Pages

தேடல்களும், விடைகளும்




சின்ன அம்மிணி அழைச்ச தொடர்பதிவுக்கு எழுத இப்பத்தான் எழுத முடிஞ்சுது. கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதான் லேட்டு!!

சின்ன வயசுல, கள்ளங்கபடறியா எல்லாப் புள்ளைகளையும் போல, நானும் தெரியாம முழுங்கிட்ட பபிள்கம்மை வெளியே கொண்டுவர தலைகீழா நின்னுகிட்டே, ”பபிள்கம் வெளியே வந்துரட்டும். வயித்துக்குள்ளேயே வெடிச்சிடக்கூடாது அல்லாவே”ன்னு  பிரார்த்தனை செய்யிற அளவுக்குத்தான் எனக்கும் பக்திப் பரவசம் இருந்துது.  ஆனா, இப்பவும் அப்படியேவா இருப்போம்? ”ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி”ன்னு தெரியும்தானே.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊரில் பிறந்ததால், என்னைச் சுற்றி எல்லாரும் முஸ்லிம்களே.  எளியவர்களே அதிகம்.  தொழுகை, குர் ஆன், நோன்பு என்பவை வசதி படைத்தவர்களுக்கே உரியது என்ற அறியாமையால், ஓரளவு வசதி படைத்த வீட்டினர் மட்டுமே அவற்றைச் செய்து வந்தனர் (அப்போது). காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாறுதல்கள் பலரின் அறிவுக் கண்ணைத் திறந்தது. தொழுகை, வசதி பார்த்தோ, ஏற்றத்தாழ்வு பார்த்தோ செய்ய வேண்டியதல்ல; படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் உரியதே என்றும் அறிந்து கொண்டோம்.

எப்போதும் எல்லாவற்றிற்கும் ஒரு “ஏன்” என்ற கேள்வி வரும் என் மனதில். அது, நோன்பாகட்டும், தொழுகையாகட்டும், பள்ளிப் பாடங்கள் ஆகட்டும், செய்திகளாகட்டும், “ஏன்” என்ற கேள்வி வராமல் இருந்ததில்லை. வீட்டில் என் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் சொல்ல அதிகம் அறிந்தவர்கள் இல்லை; நர்கீஸ், முஸ்லிம் முரசு போன்ற புத்தகங்கள் அளிக்கும் தீனி பற்றாக்குறையாயிருந்தது.

என் பள்ளிப்பருவம் முழுதும் கிறிஸ்தவ, இந்துப் பள்ளிகளிலேயே கழிந்தது. கிறித்தவப் பள்ளிகளில் கதைகள் மூலமே பெரும்பாலும் போதனைகள் நடைபெறுவதால், நம்மையும் அறியாமல் ஒன்றி விடுவோம். ஆனால், பிரார்த்தனைகளில், ஆண்டவரே எனப்படும்போதெல்லாம், நான் “அல்லாஹ்வே” என்று சொல்லிக் கொள்வேன். வேறு சிலர், கிறிஸ்தவர்களாகவே மாறிவிட்டிருந்த போது, நான் மட்டும் எப்படி இப்படிச் செய்து கொண்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம், என் வீட்டிலும் யாரும் ஒருபோதும் எனக்குப் போதனைகள் செய்ததில்லை. ஆனால், என் “ஈமான்” இன்னும் உறுதிபெற்றது.

