Pages

சப்பாத்தி டேஸ் (Days)




 
 
பள்ளிக்கூடம் முடிந்து ஆட்டோவில் ஏறி, வீடு வரும்வரை எங்க ரெண்டு பேருக்கும், அதான், தங்கச்சின்னு ஒரு பிசாசு இருக்கே, ரயிஸாக்கும், எனக்கும் சண்டைதான். வீடு இருக்க தெருவுல நுழையும்போதுதான் அவ ஞாவப்படுத்தினா, “ரஸீனா, இன்னிக்கு ‘சப்பாத்தி டே’!!” அவ்வளவுதான், ரெண்டு பேரும் காத்துப் போன பலூன் மாதிரி புஸ்ஸுன்னு ஆகிட்டோம்.

வீட்டுக்குள்ள வந்து சைலண்டா எல்லா வேலைகளையும் கடகடன்னு ஒழுங்கா செஞ்சு முடிச்சுட்டு படிக்க உக்காந்தோம். உம்மாவும் எரிச்சலா இருக்கது அவங்க மூஞ்சியிலயே தெரிஞ்சுது. வாரத்துக்கு மூணு நாள் ஏன்தான் இந்த “சப்பாத்தி டே” வருதோ? எல்லாம் இந்த வாப்பாவால!!

வாப்பாதான் இப்ப கொஞ்ச நாளா டயட்டுல இருக்கதுனால, வாரத்துக்கு மூணு நாள் ராத்திரி டிஃபன் சப்பாத்திதான் வைக்கணும்னு ஆர்டர் போட்டுட்டாங்க. பிரியாணி, இடியாப்பம், வட்லாப்பம், பாயா, ஜாலரப்பம், பத்திரின்னு விதவிதமா செஞ்சு கலக்குற எங்கும்மாவுக்கு இந்த சப்பாத்தி மட்டும் ஏன் காலை வாருதோ தெரியல? சப்பாத்தி செய்யுற அந்த மூணு நாளும் உம்மாவும் பயங்கர டென்ஷனா இருப்பாங்க. அந்தச் சப்பாத்தியப் பாத்தா, வாப்பாவுக்கு அத விட டென்ஷன் ஏறும்!! அப்புறமென்ன, ரெண்டு பேருக்கும் லடாய்தான்.

அதுலயும்,  வாப்பா எங்க உம்மும்மாவை இழுத்து, “உங்கும்மா உன்னய வளர்த்த லச்சணம் அப்படி.  ஒரு சப்பாத்தி கூடச் சுடத் தெரியல”ன்னு  எதாவது சொல்லிட்டாப் போதும், அன்னிக்குப் பெரிய போர்தான். இதுக்கு நடுவுல, நாங்க ஏதாவது கேட்டாலோ, தொந்தரவு பண்ணாலோ, அவ்ளோதான், ரெண்டு பேரும் சேந்தே டின் கட்டிடுவாங்க. அதனால வாரத்துல இந்த மூணு நா மட்டும் நாங்க ரொம்ம்ம்ப்ப்ப நல்ல புள்ளைங்க!!

உம்மாவும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டாங்க. சமையல் புஸ்தகம், டிவில வர்ற  சமையல் நிகழ்ச்சிகள், ஏன் இண்டர்நெட்ல கூடத் தேடிப் பாத்து அதுலல்லாம் சொல்லிருக்க மாதிரி செஞ்சு பாத்துட்டாங்க; எதுவும் வேலைக்காவல.  அதுலயும் முக்கியமா வாப்பாவுக்கு சப்பாத்தில சொட்டுகூட எண்ணெய் இருக்கக்கூடாது. ஆனாக்க, உம்மாக்கு டிப்ஸ் சொன்ன ஃபிரண்ட்ஸ்,  அக்கம்பக்கத்து வூட்டுக்காரவுங்க எல்லாருமே, சப்பாத்தில ஒரு ஸ்பூனாவது எண்ணெய் தேச்சாத்தான் ஸாட்டா இருக்கும்னு சொல்றாங்க.

