமே மனதைப் பாதித்திருந்த வேளையில், இன்னுமொரு தகவல். வெகுநாட்களாக ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு உறவினர் - இளைஞர்- கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர்காக்கும் கருவியால்தான் மூச்சு இருக்கிறது, இன்னும் சில மணிநேரங்களே... என்றெல்லாம் கேட்டபோது... மற்ற இரண்டைவிட இத்தகவல் பேரதிர்ச்சியைத் தந்தது.


மரணித்துவிட்டார் என்பதைவிட, இதோ இன்னும் சில மணிநேரங்களே என்கிற தகவல் தரும் வேதனை மிக மிகக் கொடுமையானது. வெளிவட்ட உறவினரான நமக்கே இத்தனை பதைபதைப்பைத் தருகிறது என்றால், அருகே இருக்கும் பெற்றோர், மனைவி, உடன்பிறந்தோரின் நிலையைக் கற்பனை செய்யக்கூடப் பயமாக இருந்தது. ஏதேதோ நினைவுகள், எண்ணங்கள், கவலைகள்... பழைய நினைவுகளில் மூழ்கி, இப்படியிருந்தோமே, அப்படியெல்லாம் இருந்தானே என்று கலங்கி.. 

சிறு வயது என்பதால்தான் இத்தனைக் கலங்குகிறோமோ என்று தோன்றலாம். கல்லூரியில் படிக்கும்போது, சக தோழியின் தாத்தா இறந்துவிட்டார். இரண்டு நாள் கழித்து கல்லூரிக்கு வந்த அவளிடம், ஒரு நண்பன் “வயசானவர்தானே?” என்கிற ரீதியில் பேச கொதித்துப் பாய்ந்துவிட்டாள் தோழி!! நல்லவேளை நான் வாயைத் திறக்கவில்லை. ஏனெனில் நானும் கிட்டத்தட்ட அப்படி நினைத்திருந்ததால்தான் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அச்சம்பவம், பாசத்திற்கு வயதில்லை என்று கற்றுக் கொடுத்தது. 

இன்னொரு சம்பவம் என் தாயார் சொன்னது. 16 வருடங்களாகப் படுக்கையில் இருந்த தன் பாட்டி இறந்தபோது, அவரின் 16 வயதுப் பேத்தி, கதறிக் கதறி அழுததாகச் சொல்லி வியந்தார். எந்தளவுக்கு அவர்களுக்குள் பாசமும், நேசமும் இருந்திருந்தால் பிரிவு துயரம் வாய்ந்ததாக இருந்திருக்கும்? 

ந்த இளைஞரின் மனைவியை முன்பொருமுறை ஒரு ஐ.சி.யூ. வாசத்தின்போது ஆறுதல் கூறலாம் என்று சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து நான் அறிவுரை பெற்று வந்தேன்!! “எங்களுக்கு இந்நிலை இறைவனால் தரப்பட்டது. ’எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி துன்புறுத்துவதில்லை’ என்று அவன் கூறியுள்ளான். எனவே நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இவ்வுலகில் படும் சிரமங்களுக்கான நற்கூலிகள் மறுமையில் தரப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆகையால் எங்களை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே இறைவா என்று ஒருபோதும் நாங்கள் எண்ணியதில்லை” என்றார். அவரின் மன உறுதி, திண்மை என்னை வாயடைக்கச் செய்தது!! 

ருத்துவர்கள் இனி காத்திருப்பதில் பயனில்லை, உயிர்காக்கும் கருவியை எடுத்துவிடலாம் என்று வற்புறுத்த, மனைவி மறுக்க, மற்றவர்கள் அதிர்ச்சியில்... விபரம் கேள்விப்பட்ட அனைவரும் - உறவுகள், உறவுகளின் உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரும் - பிரார்த்தித்தோம். 

அதிசயிக்கத்தக்க திருப்பமாக, மறுநாளே- இறைவன் கருணை - அவருக்கு நினைவு வந்து செல்ல, தன் தேவைகளை எழுதிக்காட்டுமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவர்களே இது மெடிக்கல் மிராக்கிள்  என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க, “அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும்” என்கிற விதமாக நிரந்தரமாக இறைவனிடத்து மீண்டுவிட்டார். அவர் நோயால் பட்ட துன்பங்களுக்குப் பகரமாக இறைவன் அவரது பாவங்களை மன்னித்து, மறுமை வாழ்வைச் சிறப்பித்துத் தருவானாக.

