(படங்கள் அனைத்தும் யூத்ஃபுல் விகடன் பக்கத்தில் இக்கட்டுரையுடன் பிரசுரமாகியிருந்தவை)
திருமணமாகி ஒரு வருடம்போல ஆகியிருந்த ஒரு பெண்ணிடம் அடிக்கடி ஃபோன் பேசுவதுண்டு. யாரிடம் நான் பேசினாலும், "வேறென்ன விசேஷம் சொல்லுங்க" என்று பேச்சைத் தொடரும் முயற்சியாகக் கேட்பதுண்டு. இந்தப் பெண்ணிடம் ஒருமுறை அப்படிக் கேட்டபோது, "என்னக்கா, விசேஷமா இருந்தா நானே சொல்லமாட்டேனேக்கா? எப்போப் பேசினாலும் இதயே கேக்குறீங்களே?" என அழத்துவங்க, நான் அதிர்ந்துவிட்டேன். ஒவ்வொரு முறை தொலைபேசும்போதும், அவர் இந்தக் கேள்வியோடு பேச்சைமுடித்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.
சகஜமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் வருமா என்று குழம்பிய நான், அந்தப் பெண்ணிடம் விளக்கித் தெளிய வைக்க, பட்ட சிரமத்தில், அந்த வார்த்தையையே என் ‘அகராதி’யிலிருந்து எடுத்துவிட்டேன்!! விளையாட்டாகச் சொன்னாலும், இப்பெண்களின் வேதனைகள் விளையாட்டல்ல!
குழந்தை பெறத் தாமதமாவது என்பது பெண்களின் மனதைக் கீறும் ரணமாக, இந்த நவீனயுகத்திலும் இருப்பதுதான் பெரும்வேதனை!
இவர்களைக் காயப்படுத்துபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அதற்கும் ஏதேனும் காரணம் இருக்கலாம்; கவனித்துப் பார்த்தால், அப்படிக் குறை கூறுபவர்கள், குழந்தை பிறந்த பின்னும்கூட அதை வேறுவகையில் தொடருவார்கள். ஒரு தோழி, தன் கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அனுசரணையாக இருந்தாலும், அவரது உறவினர் ஒருவர் காணும் இடத்திலெல்லாம் இதைக் குறித்துப் பலர் அறிய விசாரித்து தன்னை குமைய வைப்பதாக வருந்தினார். அடுத்த முறை அவரைக் காணும்போது, "எவ்வளவோ வேண்டுதல் செஞ்சும் பலனில்லை. நீங்களாவது எனக்காக முடி காணிக்கை தர்றதா வேண்டிக்கோங்களேன். பெரியவங்க உங்க பிரார்த்தனை கண்டிப்பாப் பலிக்கும்னு நம்பிக்கை இருக்கு"னு வைக்கச் சொன்ன ‘செக்’ சரியாக வேலை செய்தது. சில இடங்களில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்!!
மன உறுதி அதிகரித்து, பல துறைகளில், ஆண்களுக்கே சவாலாகத் திகழுமளவு முன்னேறியிருக்கும் இக்காலப் பெண்கள், இந்தவொரு விஷயத்தில் மட்டும் மனதளவில் இன்னும் பலவீனமாக இருப்பது ஏன்? இதற்குக் கைகாட்டப்படுவது, சமூகம் மற்றும் மாமியார் தொடங்கி புகுந்த வீட்டு உறவினர்களின் எதிர்பார்ப்புதான். மாறிவரும் உலகில், மாமியார்களும் மாறித்தான் இருக்கிறார்கள். மருமகளுக்குக் குழந்தைப்பேறு தாமதமாவதற்கு, தன் மகனும் காரணமாக இருக்கலாம் என்பதை இக்கால மாமியார்கள் பலரும் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே அவர்களும் விதிப்படி நடக்கட்டும் என்று இருந்துவிடுகிறார்கள். அண்டை, அயல், உறவுகள், நட்புகள் எல்லாரும்கூட ஆதரவாகவே இருக்கிறார்கள் இவர்களுக்கு.
எனில், எங்கே தவறு? கூட்டுக் குடும்பங்கள் தொலைந்துவரும், ஏன், தனிக்குடும்ப வாழ்வே மின்னும் நட்சத்திரம்போல மின்னிவிட்டு மறைந்துவிடும் இக்காலங்களில், தன் முதுமைக்காலத்தில் ஆதரவற்றுப் போய்விடுமோ எனும் பெண்மைக்கேயுரிய பாதுகாப்பு உணர்வுதான் அவர்களை இப்படி வீழ்த்துகிறதோ?
