Pages

டென்த் டென்ஷன்





+2 தேர்வு முடிவுகள் வந்திருக்கு. அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பாராட்டு மழைகளில் நனைகிறார்கள். பரவசத்தோடு டாக்டராவேன், இஞ்ஜினியராவேன் என்று பேட்டிகள் கொடுக்கிறார்கள். வாழ்த்துகள். ஓயாத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!! ரெண்டு வருஷம் கிடந்து படிப்பு, படிப்பு, படிப்பைத் தவிர வேறொண்ணையும் பார்க்காமக் கிடந்து உழைச்ச உழைப்பு!! ஆனா, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க, இக்காலத்து மாணவர்களைப் பாத்தா ஒரு பரிதாபம் வருதா இல்லியா?

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேங்கிறதைப் போல, ரிஸல்ட் வர்றதுக்கு ஒருநாள் முன்னாடியே தற்கொலைச் செய்தியும் வர ஆரம்பிச்சிடுச்சு!! :-(( இன்னும் எத்தனையோ!!

நான் இந்தியா போயிருந்த சமயத்தில்தான் +2 தேர்வு நடந்துகிட்டிருந்தது. +2 மாணவர்களின் குடும்பத்தினர் யாரைப் பாத்தாலும் முகத்துல ஒரு பீதியோடவே இருந்தாங்க. கரண்ட் கட்டால, பச்சக்குழந்தையும், வயசானவங்களும் அவதிப்படுறதைவிட, +2, 10வது மாணவர்கள் அவஸ்தைப்படுறதைத்தான் கவலையோடப் பேசிக்கிட்டாங்க. ஒரு குடும்பத்தில்  +2 அல்லது 10-ம் வகுப்பு மாணவர்கள் இருந்தால், கிட்டத்தட்ட ‘ஊர்விலக்கம்’ செய்ததுபோல, பரீட்சைகள் முடியும்வரை அவர்கள் வீட்டுக்கு யாரும் போவதுமில்லை; அழைப்பதுமில்லை!!

முன்பெல்லாம், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்தான் மன அழுத்தத்தால் அவதிப்படுவர். நான் கல்லூரியில் படிக்கும்போது,  ஒரு தேர்வு நாளன்று, சகமாணவி தேர்வு ஆரம்பிக்கச் சற்றுமுன் கல்லூரியைவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பதைப் பார்த்து, நானும் என் தோழியும் அவளை அழைத்து விசாரித்தோம். கஷ்டப்பட்டுப் படித்தபின்னும் ஒன்றும் மனதில் ஏறவில்லை என்பதால், தேர்வை எதிர்கொள்ளப் பயந்துபோய் வெளியேறியதாகச் சொன்னாள். நாங்களிருவரும், ”பரவால்லை, தெரிந்ததை எழுது. கண்டிப்பாக ஜஸ்ட்-பாஸ் ஆகிவிடலாம். இல்லையென்றாலும் அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தேற்றி, பரிட்சை எழுதச் சொன்னோம். ஆனால், அவள் ஒரேயடியாக மறுத்துவிட்டுப் போயேவிட்டாள்!!

இதேபோல இன்னொரு மாணவியும் படிக்க முடியவில்லையென்று படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாள். பின்னர் நான் அந்தக் கல்லூரியிலேயே வேலை பார்க்கும்போது, படிப்பைத் தொடரவிரும்பி அதற்கான விதிகளைத் தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பாசிரியரைச் சந்திக்க வந்திருந்தாள். மகிழ்வோடு அவளுடன் ஆசிரியையைக் காண நானும் சென்றேன். இவள் விஷயத்தைச் சொன்னதும், அந்த ஆசிரியை “ஏன், படிக்கலைன்னா வீட்டுல கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?” என்று சக ஆசிரியரோடு சேர்ந்து கிண்டல் செய்துப் பெரிதாகச் சிரித்தார்!! அவள் பின்னர் வரவேயில்லை.