மேற்சொன்ன மூவரும் உறவுகள் என்பதால் அவர்களின் மறைவு என்னைப் பாதித்தது என்றால், டெல்லி துயரச்சம்பவத்தினால் மறைந்த ஜோதி ஏன் நம் அனைவரையுமே வருத்தப்படவைக்கிறார்? குழந்தை  விளையாடும்போது  கீழே விழுந்து காயப்பட்டு வந்தால்,  பதற்றமான தாய் “எதுக்கு ஓடுனே? ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே?” என்று அடிபட்ட குழந்தையின் முதுகிலே ரெண்டு போடுவதைப் போல,  மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு-காவல் துறையினரைக் கேள்வி கேட்கமுடியாத கையாலாகாத்தனத்தில், ஜோதியைப் பாத்து “ஏன் சினிமாவுக்குப் போனாய் - அதுவும் இரவில்?” என்று கேட்கத் துணிகிறேன்.

எனில், அதே டெல்லியைச் சேர்ந்த மூன்றரை வயதுச் சிறுமியிடமும், தமிழ்நாட்டின் மாணவி 13-வயது புனிதாவிடமும் “ஏன் பகலில் பள்ளிக்குப் போனீர்கள்?” என்று கேட்பதா!! இன்னும் கூட்டாகவும், தனியாகவும், வீட்டினுள்ளும் வெளியேயும், வன்புணரப்பட்ட எத்தனையோ பெண்களிடம் என்ன கேட்பது?  “ஏன் பிறந்தீர்கள்?” என்றா!!

எனது உறவுகளுக்கு, சுற்றங்கள் சூழ நேர்ந்த அமைதியான மரணங்கள்,  உற்றாருக்கு ஏற்படுத்தும் சோகத்தை, பாதிப்பை நினைத்துத்தான் வருந்த வைக்கின்றன. ஜோதி-புனிதாக்களின் மரணங்கள் மரணம் வந்த வழியை நினைத்துப் பதறிப் பரிதவிக்க வைக்கிறது. குற்றங்கள் செய்து, அவை நிரூபிக்கப்பட்ட பிறகும், தேசிய மரியாதையோடு மரணிப்பவர்களும் இருக்கும் இதே மண்ணில்தான்; ஒரு பாவமும் அறியாத, இன்னும் மண்ணில்கூட கால் வைக்காத சிசுவாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூராயுதத்தால் கிழிக்கப்பட்டுக் கொல்லப்படுபவர்களும் உண்டு.

வாழ்வு மட்டுமல்ல, சாவும் நல்லதாக இருக்கவேண்டும் என்கிற பயம் வருகிறது. இறைவா!! வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல, இறப்பையும் துன்பமில்லாததாக, நிறைவானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக!!


Post Comment

18 comments:

காற்றில் எந்தன் கீதம் said...

என்ன எழுதன்னு ஒண்ணுமே தோனல அக்கா... வார்த்தைகளை கோர்க்க முடியதலவிட்கு சிதறிப்போய் இருக்கிறேன்...

ஸ்ரீராம். said...

மரணம் என்பது எந்த நிலையிலும் மனதை அசைப்பதுதான். இந்திய மீடியாக்கள் கூட டெல்லி மாணவியின் விஷயத்தில் காட்டிய அக்கறையை அப்புறம் அதே டெல்லியிலும் (நேற்றும் ஒரு மாணவி வீட்டில் கோபித்துக் கொண்டு இரவு 11 மணிக்கு பஸ்ஸில் ஏற அந்த அரசு பஸ் நடத்துனரே பாளியழ்க் தொல்லை கொடுத்து, போலீஸ் துரத்தி மாட்டியிருக்கிறார்) தமிழகத்திலும் தொடர் சம்பவங்களாக நடை பெற்றதை கண்டு கொள்ளவில்லை. மேலும் இது மாதிரி சம்பவங்கள் நடக்க கடுமையான தண்டனை, அதுவும் உடனடியாக, இல்லாததுதான் காரணம்.

கோமதி அரசு said...


