சிநேகிதன் அக்பர் ஒரு கொசுவத்திச் சுத்தக் கூப்பிட்டிருந்தார்; எல்லாம் ரெடி பண்ணிட்டு வர இவ்ளோ நாளாகிட்டுது. தடங்கலுக்கு வருந்துகிறேன்!!
இந்த “தடங்கலுக்கு..”ங்கிற வார்த்தையைப் பாத்தாலே நினைவுக்கு வர்றது.. அதேதான்... தூர்தர்ஷன்தான்!!
ஊர்ல அங்கொண்ணு, இங்கொண்ணா இருந்த ஒயிட்&பிளாக் டிவிகளுக்கு மத்தியில, சவூதில இருந்து, 1984-ல எங்க வாப்பா அனுப்பிவிட்ட 21-இஞ்ச் ஸோனி கலர் டிவியினால, தெருவில எங்க வீட்டுக்கு ஒரு தனி அந்தஸ்தே கிடைச்சுது!! அதுவரை, ஆஃப்டர் ஆல் ஒரு ஒயிட்&பிளாக் டிவியை வச்சுகிட்டு எங்க தெருவிலயே ‘டிவி இருக்கும் ஒரே வீடு’ என்ற பெருமையை பெற்றிருந்த அந்த வீடு, எங்க கலர் டிவி, அதுவும் ஃபாரின் டிவியால் டிபாஸிட் இழந்தது. எங்கள் வீடோ, கலைஞர் இலவச கலர் டிவியால் மீள்வெற்றி பெற்றதைப் போல, ”லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலர் டிவியோட வந்தோம்ல” என்று டிவியால் புதுப்பெருமை பெற்று, புளகாங்கிதமடைந்தோம், அதனால் வரப்போகும் விபரீதங்களை அறியாமல்!!
அதிலும், அந்த ஒயிட்&பிளாக் டிவியில் “ஒளியும் ஒலியும்”க்கு 10 பைசா, ஞாயிற்றுக்கிழமை படத்துக்கு நாலணா கட்டணம் அந்த வீட்டில்; எங்கள் வீட்டிலோ, கலைஞர் பாணியில் “எல்லாமே இலவசம்”!! கேட்கணுமா கூட்டத்துக்கு? மக்கள்ஸ் பக்கத்து தெருவில் இருந்து உறவினர்களையெல்லாம் அழைத்து வந்தார்கள். எத்தனை பேர் வந்ந்தாலும் ஃபிரீதானே? ஆரம்ப மாதங்களில், கோயில் போல, திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என்று கூட்டம் வரத் தொடங்கியது!! ஆரம்பப் பெருமை அகன்று, கூட்டம் கூடுவதின் சிரமங்கள் தெரிய ஆரம்பித்தது. எனக்கோ படிக்க முடியவில்லை என்று வருத்தம். பின்ன, இப்பப்போல ஸ்டடி ரூம் உள்ள வீடா என்ன? ஒரே அறை, அதுதான் ஹால், படுக்கை அறை, டைனிங் ரும், ஸ்டடி ரூம் என்று ஆல்-இன் ஆல்!! அடுத்துள்ள கிச்சனிலிருந்து படித்தாலும், சத்தம் கேட்டுத் தொலைக்கும்!! இப்பத்தான் “அந்த” வீட்டில் ஏன் கட்டணம் வசூலித்தார்கள் என்று புரிந்தது. அப்ப உலகக் கோப்பை கிரிக்கெட் வேறு நடந்தது. (இந்தியா வென்றது என்ற ஞாபகம்). அதைப் பார்க்க ஆண்கள் கூட்டம் வேறு!!
நாங்களோ எதுவும் செய்ய முடியாமல் முழித்தோம். பிறகு மெல்ல மெல்ல நேரக் கொள்கை வகுத்து, புரிய வைத்து... வீடுகளில் டிவிக்கள் பெருக ஆரம்பித்ததும், நாங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்!!
