Pages

காலமாற்றம் (சிறுகதை)




 


"லேடீஸ் ஸ்பெஷல்” தீபாவளி மலரில் (2011) வெளிவந்த என் சிறுகதை.


 வீட்டுக்கு முதன்முறையாக அந்தத் தோழியை அழைத்து வந்திருந்தேன். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பார்க்கில் தினமும் நடைபயிற்சிக்குச் சென்றதில், அறிமுகமான புதுமுகம். புன்னகையில் ஆரம்பித்து, சேர்ந்து நடப்பதில் வந்து, வீட்டுக்கு வருமளவு ஆகியிருக்கிறது தற்போதைக்கு.

நடக்கும்போது பேசியதில், குடும்பம், கணவர், குழந்தைகள், சொந்த ஊர் என்று பலதும் பேசியிருந்தோம். என்றாலும், இன்னும் பேசவா விஷயம் இருக்காது? பலதும் பேசிப்பேசி, இந்த ஊர்த் தோழிகள், சொந்த ஊர்த் தோழிகள், கல்லூரித் தோழிகள், பள்ளித் தோழிகள் என்று வந்தபோது, அவரின் ‘நான் கல்லூரி சென்றதில்லை’ என்ற கூற்றில் கொஞ்சம் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஆகி, “அப்படியா?” என வாய்பிளந்தேன். ஏனெனில், அவரது உடை எளிமை என்றாலும், அதிலுள்ள நேர்த்தியும்; பேச்சின் அதிகப்படியில்லாத நளினமும், இடையிடையே சரளமாய்க் கலந்துவரும் ஆங்கிலச் சொற்களும், அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை என்பதை எனக்கு நம்ப முடியாமலாக்கியது.

இன்னமும் அதிர்ச்சியானதைச் சொன்னார், படித்ததும் ஏழாவது வரைதானாம்!! கணவரும் பெரிய வேலையில் இருக்கிறார்; குழந்தைகளும், வசதியானவர்கள் படிக்கும் பள்ளிகல்லூரிகளில் படிக்கின்றனர். இருந்தும், இவர்..

அவரே சொன்னார், “எங்க ஊர்ல, பெண்களுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிடுவாங்க. அதேபோல எனக்கும் ஆனது.” என்றார்.

“ஆனாலும், படிப்பை நிறுத்தும்போது உங்களுக்கு கஷ்டமாயில்லியா?”

”ம்... அப்போதைய காலத்தில் பள்ளிப் படிப்பு என்பதும், வெறும் ஏட்டுப் படிப்பாய், தினப்படி வாழ்க்கைக்கு எந்தவித பயனும் அதனால் இல்லாத வண்ணமாய்த்தான் இருந்தது. தற்போது போல கடினமான உழைப்பு தேவைப்படும் பாடத்திட்டமும் இல்லை. எழுதப் படிக்க தெரிந்து கொண்டதுதான் பள்ளி சென்றதன் பயன். மேலும், பாடப் புத்தகங்களைவிட, கதைப் புத்தகங்கள்தான் சுவாரஸ்யமாய் இருந்தது எனக்கு. ஆனால், ஆசிரியர்கள் அருமையானவர்கள். புத்தகம்தான் வாழ்க்கைக்கு உதவவில்லையே தவிர, ஆசிரியர்கள் செய்யும் போதனைகள் வாழ்க்கைக்கு மிக அவசியமானதாய் இருந்தன. இன்னொரு விஷயம் சொல்லணும். என்னன்னா, வீட்டில அம்மா, அப்பா, பாட்டினு பெரியவங்க அறிவுரைன்னு சொன்னதைத்தான் ஆசிரியைகளும் சொல்லித் தந்தாங்க!! அதனால, படிப்பை நிறுத்துவது எனக்கு பெரிய விஷயமாய்த் தெரியலை.  தோழிகளைப் பிரிவதுதான் எனக்கு கஷ்டமா இருந்தது!!” புன்னகையோடு சொன்னார்.

“இருந்தாலும், பதிமூணு, பதினாலு வயசுல கல்யாணம்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அந்த வயசுல உடம்புல என்ன தெம்பு இருக்கும் குடும்பம் நடத்தவும்,  பிள்ளைபெறவும்?”