என் வாப்பா சவூதி சென்றதில், பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல; இஸ்லாம் குறித்த பல சரியான தகவல்களும் அறிந்துகொண்டோம். என் வாப்பா, லீவில் ஊருக்கு வரும்போது, தன் நண்பர்களிடம், உறவினர்களிடம் பேசும்போது, நாம் எவ்வாறான சில தவறான முறையில் வழிபாடுகள் செய்கிறோம், அவை செய்யவேண்டிய முறைகள், ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்பவை குறித்துப் பேசிக்கொள்ளும்போது கேட்டுக் கொண்டிருப்பேன்.  வயதுக்கு வருமுன்பே பெண்பிள்ளைகளின் படிப்பை நிறுத்தும் என் ஊர் மக்களிடையே, அக்காலத்திலேயே தன் தங்கைகள், மகள்கள் என்று ஆறு பெண்களையும் பட்டப்படிப்பு படிக்கவைத்து, வேலையும் செய்ய ஊக்கமளித்த என் தந்தையும் இஸ்லாமை சரியானபடி புரிந்துகொள்ள ஒரு காரணம்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, ஒரு முஸ்லிம் ஹாஸ்டலில் தங்கியபோது குர் ஆன், தொழுகை குறித்தச் சரியான விளக்கங்களால், இறைவனை இன்னும் நெருங்கி வர வாய்ப்புக்கிடைத்தது.  அச்சமயத்தில் இஸ்லாமியர்களிடையேயும், இஸ்லாம், கல்வி, பெண்கள் உரிமை, தர்கா வழிபாட்டின் தீமைகள் போன்றவை குறித்தும் அதிக விழிப்புணர்வு பரவத் தொடங்கியிருந்தது.

அப்போது, எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், முஹர்ரம் மாதத்தில் ஒருவித உருவ வழிபாடு நடத்துவார்கள். அதற்கென்று அருகில் ஒரு தலம் வைத்து, அதில் முஹர்ரம் மாதம் வந்தால், திருவிழா நடக்கும். அவர்கள் வீட்டில் மின் இணைப்பு கிடையாதென்பதால், ஒவ்வொரு வருடமும், அந்தப் பத்து, பதினைந்து நாட்கள் மட்டும், எங்கள் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக் கொள்வார்கள் (இலவசமாகத்தான்).  என் மாமா ஒருவரும், ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நானும் என் அம்மாவிடம் இது தவறான வழிபாடு; இஸ்லாம் அனுமதிக்கவில்லை; அதனால் மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று வாதிட்டோம். என் அம்மாவோ, ஒரே முடிவாக, ”அதே இஸ்லாத்தில்தான், “உன் அண்டை வீட்டார் பசித்திருக்க, நீ உண்ணாதே”ன்னும் ஹதீஸ் இருக்கு. இது அவர்கள் உணவு குறித்தது மட்டுமல்ல, அயலாரோடு நட்போடு வாழ வேண்டும் என்பதையும்தான் உணர்த்துகிறது. நான் அவ்வழிப்பாட்டு முறையை விரும்புகிறேனோ, இல்லையோ, அவர்கள் என்னிடம் உதவி கேட்கும்போது மறுக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டார். இப்பதில், அதிகம் அறிந்தவளாய் நினைத்துக் கொண்டிருந்த எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பின்னாட்களில், பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் நண்பர்களும், நானும் சக வழிபாட்டு முறைகளை, பழக்கங்களைக் குறித்துப் பேசிக் கொள்வோம். ஒரு விஷயம் குறித்து, மற்ற மதங்களில் இப்படிச் செய்யப் படுகிறது என்றால், இஸ்லாத்தில் அது எவ்வாறாகக் கூறப்படுகிறது என்பது குறித்து உடனே தேடுவது என் வழக்கமாக இருந்தது. இவ்வாறான தேடல்களே என்னை மென்மேலும் செம்மைப் படுத்தின. ஆனால், இஸ்லாம் குறித்த உயர்வான எண்ணங்கள் கிட்டியபோதும், மற்றவர்களைப் பழிக்கும் அகந்தையாக ஒருபோதும் அது மாறவில்லை.

கல்லூரிக்கு வந்துவிட்டதால், இப்போது என் இஸ்லாமியத் தேடல்கள் பெண்களின் உரிமைகள் குறித்ததாக இருந்தது. ஆனால், அவற்றுக்கான விடைகள், கல்லூரி முடித்தபின், என் தந்தையோடு அமீரகம் வந்தபின்னேதான் அதிகம் கிடைத்தது. இஸ்லாம் குறித்த நிறைய புத்தகங்கள் கிடைத்தன. அப்போ இங்கு இணையமும் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியதால் அதிலும் தேடலைத் துவங்கினேன். என் தோழியின் தந்தை மற்றும் என் தந்தையின் நண்பரின் மகன் என்று பலர் என் தேடல்களைச் சரியான பாதையில் செலுத்த உதவினர்.

