Pages

அன்புள்ள சகோதரர்கள்..




என் வீட்டில் நாங்கள் நாலு சகோதரிகள். சகோதரர்கள் இல்லை. நான் மூத்த பெண். என் அப்பாவுக்கும் மூன்று சகோதரிகள் மட்டுமே, வீட்டில் ஒரே ஆண். எண்பதுகளில் ஒரு கிராமத்துச் சூழ்நிலையில், பெண்கள் அதிகம் வெளியே செல்வதில்லை என்பது அறிவோம். என் அப்பாவோ சவூதியில் வேலை செய்துவந்தார்.

வீட்டுக் காரியங்களில் ஒரு காலம் வரை தாய்மாமன்கள் வந்து உதவிசெய்தனர். அதன்பிறகு அவர்களும் சொந்தத் தொழில், வேலை என்று பிஸியாகிவிட்டனர். அம்மா, அப்பா இருவரும் அவரவர் வீட்டில் மூத்தவர்கள் என்பதால் அத்தை, மாமா, சித்திகளுக்கு உள்ள ஆண் குழந்தைகள் எல்லாரும் என்னை விட ரொம்பச் சின்னப் பசங்க. சிறு வயதில் பள்ளிக்கு மாட்டு வண்டியிலும், விவரம் தெரிந்த பிறகு அதில் போக மறுத்து, ஆட்டோவிலும் போனதால் நானே கடைக்குச் செல்லும் சாத்தியங்களும் இல்லை. அனுமதியும் கிடைக்கவில்லை. ஊரினுள் பலசரக்கு, மருந்து, டீக் கடைகளைத் தவிர வேறு கடைகளும் இல்லை.

தேவைப்படும் பள்ளி சார்ந்த பொருள்களை (இந்தியா மேப், ஜியோமெட்ரி பாக்ஸ், இங்க் பாட்டில், இத்யாதிகள்..) ஜங்ஷன், டவுணிலிருந்து வரும் சக மாணவிகளிடம் வாங்கி வரச் சொல்வேன். அவர்களால் வாங்கிவர முடியாத பொருட்களை உறவினர்களிடம் (மாமா, சித்தப்பா..) சொல்லி வாங்கித் தரச்சொல்வதும், பிறகு அவர்களையும் தொந்தரவு செய்ய முடியாமல் போக.. பதின்ம வயதுகளில் நான் கடைக்குப் போகிறேன் என்று அம்மாவிடம் அழுது, தொந்தரவு செய்ய, ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு மட்டும் போய்வர்றதுன்னா போ, இல்லை பேசாமல் வீட்டில் உட்கார் என்று மிரட்டப்பட்டதால் அதையும் கைவிட நேர்ந்தது. அம்மாவின் வீட்டுத் தீர்வை கட்ட ஆள் வேண்டுமே, வயலுக்கு மருந்தடிப்பதை மேற்பார்வையிட யாரை அனுப்புவது போன்ற கவலைகளின் நடுவே என் தேவைகள் முக்கியத்துவம் பெறவில்லை.

பின் தேவைகளின் அவசியத்தை உணர்ந்து, (சர்ஃப் பவுடர் ஜங்ஷனில்தான் விலை குறைவு, ஆப்பிள் இங்கே கிடைக்காது...) அம்மாவே அவ்வப்போது ஜங்ஷன் சென்று வாங்கி வருவார். இரண்டு, மூன்று மாதங்களுக்கொரு முறை செல்லும் அந்தப் பயணம் புறப்படுவதே மிகவும் சுவாரசியமாக இருக்கும். அந்தப் பயணங்களில் கடைசித் தங்கை மட்டும் உடன் சென்று வர அனுமதியுண்டு. அம்மா எப்பவும் துணைக்கு தம்பியை அழைத்துச் செல்வதால் மாமாவின் வசதியைப் பொறுத்தே பயணம் ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் நால்வரும் எங்களின் தேவைகளை எழுதிக்கொடுக்க, அதில் அம்மாவின் வீட்டோ பவரால் ரிஜெக்ட் செய்யப்பட்டது போக மீதி வாங்கி வரப்படும். அதிலும் நாங்கள் கேட்ட பிராண்ட் விலை அதிகம் என்பதால், வேறு விலை குறைந்த அல்லது பிடிக்காத நிறத்தில்..எதுவாக இருந்தாலும் கிடைத்த வரை லாபம் என்று வைத்துக் கொள்வேன். நாங்கள் கேட்காமலே அம்மா எப்பவும் வாங்கிவரும் இரண்டு ஃபைவ் ஸ்டார் (ஆளுக்குப்பாதி மட்டும்), ஒரு பாக்கெட் ஜெம்ஸ் (எண்ணி ரெண்டு அல்லது மூன்று மட்டும் ஒருவருக்கு) ஆகியவை அந்தக் கோபத்தைத் தணித்துவிடும்.