வேலையைத் தக்கவைக்க, வேலைகளில் பதவி உயர்வு, இடமாறுதல்கள், வசதிவாய்ப்புகள் பெருகக் காத்திருத்தல் எனப் பல்வேறு காரணங்களால் திருமணம் அல்லது பிள்ளைப்பேற்றைத் தள்ளிப்போடுதல் முதலியவை குழந்தைப்பேறு வாய்ப்புகள் குறையவும் காரணமாக அமைகின்றன. போதாதற்கு வேலை டென்ஷன், ஸ்ட்ரெஸ், வேலைக்கான களம், உண்ணும் உணவுகள், பயன்படுத்தும் நவீனக் கருவிகள் என்று பல்வேறு காரணங்களும் கூட்டணி போடுகின்றன.
பெருகிவரும் இணையதளங்களால், சாதாரண மக்களுக்கும் மருத்துவ அறிவு அதிகரித்துவிட்டதைப் போல, குழந்தையின்மை சிகிச்சை முறைகளிலும் பெண்களில் சிலருக்கு இருக்கும் அறிவு பிரமிக்க வைக்கிறது! அதேசமயம், அளவுக்கு மீறிய தகவல்களால், தனக்கு ஏற்பட்டிருப்பது இந்தக் குறையா, அல்லது அதுவா, அதற்கு இது ஏற்ற சிகிச்சை முறையா, அல்லது அதுதான் சரியா என்று தங்களைக் குழப்பிக் கொள்ளும் நிலைக்குச் செல்லுவதைப் பார்க்கும்பொழுதில் "அறியாமையே ஆனந்தம்" (Ignorance is bliss) எனத் தோன்றுவதும் உண்மையே.
அதிவேகமாய் அபரிதமாய் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தாலும், பலவற்றால் மனித உறவுகளின் மதிப்பு குறைந்ததுபோலவே, சேவைகளும் தரத்தில் குறைந்து வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. இவற்றில் மருத்துவத்துறையின் தரம்தான் நம்மை அதிகக் கவலைப்படுத்துவது. மேலும், வழமையாய் வரும் சிறு உடற்பிணிகளே தற்காலங்களில் நவீன மருத்துவத்துறைக்குச் சவால் விடுகின்றன. அப்படியிருக்கும்போது, பெரும்பாலும் ‘நிகழ்தகவின்’ அடிப்படையிலேயே வெற்றிதரும் குழந்தையின்மை சிகிச்சை முறைகள் வெற்றிபெற சிகிச்சைக்கு உட்பட்டவர் மட்டுமின்றி, சக துணையும் மன உளைச்சல் இல்லாது இருத்தல் அவசியம். அவர்கள் மனதில் அமைதிச்சூழல் ஏற்பட, சிகிச்சை தரும் மருத்துவர் உள்ளிட்ட குழு நம்பிக்கை தரும்விதமாகவும், ஆதரவாகவும், திறமையாகவும் அமைதல் மிகமிக அவசியம்.
குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் நடத்தப்படும் மருத்துவமனைகள்தான் குழந்தையில்லாப் பெண்களின் மனச்சோர்வுக்கு முக்கியக் காரணமோ எனத் தோன்றுகிறது. மிகச் சிலரே, உண்மையான சேவை மனப்பான்மையில் தரமான, சரியான சிகிச்சை வழங்குகின்றனர். மற்றவர்கள், பெருகிவரும் இன்றைய நவீனகால மருத்துமனைகளுக்கு ஒப்பாக, இவர்களுக்குப் பொய்யான நம்பிக்கைகள் கொடுத்து, பணம் பறிக்கும் நடவடிக்கைகளிம் ஈடுபடுகின்றனர்.
