Pages

எப்படி இருந்த நான், இப்படி..
  
 
”பாடினியார்” ஜெயந்தி  மூணுமாசம் முன்னாடி ”திருமணத்தில் உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள், தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை பற்றி எழுத அழைச்ச தொடர்பதிவு இது; ஸாரி ஃபார் த லேட் கமிங்!!

கல்லூரியில் படிக்கும்போதுதான் பெண்ணீயம், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்   எல்லாம் குறித்தும் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பெண்கள் சுதந்திரம் குறித்த மீட்டிங்குகள் கல்லூரியிலோ, சுற்று வட்டாரத்திலோ (வெளியூர்னா வீட்டில விடமாட்டாங்கல்ல)  நடக்கும்போதெல்லாம் நானும் ஆஜர்!! அதுவுமில்லாம எங்கம்மாவுக்கும் மாமியார்-நாத்தனார் கொடுமைகள் நடந்ததுண்டு. இன்னும் சில நெருங்கிய உறவுகளில் மாமியார் கண்டிப்பினையும் கண்கூடாகக் கண்டு வந்ததால், புகுந்த வீட்டினர் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல என்று புரிந்துகொண்டேன். பத்திரிகைகள், கதைகள், சினிமாக்களிலும் சித்தியைப் போல மாமியாரும் கொடுமையானவராகவே இருந்தது இன்னும் பயம் ஏற்படுத்தியது.

அதனாலேயே இன்னுமதிகம் பெண்ணுரிமைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன்.  இந்தப் பெண் விடுதலை குறித்த சந்திப்புகளும் எனக்கு நல்ல தைரியத்தையும் ஊட்டி, முற்போக்கு எண்ணங்களையும் வளர்த்து, எனது உரிமைகளையும் தெளிவாக அறியவைத்த அதே சமயம், மாமியார், நாத்தனார்கள்தான் பெண்களின் எதிரிகள் எனவும் அறுதியாகப் புரிய வைத்தன. இப்படியாக நானும் என்னைத் தயார் செய்துகொண்டேன்.

என்ன தயார் செய்துகொண்டாலும், வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம்தான் வேண்டும் என்ற என் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியாத அளவு கட்டுப்பாடான, கண்டிப்பான  அம்மா!!  அப்பாவிடம் சொல்லலாம் என்றாலும், வெட்கமாக இருந்தது. தத்துபித்தென்று ஏதோ கொஞ்சம் சொல்ல, “அப்படியொரு வரன் அமைந்தால் எனக்கும் சந்தோஷம்தான்; ஆனால், அதற்காக அப்படி இடம்தான் வேண்டும் என்று என்னால் காத்திருக்க முடியாது” என்று சொல்லிவிட, எனக்கும் பிடிவாதமாக இருக்க முடியவில்லை. ஏனெனில், வேறுசில காரணங்களோடு, என் படிப்பு மற்றும் வேலையாலும் வரிசையாகத் தட்டிப் போன வரன்களும், என் மூன்று தங்கைகளும்!!

எங்களின் எந்தவித முயற்சியுமில்லாமலேயே, என் விருப்பப்படியே, ஆசைப்பட்ட படியே வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம் அமைந்தது. இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆமா, பின்னே? கஷ்டப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு!! இருந்தாலும் அவங்க வீட்டில உள்ளவங்க எப்படி இருந்தாலும் நான் முதல்ல உறுதியா இருந்து என் உரிமைகளை நிலைநாட்டிக்கணும்னு நினைச்சுகிட்டேன்.

அப்புறம், என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்!! அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல!! இதுவும் “புஸ்”!! அதனால, என் வீட்டு சார்பா வச்ச அலங்காரத் தட்டிகள்ல என் பேரு முதல்ல வர்ற மாதிரி பாத்துகிட்டேன். ஆனா, அதை ஒரு ஈ, காக்கா கூட கண்டுகிடாததினால, அதுவும் ”புஸ்”!!