பத்தாம் வகுப்பில் நிறைய ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் ஆட்டோவிலிருந்து விடுதலை அடைந்து பஸ்சில் செல்ல ஆரம்பித்தேன். என் பள்ளியருகே உள்ள பாளை பஸ் ஸ்டாண்டில் உள்ள ஸ்டூடண்ட்ஸ், ஈகிள் கடைகள் மாணவர்களிடையே பிரசித்தம். மெல்ல மெல்ல அந்தக் கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி கிடைத்தது. பரிட்சை பேப்பர், கணக்கு நோட்டு, ஒரு பக்கம் மட்டும் கோடு போட்ட சயின்ஸ் நோட்டு, இப்படி என் தேவைகளை மட்டுமல்லாது, தங்கைகளுடையதையும் நானே பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன்.

முந்தைய கால‌கட்டங்களில் வகுப்பில் டீச்சர் மேப், கிராஃப் பேப்பர், போன்றவைகள் கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டாலே எப்படி, யாரிடம் சொல்லி வாங்கப் போகிறோம் என்று கவலையாக இருக்கும். இப்படி எனது ஒவ்வொரு தேவையையும் போராடி நான் நிறைவேற்றிக் கொண்டிருந்த நாட்களில், சக மாணவிகள் கவலையே இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு அவர்களின் அண்ணன்கள், தம்பிகள் அல்லது அப்பா வாங்கி கொண்டு வந்து தருவார்கள். அப்போதும் ஏனோ எனக்கும் ஒரு அண்ணன் இருந்தால் இதற்கெல்லாம் உதவியாக இருந்திருக்குமே என்று தோன்றவில்லை.

பின்னர் கல்லூரி நாட்களில் ரொம்பவே சுதந்திரம் எடுத்துக் கொண்டேன். கல்லூரிக்குத் தேவையான புத்தகங்கள், நோட்ஸ், லேப் உபகரணங்கள் என்று நானே ஜங்ஷன், டவுண் சென்று வாங்க ஆரம்பித்தேன். கோ-எஜுகேஷன் கல்லூரி என்றாலும் இரண்டாம் வருடத்திலிருந்துதான் சக மாணவர்களிடம் சகஜமாகப் பழக முடிந்தது. பிறகு எந்தக் கடையில் டிராயிங் பேப்பர்கள் விலை கம்மி, பிராஜக்ட் ஒர்க் எங்கே டைப் செய்யலாம், எக்ஸாம் ஃபீஸுக்கு எங்கே சலான் எடுக்கணும், அரியர்ஸுக்கு ஃபீஸ் எப்போ கட்டணும் என்ற அவர்களின் வழிகாட்டுதலுடன் அதிகச் சிரமமில்லாமல் கல்லூரிப் படிப்பு நிறைவேறியது. அப்போ கொஞ்சமும் தோணவேயில்லை நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று.

ஆனால் பள்ளியிலும், கல்லூரியிலும் சில தோழிகளின் பேச்சுகளிலிருந்து அண்ணன்கள் இருப்பது ஒரு வகையில் வசதி என்றாலும், அவர்களின் ஆதிக்கம், அடக்குமுறை அதிகம் இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். அதோடு அடிக்கடி அவர்களின் பேச்சில் இடம்பெறும், “அண்ணன் வரும் நேரம்”, “தம்பி பாத்தா தொலைஞ்சேன்”, “அண்ணனுக்குத் தெரிஞ்சா திட்டுவான்” போன்ற பேச்சுகள் நல்லவேளை எனக்கு அண்ணன் இல்லை என்ற ஆசுவாசத்தையே தந்தன.