என்னைப் பொறுத்தளவில், “இறைவன் இருக்கிறான்” என்பதில் எப்போதுமே சந்தேகம் வந்தது கிடையாது. இஸ்லாத்தின் சரியான வழிமுறைகள்தான் என் தேடல். குடும்பம் என்ற பந்தத்தை வலியுறுத்தி, ஒவ்வொருவரின் பொறுப்புகளை வரையறுத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும், எவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பதை  விளக்கமாகக் கூறுவதாலேயே என்னைக் கவர்ந்தது. எல்லாவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே என்னை உற்சாகமாக இருக்க வைக்கிறது.

ஒவ்வொரு முறையும் “இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லும்போது, எந்தவொரு காரியமும், என்னால் முடியாவிடிலும், என்னிறைவன் நடத்தித் தருவான் என்ற நம்பிக்கை, எனக்கு அதிகத் தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கிறது.  அதே சமயம், இறைவன் துணையும் வேண்டும் என்பது,  “எல்லாம் எனக்குத் தெரியும்; என்னால் முடியாததில்லை” என்ற கனம் தலையில் ஏறாமல் காத்து, பணிவைத் தருகிறது.

“..என்னையே நீங்கள்  பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கிறேன்..” என்ற இறைவசனம் என் பிரார்த்தனைகள் வீண்போகாது என்ற நம்பிக்கையைத் தருகின்றன.

“... தண்ணீர் தன் வாய்க்குத் தானாக வந்தடைய வேண்டுமென்று தன் இருகைகளையும் விரித்து ஏந்தி கொண்டு இருப்பவனைப் போல் இருக்கிறது; இவன் அள்ளாது அது வாயை அடைந்து விடாது..” என்ற வசனம், தன்முனைப்பும் வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை..” என்ற இறைவசனம், எனக்குச் சோதனைகள் வந்தபோது என்னைத் துவண்டு போகாது காத்துக் கொண்டன; இனியும் அப்படியே, இன்ஷா அல்லாஹ்!!

அது(ஆத்மா) சம்பாதித்ததன் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!!”  இது என் செயல்களின் விளைவுகளில் கவனம் செலுத்த வைக்கிறது.

”.. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம்; ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும்...” நன்மைகளையும், தீமைகளையும் எப்புறத்திலிருந்தும் எதிர்பார்க்க எச்சரிக்கிறது.

இன்னும், தோல்விகளைக் கண்டு துவளாமல், இதைவிட நல்லது கிட்டும் என்ற அமைதியை, ”ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது” தருகிறது.

எந்தவொரு விஷயத்தையும் கட்டாயத்தினாலோ அல்லது குடும்ப வழக்கம் என்பதினாலோ ஒரு கட்டத்தில் செய்ய நேர்ந்தாலும், அதைத் தொடர வேண்டுமெனில் நாம் முழுமனதோடு விரும்பினால், நம்பினால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். முஸ்லிமாகப் பிறந்ததால், பெயரளவில் மட்டும் இல்லாது, இன்றும் இஸ்லாமை விரும்பிப் பின்பற்றுகிறேன்; என் மக்களுக்கும் அதைக் குறித்துப் போதிக்கிறேன் எனில், அதன்மீதுள்ள பற்றுதலும், அதனால் நான் அடைந்த பக்குவமுமே காரணம். எனக்கு புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் எல்லாமே தானாக வாய்க்கவில்லை; ஆர்வத்தினால் தேடித்தேடி வாசித்தும், வாதித்தும்  அறிந்துகொண்டிருக்கிறேன்.

