Pages

ரீ-ஸைக்ளிங்கும், பழைய இரும்புச்சாமானும்




புதாபியின் நீலாங்கரையான அல்-பத்தீன் ஏரியா.

விதவிதமான வடிவங்கள், அமைப்புகள், நிறங்களில் பெரிய பெரிய பங்களாக்கள்.  பிரமிப்பு தரும் பிரமாண்டம!! வாயிற்கதவினூடே தெரியும் தோட்டங்களும் பச்சைப் பசேலென்று இருக்கும். பெரும்பாலும் இந்நாட்டு குடிமக்களும், ஆங்கிலேயே ஐரோப்பிய மக்களுமே இங்கு வசிக்கின்றனர். சில நிறுவனங்களில் உயர்பதவியில் இருக்கும் சில இந்தியர்களும் இங்கு உண்டு. ஒவ்வொரு வீட்டின் முன்னும் குறைந்தது இரண்டு பெரிய கார்களாவது நிற்கும். சில கார்களின்பின் ஒரு சிறுபடகும் இழுவையின் மூலம் மாட்டப்பட்டிருக்கும்.

அந்த பகட்டுக்கு ஒவ்வாத உருவமாக, கரீம்பாய் தனது மெலிந்த சரீரத்துடன், கட்டிடப் பணியாளருக்கேயான நீலநிற யூனிஃபார்ம் உடையில்,  கையில் கனத்த பெரிய கீஸுடன் அடுத்த குப்பைத் தொட்டி நோக்கி நடந்தார். அதைக் கிளறி, அதில் கிடக்கும் காலியான குளிர்பான டின்களைச் சேகரித்து வெளியே எடுத்தார்; ஒவ்வொன்றாகக் காலின் கீழ் வைத்து மிதித்து நசுக்கி, கீஸ் (பிளாஸ்டிக் பை) உள்ளே போட்டார்.  நசுக்காமல் முழுதாகப் போட்டால் கவரில் இடம் போதாமல் போய்விடும்.

அந்த ஏரியாவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள் ஒன்றில் கட்டிட வேலை பார்க்கிறார் கரீம்பாய். காலை ஏழு மணிக்குத் தொடங்கும் பணிக்கு, ஐந்தரை மணிக்கே கம்பெனி பஸ் கொண்டுவந்து இறக்கிவிடும். பலப்பல சைட்களில் பணியாளர்களை இறக்கிவிட வேண்டியிருப்பதால் இப்படி சீக்கிரமே வந்துவிட வேண்டும்.

சக பணியாளர்கள், கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் துண்டையோ, பேப்பரையோ விரித்து, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர் அந்நேரத்தில் ‘பார்ட்-டைம்’ ஜாப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காலி டின்களைச் சேகரித்து வைத்து, சைட்டில் பழைய இரும்பு சாமான்கள் எடுக்க பிக்-அப் வண்டி கொண்டுவரும் பாக்கிஸ்தானியிடம் கொடுத்தால், எடையைப் பொறுத்து,  அஞ்சோ, பத்தோ திர்ஹம்கள் கிடைக்கும். இந்தியப் பணத்துக்கு, அம்பது, நூறு ரூபாய் கிடைக்குமே!! அப்போ ‘பார்ட்-டைம்’ ஜாப் தானே இது?

ஏழு மணி வரையிலும் இதைச் செய்யலாம் . பின் கட்டிட வேலை தொடங்கும். கரீம் பாய், கையிலிருக்கும் கீஸைப் பார்த்தார். ”ரொம்ப அழுக்கா இருக்கு. கிழியவேற ஆரம்பிச்சுட்டுது. வெள்ளிக்கிழம கடைக்குப் போவும்போது, இதவிடப் பெரிய கீஸ் ஒண்ணு கேட்டு எடுத்துட்டு வரணுன்னு எப்பவும் நினைக்கதுதான். எழவு மறந்துல்ல  தொலையுது.” சலித்துக் கொண்டார்.