கல்யாணத்துக்கு முன்னாடி நாத்தனார் கூப்பிட்டு என்ன கலர் புடவை வேணும்னு கேக்க, நான் ”பட்டெல்லாம் வெறும் கலர் பார்த்தா எடுக்க முடியும், டிஸைன், கலர் காம்பினேஷன்லாம் பாத்துதான் எடுக்கணும்”னு பந்தா விட, உடனே அவங்க, “நானும் அப்படித்தான் நினைச்சேன்; ஆரெம்கேவிதானே, பேசாமே நீயும் அங்க வந்துடு, சேந்தே பாத்து எடுத்துக்கலாம்”னு சொல்ல, இதுவும் புஸ்!! “சே, நமக்கு சான்ஸே கொடுக்க மாட்டேங்கிறாங்களே”ன்னு நொந்துகிட்டேன். ஆனாலும் விடாமல், அவங்க எடுக்க நினைச்ச விலைக்கு, கிட்டதட்ட பாதி விலைக்குத்தான் எடுப்பேன்னு அடம்புடிச்சு நிறைவேத்திகிட்டேன்.

இதெல்லாம் ஆரம்ப ஜோர். இதுக்கெல்லாம் மசிஞ்சுடாதே; கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா (போராட) நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு என் மனச நானே சமாதானப்படுத்திகிட்டேன். இன்னும் ஆழமா என்னைத் தயார் பண்ணிகிட்டு, புகுந்த வீட்டுல அடியெடுத்து வச்சேன். ஆனா, நான் எவ்வளவோ தயார் பண்ணிகிட்டு வந்தாலும், அவங்க கையில வச்சிருந்த  ஆயுதத்துக்கு முன்னாடி என்னோட  முன்னேற்பாடுகள் எதுவுமே செல்லுபடியாகலை!! ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு”!! அதற்குமுன் எது செல்லுபடியாகும்? இப்பவும் “புஸ்”!!

இத்தோடு, எந்த பண்டிகைச் சீரும் வேண்டாமென்று மறுத்ததும் என் வேலையைச் சுலபமாக்கியது. ஏன், நானே விரும்பிக் கேட்டும், வளைகாப்புகூட நடத்தவில்லை என் மாமியார். “மற்ற மருமகள்களுக்கும் செய்ததில்லை; உனக்கு மட்டும் செய்தால், அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும்” என்று சொல்லிவிட்டார்.

இப்படி நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி,  இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது! :-)))))

இதனால் எனக்கு புகுந்த வீட்டில் எப்பவும் அன்பு மழைதான் என்று அர்த்தமில்லை; சிலபல சங்கடமான சுழ்நிலைகளும் வரும்; ஆனால், அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, மாமியார், நாத்தனார், ஓரகத்திகளைப் பேணி ஒற்றுமையாய் இருக்கும் பொறுமையை எனக்கு இந்தச் சம்பவங்கள் தருகின்றன.

உதாரணமாக,  திருமணமான சில வருடங்களில் வீடு கட்ட ஆயத்தமான போது, இயற்கை விரும்பியான எனக்கு வேறு விதமாக வீடு கட்ட ஆசை; ஆனால் என் மாமியார் உட்பட மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லையென்று புரிந்துகொண்டேன். என் ஒருத்திக்காக அத்தனை  பேரின் ஆசையை நிராசையாக்குவதைவிட, அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது; இறைவனருளால் வசதிவாய்ப்புகள் வாய்த்தால் என் விருப்பப்படி இன்னொரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அதன் விளைவு, தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு!!

’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!


Post Comment

63 comments:

LK said...

//நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!
//
மிக அருமையனா குடும்பம் ரொம்பத் தெளிவா ஆணி அடிச்ச மாதிரி சொல்லி இருக்கீங்க.. அருமை.

ராமலக்ஷ்மி said...

