ஆட்சித் தலைவரைச் சந்திக்க, அந்த ஊரின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். நகரத்திலிருந்து வெளியே செல்லவேண்டுமென்றால் அவர்களின் ஊரைக் கடந்துதான் செல்லவேண்டும். தாங்கள் ஏற்றுக் கொண்ட மாற்றங்களைத் தெரிவிக்கவும், அப்படியே தங்களின் நிலைகளை விளக்கிக் கூறி, தம் கோரிக்கைகளையும் பரிந்துரைக்கு ஏற்கும்படிக் கேட்டுக் கொள்ளவும் வந்திருந்தனர்.
பிரதிநிதிகளில் முக்கியமானவர் பேச ஆரம்பித்தார், “கலீஃபா அவர்களே!! நாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறோம். ஐவேளை தொழுகைகளையும் தவறாது தொழுதுகொள்கிறோம். ஆனால், ’ஸகாத்’ மட்டும் எங்களால் செலுத்தமுடியாது!! இந்த எங்களின் நிபந்தனை ஏற்கப்படுமெனில், இப்போதே எங்கள் ஊர் மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்கத் தயாராக உள்ளோம்.”
கலீஃபாவின் உடனிருந்த தோழர்களும் - உமர் (ரலி) உட்பட- இந்நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்கள். ”முஹம்மது (ஸல்) இறந்துவிட்ட இச்சூழ்நிலையில், எதிரிகள் பெருகிவரும் வேளையில், இக்கூட்டத்தாரையும் நம்மோடு இணைத்துக் கொண்டால், நம் பலம் பெருகும். எனவே, சம்மதியுங்கள்” என்றார்கள்.
கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் அப்பிரதிநிதிகளிடம், “இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்றால், அதன் அத்தனை அடிப்படை அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஒன்றை ஏற்று, ஒன்றை விட்டுவிடுகிறீர்கள் என்றால், இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களாகிறீர்கள். இஸ்லாத்தை உங்களின் வாழ்க்கை நெறியாக்கிக் கொள்ளும்பட்சத்தில், நீங்கள் கொடுக்கவேண்டிய ஸகாத், ஒரு ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றின் அளவே இருந்தாலுங்கூட, அதை உங்களிடமிருந்து நான் பெறாது விடமாட்டேன்” என்று சொல்லியனுப்பினார்கள்!!
ரமதான் என்றதும் நினைவுக்கு வருவது நோன்பு மட்டுமல்ல, ‘ஸகாத்’ எனப்படும் வரியும்தான்!! இதைத் தானம், தர்மமென்று சிலர் சொல்வர். அதைவிட, இது இஸ்லாம் விதித்த ‘சொத்தின்மீதான வரி’ என்பதுதான் சரியானது. ‘ஸகாத்’ என்ற சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்துதல்’, ‘வளர்ச்சியடைதல்’ என்று அர்த்தங்கள் உண்டு. சொத்திற்குரிய வரியைக் கொடுத்துத் தூய்மைப்படுத்திப் பெருக வைத்தல் என்று சொல்லலாம். ஸகாத் கொடுப்பதால், சொத்துக்கள் மட்டுமல்ல, கொடுப்பவரின் உள்ளமும் தூய்மை பெறும். இறைவனின் அருளும் பெருகும்.
நம்மிடம் இருக்கும் எல்லாவிதமான சொத்திற்கும் - வீடு, நிலம், நகை, விவசாய விளைபொருட்கள், கால்நடைகள், வருமானம், இருப்புத்தொகை, கடனாக கொடுத்துள்ள தொகை - இப்படி எல்லாவற்றின்மீதும், ’தனக்குப் போய்த்தான் தானமும், தர்மமும்’ என்பதாக, சொந்தத்தேவைக்குப் போக மிஞ்சியவற்றின்மீது மட்டுமே வரி கடமையாகிறது. பொருளைப் பொறுத்து, குறைந்த பட்சம் 2.5% முதல் குறிப்பிட்ட சதவகிதம் வரி உண்டு.
