Pages

விதியின் “மாய” சதி




வாழ்க்கையில நாம நெறய கொள்கை, வைராக்கியம் வச்சிருப்போம் - இதச் செய்யணும், அதச் செய்யவேக் கூடாது, இப்படித்தான் வாழணும்னு என்னவெல்லாமோ. ஆனா, எல்லாருக்கும் எல்லாமே நிறைவேறுவது இல்லை அல்லது விரும்பாததைச் செய்யாமல் இருக்க முடிவதில்லை. பல காரணங்கள். 

உதாரணமா, சின்ன வயசுல வீட்டுல உள்ளவங்க மீன் கழுவ படுற பாட்டைப் பாத்து - முழுமீன் நழுவி ஓடும், அது பின்னாடியே ஓடி பிடிக்கணும், அப்புறம் சாம்பலால தேச்சு சலாம்பு, செதிள் எடுக்கிறதுன்னு பாத்து நொந்து, நான் சமைக்கும்போது மீனே சமைக்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்தேன். (கவனிக்க, மீன் சமைக்கக்கூடாதுன்னுதான், சாப்பிடக்கூடாதுன்னு இல்லை!!) ஆனா, ஆண்டவன் விதிச்சதைப் பாருங்க, நான் வாக்கப்பட்டது வாரத்தில ஏழு நாளும் மீன் சாப்பிடுற ஒரு கடலோரக் குடும்பத்துல!! அப்புறமென்ன கொள்கை காத்துலதான்...

என்னடா, கொள்கை வைராக்கியம்னு பெரிய்ய லெவல்ல ஆரம்பிச்சிட்டு, சமையல், சாப்பாடு, மீனுன்னு லோ-க்ளாஸாப் பேசுறாளேன்னு யோசிக்கிறீங்க இல்லியா? எவ்ளோ பெரிய மேட்டர்னாலும், அன்றாட நிகழ்ச்சிகளை உதாரணமாச் சொன்னா, மனசுல நல்லாப் பதியும். நாங்கள்லாம் டீச்சரா இருந்தவங்களாக்கும்!!

அதே மாதிரி, பதிவு எழுத வரும்போது எடுத்த முடிவுகளில் ஒன்று, சமையல் பதிவே எழுதக்கூடாதுன்னு. எல்லாம் வாசகர்கள் நலம் கருதித்தான். நான் சமையல் குறிப்பு எழுதினால் எப்படி இருக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்.

ஜலீலாக்கா ”பேச்சிலர்ஸ்க்கான ஈஸி சமையல் குறிப்புகள்”னு ஒரு சமையல் போட்டி நடத்துறாங்க. அந்த அறிவிப்பைப் பாத்ததுமே என் கையில் அரிப்பு... ஏன்னு அப்புறம் சொல்றேன். இருந்தாலும், கொள்கையை மீறவேக்கூடாதுன்னு பல்லைக் கடிச்சிகிட்டு இருந்த என்னை... என்னாச்சி, தலையில கைவச்சிட்டீங்க??!! 

நான் வேண்டாம்னுதான் மறுபடி மறுபடி சொன்னேங்க, இந்த ஜலீலாக்காதான் எனக்கே எழுதுற ஆசையைத் தூண்டி விட்டுட்டாங்க. சரி, அன்பிற்காக விட்டுக் கொடுக்கிறது தப்பேயில்லைன்னு நானும் துணிஞ்சிட்டேன். ஆனா, கண்டிப்பா இதான் கட்டக்கடைசி. சமைக்கிறதைவிட சமையல் பதிவு எழுதுறதுதான் கஷ்டம்னு இன்னிக்கு டபுள் கன்ஃபர்மாகிடுச்சு.
சரி, விஷயத்துக்கு வருவோம். முதல்ல “பேச்சிலர் சமையல்”னா  என்னன்னு பார்ப்போம். எல்லாத்திலயும் தெளிவா இருக்கணும்லே? 
(பேச்சிலர் - க்கு தமிழ்ல என்னங்க? ’பேச்சிலர்’னு ஆங்கிலத்திலயே தமிழில் எழுதும்போது, ‘பேச்சுரிமை இல்லாதவர்கள்’னு நேரெதிரா அர்த்தம் வருது!!)

