Pages

குழந்தையும் தெய்வமும்




ரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பரபரப்பும், பதட்டமும் நிலவிக்கொண்டிருந்தது. அவரின் இரண்டு-இரண்டரை வயது மகளின் வளையலைக் காணவில்லையாம். ஒரு பவுன்!! குழந்தையிடம் கேட்டால்,  “ஆனி ஆன்த்தி” என்றே திரும்பத் திரும்பக் கூறினாள்.

அம்மாவுக்கோ தயக்கம்... பக்குவமாக, பக்கத்து வீட்டு ராணியிடம் குழந்தை அங்கு வந்திருந்தபோது ஒருவேளை தவறி விழுந்ததா என்று தேடச் சொன்னார். இப்போது அம்மாவைவிட, ராணி ஆண்ட்டிக்குத்தான் பதட்டம் அதிகமானது. சிறிது நேரத்தில் வேறொரிடத்திலிருந்து வளையல் கிடைத்ததும்,.  ராணிக்குத்தான் பெருத்த நிம்மதி. “இது மட்டும் கிடைச்சிருக்கலன்னா, என் மேலிருந்த சந்தேகம் போயிருக்காதே” என்று பெருமூச்சு விட்டார். அம்மா “அப்படிலாம் இல்லைப்பா. நான் உங்களைச் சந்தேகமெல்லாம் படல்லை” என்று மீண்டும் மீண்டும் சமாதானப்படுத்தினார்.

இருப்பினும் உண்மை அதுதானே? ”குழந்தை பொய் சொல்லாது”; “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்ற அளவுக்கு அல்லவா நாம் குழந்தைகளின் innocence-ஐ போற்றுகிறோம்.  ஏன் பல வழக்குகளில்கூட, குழந்தைகளின் சாட்சியம்தானே அதிக நம்பகத்தன்மையுடையதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால், இன்றைய குழந்தைகளிடம் இந்த வெகுளித்தனம் மிச்சம் இருக்கிறதா?  கார்டூன்களில் ஆரம்பித்து, வீடியோ கேம்கள், தொலைக்காட்சி, திரைப்படங்கள், இண்டர்நெட், மொபைல் ஃபோன் உள்ளிட்ட பலவற்றால் அந்த வெகுளித்தனம், குழந்தைத்தனம், அழகிய அறியாமை தொலைந்தே போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

சில வருடங்களுக்குமுன், ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம். தெருவில் ஒரு மாடு மிரண்டோடி வர, அதைக் கண்டு அனைவரும் ஒதுங்கினர். ஒரு வீட்டில் இருந்த சிறுவன், தன் அம்மாவிடம், ஒரு கார்டூன் நிகழ்ச்சியின் பெயரைக் கூறி, “அதில் வருவதுபோல மாடு ஏன் உன்னை முட்டவில்லை? முட்டியிருந்தால் நீ கீழே விழுந்திருப்பே, ரத்தமெல்லாம் வந்திருக்கும், நான் பார்த்திருப்பேனே?” என்கிற ரீதியில் பேச தாய் அதிர்ந்துவிட்டாராம்.

குழந்தையைச் சொல்லிக் குற்றமில்லை. கார்ட்டூன்கள் அநேகமாக எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன.  கார்டூன்களாவது வரைபடங்கள். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறைகளை அப்படி ஒதுக்கிவிட முடியவில்லை. பசுமரத்தாணி போல, பச்சைமண்களின் மனதில் இவையும் அப்படித்தானே பதியும்.


இயல்பாகச் சித்தரிக்கிறேன் என்கிற பெயரில், சூடான ரத்தம் நம்மேல் தெறித்துவிடுமோ என்று அஞ்சுகிற அளவுக்கு, அளவுக்கு மீறிய வன்முறைக் காட்சிகள்.  காட்சிப்படுத்துதல்தானே - நிஜமல்ல என்று நமக்கும் தெரியும்; குழந்தைகளுக்கும் சொல்கிறோம். என்றாலும், ”கேட்பதை” விட, “பார்ப்பதே” உண்மையாகத் தோன்றும் வயதில்,  அவை மனதளவில் ஏற்படுத்தும் தாக்கங்களை நாம் இப்போது உலகில் பல சம்பவங்களில் கண்கூடாகக் காணத்தானே செய்கிறோம்?

வகுப்பறையில் ஆசிரியையைக் கொன்ற மாணவன், ஏதோ ஒரு படத்தைப் பார்த்து தைரியம் வரவழைத்தேன் என்கிறான்.  திரையுலகினரோ, திரைப்படங்களில் வரும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே என்கிறார்கள். மிகச் சிலர் நல்லதையும் எடுத்துக் கொள்ளத்தான் செய்கிறார்கள் - “தவமாய்த் தவமிருந்து” படத்தைப் பார்த்து தன் பெற்றோரின் மீது கூடுதல் மதிப்பு கொண்டவர்களும் உண்டு. ஏன், என் தலைமுறையைச் சேர்ந்த மக்களின் மனதில் தேசப்பற்றை வளர்த்ததில், “ரோஜா” படத்திற்குத்தானே பெரும்பங்கு!!