அடுத்த குப்பைத் தொட்டியை அடையுமுன், வழியிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக டின்கள் கிடந்ததை எடுத்துக் கொண்டார். ”இளந்தாரிப் பயலுவ குடிச்சுட்டு ரோட்டில போட்டுட்டு போயிருக்கானுவளாருக்கும். குப்பைத் தொட்டி பக்கத்துல இருந்தும் கொண்டு போட என்னா வருத்தம்?” நினைத்துக் கொண்டே நடந்தார். இந்தக் குப்பைத் தொட்டியில் அவ்வளவாக காலி டின்கள் இல்லை. ”இப்பத்தான் பெப்ஸி, கோக்கெல்லாம் குடிக்காதீய. ஒடம்புக்கு நல்லதில்லன்னு பெரச்சாரம் பண்றாவளாமே. எல்லாரும் கேட்டுக்கிட்டாவ போல. அதான் இப்பல்லாம் நெறய கெடைக்க மாட்டுக்குது.”


டாடி, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ”ரீ-சைக்ளிங் டே” அப்ஸர்வ் பண்றோம்.” மகள் கொஞ்சிக்கொண்டே காதர் பாஷாவின் அருகில் வந்தமர்ந்தாள்.

காதர் பாஷா அல்-பத்தீனில் வில்லாவில் (பங்களா) தங்கியிருக்கிறார். நகரில் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். அதன் பலன்களில் சில,  இந்த வில்லாவும், இண்டர்நேஷனல் பள்ளியில் பிள்ளைகளின் படிப்பும். காலை வேளைகளில் வீட்டுத் தோட்டத்தில் சிறு உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, அங்கேயே அமர்ந்து பேப்பர் படிப்பது அவர் வழக்கம். பத்தாவது படிக்கும் மகள் இந்நேரம் இந்தப் பக்கம் வருவது அரிதிலும் அரிது.

“அதுக்கென்னம்மா செய்யணும்? பணம் எதுவும் கொடுக்கணுமா? ப்ரோக்ராம் வச்சிருக்கீங்களா? ட்ரஸ் வாங்கணுமா?

“ஓ டாட்!! திஸ் இஸ் நாட் அவர் கல்ச்சுரல் டே டு டூ ப்ரோக்ராம்ஸ்! திஸ் இஸ் ரீ-ஸைக்ளிங், யூ நோ?” சிணுங்கினாள்.

“எனக்கென்னம்மா தெரியும்? அதுக்கு நான் என்ன செய்யணுன்னு சொல்லு? நீ அவசியமில்லாம என்கிட்ட இதெல்லாம் சொல்லமாட்டியே? உன் உம்மாகிட்ட சொல்லி நடக்கலன்னாதானே என்கிட்ட வருவ?”

“ஸோ கூல் டாட்!! யூ நோ மீ பெட்டர் தேன் மாம்!! “ரீ-சைக்ளிங் டே”வுக்கு, நாங்க எல்லாரும் ஆளுக்கொரு கவர்ல யூஸ்ட் பிளாஸ்டிக் பாட்டில்ஸ் ஆர்  கேன்ஸ் கொண்டு போணுமாம். ஸ்கூல் வில் கலக்ட் இட் அண்ட் கிவ் தெம் டு த ரீ-சைக்ளிங் கம்பெனி.”

“சரிம்மா. அதான் நம்ம வீட்டிலயே தண்ணி பாட்டில்கள், உன் தம்பி குடிக்கிற மவுண்டன் டியூ கேன்கள், நீ மணிக்கொருதரம் குடிப்பியே அந்த கோக் கேன்களச் சேத்தாலே நாலு கூடை வருமே?”

“ஓ டாட்! பட் ஐ வாண்ட் டு டேக் தெம் நவ், டுடே டு ஸ்கூல். இப்ப உடனே எங்கருந்து அவ்வளவு கேன்ஸ் கிடைக்கும்? மம்மி நேத்தே மெய்ட் சர்வண்ட்கிட்ட சொல்லி எல்லா டஸ்ட் பின்ஸையும் காலி பண்ணிட்டாங்க.”