வேலை நிமித்தம் தனியாக வசிக்கும் ஆண்களுக்கு சமையல் செய்றதுக்கான நேரமும், ஆர்வமும் குறைவு என்பதால், எளிதான செய்முறைகள் அவங்களுக்கு வேலையை இலகுவாக்கும். அதே சமயம், உணவு தரும் சத்துக்களும், சக்தியும் (nutrient value) குறைவில்லாம முழுமையா இருக்கணும். அதாவது ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...

ஆங்கிலத்தில் “one pot meal” என்று சொல்வாங்க. அதாவது, சாதம், குழம்பு, பொரியல்னு பல பாத்திரங்களில் தனித்தனியே சமைப்பது கடினமானது மட்டுமல்ல, நேரத்தை விழுங்கும் வேலை. அதையே, எல்லாம் சேர்த்து ஒரே பாத்திரத்தில் ”கலந்த சாதம்”னு செய்தா அதான் “one-pot meal"!! இதுக்கு சைட் டிஷ் தனியா எதுவும் வேண்டாம். அப்பளம், வற்றல், ஊறுகாய் போன்ற ஏதேனுமொன்று இருந்தாலே போதும்.

நல்ல உதாரணம் சொல்லணும்னா, நம்ம பிரியாணியே ஒரு one-pot mealதான். ஆனா, அதுக்கே, தாளிச்சா, எண்ணெய்க் கத்தரிக்காய், பொறிச்ச கறி, சிக்கன் ஃப்ரை, அப்பளம், தயிர்ப்பச்சடி, தக்காளி ஜாம்னு “சைட் டிஷ்கள்” சேர்த்து உண்ணும் ‘ரசனைக்காரர்கள்’ நாம!! :-(((

தனியே சமைக்கும் ஆண்களுக்கு இந்த கலந்த சாதம் எனப்படும் “வெரைட்டி ரைஸ்” மிகப் பொருத்தமான உணவு. சத்துக்களும், சக்தியும் ஒருசேரத் தருவது மட்டுமல்ல, உடல் பருமனுக்குக் காரணமான ’கார்போஹைட்ரேட்’ அதிகம் சேராமலும் தடுக்கிறது. தனியாக குழம்பு, கூட்டு வைத்துச் சாப்பிடும்போது சாதம் அதிகமாகவும், காய்கள் குறைவாகவும் வைத்துச் சாப்பிடுவோம். இதுவே எல்லாம் சேர்த்த கலந்த சாதம் என்றால், கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!! 

குழம்பு, கூட்டு என்று தனியே இல்லாததால், குழந்தைகளுக்கும் சாப்பிடப் பிடிக்கும். ஆக, பல நன்மைகள் ஒன்றாகச் சேர்ந்த கலவைதான் “வெரைட்டி ரைஸ்”!! 

பேச்சிலர் சமையலில் இன்னொரு முக்கிய அம்சம், “தேவையான பொருட்கள்”!! ஸ்ட்ரிக்டா இன்னின்ன சாமான் இருந்தாத்தான் இந்தச் சமையலைச் செய்ய முடியும்னு இல்லாம, அடிப்படைப் பொருட்கள் இருந்தாப் போதும், மீதிக்கு இருப்பதை வைத்துச் சமாளிச்சுக்கலாம் என்கிற மாதிரியா இருக்கணும். அதுவும், இந்த கலந்த சாத வகைகளுக்குப் பொருந்தும். ஏன்னா, பொதுவாவே ஆண்கள் “ஷாப்பிங்” போறதை விரும்பமாட்டாங்க - புடவை, நகை மட்டுமில்லை, காய்கறி, மளிகைக்கும் அப்படித்தான்!! 