ஒருக்கா தஞ்சாவூர் மாமி வீட்டுக்கு வந்திருக்கும்போதும் இதே மாதிரி தகராறு நடக்க, மைனிங்கிற உதார்ல எப்பவும் எங்கும்மாவக் குறை சொல்லும் மாமியே “ ஏந்தம்பி, கொலஸ்ட்ரால், பிரஷர் குறையணும்னுதானே சப்பாத்தி சாப்புடுற? இப்பிடி கோவப்பட்டுகிட்டே சாப்பிட்டா எங்கிட்டிருந்து பிரஷர் குறையும்? கூடத்தான் செய்யும்! அப்புறம் சப்பாத்தி என்னத்துக்கு? பேசாம ரெண்டு புரோட்டாவே தின்னுட்டுப் போலாமே”ன்னு அட்வைஸ் பண்ணிட்டாங்க.

அதுலருந்து, விஷயம் தெரிஞ்சு, இப்பம்லாம் ஊருல இருந்து யாராவது இங்க திருச்சிக்கு வந்தாலோ, அல்லது உறவுமுறைகள்ல கல்யாண வீடுகளுக்குப் போனாலோ, எல்லாரும் உம்மாகிட்ட முதல்ல கேக்குறது “இப்ப சப்பாத்தி ஒழுங்கா வருதா?”ன்னுதான். இது பிரச்னையை இன்னும் பெரிசாக்குச்சு.

அடுத்த வீட்டு கோதை ஆச்சி, எதிர் வீட்டு சாந்தி ஆண்டியெல்லாம் நல்லாத்தான் சப்பாத்தி செய்வாங்க. ”அவங்க வீட்டுல போய் கூட நின்னு செய்யும்போது நல்லாத்தான் வருது; ஆனா தனியா செய்யும்போது இழவு வந்து தொலையமாட்டேங்குது”ன்னு உம்மா புலம்புவாங்க.  உம்மா இப்படி சொல்லிச் சொல்லி, இப்ப கோதை ஆச்சிக்கு சப்பாத்தி ஒழுங்கா வரமாட்டேங்குதாம், அவங்க “நீங்கதான் கண்ணு வச்சிட்டீங்க” ஒருக்கா கோவமாச் சொல்லிட்டாங்க. சாந்தி ஆண்டியும் இப்ப பயந்து, சப்பாத்தி ஹெல்புக்கு வர்றதில்ல. இங்கன சுத்து வட்டாரத்துல இருக்கக் கடைகள்லயும் புரோட்டாதான் கிடைக்குமே தவிர, சப்பாத்தி கிடைக்காது. இல்லன்னா கடையிலயாவது வாங்கிக் கொடுத்து கடமையக் கழிக்கலாம்.

ஒரு நா, வாப்பா தன்னோட வேல பாக்குற அலிபாய் மறுநாள் தன்னை குடும்பத்தோட விருந்துக்கு அழைச்சிருக்கதாச் சொன்னாங்க. மறுநா சப்பாத்தி டே ஆச்சே?ன்னு யோசிக்கும்போதே, வாப்பா அவர்கிட்ட சப்பாத்திதான் செய்யச் சொல்லிருக்கதாச் சொன்னாங்க. இந்த அலிபாய் அங்கிள் ஆஃபிஸுக்கு அடிக்கடி சப்பாத்திதான் கொண்டு வருவார்னு வாப்பா சொல்லக் கேட்டிருக்கோம். “அவர் வீட்டம்மா, காலையில செஞ்சு கொடுக்கிற சப்பாத்தி, மத்தியானம்கூட பஞ்சுபோல இருக்குங்கிறது அவர் அதைப் பிச்சு சாப்பிடும்போதே தெரியும். நீயும் சுடுறியே, கிச்சன்லருந்து பிளேட்டுல வந்து போடுறதுக்குள்ள மொடமொடன்னு ஆவுது”ன்னு எத்தினி தரம் சொல்லிருக்காங்க, மறக்குமா? “இப்பமாவது அவர் வீட்டம்மாகிட்ட எப்படி சப்பாத்தி செய்றாங்கன்னு கேட்டு வச்சுக்கோ. என்னத்த கேட்டு...”ன்னு முணுமுணுத்துட்டுப் போணாங்க.

