Pages

பெண்ணுரிமைப் புலிகள்
வெகுநாளைக்குப் பிறகு - மாதங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்லவேண்டும் - கலாவைச் சந்திக்கிறேன். அவளிடம் என்னவோ வித்தியாசமாகத் தெரிகிறது, ஆனால் என்னவென்று சட்டென்று பிடிபடவில்லை. அவளோ ”அக்கா, அக்கா” என்று ஆர்வமாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள்.  என் எண்ணத்தை ஓடவிட்டுக்கொண்டே, அவளிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். 

பேசிமுடித்ததும், அவள் சுடிதார் துப்பட்டாவைச் சரிசெய்தவாறே.. ஆ.. சுடிதார்.. எப்பவும் சேலையில் மட்டுமே பார்த்த கலா இப்போ சுடிதாரில்!!”இப்போ சுடிதார் போடத் தொடங்கியாச்சா? வெரிகுட்!!” என்றேன். புன்னகைத்தவாறே விடைபெற்றாள்.  “அக்கா, இவருக்கு சுடிதார், நைட்டி எதுவும் பிடிக்காதாம். சேலைதான் கட்டிக்கணும்னு சொல்றார். எனக்குச் சேலைன்னாலே பிடிக்காது. இதவச்சே பெரிய்ய சண்டை வருது” என்று முன்பு புலம்பியது நினைவுக்கு வந்தது.

”ஊருலகத்துல ஹஸ்பெண்ட் வைஃபுக்குள்ள என்னென்னவோ பிரச்னைகள் வருது. பேப்பர் வாசிக்கிறீங்கள்ல? அதெல்லாம் பார்க்கும்போது சேல கட்டிக்கச் சொல்றதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை கலா. உங்களவரை ஒரு ஃப்ரெண்டா நினைச்சுக்கோங்க. உங்க டியர் ப்ரெண்ட் கேட்டாச் செய்யமாட்டீங்களா? அப்புறம் கொஞ்ச நாள்ல அவரும் புரிஞ்சுகிட்டு மாறிடுவார்” என்றதற்கு, “என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, எல்லாருமே இப்பவே அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினா, அப்றம் உன் பேச்சே எடுபடாதுன்னாங்க. நீங்கதான் முதமுதல்ல வேற மாதிரி சொல்றீங்க”  என்று பதிலளிக்கும்போது அவள் முகத்தில் இருந்த பலத்த சிந்தனை நன்றாக நினைவிருக்கிறது. அதன்பிறகு அவளை இப்போதான் பார்க்கிறேன்.

ரஹீமாவும் இப்படித்தான் சொன்னாள். புதிதாய்த் திருமணமாகி அமீரகம் வந்தபோது அளவிலா மகிழ்ச்சியோடுதான் வந்தாள்.  பின்னர், வெளிநாட்டு வாழ்வுக்கேயுரிய இயல்பான தனிமையில் துவங்கியது பிரச்னை. கணவரின் நீண்ட வேலைநேரம் காரணமாய்,  தனிமை வாட்டத்துவங்கிய போது, புதுவாழ்வு சலிக்க ஆரம்பித்தது.  தொடங்கிய  சண்டை சச்சரவுகள் கொஞ்சம் சீரியஸாகி, அவள் ஊருக்குச் செல்லப் போவதாக என்னிடம் சொன்னபோது,”எவ்வளவோ பெண்கள், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தம் கணவரின் நிதிநிலைமை அல்லது குடும்பச்சூழ்நிலை இடம்கொடுக்காததால் வருடக்கணக்கில் பிரிந்து இருக்கிறார்கள்.  ஆனால், உங்களுக்கு இறைவனருளால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது.   தனிமையை வெல்வதொன்றும் பெரிய விஷயமில்லை. இதற்காக ஊருக்குச் செல்வதென்பது முட்டாள்தனம்.  மேலும் அங்கும் பேனைப் பெருமாளாக்கும் சிலரால் பிரிவு பிளவாகலாம்” என்றபோது “ஊருல நான் இங்க கிளம்பும்போதே நிறையப் பேர் போர் அடிக்குமேன்னுதான் சொன்னாங்க.  இபபவும் நாங்கதான் அப்பவே சொன்னோமேன்னு சொல்றாங்க.  நீங்க ஒருத்தர்தான் இப்படிச் சொல்லிருக்கீங்க.” என்றாள். எனினும் கிட்டத்தட்ட 12 வருடங்கள் அமீரகத்தில் இருந்துவிட்டு, தற்போது அவள் ஆசைப்படியே கணவரோடே இந்தியா போய் செட்டிலாகிவிட்டாள்!!

(இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கேட்பவர்கள், சிநேகா-சேரன் நடித்த “பிரிவோம் சந்திப்போம்” படத்தைப் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். )

இதற்கு நேரெதிர் நிலை ஃபௌஸியாவினது. மாமியாரின் தலையீடு காரணமாய் திருமணமாகிச் சில வருடங்கள் கழித்தே கணவனுடன் அமீரகம் வந்து குடித்தனம் செய்ய முடிந்தது.  இப்போது மாமியார் இங்கு வரப்போகிறாராம். வந்தபின், மகனை எதெற்கெல்லாம் தூண்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு. பொதுவாகவே ஆண்களுக்குள்ள குணம், கல்யாணம் வரை அம்மாவை அலட்சியப்படுத்தியதற்கான பிராயசித்தமாகக் கருதிக்கொண்டு, கல்யாணத்திற்குப் பின் மனைவியை அலட்சியப்படுத்துவது!! அதைப் புரிந்துகொள்ளாத சில பெண்கள் சரியாகக் கையாளத் தெரியாமல் குழம்(ப்)பிவிடுகிறார்கள்.  அப்படியிருந்த ஃபௌஸியாவிடம் “அதுக்கேன் பயப்படுறீங்க? வரட்டுமே! நினைச்சாலும் வீண் செலவுகள் செய்யமுடியாதபடி, நீங்க இங்கே குழந்தைகளோட இப்பிடி ஒரு குருவிக்கூட்டுல, அதுவும் கட்டுசெட்டா (சிக்கனமாக) இருக்கீங்கன்றதைப் பார்த்துப் பாராட்டிட்டுத்தான் போவாங்க பாருங்க.” என்று நம்பிக்கை கொடுத்தேன்.  வெளிநாடு வரும் அநேக மாமியார்கள் இந்தியா திரும்பிச் செல்லும்போது தவறாமல் சொல்லிச் செல்வது தான்!!

விவாகரத்தின் விளிம்பில் நின்ற சஜினாவிடம் பேசியதுதான் மறக்கமுடியாது. “என் சிரமங்களையெல்லாம் சொல்லிட்டேன். கஷ்டம்தான்னு ஒத்துக்கிறீங்க. ஆனா, விவாகரத்து செய்யப் போறேன்னு சொன்னா மட்டும் அவசரப்படாதே, யோசிக்கலாம், பேசிக்கலாம்னு சொல்றீங்களே” என்று புலம்பினாள். உண்மைதான். துயரங்களிலிருந்து விடுபடட்டுமே என்று தோன்றினாலும், பிரிந்துவிடும்படி மனதாரச் சொல்லமுடியவில்லை. எப்படியாவது இருவரும் மனம்மாறி ஒன்றுசேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் இருந்தது. பிரிப்பது மிகச்சுலபம். “உனக்கென்ன, சொந்தக் காலில் நிற்கிறாய். பெற்றோர் ஆதரவும் இருக்கு, அப்புறமென்ன” என்று ஒருவரி போதும் அதற்கு.  பின், நீதிமன்றம் வரை துணைக்குப் போகலாம். அதன்பின்னான வாழ்வை அவர்களல்லவா தனியே, அதுவும் குழந்தைகளோடு, எதிர்கொள்ளவேண்டும்?

விரும்பியபடியே, ஆனால் எதிர்பார்க்கவே இல்லாமல், ஒருசில லீகல் கவுன்சிலிங்குகளின் பின்னர் இப்போது சஜினாவும் கணவரும் இணைந்துவாழ்கிறார்கள்.  இது இன்னுமொரு படிப்பினை எனக்கு.