அன்பு முன்னாலே எல்லாமே ‘புஸ் புஸ்’தான் என்பதை ரொம்ப அழகா உங்களுக்கே உரிய அசத்தல் நடையில் சொல்லியிருக்கீங்க. அருமை.

//எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்!!//

அதே ஊர்ல நான் அடிச்சிருக்கேன் 88-ல்! அப்போ உங்களுக்கு முன்னேதானே:)?

kavisiva said...

//நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!//

இந்த எண்ணம் எல்லோரிடமும் இருந்தா பிரச்சினைகளே வராது.

ம்ம் எங்க ஊர்க்காரங்கள நல்லவங்கன்னு சொல்லிட்டீங்க :)

ஹுஸைனம்மா said...

//ராமலக்ஷ்மி said...
//எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்!!//

அதே ஊர்ல நான் அடிச்சிருக்கேன் 88-ல்! அப்போ உங்களுக்கு முன்னேதானே:)?//

அக்கா, நான் சொன்னது திருநெல்வேலியிலுள்ள எங்க கிராமத்துல; நீங்க டவுண்காரவுங்க.. ரொம்ப நாகரீகமானவங்க.. :-)))))

ஆனாலும், 88-லேயேங்கிறது கொஞ்சம் புரட்சிதான்னு நினக்கிறேன்!! ;-)))

அம்பிகா said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க ஹூஸைனம்மா!.
எல்லார் வீட்லயும் இப்படி இருந்தா மாமியார் மருமகள் பிரச்சினையே இருக்காது. நல்ல பகிர்வு.

அம்பிகா said...

ஹூஸைனம்மா! நானும் இந்த பதிவை தொடர உங்களை அழைத்திருந்தேன்.

Jaleela Kamal said...

எல்ல்லாம் புஸ்ஸானத ரொம்பசூப்பரா எழுதி இருக்கீங்க்.

கடைசியில் முடித்த விதம் அருமை ஹுஸைனாம்மா

Mrs.Menagasathia said...

very nice!!

நட்புடன் ஜமால் said...

திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்கும் பொழுது நல்லவன்னு ஒரு தகுதிய முக்கியமா வச்சி தேடுவோம்

அதுக்கும் முன்னே பணம் வாங்காதவர் என்ற தகுதியை வச்சி தேடனுமுன்னு நானும் எங்க குடும்பத்துல சொல்லிகிட்டு தான் இருக்கேன், யார் கேட்டா

இன்ஷா அல்லாஹ் - மகளுக்காவது இப்படி தேட வேண்டும் ...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அப்புறம், என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்//

இதுலயும் அக்காதான் உங்களை முந்திகிட்டேன் டியர்.. ஏன்னா நான் 86 லேயே என் திருமணத்துக்கு இன்விட்டேஷன் அடிச்சனாக்கும்..:))

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆமாம்பா நாம புரட்சிப் பெண்களா ஆகிரக் கூடாதுன்னு மாமியார் வீட்டுல பண்ற சதி..:))

க.பாலாசி said...

ரொம்ப ரசனையா எழுதியிருக்கீங்க...

ஆமா உங்கவீட்ல யாரும் டி.வி சீரியல் பார்க்கமாட்டீங்களோ? ஏன்னா நாத்தனார் மாமியார்களோட சண்டையே வரலங்கறது ஆச்சர்யமாயிருக்கு... (சும்மாதாங்க....வாழ்த்துக்கள்...)

Geetha6 said...

very intresting.
Realistic!!

ராமலக்ஷ்மி said...

@ தேனம்மை,

ஆ, வட போச்சே:)!

தமிழ் உதயம் said...

ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும்.///


இழப்பை இழப்பாக பார்த்தால் தான் இழப்பு. ஒன்றுமே இல்லை என்று நினைத்துவிட்டால் அது சிறப்பு.

vanathy said...

ஹூசைனம்மா, எல்லா புஸ்ஸூ உம் நல்லா இருக்கு. எதிர்பார்த்தது போல வாழ்க்கை அமைவது ரொம்ப கஷ்டம் தான் ஹிஹி....