ஸகாத் வரியின் நோக்கம், செல்வம் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல், பரவலாக்கப்பட வேண்டும். இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதன்மூலம், அவர்களும் பின்னாட்களில் ஸகாத் கொடுக்கக்கூடியவர்களாய் ஆகுமளவு வளம்பெற வேண்டும் என்பதே. இதன்மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும்.
’ஸகாத் தொகை கொடுப்பதற்கு அதிகத் தகுதியுடையவர்கள் உறவினர்களே’ மற்றும் ’ஸகாத்தை ஒருவரின் சொந்த ஊரிலேயே கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்ற அறிவுறுத்தல்கள் தம் உற்றார், பிறந்த ஊரை முன்னேற்றுவதே ஒருவரின் முதல் கடமை என்பது புரியவரும்.
ஸகாத் கொடுப்பதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. அவற்றில் முதலாவது, எந்தச் சொத்தின்மீது ஸகாத் கொடுக்கிறீர்களோ, அதன் முழுமுதல் சொந்தக்காரர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அதாவது அந்தச் சொத்தின்மீது எல்லா உரிமையும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களின் தேவைக்குப் போக, குறிப்பிட்ட அதிகபட்ச அளவை அடைந்திருக்க வேண்டும். அந்தச் சொத்து (விளைபொருட்கள் தவிர) உங்களை அடைந்து ஓராண்டு (இஸ்லாமிய வருடம்) நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஸகாத் கடமையாகும் பொருள் நம்மிடம் ஒரு வருடம் முழுமையாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பார்த்தால், இந்த வருடம் முஹர்ரம் மாதத்தில் ஒரு சொத்து வாங்குகிறீர்கள் என்றால், அது வாங்கி ஒரு வருடம் முழுமையடைந்தவுடன்தான் வரி கடமையாகிறது. அதன்படி, இந்த ரமலான் மாதம் அதற்கு வரி கொடுக்க வேண்டாம். அதே சமயம், அடுத்த ரமலான் வரும்வரை காத்திருக்காமல், முஹர்ரமிலேயே வரி கொடுத்துவிடவேண்டும். ஆக, இந்திய இன்கம்டாக்ஸிற்கு மார்ச் மாதம் மாதிரி, ஸகாத்திற்கு ரமலான் மாதம் ’எல்லை’ கிடையாது. ஒருபொருள் எவ்வப்போது அதன் ஓராண்டுகால எல்லையை அடைந்துவிடுகிறதோ அப்போது அதன் வரியைச் செலுத்திவிடவேண்டும்.
எனில் ரமலான் மாதம் ஏன்? அம்மாதத்தில் செய்யும் நற்செயல்கள் அதிகமதிக நன்மையைப் பெற்றுத் தரும் என்பதால் இருக்கலாம். எனினும், அததற்கான வரியை, தாமதப்படுத்தாமல் அவ்வப்போதே செலுத்திவிடுவதே நல்லது. மேலும், நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒருவகையில் பொருளாதார அழுத்தத்தையும் குறைக்கும். அதாவது, ரமலான் மாதத்தில் கணக்குபோட்டு ஸகாத் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், ஸகாத்தின் மொத்தத் தொகையை ஒரே நேரத்தில் புரட்டுவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கலாம். அதுவே ஒவ்வொரு பொருளுக்கும் , அதை வாங்கிய மாதத்தில் ஸகாத் என்று கொடுத்து வந்தால், சிரமம் குறையும்.
மேலும், மொத்தமாக ரமலானில் கொடுக்கும்போது, அந்த மாதத்திற்குள் ஸகாத்தைக் கொடுத்து முடித்துவிட வேண்டும் என்று ஏற்படுத்திக் கொண்ட கட்டாயத்தால், சில வேளைகளில் தகுதியற்றவர்களுக்குக் கூட கொடுத்து விட நேரிடுகிறது. அதுவே ஸகாத்தை வருடம் முழுதும் பரவலாகக் கொடுத்து வந்தோமானால், தக்கமுறையில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இருப்பினும், வருடமொருமுறை மொத்தமாகக் கொடுக்க நினைக்கிறோம் என்றால், அத்தொகையைப் பயனுள்ள வகையில் செலவழிப்பது நல்லது. வெறுமே சிலருக்கு 500, 1000 என்று கொடுக்காமல், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்கேற்ற தொழில்செய்ய உதவிகள் செய்து, அவர்களும் ஸகாத் கொடுக்குமளவு தன்னிறைவு பெறவைப்பது பொருத்தமானது. இதுபோலவே பலரும் கூட்டாகச் சேர்ந்து ஸகாத் தொகையை ஒன்றிணைத்து பெரிய அளவில் பயன்கள் தரக்கூடிய நல்லகாரியங்கள் செய்யலாம்.