ஹுஸைனம்மா, நானும் நேற்று இதே மனநிலையில் இருந்தேன். கல்யாணம் ஆகி முதன் முதலில் என் கணவரின் கல்லூரி பிரின்ஸ்பால் வீட்டுக்கு குடிவந்தோம் அன்று முதல் அவர்களை நான் அம்மா, அப்பா என்று கூப்பிட்டு வந்தேன். அந்த அம்மா நேற்று மரணம் அடைந்த செய்தி கிடைத்தது அவர்கள் மகள் வீட்டுக்கு போன சமயம் மும்பையில் இறந்து விட்டார்கள். அவர்களை பார்க்கவும் முடியவில்லை. மனம் புலம்பி தவித்தது. அவர்களுடன் பழகி மகிழ்ந்த நாட்கள் நெஞ்சில் அலையாக வந்து மோதி மோதி சிரமப்படுத்தியது.

டெல்லி பெண் சிங்கப்பூரில் இறந்தவிஷ்யம் கேள்வி பட்டும் மனம் நொந்து தான் போனது.

பெண்களிடம் என்ன கேட்பது? “ஏன் பிறந்தீர்கள்?” என்றா!!//
நெற்றி பொட்டில் அடித்தமாதிரி கேள்வி .
பழைய பாடல் நினைவுக்கு வருகிறது
”’காமுகர் கண்களில் நீதி இல்லை அவர்க்கு தாய் என்றும் தாரம் என்றும் பேதம் இல்லை,”
மனைவியை தவிர மற்றவர்களை தாயாக, தங்கையாக நினைத்தால் இந்த மாதிரி நிகழவுகள் நடைபெற இடமில்லை.


சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும். இரவு நேரம் காவலர்கள் முன்பு நிறைய உண்டு என்று கேள்வி பட்டு இருக்கிறேன். இப்போது இல்லை போலும் அதை முன்பு மாதிரி காவலர் பணி பலபடுத்த வேண்டும். மீண்டும் இது போல் செயல்கள் நடை பெறா வண்ணம் இறைவன் துணை நிறக வேண்டும்.

வரும் ஆண்டு நல் ஆண்டாக மனித நேயம் மிக்க ஆண்டாக மலரட்டும்.


இறைவா!! வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல, இறப்பையும் துன்பமில்லாததாக, நிறைவானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக!!//

நல்ல பிராத்தனை ஹுஸைனம்மா உங்களுடன் சேர்ந்து நானும் பிராத்திக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

// “ஏன் பிறந்தீர்கள்?” என்றா!!//

இப்படிதான் கேட்கிறது சமூகம்.

நல்ல பதிவு.

அமுதா கிருஷ்ணா said...

நிறைய வேளைகளில் பெண்ணாய் ஏன் பிறந்தோம் என்ற கேள்வி எல்லோருக்கும் வரும் போல.இறந்த அந்த பெண்களுக்கு எத்தனை கனவுகளோ.டில்லி பெண்ணிற்கு நிகழந்த கொடுமை இனி யாருக்கும் வராமல் இருக்க வேண்டும். அந்த பெண்ணை பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது. இந்த கட்டுரை மிக கவனமாக அக்கறையாக எழுதப்பட்டுள்ளது.

அமைதிச்சாரல் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனம் அந்தளவுக்குக் கனத்துக்கிடக்கிறது.

நல்லதொரு பகிர்வு ஹுஸைனம்மா.

Sangeetha Sanyal said...

மிகவும் வருத்தமாய் இருந்தது ஜோதி யின் மரணம் நினைத்து. எப்படி அவர்கள் குடும்பம் இந்த இழப்பை சமாளிக்க போகிறார்கள் என்று நினைத்தாள் வேதனையாக இருக்கிறது.
இதே போல் மரணத்தின் வலியை என் ப்ளாக்கில் எழுதி இருப்பேன். " என் இனிய நண்பனின் இதய வலி முடிந்தால் படியுங்கள்

பூந்தளிர் said...

ஹுஸைனம்மா உங்க பதிவு மனசே கலங்கிடுச்சி. நான் இன்றுதான் புதிதாக வலைப்பூ தொடங்கி இருக்கேன். எல்லார் பக்கம்மும் போயி பார்த்துட்டு வரேன்.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Anonymous said...