யாதவன் said...

இப்படி நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி, இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது!

ரொம்ப பாவம் நீங்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யம்மாடி .. நல்லவேளை தப்பிச்சம் நாங்க :)

நேற்று ஒரு பட்டிமண்டபத்தில் கு.ஞானசம்பந்தம் சொன்னார்..
"எனக்குன்னா விட்டுடு.. நமக்குன்னா விட்டுக்கொடு'ன்னு

ஜெயந்தி said...

அனுபவங்களை நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க. இந்த மாதிரி குடும்பம் அமைந்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க்கை என்பதே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான். அதை புரிந்துகொண்டாலே நிறைய பிரச்சனைகள் வராது. தாமதமாக எழுதினாலும் என்னையும் மதித்து எழுதியமைக்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

//தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு!!//

ஹுசைனம்மா SOOOPER. இது ரொம்ப பெரிய விஷயம். இந்த மாதிரி மனசு யாருக்கும் அவ்வளவு சீக்கிரமா வந்து விடாது. அதற்கு ரொம்ப பக்குவப் பட்டிருக்கணும். சில விஷயங்கள் நீங்கலாக, நீங்கள் எல்லா விஷயத்திலும் லக்கி தான். வாழ்த்துகள்.

ஹேமா said...

சில இழப்புக்கள் சில நன்மையையே தரும் சகோதரி.அறிவுரை சொல்றமாதிரி ஒரு பதிவு.

எம் அப்துல் காதர் said...

//தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு!!//

ஹுசைனம்மா SOOOPER. இது ரொம்ப பெரிய விஷயம். இந்த மாதிரி மனசு யாருக்கும் அவ்வளவு சீக்கிரமா வந்து டாது. அதற்கு ரொம்ப பக்குவப் பட்டிருக்கணும். சில விஷயங்கள் நீங்கலாக, நீங்கள் எல்லா விஷயத்திலும் லக்கி தான். வாழ்த்துகள்.

வித்யா said...

அழகான பதிவு..

ஜெஸ்வந்தி said...

I enjoyed reading it. Very interesting. God blessed you with a lovely in-laws.

பீர் | Peer said...

:-)

நானானி said...

நினைப்பெல்லாம், புஸ் புஸ் புஸ்ன்னு ஆனாலும் உறவுகளிடம் உயர்ந்து ஜிவ் ஜிவ் ஜிவ்ன்னு மேலே மேலே பறந்துவிட்டீர்கள்.

விட்டுக் கொடுத்தல் வாழ்கையின் ஆணி வேர் என்பதை மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள், ஹூஸைனம்மா!!!வாழ்த்துக்கள்.

ஆரம்கேவியில் புடவை எடுத்தீர்களா? அப்ப நீங்க நம்ம ஊரா? சந்தோசம்.

தமிழ் பிரியன் said...

பொறாமைப்பட வைக்கிறீங்களே.. ;-)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மருமகள் என்பவள் ஒரு வீட்டின் தூண்மாதிரி. அதில் எதாவது குறையானால் வீடே ஆட்டம் கண்டிரும். மாமியார் மருமகள் எப்போதும் ஒற்றுமையா இருக்க வேண்டும்.

மருமகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.

///தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு!! ///

அல்ஹம்துலில்லாஹ்.. படிக்கும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.

உங்களுக்கே உரிய பாணியில் அருமையா சுவாரசியமா சொல்லிருக்கீங்க ஹூசைனம்மா.

முகுந்த் அம்மா said...

எப்படி இருந்த நான் இப்படி சூப்ப்ர் ஆ இருக்கேன் பாரு அப்படின்னு நீங்க பெருமை கொள்ள வைக்கிறது எல்லாத்தையும் அன்பால் அடிக்கற உங்கள் சூப்ப்ர் குடும்பம்.

எல்லார் வீட்டிலயும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்.

ஸ்ரீராம். said...