ஆனால், நல்லவை மனதில் ஏறுவதைவிட, கெட்ட விஷயங்கள்தானே சட்டென ஈர்க்கின்றன. அதனால்தானே, எவ்வளவு நல்ல படம் என்றாலும், அதில் ஒரு குத்தாட்டப் பாடலும் சேர்க்கப்படுகின்றது. பெரியவர்களுக்கே அப்படி எனும்போது, சிறுவர்களின் மனதிற்கு இந்த உணர்வுகளெல்லாம் புரிவதில்லை. அவர்கள் “ஆக்‌ஷனை”த்தான் பார்க்கிறார்கள், “ரியாக்‌ஷனை” அல்ல. அடிப்பவனின் வீரம்தான் தெரிகிறது, அடிபட்டவனின் வலி புரிவதில்லை.

துவரை வன்முறை என்பது பெரியவர்கள் செய்யும் செயலே என்று திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டது போய், சிறுவர்களையும் வன்முறை வழிகளில் ஆர்வமுள்ளவர்களாகக் காண்பிக்க ஆரம்பித்துள்ளது திரை ஊடகம். வேண்டாம்! உங்கள் வன்முறைகளை பெரியவர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதன் விளைவுகளே தடுக்கமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இதில் சிறுவர்களும் வன்முறைகளில் ஈடுபடுவதுபோல காண்பிக்க ஆரம்பித்தால், வன்முறை தவறே இல்லை, நாம்கூட செய்யலாமென்ற எண்ணம் அவர்கள் மனதில் பதியாதா? அதிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக் குழந்தைகளை மட்டும் அவ்வாறு காட்டுவதால், ஏற்படக்கூடிய விளைவுகள் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

இந்தச் சித்தரிப்புகளெல்லாம் அதிகமில்லாத என் கல்லூரிக் காலத்திலேயே,  மாணவியர் பலரும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சமயத்தில், என்னிடம் - என்னிடம் மட்டும், “நீ பாகிஸ்தானுக்குத்தானே சப்போர்ட் செய்ற?” என்று முன்முடிவோடு கேட்கப்பட்டதன் அதிர்ச்சி இப்போதும் என்னிடத்தில் மிச்சம் உள்ளது. இந்த வலிகளை என் தலைமுறையோடு மறந்துவிடவேத் துடிக்கிறோம்.

ரி, இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் என்று சொல்லுவது எளிது. தீயவற்றைப் பார்க்காத என்னால் - என் குடும்பத்தால் சமூகத்திற்கு தீங்கில்லை. ஆனால், அது போதுமா? நான் சமூகத்தில் எதிர்கொள்ளும் மனிதர்களும் இதேபோல தீதில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

பார்ப்பதை விடுங்கள், திரையில் குழந்தைகளை எப்படிச் சித்தரிக்கிறார்கள் என்று பாருங்கள். எந்தப் படத்திலாவது குழந்தைகளை அவர்களின் அழகான குழந்தைத் தனத்தோடு காட்சிப்படுத்துகிறார்களா? இந்த ட்ரெண்ட் “அஞ்சலி” படத்திலிருந்து ஆரம்பித்ததென்று நினைக்கிறேன்.  பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவது, காதலர்களுக்குக் காவல் இருப்பது என்று வயதுக்கு ஒவ்வாத பேச்சுகளைப் பேசுபவர்களாக, செய்வதாக அதில் காட்டியிருந்தது பார்த்து (அப்போது கல்லூரி மாணவியான) எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, பிரமிப்பு!! நகரத்துப் பிள்ளைகளெல்லாம் இப்படித்தான் மரியாதையில்லாமல் இருப்பாங்க போல என்றுகூட அப்போது நினைத்துக் கொண்டேன் என்றால் பாருங்கள்.

ஆனால், தற்போது கிராமம்-நகரம் என்றெல்லாமல் பேதமில்லாமல், சிறுவர்கள் வயதுக்கு மீறியவர்களாக மாறியிருப்பதற்கு திரை ஊடகங்களே முக்கியக் காரணம் என்பது மறுக்கவே முடியாது. சமீபகால இரு காமெடி காட்சிகள் நினைவிலிருந்து உதாரணம் தருகிறேன். ஒன்றில், ஒரு சிறுமி தன் சாக்லேட்டைப் பிடுங்கியதாக தந்தையிடம் பொய்சொல்லி, வடிவேலுவுக்கு அடிவாங்கித் தந்து, மகிழ்வதாகக் காட்சி.  இன்னொன்றில், ஒரு சிறுவன் தன் வீட்டு காலிங்பெல் எட்டவில்லை என்று பொய்சொல்லி, வடிவேலுவை உதவிக்கழைத்து வீட்டு உரிமையாளரிடம் அடி வாங்க வைக்கிறான்.

நாம் பெரியவர்கள், இதெல்லாம் பார்த்து, சும்மா படம்தானே என்று புரிந்து, சிரித்து வைக்கிறோம். இதுவே உங்களுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆறேழு வயதுக் குழந்தைக்குத் தெரியுமா? அவன் எப்படி புரிந்துகொள்வான் என்று யோசித்தோமா?