டிவியால் சிரமங்கள் வந்தாலும், டிவி நிகழ்ச்சிகள் அலுக்கவில்லை. அதுவும் அப்போதெல்லாம், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். மற்ற நேரங்களில் டெல்லி ப்ரோக்ராம்கள்தான்!! அதைப் பார்த்து, பார்த்தே நான் எல்.கே.ஜி.ல படிச்சு மறந்துபோன ஹிந்தியை மீட்டெடுத்துட்டேன்னா பாத்துக்கோங்க எப்படி டிவி பாத்திருப்பேன்னு!! (சிரிக்கக்கூடாது. நான் எல்.கே.ஜி. படிச்சது டெல்லியிலயாக்கும்!!)
டிவி எனக்கு ஒரு நல்ல ஆசானா இருந்தது. அப்போவெல்லாம் நான் புதிய, அரிய விஷயங்கள் தெரிந்துகொண்டது பத்திரிகைகள் மூலம்தான். அதுவும் கல்கண்டு பத்திரிகையும், அதன் ஆசிரியரான லேனா தமிழ்வாணனும்தான் என்னைப் போன்று வெளியுலகம் காணாத கிராமத்துப் பெண்களுக்கு செய்திக் களஞ்சியம்!! பின்னர் (அப்போதைய) டிவி வந்து அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது. மாலை ஐந்தரைக்கு ஆரம்பித்து, பத்து, பதினொரு மணி வரை எல்லா நிகழ்ச்சிகளிலுமே புதிதாகத் தெரிந்துகொள்ள விஷயங்கள் இருந்தன எனக்கு. அது ‘வயலும் வாழ்வும்’ ஆக இருந்தாலும் சரி, வாத்யக் கச்சேரியாக இருந்தாலும் சரி. பட்டணத்தைப் பார்த்த பட்டிக்காட்டான் கதைதான்!!
சிறுவர் நிகழ்ச்சிகள், வாராந்திர சீரியல்கள், துப்பறியும் நிகழ்ச்சிகள், பிறமொழிப் படங்கள் என்று ஒன்றையும் விடுவதில்லை நான்!! அதற்குமேல் க்விஸ் நிகழ்ச்சிகள்!! சித்தார்த்த பாசு ஞாபகம் இருக்கா? உலக செய்திகளோடு, உச்சரிப்பும் பழகவென்றே ஆங்கிலச் செய்திகள் பார்ப்பதும், புதியன பழகவென டாக்குமெண்டரி படங்கள் பார்ப்பதுமென... அது ஒரு கனாக்காலம்னுதான் சொல்லணும்!!
டிவி வந்த பள்ளிக்காலத்துலருந்து, கல்லூரி முடியும் வரை கிட்டத்தட்ட விடாமல் தொடர்ந்து பார்த்த நிகழ்ச்சி “UGC Grants" என்ற நிகழ்ச்சி!! இது மாணவர்களுக்கான நிகழ்ச்சி. ஒவ்வொரு பாடமாக எடுத்து செயல்முறை விளக்கத்தோடு நடத்தப்படும். பகலில் நடக்கும் என்பதால், வார நாட்களில் இதை ரிகார்ட் செய்து வைத்து பார்ப்பேன்!! (டிவியோடு விசிஆரும் வந்தது. அதில், பேக்ரவுண்ட் ரெக்கார்டிங் வசதியும் உண்டு. செட் செய்து ஆன் செய்து வைத்துவிட்டு, அம்மாவிடம் மறந்தும் டிவி ஸ்விட்சை ஆஃப் செய்துவிடாதே என்று கெஞ்சி/மிரட்டி சொல்லிவிட்டுப் போவேன்).