இன்னொரு இறுதியாண்டு மாணவருக்கும் மனநிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது அவருடன் பேசியபோது புரிந்தது. மூன்றாம் வருடம் வரை அரியர்ஸ் இல்லாமல் இருந்தால்தான் கடைசி வருடப் பரிட்சை எழுதமுடியும் என்ற ’பிரேக்’ சிஸ்டம் அப்போது இருந்ததால், வருடத்திற்கொரு தற்கொலையும் உண்டு எங்கள் கல்லூரியில்!! இஞ்சினியரிங் படிப்பது இத்தனைக் கஷ்டமா என்று அவர்களைப் பார்த்த அதிர்ச்சியில் நான் பாதிக்கப்படாமலிருந்ததே பெரிய விஷயம்தான்!!

இன்னொரு சக மாணவி, இப்போது பெரிய பதவியில் இருக்கிறாள். படிக்கும்போது ஏற்பட்ட மனநிலை பாதிப்பினால், அவளிடமிருந்து சில சமயங்களில் weird-ஆக மெயில்கள் வரும்!! அறியாதவர்கள் அவளைப்  பார்த்தால், பேசினால் அப்படித் தெரியாது.

கல்லூரியளவில் நடந்த இவையே ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது.  இப்போ, பள்ளிகள் லெவலிலும் இதுபோன்ற பாதிப்புகள் சகஜமாகிவிட்டன!!

இந்த வருட +2 இயற்பியல் தேர்வு முடிந்த அன்று, ரொம்பக் கஷ்டமான கேள்விகளாக இருந்தன என்று உறவினர் வீட்டு மாணவர் வருத்தப்பட்டுகிட்டிருந்தார். அவரது வகுப்பில் உள்ள ஒரு மாணவிக்குத் முதல்தேர்வு தொடங்கியதிலிருந்து மனநிலை பாதிப்பு ஏற்பட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்ததாகவும், கஷ்டமான இயற்பியல் கேள்வித்தாளைப் பார்த்துவிட்டு பரிட்சை எழுத மறுத்துவிட்ட அப்பெண், பிறகு பரிட்சை எழுத வரவேவில்லையாம்!!

அவரின் பள்ளியில்(லும்) ப்ளஸ் ஒன் தொடக்கத்திலேயே +2 பாடங்களை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் இரு வருடங்களும் பள்ளி நேரம், காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை என்றால் நம்புவீர்களா? இது எதுக்குன்னா, வேற எங்கயும் ட்யூஷன் போய் நேரத்தையும், பணத்தையும் வேஸ்ட் பண்ணத் தேவையில்லை என்பதற்காகவாம்!! இந்த இருவருடங்களும் இவர்களுக்கு விளையாட்டு பீரியட், ஆர்ட் பீரியட் எதுவும் கிடையாது!! ஒன்லி ‘படி, படி, படி’ தான்!!

தற்போது மாநிலத்தில் முதலிடம் பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரும் ஒரு வலைத்தளத்தில் இதைத்தான் கூறியுள்ளார்.  ஆக, மாநிலம் முழுதும் எல்லா (தனியார்) பள்ளிகளிலும் இதே நிலைமைதான் போல!! 

அந்நாட்களிலாவது, பள்ளிகளில் இப்படி ‘தீவிரப் பயிற்சி’ கிடையாது. ஆனால், இன்று இவ்வாறானப் பயிற்சிகளின் விளைவுகளே, அதலபாதாளத்திற்குச் செல்லும் கல்லூரி முதலாமாண்டு தேர்ச்சி விகிதங்களும், பலப்பல தற்கொலைகளும்.

மத்திய அரசின் ‘CBSE’ பாடத்திட்டம் ஒப்பீட்டளவில் கொஞ்சம் நல்ல முறையில் இருப்பதாகச் சொல்லலாம். “CCE" (Continuous and Comprehensive evaluation) என்ற முறையில் அன்றாடச் செயல்பாடுகளையும் மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதிகச் செயல்முறை பயிற்சிகள் தருகிறார்கள். Once again,  இதிலும் பள்ளி மற்றும் ஆசிரியர்களும் திறன் வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் பெற்றோர்கள் ப்ளஸ்-2வுக்கு மட்டுமாவது மாநிலக் கல்விமுறையைத்தான் விரும்புகிறார்கள். அதில்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பதால்!! 