ரேஸில் செல்லும் குதிரையை ’கமான், கமான்’ என்றழைப்பது போல, இப்பெண்களை, அவர்களின் உண்மை உடல்நிலைக்கு மாறாக, மீண்டும் மீண்டும் பல்வித பரிசோதனைகளுக்கு உள்ளாக்குகின்றனரோ என்று கவலை தோன்றுகிறது. ஒரு ஏமாற்றத்தை எப்போதாவது எதிர்கொண்டால், அதிகப் பாதிப்பு இராது. தொடர்ச்சியாகப் பலமுறை தோல்வியாக அமையும்போதுதான் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஒரு என்.ஆர்.ஐ. நண்பரின் மனைவி, தமிழகம் சென்று, குழந்தையின்மைக்காக மருத்துவரை நாடி, சிகிச்சைகள் மேற்கொண்டு, பரிந்துரைத்தபடி, பல்விதப் பரிசோதனைகள் செய்துகொண்டார். இன்னும் மேலதிகப் பரிசோதனைகள் செய்யும்படி சொல்லப்பட்டது. விடுமுறை முடிந்துவிட்டதால், தான் வாழும் நாட்டில் செய்துகொள்ளலாம் என்று எழுதி வாங்கிவந்தார்.
அங்கே, குழந்தையின்மைச் சிகிச்சைகள் காப்பீடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதால், தம் பொறுப்பிலேயே பெரும்தொகை செலவழித்துச் செய்துகொள்ளவேண்டும். என்றாலும், ஆர்வம், அவசியத்தின் காரணமாகச் செய்துகொள்ள முன்வந்து மருத்துவமனைக்குச் சென்றபோது, குறிப்பிட்ட அந்தப் பரிசோதனையைச் செய்ய மறுத்துவிட்டனர்! காரணம்? பரிந்துரைக்கப்பட்ட அப்பரிசோதனைகள் திருமணமாகி குறைந்தது ஏழெட்டு வருடங்களாவது ஆகியிருந்தால்தான் அந்நாட்டில் செய்வார்களாம். இவர்களுக்கோ ஒன்றரை வருடங்களே ஆகியிருப்பதால், மறுத்திருக்கிறார்கள்!! நண்பருக்கு மிகுந்த அதிர்ச்சி. சிகிச்சைகள் எடுப்பதையே நிறுத்திவிட்டார். பின்னர் இயல்பாகவே, சில மாதங்களில் அப்பெண் கருவுற்றார்.
இன்னொரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? முதல் குழந்தை பிறக்கத் தாமதமாகும் சிலருக்கு, இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் அடுத்தடுத்து இடைவெளியே இல்லாமல் பிறந்திருக்கும். காரணம் - எந்த டென்ஷனும் இல்லாமல், எதிர்ப்பார்ப்புகளும் திணிக்கப்படாமல் இருப்பதால்தானே?
எனில் சிகிச்சையே கூடாதா என்றால், இல்லை. சிகிச்சை எடுத்துக் கொள்ளுமுன் அவசியப்பட்ட கால அளவு பொறுமையாய் இருக்கவேண்டும். கருவுறுவதில் தாமதம் ஏற்பட்டால், அதை அமைதியான மனதோடு, பொறுமையாக எதிர்கொள்ளுதல் மிக அவசியம். ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரித்து, வாங்கும் கட்டணத்தின் அடிப்படையில் அல்லாமல், தரமான சிகிச்சையின் அடிப்படையில், நம்பிக்கையான மருத்துவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இச்சிகிச்சை முடிவுகளும் கணவன்-மனைவி இருவரின் மனத்திண்மையைப் பெருமளவு பொறுத்திருக்கும் என்பதால், இருவருக்கிடையில் இச்சமயத்தில்தான் புரிதல், இணக்கம் அதிகமிருக்க வேண்டும்.
ஒருவேளை, முடிவுகள் சோர்வைத் தரும்வகையில் அமையுமெனில், தளர்ந்துவிடாது, வேறு வழிகளைப் பரிசீலிக்க வேண்டும். அதில் முதலாவதாய், தத்தெடுத்தல் இருப்பது நலம்.
தத்தெடுப்பதில் இருக்கும் மனத்தடைகளும் இளைய தலைமுறையினரிடம் பெருமளவில் நீங்கிவருகின்றன. செய்திகளில், ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியோடு அருகிலேயே, அதனை அப்பகுதியைச் சேர்ந்த யாரேனும் ஒரு தம்பதியர் வளர்க்க விருப்பம் தெரிவித்திருப்பதாயும் செய்தி இருக்கும். எனினும், மக்களின் மனத்தடை நீங்கிய அளவுக்கு, சட்டத்தின் இடர்கள் நீங்கிவிடவில்லை. சாதாரணர்களும் எதிர்கொள்ளுமளவு தத்தெடுத்தலை இலகுவாக்க அரசு முன்வந்தால், பெரும் வரவேற்பு இருக்கும் என்பது உறுதி.
