Pages

கடனும் உடனும்




டீக்கடை” முகநூல் குழுமத்தில் 2014 ரமதான் மாத கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.

கட்டுரைக்குள் போவதற்குமுன், ஒரு சந்தேகம்: கடன் தெரியும், “உடன்” என்றால் என்ன?
 
கைத்தொலைபேசி ஒலித்தது. இன்று காலை முதல், தெரியாத எண்ணிலிருந்து வரும் மூன்றாவது அழைப்பு இது. சலிப்போடு எடுத்தேன். “நாங்க ABCD பேங்கிலிருந்து பேசுகிறோம். பெர்சனல் லோன் குறைந்த வட்டியில் கொடுக்கிறோம்…” என்று ஆரம்பித்துப் பேச, மிகவும் கோபம் வந்தது. ஏற்கனவே வந்த இரண்டு அழைப்புகளும் இதுபோல வேறு வங்கிகளிலிருந்து வந்த அழைப்புகள்தான்!! இன்றென்ன ”Loan Day” ஆக இருக்குமோ?

இன்றைய காலகட்டத்தில்தான் “கடன்” வாங்குவது எத்தனை எளிதாகிப் போனது? முன்பெல்லாம், வசதியான உறவினர்களை சங்கோஜத்தோடு நாட வேண்டும். கடன் கிடைக்கலாம்; சிலவேளைகளில் கூடுதலாக அவமானமும். இல்லையெனில் சேட்டுக் கடை. அங்கே போனால், கொண்டு போனது போனதுதான். அன்றைய வங்கிகளிலா… ஊஹூம்.. சான்ஸே இல்லை. இன்றோ தெருவுக்குத் தெரு வங்கிகள். தாங்கித் தாங்கி அழைத்து கடன் தருகிறார்கள். தேவைப்படாத போதும் “கொடுக்கிறாங்களே, வாங்கிக்குவோமே” என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஆஃபர்கள்!!

அப்படியும் கடன் மேல் கடன் பெற்று தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்காக அல்லாமல், சில கூடுதல் வசதிகளுக்காகக் கடன் வாங்கும் மக்களின் அறியாமையை நினைத்தால் “மறுமை நாளின் அடையாளங்களில் அறியாமை நிலைத்து விடுவதும் ஒன்றாகும்” (சஹீஹ் புஹாரி எண் 80) என்கிற ஹதீஸ்தான் நினைவுக்கு வந்தது.


த்தகையவர்களைவிட பரிதாபமானது, அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக வங்கியில் கடன் பெறுபவர்களின் நிலை!! பெறுவது சொற்பத் தொகைதான்; எனினும் காலம் முழுவதும் கட்டினாலும் வட்டிகூட முடிவதில்லை. தவணைகள்தோறும் அந்நிறுவனங்கள் அனுப்பும் அடியாட்களின் மிரட்டல்களைக் கண்டு அஞ்சி வாழ வேண்டிய நிலை!! தாங்கமுடியாமல் தற்கொலை செய்து, நிரந்தர நெருப்பில் புகுவோரும் உண்டு.

அதனால்தான் கடனைக் குறித்து அல்லாஹுவும் அவனது நபி(ஸல்) அவர்களும் கடுமையாக அறிவுறுத்தியிருக்கிறார்கள் போல!!

அல்லாஹ்வுக்கே கடன்!!

ஸ்லாத்தின் அடிநாதங்களில் ஒன்றான ஸகாத், ஏழைகளை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்ற இன்னொரு சிறப்பான கடமை “அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பது”. அல்லாஹ்வுக்கே கடனா? பள்ளிவாசல்களில் உண்டியல் இல்லையே என்று யோசனை வரும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதைத்தான், தனக்கே கடன் கொடுப்பதாக நினைத்துக் கொடுக்கச் சொல்கிறான். அதற்கான பிரதியுபகாரமாக “கொடுப்பதைப் பன்மடங்காக்கித் தருவேன்; மன்னிப்பும் அளிப்பேன்” என்று உறுதி கூறுகிறான்!! (குர் ஆன் 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20)

கடன் வாங்க/கொடுக்க நடைமுறைகள்:

எழுத்துவகையிலான எந்த ஒப்பந்தங்களும் நடைமுறையில் இல்லாத அன்றே - 1400 வருடங்களுக்குமுன்பே - இறைவன் கடன் மற்றும் கொடுக்கல்-வாங்கல்களை, உரிய சாட்சிகளோடு எழுதிவைத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறான். அதுவும், கடனை வாங்குபவர்தான் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை நிர்ணயிக்க வேண்டுமாம்!! (2:282)

வாசிக்கக்கூட அவகாசம் தராமல், வாசித்தாலும் புரியாத பாஷையில் கண்ணுக்குத் தெரியாத எழுத்துக்களில் இருக்கும் பத்திரத்தில், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிப் போகச் சொல்லும் இன்றைய வங்கி/நிதி நிறுவனங்கள்/ கந்துவட்டி காலத்தில், இது உலக அதிசயம் அல்லவா? இஸ்லாமிய வங்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்புவதன் பின்ணணிகளில் இதுவும் ஒன்றோ!!