இப்ப புரிஞ்சிருக்குமே, “பேச்சிலர் சமையல் போட்டி”ன்னதும் ஏன் எனக்கு கை அரிச்சுதுன்னு? ஏன்னா, நாங்களாம் மட்டன் இல்லாமலே மட்டன் குழம்பு வைக்கிறவங்களாக்கும்!! சரி, சரி, இப்போ சமையலைப் பாப்போம். இன்னிக்குத்தான் போட்டியோட கடைசி தேதி!! ஏற்கனவே லேட்டு, இதிலே வளவளன்னு என்ன பேச்சு...

இன்னிக்கு நாம செய்யப்போற “ராஜ்மா புலாவ்” மேலே சொன்ன எல்லா definitionக்கும் ஒத்து வரும் சமையல். 


என்னடா, முதல்லயே “final product"-ஐக் காட்டாறாளே, ‘தேவையான பொருட்கள், செய்முறை’யெல்லாம் அம்போவான்னு யோசிக்கிறீங்களா?  கடைகளில், முதல்ல நீங்க புடவையப் பாருங்க, அப்புறம் விலை பேசுவோம்னு சொல்வாங்கள்ல, அதுபோல எல்லாம் ஒரு “வியாபாரத் தந்திரம்” தான். அப்பத்தானே உங்களுக்கும் என்மேல ஒரு நம்பிக்கை வரும். :-)

தேவையானவை: (இரண்டு பேருக்கு)
* ராஜ்மா என்கிற சிவப்பு கிட்னி பீன்ஸ் - ஒரு கை அளவு
* பச்சரிசி - 300 கிராம் (சுமார் இரண்டு டிஸ்போஸபிள் கப் அளவு)
  தேங்காய்ப் பால் - 2 கப்
* தண்ணீர் - 2 கப்
  வெங்காயம் - 1
* இஞ்சி - சிறு துண்டு
  பூண்டு - 4 பெரிய பல்
  பச்சை மிளகாய் -4
* பெருங்காயம் - ஒரு மிகச்சிறிய துண்டு அல்லது கால் டீஸ்பூன் 
   (பெருங்காயம் இல்லையென்றால் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட்; அதுவுமிலைன்னா ஒரு நாலு பல் பூண்டு
  கேரட் - 1 (அல்லது பட்டாணி, பீன்ஸ், ஸ்ப்ரிங் ஆனியன் எது இருக்கோ அது)
  மல்லி இலை

தாளிக்க:
* நெய் அல்லது எண்ணெய் - 4 டீஸ்பூன்
   ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
இதென்னடா, ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்களில் *-Required fieldsனு போட்டிருக்கிற மாதிரி, இங்கேயும்  போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா? ஆமாம், * -போட்டிருப்பதெல்லாம் கண்டிப்பா வேணும். மத்ததெல்லாம் இருந்தா ஓக்கே, இல்லையின்னா டோண்ட் வொர்ரி!! :-))
 

        

ராஜ்மா வேக வைத்தல்:
ராஜ்மா பீன்ஸை ஒரு ஆறு மணிநேரம் ஊறப் போட்டுக்கோங்க. ஊறிய தண்ணீரை வடிகட்டிடுங்க. எப்பவுமே பயறு வகைகளை ஊறப்போட்டத் தண்ணீரை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. வாயுத் தொல்லை வரும். பயறு, பருப்பு வகைகளை வேக வைக்கும்போது உப்பு போடாமல் வேக வைத்தால் சீக்கிரம் வேகும். பிறகு குக்கரில் பயறு  மூழ்குமளவு தண்ணீர் வைத்து, பெருங்காயம் அல்லது இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிய தீயில் வைத்து, 20 நிமிடங்கள் வேக விடவும். வெந்தத் தண்ணீரைப் பத்திரமாக வச்சுக்கோங்க. தேவைப்படும்.