திரைப் படங்கள் மட்டுமில்லை, வீட்டில் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக இருக்கும் டிவியில் வரும் தமிழ் தொடர் நாடகத்தில் வந்த ஒரு காட்சியை, “அவள் விகடனில்” ஒரு வாசகி விவரித்திருந்தார் பாருங்கள், அதிர்ச்சியின் உச்சம் என்று அதைத்தான் சொல்வேன்!! ஒரு சிறுமியின் அம்மாவுக்குக் குழந்தை பிறக்கப் போவதாகவும், அப்படி பிறந்தால் அம்மா இவளைக் கவனிக்க மாட்டார், புதிய குழந்தையைத்தான் விரும்புவார். ஆகையால் கருவைக் கலைத்துவிட நான் தரும் மருந்தைக் கொடு என்று அந்தச் சிறுமியிடம் ஒரு பெண் நஞ்சைக் கலக்கிறாராம். ஆண்டவா, இதென்ன கொடுமை!!

ப்படி, ஒன்று வன்முறை, அல்லது வயதுக்கு ஒவ்வாத பேச்சு மற்றும் செயல்கள் என்று சிறு குழந்தைகளைக் குறி வைப்பது போதாதென்று, பதின்பருவத்தினரையும் குழப்புவதில் திரை ஊடகத்திற்கே பெரும்பங்கு.  பள்ளிகளில் படிக்கும்போதே காதலிப்பது போலச் சித்தரிப்பதுதான் அதிகம் விற்கும் கதைகள் போல. அதிலும், இப்போதையப் படங்களில், தன் உள்ளங்கவர் கள்வனை அடையாளம் கண்டபின்புதான் பெண்கள் பருவமே எய்துகிறார்களாம்!! காதல், மைனா உள்ளிட்ட படங்கள் சொல்கின்றன. இந்த மாதிரியானப் படங்களுக்குத்தான் எத்தனை எத்தனை பாராட்டுகள்!!

டீனேஜ் காதலே சரி என்றால், டீனேஜில் செய்யும் சட்டபூர்வமான கல்யாணத்தில் என்ன தவறிருக்கும் என்றுதான் புரியவில்லை.  ”குழந்தைத் திருமணம் கலெக்டரால் தடுத்து நிறுத்தப்பட்டது”, “பால்ய விவாகம் நடத்த முயன்ற பெற்றோருக்குக் காவல்துறை எச்சரிக்கை” என்று எத்தனைச் செய்திகள் வாசித்திருப்போம்? 13-14 வயசில் செய்யும் காதலில் இல்லா “பால்யம்”, 15-16 வயதில் விவாகத்தில்!!

தங்கள் லாபத்திற்காக டீனேஜ் காதலைப் போற்றும் திரை ஊடகத்தினர், அதுவே தங்கள் வீடுகளில் நடந்தால் ஒப்புக் கொள்வார்களா? எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை,  12-13 வயதில் காதலிக்க விட்டிருக்கிறார்கள்?

தின்பருவக் காதலைச் சொல்லிப் பெருவெற்றி பெற்ற ”ழகி” படத்தில் நடித்த பார்த்திபன் ”அழகி படம் எனக்கு இப்போது அருவருப்பாக இருக்கிறது” என்று  தற்போது கூறியிருக்கிறார்.  ஏனாம்? “....பள்ளிக் குழந்தைகள் காதலிப்பதாக காட்டுவதை நான் அருவருப்பாகப் பார்க்கிறேன்..... விவரம் இல்லாத வயதில் அவர்கள் செய்யும் குறும்பையும் விளையாட்டையும் களவாடிக் காட்சிப்படுத்தி விடுவதுதான் கவலை அளிக்கிறது”.  அதுசரி!! உங்களுக்கு  காலம் கடந்தாவது ஞானோதயம் வந்துவிட்டது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்து அது சரியென்று நினைத்த இளம்பருவத்தினர் எத்தனை பேரோ? அவர்களுக்கு ஞானோதயம் வரும்போது, வாழ்க்கையே தொலைந்து போயிருக்குமே?

குழந்தைத் தொழிலாளிகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு என்கிறோம். ஆனால், திரை ஊடகங்களில் பணிபுரியும் குழந்தைகளை நாம் தொழிலாளியாகவே பார்ப்பதில்லையே, ஏன்? அவர்கள் திரையில் நடிப்பிற்காகச் சிரிப்பதை, நிஜமாகவே சிரித்து மகிழ்வதாக நம்பிவிடுகிறோமோ?

ப்படி நிஜவுலகில் தவறென்று கூறப்படுவதெல்லாம், திரையில் மட்டும் சரியாகிவிடுவது ஏன்? மீண்டும் நீ ஏன் சினிமா, டிவி பார்க்கிறாய்? பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் என்ற வாதத்தை வைக்காதீர்கள். என்னைப் போல பல பெற்றோர்களும் தவறானவற்றைப் பார்ப்பதில்லை.  தம் குழந்தைகளையும் தம் மட்டில் பாதுகாக்கிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தீவல்லவே! சமூகத்தோடு ஒட்டுறவாடித்தானே வாழ்ந்தாகவேண்டும். எனில், அந்தச் சமூகத்தில் இந்தத் தீயதைச் சரியென வரித்துக்கொண்டவர்களும் இருப்பார்கள்தானே, அவர்களை இந்தக் குழந்தைகள் எப்படி இனம்பிரித்தறிய முடியும்?

மற்றவர்களை இனம்பிரித்துப் பார்ப்பதே சிறுவர்களால் முடியாதென்றால், தம்மை மற்றவர்கள் தவறாகப் பார்ப்பதைத் தடுப்பதும் எப்படி முடியும்?