இந்த "புஸ புஸ"கள் எல்லோருக்கும் அமையணும்னு வாழ்த்துங்கள். நல்லதொரு அனுபவக் குறிப்புகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள்.

புதிய மனிதா said...

மிக அருமை me the 150th follower...ha ha ha...

ஸாதிகா said...

அப்ப எல்லாவற்றையும் புஸ் ஆக்கி இப்ப உங்அக் ரங்ஸை உஸ்ஸ்ஸ்ஸ்..என்று சொல்லவைத்துவிட்டீர்கள் ஹுசைனம்ம.நிஜம்தானே?

ஸாதிகா said...

உங்களுக்கெ உரித்தான சுவாரஸ்ய நடையில் அழகிய பகிர்வுக்கு பாராட்டுகள்!

ஹுஸைனம்மா said...

வாங்க எல்.கே. நன்றி.

ராமலக்‌ஷ்மிக்கா - வாங்க, நன்றி.

கவிசிவா - வாங்க. ஆஹா, ரொம்ப பில்ட்-அப் கொடுத்துட்டனோ உங்க ஊர்க்காரங்களைப் பத்தி? அடுத்ததுல வாரிடலாம்!!

அம்பிகா - வாங்க. சாரிப்பா, உங்க பதிவை/அழைப்பை நான் கவனிக்கல. ஆனாலும் பாருங்க, “இழந்தால்தான் பெறமுடியும்”னு ஸேம் பிளட்டா எழுதிருக்கோம்!!

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - நன்றிக்கா.

மேனகா - வாங்க, நன்றி.

ஜமால் - மத்தவங்க கல்யாணத்துல, உடன்பிறந்தவங்களே ஆனாலும், ஒரு அளவுக்குமேலே நம்ம சொல்ல முடியாது. நம்ம கல்யாணம், நம்ம பிள்ளைங்க கல்யாணத்துலதான் நம்ம ஆசைகளை நிறைவேத்திக்கணும்!!

தேனக்கா - அதானே, மாமியார்னா சதி இல்லாம இருக்குமா என்ன?

//நான் 86 லேயே//
86-லயேவா?!! கையைக் கொடுங்கக்கா, கண்ணில ஒத்திக்கிறேன். 96-ல நான் செஞ்சதையே பெரிய சாதனையா நினைச்சுக்கிட்டு இருக்கேன்!! நீங்களும், ராமலக்‌ஷ்மியக்காவும் புரட்சிப் பெண்கள்!!

ஹுஸைனம்மா said...

க.பாலாசி - வாங்க. சீரியல் பாக்காம இருப்பாங்களா ஊர்ல? நாங்க எல்லாருமே தனிக்குடித்தனமாத்தான் இருக்கோம்; அதிகப் பிரச்னைகள் வராததற்கு அதுவும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்.

கீதா6 - வாங்க, நன்றி.

தமிழ் உதயம் - /இழப்பை இழப்பாக பார்த்தால் தான் இழப்பு// - அருமை!! நன்றி.

வானதி - ஆமா, எல்லாம் எதிர்பார்த்தபடி அமைந்துவிடாது. எனக்கும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை, இந்நிறைகளால் மறக்க முயல்கிறேன், அவ்வளவே!!

யாதவன் - வாங்க. நீங்களாவது என் பக்கம் பேசுறீங்களே!! நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

க.பாலாசி - வாங்க. சீரியல் பாக்காம இருப்பாங்களா ஊர்ல? நாங்க எல்லாருமே தனிக்குடித்தனமாத்தான் இருக்கோம்; அதிகப் பிரச்னைகள் வராததற்கு அதுவும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்.

கீதா6 - வாங்க, நன்றி.

தமிழ் உதயம் - /இழப்பை இழப்பாக பார்த்தால் தான் இழப்பு// - அருமை!! நன்றி.

வானதி - ஆமா, எல்லாம் எதிர்பார்த்தபடி அமைந்துவிடாது. எனக்கும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை, இந்நிறைகளால் மறக்க முயல்கிறேன், அவ்வளவே!!