பின் என் திருமண சமயத்திலும் அப்பா, உறவினர்களோடு நானும் வேலையை இழுத்துப் போட்டுச் செய்த போதும் தோன்றவேயில்லை சகோதரன் இல்லையே என்று. திருமணமாகிப் பல வருடம் கழித்து கணவரிடம் அவரது சகோதரியினைக் குறித்த எனது மனத்தாங்கலைக் கூற, “அதெல்லாம் கண்டுக்காதே” என்ற அவரின் பதிலைக் கேட்டபோது தோன்றியது, எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்திருக்கலாமே என்று!!








Post Comment

43 comments:

செ.சரவணக்குமார் said...

ஹுசைனம்மா..

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அருமையான நடை, வாழ்த்துக்கள் சகோதரி.

ஹுஸைனம்மா said...

// சென்ஷி Says:
08/11/09 19:05

:)//

சென்ஷி,

இது நல்லால்ல, சொல்லிட்டேன். எப்பப் பாத்தாலும் வந்து வந்து சிரிச்சுட்டு மட்டும் போனா என்ன அர்த்தம்? இது நக்கல் சிரிப்பா, ஆறுதல் சிரிப்பான்னே தெரியலையே?

ஹுஸைனம்மா said...

//செ.சரவணக்குமார் Says:
08/11/09 19:35

ஹுசைனம்மா..

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அருமையான நடை, வாழ்த்துக்கள் சகோதரி.//

நன்றி சரவணக்குமார் பாராட்டுக்கும், வருகைக்கும்!!

எம்.எம்.அப்துல்லா said...

மூன்று சகோதரிகளுடன் பிறந்தவன். மூன்றாம் சகோதரிக்கு திருமணம் ஆனபோது எனக்கு வயது 7. பள்ளிக்கூடத்திற்கு சக தோழர்கள் அவர்களின் அக்காக்களோடு வரும்போது உண்மையைச் சொன்னால் சற்று பொறாமையாகவே இருக்கும்.அவர்களோடு வாழ்ந்த நினைவே பெரும்பாலும் எனக்கு இல்லை. எனக்கு இரண்டும் பெண்களாய் பிறந்த பின்னர்தான் அந்தக் குறை ஒரளவு நீங்கியது :)

Anonymous said...

உங்களுக்கு அண்ணன் இல்லேன்னு குறை. எனக்கு தம்பி இல்லயேன்னு குறை. பதிவுலகத்தில நிறைய தம்பிகள் இருக்காங்க.
நல்லா எழுதறீங்க.

உங்கள் தோழி கிருத்திகா said...

எங்களின் தேவைகளை எழுதிக்கொடுக்க, அதில் அம்மாவின் வீட்டோ பவரால் ரிஜெக்ட் செய்யப்பட்டது போக மீதி வாங்கி வரப்படும். //////////////////
எல்லா அம்மாவுமே இப்படித்தான்....ஆனா நாங்களும் வெவரமா உருப்படாத ஐட்டமா பாத்து கேப்போம்ல

ஃபைவ் ஸ்டார் (ஆளுக்குப்பாதி மட்டும்), ஒரு பாக்கெட் ஜெம்ஸ் (எண்ணி ரெண்டு அல்லது மூன்று மட்டும் ஒருவருக்கு) ஆகியவை அந்தக் கோபத்தைத் தணித்துவிடும்./////////
இப்படிதாங்க கவுப்பாங்க

சென்ஷி said...

இல்ல ஹூசைனம்மா.. நீங்க ரொம்ப இயல்பா எழுதியிருந்தீங்க. நானும் இந்தக் கூட்டத்துல ஒருத்தன் தானே. நான் திருந்தாம என்ன ஆறுதல் சொல்றது..!? அதான் வெறுமனே ஸ்மைலி போட்டுட்டேன்.

நல்லா எழுதியிருக்கீங்க.

SUFFIX said...

சரி விடுங்க, அதான் நல்ல தம்பியா நான் இருக்கேன்ல!! பேசுற மாதிரியே எழுதுறீங்க ஹுசைனம்மா, கீப் ஆன் கலக்கிங்க!!

S.A. நவாஸுதீன் said...

இயல்பான மொழியில் நல்லா எழுதியிருக்கீங்க சகோதரி.

