Pages

கலையும் அறிவியலும் சந்தித்தால்




செய்திகளில் பல அறிவு ஜீவிகளும், பிரபலங்களும் அவ்வப்போது ஆங்காங்கு நடக்கும் ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் (திரைப்பட விழா) கலந்துகொண்டு பெருமையாக படம் பிடித்து போடுவதையும், பார்த்த படங்களின் விமர்சனங்களை எழுதுவதையும் பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் ஏக்கத்தோடும், பெருமூச்சோடும் வாசித்து விட்டு, நமக்கு எப்போது இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று ஏங்கியதுண்டு.

அமீரகத்தில் திரைப்பட விழாக்கள் நடப்பதில்லையோ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நடக்கும். ஆனால், யாராவது ஃப்ரீயா டிக்கட் எடுத்துத் தந்து படம் பார்க்க கூட்டிச் செல்ல, நாம என்ன அவ்ளோ பிரபலமா??!!

அது மட்டும் இல்லாம, வாசலில் யாராவது நின்று அழைக்கவும், வீட்டில் உள்ள அம்மணி, மாடி அறையிலிருந்து நடந்து வந்து, மாடிப்படிகளில் இறங்கி, வாசலுக்கு நடந்து வந்து கதவைத் திறப்பது வரை அரைமணி நேரம் விளக்கமாகக் காட்டும் “ஆர்ட்” படங்களத்தான்
திரைப்பட விழா என்ற பெயரில் போடுவார்கள். அதைப் பார்க்குமளவு என்னிடம் பொறுமை இல்லை. ஆகவே, உறுமீனுக்குக் காத்திருக்கும் கொக்கு போல, சரியான சந்தர்ப்பத்திற்கு... சரி, சரி... டெஞ்சனாவாதீங்க...

ரெண்டு வாரம் முன்னாடி, அபுதாபியில் உள்ள நியூயார்க் பல்கலைக் கழகம், Imagine Science Abu Dhabi: Where Science Meets Art and Becomes Culture என்ற பெயரில் அறிவியல் குறும்பட விழா நடத்தப் போவதாக விளம்பரங்கள் பார்த்தேன், அதுவும் அனுமதி இலவசமாம். மீன் சிக்கிருச்சு!! அதுவும் ரெண்டு மீன்கள்... ஜவ்வு மாதிரி இழுக்கும் “கலை” படங்கள் இல்லை, அறிவியல் படங்கள்!! டிக்கட் ஸ்பான்ஸர் தேடவும் வேண்டாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!! 

ந்தத் திருநாளும் வந்தது. அவ்ளோ பெரிய தியேட்டர்ல அங்கங்க ஒவ்வொருத்தர்னு ஒரு இருபது பேர்தான் இருந்தாங்க. இதுக்காகவாவது வூட்டுக்காரரை துணைக்கு கூட்டி வந்திருக்கலாமோன்னு தோணுச்சு. இருந்தாலும் பயத்தைக் காட்டிக்காம, ஒரு அம்மணி பக்கத்துல ‘ஹாய்’ சொல்லிட்டு உக்காந்துகிட்டேன்.

படங்கள் ஆரம்பித்தன. மொத்தம் 7 படங்கள். 4 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் ஒவ்வொன்றும். 


1. The Disquiet: லெபனானில் ஏற்படும் நில நடுக்கங்களைப் பற்றிய படம். மூன்று  நிலநடுக்க கோடுகள் (Earthquake faults) மீது லெபனான் நாடு அமைந்திருப்பதால், அங்கு தினமும், மக்கள் உணரமுடியாத சிறிய அளவிலாவது நடுக்கங்கள் ஏற்படுவதைப் பற்றிய படம்.

2. SLOW LIFE என்ற பெயரில், பவளத் திட்டு பாறைகளில் (The Great barrier reef)
நடக்கும் நிதானமான நிகழ்வுகளை - மலர்கள் விரிவது போன்றவை - time lapse முறையில் வீடியோ எடுத்துப் போட்டிருக்கிறார்கள். வண்ணமயமான அற்புதமான காட்சிகள். வியந்து ரசிக்க வைத்தன. 

படம் பார்க்க:
https://vimeo.com/88829079
 
3. Green matters : பால்டிக் கடல் மற்றும் அதில் வளரும் பாசி (algae)குறித்தும் பேசும் படம். ஐரோப்பாவில் இருக்கும் பால்டிக் கடலின் சிறப்பே, அதில் வழக்கமாக கடல்களில் உள்ளதைவிட மிகக் குறைந்த உப்புத் தன்மைதான். பத்தாயிரம் வருடங்களுக்குமுன், இது பால்டிக் ஆறு என்றே அழைக்கப்படுமளவு உப்பு குறைவாக இருந்ததாம்.