''..இறைவா!! வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல, இறப்பையும் துன்பமில்லாததாக, நிறைவானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக!!..''
நியாயமான ஓரு வேண்டுகோள் எனக்கும் பொருந்தும்.
மிக ஆழமான ஓரு பதிவு.
இனிய நல்வாழ்த்து.
இனிய புத்தாண்டாக அமையட்டும். 2013.
வேதா. இலங்காதிலகம்.

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா. பெண் விடுதலை ஒன்றும் புரியாத வார்த்தைகளாகப் போய்விட்டன,.

மரணம் யாரையும் எந்த விதத்திலும் துரத்துகிறது. இறைவன் மனம் வைக்க வேண்டும். மக்கள் மனம் மாறவேண்டும். பேசிப் பேசிக் கழுத்தறுக்கும் அரசியல் நிபுணர்கள் இறங்கி ஏதாவது நல்ல சட்டத்தைக் கொண்டுவரட்டும்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

salam,
நம் வாழ்வும் மரணமும் அல்லாஹ்வுக்கு பிடித்தமானதாக அமையட்டும்.மறு உலகத்திற்காக என்ன சேர்த்து வைத்துளோம் நாம் என்ற கேள்வியை எதிர் நோக்கும் பொழுது பயமாக உள்ளது

எனக்காகவும் துஆ செய்யுங்கள் சகோ.

என் தளத்தில் இன்று:முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?
tvpmuslim.blogspot.com

RAMVI said...

மனதை கலங்க வைக்கும் பதிவு.எவ்வளவுதான் சமாதானம் செய்து கொண்டாலும் இந்த சம்பவங்கள் மறக்க முடியாததாக இருக்கு.

வாழ்க்கை ஒரு முறைதானே? ஏன் எல்லோரும் நல்லவர்களாக இருக்கக் கூடாது? என்றுதான் எனக்கு தோன்று கிறது.ஆனால் எல்லோருக்கும் இது தோன்ற வேண்டுமே?

புதுகைத் தென்றல் said...

நானும் பிரார்த்திக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

காற்றில் எந்தன் கீதம் - நலமா? ரொம்ப நாளாச்சு உங்களைப் பாத்து.
இன்னும் அந்த சம்பவத்தை நினைத்தால் மனம் கனத்துப் போகத்தான் செய்கிறது, இல்லையா?

ஸ்ரீராம் சார் - //இது மாதிரி சம்பவங்கள் நடக்க கடுமையான தண்டனை, அதுவும் உடனடியாக, இல்லாததுதான் காரணம். //

கரெக்டுங்க.

கோமதிக்கா - //வரும் ஆண்டு நல் ஆண்டாக மனித நேயம் மிக்க ஆண்டாக மலரட்டும். //
மனிதநேயம் மிகட்டும் என்றுதான் எப்போதும் பிரர்த்தனைகள். நன்றி அக்கா.

ஹுஸைனம்மா said...

ராமல்க்ஷ்மிக்கா - நன்றிக்கா.

அமுதா - //அந்த பெண்ணை பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது.//
ம்ம்.. இப்பவும் அதில் கொடூரமான ஒருவனை சிறுவன் என்று சீக்கிரமே விடுதலை செய்யப்போகிறார்களாம். எப்படி இருக்கும் அவர்களுக்கு!!

அமைதிக்கா - இன்னமும் அதிர்வுகளைத் தருகிறது அந்தச் சம்பவம். நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

சங்கீதா - உங்களுடைய அந்த பதிவும் முன்பே படித்திருக்கிறேன்.

பூந்தளிர் - நன்றிங்க.

அவர்கள் உண்மைகள் - நன்றி.

கோவைக்கவி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

வல்லிமா - //பெண் விடுதலை ஒன்றும் புரியாத வார்த்தைகளாகப் போய்விட்டன//
ஆமாம்மா.

திரு.முஸ்லீம் - ஸலாம். நன்றி.

ராம்விக்கா - //ஏன் எல்லோரும் நல்லவர்களாக இருக்கக் கூடாது? //
நாம் சந்திக்கும், பழகும் எல்லாரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும், இந்த மாதிரி சம்பவங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலில்லை.

புதுகைத் தென்றல் - நன்றிப்பா.