அ.மு.செய்யது said...

// “அண்ணன் வரும் நேரம்”, “தம்பி பாத்தா தொலைஞ்சேன்”, “அண்ணனுக்குத் தெரிஞ்சா திட்டுவான்”//

உண்மை தான்..

ஆனா இப்பல்லாம் பெண் பிள்ளைகளுக்கு தான் அம்மாக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.ஆம்பள‌
பசங்கள எக்கேடாது கெட்டுப் போன்னு "வாட்டர் ஸ்பிரே" அடிச்சி விட்டுர்ராங்க.!!!

நாஸியா said...

cha indha transliteration olungave velai seiya matrukku...

romba nalla iruku sagodhari..i too share a similar experience with you.. transliteration work aanadhum share pannikren insha Allah

ஹுஸைனம்மா said...

//நாஸியா Says:
09/11/09 14:57

cha indha transliteration olungave velai seiya matrukku... //

Naasiya, try http://tamileditor.org/ for writing in tamil.

S.A. நவாஸுதீன் said...

நாஸியா said...
cha indha transliteration olungave velai seiya matrukku...

***********************************

http://software.nhm.in/

இதை Download பண்ணிக்குங்க நாஸியா.

Barari said...

sakothararkal illaatha kuraiyai thirumanaththirkku pirakaavathu unarntheerkale nallathumma.iyalbaana nadaiyil sirappaaka irunthathu.vazthukal.

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா Says:
08/11/09 22:26

மூன்று சகோதரிகளுடன் பிறந்தவன். ...அவர்களோடு வாழ்ந்த நினைவே பெரும்பாலும் எனக்கு இல்லை. எனக்கு இரண்டும் பெண்களாய் பிறந்த பின்னர்தான் அந்தக் குறை ஒரளவு நீங்கியது :)//


நன்றி அப்துல்லா; எனக்கு ரெண்டும் பையனா கொடுத்துட்டான் ஆண்டவன். சிலசமயம் சோதிச்சுட்டானோன்னு தோணும்!! ;-D

ஹுஸைனம்மா said...

//சின்ன அம்மிணி Says:
09/11/09 05:27

நல்லா எழுதறீங்க.//

வாங்க சின்ன அம்மிணி. பாராட்டுக்கு நன்றி.

//பதிவுலகத்தில நிறைய தம்பிகள் இருக்காங்க.//

அந்த தம்பிகள் அக்கான்னு கூப்பிட்டதால சுத்தின கொசுவத்திதான் இது!!

ஹுஸைனம்மா said...

//உங்கள் தோழி கிருத்திகா Says:
09/11/09 05:53

எல்லா அம்மாவுமே இப்படித்தான்....ஆனா நாங்களும் வெவரமா உருப்படாத ஐட்டமா பாத்து கேப்போம்ல

இப்படிதாங்க கவுப்பாங்க//

நன்றி முதல் மற்றும் தொடரப்போகும் வருகைக்கு, கிருத்திகா.

நானும் அம்மாவான பிறகு அப்படித்தான் இருக்கிறேனோ என்று சந்தேகம் வருகிறது அவ்வப்போது!!

ஹுஸைனம்மா said...

//சென்ஷி Says:
09/11/09 07:41

இல்ல ஹூசைனம்மா.. நீங்க ரொம்ப இயல்பா எழுதியிருந்தீங்க. நானும் இந்தக் கூட்டத்துல ஒருத்தன் தானே. நான் திருந்தாம என்ன ஆறுதல் சொல்றது..!? அதான் வெறுமனே ஸ்மைலி போட்டுட்டேன்.

நல்லா எழுதியிருக்கீங்க.//

அச்சச்சோ சென்ஷி, என்ன ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா ஆயிட்டீங்க? மூத்த பதிவரான (வயசுல இல்ல, வருத்தப்படாதீங்க) நீங்க அபிப்ராயம் ஒண்ணும் சொல்லாம, ஸ்மைலி மட்டும் போடறீங்களேன்னு அப்படிச் சொன்னேன்.

//நான் திருந்தாம என்ன ஆறுதல் சொல்றது..!? //

என்ன தப்பு பண்ணீங்க திருந்தறதுக்கு? பின்னூட்டம் போடுறதச் சொல்றீங்களா?

