ஹாஸ்பிட்டலில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவதற்காக ரிஸப்ஷனில் காத்திருந்தபோதுதான் அப்பெண்மணி என் கண்ணில் பட்டார். அப்படியே சகுந்தலா டீச்சர் போல இருந்தார். சகுந்தலா டீச்சராக இருக்குமோ என்று தோன்றினாலும், அவருக்கு இப்போது வயது எழுபதாவது ஆகியிருக்குமே, இவர் அப்போது பார்த்த டீச்சர் போலல்லவா இருக்கிறார் என்று தோன்றியது. நாலாவது வகுப்பின் கடைசி நாளில் ரேணுகா சொன்னாள், “அடுத்த வருஷம் 5-Aக்குப் போகக் கூடாதுன்னு ப்ரே பண்ணிக்கோ. 5-A கிளாஸ் டீச்சர் சகுந்தலா மிஸ் பயங்கர ஸ்ட்ரிக்ட் தெரியும்ல?”. தெரியும்தான். ஆனால், அவங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவே தெரியாது. சிலர் ஒரு பார்வை பார்த்தாலே நடுங்கிவிடுவோமே, அந்த டைப் அவங்க. டீச்சருக்கே இலக்கணமான கொண்டையும், எளிமையான தோற்றமுமாக, ஆனால் கண்களிலே கண்டிப்பும், அன்பும் ஒருசேர தெரியும்.
காலேஜ் நாட்களில் வழக்கம்போல பங்குபெற்ற ஒரு மகளிர் கலந்துரையாடலில் பங்குபெற பல கல்லூரி, பள்ளிகளிலிருந்து வந்திருந்தனர். ரேண்டமாகக் குழுக்கள் அமைத்தபோது என்னருகில் சகுந்தலா டீச்சர்!! அவ்வ்வ்வ்வ்வென்று அழுகைதான் வந்தது. அப்புறம் நான் ஒண்ணுமே பேசலை. அவங்க முன்னாடி என்னப் பேசறது? எங்கக் குழுவிலிருந்த, சென்னையிலிருந்து வந்த ஒரு பெண், ரொம்பத் தீவிர பெண்ணீயவாதி போல. குழந்தை பெறுவதற்கான உறுப்புகள் நமக்கு இருப்பதால் நாம்தான் குழந்தைகளுக்கு முழு பொறுப்பா எனச் சத்தமாகக் கேட்டதும், ‘அச்சச்சோ, என்ன இந்தம்மா, டீச்சர் முன்னாடி இப்படிலாம் பேசுது’ என்று ஒரு பதட்டம் வந்ததில், டீச்சர் அதற்குச் சொன்ன பதிலை நான் கவனிக்கவேயில்லை. ஆனால், அந்தக் கேள்வி பின்னர் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.
முன்பணம் கட்டிவிட்டதாக வாப்பா வந்து சொன்னதும், சிந்தனை தடைபட்டது. அடுத்தடுத்த பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று தொடர்ந்தன. அடுத்த நாள் மாலை ஐ.ஸி.யூ.வில் கண்விழித்தேன்.
சுற்றிப் பார்த்தால், ஏழெட்டுப் படுக்கைகள், எல்லாவற்றிலும் ஆட்களுடன். எல்லாருக்குமே கைகளில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. படுக்கைகளுக்கு நடுவில் திரைகள் இருந்தாலும், அவை மூடி வைக்கப் படவில்லை. எல்லாருமே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் நினைத்தேன். பின்னர்தான் நர்ஸ் சொன்னார், எல்லாருமே கோமாவில இருக்க பேஷண்டுகளாம். ஒருவித பயம் வந்தது. ”என்னை எப்ப ரூமுக்குக் ’கொண்டு’ போவீங்க?”ன்னு கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ”ஒரு நாள் மட்டும் அப்ஸர்வேஷன்ல வச்சுட்டு நாளைக்கு சாயங்காலம் போயிடலாம், சரியா? என்றார்.