யாதவன் - வாங்க. நீங்களாவது என் பக்கம் பேசுறீங்களே!! நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

முத்துலட்சுமிக்கா - வாங்க. இது நல்லாருக்கே - ”எனக்கு.. நமக்கு”. உண்மைதாங்க்கா. அப்புறம், //யம்மாடி .. நல்லவேளை தப்பிச்சம் நாங்க :)// புரியலையே, ஏங்க்கா?

ஜெயந்திக்கா - வாங்கக்கா. குடும்பம்னா நாலும் இருக்கும். நான் நாலில் நல்லதை மட்டும் சொல்லிருக்கேன், அவ்வளவுதான்!! நான் எழுதணும்னு நினைச்ச விஷயமே தொடர்பதிவா வந்ததாலத்தான் (இவ்ளோ சீக்கிரமா) எழுதிட்டேன்!! :-))))

அப்துல்காதர் - வாங்க. நன்றி பாராட்டுக்கு. //சில விஷயங்கள் நீங்கலாக, நீங்கள் எல்லா விஷயத்திலும் லக்கி தான்//

ஆமா, எல்லாத்துலயும் லக்கியா இருந்தா லைஃப் போரடிச்சுடும். எனக்கும் சில அன்லக்கி பேஜஸ் ஆஃப் லைஃப் இருக்கின்றன!! அதச் சொன்னா உங்களுக்கு போரடிச்சுடும்!!

ஹேமா - வாங்க. நன்றிப்பா. ஆமாம், அறிவுரையா எடுத்துகிட்டாலும் நல்லதுதான். எனக்கெல்லாம் அனுபவப் பாடமாத்தான் கிடைச்சுது. “அனுசரிச்சுப் போ”ன்னு அம்மா அப்போ சொன்னது கோவம் தந்துது. அதையே யாராவது இந்த மாதிரி அனுபவப் பாடத்தைச் சொல்லியிருந்தா தெளிவா இருந்திருக்கும்.

ஹுஸைனம்மா said...

வித்யா - நன்றிப்பா.

ஜெஸ்வந்தி - வாங்க; நன்றி. ஆமாம், என் பெற்றோரின் பிரார்த்த்னைகளால் கிட்டிய இறையருள் எனது புகுந்த வீட்டினர்.

பீர் - அட நீங்களா!! வாங்க, வாங்க!

நானானி மேடம் - நன்றிங்க. என்னைப் பாத்து திருநெல்வேலியான்னு கேக்கிறதிலிருந்தே என் பதிவுக்கு இப்பத்தான் வர்றீங்கன்னு தெரியுது!! :-)))
இனி தவறாம வந்துடுங்க மேடம்!!

ஹுஸைனம்மா said...

தமிழ்ப்பிரியன் - வாங்க. பொறாமைப் படவைக்கிறேனா?? இல்ல, நான் ஒரு பக்கத்தை மட்டும் கொஞ்சம் சிலாகிச்சு சொல்லிருக்கேன். அப்பா-மகன், அண்ணந்தம்பின்னு ரத்த சம்பந்தத்துலயே ரத்தம் பாக்கிற அளவுக்கு சண்டைகள் வரும்போது, மாமியார்-மருமகள்க்கு நடுவில கருத்து வேறுபாடு வராதா என்ன? எங்களுக்கும் வரும், ஆனா, அதை டீஸண்டா (ஹி..ஹி..) கடந்துடுவோம். எனக்குத்தான் கடிச்சுக்குதற ஒருத்தர் இருக்காரே!! அதனால என் மாமியார் தப்பிச்சார்!! ;-))))

மேலும் என் கொள்கைப்படியே வரதட்சனை, சீர்வரிசை - இதெல்லாம் வேண்டாம்னு சொன்னதே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போனதால, மத்தத கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் அவ்வளவுதான்!!