ஹுஸைனம்மா said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix Says:
09/11/09 09:40

சரி விடுங்க, அதான் நல்ல தம்பியா நான் இருக்கேன்ல!! பேசுற மாதிரியே எழுதுறீங்க ஹுசைனம்மா, கீப் ஆன் கலக்கிங்க!!//

நன்றி ஷஃபிக்ஸ்!! நீங்க ஒரு ஆளுதான் எனக்கு பெரிய அண்ணன்னு நினைச்சேன். உங்களுக்கும் எனக்கு தம்பியாக ஆசையா, நேரம்!!

ஹுஸைனம்மா said...

//S.A. நவாஸுதீன் Says:
09/11/09 10:04

இயல்பான மொழியில் நல்லா எழுதியிருக்கீங்க சகோதரி.//

நன்றி, நவாஸ். என்ன செய்ய, எனக்கு உங்களப் போல கவித வரமாட்டேங்குதே...

ஹுஸைனம்மா said...

அ.மு.செய்யது Says:
09/11/09 10:18

ஆனா இப்பல்லாம் பெண் பிள்ளைகளுக்கு தான் அம்மாக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.ஆம்பள‌
பசங்கள எக்கேடாது கெட்டுப் போன்னு "வாட்டர் ஸ்பிரே" அடிச்சி விட்டுர்ராங்க.!!!//

நன்றி செய்யது. பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் அதிக கவனம் செலுத்தும் காரணம் பயம். ஆண்பிள்ளைகள் சொன்னா எங்கே கேக்கறீங்க? அதான் ”வாட்டர் ஸ்பிரே”!!

ஹுஸைனம்மா said...

நாஸியா Says:
09/11/09 14:57

cha indha transliteration olungave velai seiya matrukku...

romba nalla iruku sagodhari..i too share a similar experience with you.. transliteration work aanadhum share pannikren insha Allah//

நன்றி நாஸியா. இப்ப தமிழ் எழுத வருதா இல்லையா?

ஹுஸைனம்மா said...

//Barari Says:
09/11/09 15:37

sakothararkal illaatha kuraiyai thirumanaththirkku pirakaavathu unarntheerkale nallathumma.iyalbaana nadaiyil sirappaaka irunthathu.vazthukal.//

நன்றி பராரி. (பெயர் சரிதானா?)

தராசு said...

நான் வேலை செய்யற இடத்துல, எல்லாருக்கும் ரக்ஷா பந்தன் அன்னைக்கு அவங்க அவங்க தங்கச்சிங்க ராக்கி அனுப்புவாங்க. அதை பார்த்தா பொறாமையா இருக்கும். சே, எனக்கும் ஒரு தங்கச்சி இருந்திருந்தா .......

ஹுஸைனம்மா said...

//தராசு Says:
10/11/09 15:14

நான் வேலை செய்யற இடத்துல, எல்லாருக்கும் ரக்ஷா பந்தன் அன்னைக்கு அவங்க அவங்க தங்கச்சிங்க ராக்கி அனுப்புவாங்க. அதை பார்த்தா பொறாமையா இருக்கும். சே, எனக்கும் ஒரு தங்கச்சி இருந்திருந்தா .......//

தராசு, ராக்கிதானே, நான் அனுப்பிவிடுறேன். ஆனா ராக்கி கட்டுற தங்கச்சிக்குப் பணம் கொடுக்கணும், அது தெரியுமா?

கபிலன் said...

"திருமணமாகிப் பல வருடம் கழித்து கணவரிடம் அவரது சகோதரியினைக் குறித்த எனது மனத்தாங்கலைக் கூற, “அதெல்லாம் கண்டுக்காதே” என்ற அவரின் பதிலைக் கேட்டபோது தோன்றியது, எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்திருக்கலாமே என்று!! "

எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடிச்சுட்டீங்க..சூப்பர்.

