இதன் முந்தையப் பகுதி இதோ இங்கே!!
அவள் அன்று வரவில்லையென்றதும், எனக்கு மீண்டும் அழுகை, அழுகையாக வந்தது. தோழிகளுக்கோ இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. பேனாதானே, நாளைக்கு வரும்போ தரப்போறா, இதுக்கேன் அலட்டிக்கிறே என்கிறமாதிரியே பேசினார்கள். நான் என் கையிலிருந்த சாதாரணப் பேனாவைக் கொடுக்காமல், ஹீரோ பேனாவை ஏன் கொடுத்தேன் என்று அப்போத்தான் நினைத்து நொந்துகொண்டேன்.
காலை இடைவேளையின்போது, ‘பி’ செக்ஷனில் அவளோடு வரும் இசக்கியம்மாளைத் தேடிப் போனேன். அவளுக்கும் அவள் வராததின் காரணம் தெரியவில்லை. நான் அவளிடம், மதியம் சாப்பிடப்போகும்போது ஆறுமுகத்தாயைப் பார்த்து என் பேனாவை வாங்கி வரும்படிச் சொன்னேன். அவள் ”அதுக்குலாம் நேரமிருக்காது. அவுங்கூடு வேற தெருவு. அந்நேரத்துக்கு எங்கூட்ல இருக்க ஒரு அஞ்சாறு வேலையள செஞ்சுட்டு, நாந்தின்னுட்டு ஓடியாரதுக்கே செரியாருக்கும்”னா. ”முடிஞ்சாப் பாரு, ப்ளீஸ், ப்ளீஸ்”ன்னு சொல்லிட்டு வந்தேன். சொன்னதுபோல, அவ வாங்கிட்டும் வரலை. இன்றும் எப்படிச் சமாளிப்பது? மாமூட்டு வாப்பா திட்டமாட்டாங்கதான், ஆனாலும் வாங்கிய பொருளைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்கணுமே. அதுவும் ஹீரோ பேனாவாச்சே??
மாலையில் பள்ளிவிட்டதும், இசக்கியம்மாளிடம் மிகக் கெஞ்சி, ஆறுமுகத்தாயின் வீட்டிலேயே போய்ப் பார்க்கலாமென்று. அவளோடேக் கிளம்பினேன். பள்ளியிலிருந்து கிளம்பி, எதிரேயுள்ள ஆஸ்பத்திரி கேட் வழியே சென்று, நேரே பின்பக்கம் வழியே வெளியே வந்து கொஞ்ச தூரம் போனால் அந்தக் குடிசைப் பகுதி வந்தது. உள்ளே சிறிது தூரம் சென்ற பிறகு, இசக்கி, “அந்தா அந்தத் தெருவுல போய், கடசில உள்ள சந்துல போனா, முனையில இருக்கதுதான் அவ வூடு. என் வூட்டுக்கு இந்தால போவணும். வாரேன்” என்று சொல்லி போயே விட்டாள்!!
எனக்குத் திக்கென்றது. பாவி இவள் கூடவருவான்னு நினைச்சில்லியா வந்தேன்; இப்படிப் பாதில விட்டுட்டுப் போறாளே; இதுல எங்க சந்து, எங்க முனைன்னு தேடுவேன்? பார்க்கவே பயமாருக்கே? அப்போவெல்லாம் படங்களில் ஜம்பு என்ற பெயருடைய ரவுடிகள் சேரியில்தான் அதிகம் இருப்பார்கள். அதெல்லாம் வேறே நினைவுக்கு வந்து தொலைந்தது. இதுபோன்ற குடிசைப் பகுதிகள் படங்களில் நல்ல அபிப்ராயம் தரும் வகையில் அமைவது அரிதே. இங்கே தனியாக நடக்கவும் நடுக்கமாக இருந்தது. ஆள் நடமாட்டமும் இல்லை.