ஸ்டார்ஜன் - வாங்க, நன்றி. //மருமகள் என்பவள் ஒரு வீட்டின் தூண்மாதிரி.//

ஆமாம், மருமக தூண் என்றால், மாமியார்தான் எல்லா தூண்களையும் தாங்கும் ஃபவுண்டேஷன்!! பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருந்தாத்தான் வீடு எப்படிப்பட்ட சூறாவளியையும் தாங்கும்!! :-))

ஹுஸைனம்மா said...

ஆமா ஸ்டார்ஜன், என் மாமியார் மட்டும் என்னிடம் அன்பா, பொறுமையா இருக்கலைன்னா நானும் இன்னிக்கு இப்படி பதிவு போட்டு இருக்கமுடியாதே?

முகுந்த் அம்மா - வாங்க, நன்றிப்பா. ஆமாம், எல்லாரும் இப்படி இருக்கத்தான் ஆசை.

ஸ்ரீராம் - வாங்க, நன்றி!!

சைவக் கொத்ஸ் - நன்றி!!

ஹுஸைனம்மா said...

திய மனிதா - என் பதிவின் 150-ஆவது ஃபாலோயரா ஆனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க!!

ஸாதிகாக்கா - ஹி.. ஹி.. ஆமாம்க்கா, அவர் நொந்துதான் இருக்கார். நன்றிக்கா.

☀நான் ஆதவன்☀ said...

அன்பாலே ஆன அழகான வீடு :)

நாஞ்சில் பிரதாப் said...

ஒண்ணுமே புரியலைங்க... இதெல்லாம் புரியற அளவுக்கு இன்னும் வயசும் ஆகல..:))
ஒண்ணு மட்டும் புரியுது...நீங்க வாழ்க்கைல பல தடவை புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆகிருக்கீங்க..
சோ சேட்...

அப்துல்மாலிக் said...

:(((((((((((((

ஜெய்லானி said...

ஓவரா சீரியல் அப்போ இல்லை ..இருந்தும் எப்படி ..டீவியும் இல்லை ..பின்னே எப்படி இவ்வளவு தப்பா கற்பனை பண்ணி வச்சீங்க..நீங்க ..?

நீங்க நல்லவரா கெட்டவரா..?

அஸ்மா said...

அருமையா இருக்கு, மிஸஸ்.ஹுஸைன்! அதில் உங்களின் பல‌ நிகழ்வுகள் என்னுடைய நிகழ்வுகளுக்கு ஒத்துப்போகிறது :) வாழ்த்துக்கள்! நானும் வரதட்சணை என்ற பெயரில் எதுவுமே கொடுக்காமல், புரட்சித் திருமணம்(நபிவழிப்படி)தான் பண்ணிக்கிட்டேன்,அல்ஹம்துலில்லாஹ்!

கவிதா | Kavitha said...

அழகான "புஸ்" கொண்ட வீடு ன்னு சொல்லுங்க..

நல்லா இருக்குங்க பதிவு சொன்ன விதம் யதார்த்தம் :)

புஸ் = "அன்பு உள்ளங்கள் "

அமைதி அப்பா said...

//இதனால் எனக்கு புகுந்த வீட்டில் எப்பவும் அன்பு மழைதான் என்று அர்த்தமில்லை; சிலபல சங்கடமான சுழ்நிலைகளும் வரும்; ஆனால், அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, மாமியார், நாத்தனார், ஓரகத்திகளைப் பேணி ஒற்றுமையாய் இருக்கும் பொறுமையை எனக்கு இந்தச் சம்பவங்கள் தருகின்றன.//

அவசியம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டியது.

அன்னு said...

//’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!//

அருமையான முடிவு ஹுஸைனம்மா. எல்லா செயல்களும் எல்லா நல்லது கெட்டதுகளும் நாம் எடுக்கும் முடிவில், அந்த முடிவெடுக்க தூண்டும் 'யோசனையில்' தான் அமைந்துள்ளது. எனவே எந்த ஒரு முடிவையும் 'யோசித்து' எடுப்பதே சால சிறந்தது. என்ன சொல்றீங்க?