சரியில்லைன்னாலும், எழுஞ்சு ஓடியாப் போகமுடியும்? தூங்கிய நேரம் போக மீதி நேரம் மற்றவர்களை வேடிக்கைப் பார்த்தேன். பெரும்பாலும் வயதானவர்கள்தானாம். சிகிச்சைகள் காரணமாகவோ, முதுமை காரணமாகவோ நினைவிழந்தவர்களாம். சிலர் நாட்கணக்கில், சிலர் மாதக் கணக்கில், ’அதோ அந்தக் கடைசி பெட்டில் உள்ள கேஸ் வந்து ஒரு வருஷமாச்சு’ என்று ஒருவர்.
அங்கே இருந்த இரண்டு நர்ஸ்களுக்கும் ஒரு ‘பேசும் கேஸ்’ வந்தது மகிழ்ச்சியே என்று அவர்கள் என்னோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததில் புரிந்தது. அவ்வப்போது இப்படியொரு கேஸ் வந்துபோகுமாம். ஜுனியர் (ட்ரெயினிங்) டாக்டர்கள் சலிக்காமல் சந்தேகங்களுக்குப் பதில் சொன்னார்கள். ரவுண்ட்ஸ் வந்த சீனியர்கள், ‘எவ்ரிதிங் ஓகே?” என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டு நடந்து(ஓடிக்)கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து, செவிலியர் இருவரும் ஒவ்வொரு நோயாளியாகச் சென்று, டெம்ப்ரேச்சர், பிபி, இன்னபிற செக் செய்து எழுத ஆரம்பித்தார்கள். அதில் ஒரு பரிசோதனை, நோயாளிகளின் மூடிய விழிகளைத் திறந்து, டார்ச் அடித்து, அதற்கு அவர்களின் ரெஸ்பான்ஸைப் பதியவெண்டும். இதற்குத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள். நினைவிழந்தவர்களுக்கு கண்முன் உள்ள ஒளிவெள்ளம் எப்படித் தெரியும்? அதற்காகப் பலமுறை அவர்களை எழுப்புவதுபோலத் தட்டி, அதற்கும் பதிலில்லை என்றால், ஓங்கி அடிப்பதும்.... இப்படியே தொடர்ந்தது. பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒரு மூதாட்டி எதற்குமே அசையவில்லை. சட்டென்று அவர் கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த ஊசியை அழுத்த, அவர் உடனே வலியின் அதிர்வில் கண்திறந்து அகல விரித்தார். பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ச்சியில் அய்யோவென அலற, அவசரமாக நர்ஸ் திரையை இழுத்து மூடினார்.
சகலமும் கலங்கிப் போனது எனக்கு. அப்படியே தூங்கிப் போனேன். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது நர்ஸ்கள் இருவரும் மீண்டும் அனைவருக்கும் மூக்கு அல்லது வாய் வழியே குழாய் மூலம் திரவ உணவு கொடுத்து, வயிற்றை அமுக்கிக் கழிவுகள் நீக்கி, சுத்தம் செய்து, உடலைத் துடைத்து, உடை மாற்றி, படுக்கைப் புண் வராமல் இருக்க முதுகில் யுடிகோலன் தேய்த்து விடுவதுமாக பிஸியாக இருந்தனர்.அவர்களின் கஷ்டங்களைப் பார்த்ததும் புரிந்தது, ஏன் ‘பேசும் கேஸ்கள்’ அவர்களுக்கு மகிழ்வைத் தருகின்றன என்று.