இப்போதெல்லாம் மாணவர்களைவிட, பெற்றோர்கள்தான் அதிக பாதிப்புக்கும், பிரஷருக்கும் உள்ளா(க்கு)கிறார்களோ என்று தோன்றுகிறது. எஙகள் உறவு வட்டத்தில் +2, 10 எழுதியவர்களின் தேர்வு முடிகளெல்லாம் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண்கள்தான். இருந்தாலும் பெற்றோர்கள் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன் என்று புலம்புவதைப் பார்த்தால் பயம்ம்மாக இருக்கிறது. அதைவிட, “அடுத்த வருஷம் உன் மகன் டென்த் எக்ஸாம் எழுதுறானே?” என்று கேட்கும்போது இன்னும் அதிகமாகப் பயம் வருகிறது!!

எத்தனை “நண்பன்”கள் வந்தாலென்ன? ‘தோனி’கள் வந்தாலென்ன? ஆமா, சங்கர் ‘இந்தியன்’படம் எடுத்ததுனால, லஞ்சம் என்ன காணாமலாப் போயிடுச்சு?

ட்யூஷன் டீச்சர்கள் யாரும்  இந்த ஏரியாவில் இருக்காங்களான்னு விசாரிக்கணும். இனி தினமும் 5 மணிக்கு அலாரம் வச்சு நானும் எழுந்து, ‘நல்ல’ அம்மாவா டீ போட்டுக் கொடுக்கணும். நல்லவேளை வீட்டில் டிவி இல்லை. நியூஸ்பேப்பரையும், ஃபோன், இண்டர்நெட்டையும் கட் பண்ணிடலாமான்னு யோசிக்கிறேன். எம்புள்ளை இப்போ டென்த்ப்பா!! 

Post Comment

24 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா நிஜ அம்மா லிஸ்ட்டில் சேர்ந்திட்டீங்களா.. சமூகம் அப்ப தான் உங்களையும் சூப்பர் அம்மா லிஸ்டில் சேர்க்கும்..ha ha ha ha....

அமுதா கிருஷ்ணா said...

என்னமோ போங்க தமிழ்நாட்டு பெற்றோர்கள் மட்டும் தான் இப்படியா இல்லைனா உலகத்தில் எல்லா பெற்றோர்களும் இப்படி தானா???

ஸ்ரீராம். said...

ஊர்விலக்கம் - ரொம்பவே சரி. பாவமாகத்தான் இருக்கு.

பள்ளி லெவலில் கொஞ்சமும், கல்லூரி அளவில் மிக அதிகமாகவும் தற்கொலைகள் நிகழ்வது சமீப காலத்தில் ரொம்பவே கவலையை ஏற்படுத்துகிறது.

+1 லிருந்தே +2 பாடங்கள் படிப்பது ஒருபுறம், சுமாராகப் படிக்கும் மாணவர்களை அந்தப் பள்ளியின் ரிசல்ட் வேண்டி வேறு பள்ளிகளுக்குத் துரத்தும் கொடுமை ஒன்றும் உண்டு.

அமைதி அப்பா said...

அவசியாமான பதிவு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டீ போட்டுக்கொடுக்கும் சூப்பர் அம்மா ..அமுதா சொன்னமாதிரி .. கடமையாத்துங்க டீ ஆத்தி..:)

அப்பாதுரை said...

டெத் டென்ஷன்னு தலைப்பை அவசரமாப் படிச்சுட்டு...

அப்பாதுரை said...

//வருடத்திற்கொரு தற்கொலையும் உண்டு எங்கள் கல்லூரியில்!!

சுவாரசியமா இருக்குதே.. ஆவி பேய்னு எதும் இல்லியா?

actually, this is very sad.

தேர்வு எழுத இதனால தான் தயங்குறாங்கனு சொல்றது ரொம்பக் கஷ்டம். தேர்வுக்கெல்லாம் நான் பயப்பட்டதே கிடையாது (ஒழுங்கா படிச்சா தானே?). இருந்தாலும் பாருங்க.. ஒரு பத்தாம் வகுப்பு மாதத் தேர்வுல கொஞ்ச நஞ்சம் படிச்சதும் சுத்தமா மறந்து போச்சு.. டோடல் ப்லேங்க்.. ஏன்னு தெரியலே. டீச்சர் கிட்டே சொன்னப்ப, வீட்டுக்குப் போய்த் தூங்கச் சொல்லிட்டாங்க. அந்தப் பரீட்சைல பெயில்னாலும் மிச்ச மாதப் பரீட்சைங்கள்ள ஒப்பேத்தச் சொல்லிட்டாங்க. இறுதித் தேர்வுல இது போல ஆனா என்ன ஆவும்னு some times நினைச்சிருக்கேன்.