ஒரு காலத்தில் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டி, நற்குணங்களை வரித்துக் கொடுத்து, ஒற்றுமையைப் போதித்து வந்தவையாகப் பாராட்டப்பட்ட திரை ஊடகங்கள், தற்காலம் பொறுப்பற்றவையாக மாறியிருப்பது காலக்கேடு. 


ந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே”

என்றிருந்ததெல்லாம் அந்தக் காலம் - அன்னை மட்டுமே வளர்த்த காலம் அது. இன்று, தாய்-தந்தையைவிட, குழந்தையின் இயல்பை வடிவமைப்பதில் பள்ளி, ஆசிரியர்கள், நண்பர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சமூகமும் பெரும்பங்கு வகிக்கிறது.

இவற்றில் காட்சி ஊடகங்களே சிறுவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது யாவரும் அறிந்ததே. “ஒரு நிழற்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்” என்பார்கள். எனில், திரைப்படம்? UNESCO-வின் ஆய்வுக் கட்டுரை, சிறுவர்களிடமும், பருவவயதினரிடமும் ஒரு திரைப்படம் கதைப்புத்தகத்தை விட ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், குறிப்பிட்ட காட்சிகளை அவர்கள் மறப்பதேயில்லைஎன்றும் கூறுகிறது.

அமெரிக்காவில் பள்ளிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை ஆய்வு செய்ததில், பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், சிறுவயதில் அமைதியற்ற சூழலில் வளர்ந்ததே முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  Disturbed childhood என்பதில், இளவயதில் பார்க்கும் படங்களில் உள்ள வன்முறைகளும் அடங்குமாம்!! 





வீட்டினுள் உள்ள சூழ்நிலைகள் என் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ஆனால், விரும்பியும், விரும்பாமலும் வளைய வரும் வெளி உலகில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், நல்லது கெட்டதைப் பிரித்தறிய முடியாத சிறார்களின் மனதில் கல்வெட்டாகப் பதியும் காட்சி ஊடகங்கள் தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணரும் காலம் வந்தேவிட்டது!! 

ஏனெனில் ”குழந்தைகள் பெற்றோர்களினால் உருவாக்கப்பட்டவை அல்ல. பெற்றோர்களின் மூலம் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டவை.” (கலீல் ஜிப்ரான்) அந்தக் குழந்தைகளைப் பொறுப்பான சமூகத்தின் அங்கமாக ஆக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமே.

மேல்வாசிப்புக்கு:
1. குழந்தைகள் சினிமா.. தமிழில்...
2. ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...4
3. தமிழில் குழந்தைகளுக்கான சினிமா?
4. சின்னத்திரையும் வண்ணத்திரையும்

 

Post Comment

32 comments:

சமீரா said...

மிக அருமையான கருத்துக்கள்!! நானும் பலமுறை நினைத்து நொந்து இருக்கிறேன்.. இன்றைய கால கட்டத்தில் சினிமா என்பது கல்லாகட்ட மட்டுமே செய்யப்படும் ஒரு தொழில் அதில் நியாய அநியாயங்களுக்கு இடமில்லை!

"// ஒரு சிறுமி தன் சாக்லேட்டைப் பிடுங்கியதாக தந்தையிடம் பொய்சொல்லி, வடிவேலுவுக்கு அடிவாங்கித் தந்து, மகிழ்வதாகக் காட்சி// - இந்த காட்சி தான் நானும் நினைத்தேன்... எவ்வளவு கேவலமான ஒரு உரையாடல்.. இது உண்மையில் நகைசுவை அல்ல...

//ஒற்றுமையைப் போதித்து வந்தவையாகப் பாராட்டப்பட்ட திரை ஊடகங்கள், தற்காலம் பொறுப்பற்றவையாக மாறியிருப்பது காலக்கேடு. // - இதற்க்கு தீர்வு: தனிமனித ஒழுக்கம் கட்டுப்பாடு வந்தால் தான்!!

வல்லிசிம்ஹன் said...

பாதி காமெடிக்கு மேல் பார்க்க முடிகிறதா என்ன. அதுவும் தங்கவேலு,என்
எஸ்கிருஷ்ணன்,குலதெய்வம் ராஜ கோபால் இந்த மாதிரி நடிகர்களின் சிரிப்புக் காட்சிகளைப்
பார்த்த எங்களைப் போன்றவர்களுக்கு காமெடிகாட்சிகள் அளவுக்கு மிஞ்சின
அருவெறுப்பையே தருகின்றன.

வெகு நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் ஹுசைனம்மா.பெற்றோர்கள் முடிவெடுத்தால் குழந்தைகளின்
எதிர்காலம் நன்றாக இருக்கும். இறைவனை நம்புவோம்.

RagaSala said...

மிகவும் உண்மையாகத் தான் சொல்லி இருக்கீங்க.
என் சிறு வயதில் அம்மாவின் வேலை காரணமாக நாங்கள் ஓரிடத்திலும் எங்கள் அப்பா வேறிடத்திலும் இருந்தோம். அப்போ வந்த ஒரு பாட்டு - கோழி ஒரு கூட்டிலே குஞ்சு ஒரு கூட்டிலே, சினிமா theatre மொத்தமா என்னை திரும்பி பார்த்த அளவுக்கு நான் தேம்பித் தேம்பி அழுதேனாம்.

