Pages

புலி வால் பிடிச்ச...
டம் பேர் என்னன்னு ஞாபகம் இல்லை. அந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரிக்கு ‘அ, ஆ, இ, ஈ...’ சொல்லிக் கொடுத்து, ஒரு பாட்டும் பாடுவார் என்பது ஞாபகம் இருக்கிறது. அவரும், சிவாஜியும் இராணுவ வீரர்கள்.  அவர்களிருவரையும் சீன எதிரிகள் பிடிக்க வரும்போது, சிவாஜி, அவர்களின் கவனத்தைத் தன் பால் ஈர்த்து, ஜெமினியைத் தப்புவிக்க வைப்பார்.

இன்றும்,  நம் கவனத்தை அவசியமற்ற வேறு யாரோ/எதுவோ ஆக்கிரமித்து வைத்திருக்க, அதிமுக்கியமானவைகளில் நடப்பது என்னவென்றே கவனிக்காமல் இருந்துவிடுகிறோம்.  இந்திய எல்லையில், லடாக்கில் சீன ஆக்கிரமிப்பும் அப்படி நடந்ததுதான். பாகிஸ்தான் மட்டுமே நமது பயங்கரமான எதிரி என்று நம்பவைக்கப்பட்டிருப்பதன் விளைவே இது!!

 


இரு வாரங்களுக்கு முன்பு, சீன இராணுவம் லடாக் பிரதேசத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான LAC  எனப்படும் எல்லையைத் தாண்டி,  சுமார் 19 கிமீ தூரம் உள்ளே ஊடுருவி வந்து,  நான்கு கூடாரங்கள் அடிச்சுத் தங்கிருக்காங்க. (முதலில்  இதைவிட அதிகதூரம் ஊடுருவியிருந்தார்கள். இந்தோ-திபெத்திய படையினரின் தலையீட்டால், சுமார் 5 கிமீ பின்னேறிச் சென்று கேம்ப் அடித்திருக்கிறார்கள்). அதுமட்டும் இல்லை, ”நீங்கள் சீனப் பகுதியில் இருக்கிறீர்கள்”னு (You are in Chinese side) என்று ஒரு பேனர் எழுதியே வைத்துவிட்டார்கள்!!

சீனா செய்ததில் பத்தில் ஒரு பங்கு பாகிஸ்தான் எல்லையில் நடந்திருந்தது என்றால், உடனே நம்ம நாட்டுப் பற்று உசுப்பிவிடப்படும். போர் முரசு கொட்டப்படும். திரை உலகத்தினர் கலைநிகழ்ச்சிகள் நடத்தி, நிதி சேகரிப்பார்கள். உயிருக்குயிரான தங்கச்சிய வில்லன் கடத்திட்டுப் போனாக்கூட அசராம வெறப்பா நின்னு, தேசிய கீதம் பாடுவோம். இந்த சீன ஆக்கிரமிப்பு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்கிறதே கேள்விக்குறி. கார்கில் போர் நடந்ததற்கு, இந்திய எல்லையில் பாகிஸ்தான் சுமார் 10 கிமீ தூரம் ஊடுருவியதே காரணம். இப்போதைய 19 கிமீ சீன ஊடுருவலை அதோடு ஒப்பிடவே முடியாதாம்!!

சீன இராணுவம் நம்ம வீட்டு வாசல்லயே வந்து நின்னாலும், அவங்களோட சமாதானப் பேச்சு நடத்த நம்ம அமைச்சரை நிதானமா ஒரு மாசம் கழிச்சு சீனாவுக்கே அனுப்பிவைப்போம்.  வரும் அக்டோபர் மாதம் அவர்களோடு கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு நடந்துகிட்டிருக்கும்போதே, அங்கே லடாக்கில் சீன வீரர்கள் கூடுதலா ஐந்தாவதாக இன்னொரு கூடாரமும் அடிச்சுகிட்டாங்க!!

இதுக்கிடையில், இந்திய அமைச்சரின் விஸாவை சீனா இதுவரை உறுதி செய்யவில்லைன்னு ஒரு செய்தி உலவிக்கிட்டிருக்கும்போதே, எந்தவிதப் பரபரப்பும் சஞ்சலமும் இல்லாமல் “உழைப்பாளர் தினமான” மே 1- அன்று,  (வேறொரு) எல்லைப் பகுதியில் சீன வீரர்களோடு, வழமைபோல குடும்பங்கள் சகிதம்,  நம்ம இராணுவத்தினர் உழைப்பாளர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுனாங்க.  நண்பேன்டா!!

