Pages

வியாபாரமாக்கப்படும் புனிதப் பயணம்




ஏப்ரல் 2012 சமரசம் இதழில் வெளியான கட்டுரை:

                  
ஐம்பெருங்கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை இனிதே முடித்து,
வந்த ஹாஜியாரிடம்,  “ஹஜ் கடமைகள் சிறப்பாக முடிந்ததா? மக்கா ஹரமில் எல்லா நாளும் ஐவேளையும் தொழுதீர்களா? தங்குமிடம், பயணங்கள் வசதியாக இருந்தனவா?” என்று நலம் விசாரிக்க முற்படுகையில், அவரது கண்களில் பல்வித உணர்ச்சிகளும் கலவையாய்க் காணலாம். பின்னர், வலிந்து, மகிழ்ச்சியை மட்டுமே கண்களில் காட்டி, “எல்லாம் இறையருளால் சிறப்பாய் நடந்தது” என ஒற்றைவரியில் பதிலை முடித்துக் கொள்வார். இதை வாசிக்கும் நீங்கள், ஒருவேளை ஹஜ் கமிட்டி வழி சென்ற ஹாஜியோ என நினைப்பீர்கள். இல்லை, அதைவிட அதிகம் பணம் வசூலிக்கும் தனியார் ஹஜ் சேவை நிறுவனம் மூலம் சென்று வந்தவர்தான் இவரும்!!

இன்று ஹஜ் பயணம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் அறுபது வயதைக் கடந்த முதியவர்களே என்பதால், அவர்களைப் பொறுப்பேற்று அனுப்பிவைக்கும் அவர்களது உறவினர்களும், பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை. முதியவர்களுக்கு தரமான கவனிப்பும், சேவையும், பாதுகாப்பும் வேண்டும் என்பதற்காகவே, அரசு-சார் ஹஜ் கமிட்டியினைத் தவிர்த்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்த நிறுவனங்கள் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில்லை என்பதே வருத்தமான உண்மை.

சில காலம் முன்பு, தனியார் ஹஜ் பயண நிறுவனங்கள் என்பவை மிக அரிதாகத்தான் இருந்தன. ஆனால், புற்றீசல் போல, இன்று தெருவுக்கொன்றாக முளைத்துவிட்ட தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கைகளே சொல்லும், ஹஜ் பயணம் என்பது எவ்வளவும் லாபம் கொழிக்கும் பிஸினஸாக மாறிவிட்டது என்பதை.  ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் கடமையாகக் கருதும் ஹஜ்ஜை நிறைவேற்ற உதவுவதை, இவர்கள் லாப நோக்குடன் தொழிலாகச் செய்வது தவறில்லை என்றாலும், அதில் நியாயத்துடன் செயல்படுவது மிக அவசியமல்லவா? கிட்டத்தட்ட, வெளிநாட்டு வேலை பெற்றுத் தர உறுதியளிக்கும் ஏஜெண்டுகள் போல இவர்களும், சொல்வதொன்று, செய்வதொன்றாக மாறிவருவது வேதனையிலும் வேதனை.

ஹஜ் பயணம் செல்லும் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகும் தருணங்கள்:

1. மக்காவில் தங்குமிடம்:

தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் பொதுவாக 40 நாட்கள் பயணமாக கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பணம் செலவழித்து, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செல்லக்கூடியதாக இருப்பதால், கிடைத்த வாய்ப்பிலேயே அதிக நாட்கள் மக்காவில் தங்கி அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து, அதிகம் நன்மைகள் பெற்றுக் கொள்ளலாமே என்ற ஆவல்தான் காரணம். ஆனால், அங்ஙனம் அழைத்துச் செல்லப்படும் பயணிகள், மக்காவில் ஹரமில் இருந்து ஏழெட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் அஸீஸியா, ருஸைஃபா போன்ற இடங்களில்தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அங்கிருந்து கஃபா ஆலய ஹரமிற்குத் தினமும் ஐவேளை வந்து தொழுவதற்கு உரிய போக்குவரத்து வசதிகளும் நிறுவனத்தாரால் செய்துதரப்படுவதில்லை. ஹஜ் பயணி தன் தனிப்பட்ட ஆர்வத்தால், வாடகைக்கார் பிடித்து சென்றுகொண்டால் உண்டு.  அதுவும் ஹஜ் காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஹரத்திற்கு வர இலகுவில் சம்மதிப்பதும் இல்லை; சம்மதித்தாலும் பெருந்தொகை - 50 ரியால் முதல் 100 ரியால் வரை கேட்பர்!!