எத்துன்பம் வாய்த்தாலும் தனக்கு நேர்ந்ததை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பதைவிட, தன்னைவிட கீழ்நிலையில் இருப்பவர்களைக் கண்டு மனம் தேற்றிக்கொள்ளல் வேண்டும். இவ்விடத்தில், தன்னைவிடக் கீழ்நிலை என்றால், இச்சிகிச்சை முறைகளை மேற்கொள்ளமுடியாத அளவு வறுமையிலும், அறியாமையிலும் இருப்பவர்கள், மற்றும், குழந்தைபெறத் தகுதியிருந்தும், தனக்கோ தன் துணைக்கோ ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகளால் குழந்தை பெறுவதைத் தவிர்ப்பவர்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள் எனலாம்.
உதாரணமாக, எய்ட்ஸ் போன்ற தீரா நோய் தாக்கியவர்களின் மனைவியர் அல்லது புற்றுநோய், காசநோய் போன்ற கருவையும் தாக்கும் நோயுடையோர் நிலை. குழந்தை பெற தாமதம் ஆகுபவர்களுக்கு என்றாவது ஒருநாள் இறையருளால் குழந்தை பாக்கியம் வாய்க்கும் நம்பிக்கை உள்ளது; ஆனால் ’கைக்கெட்டியது வாய்க்கெட்டாத’ நிலையிலுள்ள இவர்கள்?
திருமணம் ஆகி, குழந்தைப் பேறு அடைய தாமதமானால் பொறுமையும், மன உறுதியும், நிறைய நம்பிக்கையும் கொள்வது மிக அவசியம். மேலும், இயன்றவரை இயற்கை வழிகளிலான சிகிச்சைகளைக் கைக்கொள்வதே சாலச் சிறந்தது.
'சொல்வது எளிது, எங்கள் நிலையில் இருந்துப் பார்த்தால் தெரியும்' என்றால், நான் அறிந்த மிகச்சிறந்த குழந்தைப்பேறு மருத்துவர் ஒருவர் குழந்தையில்லாதவர். அவர் பெறவில்லையே தவிர, எத்தனை ஆயிரம் குழந்தைகளை அவர் கையில் முதலில் ஏந்தியிருப்பார்? எத்தனை உள்ளங்கள் அவரை வாழ்த்தியிருக்கும்? அவர் இவ்வாறு துவண்டிருந்தால், மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பாக்கியம் கிடைத்திருக்குமா?
தோழிகளே.. மனம் துவளாமல் இருப்பது தான் குழந்தை பாக்கியம் பெற முதல் வழி. சீக்கிரமே மழலைச் செல்வம் உங்களை மகிழ வைக்கும்.
நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்!
|
Tweet | |||
30 comments:
அருமையான கட்டுரை.
இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மனமுடைந்து தான் போகிறார்கள்
எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று உண்டு. மருத்துவம் பலன் அளிக்கா விடில் ஒரு குழந்தை எடுத்து வளர்க்கலாம். குழந்தை இல்லாதோர் அனைவரும் ஒரு குழந்தை எடுத்து வளர்த்தால் அநாதை என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இரண்டு சமூக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இது நான் சொல்லலை. என் மனைவி அடிக்கடி சொல்வது !
நல்லதொரு பகிர்வு.
எவ்வளவோ காலம் மாறி விட்டாலும் இன்னும் சில இடங்களில் பெண்களே குறைக்கு காரணம் என்று சாடுபவர்களும் உண்டு.
நல்ல தெளிவான கருத்துக்கள் ஹுஸைனம்மா!
நம் ஊரில் பொதுவாக, குழந்தையில்லா எந்தப் பெண்ணுக்கும் மன ரீதியிலான பாதிப்புக்கள் அதிகம். எத்தனை கலாச்சார, நாகரீக முன்னேற்றம் ஏற்பட்டாலும் சில அடிப்படை விஷயங்கள் நம் ஊரில் மாறவே மாறாது. குழந்தையில்லா பெண்ணை சொற்களால் குத்திக்கிளறுவது எப்போதுமே நடந்து கொன்டிருக்கிறது. எங்கள் மேலாளரின் பெண் -திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது- இன்னும் குழந்தையில்லையே என்ற பேச்சுக்களைத் தாங்க முடியாமல் கலங்கிப்போய் நல்ல மருத்துவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டில்! அதே சமயம், இளந்தலைமுறையினர் சிலர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழந்தையில்லையே என்று புலம்பாமல் தத்தெடுத்துக் கொள்கின்றனர்.