வாய்விட்டுச் சிரித்தவர், “என்கிட்ட நிறைய பேர் இதத்தான் கேக்கிறாங்க. அந்தக் காலத்துப் பெண்பிள்ளைங்க இந்தக் காலத்து பிள்ளைங்க போல சோனியாய் இருக்க மாட்டாங்க. இப்பப் போல சத்துக்களைப் பிழிஞ்செடுத்த மிஷின் -பாலிஷ்ட் அரிசியோ, ரீ-ஃபைண்ட் எண்ணெயோ, அப்ப கிடையாது. ஃபாஸ்ட்-ஃபுட் வகையறாக்களும் கிடையாது. நாங்க சாப்பிட்டது எல்லாமே முழு போஷாக்கான உணவுகள்தான்; அதோட, சாப்பிடற சாப்பாடுக்கேத்த வேலைகளும் உண்டு. அப்ப எல்லாம் அம்மியும், உரலும், கிணறும்தானே? அதனால, சிறு வயசுலயே எங்க உடம்பு உரமாத்தான் இருக்கும். இதோ என் கல்யாண ஃபோட்டோ பாருங்க, நான் எப்படியிருக்கேன்னு?”

அவரது கைப்பையிலிருந்து எடுத்துத் தந்த அந்தப் புகைப்படத்துக்கும் தற்போதைக்கும் முகத்தில்தான் வயதுகூடியது தெரிந்ததே தவிர, உயரம், உடல் பூரிப்பு எல்லாம் இக்காலத்திய இரண்டு பிள்ளை பெற்ற ஒரு சராசரிப் பெண்ணின் வாகில் இருந்தது.

”சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிகிட்டதுல வருத்தமில்லன்னு சொல்லி நியாயப்படுத்துறீங்க. தப்பா நினைக்காதீங்க. உங்க பொண்ணு, இப்ப காலேஜ் படிக்கிறாளே....” வென்று இழுத்தேன்.

”ஆமாம்.  இஞ்சினியரிங் முடிச்சுட்டு, இப்ப எம்.இ. படிக்கிறா. படிச்சு முடிச்சப்புறம்தான் கல்யாண பேச்சு ஆரம்பிக்கணும். நீங்க கேட்டது புரியுது. அந்தக் காலம் வேற. இந்தக் காலம் வேற. முதல்ல, நீங்க சொன்ன மாதிரி, இந்தக் காலத்து உணவுமுறைகளாலயும், “ஸ்லிம்” பைத்தியத்தாலயும்,  காலேஜ் படிக்கிற வயசு வந்தும்கூட, பொண்ணுங்க ஆரோக்கியமும், சத்தும் இல்லாம  இருக்காங்க.”

“ரொம்ப கரெக்டுங்க. இந்த ‘ஸ்லிம்-மேனியா’ படுத்துற பாடு இருக்கே!!” நானும் புலம்பிக் கொண்டேன்.

“ஆமாங்க. இன்னும், என் காலத்தில, எனக்குப் படிப்பில ஆர்வமில்லை; அத்தோட பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடத்துவதும் அப்போதைய வழக்கம் என்று தெரிந்திருந்ததாலும் எனக்கு படிப்பில் நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம். அப்போவெல்லாம் திருமணமான பெண்களுக்கு எல்லாமே கணவர்தான். வீட்டுக்காரர்தான் எல்லாம்னு நினைச்ச எங்க நம்பிக்கைக்கு ஏத்த மாதிரியே, அவரது பாதுகாப்பு முழுசா இருந்துது. ஆனா, இப்போ, நிலைமை அப்படியில்லை. பெண்களும் படிப்புல ஆர்வமாருக்காங்க. இந்தக் காலத்து திருமணங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் அமையுற மாதிரி தெரியலை. சின்னச்சின்ன பிரச்னைக்கெல்லாம் ஈகோ தலையெடுக்குது. அதனால, பெண்கள், ஒரு டிகிரியாவது முடிச்சு,  வேலையில் இருக்கிறதுதான் தனக்கு பாதுகாப்புனு நினைக்கிறாங்க. அதனால, மாறியிருக்கிற காலத்துக்கேத்த மாதிரி, நானும் மாறிக்கிட்டேன். மாறித்தான் ஆகவேண்டியிருக்கு.”

கடந்த கால பெருமையையும், நிகழ்கால நிதர்சனத்தையும் அழகாக அவர் எடுத்துரைத்ததில்,  வியந்து நின்றேன்.

Post Comment

18 comments:

அப்பாதுரை said...

கதை நல்லா இருக்குங்க.
'நம்பிக்கையின் அடிப்படை' தான் கொஞ்சம் இடிக்குது :). அப்படிச் சொல்லி அந்தக்காலத் திருமணப் பழக்கத்தைக் கொண்டாடுறோம். அந்தக் காலத் திருமணம் ஒன் வே.

லேடீஸ் ஸ்பெஷல்னு ஒரு பத்திரிகையா! தமிழில் எத்தனை பத்திரிகைகள்! அடுத்த முறை போகும் பொழுது பத்திரிகைச் சுற்று ஒன்று அடிக்க வேண்டும்.

lankasris said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
www.suncnn.blogspot.com

lankasris said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
www.suncnn.blogspot.com

Anisha Yunus said...