”என் தாய் நல்லவள்” என்றொருவர் சொன்னால், உடன்சேர்ந்து மகிழவும்;

“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும்,

“எந்தத் தாயும் நல்லவளில்லை” என்று பிதற்றினால், தவறு அவர் புரிதலில்தானே தவிர, தாயின்மீதில்லை என்பதைப் புரிந்து அமைதியாக விலகிச் செல்லவுமான தெளிவைப் பெற்றதற்கு இஸ்லாமைச் சரியாகப் புரிந்ததே காரணம்!!

”கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு” என்பதாக இன்றும் தேடல் தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் விடை இப்போதே கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் விறுவிறுப்பு குறைந்துவிடுமே!!





Post Comment

46 comments:

malar said...

'''ஆனால், பிரார்த்தனைகளில், ஆண்டவரே எனப்படும்போதெல்லாம், நான் “அல்லாஹ்வே” என்று சொல்லிக் கொள்வேன்.'''

இதே முறையை நானும் என் பள்ளியில் கையாண்டேன்..

பல நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிரீகள்..

பின்பு ஆறுமுகத்தாயை சந்தீர்களா?

இராகவன் நைஜிரியா said...

மிக மிக நல்ல தேடல்கள். உங்களை நினைத்து பெருமையாக இருக்கின்றது. தொடரட்டும் உங்கள் தேடல்கள்.

Chitra said...

எந்தவொரு விஷயத்தையும் கட்டாயத்தினாலோ அல்லது குடும்ப வழக்கம் என்பதினாலோ ஒரு கட்டத்தில் செய்ய நேர்ந்தாலும், அதைத் தொடர வேண்டுமெனில் நாம் முழுமனதோடு விரும்பினால், நம்பினால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். முஸ்லிமாகப் பிறந்ததால், பெயரளவில் மட்டும் இல்லாது, இன்றும் இஸ்லாமை விரும்பிப் பின்பற்றுகிறேன்; என் மக்களுக்கும் அதைக் குறித்துப் போதிக்கிறேன் எனில், அதன்மீதுள்ள பற்றுதலும், அதனால் நான் அடைந்த பக்குவமுமே காரணம். எனக்கு புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் எல்லாமே தானாக வாய்க்கவில்லை; ஆர்வத்தினால் தேடித்தேடி வாசித்தும், வாதித்தும் அறிந்துகொண்டிருக்கிறேன்.

”என் தாய் நல்லவள்” என்றொருவர் சொன்னால், உடன்சேர்ந்து மகிழவும்;

“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும்,

“எந்தத் தாயும் நல்லவளில்லை” என்று பிதற்றினால், தவறு அவர் புரிதலில்தானே தவிர, தாயின்மீதில்லை என்பதைப் புரிந்து அமைதியாக விலகிச் செல்லவுமான தெளிவைப் பெற்றதற்கு இஸ்லாமைச் சரியாகப் புரிந்ததே காரணம்!!



........அட, அட,..... ட்ரங்கு பெட்டி, பொக்கிஷப் பெட்டகம் ஆகி இருக்கிறது. அருமையான கருத்துக்கள். பாராட்டுக்கள்!

ஹேமா said...

தெளிவாக இறைவனை அல்லது நல்வழியைப் புரிந்துகொண்ட விதம் அருமை தோழி.எழுதிய விதம் அதைவிட அருமை.தேடலில் கண்ட சந்தோஷம் எப்போதுமே நிறைவாயிருக்கும் தோழி.வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice post

pudugaithendral said...

அருமையான பகிர்வு ஹுசைனம்மா

- யெஸ்.பாலபாரதி said...

ஹுஸைனம்மா.. அனேகமாக நான் தங்களுக்கு இடும் முதல் பின்னூட்டம் இது. இன்றுதான் உங்கள் வலைபதிவு பக்கம் வர வாய்த்தது... சரளமான எழுத்து நடை.. அனுபவத்தையும் அழகாக சொல்லும் முறை..

இனி அடிக்கடி வருகிறேன்.

வாழ்த்துக்கள்.

தோழன்
பாலா

ஜெய்லானி said...