அதில் ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவிருக்கிறது!! ஒரு நிகழ்ச்சியில் அரிசி எப்படி உருவாகிறதென்று(!!) நாத்து நடுவதிலிருந்து அறுவடை வரை காண்பித்தார்கள்!! வயலில் விளையாடி வளர்ந்த எனக்கு அது பேராச்சர்யமாக இருந்தது, இதைப் போய்ப் பெரிசா காமிக்கிறாங்களேன்னு!! ஹூம்.. அவங்க தீர்க்கதரிசி!! காலப்போக்குல இதெல்லாம் டிவிலத்தான் பாக்கமுடியும்னு தெரிஞ்சுத்தான் அப்பவே படம்புடிச்சு வச்சுகிட்டாங்கபோல!!
’எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டேன்’கிற கதையா, இப்படியெல்லாம் ரசிச்சு, ருசிச்ச டிவி, ஒரு கட்டத்துல நேரத்தை விழுங்க ஆரம்பிச்சுது. பிள்ளைங்க வந்த பிறகு கொஞ்ச கொஞ்சமாக் குறைச்சு, இதோ போன மார்ச்சுலருந்து ஒரேயடியா மூடுவிழா நடத்தி மூடி வச்சிருக்கேன்!! தொழிநுட்பங்கள் வளர்ந்திருக்க இந்த காலத்துல டிவியினால இன்னும் அதிகமா பயனடைஞ்சிருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கும் சமயத்தில், நான் பெற்ற வாய்ப்பைப் பிள்ளைகளுக்குக் கொடுக்காம இருக்கேனேன்னு தோணினாலும், அதனால் கெட்டவைகளையே அவர்கள் அதிகம் அறியும் வாய்ப்புண்டு என்பதால் வருத்தமில்லை. என் தங்கைகள் வீட்டிலும் ஸேம் பிளட்!!
மிச்சப்படும் நேரத்தில் பிள்ளைகள் புத்தகங்கள், செய்தித்தாள் வாசிக்கப் பழகிவிட்டார்கள். எப்படியாவது நேரம் போகணுமே? வார இறுதிகளில் சேர்ந்து நல்ல (தமிழ்/சிறுவர்) படங்கள் பார்ப்போம். டிவியை மிஸ் பண்ணவேயில்லை - அதான் இணையம் இருக்கே!! டிவியிடமிருந்து போராடி மீட்ட நேரத்தை இப்போ இணையம்(பிளாக்) தின்னுகிறது. இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது, பார்க்கலாம்!!
|
Tweet | |||
45 comments:
சலாம் ஹுஸைனம்மா! ஒரு விளம்பரத்தைக் கூட விட்டு வைக்காமல் கூடி கூடி டிவி பார்த்த பழைய ஞாபகம் அப்படியே கண் முன்னால் ஓடுகிறது உங்க பதிவில் :)
//இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது// இப்படிலாம் மிரட்டாதீங்கபா..! எல்லாமே இணைய மயமாகி வரும் காலமிது!! நீங்க விட்டாலும் இணையம் உங்களை விடாது தெரியும்ல..? :-)
உங்க ஸ்டைல்ல அருமையா பழசை அசை போட்டது சூப்பர்.
அழைப்பை ஏற்று தொடர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.
இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது, பார்க்கலாம்!!
மூடு விழா நடத்தினாலும் கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப வந்தாகணும். அதுதான் இணையத்தோட ரகசியம் :)
நீங்க எழுதி இருப்பதை ரசித்து வாசித்தேன்... சூப்பர் பதிவுங்க!
நான் டிவி நேரத்தை கட் பண்ணிட்டுதான் பதிவுலகில் செலவழித்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் எத்தனை நாளுக்கு என்று நினைத்துக் கொண்டது உண்டு. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
காலம் கடந்த நினைவுகள் அருமை.
ஆஹா, நான்தான் பர்ஸ்ட்டு போல.
நல்ல நினைவுகள்.