மொழி தெரியா ஊரில், ஒரு முதியவர் எப்படி தினமும்  சென்று வர முடியும்? உடல்நிலையோடு, பொருளாதார நிலையும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அது பெரும்பாலும் முடியாததாகையால், வாரத்தில் ஒருமுறையோ இருமுறையோ மட்டும் சென்றுவிட்டு, மீதி 20 நாட்கள் வரை ரூமில் அடைந்து கிடக்கின்றனர். வேளா வேளைக்கு உணவுண்டு, உறங்கி ஓய்வெடுப்பதற்காகவா 2 முதல் 3 லட்சம் கொடுத்து அவர்கள் தனியார் ஹஜ் நிறுவனத்தில் புனிதத்தலமான மக்கத்திற்கு வந்தனர்?

இதிலே, மக்காவின் எல்கைக்குள் எங்கு தொழுதாலும், ஹரத்தில் தொழுவதற்கு ஈடாக ஒரு லட்சம் நன்மைகள் கிட்டும்  என்று சொல்லி ஏமாற்றுபவர்களும் உண்டு; அதை நம்பி ஏமாறும் அப்பாவிகளும் உண்டு!!

2. முஜ்தலிஃபாவிலிருந்து மினா வருகை:

ஹஜ்ஜின் 10-ம் நாளன்று, முஜ்தலிஃபாவில் ஃப்ஜ்ர் தொழுதுவிட்டு, மினாவுக்கு சுமார் 3 முதல் 5 கிமீ தூரம் நடந்து வரவேண்டும். நடப்பதில் சிரமம் இல்லை. ஆனால், வரும் வழியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில், கல் எறிய ஜமராத்தை நோக்கிச் செல்லும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கடந்து வரவேண்டும். இது மிகவும் அபாயகரமான நெரிசல் ஏற்படும் இடம் என்பதால், கூட்டத்தில் மாட்டி ஹாஜிகள் பலர் தொலைந்து போவதும் இந்த இடத்தில்தான். அப்படிப்பட்ட இடத்தில், இவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, திடகாத்திரமானவர்களைக் கொண்டு சங்கிலி வளையம் அமைத்து,  ஜனத்திரளைக் கடக்க வைக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், முதிர்ந்தவர்களையும், பெண்களையும்கூட தம் பொறுப்பில் ஏற்காமல் விட்டுவிடுகின்றனர். நெரிசலில் சிக்கி, நைந்து போய் தப்பி வருகிறவர்கள் சிலரென்றால், பலர் தொலைந்தே போய்விடுகிறார்கள். அவர்கள் வழி அறியாமல், எங்கெங்கோ அலைந்து, திரிந்து வந்து சேருவார்கள். இரண்டு நாட்கள் கழித்து வருபவர்களும் உண்டு. அதிலும், பிபி, சுகர் உள்ளவர்கள் என்றால் வந்துசேரும்போது அவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

அவர்களின் பாதுகாப்புக்கும் சேர்த்துத்தானே பொறுப்பேற்று, பணம் பெறுகிறார்கள் இந்நிறுவனத்தினர்?

3.  ஹஜ்ஜின் தவாஃப்:

துல் ஹஜ் 10-ம் நாள் அல்லது 11-ல் ஹஜ்ஜின் பகுதியாக தவாஃப், சயீ செய்ய ஹாஜிகள் மினாவிலிருந்து மக்கா வரவேண்டும். சுமார் 10 முதல் 12 கி.மீ. தூரமுள்ள இந்தப் பயணத்திற்கும், ஹாஜிகள் தாங்களே வாகனம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அல்லது நடந்து வர வேண்டும். ஹஜ்ஜிற்கு வந்த அனைத்து லட்சக்கணக்கான மக்களும் இந்நாட்களில் தவாஃப், சயீ செய்ய மினாவிலிருந்து செல்வார்கள் என்பதால் வாகனங்கள் வாடகைக்கு கிட்டுவதும் மிக மிகச் சிரமம். அதனால் அடையும் தாமதத்தின் காரணமாய், மினாவில் இரவின் பெரும்பகுதியைச் செலவழிக்க வேண்டும் என்ற ஹஜ்ஜின் விதியை மீற வேண்டிய சூழலும் சிலருக்கு ஏற்பட்டு, ’தம்’ கொடுக்க வேண்டியவர்களாகிறார்கள்.

கட்டணம் வாங்கிக் கொண்டாவது,  நிறுவனத்தினர் இந்நாட்களில் தம் குழுவினருக்காக வாகனம் ஏற்பாடு செய்து தரலாமே என்பதே வயதான ஹாஜிகளின் ஏக்கக் கேள்வி.

4. மஹரமில்லாப் பெண்கள்:

ஹஜ்ஜின் விதிகளில், தகுந்த மஹரமில்லாமல், பெண் பயணிகளைத் தனியே அழைத்து வரும் பாவத்திற்கு பணத்திற்கு ஆசைப்பட்டு உடந்தையாகிறார்கள் நிறுவனத்தினர் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் முதிய பெண்கள் என்றால், அது பெருங்கொடுமை!!  மேற்சொல்லிய மூன்று சூழல்களிலும் அதிகமதிகப் பாதிப்பிற்குள்ளாவது தனியே வரும் முதிய பெண்கள்தான்!! அவர்களால் தனியாகவும் செல்லமுடியாது; அழைத்து வரும் நிறுவனமும் பொறுப்பேற்காது; குழுவில் உடன் வருபவர்களும் அப்பெண்களின் உடல்நிலை அல்லது தத்தம் சூழ்நிலை காரணமாய் உதவிட முடியாத நிலை எனும்போது, ஹஜ்ஜின் கட்டாயக் கடமைகளிலேயே குறை ஏற்பட்டு, ஹஜ் முழுமையடைவதே கேள்விக்குறியாகிறது!! பெரும்பாலும் இப்பெண்களின் ஹஜ்ஜை முழுமையாக நிறைவேற்ற உதவுவது, மனிதாபிமானமுள்ள சக பயணிகளே தவிர அழைத்துச் சென்ற நிறுவனமல்ல!!

5. தவறான வழிகாட்டுதல்கள்:

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக, ஹஜ்ஜின் கிரியைகள், பிரார்த்தனைகள் சிலவற்றில் ஒருசில நிறுவனங்களின் ஹஸரத்துகள் தவறுதலாக வழிகாட்டுவதும் நடக்கிறது. உதாரணமாக, அரஃபா தினத்தன்று, மதியம் லுஹர் வேளையிலேயே லுஹர் மற்றும் அஸரைக் கஸராகச் சேர்த்துத் தொழுதுகொள்வதுதான் நபி காட்டிய வழி. ஆனால், சிலர் லுஹரையும், அஸரையும் தனித்தனியே அவற்றின் வேளைகளில் தொழச் செய்கின்றனர்!! மேலும், இஹ்ராம் துணியை கபன் துணியாகப் பயன்படுத்த வேண்டி ஜம்ஜம் நீரில் நனைத்து வைத்துக்கொள்ளச் சொல்லும் ஃபித்-அத்தான அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன!!

6. கூடுதல் பணம் கேட்பது,  கடைசி நேரத்தில் பயணம் கேன்ஸலாவது:

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போக, கிளம்பும் நேரத்தில் கூடுதல் தொகையாக 25,000 முதல் 50,000 கேட்பதும் ஒரு புதிய பழக்கமாக உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே லட்சங்களில் பணம்புரட்டி கட்டிய வசதியற்றவர்கள், கடைசி நேரத்தில் அவசரமாகக் கேட்கப்படுவதால், கடன் வாங்கித்தான் கொடுக்க நேரிடுகிறது. இதனால், ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கடன்களை அடைத்துவிடவேண்டும் என்ற விதியை மீறும் நிலை ஏற்படுகிறது!!