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை யாரோ பார்ப்பதுபோல இருந்தது. திரும்பினால், எதிர்ப் படுக்கையில் இருந்த ஆண் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐம்பது வயதிருக்கும். கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும், லேசாகச் சிரித்தேன். பேசினால் நேரம் போகுமே? எவ்வளவு நேரம்தான் நர்ஸ்களையே தொணதொணப்பது? அவர் பதிலுக்கு சிரிக்கவில்லை. ஆனால், பார்த்துக் கொண்டேயிருந்தார். இதென்னடா வம்பு? ஐ.ஸி.யூ. விலயுமா இப்படி இருப்பாங்கன்னு தோணுச்சு. சரி, அவருக்கு என்ன கஷ்டமோன்னு நினைச்சு, மறுபடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
மறுநாள் காலையில் விழிக்கும்போதே எதிர்ப் படுக்கையின் திரை மூடப்பட்டிருந்தது. அங்கிருந்து பேச்சுச் சத்தமும் வந்தது. சன்னமான பெண் குரல். “கேட்டீங்களா... அவன் ஊருக்குப் போயிருக்கான். ரெண்டு நாளாகும் வர. லதாவுக்கு அடுத்த வாரம் பரீட்சை. அப்புறம் ப்ராஜக்ட் பண்ணனும்னு சொன்னா. நீங்க இருந்தா என்ன செய்யலாம்னு சொல்லிருப்பீங்க. சரி, இப்ப என்ன எல்லாம் சரியானதும் வீட்டுக்கு வந்துடப் போறீங்க.... “ இந்த ரீதியில் போன பேச்சில் இருந்து புரிந்தது, பேசுவது அவரின் மனைவி என்று. சிறிது நேரம் கழித்து திரை விலக்கி அப்பெண் வெளியில் வந்தார். அதே பெண்!! சகுந்தலா டீச்சர் போலவே இருந்தாரே, அவரேதான்.
எதிர்ப் படுக்கைக்காரரின் நெற்றியில் விபூதி, குங்குமமும், தலையில் எண்ணெய் மினுமினுப்பும் தெரிந்தது. அப்போத்தான் உறைத்தது, அவங்கதானே பேசிகிட்டே இருந்தாங்க, இவர் ஒண்ணுமே பதில் சொல்லலையே; ஒருவேளை பேச்சு வராதோ? ஊசிபோட வந்த நர்ஸிடம் கேட்க, “ ஆக்ஸிடண்ட் கேஸ். அவரும் கோமாலதான் இருக்கார். கண்ணு மட்டும் சில சமயம் திறந்து பார்ப்பார். அஞ்சு மாசமாச்சு. அவங்க வைஃப் தினம் வந்து அரைமணிநேரம் அவர்கிட்ட உக்காந்து பேசுவாங்க. வீட்டுல நடக்கிறதெல்லாம் சொல்வாங்க. அவருக்கு எதுவுமே புரியாதுன்னு தெரியும். ஆனாலும், அவங்களுக்கு நம்பிக்கையா, இல்லை அவர்மேல பாசமோ. எதுவோ ஒண்ணு, மருந்துல குணமாகாதது, இதிலயாவது ஆகட்டுமே?”
மூன்று மாதம் கழித்து செக்-அப்புக்குச் சென்றபோதும், வரவேற்பறையின் இருக்கையில் அதே பெண், சகுந்தலா டீச்சர் போல இருந்தாரே, அவர் அமர்ந்திருந்தார்.
|
Tweet | |||
42 comments:
என்னதான் இருந்தாலும், ஊசியை அழுத்தி உணர்வை சோதிப்பதெல்லாம் பயங்கரமா இருக்கு :-(
நிச்சயமா நம்பிக்கை தான் வாழ்க்கை.
இப்படி மாதக்கணக்கில் நினைவில்லாமல் இருப்பவர்களை எப்படி பாதுகாப்பது? அவர்களுக்கு ஞாபகம் திரும்புமா? எவ்வளவு செலவு ஆகும்? குடும்பத்தை யார் கவனிப்பார்கள்? எதிர்காலம் என்ன ஆகும்?
என்னுடைய நண்பரின் மாப்பிள்ளை இது மாதிரி நினைவில்லாமல் 100 நாட்களாக இருக்கிறார். இந்தக் கேள்விகள் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கின்றன. விடை எப்போது கிடைக்குமோ?