“டெல் மீ வாட் யூ வாண்ட் எக்ஸாக்ட்லி?” அவள் பாஷைக்கே மாறினார்.

“நத்திங் டாட். இட்ஸ் ஆல்ரெடி 6.15 நவ். 7 ஓ க்ளாக் ஸ்கூல் பஸ் வந்துடும். ஸோ, வாட் ஐ சஜஸ்ட் இஸ், ஐ வில் பை அ பாக்ஸ் ஆஃப் கோக் கேன்ஸ் அண்ட் ஸ்பில் அவுட் த கன்டென்ட்ஸ் அண்ட் கிவ் டு மை டீச்சர். தட்ஸ் வாட் மை ஃப்ரண்ட்ஸ் ஆர் ஆல்ஸோ கோயிங் டு டூ. பட் மம்மி இஸ் அப்ஜெக்டிங் திஸ்.”

காதர் பாஷா பதில்சொல்லாமல் எழுந்து கிரில்கதவருகில் நின்று வெளியே பார்த்தார். ஒரு பெட்டி நிறைய கேன்களை குளிர்பானத்தோடு வாங்கி கீழே கொட்டிவிட்டு, காலி கேன்களை கொடுக்க நினைக்கும் மகள்!! தனது  வறுமையான இளமையை நினைத்து அவர் மனம் நொந்தது.

ரீம் பாய் நடந்துகொண்டிருந்தார். வேர்வை வழிந்து சட்டையெல்லாம் நனைந்து விட்டது. ’கோடை தொடங்கமுன்னயே இப்படி வெயிலடிக்குதே!!’  ஒரு பை நிறைந்து, இரண்டாவது பையும் அரைவாசி ஆகிவிட்டது. அப்படியே வேலை செய்யும் கட்டிடத்தின் திசையில் போனார். கிடைப்பதை எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தால், ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் கிடைக்கும்.  காண்ட்ராக்டரின் சூபர்வைசர் வந்துவிட்டால் நிற்க விடமாட்டார். கோடை தொடங்கும் அடுத்த மாதத்திலிருந்து மதியம் மூன்று மணிநேரம் கட்டாய ரெஸ்ட் கொடுக்கவேண்டுமென்று அரசாங்க உத்தரவாம். வழக்கமா ரெண்டு மாசந்தான் இந்த ரெஸ்ட். அப்போ இன்னும் கொஞ்சம் சேத்துப் பாத்துக்கலாம். ஆனா, இந்த வருஷம் நோன்பும் கோடையிலதான்  வர்றதுனால, ரொம்ப அலையமுடியுமோ என்னவோ. 

ரீம்பாய் காலி டின்னை நசுக்கிப் பையில் போடுவதை, வீட்டு கேட்டில் நின்றிருந்த   காதர்பாஷா பார்த்தார். ‘பார்த்தால் இந்தியரென்று தெரிகிறது. மலையாளியாக இருக்குமோ’வென்று  எண்ணிக்கொண்டே அவரைச் சைகையால் அழைத்தார். “எவிடயா ஸ்தலம் நாட்டில?” கேட்க, அவர் தடுமாறி, “தமிழ்நாடானு” என்றார்.

“அட தமிழ்தானா!! நானும் தமிழ்தான். சரி, கையில என்னது?”

“அது.. இல்ல.. சும்மா இருக்க நேரத்துல.. இதச் சேத்துக் கொடுத்தா.. கொஞ்சம் காசு.. “

“எவ்ளோ கிடைக்கும்?”

“அது என்னத்த.. பத்து திர்கம் கெடச்சாப் பெரிசு!”

காதர்பாஷா உள்ளே திரும்பி மகளைப் பார்த்தார். பின் கரீம்பாயிடம் “இன்னிக்கு நான் வாங்கிக்கிறேன்” என்றார்.

Post Comment

31 comments:

ரிஷபன் said...

முடிவில் கொண்டு வந்து இணைத்த விதத்தில் அருமையான கதை கிடைத்து விட்டது. சபாஷ்.

RAMA RAVI (RAMVI) said...

அழகான கதை.
மீள் பதிவா? ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே?

ஸாதிகா said...