மிகத் தெளிவான பதிவு. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள்.
இங்கே, உங்களைப் பாரட்டி எழுதுவதைத் தவிர வேறு ஒன்றும் எழுத முடியாது.
நெகிழ வைத்த பதிவு. தெரியாமல் கேட்பது ஒருபுறம். தெரிந்தே கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்தான். தெரியாதவர்களிடம் கூட 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்' என்று கேட்கத் தயக்கமாக இருக்கும்.
கடைசியாக வந்த விகடனில் ஒரு செய்தி படித்தேன். ஆமீர்கான்-கிரண் ராவ் தம்பதிகள் வாடகைத் தாய் வைத்து ஒரு குழந்தை பெற்றிருக்கிறார்களாம். தினமணியில் அதன் ஆசிரியர் ஒரு கவிதையை ரசித்து வெளியிட்டிருந்தார். குழந்தைக்காக எங்கும் பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள் அநாதை இல்லங்களில் தாய்க்கு எங்கும் குழந்தைகள் இருப்பதை என்று வரும் ஒரு கவிதை. இந்த இரண்டு செய்திகளும் சும்மா பகிரத் தோன்றியது.
மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கீஙக....ஓரளவு நிலைமை முன்னேறித்தான் இருக்கிறது..இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஆணோ /பெண்ணோ மனோதிடத்துடன் இதனை எதிர்கொள்வது நல்லது...
சிகிச்சைகள் தீர்வைத் தராத நிலையில் பலர் தத்து எடுத்துக் கொள்கின்றனர்..சிலர் மிகவும் காலம் தாழ்த்துத் தத்து எடுக்கின்றனர்..சிலர் அடற்கு முன் வருவதேயில்லை....
அருமையான பகிர்வு.எனது தோழிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது குழந்தைக்காக பல இடங்களில் டாக்டரை பார்க்கிறார்கள்.. எந்த பிரச்சனையும் இருவருக்குமில்லை என்று சொன்னபிறகும் பல விஷயங்களை நெட்டில் இருந்து சேகரித்து இது காரணமாக இருக்குமோ அது காரனமாக இருக்குமோ என்று சிந்தித்துக்கொண்டுயிருக்கள்.. இது நாளே இருவருக்கும் கருத்து வேர்பாடுகள் வருகிறது.. எந்த சிந்தனையும் மனதில் ஏற்றாமல் இருந்தாலே நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்..
Hi, very nice. Even we have personal experience with it. You totally right about the doctors. Two of my cousins went to the popular doc in Chennai(both live is US) and one of them never had success after 3 cycles. She got sick on all the cycles with severe vomitting and they never found a reason for it. My other cousin got pregnant and everything was going good. She had several miscarraiges and that doc told her to stitch the cervix unnecessarily, which has a higher chance for amniotic fluid leak, unfortunately baby was born alive at 20 weeks and they couldn't save the baby. It makes me so angry about all these doctors whose intention is to just make money and nothing else.
Now these two girls not only go thru their personal and emtional struggle, society makes so much harder on them by passing comments, should do this and that...
தைரியம் சொல்வதுபோல இருக்கு கட்டுரை.மிகவும் நல்லது ஹுஸைனம்மா !
நல்ல செய்திகளைப் பகிர்ந்துள்ளீர்கள். யூத்ஃபுல் விகடனில் வெளிவந்ததற்குப் பாராட்டுகள். குழந்தையில்லா விஷயத்தில் தம்பதியினரை அதிகக் கலவரப்படுத்துவது அவர்களைச் சுற்றியுள்ளவர்களே என்பதைப் பல இடங்களிலும் காணமுடிகிறது. குழந்தைகளைக் கொண்டுதான் அவர்களது அந்நியோன்னியமும் சில இடங்களில் மதிக்கப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும். குழந்தை பிறப்பது மட்டும் முக்கியமல்ல. அது உடல் மற்றும் மன அளவில் எந்தக் குறையுமில்லாமல் பிறக்கவேண்டியதும், அப்படிப் பிறந்தாலும் அது சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டியதும் முக்கியம். அதற்கு பெற்றோர் நல்ல மனநிலையில் இருக்கவேண்டியது அவசியம். அதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டியதே நல்ல உறவுகள் மற்றும் நண்பர்களின் கடமை. மற்றவர்கள் சொல்வதை பெரிதுபடுத்த அவசியமில்லை. நல்ல தரமான பதிவு. மீண்டும் பாராட்டுகள்.