//என் தந்தையோடு அமீரகம் வந்தபின்னேதான் அதிகம் கிடைத்தது. இஸ்லாம் குறித்த நிறைய புத்தகங்கள் கிடைத்தன.//

உண்மைதாங்க. நம்ம ஊரில் கிடைக்கும் புக்கை விட இங்கு அதிக அளவில் கிடைப்பதும் , நாம் அதை படிக்க நேரமும் இருப்பதும் ஒரு காரணம்.

ஜெய்லானி said...

//”என் தாய் நல்லவள்” என்றொருவர் சொன்னால், உடன்சேர்ந்து மகிழவும்;

“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும்,

“எந்தத் தாயும் நல்லவளில்லை” என்று பிதற்றினால், தவறு அவர் புரிதலில்தானே தவிர, தாயின்மீதில்லை என்பதைப் புரிந்து அமைதியாக விலகிச் செல்லவுமான தெளிவைப் பெற்றதற்கு இஸ்லாமைச் சரியாகப் புரிந்ததே காரணம்!!//

மாஷா அல்லாஹ் , எளிமையாக சரியான விளக்கம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தெளிவாகவும் தைரியமாகவும் எழுதியிருக்கீங்கள் ஹூசைனம்மா.. குட்..

வாசகங்கள் நன்றாக இருந்தன.. பகிர்வுக்கு நன்றி..

ஸாதிகா said...

//என் தாய் நல்லவள்” என்றொருவர் சொன்னால், உடன்சேர்ந்து மகிழவும்;

“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும்,

“எந்தத் தாயும் நல்லவளில்லை” என்று பிதற்றினால், தவறு அவர் புரிதலில்தானே தவிர, தாயின்மீதில்லை என்பதைப் புரிந்து அமைதியாக விலகிச் செல்லவுமான தெளிவைப் பெற்றதற்கு இஸ்லாமைச் சரியாகப் புரிந்ததே காரணம்!!//ஹுசைனம்மா இந்த வரிகளைப்பார்த்து அப்படியே மெய் மெய்சிலிர்த்துவிட்டேன்.ஜசகல்லாஹு ஹைர்.உங்களை நினைத்து உண்மையில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

நாடோடி said...

உங்க‌ளினின் புரித‌லை அழ‌காக‌ விள‌க்குயுள்ளீர்க‌ள்...

Anonymous said...

//கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதான் லேட்டு!!//
இப்படி ஆரம்பிச்சு வானவில் மாதிரி அட்ராக்டிவா எழுதியிருக்கீங்க ஹுசைனம்மா.

//அயலாரோடு நட்போடு வாழ வேண்டும் என்பதையும்தான் உணர்த்துகிறது. நான் அவ்வழிப்பாட்டு முறையை விரும்புகிறேனோ, இல்லையோ, அவர்கள் என்னிடம் உதவி கேட்கும்போது மறுக்க மாட்டேன்//

இந்த புரிதல் எல்லா சமூகத்துக்கும் வரும். வரணும்

உங்களைத்தொடர சொன்னதுக்கு சந்தோஷப்படறேன்.

ரிஷபன் said...

”கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு” என்பதாக இன்றும் தேடல் தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் விடை இப்போதே கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் விறுவிறுப்பு குறைந்துவிடுமே!!

இந்த மன நிலை எல்லோருக்கும் வாய்த்துவிட்டால் பின் ஏது சண்டை சச்சரவு எல்லாம்.. அருமையான பதிவு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எங்களுக்கும் பல விடைகளை தேடி கொடுத்துள்ளீர்கள்... நன்றி சகோதரி

அபி அப்பா said...

கடந்த 1 வாரமாகபடித்த பதிவிலே இது தான் சூப்பர். அழகா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ஹுசைன் அம்மா!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//”என் தாய் நல்லவள்” என்றொருவர் சொன்னால், உடன்சேர்ந்து மகிழவும்;

“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும்,

“எந்தத் தாயும் நல்லவளில்லை” என்று பிதற்றினால், தவறு அவர் புரிதலில்தானே தவிர, தாயின்மீதில்லை என்பதைப் புரிந்து அமைதியாக விலகிச் செல்லவுமான தெளிவைப் பெற்றதற்கு இஸ்லாமைச் சரியாகப் புரிந்ததே காரணம்!!//

inru thaan ithan mulumaiyaana arththam enakkup purindhathu :)) migavum arumai..