It is true that today's children are like - பிஞ்சுலேயே பழுக்கிரதுங்க; என்ன செய்ய? நீங்களே சொன்ன மாதிரி நாம் தனித்தீவுகளாக இருப்பதில்லையே!
அதேபோல நாம் சொல்வதை கேட்டு சிந்தித்து செயல்படுத்தவும் யாருமில்லை என்பது தான் வறுத்தமானது. சின்னத்திரைக்கும் தணிக்கை வேண்டும் என்று யார் முடிவு பண்ணி அமல்படுதுவார்?
இதுலே, குழந்தைகளை விட வீட்டு பெண்கள் மிகவும் பாதிப்படைகிறார்கள்.
அவர்களின் மனதை , குடும்பத்தின் அமைதியை, பிள்ளைகளின் படிப்பை, அவர்களின் எதிர்காலத்தையே அந்த தொல்லை-காட்சி பெட்டி கெடுக்கிறது.

RagaSala said...

மிகவும் உண்மையாகத் தான் சொல்லி இருக்கீங்க.
என் சிறு வயதில் அம்மாவின் வேலை காரணமாக நாங்கள் ஓரிடத்திலும் எங்கள் அப்பா வேறிடத்திலும் இருந்தோம். அப்போ வந்த ஒரு பாட்டு - கோழி ஒரு கூட்டிலே குஞ்சு ஒரு கூட்டிலே, சினிமா theatre மொத்தமா என்னை திரும்பி பார்த்த அளவுக்கு நான் தேம்பித் தேம்பி அழுதேனாம்.

It is true that today's children are like - பிஞ்சுலேயே பழுக்கிரதுங்க; என்ன செய்ய? நீங்களே சொன்ன மாதிரி நாம் தனித்தீவுகளாக இருப்பதில்லையே!
அதேபோல நாம் சொல்வதை கேட்டு சிந்தித்து செயல்படுத்தவும் யாருமில்லை என்பது தான் வறுத்தமானது. சின்னத்திரைக்கும் தணிக்கை வேண்டும் என்று யார் முடிவு பண்ணி அமல்படுதுவார்?
இதுலே, குழந்தைகளை விட வீட்டு பெண்கள் மிகவும் பாதிப்படைகிறார்கள்.
அவர்களின் மனதை , குடும்பத்தின் அமைதியை, பிள்ளைகளின் படிப்பை, அவர்களின் எதிர்காலத்தையே அந்த தொல்லை-காட்சி பெட்டி கெடுக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

ஊடகங்களைப்பத்திச் சொன்னது ரொம்பவும் சரி. அபத்தங்களைப் பார்க்கறதைத் தவிர்க்கணும்ங்கறதுக்காக எங்கூட்ல தமிழ் சீரியல்கள் பார்க்கறதேயில்லை. ஆனா, இப்ப குழந்தைகளுக்கான சில சேனல்கள்லயும் விஷ விதைகள் தூவப்படுது.

வழக்கமா ஆங்கில சீரியல்களை டப்பிங் செஞ்சு ஒளி பரப்பிட்டிருக்கும்போது சின்னப்பசங்க டேட்டிங் போற மாதிரியான காட்சிகள் வந்தா நம்ம பசங்க இதுமாதிரில்லாம் நடந்துக்க மாட்டாங்கன்னு ஆசுவாசமா இருக்கலாம். ஆனா, அதுக்கும் வெச்சாங்க ஆப்பு.. இப்ப குழந்தைகளுக்கான ஒரு சேனலில், ஹாலிவுட் சீரியல் ஒண்ணை ரீமேக்கி ஒளிபரப்பிட்டிருக்காங்க. அஞ்சாறு வயசுல இருக்கற பசங்க இருபதுகளில் இருக்கற பசங்க மாதிரி நடந்துக்கறதைப் பார்க்கறப்ப இது எங்கே போய் முடியுமோன்னு இருக்கு.

மாதேவி said...

நன்றாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

அப்பாதுரை said...

அட்டகாசமானக் கட்டுரை. வயசானவங்க மாதிரியே பு அதாவது கரிசனத்தோடும் அக்கறையோடும் எழுதியிருக்கீங்க.
'i don't mean it mom'என்று ஒரு புத்தகம். கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்.

அப்பாதுரை said...

அட்டகாசமானக் கட்டுரை. வயசானவங்க மாதிரியே பு அதாவது கரிசனத்தோடும் அக்கறையோடும் எழுதியிருக்கீங்க.
'i don't mean it mom'என்று ஒரு புத்தகம். கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் முக்கியமாக பெற்றோர்கள் யோசிக்க வேண்டிய கருத்துக்கள்... எத்தனை குழந்தைகள் ஆட்டிசம் என்கிற நோயால் பாதிக்கப்படுகின்றன... பிறகு அதை மாற்ற எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்... தேவையா இது...?

RAMA RAVI (RAMVI) said...

//ஆனால், நல்லவை மனதில் ஏறுவதைவிட, கெட்ட விஷயங்கள்தானே சட்டென ஈர்க்கின்றன. //

மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க.

ஒரு சமயம் மனநல மருத்துவரின் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர், சினிமா காட்சிகளை பார்க்கும் பொழுது குழந்தைகளுக்கு இந்த மாதிரி நிஜத்தில் சாத்தியமில்லை என்று தொடர்ந்து எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு என்றார்.

மிகவும் சிறப்பான பதிவு.

ஸ்ரீராம். said...