யாரிடமாவது கேட்கலாம் என்றாலும், அவளின் பெயர்தான் தெரியுமே தவிர, அவள் வீட்டுப்பேரோ(?), பெற்றவர்கள் பெயரோ எதுவும் தெரியாது. என் ஊரில் என்னைத் தேடி வருபவர்களுக்கு என் பேரைச் சொன்னால் தெரியுமா? என் வீட்டுப் பெயர் சொன்னாத்தான் தெரியும் . அதிலும், வாப்பா வீட்டுப் பெயரைவிட, மாமூட்டுவாப்பாவின் பெயர் சொன்னால் உடனே அட்ரஸ் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஃபேமஸ் மாமூட்டுவாப்பா. அதுபோல ஆறுமுகத்தாய்க்கு வீட்டுப் பெயரெல்லாம் இருக்குமா? என்னென்னவோ யோசித்துக் கொண்டே சந்து, முனையெல்லாம் தாண்டி, அங்கு வாசலில் தலைசீவிக்கொண்டு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் ”ஆறுமுகத்தாய் வீடு எது” என்று மெதுவாக இழுத்தேன். அவர் “இந்தா கடசி வூடு. நீ ஆரு, அவகூடப் படிக்கப் பிள்ளையா?” என்று கேட்க, ஆமாவென்று தலையாட்டிக் கொண்டே அவசரமாக அந்த கடசி வீட்டு வாசலுக்கு ஓடினேன்.
எப்படிக் கூப்பிடுவது? கதவைத் தட்டலாம் என்றால், அந்தச் சின்னக்கதவு திறந்தேதான் இருந்தது. வீடும், தெருவைப் போலவே அமைதியாய் இருந்தது. வாசலுக்கு நேராக, சுவற்றில் ஒரு அலமாரித் தட்டு மாட்டப்பட்டு, அதில் சாமி படங்கள் இரண்டு, மூன்று வைக்கப்பட்டிருந்தன. சில நோட்டுத்தாள்கள் அதில் இறைந்து கிடந்தன. மெதுவாய் அவளைக் கூப்பிட்டேன். சத்தமாய்க் கூப்பிட்டால் ஜம்புவோ, ஜக்குவோ வந்துவிடக்கூடாதே!! அவளும், அவள் அம்மாவும் சேர்ந்தே வந்தார்கள். அப்பாடா என்றிருந்தது.
“ஏ ஆறுமுவம், உங்கூட்டாளிப் புள்ளயா இது?” அவள் பேசுமுன் அம்மாவே தொடர்ந்தார், “நீ பேனா வாங்கிட்டு வந்தேன்னு சொன்னியே, அந்தப் புள்ளயா?” அவள் தலையாட்டவும் என்னிடம் திரும்பி, “ரெண்டு நாளா அதத்தான் சொல்லிச்சொல்லி மாஞ்சுட்டிருக்கா ஆத்தா. பேனாவத் திருப்பி குடுக்கல, குடுக்கலன்னு ஒரே புலப்பம்தான். நீந்தான அவளுக்கு எப்பவும் நோட்டுலாம் கொடுப்பியாம். சொல்லுவா. அவ சமஞ்சுட்டா. ஒரு வாரமாவது வூட்டுல இருக்கணுல்ல. அத்தான் அவளுக்கு ஒரே வெசனம். ஆர்ட்டயாவது கொடுத்து வுடலான்னா, தீட்டுவூடு பாத்தியா, ஆரும் வரமாட்டாவ. என்ன செய்யன்னுட்டேயிருந்தா. நாந்தான் வரணுன்னு நெனச்சேன். நல்லவேள தாயி, நீயே வந்திட்ட.” என்றார்.
அப்போத்தான் அன்று அவள் ஏன் வரவில்லை, ஒருவேளை உடம்பு சரியில்லையோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்னையோ என்றெல்லாம் யோசிக்காதது என் நினைவுக்கு வந்தது. தலைகுனிந்து நின்றேன். என் பேனாவை மட்டுமே நினைத்துக் கவலைப்பட்டேனே!! அதுக்குள்ளே அவள், “உள்ர வா” என்று அழைக்க, நான் இன்னும் மருகி, “இல்லை, பரவால்லை; நேரமாச்சு” என்று மட்டும் சொல்லிவிட்டு, மேலே தொடரத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.