அந்த இனிய மாலையும் வந்துது. நாலு பேரும் போனோம்.  வாப்பா சொன்னது கரெக்ட்தான், என்னா ஸாஃப்டா பஞ்சு போல இருக்குது சப்பாத்தியெல்லாம்!! வாப்பாவுக்கு தோதா ஒரு சொட்டு கூட எண்ணெய்  இல்லை சப்பாத்தி மேல!! வாப்பா, உம்மாவை முறைச்சுகிட்டே இருந்தாங்க. உம்மாவும் கடுப்பில ஒரு சப்பாத்தி மட்டும்தான் சாப்பிட்டாங்க. வாப்பா உம்மாகிட்ட “கேளு.. கேளு”ன்னு கிசு கிசுன்னு சொல்லிட்டே இருந்தாங்க. உம்மா கேக்கவேயில்ல.  வாப்பாவே அலிபாய் அங்கிள்ட்ட, “சப்பாத்தி எப்படிப்பா இவ்ளோ ஸாஃப்டா இருக்குது?”ன்னு மெதுவா கேக்க, அவர் பெருமையா “பௌசியாம்மா! சார் கேக்குறாகள்ல, மேடத்துகிட்ட சொல்லு”ன்னு சொன்னார்.

அவுங்க உடனே, “சப்பாத்தி என்ன பெரிய விசியமா? மாவைக் குழைக்கதுலத்தான் இருக்கு. கொஞ்சம் தண்ணியும், பாலும் எடுத்துகிட்டு, காலிட்டர் எண்ணெயாவது ஊத்தி குழைக்கணும்”னு சொல்லிகிட்டே போக,  நாங்க வாய மூடிகிட்டுச் சிரிக்க,  உம்மாவுக்கு டக்குன்னு புரையேறிடுச்சு. வாப்பா அதுக்கப்புறம்  சப்பாத்தி டேஸ்ல ஒண்ணும் பேசுறதில்லை.
 
 
 

Post Comment

46 comments:

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்குப்பா..

சத்தியமா இது உங்க சொந்த அனுபவம் இல்லை.. நம்பிட்டோம் :-)))

எல் கே said...

hahahah arumai.... but dietku chappathi illama , vera raagi antha maathiri use pannalam differenta irukkum

Deepa said...

ரொம்ப ரசித்தேன் ஹுஸைனம்மா!

//கல்யாண வீடுகளுக்குப் போனாலோ, எல்லாரும் உம்மாகிட்ட முதல்ல கேக்குறது “இப்ப சப்பாத்தி ஒழுங்கா வருதா?”ன்னுதான். இது பிரச்னையை இன்னும் பெரிசாக்குச்சு.//

//இப்ப கோதை ஆச்சிக்கு சப்பாத்தி ஒழுங்கா வரமாட்டேங்குதாம், அவங்க “நீங்கதான் கண்ணு வச்சிட்டீங்க” ஒருக்கா கோவமாச் சொல்லிட்டாங்க. சாந்தி ஆண்டியும் இப்ப பயந்து, சப்பாத்தி ஹெல்புக்கு வர்றதில்ல. //

கலக்கல்!

:)))

எம்.எம்.அப்துல்லா said...

:))

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் நல்ல படைப்பு

Vidhya Chandrasekaran said...

:))

கண்ணா.. said...

//“சப்பாத்தி என்ன பெரிய விசியமா? மாவைக் குழைக்கதுலத்தான் இருக்கு. கொஞ்சம் தண்ணியும், பாலும் எடுத்துகிட்டு, காலிட்டர் எண்ணெயாவது ஊத்தி குழைக்கணும்”னு சொல்லிகிட்டே போக, நாங்க வாய மூடிகிட்டுச் சிரிக்க//

இதுக்கு எதுக்காக சிரிச்சீங்க.....????!!!!!

அமுதா கிருஷ்ணா said...

சப்பாத்தி டயட்டுக்கு இல்லையாம்..இப்ப சப்பாத்தி எப்படி வருது..

கண்ணா.. said...

ஓ... டயட் மிஸ்ஸாகுதுன்னா...இப்ப ரெண்டாவது தடவை படிக்கும்போதுதான் புரியுது......

Prathap Kumar S. said...