திருக்குர் ஆனில், “ஸகாத்தைச் செலுத்துவீர்களாக” என்று மக்களுக்கு அறிவுறுத்தியதுபோலவே, “அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை எடுப்பீராக” என்றும் நபி(ஸல்) அவர்களுக்கு ஆணையிடுகிறான் இறைவன். இஸ்லாமிய ஆட்சியில் ஸகாத் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படவேண்டும். அரசு அதை ஒருங்கிணைத்து, மக்களின் நலத்திட்டங்களிலும், பாதுகாப்பிற்கும் செலவழிக்கும்.
இதைச் சுட்டிக்காட்டி, சிலர் தம் நாட்டில் செலுத்தும் வரிகளை ஸகாத்தில் கழிப்பார்கள். அது தவறு. ”ஒருவருடைய சொத்தில் ஜகாத் சொடுத்துவிட்டு, அதே நேரம் அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு வேறு வரிகளும் இருந்தால் அதனையும் ஒருவர் தன் சொத்தில் இருந்து கொடுக்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, நாம் இந்திய/தாம் வாழும் நாட்டின் அரசிற்குச் செலுத்தும் வருமான/சொத்து/இத்யாதி வரிகள் ‘ஸகாத்’தில் அடங்காது. ஸகாத் செலுத்தப்படுவதற்கு இஸ்லாமிய அரசே தகுதிபெறும்.
முன்காலத்தில் இஸ்லாமிய அரசுகள், வேறு நிலையான வருமானங்கள் அதிகம் இல்லாத நிலையில் தம் மக்களிடமிருந்து பெற்ற ஜகாத், ஜிஸ்யா வரிகளே ஆட்சி நடத்த உதவின. ஜகாத்தைப் போலவே ஜிஸ்யாவிற்கும் ’தன்னிறைவு’ போன்ற நிபந்தனைகள் இருந்தது. தற்காலத்திய இஸ்லாமிய நாடுகளில் வேறு நிலையான வருமானங்கள் உள்ளதால், அந்நாட்டு அரசாங்கங்களால் ஸகாத் வசூலிக்கப்படுவதில்லை (என்பது என் எண்ணம்).
மக்களின் ஸகாத்தை ஒன்றிணைத்து, எல்லாத் துறைகளிலும் பெரிய பெரிய நல்ல திட்டங்களைச் செயல்படுத்த இன்று அரசாங்கத்தைப்போல கட்டுக்கோப்பான அமைப்பு எதுவும் இல்லாததால், மக்கள் சில்லறை சில்லறையாக ஸகாத்தை விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ’ஸதகா’ எனும் நன்கொடை கொடுக்க வேண்டிய முறையில் ஸகாத்தைக் கொடுத்து வருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதனாலேயே, முழு வளர்ச்சி நிலையை எட்ட முடியவில்லை. தற்காலங்களில் சில முஸ்லிம் அமைப்புகளும், சில ஊர்களின் ஜமாத்களும் ‘பைத்துல் மால்’ என்ற நிதிக்கருவூல அமைப்பை ஏற்படுத்தி பணம் வசூலித்து வருகிறார்கள். இவற்றின்மூலம், பெரும்பாலும் கல்வி உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லாக் கடன், பெண்கள் திருமண உதவி என்று கொடுத்து வருகிறார்கள்.