குழந்தைகள் இந்நாட்களில் குழந்தைத்தன்மையுடன் இருப்பதில்லைதான். மிக அழகாக யோசித்து, அலசி எழுதி இருக்கிறீர்கள்.

அப்பாதுரை இரண்டு தடவை வலியுறுத்திச் சொல்லியுள்ள புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

மன்சி (Munsi) said...

you nailed it mam

Unknown said...

arumaiyaana pakirvu..

ongoing event: http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html?m=1

pudugaithendral said...

வருந்ததக்க விஷயம் தான்.

கத்தி குத்தெல்லாம் வன்முறை இல்லை எனும் ரீதியில் தான் நம்ம சென்சார் போர்ட் இருக்கு. அதில்லாம படம் எடுக்கச் சொன்னா எந்தப்படம் வெளிவரும்????

ஐட்டம் சாங்களை “ஏ” லிஸ்டில் சேர்ப்பது எந்த விதத்துல நியாயம்னு கேக்கறாங்க. அவங்க கேட்பது கூட தப்பில்லைன்னு நினைக்கறேன் டூயட் பாட்டு மட்டும் ஒழுங்கா!!

என்னவோ போங்க!!!

ADHI VENKAT said...

அருமையான கருத்துகளை எடுத்து சொல்லியிருக்கீங்க...

குழந்தைகள் சேனலும் படு மோசம். சிறு வயதிலேயே காதல்....:(
ஆசிரியரை ஏமாற்றுவது, அடுத்தவரை துன்புறுத்துவது, அம்மா அப்பாவை ஏமாற்றுவது, காதலியை கவர்வது என எங்கு செல்கிறதோ...நம் குழந்தைகள் என்ன ஆவார்களோ? என்ன தான் அருகில் அமர்ந்து சொல்லி புரிய வைத்தாலும், மனதிற்குள் என்ன பதிகிறதோ...ஆண்டவனுக்கே வெளிச்சம்.

புதுகை.அப்துல்லா said...

வெகுஜன ஊடகத்தில் இடம்பெற வேண்டிய கட்டுரை.

நிலாமகள் said...

அவர்கள் “ஆக்‌ஷனை”த்தான் பார்க்கிறார்கள், “ரியாக்‌ஷனை” அல்ல. அடிப்பவனின் வீரம்தான் தெரிகிறது, அடிபட்டவனின் வலி புரிவதில்லை. //

நல்ல விரிவாக அலசப்பட்ட கட்டுரை. குழந்தையையும் தெய்வத்தையும் கொண்டாடி பெருமைப்படுத்தியது போய் வன்முறை வகுப்பு வாதம், மதக் கலவரம் இன்னபிற நச்சு கூடாரங்களில் இருத்தி விட்டோம்.

வெளியேற, வெளியேற்ற என்ன வழி?

enrenrum16 said...

நான் விளக்கும் முன்பு என் மகனே ‘இதெல்லாம் உண்மையிலேயே நடந்ததா’ எனக் கேட்டுவிடுவதால் உடனேயே இல்ல... நாம போட்டோ எடுக்கும்போது அப்பா உன்னை அப்படி செய் இப்படி செய்னு சொல்ற மாதிரி இவங்களையும் டைரக்டர்னு ஒருத்தர் இப்படியெல்லாம் செய்யச்சொல்வார்னு ஏதோ விளக்கிவைத்திருக்கிறேன்.அவ்வ்...

வயலன்சுடன் இப்ப வர்ற காமெடிகளும் சகிக்கமுடியுறதில்லன்றது உண்மைதான்.

நல்ல ஆழ்ந்த அலசல்..வாழ்த்துக்கள்.

enrenrum16 said...

/அந்தக் குழந்தைகளைப் பொறுப்பான சமூகத்தின் அங்கமாக ஆக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமே./ ஆக... என் குழந்தைகளை வளர்ப்பதில் எனக்கு மட்டுமல்ல... உங்களுக்கும் பங்கிருக்குனு சொல்றீங்க... ஓக்கே... ஒரு வாரம் உங்க வீட்டில் கொண்டு வந்து விடுறேன்... உங்கள் பங்கினை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள். (இப்படியெல்லாம் தீவிரமா சிந்தித்து எழுத விடுறாங்களே உங்க குழந்தைகள்....அதிகம் excess time இருக்கு போல :))

/நகரத்துப் பிள்ளைகளெல்லாம் இப்படித்தான் மரியாதையில்லாமல் இருப்பாங்க போல என்றுகூட அப்போது நினைத்துக் கொண்டேன் என்றால் பாருங்கள்./ஆஹா... என் பையனும் ‘ம்மா.. இதெல்லாம் ஊர்ல நடந்ததா’ன்னு அடிக்கடி கேட்கிறானே.... இதன் அர்த்தம் இதுதானோ....அவ்வ்வ்... விவரமாத்தான் விளக்கம் கொடுக்கணும் போலயே... :(

/13-14 வயசில் செய்யும் காதலில் இல்லா “பால்யம்”, 15-16 வயதில் விவாகத்தில்!!/ ஆமால்ல... சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கக்கூடாதுன்னு சொல்ல வர்றீங்க... கரக்டா?? ;)

உங்களின் ஒவ்வொரு கருத்தும் நச்...

கோமதி அரசு said...