நாலு சப்பாத்தி சாபிட்ட எபக்ட் இருக்கு......

மால்குடி டேஸ் ரேன்சுக்கு தலைப்பு வச்சதைப்பார்த்து நான் ரொம்ப எதிர்பார்த்து வந்தேன்....:))

நட்புடன் ஜமால் said...

தங்கச்சி பிசாசா

அப்ப நீங்க ( உஜாலா விளம்பரம் )

ஹைஷ்126 said...

நானும் நம்பிட்டேன், சொந்த கதை இல்லை:)

வாழ்க வளமுடன்

Menaga Sathia said...

ஹா ஹா சூப்பர்ர்ர் ரசித்தேன் ஹூஸைனம்மா!!

ராஜவம்சம் said...

பளைய ஸ்டாக் புது சுவை .
ரமழான் வாழ்த்துக்கள்.

KarthigaVasudevan said...

எப்டிங்க இப்டில்லாம் எழுதறிங்க...சூப்பர் ,பதிவு முழுக்க ஓர் சிரிப்பா இருக்கு.

வாப்பா ...உம்மா பேருக்கு பதிலா எங்க பேரை போட்டுப் படிச்சுப் பார்த்தேன் நான்.அப்டியே இருக்கு. அங்க சப்பாத்தின்னா எங்க வீட்ல உப்புமா,இந்த உப்புமா கெட்ட கேட்டுக்கு அது மட்டும் எனக்கு சரியான அளவு தண்ணி விட்டு செஞ்சாலும் அதென்னவோ கடைசில களி மாதிரியே தான் வரும். அதை செய்யாம விட்ரலாம்னு பார்த்தாலும் வேணும்னுட்டே வாரத்துல ரெண்டு நாள் அதான் வேணும் அப்பாவும் பொண்ணும் கேட்ருவாங்க,அப்புறம் என்ன மேல சொன்ன அதே கதை தான்.

நல்லா எழுதறிங்க ஹூசைனம்மா .இந்த சப்பாத்தி டேஸ்க்கு அப்புறம் உங்க பதிவுகளை இனி தொடர்ந்து படிப்பேன்ன்னு நினைக்கிறேன்.
:)))

KarthigaVasudevan said...

for follow up ...

ஸ்ரீராம். said...

அப்பாவி தங்கமணி இட்லிக்கு அடுத்த இடம் இந்த சப்பாத்திக்குதானா.... ஆனால் நாங்கள் எண்ணெய் கலக்காமலேயே எங்களுக்கு ஸாஃட்டாதான் வருகிறது. பால் தண்ணீர் மட்டும்தான்.

அ.முத்து பிரகாஷ் said...

தஞ்சாவூர் மாமி அட்வைஸ் கலக்கல் ....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா.... ஹூசைனம்மா.. நான் ஒரு சொட்டு எண்ணையில்லாம் பிசைஞ்சு ஒரு சொட்டு எண்ணையில்லாமலே மெது சப்பாத்தி போடுவேனே..

எதோ எண்ணையில்லாம சப்பாத்தியும் எண்ணையில்லாம வடையும் செய்யத்தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக என்னையும் சமைக்கத்தெரிஞ்சவன்னு எங்க வீட்டுல பாராட்டிக்கிட்டிருக்காங்க..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பறம் இந்த கண்ணு போடறது இருக்கே ..அது இந்த சாப்பாடு செய்யர விசயத்தில மட்டும் நம்பலாம் போலயே ஹூசைனம்மா..:)

ரிஷபன் said...

ஏந்தம்பி, கொலஸ்ட்ரால், பிரஷர் குறையணும்னுதானே சப்பாத்தி சாப்புடுற? இப்பிடி கோவப்பட்டுகிட்டே சாப்பிட்டா எங்கிட்டிருந்து பிரஷர் குறையும்?

நல்ல காமெடி.. அதே நேரம் யதார்த்தமான உண்மையுங்கூட.

sultangulam@blogspot.com said...

:))))

நாடோடி said...

சொந்த‌ க‌தை இல்லைனு லேபிலு போட‌ வேண்டிய‌ நிலைமை வ‌ந்திடுச்சா?.. :)

ந‌ல்லா க‌மெடியா இருந்த‌துங்க‌..