ஒருமுறை நெருங்கிய உறவினப் பெண்ணின் கணவர் ஃபோன் செய்து தன் மனைவியைக் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.  எல்லாம் கேட்டபின், அவரிடம் இப்பிடியிப்பிடி நடந்து பாருங்களேன் என்று ஆலோசனை கூறியபோது, வைத்தாரே ஒரு குற்றச்சாட்டு!! “அவ உங்க சொந்தக்காரிங்கிறதனாலத்தானே அவளைக் குத்தம் சொல்லாமே, நாந்தான் திருந்தணும்னு சொல்றீங்க?” என்று எகிறினார். இது பரவால்லை, உறவு என்பதால் குற்றமானது. சிலர், நீங்களும் பெண் என்பதால் பெண்களை விட்டுக்கொடுக்கவேமாட்டீங்களே என்பார்கள்.

அவரிடம் “ஏற்கனவே நீங்க கோவமா இருக்கும்போது, அவ செய்றது தப்புதான்னு உங்ககிட்ட சொன்னா உங்களுக்கு வெறுப்புகூடித்தான் போகுமே  தவிர குறையாது. அது பிரச்னையத் தீர்க்கவும் செய்யாது. அதனாலத்தான், அவ இப்படி நடந்துக்கிறதுக்கு என்ன காரணமா இருக்கும்னு என் பார்வையில் யோசிச்சு, உங்களைக் கொஞ்சம் மாத்திக்கச் சொல்றேன். உங்க தவறுகளை உங்ககிட்டதான் சொல்லணும். உங்க வைஃப்கிட்டதான் அவ எப்படியிருக்கணும்னு சொல்லமுடியும். அவங்கவங்க தப்பு அவங்களுக்குத் தெரியாது, வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்குத்தான் தெரியும்.” என்று விளக்கியபிறகு அமைதியானார்.

இதுவே அவளிடம் பேசியபோது, “நீ பெரூசா பெண்ணுரிமை, பெண்ணீயமுன்னெல்லாம் பேசுற. ஆனா, இப்போ என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்றே. பேச்சுல புலி, வீட்டுல எலிதானா நீயும்!!” என்று கிண்டல் செய்தாள்!! அடிப்பாவி, பெண்ணுரிமை பேசினால், பாயும் புலியாய்தான் எப்போதும் இருக்க வேண்டுமா? சூழ்நிலைக்கேற்ப “பதுங்கும்” புலியாகவும் அவ்வப்போது இருந்தால்தான் ராஜாவான ‘சிங்கமும்’ அடங்கும் என்று அவள்பாணியிலேயே விளக்கினேன்.

பெண்ணுரிமைகள் காப்பதற்கு புலியாகவோ, சிங்கமாகவோத்தான் இருக்கவேண்டும் என்றில்லை.  அல்லது கொடிபிடித்து, போராட்டம் நடத்தினால்தான் பெண்ணுரிமை காக்கிறோம் என்றும் பொருளில்லை. அதுவெல்லாம் இல்லாமல், எத்தனையோ அக்காக்கள், மாமிகள் வீட்டிலேயேயிருந்தாலும், உள்ளார்ந்த அன்போடு தக்க அறிவுரைகொடுத்து வழிகாட்டுகிறார்கள். இணைந்துவாழ்வதே நன்மை என்று, புதுவாழ்வெனும் சக்கரசுழற்சியில் தோன்றும் சின்னச்சின்னப் பொறிகளை அணைத்து விடுபவர்களாயிருக்கிறார்கள். 

சின்னப் பொறிகள்தானே பெருநெருப்பின் தொடக்கம்? அந்தப் பொறியை, ‘விட்டுக்கொடுத்தல்’ என்ற நீரைத் தெளித்து ஆரம்பத்திலேயே அணைத்துவிட்டால், சிறு புகையோடு தப்பித்துவிடலாம். விட்டுக் கொடுத்தல் என்றால் தங்கள் உரிமைகளையோ, சுயமரியாதையையோ விட்டுக் கொடுப்பதல்ல;  ’ஈகோ’வை விட்டுவிடுதல் மட்டுமே.  உரிமைகளை விட்டும்விடாமல், பறிக்கவும் அவசியப் படாமல், வேண்டிய இடத்தில், தக்க நேரத்தில் பெண்ணுக்குத் தானே கிடைக்கும்படியான வாழ்க்கையை வழிகாட்டும் இவர்களெல்லாம் தங்களைப் பெண்ணுரிமைப் புலிகள் என்று பெயரிட்டுக் கொள்வதுமில்லை.