 இல்லைங்க, பயறு ஊறப்போட மறந்துட்டேன் அல்லது அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு சொல்றவங்க, பீன்ஸோடு ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கலாம்.  இதில், வேக வைத்தத் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.

இதுக்கும் சோம்பப்படுறவங்க, ரெடிமேட் டின்களில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸ் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக்கோங்க. அதிலுள்ள தண்ணீரும் வேண்டாம்.


அரிசியை அளந்து பாத்துட்டு, கழுவி  ஊறப்போடுங்க. பச்சரிசிக்குப் பதிலா, புழுங்கலரிசியும் பயன்படுத்தலாம். அப்படின்னா, அரிசியை அரைமணி நேரமாவது கண்டிப்பா ஊறப்போடணும். அரிசி வேகவைக்க (மொத்த) தண்ணீரும், மூணரை மடங்கு வேணும்.

மற்ற எல்லாம் வெட்டி ரெடியா வச்சுக்கோங்க. பாத்திரத்தை அடுப்பில் வச்சு, எண்ணெய் ஊற்றி, ஏலம், கிராம்பு, பட்டை, சீரகத்தைப் போடுங்க. ஒரு அரை நிமிஷம் ஆனதும், வெட்டி வச்சிருக்கிற எல்லாத்தையும் ஒண்ணாப் பாத்திரத்தில் போடுங்க. என்னது? ஒன் பை ஒன்னா? அதெல்லாம் டைம் வேஸ்ட்!! நாம செய்றது “பேச்சிலர் குக்கிங்”, ஞாபகம் இருக்கட்டும். ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே சின்ன தீயில் வதங்கட்டும்.

அதுக்குள்ளே தேங்காய்ப் பால் ரெடி பண்ணுங்க. தேங்காயிலிருந்து ஃப்ரெஷ்ஷாப் பால் எடுத்தாலும் சரி, ரெடிமேட் தேங்காய்ப் பொடியைக் கலக்கினாலும் சரி. தேங்காய்ப் பால், பயறு வேக வைத்த தண்ணீர், அரிசி ஊற வச்ச தண்ணி எல்லாம் சேர்த்து அரிசி அளந்த அதே கப்பினால் அளந்து பாருங்க. அரிசிக்கு இருமடங்கு வரணும். இல்லைன்னா தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைங்க.

இப்ப வடிகட்டிய அரிசி மற்றும் வெந்த பீன்ஸை வெங்காயக் கலவையோடு  சேர்த்து ஒரு நிமிஷம்போல வதக்குங்க. இப்ப கொதிக்கிற தண்ணியை இதில ஊத்துங்க. உப்பு போட மறக்க வேண்டாம். ஒரு கொதி கொதிச்சதும் தீயை குறைச்சு வச்சு, மூடி போட்டு ஒரு இருபது நிமிஷம் வைங்க. அப்புறமென்ன, “சாப்பாடு ரெடி”ன்னு போர்டு வச்சிரலாம்!!

ழுத ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயம் நெருடலா இருந்துது!! நான் இன்னிக்கு சமையல் பதிவு போடுறதுக்கும், நாளை உலகம் அழியப்போவுதுன்னு வந்த வதந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ??

Post Comment

32 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆண்களுக்கான ஸ்பெஷல் பதிவு.

ஸாதிகா said...

எழுத ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயம் நெருடலா இருந்துது!! நான் இன்னிக்கு சமையல் பதிவு போடுறதுக்கும், நாளை உலகம் அழியப்போவுதுன்னு வந்த வதந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ??
//இருக்கும் ..இருக்கும்..இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்து இருந்து பார்ப்போம்

ஸாதிகா said...

ஹா ஹா...என்னுடைய பிளாகில் சமையல்மட்டும் வரக்கூடாதுன்னு தீர்மானமே பண்ணிட்டேன்...இன்னும் அந்த தீர்மானத்தை உடைக்கலே..பிளாகில் என்ன எழுதுறீங்கன்னு கேட்டால் ஒற்றை வரியில் சமையலைத்தவிர வேறு எல்லாம் என்று சொல்லிக்கலாமே..அதுதான்...

suvanappiriyan said...