கடன் வாங்கியோரிடம் கருணை!

கடன் கொடுத்தோர், கடனை வாங்கியோரிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறான் இறைவன்.

2:280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.

யார் கடனை அடைக்க சிரமப்படும் ஒருவருக்கு (சற்று) அவகாசம் வழங்குகிறாரோ அல்லது (கடனை) தள்ளுபடி செய்கிறாரோ எந்நிழலும் இல்லாத அந்நாளில் இறைவன் தனது நிழலை அவருக்கு வழங்குவான் என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: கஃப் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம் 263 ஸுனன் அத்தாரமீ)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். சஹீஹ் புஹாரி Volume :2 Book :43 2391.)

வாங்கியவரின் சிரமம் உணர்ந்து, கடனைத் திருப்பி வாங்காமல் விட்டுவிட்டால், அவருக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுவதோடு, இறைவனின் நிழலும் வழங்கப்படுமாம். சுப்ஹானல்லாஹ்!! நாம் மறுமையில் எதை அடையப் போராடுகிறோமோ, அது இவ்வளவு எளிதானதாகக் கிடைக்கிறதே!!

எனில், கடன் கொடுப்போருக்கு??

இதுவரை கடன் கொடுத்தவர் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றி பார்த்தோம். இப்போது உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியிருக்கும். “அப்படின்னா கடன் கொடுத்தா திருப்பிக் கேட்கக்கூடாதா? எல்லா சட்டமும், கடன் வாங்குனவருக்கே சாதகமா இருக்குதே?” என்று. இதை வெளியே சொல்லத் தயக்கமாகவும் இருக்கும். அது மிக நியாயமான எண்ணம்தான்!!

இஸ்லாம் ஒருபோதும் ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாக இருப்பதில்லை. அடுத்த தரப்புக்கான சட்டங்களைப் பார்க்கும்போது இது விளங்கும்.

ஒருமுறை நபியவர்களுக்குக் கடன் கொடுத்த ஒருவர், மற்ற தோழர்களோடு இருந்த நபி(ஸல்) அவர்களிடம் கடனைத் திருப்பிக் கேட்டுக் கடுமையான வார்த்தைகளைப் பேசினார். உடனிருந்த தோழர்கள், “நபி(ஸல்) அவர்களிடமே மரியாதையற்ற முறையில் பேசுவதா?” என்று வெகுண்டு அவரைத் தாக்க முனைந்தனர். நபியவர்களோ அவர்களைத் தடுத்து, ” அவரைத் தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு” என்று கூறி, அவருக்கான கடனைத் திருப்பிக் கொடுத்தார்கள்!! (சஹீஹ் புஹாரி: 2390 Volume :2 Book :43)

சிலர் “அவர்கிட்ட என்ன பணத்துக்கா குறைச்சல்? நான் வாங்குன கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா அவருக்கு ஒண்ணும் குறைஞ்சிடாது” என்ற எண்ணத்தோடு கடன் வாங்குவார்கள். அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை இருக்கிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (சஹீஹ் புஹாரி: 2387)

கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மரணித்துவிட்டால் தப்பித்து விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இதற்காகவே வீட்டில் வயதானவர்கள் பெயரில் ப்ப்ப்ப்ளான் பண்ணி கடன் வாங்குவார்கள் சில குடும்பங்களில். பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கு என்பதைப் போல, அவர்களின் கடனும் பிள்ளைகளுக்கே என்பது இஸ்லாமியச் சட்டம்!! (சஹீஹ் புஹாரி: 2395 & 7315)

மேலும், கடனாளியாக இறந்தவருக்குக்கான ஜனாஸாத் தொழுகை நடத்த நபியவர்கள் மறுத்த சம்பவங்களும் உண்டு. (சஹீஹ் புஹாரி: 2298)

கடன் பாக்கியோடு உள்ளவர் மரணித்தால், அக்கடன் அடைக்கப்படும் வரை அவர் சுவர்க்கம் நுழைய முடியாது – அவர் ஷஹீதாகவே மரணித்தாலும்கூட!!. (al-Albaani in Saheeh al-Nasaa’i, 4367) (Ref: http://islamqa.info/en/71183) மேலும், கடனாளியின் ஆன்மா, அக்கடன் அடைக்கப்படும்வரை, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம்!! (திர்மிதீ 1078) இறைவன் காப்பானாக!!