தற்போது அதில் அருகிலுள்ள விவசாய நிலங்களின் உரங்கள், ஆலை மற்றும் குடியிருப்புகளின் கழிவுகள் கலப்பதாலும் நீரில் சத்துக்கள் (nutrient) அளவு கூடிவிடுவதால் - இதற்கு eutrophication என்று பெயர் - பாசி போன்ற நீர்த்தாவரங்கள் மிக அதிகமாக வளருகின்றன. அதனால் நீரில் இருக்கும் dissolved ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறைந்துவிடுகின்றது. அதில் வாழும் மீன்கள் இதனால் பாதிக்கப்பட்டு, மீன் வளம் குறைகின்றது. கலங்கல் தன்மை, நாற்றம் உள்பட இன்னும் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

இதற்கான ஒரு தீர்வாக, அளவற்று விளைந்து கிடக்கும் பாசிகளை நீக்கி, அவற்றை வேறு வழிகளில் பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியுமா என்ற முயற்சியே இப்படத்தின் “கரு”!! பாசிகள் வளர்ந்து பசுமையாக இருக்கும் பருவகாலம் அறிந்து, அவற்றை நீக்கி, காயவைத்து, நார்களாக ஆக்கிக் கொள்ளலாம். பின்னர் அதனைக் கொண்டு, தரை விரிப்பு போன்றவை செய்யலாம். ஆடைகள் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியும் நடக்கிறதாம்.
படம் பார்க்க: https://vimeo.com/26728542

4. Lulu: Story of a Pearl: அபுதாபியில் பெட்ரோல் கண்டுபிடிப்பதற்கு முன்பு முத்து குளிப்பதுதான் முக்கிய தொழில். ஆனால், ஜப்பானியர்கள் செயற்கை முத்துக்களை (cultured pearls) கண்டுபிடித்த பின்பு, இயற்கை முத்துக்களின் மவுசு குறைந்தது. அப்படியே இத்தொழில் வழக்கொழிந்து விட்டது. நம் நாட்டிலும் இப்போதுதானே அழிந்து வரும் விவசாயத்தின் அருமையை உணர்கிறோம். அதுபோல, இவர்களும் தம் முன்னோர்களின் தொழிலை  மீட்டெடுக்கும் முயற்சியாக, தற்போது நவீன உத்திகளின் உதவியுடன் முத்து குளித்தலைத் தொடர ஆரம்பித்துள்ளார்கள்.

சரியான பருவ காலத்தில், சிப்பிகளைச் சேகரித்து, அவற்றைப் பதப்படுத்தி “ஆபரேஷன்” செய்து ஒரு மண் துகளை உட்செலுத்துகிறார்கள். பின்னர் அவற்றைக் கடலில் போட்டுவிட்டு இரண்டு வருடம் காத்திருந்து, எடுக்கிறார்கள். இம்முறையில் குறைந்த பட்சம் 70% சிப்பிகளில் முத்து கிடைக்கிறதாம். “மூன்றாம் தலைமுறை முத்து விவசாயிகள்” என்று தங்களை அறிமுகம் செய்துகொள்ளும்  ஜப்பானியர்கள், அபுதாபியினருக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்!

முன்னோர்களின் தொழிலை, அவர்களின் சிரமப்பாடுகளையும், நாட்டின் வரலாற்றையும் அறிந்து கொள்ளாத இளைய தலைமுறையால் நிகழ்காலத்தில் சிறப்புற செயல்பட முடியாது என்று அபுதாபி சுற்றுச்சூழல் அதிகாரி கூறுகிறார்.

5. Emergency Calls :

ஃபின்லாந்து நாட்டில், ஒரு எமெர்ஜென்ஸி கால் செண்டரில் வரும் அழைப்புகளும், அதற்கான பதில்களும் மட்டுமே அடங்கிய ஒரு படம். அங்குள்ள பணியாளர்களாக மட்டும் இருவர் நடிக்கிறார்கள். மற்றபடி ஒலி மட்டுமே. ஓவ்வொரு அழைப்பு வரும்போதும், அழைப்பவரின் குரலிலிருந்தும், பிண்ணனி ஓசைகளிலிருந்தும் அங்கு நடக்கும் காட்சிகள் நம் மனக்கண்ணில் ஓட ஆரம்பிக்கின்றன. கத்தியின்றி, இரத்தமின்றி நம்மை இருக்கை நுனிக்கு வர வைத்து விடுகின்றது படம்.