//எழுத ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயம் நெருடலா இருந்துது!! நான் இன்னிக்கு சமையல் பதிவு போடுறதுக்கும், நாளை உலகம் அழியப்போவுதுன்னு வந்த வதந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ??//

ஹா..ஹா..கவலையை விடுங்க...உலகம் அழிய இன்னும் வர வேண்டிய பல நிகழ்வுகள் பாக்கி இருக்கிறது. மற்றபடி சமையல் பதிவு சூப்பர். இன்னும் செய்து பார்க்கவில்லை. :-)

சாந்தி மாரியப்பன் said...

எப்படியும் ஒலகம் அழியப்போறது உறுதியாயிருச்சு.

உங்க சாப்பாட்டைச் சாப்பிட்டா நேரடி சொர்க்கம்தானாம். மாயண்ணன் அப்பவே தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்சுருக்காரு தெரியுமோ :-)))))) (just for fun)

hats off to u jaleelaka. u made the impossible, possible ;-)

அப்பாதுரை said...

செய்முறையும் presentationம் நல்லாவே இருக்கு.

[ஆமா.. எங்களையெல்லாம் என்னானு நினைச்சீங்க? என்னமோ மீனை ஓடி ஓடிப் பிடிச்சுக் கழுவி படாத பாடு படுறாப்புல இல்லே சொல்றீங்க.. பாகெட்டுல வாங்கின மீனை சட்டில போட்டு சமைக்க இம்புட்டு நோவா?]

Unknown said...

Mm.. "Athu" nadanthu vithathey.. Romba nalla theyliva solli irukega.. Sappida aaval varukerathu..mm

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு! அட உங்க பக்கத்திலும் சமையலான்னு வந்தேன்! :)

ஸ்ரீராம். said...

நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க.. யார் சொன்னாங்க ஆம்பளைங்க எல்லாம் காய்கறி வாங்க போக மாட்டாங்கன்னு... (ஹிஹி... இங்க எங்க வீட்டுல இல்லை) விதி விலக்குகள் உண்டு தெரியுமில்லே?!

முன்னுரை பிரமாதம்... டீச்சர் இல்லே? (மறுபடியும் ஹிஹி... நீங்க சொன்னதுதான்!) யாரோட அம்மா...ராஜ்மாவைக் கூப்பிடணுமா (புலாவ்)..... :))

' கடைசி வரி பஞ்ச்'சுக்கு சிரிப்பு வந்து விட்டது. சரி, உலகம் அழியலேன்னா உலகமே உங்கள் சமையல் குறிப்பை எதிர்பார்க்குதுன்னு வச்சுக்கலாமா?!!

கோமதி அரசு said...

ஆஹா! ஹுஸைனம்மா, அருமையான சமையல் குறிப்பைக் கொடுத்து இருக்கிறீர்கள். எளிதாக ஆண்கள் மட்டும் அல்ல, எளிதாக செய்ய விரும்பும் பெண்களும் செய்யலாம்.

வாழ்த்துக்கள் வெற்றி நிச்சியம்.

வல்லிசிம்ஹன் said...

மாயன்னு ஆரம்பிக்குதேன்னு பார்த்தேன்.
ராஜம்மா (!) புலாவ் சுவாரஸ்யம்.நல்லாப் பதிஞ்சிருக்கீங்க.
உங்களுடைய கட்டுப்பாட்டை உடைத்த ஜலீலா வாழ்க. நானெல்லாம் மட்டன் பதிவு படிக்கும் போது மட்டனுக்குப் பதில உ.கிழங்கு போட்டுடுவோம்:)

enrenrum16 said...