மனது கனக்கின்றது பதிவை படித்த பின்.....அதே நேரம் மனதில் ஒரு வித பயமும் வருகிறது...........அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சா வழி ஆண்கள் இந்தியா வந்து பெண் தேடுவது சகுந்தாலா மேடம் போன்ற பெண்ணைத் தேடிதான். உங்கள் பதிவை படிக்கும் அனைவரும் சகுந்தலா மேடம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
:(((
arumaiya irukku aanaa athae samayam manasukku romba varuthamaa irukku...sila kaelvigalukku bathil... nambikkai thaan...
Reva
இந்த மாதிரி நோயாளிகள், மருத்துவ மனைக்கு வரும் மனிதர்களின் நிலைமைகள் பற்றிய அனுபவங்கள் எனக்கு உண்டு. மிகவும் கொடுமையானது. பகிர்வுக்கு நன்றி.
//சட்டென்று அவர் கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த ஊசியை அழுத்த, அவர் உடனே வலியின் அதிர்வில் கண்திறந்து அகல விரித்தார். பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ச்சியில் //
படித்துக் கொண்டிருக்கும் எனக்கும் அதே அதிர்ச்சி..
படிக்கும் போதே ஒரு வித கவலை சூழ்ந்து கொள்கிறது. அமெரிக்காவில் பல வருடங்களாக கோமாவில் இருந்த பெண்ணை அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின்னர் ( உயிரைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதால் நிறைய இழுபறி நடந்தது ) அவரின் life support ஐ நீக்கினார்கள். என்னத்தை சொல்ல? இருக்கும் வரை நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு அடிக்கடி நினைப்பதுண்டு.
படிக்கும்போதே "பக்" னு இருக்கு...
நோய் நொடி இல்லாம இருப்பதே பெரியவரம்தான்:(
நீங்க என்ன லேபிள் போட? என்று சொன்னதில் இன்னும் கலங்கிப்போயிடுச்சு மனசு.
என்னோட பாஸ் மனைவியும் (அவங்க டாக்டர்) கிட்டத்தட்ட 1 1/2 வருஷம் கோமாவுல இருந்து இறந்துட்டாங்க. அவரும் இப்படித்தான் வாரா வாரம் போய் பேசிட்டு வருவார். என்ன ஒரு கொடுமைன்னா உயிரோட இருக்கும்போது ரெண்டுபேரும் பேசிக்கிட்டது குறைவு. :(
நம்பிக்கையே வாழ்க்கை.... உண்மைதான்!
உங்கள் எழுத்து ஊசியின் மூலம் அனைத்து உணர்வுகளின் வலியையும் எங்களிடமும் பரவ விட்டுவிடுகிறீர்கள்.
அனைவரும் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். (அதை தவிர நம் கையில் என்ன இருக்கிறது)
சம்பவங்களை நுட்பமாக உணர்த்தும் உங்கள் எழுத்து திறன் மிக அருமை.
நெகிழவைத்த கதை. நம்பிக்கைதான் எல்லாத்துக்கும் ஆணிவேர். நல்லாருக்கு ஹூசைனம்மா.
படிக்கும் போதே மனம் கனக்கிறது ஹுசைனம்மா. என்னவென்று சொல்வது. இதே மாதிரிதான் எங்க பெரியம்மா ("முஸ்லிம்முரசு" ஆசிரியராக இருந்த, செய்யது முஹம்மது - "ஹசன்"- என்ற புனைப்பெயரில் எழுதியது எங்க பெரியவாப்பா) கோமாவில் இருந்து தான் மரணித்தார்கள். அடுத்த இரண்டு வருடம் கழித்து பெரிய வாப்பாவும் மரணித்தார்கள். கோமா என்றவுடன் எங்க பெரியம்மா நினைவு தான் சட்டென்று வருகிறது.
ஓ! உங்க ஐஞ்சாப்பு டீச்சர் பேரும் சகுந்தலாவா..எனக்கும் ஒரு டெர்ரர் டீச்சர் ஐஞ்சாப்புல, அவுங்க பேரும் சகுந்தலா தான்...ஒரு வேலை அந்த பெயரு வச்ச டீச்சர் எல்லாம் டெர்ரரோ?... (டவுட்)...