ஒரு அழைப்பு, வீட்டில் எதிர்பாராமல் மனைவியின் பிரசவம் நிகழத் துவங்கும்போது உடனிருக்கும் கணவனிடமிருந்து. அழைப்பவரின் பதற்றம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. ஆனால், பதில் சொல்பவர் நிதானமாக அவரை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவது “என்னால் இது சாத்தியமா?” என்று யோசித்து, வியக்க வைக்கிறது. குழந்தை பிறந்ததும், தொப்புள் கொடியை வெட்டாமல், குழந்தையை அம்மாவின் நெஞ்சில் போடச் சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது. சரியாக அச்சமயத்தில், ”இன்னொரு குழந்தையும் வருகிறது” என்கிற அக்கணவனின் அலறல் பதற்றத்திலும் நம்மை புன்னகைக்க வைக்கிறது. அதற்கும் உரிய அறிவுரை கொடுத்துக் கொண்டே, “இந்நேரம் உங்கள் வாசலில் ஆம்புலன்ஸ் வந்திருக்குமே” என்று சொல்லும்போதே, மருத்துவர் வந்துவிட்டதாக கணவரும் அறிவிக்கிறார்.

1994-ல் ஐரோப்பாவின் பால்டிக் கடலில் “எஸ்டோனியா” என்கிற கப்பல் மூழ்கி, 852 பேர் இறந்தனர். டைட்டானிக்கு இணையான இழப்பாகக் கருதப்பட்ட விபத்து இது. அந்தக் கப்பலிலிருந்து வந்த அவசர அழைப்பும் இந்தப் படத்தில் உள்ளது. நம்மைக் கொல்லும் அந்த குரல்களின் உணர்ச்சிகள். சில நிமிடங்களுக்குப் பின் பதிலற்று போகின்றது அந்த அழைப்பு....

இன்னொன்று ஃபின்லாந்தில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டின்போது அழைக்கும் ஆசிரியரினது. வகுப்பு மாணவர்களின் முன் தன் பதற்றத்தை மறைக்க முயல்வது குரலிலேயே தெரிகிறது. சுடுபவன், தன் வகுப்பிற்குள்ளும் நுழைந்துவிட்டதாக சொல்வதோடு முடிகிறது அந்த அழைப்பு.

இவற்றிற்கிடையே, தன் மனைவி தன்னை அடிப்பதாக வரும் அழைப்பு, தன் நாய்க்கு அறுவை சிகிச்சை முடிந்து வருவதாகவும், ட்ராஃபிக்கை க்ளியர் செய்து தரக் கேட்கும் அழைப்புகளும் உண்டு.
படத்தின் ட்ரெய்லர்: https://www.youtube.com/watch?v=scpAn84JSpY

படத்தைப் பற்றிய இந்த விமர்சனம் சிறப்பாக இருக்கிறது: http://shorts.cineuropa.org/sh.aspx?t=article&t2=news&did=260862


இதற்குப் பிறகு வந்த இரண்டு படங்கள் சுவாரசியமாக இல்லை (புரியவும் இல்லை). Return to the Sea - ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் பற்றிய கதையும், Microscope Time-Lapse: Sugar Crystallizing out of Solution.  


மூன்று நாட்கள் நடந்த திரைப்பட விழாவில், தொடர்ச்சியாக பல அறிவியல் குறும் படங்கள் திரையிடப்பட்டன. எல்லாவற்றையும் பார்க்க ஆசை இருந்தும், சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. எனினும், இனி இம்மாதிரி வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது என்று நினைத்திருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....!!

சரி, தலைப்புக்கு அர்த்தம் தேடி களைச்சிருப்பீங்க:: இந்த பட விழாவின் tagline "
Where Science Meets Art and Becomes Culture" என்பதை, தமிழ்ப்”படுத்தினால்” கிடைத்ததுதான் தலைப்பு!!!

Post Comment

5 comments:

நட்புடன் ஜமால் said...

படப் பெயர்கள் எல்லாம் இருக்கு தானே,

அப்புறமென்ன இணையத்தில் தேடி பார்த்து விடுங்கள் ...

ஹுஸைனம்மா said...

இருந்தாலும், கெத்தா தேட்டர்லபோய் இருந்து பாத்துட்டு வந்த மாதிரி இருக்குமா...

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த முறை எண்ணங்கள் நிறைவேறட்டும்...

RAMA RAVI (RAMVI) said...

அனுமதி இலவசமா அதிர்ஷ்டம்தான் போங்க!!
விமர்சனங்கள் அருமை ஹுஸைனம்மா. link கொடுத்ததற்கு நன்றி.

shameeskitchen said...

உங்கள் விமர்சனங்கள் படத்தை நேரில் பார்த்த உணர்வை தந்தன.
வாய்ப்பு கிடைத்தால் இணையத்தில் பார்க்கிறேன்.