வாசனையான கொசுவத்தி! சுவாரஸ்யம் மாறாதது. இந்தியா உலகக் கோப்பை ஜெயித்தது 1983. அப்புறம் சேம்பியன்ஸ் டிராஃபி ஜெயித்தது. (அதற்கு முன் உலகக் கோப்பை முடிந்த பின் மேற்கிந்தியத் தீவுகள் சென்று அவர்களிடம் மரண அடி வாங்கி வந்தோம்...நினைவிருக்கா..)
சித்தார்த்த பாசு எல்லாம் மறக்க முடியுமா? கபி கபி ஐஸா பீ ஹோத்தா ஹை என்று ஞாயிறு காலை பதினொன்றரைக்கு நிகழ்ச்சியை முடிக்கும் பெண்ணைத்தான் மறக்க முடியுமா?!!
டிவியிடமிருந்து போராடி மீட்ட நேரத்தை இப்போ இணையம்(பிளாக்) தின்னுகிறது.
exactly ...
இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது, பார்க்கலாம்!!
try it :P
//டிவி வந்த பள்ளிக்காலத்துலருந்து, கல்லூரி முடியும் வரை கிட்டத்தட்ட விடாமல் தொடர்ந்து பார்த்த நிகழ்ச்சி “UGC Grants" என்ற நிகழ்ச்சி!! //
ஆஹா.. இவ்வளவு நல்ல புள்ளையா இருந்திருக்கீங்களே!!
//இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது, பார்க்கலாம்!!//
:((((
அந்த மெட்சில் இந்தியா ஜெயித்தது இன்னும் சாதனையா இருக்கே (ஸ்கூலுக்கு கட்டடிச்சி பார்த்த ஞாபகம்)
ஒலியும் ஒளியும் போடறதுக்கு முன்னே அரை மணிநேரம் விளம்பரம் ...
ஆஹா.என்னையும் கொசுவர்த்தி சுத்த வச்சிட்டீங்களே...
அப்போ இந்த தொடர் போட நாந்தான் கடைசியா அவ்வ்வ்வ்
எங்கு சென்றாலும் ஹுஸைனம்மா பெயர். view my history- விபரம் இல்லை. யார் இந்த ஹுஸைனம்மா விளக்கம் கொடுத்தால் மகிழ்வேன் .
அதென்னவோ தெரியலே ஹுசைனம்மா.அன்றிலிருந்து இன்று வரை டிவியை ஒரு ஒரு மணி நேரம் தொடர்ந்தாற்ப்போல் பார்க்கமுடியவில்லை.பார்க்க கூடாது என்றில்லை.பொழுது போகாவிட்டாலும் வேறு வழியில் பொழுதைக்கழிப்பேனே தவிர டி வி பார்ப்பதில் எனக்கு என்றுமே ஈடு பாடில்லை.
////நான் எல்.கே.ஜி. படிச்சது டெல்லியிலயாக்கும்!!)///
அம்மாடியோவ் நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் அந்த காலத்திலேயே பெரிய பட்டிணத்திலேயே படிச்சிரிகிங்க. நீங்க பெரிய ஆளுதான் ஹுசைனம்மா. ஒரு கேள்வி நீங்க நிராடியாவுக்கு நண்பரா?
சுவாரஸ்யமா வத்தி சுத்தியிருக்கீங்க:)
//டிவியிடமிருந்து போராடி மீட்ட நேரத்தை இப்போ இணையம்(பிளாக்) தின்னுகிறது. இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது, பார்க்கலாம்!!//
ஹீஸைனம்மா, இணைய மூடுவிழா வேண்டாம். நல்ல பிளாக்கரை இணையம் இழக்க கூடாது.
நல்ல பதிவு, மலரும் நினைவுகள் அருமை.
//டிவியிடமிருந்து போராடி மீட்ட நேரத்தை இப்போ இணையம்(பிளாக்) தின்னுகிறது. இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது//
Same blood.