அதற்குள் அவளே, மாடத்திலிருந்த சாமி படத்தின் பின்னிருந்து பேனாவை எடுத்துத் தந்தாள். “அன்னிக்கு நான் தரதுக்குள்ள நீ போயிட்ட. மறுநா தரலான்னு நெனச்சிட்டிருந்தேன்” என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்க நான் அவசரமாக, “போறேன்” என்று ஒற்றை வார்த்தையில் விடைபெற்று வந்தேன்.
ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?
|
Tweet | |||
43 comments:
அப்போவெல்லாம் படங்களில் ஜம்பு என்ற பெயருடைய ரவுடிகள் சேரியில்தான் அதிகம் இருப்பார்கள்]]
ஹா ஹா ஹா - நிறைய தமிழ் படம் பார்த்த எஃப்க்ட்டு எங்க வந்து முட்டுது பாருங்க ...
அவ சமஞ்சுட்டா]]
எதிர்ப்பார்த்ததுதான் ...
ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?]]
அவங்க அவங்க வீட்ல நீங்க அந்த ரோட்ல
---------------
ஜோக்ஸ் அபார்ட் - சில சமயம் இப்படி நடக்கத்தான் செய்யும் ...
/////அவள் அன்று வரவில்லையென்றதும், எனக்கு மீண்டும் அழுகை, அழுகையாக வந்தது. ////////
என்ன இது சின்ன புள்ளத்தனமாவுல இருக்கு .
பதிவு கலக்கல் . தொடருங்கள் மீண்டும் வருவேன்
//அப்போவெல்லாம் படங்களில் ஜம்பு என்ற பெயருடைய ரவுடிகள் சேரியில்தான் அதிகம் இருப்பார்கள்//
ரொம்ப ரசித்தேன். ஆமா, அனேகமா ஆர்.எஸ். மனோகர் தான் முகத்தில் ஒரு வெட்டோடு, கழுத்தில் ஒரு ஸ்கார்ஃப், டைட் கோடு போட்ட பனியன், இழுத்து சொறுகிய லுங்கி, கைய்யில் ஒரு கத்தி, திருட்டு முழி இதான் காஸ்ட்யூம். :))
அந்த பொண்ணு உங்க நட்பை மதிச்சது மாதிரி நீங்க உங்க தாத்தாவை மதிச்சீங்க. அவ்ளோ தான். குழந்தைத்தனம் நிறைந்த ஒரு அருமையான நிகழ்வு.
அடடா!!! முடிவில் உருக்கம்!!
ஆமா, மிஸ்டர் ஜம்பு வந்தாரா :))
////அப்போவெல்லாம் படங்களில் ஜம்பு என்ற பெயருடைய ரவுடிகள் சேரியில்தான் அதிகம் இருப்பார்கள். அதெல்லாம் வேறே நினைவுக்கு வந்து தொலைந்தது. இதுபோன்ற குடிசைப் பகுதிகள் படங்களில் நல்ல அபிப்ராயம் தரும் வகையில் அமைவது அரிதே.////
ha,ha,ha,ha......படிச்சிட்டு ரொம்ப சிரிச்சேன்.
////ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?////
.....அங்கே சிரிக்க வைச்சிட்டு, இங்கே நெகிழ வைச்சிட்டீங்களே!
வீட்டுக்கே போய் வாங்கிவிட்டீர்கள்...
அப்பாடா தலை தப்பியது :))
//ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?//
நல்லா இருக்கு ஹூசைனம்மா, கடைசியில் ஒரு ஃபீலிங்க்ஸுடன், அழகாக முடித்திருக்கின்றீர்கள்.
நினைவுகளை பகிர்ந்த விதம் அழகு ஹுசைனம்மா.
///அப்போவெல்லாம் படங்களில் ஜம்பு என்ற பெயருடைய ரவுடிகள் சேரியில்தான் அதிகம் இருப்பார்கள்//
படத்தோட பாதிப்பு எங்கெல்லாம் இருக்குன்னு பாத்தீகளா.. ரொம்ப விவரமாத்தான் இருந்திருக்கீக..:))
அந்த மாதிரி ரவுடி யாரும் இருந்தாகன்னா என்பேர சொன்னாப்போதும் தலதெறிக்க ஓடிருவானுக... :)).