மிக அருமையான கட்டுரை...
இந்த விசேஷம் எப்போ... என்ற கேள்வியே பலருக்குக் கஷ்டமாகி விடுகிறது என்பது உண்மைதான்....
குழந்தை பிறக்க சற்று தாமதமாகும் நேரங்களில் அவர்கள் மனதளவில் திடமாக இருந்தாலும் சுற்றில் இருப்பவர்கள் தொடுக்கும் கேள்விக்கணைகளே அவர்களை வீழ்த்திவிடுகிறது....
மிக நல்ல தரமான பதிவு. வாழ்த்துக்கள்
மோகன் குமார் சொல்லியிருப்பது போல், ஆண்களும் மன உலைச்சளுக்கு ஆளாகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள்தான் உறுதியோடு இருத்தல் வேண்டும், கேட்பவர்கள் கேட்கத்தான் செய்வார்கள் ...
மிகச் சிறப்பான கட்டுரை.
காலம் எவ்வளவோ மாறிவிட்டாலும் சில இடங்களின் பெண்களின் நிலை மாற வேண்டும்.
நீங்கள் சொல்லியிருப்பது மாதிரி,நம்பிக்கையோடு இருப்போம் நல்லதே நடக்கும்.
அருமை.
உண்மைதான் ஹுஸைனம்மா. குடும்பத்தினருக்கு இருக்கும் புரிதலும் அனுசரணையும் கூட சுற்றி இருக்கும் உறவினருக்கு இருப்பதில்லை. அந்த உறவுக்காரப் பெண்மணிக்கு கொடுக்கப்பட்டது சரியான சவுக்கடி.
எங்கள் குடும்பத்தினுள் கடந்த பத்தாண்டுகளில் 3 தம்பதியர் குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டதைப் பகிர்ந்து கொள்கிறேன். இருபது வருடங்களுக்கு முன் இதில் தயங்கங்கள் இருந்து வந்தது. இப்போது அதில் நல்ல தெளிவு வந்து விட்டது. ஆனால் அது தம்பதியர் மனமார முன் வந்து எடுக்கும் முடிவாக இருத்தல் ரொம்ப அவசியம்.
நல்லதொரு அலசல். மிக அவசியமானதும். யூத்ஃபுல் விகடன் வெளியீட்டுக்கும் வாழ்த்துகள்!
அருமையான கட்டுரை.
இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் மனமுடைந்து தான் போகிறார்கள்
மிக நல்ல பதிவு ! என் "தங்கச்சி பாப்பா பிறந்தநாள்" பதிவும் இத்தகைய எண்ணங்களினால் எழுதப்பட்டது தான். என் முதல் குழந்தை தவறிய அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு அவகாசம் தேவை பட்டது. அதற்காக நாங்கள் குழந்தை பேற்றை தள்ளி போட, "அவளுக்கு கர்ப்ப பைல ஏதோ கோளாறு அதான் முதல் குழந்தை பிறந்து இறந்திடிச்சு, இனிமே அவளுக்கு குழந்தையே பிறக்காது." என்று இவர்கள் தான் டாக்டர் போல் என் காது படவே பேசியவர்கள் பலர்.
நீங்கள் சொல்வது போல் குழந்தை பிறந்து விட்டாலும் வேறு காரணங்களை தேடுவார்கள் மற்றவரை காயபடுத்த(அய்யய்யோ ! உனக்கு பையன் பொறக்கலையே) பிள்ளை இல்லையென்றால் ஒருவிதம் பிறந்து விட்டால் வேறு விதம். மொத்தத்தில் நம் மதிப்பிற்கு தகுதியற்றவர்கள்.