எனினும், என் மனதிற்கு, ”யானை தன் பலம் அறியாது” என்பதாக நாம் இன்னும் “ஸகாத்”தின் முழுபலத்தை அறிந்திடவில்லை என்றே தோன்றுகிறது. இறைவனருளால், இக்காலங்களில் இஸ்லாமியர்களில் செல்வந்தர்கள் பெருகியுள்ளார்கள். ஒரு ஊரைச் சேர்ந்த ஒருசிலரின் ஸகாத்தை ஒன்றுசேர்த்தாலே, அவ்வூரை வளம் கொழிக்க வைத்து, தன்னிறைவு பெறச் செய்யலாம், இன்ஷா அல்லாஹ். ஆனால், அதற்கான விழிப்புணர்வும், திறம்பட முன்னெடுத்துச் செயலாற்ற வேண்டியவர்களைக் கண்டடைவதுமே இன்றைய அவசியம்.
|
Tweet | |||
20 comments:
ஸகாத் பற்றிய நல்ல விவரங்கள் அறிந்து மகிழ்ச்சி ஹுசைனம்மா....
த.ம. 1
புதிய தகவல்கள்.. பகிர்விற்கு நன்றி ஹுஸைனம்மா..
அருமையான பகிர்வு
புதையலுக்கு மேல் அமர்ந்துக் கொண்டு பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் மனித்னைப் போல்
ஸகாத்தின் பொருளதாரத் திட்டம் அது செயல்படுத்த நினைக்கும் புரட்சிக மாற்றம் இவைகளை அறியாமல் இருக்கிற அவலத்தை மிக துல்லியமாக சுட்டி காட்டியுள்ளிர்கள் வாழ்த்துகள்
unmaiyaana thakaval!
வசதியுடையவர்கள் தங்களின் கடமையை உணர்ந்து ஒவ்வொரு ஊரிலும் பைத்துல் மால் ஏற்படுத்தி ஏழைகளற்ற சமூகம் ஏற்பட முயற்ச்சிக்க வேண்டும்.
இரண்டு நாள் முன்பு இந்த ஸகாத் பற்றி (அதன் பெயர் ஸகாத் என்று இப்போதுதான் தெரியும்) நண்பர் ஒருவரிடம் விவரம் கேட்டேன். அவர் நோன்பில் இருந்தாலும் இந்த விவரம் சரியாகத் தெரியவில்லை, அப்புறம் எஸ் எம் எஸ் பண்ணுகிறேன் என்று சொல்லி மறந்து விட்டிருந்தார். இங்கு தெரிந்து கொண்டேன்.
வெங்கட் - நன்றி - கருத்திற்கும், ஓட்டிற்கும்!
அமைதிக்கா - நன்றிக்கா.
ஹைதர் அலி -
//புதையலுக்கு மேல் அமர்ந்துக் கொண்டு பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் மனிதன்//
அப்படித்தான் இருக்கிறோம். நன்றி கருத்துக்கு.
சீனி -நன்றிங்க.
சுவனப்பிரியன் - ஆம், வசதியுடைவர்கள்தான் பொறுப்பெடுக்க வேண்டும்.
ஸ்ரீராம் சார் - வருகைக்கு நன்றி. விபரஙக்ள் அறிந்துகொண்டது மகிழ்ச்சி.
ஒரு சேஞ்சுக்கு, இந்தப் பதிவின் லிங்கை உங்கள் நண்பருக்கு நீங்கள் எஸ்.எம்.எஸ். செய்து விடுங்களேன்!! :-D
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி..
மாஷா அல்லாஹ்.. சிறந்த பகிர்வு..
சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்...
உண்மை தான் நம் மக்கள் இன்னும் யானையின் பலம் அறியாது போன்றே உள்ளனர்... அதை மாற்ற நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்போமாக இன்ஷா அல்லாஹ்...
சலாம் ஹுஸைனம்மா...
ஸகாத் பற்று எளிமையான விளக்கங்கள்... மாஷா அல்லாஹ்..அருமையான மற்றும் அவசியமான கட்டுரை....
நீங்கள் சொல்வது போல், இஸ்லாமிய செல்வந்தர்கள் அதிகரித்து உள்ளார்கள், முறையாக ஜாகத் கொடுத்தால் ஏழைகளின் எண்ணிக்கையை நிச்சயம் குறைக்கலாம்...செய்வார்களா????
ஸகாத் பற்றிய புதிய தகவல்கள் அறிந்துகொண்டோம்.