தே கதைதான் இப்போ பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் நடந்துகிட்டிருக்கு. முன்பு இதுபோன்ற வழக்குகளில், நல்லபடி உயர்கல்வி கற்று, பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களைக் கைது செய்ததற்கு எதிர்ப்பு அதிகரித்தபடியால், இம்முறையும்  உண்மைக் குற்றவாளிகள்க் கண்டுபிடிக்கும் முயற்சியே எடுக்காமல், திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பவர்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் போட்டிருக்காங்க. இப்படித்தான், தானா சரணடைஞ்சு,  காவல் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தவரையே “கூட்டு மனசாட்சி”யைத் திருப்திப் படுத்த தூக்கிலிட்டாங்க. இப்ப அடுத்து, ‘பொறியல் மனசாட்சி’யாக இருக்கும்.

”திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”னு பாடினவங்க இப்ப இருந்தா, “போலீஸாய்ப் பார்த்து திருந்த விடாவிட்டால் முடியாது”னு பாடுவாங்களோ!!

 ந்த நாட்டைப் பார், பெண்களை எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள்! இந்த நாட்டைப் பார், எல்லாப் பெண்களின்மீதும் ஆஸிட் ஊற்றுகிறார்கள் என்று சொல்லி, பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களோடு மெயில்கள் ஃபார்வேர்டு செய்து கொண்டிருந்தோம். இன்று, புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் பெண்களின் மீதான ஆஸிட் வீச்சு அதிகரித்து வருகிறதாம்!! ஆஸிட் வீசியவர்களுக்கு கடும் தண்டனையும் கிடையாது. ஆஸிட் விற்பனையும்  முறைப்படுத்தப்படும் வழிவகைகளும் காணோம். ”ஆஸிட் வீசப்பட்ட இந்தியப் பெண்கள்” என்று ஃபார்வேட் மெயில்கள் ஏதேனும் வலம் வருகிறதா?

ட்டு, பதவி, ஆட்சிக்காக  ஜாதி அரசியலை ஆதரித்து வளர்த்துவிடுகிறோம். பின்னாட்களில்  வளர்த்த கடாவே மார்பில் பாய்கிறது.

பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததுபோய், இப்ப சின்னக் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத நாசகாரங்க அதிகமாகிட்டு வர்றாங்க. மக்களும் தண்டனையைக் கடுமையாக்கணும்னு மட்டும்தான் போராட்டம் செய்றாங்க.  கடுமையான, அதேசமயம் உடனடித் தண்டனைகள், குற்றங்களைக் குறைக்க உதவும்தான். ஆனா, அதுமட்டுமே போதுமா? ”நோய்முதல்” நாடவேண்டாமா?

குடி - எல்லாப் பாவங்களின் ஊற்றுக்கண்ணான குடியைத் தடுக்கும்வரை, இந்தக் கொடுமைகள் முழுமையாக நிற்கப் போவதில்லை.

ஊடகங்கள் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிப்பதையோ, பெண்களே தம்மைக் காட்சிப் பொருளாக ஆக்கிக் கொள்வதையோ இப்போதெல்லாம் யாரும் கண்டிப்பதில்லை. அதெல்லாம் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இப்போது, குழந்தைகளுக்கும் போடப்படும் அதீத மேக்கப் என்ன? நடிகைகளை மிஞ்சிவிடும்படியாக அணியப்படும் ஆடைகள்தான் என்னென்ன?  போதாதற்கு, ‘ஜூனியர் டான்ஸர்’ங்கிற பேர்ல “கலை” நிகழ்ச்சிகள் நடத்தி, அதில் குழந்தைகளை அரைகுறையா ஆட விடுறாங்க. இப்படி வக்கிரமாக ஆடவிட்டுட்டு, எல்லாரையும் ரசிக்க வச்சு, சின்னக் குழந்தைகளையும் அடையாளம் காட்டிக் கொடுத்தோம். இப்ப அடிச்சுக்கிறோம்.  இந்த ஆட்டத்தை, குடிகாரப் பாவிகள் என்ன கலைக்கண்ணோடா ரசித்திருப்பார்கள்?