ஆயிரம் அர்த்தங்க\ள் பொதிந்த அழகிய மனதைத்தொடும் சிறுகதை.நடச்த்திரவாரத்திற்கான மீள் பதிவா?தொடருங்கள்.

suvanappiriyan said...

கதை அழகாக செல்கிறது. வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

சுற்றுப்புற சூழலுக்கேற்ப நல்ல கதை,வாழ்த்துக்கள்!!

ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமை ஹுஸைனம்மா. மனமார்ந்த பாராட்டுகள்!

பவள சங்கரி said...

அன்பின் ஹுசைனம்மா,

கதையும், நடையும், முடிவும் அருமை. வாழ்த்துகள்.

அன்புடன்
பவள சங்கரி

ஸ்ரீராம். said...

கா பா....ரெண்டு மாங்காய்க்கு ஒரு கல்! க.பா ...உழைப்புக்கு ஊதியம்!

CS. Mohan Kumar said...

தமிழ் மண ஸ்டாருக்கு வாழ்த்துகள்

Riyas said...

தமிழ்மன நட்சத்திர வாழ்த்துக்கள்..

மீள்பதிவுதானே.. நான் மிகவும் ரசித்த கதை,,

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஹுசைனம்மா,
மிக உன்னதமான வாழ்வியல் கருத்தை கொண்ட அமர்க்களமான கதைக்களன்.

நட்சத்திர வாழ்த்துகள்.

தங்கள் அருமையான தென்பாண்டி நடையில்... காதர்பாஷாவும் கரீம்பாயும் சந்திக்கும் இடத்தை நோக்கி தார் ரோட்டில் ஓடினேன்..!

மகள் அன்று வாங்கி கொட்டி செலவு'அழிக்க' தயாரான அந்த மொத்த தொகையையும் மகளின் கையாலேயே காதர்பாஷா கரீம்பாயிடம் கொடுக்க வைத்திருந்தால்...

இன்றைய born with golden spoon babies, தாங்கள் வாழும் உலகத்தின் இன்னொருபக்க வாழ்க்கையின் கஷ்டத்தை உணர(த்த) இன்னுமோர் வாய்ப்பாக அது அமைந்திருக்கக்கூடும்..!

நன்றி சகோ. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு.

Seeni said...

valikal niraintha -

niraivaana -
kathai!

amaam!
veli naattil namma nilai!

சிராஜ் said...

சலாம் ஹுசைனம்மா,

வந்துட்டம்ல..... கதை ரொம்ப நல்லா இருக்கு... என்ன கொஞ்சம் இங்கிபிளிஷ் வாட தான் தூக்கலா இருக்கு....
கதை நம்ம வீட்ல நடந்ததா??? ஹா..ஹா..ஹா...

சிராஜ் said...

இந்த வாரம் தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்...

பாச மலர் / Paasa Malar said...

நெகிழ்ச்சி...எத்தனை எத்தனைதான் மனித வாழ்க்கைக் கோணங்கள்?!

ஹுஸைனம்மா said...

ரிஷபன் சார் - நன்றி சார்.

வலைஞன் - நன்றிங்க.

ராம்விக்கா - ஆமாக்கா, மீள் பதிவுதான். லேபிளில் குறிப்பிட்டிருக்கிறேனேக்கா.

ஸாதிகாக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

சுவனப்பிரியன் - நன்றி.

மேனகா - நன்றி.

ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - கமெண்டை ரசித்தேன். நன்றி.

மோகன் - மீண்டும் வாழ்த்துவதற்கு நன்றி!!

ரியாஸ் - நன்றி தம்பி.

ஆஷிக் - நன்றிங்க. //மகளின் கையாலேயே காதர்பாஷா கரீம்பாயிடம் கொடுக்க வைத்திருந்தால்... //
ஒருவேளை செய்திருப்பார்.

ஹுஸைனம்மா said...

சீனி - நன்றிங்க.