தெய்வசுகந்தி said...

:)))))))

ஜெய்லானி said...

//ஏந்தம்பி, கொலஸ்ட்ரால், பிரஷர் குறையணும்னுதானே சப்பாத்தி சாப்புடுற? இப்பிடி கோவப்பட்டுகிட்டே சாப்பிட்டா எங்கிட்டிருந்து பிரஷர் குறையும்? கூடத்தான் செய்யும்! //

நான் ரசித்த வரிகள்...சூப்பர்..

ஜெய்லானி said...

//நாங்க வாய மூடிகிட்டுச் சிரிக்க, உம்மாவுக்கு டக்குன்னு புரையேறிடுச்சு. வாப்பா அதுக்கப்புறம் சப்பாத்தி டேஸ்ல ஒண்ணும் பேசுறதில்லை.//


நினைத்து பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சி..ஹா..ஹா..

kavisiva said...

ஹா ஹா ஹா... வீட்டுக்கு வீடு வாசப்படி :(

தேன் துளிகள் said...

அக்கா கலக்கிட்டிஙக போஙக. கடைசி பத்தி பஞ்ச்சில் O.HENற்ய் யே தோத்திட்டார்

Deepa said...

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.
இய‌ன்ற‌போது எழுத‌வும்.
http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_13.html

Anonymous said...

இன்னிக்கும் எனக்கு சப்பாத்தி நல்லா வர்றதே இல்லை. கோதுமை பிஸ்கெட் தான் :)

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்கே :))))))

லேபிள் பார்த்து ‘பவ்’ ஆகிட்டேன் :)

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல்: நன்றிப்பா.

எல்.கே. நன்றி. ஏங்க, சப்பாத்தியே காலை வாருது, இதுல ராகி, கேழ்வரகெல்லாம் இன்னும் பிரச்னைதான். (அனுபவம்தான்!)

தீபா: ரொம்ப நன்றி பாராட்டுக்கும், உங்க பதிவுல சொன்னதுக்கும்.

அப்துல்லா: நன்றி. என்ன சிரிப்பான் மட்டும்தானா?

யாதவன், நன்றி.

வித்யா, நன்றி.

ஹுஸைனம்மா said...

கண்ணா: எதுக்கு சிரிக்கவா? அவ்வ்வ்வ்.. அப்ப நான் எழுதுனது புரியலையா?

அமுதா: ஆமா, சப்பாத்தி ஒண்ணும் பெரிசா டயட்டுக்கு உதவாதுதான்.

கண்ணா, நல்லவேளை புரிஞ்சுடுச்சு உங்களுக்கு!! இல்லன்னா பிரதாப் ஒருவழி பண்ணிருப்பார் உங்களை!

பிரதாப்: தலைப்புதானே இழுக்குற மாதிரி இருக்கணும்!

ஜமால்: டாபிக்கை விட்டுட்டு எத நோண்டுறீங்க? தங்கச்சி பிசாசுன்னா, அக்கா பேய்தான், வேறென்ன?

ஹுஸைனம்மா said...

ஹைஷ் சார், வாங்க. நன்றி நம்புனதுக்கு... ஹி.. ஹி..

மேனகா: வாங்க, நன்றி.

ராஜவம்சம்: வாங்க, நன்றி.

கார்த்திகா: முதல் வரவுக்கு நன்றி. நிச்சயம் தொடர்ந்து வாங்க. உங்க வீட்டுல உப்புமாவா!!

ஸ்ரீராம்: வாங்க. அப்.தங்கமணியோட இட்லி பாம்னா, இந்தச் சப்பாத்திய கேடயமா யூஸ் பண்ணலாம். அவ்ளொ ஸ்ட்ராங்!!

சப்பாத்திக்குக் குழைக்க கொதிநீர் பயன்படுத்தினால், ஸாஃப்டா வரும்.

நியோ: வாங்க நன்றி.

ஹுஸைனம்மா said...

முத்தக்கா: வாங்க. எண்ணெயில்லாம சப்பாட்தி, ஓகே. வடையுமா? எப்படிக்கா? ப்ளீஸ், ப்ளீஸ் ரெஸிப்பி கொடுங்கக்கா!!