ஹீரோ பேனாவையும் உங்களையும் பிரிக்கமுடியாதுபோல...
நல்லாருந்தது ஹீரோ பேனா..
ஆஆஆஆ
எனக்கு வார்த்தையே வரலை.. உங்க அனுபவங்களை படிக்க ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் நிறைய இந்த மாதிரி எதிர்ப்பார்க்கிறோம்!
ரொம்ப அருமையா இருந்தது ஹீரோ பேனா. ஆறுமுகத்தாயை அதுக்கு அப்பறம் எப்போ பாத்தீங்க.. இப்போ எப்படி இருக்காங்க ஆறுமுகத்தாய்?...
//ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?//
ஆக வில்லி உங்க தோழியில்ல........
//எதிரேயுள்ள ஆஸ்பத்திரி கேட் வழியே சென்று, நேரே பின்பக்கம் வழியே வெளியே வந்து கொஞ்ச தூரம் போனால் அந்தக் குடிசைப் பகுதி வந்தது. உள்ளே சிறிது தூரம் சென்ற பிறகு, இசக்கி, “அந்தா அந்தத் தெருவுல போய், கடசில உள்ள சந்துல போனா, முனையில இருக்கதுதான் அவ வூடு///
இத்ற்கு மேல் விவரிக்க முடியாது...... அருமை...
ஹீரோ பேனா அனுபவக்கதை நல்லா இருந்தது....
நீங்க அந்த அளவு ஃபீல் பண்ண வேண்டாம்.. அந்த பேனா உங்களுடையது என்றால் நிச்சயம் உங்கள் நண்பிக்கு கொடுத்திருப்பீர்கள்..
ஹீசைனம்மா,
தாத்தாவிடம் வாங்கிய பேனாவை பத்திரமாய் திருப்பி கொடுக்க நினைக்கும் நீங்களும்,உங்களிட்ம் வாங்கிய பேனாவை எப்படியாவது பத்திரமாய் திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஆறுமுகத்தாயும்
ஒரே அலை வரிசை உள்ள குணம் உடையவர்கள்,
அதனால் தான் உங்களிடேயே நட்பு ஏற்ப்பட்டு இருக்கிறது.
இப்போது ஆறுமுகத்தாய் எப்படியிருக்கிறார்கள்?
ஹீரோ பேனா கடைசியில் ஹீரோயின் பேனா ஆகிவிட்டதே.
நல்ல பகிர்வு.
உண்மையை ஒத்துக்கொண்டது உங்களை உயர்த்தி காட்டுது.
ஹீரோ போனாவிற்கு பின்னால் உண்மையான உண்மை...இதுவும் பலரது வாழ்வில் நடந்து இருந்தாலும், அதனை சொல்லும் மனசு பலபேரிடம் இன்றும் இல்லை..நல்ல பகிர்வு...வாழ்த்துகள்...
எலோரும் கேட்கும் கேள்வியை தான் நான் கேட்குறேன்..
இப்போது ஆறுமுகத்தாய் எப்படியிருக்கிறார்கள்?
எப்பவாவது இப்போ சமீபதில் சந்தித்தீற்களா?
ரொம்ம்ம்ப நல்லாயிருக்கு ஹூஸைனம்மா.
நெகிழ வைத்த பதிவு ஹுஸைனம்மா.
ஹுசேன், அப்பாடா! உங்களுக்கு உங்க பென்னும் கிடைச்சுது, நல்ல பென் ஃப்ரெண்டும் கிடைச்சுட்டாங்க. ;) எனக்கும் கிட்டத்தட்ட இது போல ஒரு அனுபவம் நேர்ந்தது. அதனால் முடிவு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் இரவல் கொடுத்தது தோழியிடம் அல்ல. ;)
//ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?//
வயசு அப்படி.... காலம் அப்படி... உங்க மேல தப்பு இல்ல
வராத காரணம் நான் எதிர் பார்த்ததுதான். ஆனால்
//ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?//
இதை எதிர் பார்கல.
ரொம்ம்ம்ப நல்லாயிருக்கு ஹூஸைனம்மா.
சிலநேரங்களில் இப்படி ஆகிவிடுவதுண்டு.