ஒ.நூருல் அமீன் said...

இறைவன் அருளால் தெளிவான சிந்தனை, விட்டுக் கொடுத்தலுடன் கூடிய சுயஅலசல். அனைவரும் படித்து பாடம் பெறத் தக்க பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

கடைசியில குடுத்த பன்ச் சூப்பர் :-)

பீர் | Peer said...

//புரட்சித் திருமணம்(நபிவழிப்படி//

:-)

மனோ சாமிநாதன் said...

“ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!”

வாழ்க்கையின் ரகசியமே இந்த வரிகள்தான்! இதைப் புரிந்து நடப்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாமே வெற்றிதான்!

நான் முன்பே சொன்னதுதான்! அருமையான, சரளமான, ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை! அருமையான பதிவு!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அதிகமாக புஸ் புஸ் என்று பல்பு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

//எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!//

நச்

அருமையான பகிர்வு. நன்றி சகோதரி ஹுஸைனம்மா.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு.. குற்றம் கண்டால் சுற்றம் இல்லை..

//’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும்//

தனக்கு என்ன வேனும்றது ஒருத்தருக்கொருத்தர் மாறுபடுது..

ப்ரியமுடன் வசந்த் said...

//என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்!!//

இப்படியுமா ஆசைப்படுவாங்க ம்ம் மைண்ட்ல போட்டுகிறேன்...

//அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து//

தட்ஸ்குட்..

ஹுஸைனம்மா said...

ஆதவன் - வாங்க நன்றி.

பிரதாப் - என்னது, இன்னும் புரியற வாசாகலையா? அதத் தாண்டி, மறந்து போற அளவு வயசாகிடுச்சுன்னு சொல்லுங்க, ஒத்துக்கலாம்.

மாலிக் - ஏன் இவ்ளோ சோகம் நான் சந்தோஷமா இருகக்தைப் பாத்து?

ஜெய்லானி - ஓவர் கற்பனைக்குக் காரணம் நான் பங்குபெற்ற மகளிர் மன்ற சந்திப்புகளும், பத்திரிகைகளும் ஒரு காரணம்!!

நான் நல்லவருக்கு நல்லவ; கெட்டவருக்கு படு மோசமானவ, ஆமாம்!!

ஹுஸைனம்மா said...

கவிதா - அட வாங்க, அணில்குட்டி எங்கே? இங்க விட்டுட்டு போங்க கொஞ்ச நேரம் கொஞ்ச!!

அஸ்மாக்கா - ஒற்றுமைகள் இருக்கா - சந்தோஷம்க்கா!

அமைதி அப்பா - வாங்க, நன்றி.

அன்னூஊஊஊஊ - யோசிக்கணும்கிற ஆசையெ போயிடுச்சு இப்ப!!

நூருல் அமீன் சார் - வாங்க, நன்றி.

ஹுஸைனம்மா said...

உழவன் - வாங்க. நன்றி.

மனோ அக்கா - வாங்கக்கா, நன்றி.

அபுநிஹான் - நன்றி.

எல் போர்ட் - வாங்க. அஃப்கோர்ஸ், நிச்சயமா ஒவ்வொருத்தர் விருப்பமும் வேறுபடும். இருந்தாலும், நமக்காக விட்டுக்கொடுப்பவருக்காக நாமும் முடிவைக் கொஞ்சம் மாத்திக்கலாம்தானே?

வசந்த் - என்னது, இதெல்லாம் சர்வ சாதாரணம் இப்பல்லாம்!! இதுகூட தெரியாம இருக்கீங்களே?

அப்பாவி தங்கமணி said...

அருமையான பதிவு அக்கா... விட்டுகொடுத்தவர் கெட்டு போவதில்லை, ரெம்ப சரி. நல்ல படிப்பினையான பதிவு. நீங்களும் லக்கி உங்க மாமியாரும் லக்கி

Anonymous said...

How did I miss this post?

//நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி, இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது! :-)))))
//

Ha ha ha.