சிராஜ் - ஸ்லாம். நன்றிங்க. //கதை நம்ம வீட்ல நடந்ததா// இல்லைங்க. இறைவன் காக்கட்டும். எளிமையையே கற்றுக் கொடுக்கீறேன், அதுவே கடமையென. விளைவுகள் இறைவன் சித்தம்.

இக்கதை நான் கேட்டதையும், நேரில் பார்த்ததையும் கலந்த ஒரு கற்பனை.

பாசமலர் - ஆமாங்க. இன்றும் இந்த “கேன்” மனிதர்களைப் பார்க்கிறேன்.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ ஹுஸைனம்மா...
தமிழ்மணம் நட்ச்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்..

ஆகா இந்த வேலை செய்பவர்கள் பத்தி ஒரு பதிவு போடலாம்ன்னு போட்டொல்லா எடுத்துவச்சுருந்தேன்..:) நீங்க போட்டுட்டீங்க.. :)

அப்ரம் எங்க ஆஃபிஸ் மெஸ்ஸெசர் கரீம் பாய் பத்தியும் எழுதனும்னு இருந்தேன்..

இன்ஷா அல்லாஹ் பின்னாடி எழுதுறேன்...

உங்க கதையும் கான்செப்டும் நல்லா இருக்கு,.எழுத்து வாகும் அருமை..

வாழ்த்துக்கள்..

இங்கு தினமும் பார்ப்பதை கண்ணில் கொண்டுவந்துவிட்டீர்கள்..

ஹுஸைனம்மா said...

Blogger தக்குடு said...

இப்ப உள்ள குழந்தைகளுக்கு பணத்தோட அருமை கொஞ்சம் கூட தெரியர்து இல்லை. பெத்தவங்களும் இதுக்கு முக்கிய காரணம்! :(

நட்சத்திர வாழ்த்துக்கள் மேடம்!

07/05/2012 13:42

ஹுஸைனம்மா said...

Blogger Muruganandan M.K. said...

வார நட்சத்திரம் ஹுஸைனம்மா
வாழ்த்துக்கள்.

07/05/2012 15:12

ஹுஸைனம்மா said...

@தக்குடு

நன்றிங்க.

கரெக்டாச் சொன்னீங்க. பெற்றோர்களும் நாமதான் கஷ்டப்பட்டோம்; பிள்ளைகளாவது வசதியா இருக்கணும்னு நினைக்கிறாங்க. அது பாசத்தினாலதான் என்றாலும், அளவோடு இருக்கணும்.

ஹுஸைனம்மா said...

@Muruganandan M.K. சார்,
நன்றி டாக்டர்.

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துகள் நட்சத்திரமே..

மீள்பதிவுன்னாலும் புதுசாப்படிக்கிற ஃபீலிங் :-))

நல்லடியார் said...

இந்தக்கணினி யுகத்திலும் கறீம் பாய்கள் வளைகுடாவில் குப்பையள்ளும் அவலம் தொடர்கதையாக இருப்பது வேதனையே. வளைகுடா வாழ்வின் இருபக்கங்களையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள். நட்சத்திரம் வாரம் பிரகாசிக்க வாழ்த்துகள்.

எல் கே said...

ரொம்ப நாள் கழித்து தமிழ் மணம் பக்கம் போனா, நட்சத்திரமா ஹுசைனம்மா !!! வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

கதையும்,, முடிவும் அருமை. வாழ்த்துகள்.

புதுகை.அப்துல்லா said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை.

(நான் உங்க வளர்ச்சியைச் சொன்னேன்)

:)

# நட்சத்திர வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - நன்றி.

நல்லடியார் அவர்களுக்கு - நன்றி.

எல்.கே. - உங்களை ஆளையேக் காணோமே? அதீதம் வேலைகளில் பிஸியா? நன்றி வாழ்த்துக்கு.

காஞ்சனா - நன்றிங்க.

அப்துல்லா - அடுத்த “காணாமல் போனவர்”!! நலந்தானா?

Unknown said...

wowww what a nice story,,,
mashallah nice akka,keep it up,write like this story more, and i am fan of u r episode kalvi nayagan,publish some thing about himm,,,,thanks
by
Sualaiman
Duabi