Unknown said...

மிக அருமை. மிக அருமை.உஙகள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன். நிச்சயமாக இது உஙகள் MASTERPIECE அல்ஹம்துலில்லாஹ்

Rithu`s Dad said...

//“என் தாய் மட்டுமே நல்லவள்” என்றால், புன்னகையோடு இத்தனை நல்ல தாயைப் பெற்றதற்கு வாழ்த்தவும் //

எளிய விளக்கம்.. இவ்வாறு இருந்துவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ஹுஸைனம்மா..

என் தாய் தான் சிறந்தவள் மற்ற தாய் எவருமே சிறந்தவள் இல்லை என்றுரைப்பதை என்னவென்று சொல்ல??

Rithu`s Dad said...

என்னுடைய கருத்துப்படி, எல்லா மதங்களும் போதிப்பது சக மனிதனை நேசி எல்ல உயிர்களிடமும் அன்பு செலுத்து .. அனைவரும் சமம்.

இதை நாம் ஒவ்வொருவரும் செய்தாலே சிறந்த ஒரு சமூகமும் உலகமும் உருவாகும்..

உங்களுடைய இதுமாதிரியான எளிய சிறந்த நடையிலேயே தங்களுடைய புரிதல்களையும் என்னங்களையும் எழுதுங்கள்.. நாங்களும் இஸ்லாம் பற்றி சரியாக தெரிந்துகொள்கிறோம்.

SUFFIX said...

தேடல்கள் அருமை, பள்ளி பருவங்களில் எனக்கும் இதே போல குழப்பங்கள் தான், இறைவன் உதவியால் சில நண்பர்கள், பெரியோர்களின் சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாக கொஞ்சம் தெளிவு கிடைத்தது, தேடுதல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

//“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை..”//

இந்த வசனத்தை அடிக்கடி நானும் நினைவுகூர்வது உண்டு!!

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு!!

Jaleela Kamal said...

ரொம்ப நெகிழ்வான பதிவு, குர் ஆன் வசனத்துடன். அருமையான விளக்கம்.

"உழவன்" "Uzhavan" said...

பயனுள்ள பல தகவல்கள்.. அருமை

எம்.எம்.அப்துல்லா said...

தொடர்ந்து இறையருள் நிறையட்டும், இன்ஷா அல்லாஹ்.

சுந்தரா said...

அருமை ஹுசைனம்மா...

சொல்லியிருக்கும்விதம் ரொம்பவும் அழகு.

Paleo God said...

அருமையான இடுகை சகோதரி!

நாஸியா said...

எங்க மாமாவும் சவூதி போன பிறகு தான் மவுல்து, ஃபாத்தியா, தர்காவெல்லாத்தையும் விட்டொழிச்சாங்க.. அல்ஹம்துலில்லாஹ்..

நிறைய பேரிடம் கேள்வி பட்டிருக்கேன்.. they have had the right kind of influence from the country, maasha Allah! :)

அன்புத்தோழன் said...

Masha Allah... What an exclnt post....

How great u are....

Apdiye pullarikudhu..... ennaaa... thelivu.... enna nyaaanam..... epdi husainamma ipidilaam...... ungala pola thelivaana sindhanai ellorukkum vaaika pera ellam valla iraivan arul purivaanaaga....

Writing style is jus fantastic....
:-)

வல்லிசிம்ஹன் said...

அன்னையர் தின வாழ்த்துகள் ஹுசைனம்மா.
அத்துடன் இவ்வளவு தெளிவான தேடலுக்கு
வழி செய்த உங்கள் தந்தைக்கும், புரிதல் கூடி நிற்கும் உங்கள் அன்னைக்கும்
என் வணக்கங்கள்.
உங்கள் அன்பு உலகம் எல்லொரையும் அணைக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Mrs.Mano Saminathan said...

”கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு” என்பதாக இன்றும் தேடல் தொடர்கிறது.”