ஜோக்ஸ் அபார்ட், நம்பிக்கை தான் வாழ்க்கைங்கிறத அழகா சொல்லி இருக்கீங்க. குட் ஒன்.
நம்பிக்கைதானே எல்லாம். இருந்தாலும் இந்த மாதிரி நினைவில்லாமல் இருப்பவர்களைப் பார்க்கும்போது துயரம் வந்து அனத்தி எடுக்கிறது. எதிர்காலமே கேள்விக்குறி.
ஹாஸ்பிட்டல் அனுபவமே வாழ்க்கைக்கான தத்துவத்தை புரிய வைத்துவிடும். மனதைரியம் உள்ளவர்களால்தான் இது போல் கோமா பேஷண்ட்ஸ் கூட காலம் கழிக்க முடியும். காரணம் அவர்கள்,’முடியுமா? முடியாதா?’ங்குற நிலையில் இருப்பவர்கள்.
இப்படிப்பட்ட அனுபவங்களையும் பதிய முடியும் என்று காட்டிவிட்டீர்கள்.
ICU பத்தி சொல்லாதீங்க. அயித்தானோட அண்ணனை அங்க வெச்சிருந்தப்ப மாமாவுக்கு மத்தவங்களை பாத்து பயந்திடக்கூடாதுன்னு கண்ணுல ப்ளாஸ்டர் போட்டு வெச்சதுலயே மாமா பயந்திருபாருன்னு நினைக்கிறேன். அயித்தான் போய் கையைத் தொட்ட போது பட்டுன்னு பிடிச்சுகிட்டாரு!!! அவர் போய் சேர்ந்தது ஐசியூவாலத்தான்னு நான் நம்பறேன்.
//DrPKandaswamyPhD said...
இந்தக் கேள்விகள் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கின்றன. விடை எப்போது கிடைக்குமோ//
நிஜமா எனக்கும் இந்தக் கேள்விகள் இப்பவும் இருக்கு ஸார். அங்க இருந்தவங்க பெரும்பாலும் வயசானவங்க, பணக்காரங்க. அதனால ஹாஸ்பிடல் பில் கட்டி வக்கமுடியுது. ஆனா, சாமான்யர்கள்? அதுவும் சம்பாதிக்கிற உறுப்பினருகு இப்படி ஆனா என்ன செய்வாங்கன்னு மனசு அரிக்குது.
உங்க நண்பரின் மருமகனுக்கு இன்னும் குணமடையவில்லை என்பது அறிந்து வருத்தம். பிரார்த்திக்கிறேன்.
//Avargal Unmaigal said...
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சா வழி ஆண்கள் இந்தியா வந்து பெண் தேடுவது சகுந்தாலா மேடம் போன்ற பெண்ணைத் தேடிதான்.//
எந்த மாதிரி பெண்/ஆணாக இருந்தாலும், இம்மாதிரி நிலையிலுள்ள துணைக்காக வருந்தவே செய்வர். நன்றி கருத்துக்கு.
அமைதிக்கா, அவங்க அப்படி பரிசோதிக்கிறதுக்கு ஒரு காரணம் சொன்னாங்க. அதாவது அவங்க ரெஸ்பான்ஸ் லெவல்/ tolerance - இந்த மாதிரி ஒரு காரணம் சொன்னாங்க. இருந்தாலும் பயமாத்தான் இருந்துச்சு.
தூயவன் - வாங்க, ஆமாங்க இன்னிக்கில்லாட்டாலும் என்னிக்காவது ஒருநாள்னுதானே ஒட்டுது வாழ்க்கை.
வல்லி மேடம் - வாங்க, பயமுறுத்திட்டேனா?
காரசாரம் - வாங்க, நன்றி.
கோவை2தில்லி - உங்க அனுபவங்களையும் எழுதுங்களேன். நன்றி.
ரிஷபன் ஸார் - ஆமா ஸார், அந்த நிலைமை வரக்கூடாது.