"தேர்வு தான்; வாழ்க்கை இல்லை"னு என் தமிழாசிரியர் சொல்லிக்கிட்டே இருப்பாரு. வகுப்புல யார் பெயிலானாலும் திட்டவே மாட்டாரு. மாணவர்களுக்கு confidence வர ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும் என்றாலும், தன்னம்பிக்கையை எல்லா மாணவர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ராஜ நடராஜன் said...

எல்லாமே மிகைப்படுத்தலோ என்ற உணர்வு மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது.அல்லது நான் இன்னும் கிணற்றுத்தவளையாக இருக்கிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம்!

என்னோட கவலையெல்லாம் வளைகுடாவில் நட்பாக ஒன்றிணைந்து கொள்ள முடியாத கோழிக்கூடுகளாகவே மாணவர்கள் இருக்கிறார்கள்.பொம்மைகள்,கணினி விளையாட்டு என்றே புத்தகங்களுடன் மாணவ பருவம் நகர்கிறது.

என்னோட நண்பனோ இந்தியாவில் படிக்கும் குழந்தைகள் ஐக்யூவில் சிறந்து விளங்குகிறார்கள் என்கிறார்.

நான் யார் பேச்சைக் கேட்க!

suvanappiriyan said...

சலாம் சகோ!

அழகிய பதிவு. உங்கள் பையன் படிப்பில் சிறக்க எனது வாழ்த்துக்கள். எனது பையனும் இந்த வருடம் பிளஸ்டூவில் பாஸ். எந்த பிரிவு என்பதையும் எந்த கல்லூரி என்பதையும் பையனின் விருப்பத்துக்கே விட்டு விட்டேன்.

ஸாதிகா said...

இண்டர்நெட்டையும் கட் பண்ணிடலாமான்னு யோசிக்கிறேன்.//என்னதூஊஊஊஊஊ...?

// எம்புள்ளை இப்போ டென்த்ப்பா!! // யம்மா..ஹுசைனம்மா..ரொம்ப அலட்டிக்காதீங்க..என் பிள்ளைகள் பப்லிக் எக்சாமில் நான் எப்படி கூலா இருந்தேன்.இப்ப என் பிள்ளைகள் காலேஜ் படிக்கும் பொழுது எப்படி ஜில் என்று இருக்கிறேன்...அக்காவைப்பார்த்து கத்துக்குங்கம்மா:)

Roomil said...

அஸ்ஸலாமுஅலைக்கும் (வ வ )
எனக்கு தெரிந்த ஒருத்தர் போன் செய்து தனது உறவினர் பையனுக்கு உளநல ஆலோசனை செய்யுமாறு கேட்டார்
பிரச்சினை என்ன எனக் கேட்டேன் பையன் சாதாரண தரம் (year 10) சித்தியடைந்து உயர்தர (+2 ) வகுப்பிற்கு கணித துறையில் சேர்ந்து கொள்வதற்காக பெற்றோருடன் ஒரு பிரபல அரச பாடசாலைக்கு சென்றுள்ளான் அங்கு சா.தர பெறுபேறுகளை கேட்டுள்ளனர் பையனும் சொல்லியுள்ளான் அது கணித துறை கற்பதற்கு போதுமானது. ரிசல்ட் சீட்ஐ கேட்டபோதுதான் வில்லங்கம் ஆரம்பமானது.
பையன் சாதாரண தரம் (year 10) ரிசல்ட் வந்ததும் தனது கையடக்க தொலை பேசியில் முடிவை பார்த்துள்ளான் (இங்கு பரிட்சை முடிவுகளை கையடக்க பார்க்கும்தொலை பேசி மூலம் பார்க்கும் வசதி உண்டு ) இதை அனைவருக்கும் தெரிவித்து கொண்டாடியுமுள்ளான் அனால் உண்மைப் பெறுபேறு மாற்றமாக அமைந்து விட்டது. பையனும் கெட்டிதனமானவன்தான் விதியை நோவதா இல்லை நவீன தொழில்நுட்பத்தை நோவதா? சில விடயங்கள் நம்பமுடியாமல்தான் இருக்கும்
நன்றி
அன்புடன் ரூமில்

சாந்தி மாரியப்பன் said...