//அது ஒரு கனாக்காலம்னுதான் சொல்லணும்!!//
ஆம். தூர்தர்ஷன் ஒண்ணே ஒண்ணுன்னாலும் கண்ணே கண்ணாக இருந்த காலம்.
மலரும் நினைவுகளை மீட்டெடுத்தது பதிவு. விரும்பிப் பார்த்த நிகழ்ச்சிகள் எத்தனை எத்தனை. அத்தனையும் தரமானவையும்.
//டிவியிடமிருந்து போராடி மீட்ட நேரத்தை இப்போ இணையம்(பிளாக்) தின்னுகிறது. இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது//
திருவார்த்தைகள் ஹுஸைனம்மா! நானும் உங்க கட்சி!
அடடா, நீங்க சுத்துற கொசுவர்த்தி மட்டும் எல்லோர் மூக்குலயும்
நல்லா ஏறுதே :).
ஆமா, உங்க வீட்டுக்கு ஒரு பேரு வச்சிருப்பாங்களே, 'டீவியம்மா வீடு' என்பது போல், அத மறச்சுட்டீங்க :)
ஏன்னா,உங்க வீட்டைப் போலவே எங்கூர்லயும் முதன் முதலா டீவி வச்ச வீட்டுக்கு நாங்க வச்ச பேரு 'டீவி ஹாஜியார் வீடு' :))
சுரபி ஞாபகம் இருக்கா ??
என்னது... ஹூசைனம்மா!! அப்படி ஒரு தப்பான முடிவுக்கு மட்டும் வந்திடாதீங்க.... உங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு.... நீங்க மட்டும் அகில உலக அமீரக மக்கள் கட்சி ஒண்ணு ஆரம்பிச்சா போதும்... நாங்கல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கிடுவோம்ல
Very Nicely Presented..!
நல்ல கொசுவத்தி. டீவியும், இணையமும் நம்முடைய நேரத்தை தின்பதென்னவோ உண்மை தான். தொடருங்கள் உங்கள் எழுத்தை.
pleasant malarum ninaivugal .very nice.
என்னப்பா கொசுவத்தி நல்லா எழுதிட்டு, இணையத்துக்கு ஏன் மூடு விழ்ழ நடத்தணும். எங்களுக்கும் படிக்க வேற யாரு எழுதித்தருவாங்க.
1987 ரிலையன்ஸ் உலகக் கோப்பை என்னால மறக்க முடியாது:)
தொழில்நுட்பம் வளர வளர ஒன்றை ஒன்று விழுங்கிக்கொண்டேதான் இருக்கும். எதுவும் நிரந்தரம் இல்லை நாம் உட்பட.
ஹா...ஹா...ஹா...
நல்லா கொளுத்தினீங்க போங்க கொசுவத்திய....
முன்பு தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நேரம் போதும், ஞாயிற்றுக்கிழமை அன்று சாயங்காலம் சினிமா போடும் போதும், தெருவில் எந்த நடமாட்டமும் இருக்காது...
அதன் பின் தற்போது, மலை மலையென சேனல்கள் குவிந்து காணப்படுகிறது... 24 மணி நேரமும் நம்மை தூங்க விடாமல் இருக்க சேனல்கள் வந்து விட்டது...
நம் தற்போதைய வாழ்வில் பெரும்பகுதியை இந்த பொழுதுபோக்கு சாதனங்களே எடுத்துக்கொள்கிறது...
//இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது//
ஏனோ... இது பாட்டுக்கு ஒரு சைட் போகட்டும்... விடுங்க....
என்ன சொன்னாலும் ப்ளாக் அண்ட் வொயிட் டி.வி.ல ஒளியும் ஒலியும், ஞாயிறு திரைப்படங்களுக்காக காத்திருந்த காலங்கள்... சுகமானவை தான். இப்போ திகட்டி போச்சோன்னு தோனுது.