பாவம் ஓரிடம், பழி ஓரிடம்கிற கதையா, ஆபாசத்தைத் தூண்டிவிட்டவர்கள்  பாதுகாப்பாகவே இருந்துகொள்கிறார்கள். அறிவு மழுங்கிப் போன,  தூண்டப்பட்டவர்கள், எதிர்க்கத் திராணியற்ற அப்பாவிகளிடம் தம் வன்மத்தைத் தணித்துக் கொள்கிறார்கள்.

ப்படி ஆபாசம், குடி, குறைவான தண்டனைச் சட்டங்கள் என்று குற்றத்தை ஊக்குவிக்கும் எல்லா ஊற்றுக்கண்களையும் சுதந்திரமாக ஓடவிட்டுக் கொண்டே,  நாட்டில் எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும்னு எப்படி எதிர்பார்க்கிறது?

சென்ற டிசம்பர் 16 அன்று டெல்லியில் தொடங்கிய  பாலியல் வன்முறை எதிர்ப்பு போராட்டங்கள், இன்றும் முடி(த்துவிட முடி)யாமல்  தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், அதில் ஒரு சதவிகிதத்தினராவது குடியைத் தடுப்போம் என்று போராடுகிறார்களா? சென்னையில், திரு. சசி பெருமாள், சாகும்வரை உண்ணாவிரதம் என்று போராடினாரே, அதற்கு எத்தனை இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்?


ல்லாவற்றிலும் இப்படியே தும்பை விட்டு வாலைப் பிடிக்க எத்தனிக்கிறோம். கடைசியில் அது புலிவால் பிடிச்ச நாயர் கதையாகிவிடுகிறது.

Post Comment

15 comments:

mohamed sultan said...

நல்ல பதிவு. ஆனால் உண்மையைச் சொன்னால் பல பேருக்கு உடம்பெரியுமே!

mohamed sultan said...

LoC - Line of Control

Anonymous said...

உண்மை தான்.அக்கறை இருக்கிறவன் புலம்புறான் ஆனா அதை எவன் கண்டுக்கிறான்.

ஸ்ரீராம். said...

சீனப் படையின் எண்ணிக்கையைப் பார்த்தே அமைதியடைந்திருப்பார்கள். அமெரிக்காவின் நண்பனாக இருந்தால் கொஞ்சம் துணிந்து நெருங்கிப் பார்க்கலாம். இப்போ நடப்பதா என்ன நேரு காலத்திலிருந்தே நடப்பதுதானே... அருணாச்சலப் பிரதேசம் அவர்களுடையது என்கிறார்கள்..

குழந்தைகள் மற்றும் பெண்கள் மேல் பாலியல் பலாத்காரச் செய்திகள் ஊடகங்களில் தடை செய்யப் பட வேண்டும். அல்லது குற்றவாளி உடனடியாக மிகக் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மட்டுமே பரிந்துவரும் ம.உ. அமைப்புகள் இந்தக் குற்றங்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை!

எதெதற்கோ போராடும் மாணவர்கள் குடியை ஒழிக்கப் போராடலாம்.

அப்பாதுரை said...

புலிவால் பிடிச்ச நாயர் கதையா? அதைச் சொல்லாம விட்டீங்களே? நியாயமா?

சீனா என்றால் இந்தியாவுக்குப் பயம். பாகிஸ்தான் என்றால் இளப்பம். அதுதான் காரணம். இன்னொன்று: எல்லைப் பிரச்சினையைக் குழப்பமாகவே வைத்திருந்ததற்கு இந்திய அரசாங்கப் பெருந்தலைகளும் காரணம்.

நீங்க வேறே புள்ளிவிவரம்னு சொல்றீங்க.. ஸ்ரீராம் அதெல்லாம் இல்லை, அமெரிக்காவுல இந்தியாவை விட அதிகம்னு சொல்வாருனு எதிர்பார்த்தேன்.. ஓ.. அதனால தான் புள்ளிவிவரம்.. விவரமான பேர்வழி நீங்க.