Post Comment

19 comments:

ராமலக்ஷ்மி said...

காலத்துக்கு அவசியமான நல்ல பதிவு ஹுஸைனம்மா.

ஸ்ரீராம். said...

வீட்டுக்கு வீடு வாசப்படி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க புலி..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிரிவோம் சந்திப்போம் ரொம்ப உண்மை..நல்ல படம்..

நல்லடியார் said...

பெண்ணுரிமை என்றால் வீதிக்குவந்து கொடிபிடித்து, கோஷமிடுவது என்று சிலரும்,ஆடையளவு குறையக் குறைய பெண்ணுரிமை அளவு கூடும் என்று சிலரும் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்ணுக்கேயுரிய பொறுமை மூலம் உரிமையை தக்கவைப்பதே என்று சான்ற்களுடன் சொன்னவிதம், போலி பெண்ணுரிமைவாதிகளுக்கு பொட்டில் அடித்தாற்போல் இருந்திருக்கும். சபாஷ் சகோதரி!

Seeni said...

nalla pakirvu!

ellorume sinthikkanum!

suvanappiriyan said...

வீட்டுக்கு வீடு வாசப்படி!

ஸாதிகா said...

ஆஹா..ஹுஸைனம்மா நீங்க இந்த விஷயத்தில் யுனிவர்ஸிட்டிதான்..:)

பேசாமல் நீங்கள் consultancy நிறுவனம் நடத்தினால் சக்கைபோடு போடும்..ஐடியா கொடுத்த எனக்கு பிஃப்டி பிஃப்டி

துளசி கோபால் said...

ஆயிரம் மடங்கு உண்மை!

இனிய பாராட்டுகள்!

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா, நன்றி.

ஸ்ரீராம் சார் - நன்றி. //வீட்டுக்கு வீடு வாசப்படி// - உண்மைதான். சிலரிடம் பேசும்போது எனக்கே “பெரிசா அட்வைஸ் பண்றோம். இதே பிரச்னை நமக்கு வந்தப்போ நாம எப்படி நடந்துகிட்டோம்”னு ஒரு குறுகுறுப்பு இருக்கும்.

முத்தக்கா - நன்றிக்கா.

நல்லடியார் - மிகவும் நன்றி.

சீனி - நன்றிங்க.

சுவனப்பிரியன் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - ஆயிரத்துக்கும்மேலே பதிவுகள் கண்ட அபூர்வ சிகாமணி நீங்க!! இதிலேயும் உங்களுக்கு இல்லாத அனுபவமிருக்காது. இருந்தாலும் என்னையும் பாராட்டும் மனதுக்கு நன்றிகள்.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - யுனிவர்ஸிடிலாம் இல்லைக்கா. நான் அமீரகம் வந்த புதிதில் குடும்பமாக இருப்பவர்கள் அரிது. அதனால், புதிதாக வரும் பெண்களுக்கு பேசுவதற்கு ஆள் யாரும் இல்லாதிருந்ததால், என்னைப் பார்த்ததும், கொஞ்சம் உரிமையோடு பேசிக்கொள்வதுதான்.

தனியாக இருப்பவர்களிடம், “அதானே, ஏன் இப்படிப் பண்றார்? அதெப்படி அப்படிப் பண்ணலாம்?”னு ஏத்திவிட்டால் இன்னும் பெரிசாத்தான் ஆகும் பிரச்னை. அந்தப் பாவம் நமக்கெதுக்குன்னுதான்.

கன்ஸல்டன்ஸியா- நெவர்!! இதுகிட்டத்தட்ட முள்மேல நடக்குற மாதிரி!! இந்த கவுன்ஸிலிங் செய்றவங்களுக்கெல்லாம் எவ்ளோ பொறுமை வேணும்னு ஆச்சர்யப்படுவேன்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அருமையான பகிர்வு
/////சின்னப் பொறிகள்தானே பெருநெருப்பின் தொடக்கம்? அந்தப் பொறியை, ‘விட்டுக்கொடுத்தல்’ என்ற நீரைத் தெளித்து ஆரம்பத்திலேயே அணைத்துவிட்டால், சிறு புகையோடு தப்பித்துவிடலாம்.///////////
இந்த வரிகளை படித்ததும் எங்கோ படித்த இந்த வாசகம்தான் நினைவில் வந்தது. "விட்டுகொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை; கெட்டுபோகிறவர்கள் விட்டுகொடுப்பதேயில்லை" இது உண்மையிலும் உண்மை.