//டிவியிடமிருந்து போராடி மீட்ட நேரத்தை இப்போ இணையம்(பிளாக்) தின்னுகிறது. இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது//
நீங்க விட்டாலும் இணையம் உங்களை விடாது தெரியும்ல..? :-)
ஒட்டுமொத்தமா விட்ட எல்லாப்பதிவையும் சேர்த்து வெச்சு படிச்சுட்டேன்.
கலந்து கட்டி கலக்கறீங்க. வாழ்த்துகள்
ஆமா கடைசில ஒரு பன்ச் வெச்சிருக்கீங்களே, அது வேணாமே ப்ளீஸ்/ :)
ஹுசைனம்மா...,கொசுவர்த்தி சுருளாக உங்கள் நினைவலைகள் ரொம்ப அருமையாக இருந்தது... மிகவும் ஸ்வாரஸ்யமாக எழுதுறீங்க...
எங்களுக்கும் பல நினைவுகளை கொண்டு வரசெய்தது உங்கள் எழுத்துக்கள்.
வாழ்த்துக்கள்..... ஹுஸைனம்மா.
உங்களை போன்ற நல்ல திறமையுடையவர்களை இந்த இணையம் விட்டுடுமா என்ன...?
அன்புடன்,
அப்சரா.
நல்ல கொசுவத்தி.
ஞாயிற்று கிழமை மதியம் போடப்படும் எந்த மொழி படமானாலும் பார்ப்போம். இப்ப டிவி பார்ப்பது ரொம்ப குறைவு.
அடடா, எல்லாரும் பாசக்கார பயபுள்ளைங்களா இருக்காய்ங்களே!! அதெல்லாம் அம்புட்டுச் சீக்கிரம் பிளாக்கை விட்டுட்டுப் போயிடமாட்டேன்!! இந்தப் பதிவுலகத்துக்கு நான் செய்யவேண்டிய சேவைகள், ஆற்றவேண்டிய தொண்டுகள் எவ்ளோ இருக்கு?? அதுக்குள்ள வி.ஆர்.எஸ்.ஸா? நோ சான்ஸ்!! :-))))))))
டிவி சேனல்கள்/நிகழ்ச்சிகள் கொஞ்சமா இருந்த வரை ரசிச்சோம். பெருகிப்போனதும் விட்டுப்போச்சுல்ல? அதுமாதிரிதான், பிளாக்கும். அளவோடு இருக்க வரை சரி, அளவுக்கு மிஞ்சினால்....
அஸ்மாக்கா - ஆமாக்கா, அதெல்லாம் ஒரு காலம். சின்னச் சின்னக் கதைகளா வரும் விளம்பரங்கள்தான் நிகழ்ச்சியைவிட சுவாரஸ்யமாருக்கும் அப்போல்லாம். இப்ப, விளம்பரத்துக்கு நடுவுலதான் நிகழ்ச்சிகளாமே!!
அக்பர் - வாங்க. கொசுவத்தி சுத்த சான்ஸ் கொடுத்ததுக்கு நன்றி!! உண்மைதான், லீவுக்கு ஒருமாசம் ஊருக்குப் போனப்போ அப்படித்தான் ஃபீல் பண்ணேன்!!
சித்ரா - அப்ப, பிளாக் வந்ததால நன்மைதான்!! எல்லாருமே டிவியை விட்டுட்டோமே!!
தூயவன் - நன்றி.
கந்தசாமி சார் - எப்பவும் நீங்க ஃபர்ஸ்ட்தான்!! வயசுல மூத்தவராச்சே!! :-))))
ஸ்ரீராம் சார் - 1983லயா உலகக்கோப்பை ஜெயிச்சது? கபில்தேவ் கையில கோப்பைய ஏந்தி நெகிழ்ச்சியா நின்னது இன்னும் கண்ணுக்குள்ள நிக்குது!! அதிலருந்து நானும் கிரிக்கெட் ஃபேன் - கல்யாணம் வரை!! நிறைய நிகழ்ச்சிகள் சொல்லலாம் - பேர்தான் நினைவுக்க் வரலையே தவிர ஒண்ணொண்ணும் முத்துகள்!!