உங்க பையன் பாஷையில ஹெல்த்தியான சமையலோ? ஹா..ஹா... எனக்கும் இந்த மாதிரி கலந்த சாதம் பண்றது பிடிக்கும்.... ஏன்னா அதுதான் ஈஸி... ஆனா இந்த ஈஸியானா சமையலுக்கும் இவ்வளோ பெரிய பதிவு போட்டிருக்கீங்க பாருங்க...அசந்துட்டேன்... நீங்கதான் சமையல் பதிவு போட ஏத்த ஆளு..... ஹா..ஹா... ஆக....நீங்க கால்(கை?) வைக்காத விஷயமே இல்லன்னு ஆகிடுச்சு பார்த்தீங்களா, ஜாலீலாக்காவால?

ஸாதிகாக்கா.... சமையல் பதிவும் போட்டுவிட்டால் ஒற்றைவரியில் இல்லாமல் ஒற்றை வார்த்தையில் "எல்லாமே"ன்னு சொல்லிடலாமே?

இராஜராஜேஸ்வரி said...

பரிசு பெற வாழ்த்துகள்..

pudugaithendral said...

மாயன் காலண்டர் பத்தி ஏதும் எழுதியிருக்கீங்களோன்னு வந்தேன். :)

ராஜ்மா சாவல் ஆஷிஷ் அம்ருதாவுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த ஸ்டைல் நல்லா இருக்கு. செஞ்சு அசத்திடறேன்.

பருப்பு 6 மணிநேரம் ஊறப்போட மறந்திட்டா சுடுதண்ணீர் ஊத்தி ஹாட்பேக்கில் வெச்சா 1 மணிநேரத்துல கூட நல்லா மெத்துன்னு வந்திரும். அப்புறம் கூடுதலா 4 விசில் விட்டுக்கிட்டா போதும்.

pudugaithendral said...

மாயன் காலண்டர் பத்தி ஏதும் எழுதியிருக்கீங்களோன்னு வந்தேன். :)

ராஜ்மா சாவல் ஆஷிஷ் அம்ருதாவுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த ஸ்டைல் நல்லா இருக்கு. செஞ்சு அசத்திடறேன்.

பருப்பு 6 மணிநேரம் ஊறப்போட மறந்திட்டா சுடுதண்ணீர் ஊத்தி ஹாட்பேக்கில் வெச்சா 1 மணிநேரத்துல கூட நல்லா மெத்துன்னு வந்திரும். அப்புறம் கூடுதலா 4 விசில் விட்டுக்கிட்டா போதும்.

Naazar - Madukkur said...

நீங்க சொல்லியுள்ள அணைத்து ஸ்டெப்பும் செய்து இந்த புலாவ் செய்ய குறைந்தது ஒரு நாலு பேச்சிலர்களாவது அவசியம் போலுள்ளது.

(பேசிக்கொண்டே வேலை செய்தால் வேலை சீக்கிரம் முடியாது ஆகையால் தான் பேச்சு இல்லாதவர்களுக்கு இது சாத்தியப்படுமோ:)

ஸாதிகா said...

பானு இப்படி எல்லாம் சொல்லி என்னை சமையல் குறிப்பு எழுத வைக்க முடியாது.ஏன்னா

ஏன்னா

ஏன்னா

//எல்லாம் ஒரே குட்டை ஆகிடுச்சே //இந்த குட்டைகளுக்கெல்லாம் நான் அக்காவாச்சே.அதான்.:)

Jaleela Kamal said...

ம்ம் என் அழைப்புக்கு சமையல் குறிப்பே போடாத நீங்களும் கலந்து கொண்டது சந்தோஷம்.
பதிவு + விளக்கம்+ டிப்ஸ்+ குறிப்பு அனைத்துமே சூப்பர்.

நட்புடன் ஜமால் said...

ஓடுங்க ஓடுங்க

அது நம்மள நோக்கி தான் வருது

#உங்க சாப்பட்டை சொன்னேன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல

:P

ADHI VENKAT said...