வல்லிசிம்ஹன் said...

வெகு நல்ல பகிர்வு. நீங்களே கௌன்சிலரா இருக்கலாம் போல இருக்கே.
அருமையா யோசிக்கிறீங்க ஹுசைனம்மா. பேசுவதால் சண்டை,பேசாமல் இருப்பதால் சண்டை. இந்தப் புதுத்தம்பதிகளையும் பழையதம்பதிகளையும் நல்லா இருக்கணும்னு வாழ்த்துகிறேன்.

அம்பிகா said...

பாராட்டுக்கள் ஹூஸைனம்மா.அற்ப விஷயங்களையெல்லாம் ஈகோவால் பெரிதாக்கி, பிரிவினையை வேண்டுபவர்கள், உங்களை போல் சிந்தித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் தான் அதிகமாக டைவர்ஸ் கேஸ் அதிகமாம், சமீபத்தில் படித்தேன். மிக அவசியமான பதிவு.

காற்றில் எந்தன் கீதம் said...

//இதுவே அவளிடம் பேசியபோது, “நீ பெரூசா பெண்ணுரிமை, பெண்ணீயமுன்னெல்லாம் பேசுற. ஆனா, இப்போ என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்றே. பேச்சுல புலி, வீட்டுல எலிதானா நீயும்!!” என்று கிண்டல் செய்தாள்!! அடிப்பாவி, பெண்ணுரிமை பேசினால், பாயும் புலியாய்தான் எப்போதும் இருக்க வேண்டுமா? சூழ்நிலைக்கேற்ப “பதுங்கும்” புலியாகவும் அவ்வப்போது இருந்தால்தான் ராஜாவான ‘சிங்கமும்’ அடங்கும் என்று அவள்பாணியிலேயே விளக்கினேன்.//
இதே கேள்வியை நானும் நிறைய சந்தித்திருக்கிறேன்....
சரியான பதில் தான் சொல்லி இருக்கீங்க...
நல்ல பதிவுக்கும் நட்சத்திர அந்தஸ்துக்கும் வாழ்த்துகள் ஹுசைனம்மா

ஹுஸைனம்மா said...

முஹம்மத் ஷஃபி - வ அலைக்கும் ஸ்ளாம். நன்றிங்க.

வல்லிமா - நன்றி வல்லிமா.

அம்பிகா - /உங்களை போல் சிந்தித்தால்// நானும் இந்த ஸ்டேஜைக் கடந்து வந்தவள்தானே!!
நன்றிப்பா.

காற்றில் எந்தன் கீதம் - மிகவும் நன்றிப்பா.

சுசி said...

நல்ல கருத்தை சரியாக சொல்லிருக்கிறீர்கள்.

எனக்கு தெரியாத பல விஷயங்கள் என் தலைவருக்கு தெரியும். அதே போல் சில விஷயங்களில் நான் எடுப்பது தான் முடிவு. இது எங்களுக்குள் உள்ள புரிதலினாலேயே நிகழ்கிறது.

சில விஷயங்களில் நான் சொல்வதை அவர் ஏற்று கொள்ளவிட்டால் சரி என்று விட்டு விடுவேன். பின்னர் அவரே யோசித்து பார்த்து நான் சொல்வதே சரி என்று ஒப்புகொள்வார்.

எதிர்த்து திமிராக பேசினால் தான் புத்திசாலி என்று அர்த்தம் செய்து கொள்ளலாமா?

யார் சொல்வது நடந்தால் என்ன குடும்பத்துக்கு எது நல்லதோ அது நடக்க வேண்டும். இந்த பொறுப்புணர்ச்சி இருவருக்கும் இருந்து விட்டால் குடும்பம் கோவிலாகும்.

Seeni said...

இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

வருகை தாருங்கள்!

தலைப்பு; மூத்தவர்கள்,,