இந்தத் தேடல் இருக்கும்வரைதான் வாழ்க்கை மிக சுவாரசியமாக நகர்ந்து செல்லும். அனைத்தும் கற்றதாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தோமானால் தேடல்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் இழந்து போகும்!

Thenammai Lakshmanan said...

தேடலும் பகிர்வும் அருமை ஹுசைனம்மா.. நானும் உங்கள் போல்தான் நினைப்பேன்,,, அருமை

அரபுத்தமிழன் said...

அருமையான இடுகை சகோதரி!
ஆச்சர்யப் பட வைக்கிறது.
Simply Superb !

மேலும்

//“... தண்ணீர் தன் வாய்க்குத் தானாக வந்தடைய வேண்டுமென்று தன் இருகைகளையும் விரித்து ஏந்தி கொண்டு இருப்பவனைப் போல் இருக்கிறது; இவன் அள்ளாது அது வாயை அடைந்து விடாது..” என்ற வசனம், //

சரியான கருத்துதான் என்றாலும் அது குர்ஆனின் வசனமாக முதல் முறை பார்க்கிறேன். எந்த இடத்தில் என்று தெரிய வில்லை, முடிந்தால் உதவவும்.

ஹுஸைனம்மா said...

அரபுத் தமிழன், அந்த வசன எண் இதோ: 13:14

அரபுத்தமிழன் said...

JazaakkiLLAHU khairan katheeran
for the reference.

அன்புடன் மலிக்கா said...

மிக மிக தெளீவாக தேடல்களை விளக்கியவிதம் மிக அருமை ஹுசைனம்மா..

நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html

கோமதி அரசு said...

அன்பு சகோதரி, அருமையான பதிவு.

செயலுக்கேற்ற விளைவாய் இறைவன் வருவான் எனபதை புரிந்து கொண்ட பதிவு.

//அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையே என்னை உற்சாகமாக இருக்க வைக்கிறது.//

நல்ல இறை நம்பிக்கை.

சின்ன அம்மிணிக்கு நன்றி.
சின்ன அம்மிணிக்கு ஏற்பட்ட சந்தோஷம் எனக்கும் ஏற்பட்டது.

ஹுஸைனம்மா said...

மலரக்கா - வாங்கக்கா. நன்றி.

ராகவன் சார் - வாங்க; நன்றி.

சித்ரா - வாங்கப்பா; நன்றி.

ஹேமா - வாங்கப்பா; ஆமா, தேடலில் பெற்றது அதிக சந்ந்தோஷமே!!

டி.வி.ஆர். சார் - வாங்க; வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

தென்றல் - வாங்கப்பா, நன்றி.

ஹுஸைனம்மா said...

பாலபாரதி - வாங்க. ஆமா, முதல் பின்னூட்டம் இது. நன்றி. அடிக்கடி வருவதாகச் சொன்னதற்கு மகிழ்ச்சி. தவறாது வாருங்கள்.

ஜெய்லானி - வாங்க; ஆமா, இப்ப மாதிரி இந்தியாவில அப்ப அதிகமாப் புத்தகங்கள் கிடையாது. இங்க எளிய ஆங்கிலத்துல நிறைய புத்தகங்கள் கிடைச்சுது. நன்றி ஜெய்லானி.

எல் போர்ட் - நன்றிப்பா. பாராட்டுக்கு மகிழ்ச்சி.

ஷாஹுல் - வாங்க. நன்றி.

ஸாதிகா அக்கா - வாங்க அக்கா. மென்மேலும் சிறக்க உங்கள் துஆவும் வேண்டும் அக்கா. நன்றி.

நாடோடி - வாங்க. நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

சின்ன அம்மிணிக்கா - வாங்க. நன்றி அழைப்புக்கு. சரியா எழுதணுமேன்னு ஒரு தயக்கம், அதான் லேட்டாகிடுச்சு. நன்றிக்கா மீண்டும்.

ரிஷபன் சார் - பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி சார்.

அப்பாவி தங்க்ஸ் - நன்றிப்பா.