உங்க சமையல் குறிப்பு பிரமாதம்.... செய்து பார்த்துட வேண்டியது தான்....

ஜலீலாக்கா வாழ்க...

அஸ்மா said...

அடேயப்பா...! சமையல் குறிப்பே கொடுக்காம இருந்துட்டு இந்த ஒரு குறிப்ப வச்சுட்டே போட்டியில ஃபர்ஸ்ட்டா வந்துடலாம்னு ஐடியாவா? :‍) நடத்துங்க.. ஹுஸைனம்மா, நடத்துங்க.. :-)

Umm Omar said...

ஹெல்லோவ்.....

நான் காண்பது நிஜம்தானா.. அல்லது வழி தவறி வந்து விட்டேனா..... நீங்க சமையல் குறிப்பு போட்டது கூடப் பெரிசில்லைக்கா... ஆனா அதுக்காக உங்களை சமைக்க வெச்சிட்டாங்களேனு நினைக்கிறப்பதான்...... நினைக்கிறப்பதான்.... நினைக்கிறப்பதான்..... கண்ணுல ரத்தக்கண்ணீரே வருது.....

உங்க பசங்களுக்கு இந்தக் குறிப்பு: I pity you guys. இப்படித்தான் வீட்டுல தினம் பேச்சிலர் (இது ஆங்கிலம் இல்லே...சுத்தத்தமிழ்) நடப்பது இப்படியாவது வெளில வந்துச்சே.... தைரியமா இருங்கப்பா... Life is crazy sometimes ;)

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_3.html

ஹுஸைனம்மா said...

முரளிதரன் - நன்றிங்க.

ஸாதிகாக்கா - ”களவும் கற்று மற”ன்னு சொல்வாங்கள்ல, அதுமாதிரிதான் ஒரு சமையல் பதிவும் எழுதித்தான் பாத்திருவோமேன்னு நினைச்சு எழுதினேன்க்கா. உங்களுக்காவது அறுசுவையில் சமையல் பதிவு எழுதுன அனுபவம் இருக்கு. எனக்கு அதுவும் இல்லியே, அதனாலத்தான் எப்படி இருக்கும்னு ஒரு ஆசை. :-)))

சுவனப்பிரியன் - இத்தனை நாளாகி, நானே பின்னூட்டத்துக்குப் பதில் எழுதிட்டேன். இப்பவாவது செஞ்சுப் பாத்துட்டீங்களா? :-))

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - //உங்க சாப்பாட்டைச் சாப்பிட்டா நேரடி சொர்க்கம்தானாம்.//
”மோட்சம் பெற சுலப, சிக்கன வழி” போர்டு வச்சு, புது பிஸினஸ் ஆரம்பிச்சுடலாம் போலருக்கே!! :-)))

அப்பாதுரை - // பாகெட்டுல வாங்கின மீனை சட்டில போட்டு சமைக்க இம்புட்டு நோவா?//
இங்கே ஃப்ரஷ்ஷாவே கிடைக்கும். ஆனா, (பெரும்பாலும்) கடையிலேயே சுத்தம் செய்து, வெட்டி கொடுத்துடுவாங்க. அதனாலத்தான் நானெல்லாம் மீன் சமைக்கிறேனாக்கும்!!

ஃபாயிஸா - ஆமா, நடந்தே விட்டது!!

ஹுஸைனம்மா said...

வெங்கட் - நல்லா இருக்கு என்றதுக்கு நன்றிங்க!