கடந்த கால பெருமையையும், நிகழ்கால நிதர்சனத்தையும்
அழகாக இந்தக்கதை எடுத்துரைத்ததில், வியந்து நிற்கின்றேன் :))

கூற்று அத்தனையும் உண்மை அக்கா.... இந்தக் கதையும் உண்மையா?? :))

ப.கந்தசாமி said...

நல்ல அனுபவம்.

ஸ்ரீராம். said...

அந்தக் காலப் பழக்கங்களை எடுத்துச் சொல்லியிருப்பது 'உண்மைதானே' என்று எண்ண வைத்தது. என் அம்மாவுக்கு திருமணமாகும்போது பதினைந்து வயது.
படிப்பு முறையிலிருந்து உணவுப் பழக்கங்கள் வரை எத்தனை மாறுதல்கள்....

துளசி கோபால் said...

தற்போதய வாழ்க்கையைப் பற்றிய நல்ல புரிதல் உள்ள தோழி!!!!

கதை 'நல்லா இருக்கு.

இமா க்றிஸ் said...

கதை அருமை ஹுஸைனம்மா. கதை என்பதற்கும் மேல், அந்தப் பெண் சொல்லும் கருத்துகள் அப்படி அமைந்திருக்கிறது.

RAMA RAVI (RAMVI) said...

// மாறியிருக்கிற காலத்துக்கேத்த மாதிரி,மாறித்தான் ஆகவேண்டியிருக்கு.”//

உண்மைதான். சிறப்பான சிறு கதை.

வல்லிசிம்ஹன் said...

ப்டித்தாலும் படிக்காவிட்டாலும் வாழ்க்கையைத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதிகம் எதிபர்ப்பில்லை. அப்பொழுதும் தம்பதிகள் பிரிவு என்பது இருந்தது. வெளியே தெரியாது. நல்லபாடம் கற்றவர்கள் பிழைத்தார்கள். இனிமேல் வரும் சந்ததி எப்படியோ தெரியாது. நல்ல கருத்துள்ள பதிவு ஹுசைனம்மா.
அன்னையர் தின வாழ்த்துகள் குடும்பத்தில்மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா இந்த வார தமிழ்மண நட்சத்திரமா நீங்கள். பார்க்காமல் விட்டேனே. மனம் நிறைந்த ரொம்ப லேட்டான வாழ்த்துகள் மா.

ஹுஸைனம்மா said...

அப்பாத்துரை, நன்றி.
“நம்பிக்கையின் அடிப்படை” -உணமையாத்தான் இருக்கணும். ஏன்னா, சூதுவாதுகள் தெரியாத சிறுவயது எனும்போது நம்பிக்கை இருந்துதானே இருக்கும். அப்படின்னு நினைக்கிறேன்.

”லேடீஸ் ஸ்பெஷல்” - இப்பாத்திரிகை பத்து வருடங்களுக்கு மேலாக வெளிவருவதாகப் படித்த் ஞாபகம். தேனம்மை அக்கா மூலம்தான் எனக்கும் தெரியவந்தது.

தமிழ்நாட்டில் பெண்கள் பத்திரிகைகளுக்குக் குறைவேயில்லை. நிறைய உண்டு!! நல்லவேளை ஆண்கள் பத்திரிகை என்று தனியே எதுவும் இலை.:-)))))

ஹுஸைனம்மா said...

மிம்ரினாஸ் - நன்றிங்க.

அன்னு - கற்பனை கொஞ்சமாகக் கலந்த உண்மைக் கதை இது.

பழனி சார் - நன்றிங்க.

ஸ்ரீராம் சார் - என் பாட்டி ஒருவருக்குத் திருமணமாகும்போது ஒன்பது வயதாம். திருமண ஃபோட்டோஎடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை அப்போ. ஆனால், என் நினைவு தெரிந்த நாள்தொட்டு, அவர்தான் அவங்க குடும்பத்தின் இரும்பு லேடி!! அவ்வளவு நெஞ்சுரமானவங்களை நான் பார்த்தது கிடையாது.

ஹுஸைனம்மா said...

துளசி டீச்சர் - நன்றி.

இமா - நலமா?

ராம்விக்கா - நன்றி.

வல்லிமா - உண்மைதான். இனிவரும் சந்ததியை நினைத்தால் பயமாகத்தான் இருக்கு. வாழ்த்துக்கும் நன்றி.

மாதேவி said...

நல்லாக இருக்கின்றது.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

மாதேவி said...

நல்லாக இருக்கின்றது.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

கீதமஞ்சரி said...

காலத்துக்கேற்றபடி தன்னை இருத்திக்கொள்ளும் பெண்மை வியக்கவைக்கிறது. பாராட்டுகள் ஹூஸைனம்மா.

ஹுஸைனம்மா said...

மாதேவி -நன்றி.

கீதமஞ்சரி -நன்றிப்பா.