அபி அப்பா - என்னை மிகவும் நெகிழ வைக்கீறது உங்கள் பாராட்டு; மிகவும் நன்றி,

எல் போர்ட் - மறுபடியும் வாசிச்சீங்களா? நன்றிப்பா.

ஆலியா - நன்றிங்க. வாசகரா மட்டும் இருந்த உங்களைப் பின்னூட்டவும் வைத்ததில மிக மகிழ்ச்சி!!

ஹுஸைனம்மா said...

ரீத்து அப்பா - வாங்க; நன்றிங்க. காலப்போக்கில் ஒரு மாறுதல் அனைவரிடமும் வரும். இஸ்லாம் குறித்து எழுத ஆர்வம் உள்ளது, இறைவன் நாடினால், அவ்வப்போது எழுதுகிறேன்.

ஷஃபிக்ஸ் - வாங்க; நன்றி. ஆமாம், சூழ்நிலைக்கேற்றவாறு தேடுதல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஜலீலாக்கா - நன்றிக்கா.

உழவன் - நன்றி.

அப்துல்லா - நன்றி; இன்ஷா அல்லாஹ், எல்லாருக்கும் இறையருள் நிறையட்டும்!!

சுந்தரா - வாங்க; நன்றி.

ஷங்கர் - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

நாஸியா - நன்றிப்பா. ஆமா, சவூதி போனதுல நிறையபேருக்கு ஒரு தெளிவு கிடச்சது உண்மை.

அன்புத்தோழன் - வாங்க; என்ன இப்பல்லாம் ஆளையே காணோம்? பதிவும் எழுதலையே ஏன்? நலம்தானே?

வல்லிம்மா - வாங்க; நன்றிம்மா. உங்கள் அன்புக்கும், ஆசிக்கும் நன்றி.

மனோ அக்கா - நன்றி அக்கா. ஆமாம், தேடல் என்பது ஆர்வம் இருந்தால்தான் வரும்.

தேனம்மை அக்கா - நன்றி அக்கா; பெரும்பாலும் எல்லாரின் அடிமனதிலும் இதுபோல்தான் நல்லெண்ணம் இருக்கிறது. சில சூழ்நிலைதான் மாற்றிவிடுகிறது.

அரபுத்தமிழன் - வாங்க; நன்றி பாராட்டுக்கு.

ஹுஸைனம்மா said...

மலிக்கா - வாங்கப்பா; நன்றி.

கோமதி அக்கா - வாங்க; நன்றி. மிகவும் மகிழ்ச்சி.

இங்கு வந்து கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அனுபவத்திலும், வயதிலும் பெரியவர்கள் என் கருத்துகள் குறித்து மனமாரப் பாராட்டுவதும், வாழ்த்துவதும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. இறைவன் எப்போதும் என்னை இதுபோன்ற நல்ல மனநிலையிலேயே வைத்திருக்கப் பிரார்த்திக்கிறேன்!!

நன்றி அனைவருக்கும்.

நட்புடன் ஜமால் said...

பதிவைபற்றி நான் புதிததாக ஒன்றும் சொல்லிவிட போவதில்லை.

இந்த இடுக்கையின் வெற்றியாக இங்கே இருக்கு புரிந்துணர்வுகளையே நினைக்கின்றேன்.

அருமை சகோதரி - நிறைய எழுதுங்கள் இது போல, என்னை நான் கேள்வி கேட்டு கொள்ள உதவும்.

Aashiq Ahamed said...

அன்பு சகோதரி அவர்களுக்கு,

அருமையான பதிவு. Jazakallahu Khair.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

சிநேகிதன் அக்பர் said...

//எல்லாவற்றிற்கும் விடை இப்போதே கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் விறுவிறுப்பு குறைந்துவிடுமே!!//

உண்மைதான் போல.

அருமையான பகிர்வு ஹுஸைனம்மா.

புல்லாங்குழல் said...

தெளிவான சிந்தனையை இறைவன் உங்களுக்கு நல்கி இருக்கின்றான் மகளே!அவனது துணையுடன் உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள்.துவா!.