வானதி - கருணைக் கொலை என்பது எப்பவுமே சர்ச்சைக்க்ரியதாகவே இருக்கு. வெளியே இருந்து நாம ஆயிரம் சொன்னாலும், அவங்க (பராமரிகிறவங்க) நிலையில் இருந்து பார்த்தா கொடுமைதான். ஆனாலும்,...
பிரதாப் - நிச்சயமா, எது இல்லைன்னாலும், ஆரோக்கியம்தான் பெரிய வரம். எல்லா ஆட்டமும் நோய் வரும்வரைதான்.
அமித்தம்மா - எல்லாருக்குமே யாராவது இப்படி ஒரு தெரிஞ்சவங்களுக்கு உடல்நலமில்லாததைப் பார்த்த அனுபவம் இருக்குது. அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்வேன் இதையெல்லாம்.
சித்ரா - வாங்க. நன்றி.
ஸ்டார்ஜன் - ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கை.
அக்பர் - பல சமயங்களில் பிரார்த்தனையும், அது தரும் நம்பிக்கையும்தான் வாழ்க்கையைச் செலுத்துகிறது இல்லையா.
அப்துல்காதர் - இன்னொருத்தங்க நினைவுக்கு வராங்க காதர். ஒரு அம்மா, ஏழெட்டு வருஷம் படுக்கையில் இருந்தாங்க. சுயநினைவு உண்டு, ஆனா கைகால் பாரிசம். எந்த நேரமும் திட்டு, வசவுதான் வீட்டுல இருக்கவங்களை. நாமபோனா அழுவாங்க. இப்ப இல்லை அவங்க.
இன்னொருத்தங்க அதே போல 16 வருஷம் - ஆமா 16 வருஷம் படுக்கையில இருந்தாங்க. அவங்க இறந்தப்போ அவங்க பேத்தி (தாயில்லாதவள் - 16 வயசு) தரையில் உருண்டு புரண்டு அழுதாளாம். ஜனாஸாக்குப் போன எங்க அம்மா பாத்துட்டு வந்து ஆச்சரியமாச் சொன்னாங்க. நானெல்லாம் என்ன செய்வேன்னு பயமாருக்கு.
முகுந்த் அம்மா - சகுந்தலா நல்ல பேர். அவங்களைத் தவிர வேற யாரையும் அந்தப் பேர்ல சந்திக்காத்தால், அவங்க மட்டும்தான் என் நினைவில். ரொம்ப ஸ்ட்ரிக்ட்தான், ஆனா அவங்க கிளாஸ்ல பையன்களும் அடங்கி இருப்பாங்கங்கிறதனால ரொம்பப் பிடிக்கும்!!
வெங்கட் சார் - நிஜம்தான் சார்.
நானானி மேடம் - ஆமா மேடம்; ஒருமுறை குமுதம் இதழில், சின்னச் சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் புலம்புபவர்கள் ஒருமுறை சென்னை அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பகுதிக்குப் போய்ப் பார்த்து வரவேண்டும்னு அதப் பத்தி எழுடியிருந்தாங்க. அய்யோ, நினைச்சாலே நடுங்குது. தீக்குளிக்கிறவங்களைப் பாத்தா ஆச்சர்யமாருக்கும், என்னா தைரியம்னு. கொடுமை.
தென்றல் - கண்ணை மூடி வச்சாங்களா? அது இன்னும் பயமால்ல இருக்கும்? அய்யோ.. கண்ணைத் திறந்துட்டு இருக்கும்போதே திக் திக்னு இருந்துது, ராத்திரிலாம் கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு இருந்தேன்.
பதிவை படித்ததும் மனம் கனமானது.:-((
இது நிஜம்மான அனுப்வமா இருந்தாலும் எழுதிய விதம் எனக்கு ஒரு நல்ல சிறுகதைய வாசிச்ச மாதிரி இருக்கு ஹுசைனம்மா..
:((
ஹுஸைனம்மா....