நீங்க சொல்றது நிஜம் தான். எல்லா அண்ணங்களும் இந்த விஷயத்துல இப்படி தான். என்ன தான் தங்கையை குறை கூறி மனைவி சொன்னாலும், யார் பக்கமும் சாயாமல், மனைவியையும் புன்படுத்தாமல், சொல்லக்கூடிய ஒரே பதில் “அதெல்லாம் கண்டுக்காதே”

Barari said...

ithu oru vilaiyaatu endru munbe solli vittaarkal.yarum yaraiyum alasi arainthu ethaiyum solvathillai manathil thondriyathai thaan solkiraarkal.ithai poi silar vivakaaramaii eduththu kondu vilakkam veru ketkiraarkal vilaiyaatai vilaiyaattaaka parkka theiyaathavarkal.anaanikalai patri kavalai padatheerkal sakothari.manathil pattathai thairiyamaaka ezuthavum.engal sakotharikal thairiyamaanavarkal endru perumai paduvom.

ஸாதிகா said...

அம்மாடி..இந்த ஹுசைனம்மா சகோதரர்களே இல்லை என்று கவலைப்படவே இல்லையே என்று நான் வியந்து கொண்டு உங்கள் பதிவை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்த போது கடைசியாக போட்டீங்களே ஒரு போடு!!!
உண்மையில் எழுத்து நடை அபாரம்.இன்னும்நிறைய இப்படி சுவாரஷ்யங்களை எதிர்பார்க்கின்றேன்.இன்னொரு முறை பிடியுங்கள் என் பாராட்டுக்களை

ஹுஸைனம்மா said...

//கபிலன் Says:
10/11/09 15:38

எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடிச்சுட்டீங்க..சூப்பர்.//

நன்றி கபிலன்.

//என்ன தான் தங்கையை குறை கூறி மனைவி சொன்னாலும், யார் பக்கமும் சாயாமல், மனைவியையும் புன்படுத்தாமல், சொல்லக்கூடிய ஒரே பதில் “அதெல்லாம் கண்டுக்காதே”//

ஆமாம், அவர்களுக்கு வேறு வழி?

ஹுஸைனம்மா said...

//Barari Says:
10/11/09 15:39

ithu oru vilaiyaatu endru munbe solli vittaarkal.....manathil pattathai thairiyamaaka ezuthavum.engal sakotharikal thairiyamaanavarkal endru perumai paduvom//

இது பத்துக்குப் பத்து பதிவுக்கான கருத்துதானே பராரி?
உண்மையே பராரி, விளையாட்டு சில சமயம் வினையாகி விடுவதைப் போல்தான் இதுவும். உங்களுடைய ஊக்கமளிக்கும் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் தமிழில் எழுத முயற்சி செய்யுங்களேன். http://tamileditor.org - இந்தத் தளம் எளிமையாக இருக்கும்.

ஹுஸைனம்மா said...

//ஸாதிகா Says:
10/11/09 15:44

...கடைசியாக போட்டீங்களே ஒரு போடு!!!
உண்மையில் எழுத்து நடை அபாரம்...இன்னொரு முறை பிடியுங்கள் என் பாராட்டுக்களை//

பாராட்டுக்கு நன்றி ஸாதிகா அக்கா. எப்பவுமே இல்லாததற்கு ஏங்குவதுதானே மனித இயல்பு. தொடர்ந்த வருகைக்கும் நன்றி அக்கா.

கிளியனூர் இஸ்மத் said...

பகிர்வு நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..எனக்கும் அண்ணன் இல்லையேன்னு ஒரு குறை இருந்தது...ஆனா இருக்கற தம்பியே அப்போப்போ அண்ணன் மாதிரி வேலை எல்லாம் செஞ்சதாலே :)) அந்த குறையே இல்ல..என்ன..அவன் தங்கை இருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைச்சுருப்பான்!! :)))

ஹுஸைனம்மா said...

//கிளியனூர் இஸ்மத் Says:
10/11/09 15:58

பகிர்வு நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றி இஸ்மத் அண்ணே. பதிவர் சுற்றுலாவில நீங்க பரிமாறின பிரியாணி, நீங்களே செஞ்சதா? (நீங்கதான் பிரியாணி டேஸ்டா செய்வீங்கன்னு கேள்விப்ப்ட்டேன்!!)

ஹுஸைனம்மா said...

//சந்தனமுல்லை Says:
10/11/09 16:03

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..//

நன்றி ஆச்சி!!

//அவன் தங்கை இருந்தா நல்லா இருந்திருக்கும்னு நினைச்சுருப்பான்!! :)))//

அந்தப்பாடு படுத்திட்டீங்களோ தம்பியை?