தனால்தான் நபி(ஸல்) அவர்கள் கடனை விட்டுப் பாதுகாப்பு கேட்டு அதிகமதிகம் பிரார்த்துள்ளார்கள் போல! ”தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். (சஹீஹ் புஹாரி: 2397 Volume :2 Book:39)

இவையெல்லாமும் ஒருவேளை கடனின் தீவிரத் தன்மையைப் புரிய வைக்காவிட்டாலும் இவ்விறை வசனம் நிச்சயம் தெளிவுபடுத்தும்: மறுமைநாளில் பாவிகளின் மனநிலை எப்படியிருக்குமாம் தெரியுமா? “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.“ (56:66) கேளுங்கள்!! பாவியின் நிலை கடன் பட்டிருப்பவனின் நிலைக்கு ஒப்பானது என்றால் இனி இதை வேறு வார்த்தைகள் கொண்டு விளக்கவும் வேண்டுமா?

இப்போது புரிந்திருக்கும்: இறைவன் ஏன் கடனாளிகளுக்கு உதவச் சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான் என்று!! இம்மையில் மக்கள் முன்பாக அவர்கள் தம் தன்மானத்தை இழந்து அவமானப்பட்டவர்களாகவும், மறுமையில் அவர்கள் அந்தரத்தில் விடப்பட்டவர்களாகவும் ஆகிவிடக்கூடாதே என்ற கருணையால்தான். அதனால்தான், ஸகாத் பெறக்கூடிய எட்டு வகையினரில், கடனாளிகளும் ஒரு பிரிவினராக (9:60) வைத்திருக்கிறான். ஏன், இறந்தவரின் சொத்துப் பங்கீட்டில்கூட, முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர்தான் சொத்தைப் பங்கிட வேண்டும் என்று இறைவன் உத்தரவிடுகிறான். (4:11&12)

ன்றைய காலச்சூழ்நிலையில், தவிர்க்க நினைத்தாலும், மருத்துவம், கல்வி, குடும்பச்செலவுகள், வேலை என்று அடிப்படையான தேவைகளுக்கே கடன் பெற்றே ஆக வேண்டிய நிலையே பலருக்கு நிலவுகிறது. அங்ஙனம் கடன்பட்டோருக்கு உதவிடும் பாக்கியத்தையும், கடனில்லாப் பெருவாழ்வையும் தரவேண்டி இறைவனைப் பிரார்த்திப்போமாக. அதற்கான நபியவர்களின் பிரார்த்தனை இதோ:

'இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'


”அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ கலபதித் தைனி, வ கஹ்ரிர் ரிஜால்”


Why is there so much debt? 
(வங்கிக் கடன்களின் சூட்சுமத்தை விளக்கும் வீடியோ)
https://www.facebook.com/PositiveMoney/videos/951510468232691/

Post Comment

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கட்டுரை. தேடித் தேடி கடன் கொடுத்துவிட்டு பின்னால் பிரச்சனை தரும் நிறைய நிறுவனங்கள் இங்குண்டு..... கட்டாமல் ஏமாற்ற நினைக்கும் நபர்களும் உண்டு!

பல விஷயங்களை குறிப்பிட்டமை நன்று. பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கட்டுரை. தேடித் தேடி கடன் கொடுத்துவிட்டு பின்னால் பிரச்சனை தரும் நிறைய நிறுவனங்கள் இங்குண்டு..... கட்டாமல் ஏமாற்ற நினைக்கும் நபர்களும் உண்டு!

பல விஷயங்களை குறிப்பிட்டமை நன்று. பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

தொலைபேசிகளுக்கு வரும் இது போன்ற 'கடன் வேண்டுமா' அழைப்புகளின் பின்னால் ஒரு ஃபிராடுத் தனம் ஒளிந்து கொண்டிருக்கிறதாம். அவர்கள் நமக்குக் கடன் வழங்கும் சாக்கில் பேசி நம்மைப் பற்றிய விவரங்களை ஒன்றொன்றாய்த் திரட்டிக் கொள்கிறார்களாம். பின்னர் ஒருநாள் திரட்டிய விவரங்களை வைத்து, நமது வங்கியிலிருந்து பேசுவது போலப் பேசி, நம் பணத்தைத் திருட எடுக்கும் முயற்சிக்களாம்!
தம ​+1

கோமதி அரசு said...

நபிஅவர்களின் பிரார்த்தனை அருமை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.