ஸகாத் பற்று அருமையான விளக்கங்கள்... மாஷா அல்லாஹ்..அருமையான மற்றும் அவசியமான கட்டுரை....
ஈகை - இதை இதைவிடவும் அழகாக சொல்லிவிட முடியாது. அருமையான பதிவு ஹுசைனம்மா. நிறைய்ய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
interesting. எல்லா மதங்களிலும் இப்படி ஒரு நியமம் இருக்கிறது. கடைபிடிப்பவர்கள் தான் சொற்பம்.
வசூலித்த சகாத்தை 'இல்லாதோருக்கு' எப்படிப் பிரித்தளிப்பது என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? இந்த இடத்தில் பிற மதங்கள் சறுக்கியிருக்கின்றன.
ஸகாத் வரியின் நோக்கம், செல்வம் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல், பரவலாக்கப்பட வேண்டும். இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதன்மூலம், அவர்களும் பின்னாட்களில் ஸகாத் கொடுக்கக்கூடியவர்களாய் ஆகுமளவு வளம்பெற வேண்டும் என்பதே. இதன்மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும். //
ஸ்காத் பற்றி தெரிந்து கொண்டேன்.
நல்ல பகிர்வு.
காரைக்கால் வானொலி நிலையத்தில் காலை ரமலான் சிறப்பு செய்தியாக இன்று
1.பசித்தவனுக்கு புசிப்பதற்கு உணவு அளியுங்கள்.
2. அநாதைகளின் தலையை வருடிக் கொடுங்கள்.
என்ற மார்க்க சிந்தனை சொன்னார்கள்.
நீங்களும் இன்று இதே மாதிரி பதிவு இட்டு இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
எனினும், என் மனதிற்கு, ”யானை தன் பலம் அறியாது” என்பதாக நாம் இன்னும் “ஸகாத்”தின் முழுபலத்தை அறிந்திடவில்லை என்றே தோன்றுகிறது. இறைவனருளால், இக்காலங்களில் இஸ்லாமியர்களில் செல்வந்தர்கள் பெருகியுள்ளார்கள். ஒரு ஊரைச் சேர்ந்த ஒருசிலரின் ஸகாத்தை ஒன்றுசேர்த்தாலே, அவ்வூரை வளம் கொழிக்க வைத்து, தன்னிறைவு பெறச் செய்யலாம், இன்ஷா அல்லாஹ். ஆனால், அதற்கான விழிப்புணர்வும், திறம்பட முன்னெடுத்துச் செயலாற்ற வேண்டியவர்களைக் கண்டடைவதுமே இன்றைய அவசியம்.//
நல்ல கருத்து.
இருப்பவர், இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
மாதாஜி ஆனவுடன் நல்ல கருத்துக்களை எடுத்து சொல்வது கடமையாக ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
யாஸ்மின் - வ அலைக்கும் ஸலாம். இன்ஷா அல்லாஹ், முன்னேற்றஙக்ள் வரவெண்டும்.
சிராஜ் - ஸலாம்.
//முறையாக ஜாகத் கொடுத்தால்//
இதுதான் செக் பாயிண்ட், இத மட்டும் சரியா செஞ்சா - கண்டிப்பா, //ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்// இன்ஷா அல்லாஹ்.
மாதேவி - மகிழ்ச்சிப்பா.
சிநேகிதி - நன்றிப்பா.
தென்றல் - ரொம்ப மகிழ்ச்சிப்பா.
கோமதிக்கா - ரொம்ப நன்றிக்கா கருத்துக்கு.
//மாதாஜி ஆனவுடன் நல்ல கருத்துக்களை//
ஹா.. ஹா..
அப்பாதுரை - //எல்லா மதங்களிலும் இப்படி ஒரு நியமம் இருக்கிறது//
புதிய தகவல் எனக்கு. அன்ன தானம் அறிவேன், வேறு தானங்கள் - ஏழ்மையைப் போக்கவல்ல தானங்கள் - இருப்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
//சகாத்தை 'இல்லாதோருக்கு' எப்படிப் பிரித்தளிப்பது//
இப்படித்தான்:: :-))))
[9:60] (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
Post a Comment