குழந்தைத் தொழிலாளிகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு என்கிறோம். ஆனால், திரை ஊடகங்களில் பணிபுரியும் குழந்தைகளை நாம் தொழிலாளியாகவே பார்ப்பதில்லையே, ஏன்? அவர்கள் திரையில் நடிப்பிற்காகச் சிரிப்பதை, நிஜமாகவே சிரித்து மகிழ்வதாக நம்பிவிடுகிறோமோ? //

குழந்தைகள் நல்ல கதாபாத்திரங்களாய் வந்தால்கூட பரவாயில்லை, குழந்தை தொழிலாளியாக வருவதை தடை செய்யவேண்டும். படிக்கும் குழந்தைகளை வேலைக்கு வைக்க கூடாது என்றால் படத்தில் மட்டும் வேலை பார்க்கிற மாதிரி காட்சி அமைப்பு வைக்கலாமா?
குழந்தைதன்மையை திருடி விட்டார்கள் சினிமா, நாடகம், கதைபுத்தகம் எல்லாவற்றிலும்.

குழந்தைகளை, குழந்தைகளாய் இருக்கவிடச் சொல்லும் விரிவான அருமையான கட்டுரை.வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா.

ஒரு தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒரு நாள் பார்த்தேன், அதில் ரூபாய் நோட்டில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் பவர்ஸடார் என்கிறது குழந்தை, அதுவாய் சொல்லுமா? சொல்லவைத்து சிரிக்கிறார்கள்.
நாடு நலம்பெற குழந்தைகள் நலம்பெற அந்த படைத்தவனிடத்தில் தான் குழந்தைகளை காப்பாற்று எனக் கேட்க தோன்றுகிறது.

குழந்தைகள் நல்ல மனநலத்தோடு வாழ இறைவன் அருள்புரிவார்.

இராஜராஜேஸ்வரி said...

சிறுவர்களின் மனதிற்கு இந்த உணர்வுகளெல்லாம் புரிவதில்லை. அவர்கள் “ஆக்‌ஷனை”த்தான் பார்க்கிறார்கள், “ரியாக்‌ஷனை” அல்ல. அடிப்பவனின் வீரம்தான் தெரிகிறது, அடிபட்டவனின் வலி புரிவதில்லை.

சிறுவர்களின் யதார்த்த மன உணர்வுகளை சிறப்பாக நேர்த்தியாக பகிர்ந்திருக்கிறீர்கள்...

எல் கே said...

எதேச்சையாக இன்றைக்கு ப்ளாக்கர் பக்கம் வந்தேன் . இல்லாவிடில் மிக முக்கிய பதிவை தவற விட்டிருப்பேன். தொலைக்காட்சி என்னும் அரக்கன் மூலம் நம் குடும்பங்கள் சீரழிய நாமே காரணம் ஆகிவிடுகிறோம்..

கார்ட்டூன் நிகழ்சிகள் கூட வன்முறை காட்சிகள் கொண்டதாவே உள்ளது. இரண்டு கார்ட்டூன் நிகழ்சிகளை தவிர வேறு எந்த கார்ட்டூன் நிகழ்ச்சிக்கும் எங்கள் வீட்டில் அனுமதி இல்லை... அதே போன்றுதான் மெகா தொடர்களுக்கும் இங்கு அனுமதி இல்லை

எல் கே said...

//திரை ஊடகங்களில் பணிபுரியும் குழந்தைகளை நாம் தொழிலாளியாகவே பார்ப்பதில்லையே, ஏன்? //

இது என் மனதில் ரொம்ப நாளா இருக்கும் கேள்வி. கடல் பட ஹீரோயின் மிக இளம் வயது பெண் எனக் கேள்வி

Ranjani Narayanan said...

எல்லோர் மனதிலும் இருக்கும் வருத்தங்களை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சமீபத்தில் விஸ்வரூபம் படம் பார்க்கப் போனபோது எத்தனை சின்னக் குழந்தைகள்! மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கேட்டால் 'குழந்தைகளை எங்கு விட்டுவிட்டு வருவது?' என்ற பதில் வந்தது.

இந்தப் படத்தில் வரும் சில காட்சிகளை பெரியவர்களாலேயே பார்த்து ஜீரணிக்க முடியவில்லை.

எப்படி, எப்படி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கப் போகிறோம் என்ற கவலையே மிஞ்சுகிறது.

நல்லதொரு கட்டுரைக்கு பாராட்டுக்கள்!

ஹுஸைனம்மா said...

சமீரா - //இதற்க்கு தீர்வு: தனிமனித ஒழுக்கம் கட்டுப்பாடு வந்தால் தான்!!//
நம்பிக்கையில்லை சமீரா. அரசு சட்டத்தைக் கடுமையாக்கி, உறுதியாக நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. ஆனால், அதுவரை, நாம்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!!

வல்லிமா - ஆமாம் வல்லிமா, காமெடிக் காட்சிகள்தானே என்றுகூடப் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்க முடியலை சில சமயம்.

//பெற்றோர்கள் முடிவெடுத்தால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்//
இதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி.

ஹுஸைனம்மா said...

ராகசாலா - குழந்தைகள் திரையில் நடப்பதோடு ஒன்றிவிடுவார்கள் என்பதற்கு நீங்கள் சொல்லும் உதாரணம் பொருத்தம்.