ஆமாக்கா, எதுல உண்டோ இல்லியோ, சமையல் & சாப்பிடுற விஷயத்துல “கண் படுறது” ரொம்ப உண்மைக்கா. அனுபவம் நிறைய உண்டு!!

ரிஷபன் சார்: வாங்க, நன்றி!!

சுல்தான் பாய்: நன்றி.

நாடோடி: லேபிள் போட்டாலும் நம்ப மாட்டேக்கிறாங்க பாருங்க!! நன்றி.

தெய்வசுகந்தி: நன்றி.

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி: வாங்க, ரொம்ப நன்றி பாராட்டுக்கு.

கவிசிவா: வாங்க. எல்லா வீட்டுக்கும் ஒண்ணு ரெண்டு வாசப்படிதான் இருக்கும், எனக்கு ஒரு பெரிய ஏணிப்படியே இருக்குன்னு சொல்லலாம்!! அவ்ளோ சோகம்!!

யூஷகா (பெயர் சரியா?): முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க. அது யாருங்க ஹென்றி? அவருக்கும் சப்பாத்தி வராதாமா? :-)))

ஹுஸைனம்மா said...

தீபா, நிச்சயம் எழுதுகிறேன். அழைப்புக்கு நன்றி.

சின்ன அம்மிணிக்கா: எனக்கும் கொஞ்சம் தகராறுதான். ஆனாலும் விடுறதில்லை இந்தச் சப்பாத்தியை!! ;-))

ஆதவன்: அதென்ன “பவ்”? பவ்யமா?? :-)))

ராமலக்ஷ்மி said...

சூப்பர்!

//காலிட்டர் எண்ணெயாவது ஊத்தி குழைக்கணும்//

நல்லாக் கொண்டு போய் முடிச்சிருக்கீங்க:)!

தூயவனின் அடிமை said...

ஒரு சப்பாத்தியை வைத்து அழகா முடித்து விட்டிர்கள். அருமையாக உள்ளது சகோதரி.

a said...

பினிசிங் டச் சூப்பர்......

சிநேகிதன் அக்பர் said...

சப்பாத்திக்கதை சாஃப்டாகவே இருக்கிறது.

சுதந்திர தின வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

சப்பாத்தி சப்பாத்திதான். ரொட்டி ரொட்டிதான் எனும் நாகேஷ் பாட்டுதான் நினைவுக்கு வந்த்து.

ரசித்து சிரித்தேன்.

நம் ஊர் பக்கம் கண்ணு வச்சிட்டா என்று சொல்வது வழக்கம் தான்.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சூப்பர்! சிரிச்சு முடியல.... I wish I were there to see your வாப்பா 's face, when the recipe was shared.

"உழவன்" "Uzhavan" said...

:-)))

Vijiskitchencreations said...

சப்பாத்தி டேஸ் என்ற தலைப்பை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகவும் கண்டிப்பா நகைசுவையோடும் தான் இருக்கும் என்று நினத்தது சரியா போச்சு.

என் வீட்டில் நான் என் வீட்டுக்காரர், என் அப்பா என் மகள் எல்லாருக்கும் சப்பாத்தி சாப்டாகவும்+எண்ணெய் என்பதே இருக்க கூடாது.
நான் ஒரு மாகாராஸ்டிரா ஆண்டியிடம் கற்று கொணடு இன்று வரை கிட்டதட்ட 14 வருடமாக சாப்ட் சப்பாத்தி தான்.
பிசையற பக்குவம். நோ ஆயில், நோ ஹாட் வாட்டர்.
கோதுமைமாவு, பிசைந்து அரைமணி நேரம் ஊறவைத்து செய்ய்தால் நல்ல சாப்டாக வரும்.
ஒரே சிரிப்பு தான் அக்கா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

மால்குடி டேஸ் மாதிரி சப்பாத்தி டேஸ் கூட சுவாரஷ்யமாதான் இருக்குங்க... ஹா ஹா ஹா... எல்லாருக்கும் ஒரு ஒரு பிரச்சனை... எனக்கு இட்லி உங்க அம்மாவுக்கு சப்பாத்தி... ஹும்... ஹா ஹா ஹா