// எம்புள்ளை இப்போ டென்த்ப்பா!!//

ஆஹா!!.. பூரியாகப் பொங்கியெழுந்து கடமையை ஆத்துவதற்கு முதல் படியாக டீ ஆத்துவதற்காகப் புயலெனப் புறப்பட்டிருக்கும் எங்கள் ஹுசைனம்மாவுக்கு வீரத்திலகமிட்டு வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.. :-))

இவண்,
வெந்து வெர்மிசிலி ஆனோர் சங்கம்,..
எங்களுக்கு எல்லா இல்லங்களிலும் கிளைகள் வேர்கள் எல்லாமும் உண்டுங்கோ :-)

நட்புடன் ஜமால் said...

மதிப்பெண்கள் தேர்வுக்கு தான் வாழ்க்கைக்கு அல்ல என்பதை முதலில் பெற்றோர்களும் பின்னர் மாணவர்களும் விளங்கிட வேண்டும்

ராமலக்ஷ்மி said...

/வருடத்திற்கொரு தற்கொலையும் உண்டு /

அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த அவலம் கல்வி முறையில் மாற்றம் கோரியும் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்.

நல்ல பதிவு.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா நீங்களும் டீ ஆத்தற வேலைக்கு வந்துட்டீங்களா.
முதல்ல டென்ஷனா இருக்கிறதை நிறுத்துங்கப்பா. பிள்ளை படிப்பான். நல்லாவே படிப்பான்.
உங்க ஊரில மண்டை காயாம படிப்பதே பெரிய விஷயம்.
நிறைய மார்க் வாங்கி பெற்றோரைப் பெருமைப்படவைப்பான், பாருங்க,

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?
14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி, ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

enrenrum16 said...

எங்க பெரியதுரையோட ஒண்ணாங்கிளாஸுக்கே ஒரே தகிடுதத்தமா இருக்கு.... உங்களுக்கெல்லாம் கோயில் கட்டி கும்பிடணுமுங்கோ...

சுசி said...

அட ! அறிவில் சிறந்த ஹுச்சைனம்மவா இப்படியெல்லாம் சொல்லறது ....!! :(((

சி.பி.எஸ்.ஈல்ல ரிஜினல் பிரஸ்ட் வந்திருக்கிற பொண்ணு டியூஷன் ன்னே போகலீயாம். all india entrance இல் பிரஸ்ட் வந்த பயன் பரிஷைக்கு முந்தின நாள் சினிமா பார்க்க போய்ட்டானாம் .

தெளிவான சிந்தனை உள்ள பெற்றோரால் தன் பிள்ளைகளை நல்ல விதமாக நிச்சயம் கொண்டுவர முடியும்.

நான் கல்லூரி வாசலே மிதித்ததில்லை .

என் தோழி ரமணியோ பையனை மாநிலத்திலேயே முதல் மாணவனாக வருவதற்காகவே வளர்க்கிறார் (ஏதோ பலிக்கு ஆட்டை வளர்ப்பது போல் உள்ளது). :(((

குழந்தை படித்தாலும் , படிக்காவிட்டாலும் அது நம் குழந்தை. இதை பெற்றோர் புரிந்து கொள்ளவேண்டும்.

அவர்களின் செயல்களில் நாம் பெருமை படவோ , வருத்தப்படவோ முடியாது.

நாம் அவர்களை சிறுவயதில் இருந்தே நல்ல முறையில் வளர்த்திருந்தால் பள்ளி இறுதி தேர்வு நேரத்தில் கவலை படவேண்டியதில்லை என்பது என் கருத்து .

ஹுஸைனம்மா said...

அமுதா - ஆமாப்பா, நாமளும் நாளைக்கு டிவில ப்பெர்ரும்மையா பேட்டி கொடுக்க வேணாமா?

ஸ்ரீராம் சார் - வாங்க. இருந்தாலும் பள்ளி லெவல்லயே மன அழுத்தம் வருவதுதான் தாங்க முடியலை.

அமைதி அப்பா- வாங்க. நன்றிங்க.

முத்துக்கா - ஹி.. ஹி.. இதை ஆத்தினா, அதை ஆத்துன மாதிரியா!! நல்லாருக்கே...

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை - //டெத் டென்ஷன்னு// அவ்வ்வ்... எந்த டென்ஷன் பெட்டர்னு நான் இறந்ததுக்கப்புறம்தான் தெரியும். அப்புறம் ப்ளாக் எழுதமுடியுமோ என்னவோ....