குழந்தைகள் மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரின் மனதும் தொலைக்காட்சிகளின் சில நிகழ்ச்சிகளால் நிச்சயமாகப் பாதிக்கபப்டத்தான் செய்யும். நன்றிங்க கருத்துக்கு.

அமைதிக்கா - பாயிண்டு!! குழந்தைகளுக்கான சேனல்களிலும் விஷ விதை!! பல பெற்றோர்கள் எந்த ச்ஞ்சலமும் இல்லாம, தங்கள் குழந்தைகளை அதைப் பார்க்க விடுவதைப் பார்க்கும்போது - தெரிஞ்சுதான் செய்றாங்களா, இல்லைப் புரியலையான்னு தெரியல.

ஹுஸைனம்மா said...

மாதேவி - நன்றிங்க.

அப்பாதுரை - // வயசானவங்க மாதிரியே// மாதிரி என்ன மாதிரி. அதேதான். :-)))

/'i don't mean it mom' என்று ஒரு புத்தகம்.// - எங்கே போய்த் தேட?? அடுத்தவாட்டி மெட்ராஸ் போகும்போது, துபாய் ஸ்டாப்பிங்ல இறங்கிக் கொடுத்துட்டுப் போங்க. :-)

தி. தனபாலன் - கருத்துக்கு நன்றிங்க. ஆட்டிஸம் என்பது ஒரு பிறவிநோய். டிவி பார்ப்பதால் வருவதல்ல. அதைத் தகுந்த சிகிச்சை மற்றும் பயிற்சிகளால் மட்டுப்படுத்தலாம்.

ஹுஸைனம்மா said...

ராம்வி - கண்டிப்பாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். என் இளைய மகனுக்குச் சென்ற வருடம்தான், “making of spiderman" வீடியோவை யூ-ட்யூப்பிலிருந்து போட்டுக் காண்பித்தேன். பிறகுதான் சண்டைக் காட்சிகள் போன்றவை எப்படிப் படம்பிடிப்பார்கள் என்று புரிந்தது.

இருப்பினும், குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னாலும், அதை எந்தளவுக்கு உள்வாங்கிக் கொள்வார்கள் என்பது குழந்தைக்குக் குழந்தை வேறுபடும் என்பதால், கவனமாக இருக்க வேண்டிவரும்.

ஸ்ரீராம் சார் - அந்தப் புத்தகம் கிடைத்தால், எனக்கொரு காப்பி பார்ஸேல் ப்ளீஸ்!! (இல்லை விமர்சனப் பதிவு எழுதினாலும் போதும். :-)) )

மன்சி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - //கத்தி குத்தெல்லாம் வன்முறை இல்லை எனும் ரீதியில் தான் நம்ம சென்சார் போர்ட் // ஹூம்.. சென்சார் போர்டைக் கலைச்சிரலாம்.. அதுவேற தண்டச் செலவு...

என்னவோ போங்க.. :-))

கோவை2தில்லி - //என்ன தான் அருகில் அமர்ந்து சொல்லி புரிய வைத்தாலும், மனதிற்குள் என்ன பதிகிறதோ..//
கரெக்டுப்பா.. அவங்க பார்க்கிற ஒவ்வொரு காட்சிக்கும் நாம விளக்கம் சொல்லமுடியுமா என்ன? ஒரு சில சம்யம், நம்மளையே “பேசாம இரேன்”ன்னு சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க!!

ஹுஸைனம்மா said...

அப்துல்லா - நன்றிங்க.

நிலாமகள் - நன்றிங்க.

ராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - நன்றிங்க.

/இப்படியெல்லாம் தீவிரமா சிந்தித்து எழுத விடுறாங்களே உங்க குழந்தைகள்....அதிகம் excess time இருக்கு போல//
ஹல்லோவ்.. நாங்களும் பகலில் எல்லார்ரையும் ஆபீஸ், ஸ்கூல்னு அனுப்பி வச்சிட்டு கிடைக்கீற நேரத்துலதான் எழுதுறோம். சிந்தனை மட்டும்தான் 24x7!! :-))

இதுக்காகவே ஃபேஸ்புக் பக்கம் போகாம இருக்கனாக்கும்!

கோமதிக்கா - //பவர்ஸடார் என்கிறது குழந்தை, அதுவாய் சொல்லுமா? சொல்லவைத்து சிரிக்கிறார்கள்.//
அடக்கொடுமையே!! அதானே, அதுக்காச் சொல்லத் தெரியுமா என்ன?

//குழந்தைதன்மையை திருடி விட்டார்கள் சினிமா, நாடகம், கதைபுத்தகம் எல்லாவற்றிலும்//
ஆமாம்க்கா... வேதனயான உண்மை.

ஹுஸைனம்மா said...

எல்.கே. - //இரண்டு கார்ட்டூன் நிகழ்சிகளை தவிர வேறு எந்த கார்ட்டூன் நிகழ்ச்சிக்கும் எங்கள் வீட்டில் அனுமதி இல்லை.//
நல்ல விஷயம். மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டியது. நன்றி.

ரஞ்சனி மேடம் - வாங்க மேடம்.

// 'குழந்தைகளை எங்கு விட்டுவிட்டு வருவது?' // - அப்படியாகிலும் படம் பார்த்துத்தான் ஆக வேண்டுமா என்ன? ஒன்றும் சொல்வதற்கில்லை.

//எப்படி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கப் போகிறோம் என்ற கவலையே// - ஆமாம்.