ஜமால் - என்ன சவால் விடுற மாதிரி இருக்கு? நான் வரலை இந்த விளையாட்டுக்கு!!
எல் போர்ட் - அந்த ப்ரோக்ராம் "University Grants Commission (UGC)". ஆர்வக்கோளாறுல தப்பா எழுதிட்டேன். நெசமா நல்லபுள்ளைதான் நான் அப்ப!!
ஆமா, நீங்களும் அப்பப்ப கடைக்கு லீவு விட்டுடுறீங்கள்ல, அதுமாதிரிதான் நானும் சொன்னேன்!!
ஜெய்லானி - அந்த மேட்ச் நடக்கும்போது கட்டடிக்கிற அளவு பெரியவனா? அப்ப நான் ரொம்பச் சின்னப்புள்ளை!! :-))))
நீடூர் அலி சார் - பெரியவங்க என் வலைப்பூ பக்கமும் வந்தது மகிழ்ச்சியாருக்கு. ரொம்ப நன்றி. எங்கே போனாலும் எம்பேரா? பெரியவங்க நீங்க சொல்றதுனால என்னை வச்சு காமெடி பண்ணலைன்னு நம்புறேன்!! :-))) நானும் ஒரு சாதாரண பெண் - திருநெல்வேலியில் பிறந்து, நாகர்கோவிலில் வாழ்க்கைப்பட்டு, அபுதாபியில் காலம்தள்ளும் பெண் - இரண்டு பசங்களுக்கு அம்மா. அவ்வளவுதான் சொல்றதுக்கு இருக்கு.
ஸாதிகாக்கா - ஆமாக்கா, டிவி பாத்தா பொறுமை போயிடுது!! என்ன திடீர்னு கிறிஸ்மஸ் ஸ்டார் ப்ரொஃபைல்ல? ராசி பாத்து மாத்தினதா? இல்லை, தமிழ்மணம் நட்சத்திரப் பதிவரா? :-)))))))
அவரக்ள் உண்மைகள் - அவ்வ்வ்... ஏன் ஏன்? போன பதிவுலத்தான் ஒருத்தர் ஜாக்கி சேகர் மாதிரி எழுதுறேன்னார். இப்ப நீங்க நீரா ராடியாவைத் தெரியுமான்னு... வில்லங்கமான கேள்விகளாவே இருக்கே??!!
வித்யா - நன்றிப்பா.
கோமதிக்கா - இல்லைக்கா, விட்டுப் போக மனமேயில்லை. நன்றிக்கா.
மோகன்குமார் - நீங்க கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிட்டதா ஒரு பதிவு எழுதின ஞாபகம். அதைத் திரும்பி வாசிக்கணும்.
ஷர்ஃபுதீன் - எங்க கொஞ்ச நாள் காணோம்?
ராமலஷ்மிக்கா - ஒரே சேனலா இருந்ததால தரமா இருந்துது. இப்பவும் அது தரம்தான். ஆனா, மற்ற குப்பைகளால் அதையும் தவிர்க்க வேண்டிய நிலை.
//திருவார்த்தைகள் ஹுஸைனம்மா! நானும் உங்க கட்சி!// நிறைய பேர் இந்த நிலைமையிலத்தான் இருக்கோம் போல!! இதுக்காகவே நான் ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர், பஸ்னு எதிலயும் போகாம இருக்கேன். இதுக்கே நேரம் போயிடுது. நிறைய பேர் எப்படித்தான் எல்லாத்துலயும் இருக்காங்களோன்னு ஆச்சர்யமா இருக்குக்கா.