ஷாகுல் said...

//அதில் அம்மாவின் வீட்டோ பவரால் ரிஜெக்ட் செய்யப்பட்டது போக மீதி வாங்கி வரப்படும்.//

இது போல் தான் நான் பள்ளி செல்லும் போது 50 பைசாவுக்கு உருண்டு பிரண்டு அழுது வாங்குவேன். இதை பார்த்த பக்கத்து வீட்டு மாமி 50 பைசாதனே குடுமான்னு சொன்னதுக்கு. காசு குடுத்தா கெட்டு போய்டுவான் என்றார்கள் எங்க அம்மா. 50 பைசால எப்படி கெட்டு போறதுனு எனக்கு தெரியல. இது போல பல கண்டிப்புகள் அதை நின்னித்தால் இப்போதும் சிரிப்புதான் வருகிறது.

மற்றபடி நல்ல எழுதிருக்கீங்க. தொடருங்கள் அக்கா.

ஹுஸைனம்மா said...

//ஷாகுல் Says:
10/11/09 17:10

50 பைசால எப்படி கெட்டு போறதுனு எனக்கு தெரியல.//

அப்பல்லாம் 50 பைசாங்கிறது ரொம்பப் பெரிய தொகை ஷாஹுல். எங்களுக்கு அப்பப்ப கிடைக்கிற டிப்ஸே 5 அல்லது 10 பைசாதான்!!

//மற்றபடி நல்ல எழுதிருக்கீங்க.//

பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி.

//தொடருங்கள் அக்கா.//

இன்னொரு தம்பி!!

Sanjai Gandhi said...

உள்ளேன் அக்கா..

உங்களுக்கு அண்ணன் இல்லை என்ற குறை எதற்கு? தான் சென்ஷி இருக்கிறாரே..

ஹுஸைனம்மா said...

//SanjaiGandhi™ Says:
11/11/09 09:04

உள்ளேன் அக்கா..

உங்களுக்கு அண்ணன் இல்லை என்ற குறை எதற்கு? தான் சென்ஷி இருக்கிறாரே..//

வாங்க தம்பி!! உங்களுக்கு என்ன கோபம் சென்ஷியிடம்?

ஜீவன்பென்னி said...

" வாங்கிவரும் இரண்டு ஃபைவ் ஸ்டார் (ஆளுக்குப்பாதி மட்டும்), ஒரு பாக்கெட் ஜெம்ஸ் (எண்ணி ரெண்டு அல்லது மூன்று மட்டும் ஒருவருக்கு"

எங்க அம்மாவும் இப்புடித்தான்.(எனக்கு இரண்டு அண்ணன், நான் தான் கடைக்குட்டி)சகோதரியிலல்லாத குறை எனக்கு இருக்கு. உங்களுடைய எழுத்து நடை ரொம்ப நல்லாருக்கு.

ஹுஸைனம்மா said...

//ஜீவன்பென்னி Says:
11/11/09 15:14

... எங்க அம்மாவும் இப்புடித்தான்.(எனக்கு இரண்டு அண்ணன், நான் தான் கடைக்குட்டி)சகோதரியிலல்லாத குறை எனக்கு இருக்கு. உங்களுடைய எழுத்து நடை ரொம்ப நல்லாருக்கு.//

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி பென்னி. என்ன ஒற்றுமை பாருங்க, உங்க பிளாக்கையும் இன்னிக்குத்தான் தற்செயலா நான் பார்த்தேன். அதில் உங்க பேர் சமீர் அகமதுன்னு இருக்கு, ஆனா பதிவுல ஜீவன்பென்னின்னு போட்டிருக்குன்னு யோசிச்சேன்.

நாஸியா said...

innum illai.. Google Sorry kekudhu.. enna kodumai sar

cheena (சீனா) said...

இக்கரைக்கு அக்கரை பச்சை

வீட்டில் ஆண் குழந்தைகள் இல்லாத காரணத்தால் பெண்கள் அனைவரும் அண்ணன் இல்லையே என வருந்துகிறார்கள். இதே மாதிரித்தான் பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் அக்கா தங்கச்சி இல்லையே என வருத்தப்படுவார்கள்

ம்ம்ம் என்ன செய்வது

நல்வாழ்த்துகள்