பதிவை படித்ததும் மனது கனத்து விட்டது...
இது போன்று நிகழ்வுகள் பலரின் வாழ்க்கையில் கண்டதுண்டு...
இப்படி இருப்போரின் மருத்துவ செலவை எப்படி சமாளிப்பார்கள்? அவரின் குடும்பத்தை யார் கவனிப்பர்!!?
இதையே தான் முன்னர் இப்படி சொன்னார்கள் - நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்...
நெகிழவைத்து விட்டது ஹுசைனம்மா.நம்பிக்கைதான் மருந்து என்பது எவ்வளவு உண்மை
நம்பிக்கை மட்டுமல்ல...பயங்கரப் பொறுமையும் கூட...ஒரு மாதத்திலேயே 'கருணைக் கொலை' பற்றிப் பேசும் நபர்களை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
வித்தியாசமான ஆனால் மனதை கனக்க வைக்கும் பதிவு! மருத்துவமனை அனுபவங்கள் எப்போதுமே சோகங்கள்தான் சிலரது கொடிய அனுபவங்களைப்பார்க்கும்போது நம்முடைய துன்பம் ஒன்றுமே இல்லையென்று தோன்றும்.
'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரி அவர்களுக்கு,
சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.
முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
முன்னா பாய் படத்துல ஒரு கோமா மன நோயாளியை நார்மலுக்கு கொண்டு வருவாரே அது ஞாபகம் வந்தது... ப்ச்...உண்மையில் அப்படி இருந்துட்டா நல்லதுதான். ஆனால் அந்தளவு சிரத்தையுடனும் பொறுமையுடனும் கவனித்துக்கொள்ள யாரிருக்கா இப்ப... ‘என்ன லேபிள் போட’ங்கற மாதிரி, என்ன சொல்ல, ஒரு வேளை அந்த டீச்சரம்மா பொண்ணோ?
உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்
தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.
http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.html
//அதே பெண், சகுந்தலா டீச்சர் போல இருந்தாரே, அவர் அமர்ந்திருந்தார்.//
நம்பிக்கைத்தானே வாழ்க்கையை நகர்த்த உதவும் சக்கரம்.. அருமையான பதிவு
நம்பிக்கைதான் வாழ்க்கை .ஆரோக்கியமான வாழ்க்கை இருந்தால் போது மற்றதெல்லாம் தானே பின்னே வரும்.
வழக்கமான கருத்துள்ள பதிவு. ஆனாலும் மனதைக் க்வரக் கூடிய கவலை செய்யக்கூடிய பதிவு.
இதை போன்ற இடங்களுக்கு மனிதன் சென்று வருவானேயானால் (நலம் விசாரிப்பதற்கு) அவனுக்கு இறைவனின் மேல் உள்ள பயம் அதிகரித்து தவறு செய்ய நினைக்கும் போது, த்டுத்து நிறுத்த உதவியாக இருக்கும்.
உண்மையிலேயே இதை போன்ற செவிலியர்களும், மருத்துவர்களும் இருப்பதை பார்க்கும் போது மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் உள்ள பொதுவான தவறான கருத்து தவறு என்று நினைக்கத் தோன்றுகிறது.
அம்பிகா
முத்தக்கா
வித்யா
ஆர்.கோபி
ஸாதிகாக்கா
ஸ்ரீராம் - ஆமாம் சார், அப்படியொரு நிலை வந்துவிட்டால், நம்பிக்கை, பொறுமை எல்லாம் மிக அதிக அளவு வேண்டும் - நோயாளியைவிட, அவர்களின் உறவினர்களுக்கு!!
மனோக்கா
ஆஷிக்
அன்னு
ஆமினா (நன்றி)
கவிதை காதலன்
கோமாக்கா
அபுநிஹான் - அதனால்தான், நோயுற்றவர்களை நலம் விசாரிப்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்படுகிறது போல!!
அனைவருக்கும் நன்றி, கருத்திற்கும், வருகைக்கும்!!
Post a Comment