இப்போது உள்ள புதிய தம்பதியினர்களுகு தேவையான மிகவும் அருமையான கட்டுரையை பகிர்ந்து இருக்கீங்க ஹுஸைனாம்மா
யுத் ஃபுல் விகடனில் வந்த்மைக்கு வாழ்த்துக்கள்
காலம் காலமாக பெண்களையே குறை குத்தம் சொல்வது வழ்மையாக உள்ளது
அதுவும் வேண்டுமேன்றே திரும்ப திரும்ப கேட்பது. குத்தி காண்பிப்பதுஇது போல இன்னும் பலர் ப்மாறவே இல்லை,
டாக்டர்கள் இப்படி சிகிச்சை கொடுத்து கொடுத்து அதிக மாத்திர உட்கொண்ட்தால் ஒரு பொண்ணுக்கு ஓவர் ஹீட் கர்ப்ப்பை யே புண்ணாகி விட்ட்து.
நல்ல ஆய்வு. சமூகத்தில் வாழும்போது இந்த மாதிரி பிரச்சினைகள் வரத்தான் செய்யும். சில பெண்களால் இந்த அழுத்தத்தைத் தாங்க முடிவதில்லை. அவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
மனம் துவளாமல் இருப்பது தான் குழந்தை பாக்கியம் பெற முதல் வழி. சீக்கிரமே மழலைச் செல்வம் உங்களை மகிழ வைக்கும்.
நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்!
அருமையான பயனுள்ள பகிர்வு.. பாராட்டுக்கள்..
வெகு இனிமையான அறிவு பூர்வமான பதிவு. நல்ல புரிதலோடு எழுதி இருக்கிறீர்கள்.இவ்வளவு பாசிடிவான பதிவு பல பேரின் மனக் குறைகளைத் தவிர்க்கும் என்று நம்புகிறேன். வாழ்த்ஹ்துகள் ஹுசைனம்மா.
அளவுக்கதிகமான மன அழுத்தம் கூட குழந்தை பிறப்பை தள்ளிப் போடுமாம்.... டாக்டர் சொன்னது.
நாலா பக்கத்துலேர்ந்தும் கிளம்பி வர்ற கேள்விக்கணைகளே அந்தப்பொண்ணுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திடும்ங்கறது உபரித்தகவல்.
இந்தக் கேள்வியை ஆரம்ப நாட்களில் நானும் எதிர்கொண்டிருக்கிறேன்... இதனாலேயே சீக்கிரம் ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தது உண்டு...
நல்ல அலசல்.. விகடனில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்
எனக்கு தெரிஞ்சவங்க கல்யாணம் ஆன் அடுத்த மாதமே ப்ரெக்னன்ட் ஆக, அவங்க மாமியார் சொல்லியிருக்காங்க... 'குழந்தையை கலைத்துவிடு..'... ஏன்னு கேட்டா அவங்க மகனுடைய சந்தோஷம் போய்டுமாம்.. இது எப்டி இருக்கு... குறை சொல்றவங்க இப்டின்னாலும் குறை சொல்வாங்க... அப்டின்னாலும் சொல்வாங்க.. இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுடணும்.... உங்களோட முள்ளை முள்ளால் எடுக்கிற டெக்னிக்கும் நல்லாருக்கு... கண்டிப்பா நல்ல பலன் இருக்கும்.
விசேஷம் என்கிற வார்த்தைக்கு இப்டி ஒரு அபத்தமான அர்த்தத்தை கொடுத்ததே சினிமான்னு நினைக்கிறேன். அதிக படிப்பு, பதவிகளில் இருக்கும் அடுத்த தலைமுறையிடமாவது இந்த கொடுமை மறையும் என்று நம்புவோம்.
விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
குழந்தைகள் உண்டாவதில் உள்ள பிரச்சனை குறித்து அடியேனும் நன்கு அறிவேன்
வருகை தந்து, கருத்து தெரிவித்து, தங்கள் எண்ணங்களையும், கண்ட/கேட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி!! இவை எல்லாமே, அவசியப்படுபவர்களுக்கு மன உறுதியையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் அளிக்குமென நம்புகிறேன்.
Nice post akka... nice tips for everyone...;) Most couple are effected pyschologically by peer pressure rather than not having the child as you said... certain things are easier said than done, this is one of it I guess...:(
அருமையான கட்டுரை.
குழந்தை இல்லை என்பதைப் பாவத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும் சமூகத்தில் எட்டு ஆண்டுகள் மன உளைச்சலில் இருந்துருக்கேன் நான்.
ஒன்பதாவது வருசம் முடிஞ்சபின் மகள் கிடைத்தாள்!
Post a Comment