நன்று.
அப்போ நான் யூகிச்சு முடிவுதான் கரெக்டா.!!
இதுலயும் தொடரும், முற்றும்ன்னெல்லாம் ஓண்ணும் போடலியே...
ஆறுமுகத்தாய் - 3, 4 ல்லாம் வந்துருமோ..?
நல்ல வார்த்தை கோர்வை... படிக்க சுவாரஸ்யம் குறையாமல் இருந்தது. தொடருங்கள்
negila vaitha pathivu. ungal melum tappilai
நல்லா எழுதியிருக்கீங்க ஹுசைனம்மா. சில சமயம் நாம் எதிர்பாராத நேரத்தில் இப்படி நடந்து விடும்.
முடிந்தால் இதை ஒரு குறும்படமாக எடுக்க முயற்சி செய்யுங்கள்.
ஜமால் - வாங்க; நன்றி. //எதிர்ப்பார்த்ததுதான் ...// இதெல்லாமா? ஆச்சர்யம்தான்!!
சங்கர் - வாங்க; நன்றி. தொடர்ந்து வாங்க.
அநன்யா - வாங்கப்பா. ஆமாப்பா, மனோகர்தான் பெரும்பாலும் ஜம்பு. தேங்காய் சீனிவாசன்கூட சிலசம்யம் சிரிப்பு ரவுடியா வருவார்!!
//குழந்தைத்தனம் நிறைந்த // பதிவைச் சொல்றீங்களா எழுதனவிதத்தைச் சொல்றீங்களா? ;-))
சைவக் கொத்ஸ் - நன்றிங்க. இல்லை, நல்லவேளை ஜம்புலாம் வரலை!!
மாதேவி - வாங்கப்பா. வீட்டுக்கேப் போய் வாங்கிட்டேன்!!
சித்ரா - வாங்க. நன்றிங்க. ஆமா, எனக்கு ரொம்பக் கூச்சமாப் போயிட்டுது!!
ராமலக்ஷ்மி அக்கா - வாங்கக்கா. நன்றிக்கா.
ஸ்டார்ஜன் - வாங்க; ஆமாங்க, இப்பப்போல வில்லன் ஸ்டைலா இருக்க மாட்டாப்லயே அப்ப!! ஹீரோ பேனாவைப் பிரிஞ்சு ரொம்ப வருஷமாச்சு. இப்ப எங்க, கையெழுத்து போடறதுக்கு மட்டுந்தான் பேனா எடுக்கிறது!!
என்னது ரவுடிகிட்ட உங்க பேரச் சொல்லவா? ஏன், நீங்கலாம் ஃபிரண்ட்ஸா?
நாஸியா - ஏன் இத்தன ஆ? நெறய எதிர்பாக்குறீங்களா? ரைட்டு, எழுதிருவோம். யாராவது திட்டுனா, நான் பொறுப்பில்ல!! :-))
மின்மினி - வாங்கப்பா. ஆறுமுகத்தாய் எங்கன்னு தெரியலப்பா.
இர்ஷாத் - வாங்க; அப்ப என் எண்ணங்கள்தான் வில்லியா?
நாடோடி - வாங்கப்பா. நன்றிங்க பாராட்டுக்கு.
ரிஷபன் சார் - வாங்க. கொடுத்திருப்பேனோ என்னவோ, இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன்!!
கோமதி அக்கா - வாங்கக்கா. பேரன் நலமா? ஆமாக்கா, நீங்க சொன்ன பிறகுதான் நானும் யோசிச்சேன். ஒரே அலைவரிசைதான்!!
தலைவன் - நன்றி.
அக்பர் - வாங்க. “ஹீரோயின் பேனா” - அட, இது நல்லாருக்கே!! நன்றி.
கீதா ஆச்சல் - வாங்கப்பா. ஆமாப்பா, இதேப் போல எல்லாருக்கும் அனுபவம் இருக்கும் நிச்சயமா.
மலரக்கா - வாங்க. எனக்கு மெயில் அனுப்பச் சொன்னேனே, அனுப்பலியே இன்னும்?