ஸ்ரீராம் சார் - //யார் சொன்னாங்க ஆம்பளைங்க எல்லாம் காய்கறி வாங்க போக மாட்டாங்கன்னு//
நானேதான் சொல்றேன். அதான் எங்க வீடுகள்லயே பார்க்கிறோமே!! அப்பப்பா.. கடைக்குப் போறதுன்னா, போருக்குப் புறப்படுற மாதிரிதான்.... :-))))

//சரி, உலகம் அழியலேன்னா உலகமே உங்கள் சமையல் குறிப்பை எதிர்பார்க்குதுன்னு வச்சுக்கலாமா?!!//
வேணாம், உசுப்பிவிட்டு, ரணகளமாக்காதீங்க!! :-)))

கோமதிக்கா - ரொம்ப நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

வல்லிமா - ராஜ்மாவை ராஜம்மா ஆக்கிட்டீங்களே!!
//நானெல்லாம் மட்டன் பதிவு படிக்கும் போது மட்டனுக்குப் பதில உ.கிழங்கு போட்டுடுவோம்//
ஒரு ரகசியம் சொல்லட்டா.. எங்க வீட்ல, மட்டன் குழம்புன்னா ஒரு ஒண்ணுரெண்டு துண்டு மட்டன், கூட பத்து-பதினஞ்சு உ.கிழங்கு துண்டுகள் இருக்கும்!! :-)))

என்றென்றும் 16 - //நீங்கதான் சமையல் பதிவு போட ஏத்த ஆளு.....//
இந்தப் பாராட்டுக்காகவே இன்னும் நாலஞ்சு சமையல் பதிவுகள் எழுதலாம்னு உத்வேகம் வருது. இருந்தாலும், உங்களை எதிர்நோக்கும் ஆபத்தை எண்ணிப் பார்த்து, அதைக் கைவிடுகீறேன்!! :-)))

இராஜராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - பருப்பு ஊறப்போட ஈஸி வழி சொல்லிக்கொடுத்ததுக்கு நன்றீங்க.

நாஸர் - //குறைந்தது ஒரு நாலு பேச்சிலர்களாவது அவசியம் போலுள்ளது.//
அடடா... அப்படி தோணிடுச்சோ!! இல்லைங்க, பொறுமையா வாசிங்க. நீங்க மட்டுமே போதும்.

/பேசிக்கொண்டே வேலை செய்தால் வேலை சீக்கிரம் முடியாது ஆகையால் தான் பேச்சு இல்லாதவர்களுக்கு இது சாத்தியப்படுமோ//
இந்த பஞ்ச் அரும்மையா இருக்குங்க!!

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - நன்றிங்க.

ஜமால் - என்ன ஓடினாலும், விடாது கருப்பு!! :-))

கோவை2தில்லி - நன்றிங்க. செஞ்சீங்களா?

ஹுஸைனம்மா said...

அஸ்மா - ரொம்ப நன்றிப்பா.

உம்ம் ஒமர் - //அதுக்காக உங்களை சமைக்க வெச்சிட்டாங்களேனு நினைக்கிறப்பதான்.....//
ஹூம்... என் கஷ்டம் உங்களுக்குத்தான் புரிஞ்சிருக்கு பாருங்க!! ஏன்னா, same blood!! (ஹி... ஹி... வெச்சோம்ல ஆப்பு)

Kanmani Rajan said...

வலைச்சரத்தில் இருந்து வந்தேன். அட, எவ்வளவு அழகா எழுதறீங்க. நான் உங்களோட பெரிய ரசிகை ஆகிட்டேன் ஒரே பதிவுல. ஆனா, இந்த சமையல் பகுதி செய்முறை விளக்கம் தவற எல்லாத்தையும் படிச்சேன் இந்த பதிவுல :)

அதுவும் உலகம் அழிய... # அந்த பினிஷிங் டச் இருக்கே! விழுந்து விழுந்து சிரிச்சேன்னா பாத்துகோங்களேன்!

Ranjani Narayanan said...

ராஜ்மா புலாவ் இன்றைய வலைச்சரத்தில் மணம் வீசியிருக்கிறதே, வாழ்த்துகள்!

புலாவை விட உங்கள் 'பேச்சிலர்' ஐ ரொம்ப ரசித்தேன். கடைசி குறிப்பு அருமை - வாய்விட்டு சிரிக்க வைத்தது.