//ஆவி பேய்னு எதும் இல்லியா//
ஏனுங்க, உங்களுக்கு சாவு, ஆவின்னா ரொம்பப் பிடிக்குமோ?? நல்லவேளை நான் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கவில்லை. அங்கேயும் இந்தமாதிரி ஆவிக்கதைகள் எதுவும் இல்லைன்னுதான் நினைவு.

பரீட்சைன்னா எனக்கு இன்னும் பயம்தான் - ரெண்டுநாள் முன்னாடிகூட படிக்காமப் பரிட்சை எழுதப் போற மாதிரி கனவு வர்ற அளவுக்கு!! ஆனாலும், ஏதோ ஒரு தெளிவு மனதில் இருந்ததால் - பெரிசா பாதிப்பு இல்லை. :-))))

ஹுஸைனம்மா said...

ராஜநடராஜன் - வாங்க. எனக்கென்னவோ வளைகுடா இந்திய மாணவர்கள் பள்ளிக்கூடத் ‘திணிப்பிலிருந்து’ கொஞ்சம் தப்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதேசமயம் இந்தியா அளவுக்கு காம்பெடிஷன் ஸ்ப்ரிட் இல்லை, சூதுவாதுகள் தெரியும் வாய்ப்பு இல்லை என்றாலும், ஓரளவுக்கு ஸ்மார்ட் ஆகிவருகிறார்கள். முன்புக்கு இப்போ பரவாயில்லை ரகம்தான், வளாகுடா படிப்பு.

ஆனால், எனக்கு இந்த ஐக்யூ விஷயத்தில் நம்பிக்கையில்லை. அதிகம் இருந்தால் நல்லது. குறைந்தால் குடிமுழுகாது என்ற அளவில்தான் எனக்கு அதில் ஆர்வம்.

சுவனப்பிரியன் - ஸலாம். மகனின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அவசியம்தான், ஆனாலும் நீங்களும் ஆலோசனை கொடுத்து வாருங்கள். (என் கருத்து)

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - அக்கோவ், நான் அலட்டலை. ஆனா, அலட்டிக்கிறமாதிரி காட்டினாத்தான் மதிப்பு... அதான், லைட்டா... :-))))

அமைதிக்கா - //பூரியாகப் பொங்கியெழுந்து // அவ்வ்வ்வ்....
ஆனாலும், இந்த ஸ்டேஜல்லாம் நீங்க கடந்துவந்து, இப்போ நிம்மதியா இருப்பீங்க... ஹும்ம்..

//எல்லா இல்லங்களிலும் கிளைகள் வேர்கள் எல்லாமும் உண்டு// லவ்லி... :-))))

ஹுஸைனம்மா said...

ஜமால் - வாங்க. கரெக்டாச் சொன்னீங்க.

ராமலக்ஷ்மிக்கா - காலேஜ்ல அந்த ப்ரேக் சிஸ்டத்தை நீக்கியபிறகு தற்கொலைகள் இல்லைக்கா. ஆனா, அப்பப்ப சாதி அல்லது காதல் தகராறால் கலகலப்புகல் நடக்கும்!! :-((((

வல்லிமா - உங்க ப்ரார்த்தனைகளுக்கு ரொம்ப நன்றி. இறைவனருளால், மகன் நல்லாப் படிக்கக் கூடியவன்தான். இருந்தாலும், விளையாட்டு வயசு. இறைவன் நாட்டம். நடபப்து நன்மைக்கே.

ஹுஸைனம்மா said...

திரு.முஸ்லிம் - நன்றிங்க.

என்றென்றும் 16 - //கோயில் கட்டி //
அவ்வ்வ்வ்வ்.... என்னை குஷ்பூ ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே.... :-)))

தானைத்தலைவி - ஐயோ, அதெல்லாம் ச்சும்ம்மாங்க... நீங்க நெசம்னே நம்பிட்டீங்களா..

//குழந்தை படித்தாலும் , படிக்காவிட்டாலும் அது நம் குழந்தை// இதுகூட நான் இன்னொன்னும் சேத்துச் சொல்வேன், “கறுப்பா இருந்தாலும், வெளுப்பா இருந்தாலும் என் பிள்ளைதான்”!!