ஆதவன் - நன்றி ஆதவன். ரொம்ப சந்தோஷம்.
அமைதிச் சாரல் - வாங்கப்பா. நன்றி.
இமா - வாங்க; ஓ, சேம் பிளட், அதான் கேட்டீங்களா? பென் கிடைச்சது; பென் ஃப்ரண்டை மிஸ் பண்ணிட்டேன்.
அப்பாவி தங்ஸ் - வாங்கப்பா; ஆமாம்தான். ஆனாலும், எனக்கு என்னவோ ஒரு ஆதங்கம் அப்படி. நன்றிப்பா.
ஜெய்லானி - வாங்க. //வராத காரணம் நான் எதிர் பார்த்ததுதான்.// பாருங்க, ஆண்கள்தான் யூகிச்சுருக்கீங்க!!
கண்ணா - வாங்க. நீங்க முடிவை மட்டுந்தான் யூகிச்சீங்களா இல்லை காரணத்தையுமா? :-))
ஏங்க, இதுக்கு மேலயும் நான் தொடர்ந்தா அவ்ளோதான். இதுக்கே எல்லாரும் பொறுமையா இருந்தது பெரிய விஷயம்!! நன்றிங்க.
எல்.கே. - வாங்க; நன்றி!!
சின்ன அம்மிணி - வாங்கக்கா. நன்றி.
உழவன் - வாங்க; என்னை வெச்சு காமெடி எதுவும் இல்லியே? :-)))
இருந்தாலும், ரொம்ப நன்றி. இதைப் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.
அப்புறம் ஆறுமுகத்தாய்: நான் ஆறாம் வகுப்பு மட்டுமே அங்கு படித்தேன். பின் வேறு பள்ளிக்குப் போய்விட்டு, ஒன்பதாம் வகுப்பில் மீண்டும் வந்தபோது அவளும், இசக்கியும் அப்பள்ளியில் இல்லை. இம்முறை ஹாஸ்டலில் தங்கியிருந்ததால், எனக்கும் முன்போல் சுதந்திரமில்லை போய்ப் பார்க்க!! ஒருவித வருத்தமுண்டு எனக்கு எப்போதும், அவளோடு சரியான முறையில் நட்புகொண்டிருந்தால் அவள் தொடர்ந்து படித்திருப்பாளோ என்று!!
///ஹுஸைனம்மா said...
என்னது ரவுடிகிட்ட உங்க பேரச் சொல்லவா? ஏன், நீங்கலாம் ஃபிரண்ட்ஸா?//
ஆஹா.. பிளேட்டையே மாத்திப்புட்டாகளே.. கிளம்பிட்டாங்கய்யா.. அடிக்கிறதுக்கு முன்னாடி மீத எஸ்கேப்.
//ஹீரோ பேனாவை மட்டும் மதித்த நான் எங்கே, என்னை, நட்பை அதிகம் மதித்து சாமிப்படத்தின் பின் பத்திரமாக வைத்திருந்த அவள் எங்கே?//
மனநிறைவாய் இருக்கிறது.
தங்களைத் தாழ்த்திக் கூறிக் கொண்டாலும்
அறுமுகத்தாயின் நட்பை வெளிச்சமிட்டுக்
காட்ட உதவிய 'ஹீரோ'யின் பேனாவுக்கு
ஒரு ஓ!
என்க்கு ஆறுமுகதாயே தெரியாதுங்க..
என் பிளாக்கு பக்கம் நான் போறதே இல்லங்க..ஒங்க பதிவை பார்தபிறகுதான் மெயில் அனுப்பினேன்...
அப்பாடா ஒரு வழியா சஸ்பென்ஸ் என்னான்னு தெரிந்து கொண்டேன்,
இதே அனுபவம் ஒன்று எனக்கும் உண்டு
தமிழ்ரசி ஒரு மாட்டு கொட்டைகை உள்ள வீடு உள்ளே தெரியாம அவ கூட் போய் மாட்டி கொண்டேன்.
ஆனால் உள்ளே போனதும் எனக்கு கொடுத்த வரவேற்பு இருக்கு பாருஙக்ள்
அவ்வளவு நல்ல மனுசாட்கள்.
Post a Comment