அரபுத்தமிழன் - எங்க வீட்டுக்கு ஏற்கனவே எங்க தாத்தாவினால் வேறு பெயர் உண்டு (நல்ல பேர்தான்). அதனால புதுப்பேர் தேவைப்படவில்லை!!
//நீங்க சுத்துற கொசுவர்த்தி மட்டும் எல்லோர் மூக்குலயும் நல்லா ஏறுதே//
ஏன்னா, இது தரமான, நயமான ஒரிஜினல் சரக்குகள் மட்டுமே சேர்க்கப்பட்ட அக்மார்க், ஐஎஸ் ஐ முத்திரை வாங்குன, கலப்படமில்லாத கொசுவத்தி. அதான் சரியான எஃபெக்ட் கொடுக்குது!! :-))))))
எல்.கே. - ஆமா, ஆமா, சுரபிய மறக்க முடியுமா? ஒவ்வொரு மாநிலமாப் போய், அங்குள்ள சிறப்புகளைச் சொல்ற நிகழ்ச்சி. சனிக்கிழமைதோறும்னு நினைவு. சரியா?
நாஸியா - தப்பான முடிவா? நான் அப்படியென்ன சொல்லிட்டேன்?? கட்சியா? அப்ப நம்ம கட்சிக்கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு உங்க பிரியாணியை நம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்பி கொடுக்கலாமா? :-)))))))
கொச்சுரவி - வாங்க. மலையாளி போலருக்கு. தமிழும் தெரியுமா? வளர நன்னி!!
கோவை2தில்லி - நன்றிங்க.
ஏஞ்சலின் - நன்றிப்பா.
வல்லிம்மா - பிளாக் வாசிக்கிறதும், எழுதுறதும் ரொம்ப நேரம் பிடிக்கிறதுனால அப்படிச் சொன்னேன். மற்றபடி எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் இது. நன்றி மேடம்.
கே.ஆர்.விஜயன் - (பேர் அந்த நடிகரை ஞாபகப்படுத்துது) உண்மைதான். இப்ப பிளாக்கும் பழசுன்னு ஆகி, ட்விட்டர்ல இயங்குது உலகம். அடுத்து எதுவோ?
ஆர்.கோபி - ஆமாங்க, இந்த மலைமாதிரி குவிந்துள்ள சேனலகளிலிருந்து பெண்களை மீட்பதைவிட, வீட்டு ஆண்களை மீட்டெடுப்பதுதான் கஷ்டமான காரியம்!! :-))))
அம்பிகா - அளவோடு இருக்க வரை நல்லாத்தான் இருந்த்ச்சு, இல்ல?
அமித்தம்மா - பன்ச்லாம் இல்லைப்பா. ஒரு அடிக்ட் மாதிரி ஆகிடுமோன்னு ஒருபயம். அதான், என்னை நானே எச்சரிக்கை செய்துகிட்டேன்!! நலமா? வால்களும் நலமா? :-))))
அப்ஸரா - ஆமாப்பா, கொசுவத்தி பதிவுகளோட சிறப்பே நமக்கும் பழசெல்லாம் ஞாபகம் வந்திரும் - கோமாவிலருந்து திடீர்னு முழிச்சுகிட்ட மாதிரி!! :-))))))
மாதேவி - நன்றிங்க.
அமுதாக்கா - ஆமாப்பா, எந்த மொழிப்படமாருந்தாலும் பாத்துடுவோம். கேட்டா, புதுமொழி தெரிஞ்சுக்கத்தான் பாக்கிறோம்னு அல்டாப்பு வேற!! :-))))
வழக்கம்போல் கொசுவர்த்தி சூப்பர் சகோ.
//இப்படியே போனா, இணையத்துக்கும் ஒரு மூடுவிழா நடத்திடுவேனோன்னு தோணுது, பார்க்கலாம்!!//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அப்புறம் யாரு வலையுலகத்த கவனிக்கிறது.
Post a Comment