சூடான காபிக்குத் துணையாக சின்னச் சின்ன சிந்தனை பிஸ்கட்டுகள். பலே!


ஹுஸைனம்மா said...

// mohamed sultan said...

LoC - Line of Control//

LoC - இந்தியா-பாக் எல்லைக்கோடு
LAC - இந்தியா-சீன எல்லைக்கோடு
Line of Actual Control

இராஜராஜேஸ்வரி said...

சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்...

Sangeetha RG said...

ஹய்யோ மறுபடியும் நீண்ட நாள் கழித்து எழுதி இருக்கீங்க.
நல்ல பதிவு நமக்கு புரியுது ஆனால் புரிய வேண்டியவங்க புரியாத மாதிரியே இருக்காங்களே

புதுகைத் தென்றல் said...

சின்ன குழந்தைகள் பாவம். அதிலுங்க் இங்கே சில தகப்பன்களேகூட என படிச்சப்ப கலி முத்திடிச்சின்னுதான் தோணுது. :((

பேப்பரை எடுத்தாலே இந்த மாதிரி ந்யூஸ் இல்லாம இருப்பதில்லை.

இந்த புத்துநோய்க்கு மருந்து என்ன?

புதுகைத் தென்றல் said...

சின்ன குழந்தைகள் பாவம். அதிலுங்க் இங்கே சில தகப்பன்களேகூட என படிச்சப்ப கலி முத்திடிச்சின்னுதான் தோணுது. :((

பேப்பரை எடுத்தாலே இந்த மாதிரி ந்யூஸ் இல்லாம இருப்பதில்லை.

இந்த புத்துநோய்க்கு மருந்து என்ன?

raja said...

Arumayana Karuthukal...

கோமதி அரசு said...

சென்ற டிசம்பர் 16 அன்று டெல்லியில் தொடங்கிய பாலியல் வன்முறை எதிர்ப்பு போராட்டங்கள், இன்றும் முடி(த்துவிட முடி)யாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், அதில் ஒரு சதவிகிதத்தினராவது குடியைத் தடுப்போம் என்று போராடுகிறார்களா? சென்னையில், திரு. சசி பெருமாள், சாகும்வரை உண்ணாவிரதம் என்று போராடினாரே, அதற்கு எத்தனை இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்?//

நன்றாக கேட்டீர்கள் ஹுஸைனம்மா.
குடிப்பது இளைஞர்களின் வீரம் என்பது போல் காட்டப்படுகிறது சினிமாவில்.
பாலியல் வன்முறைக்கு சிறுமி மட்டும் அல்ல கிழவியும் சீரழிக்க படுகிறார். கயவர்கள் வயதானவர்களையும் விட்டு வைக்கவில்லை. நேற்று தினமலரில் 80வயது மூதாட்டி கற்பழிக்கபட்டார் என்று செய்தி வருகிறது. காய்கறி விற்கும் ஏழை மூதாட்டி.
உலகம் ஏன் இந்த நிலையில் இருக்கிறது!
நாட்டுப்பற்று, ஒழுக்கம், பண்பு மற்றும் ஜாதி , மதம் கடந்த அன்பு இருந்தால் தான் இவை எல்லாம் அடங்கும் இல்லையென்றால் தலைவிரித்து ஆடத்தான் செய்யும்.
உங்கள் மறு வரவுக்கு வாழ்த்துக்கள்.
விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.


அமைதிச்சாரல் said...

//குற்றத்தை ஊக்குவிக்கும் எல்லா ஊற்றுக்கண்களையும் சுதந்திரமாக ஓடவிட்டுக் கொண்டே, நாட்டில் எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும்னு எப்படி எதிர்பார்க்கிறது?//

இதைத்தான் படிக்கிறது ராமாயணம்.. இடிக்கிறது பெருமாள் கோயிலைன்னு சொல்லி வெச்சாங்க பெரியவங்க.

ஜூப்பர் பதிவு ஹுஸைனம்மா.

அப்பாவி தங்கமணி said...

Why dont you join politics? okay okay no tension. Asusual nice factual post akka. But I doubt anything will change anytime soon, I assume everyone got used to things the way it is and even if few people like us complain, they say "NRI Bandhaa"...:(

அப்பாவி தங்கமணி said...

-