பயணிகள், சவூதியில் மேல்செலவுக்காகக் கொண்டுபோகும் பணத்தை நிறுவத்தினர் இங்கு ரூபாயாக வாங்கி, சவூதி வந்து ரியாலாகத் தந்துவிடுகிறோம் என்று வாங்கிவிட்டு, சொன்னபடி தராமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு!!

முறையான திட்டமிடுதல் இல்லாமை, நிறுவனத்திற்கு உரிய லைசன்ஸுகள் இல்லாமை, தமக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அளவுக்கதிகமான ஆட்களை ஓவர்புக்கிங் செய்வது போன்ற காரணங்களால் கடைசி நேரத்தில் பலரின் பயணங்களை ரத்து செய்வதும் ஆண்டுதோறும் நடந்து  வருவதைப் பார்க்கிறோம். ஆவலோடு தம் வாழ்நாள் கடமைப் பயணத்திற்குத் தயாராகி, கடைசி நிமிடத்தில் இல்லையென ஆகும்போது அவர்களின் ஏமாற்றம் சொல்லமுடியாதது. ”இந்த வருடம் அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ஜை நாடவில்லை போல! அடுத்த வருடம் நாங்களே அழைத்துச் செல்கிறோம்” என்று சால்ஜாப்பு சொல்கின்றனர். அடுத்த வருடம்வரை, அப்பயணிகளின் உயிருக்கோ, உடல்நிலைக்கோ உத்தரவாதம் தர முடியுமா இவர்களா?

ஏன் இப்படி?

இவற்றையெல்லாம் குறித்து, ஹாஜிகள் அவர்களிடம் கேள்வி கேட்பார்களானால், அவர்களின் பதில் இப்படித்தானிருக்கும்: “ஹஜ் என்பது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி நிறைவேற்ற வேண்டிய கடமை. உங்கள் ஈமானைச் சோதிக்க இறைவன் தரும் சோதனைகள் இவை. எவ்வளவுக்கெவ்வளவு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு, சோதனைகளைக் கடந்து, கடமைகளை நிறைவேற்றுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் ஹஜ் சிறப்புறும்; உங்கள் ஈமான் உறுதி பெறும். உறுதியில்லாத ஈமான் உள்ளவர்கள்தான் இவையெல்லாம் சிரமம், சிரமம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.” என்று அவர்கள் வாயை அடைப்பார்கள்!! தம் ஈமானையே கேள்விக்குறியாக்கும்பொழுது, அவர்கள் பின் வாயைத் திறப்பார்களா?

எனில், “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை” என்று தன் வேதத்திலும்(2:185);   ”(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்” என்று இறைத்தூதரும்(ஸல்)   ஏன் சொன்னார்கள்? வல்ல இறைவனும், அவன் தூதரும் இஸ்லாமை எளிமையாக்கியிருக்க, இவர்களோ கடினமானதாகக் காட்ட  முயல்கிறார்கள். இறைவன் ஒருவனே நம் ஈமானை அறிபவன். அவனே நம் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றையும் அறிபவன். அப்படியிருக்க,  இவர்கள் தம் தவறுகளை மறைப்பதற்காக, ஹாஜிகளின் ஈமானுக்கு அக்னிப் பரிட்சை நடத்துகிறார்களா?

தாயகம் திரும்பிய ஹாஜிகள் இதுகுறித்து யாரிடமும் ஒரு வார்த்தையும் சொல்வதுமில்லை. வேறு யாரேனும் ஹஜ் பயணம் செல்லும்போது இதுகுறித்துக் கூறி அவர்களை எச்சரிப்பதுமில்லை. சிரமப்பட்டேன் என்று சொன்னால், எங்கே தன் ஈமான் சந்தேகத்திற்குள்ளாக்கப்படுமோ என்ற பயத்தால் அமைதி காக்கிறார்கள். இதுவே இந்நிறுவனத்தினருக்கு வசதியாகி, கேள்வி கேட்போரில்லாமல் தம் ”சேவை”களை வழக்கம்போலத் தொடருகின்றனர்.

எனவே பொதுமக்களாகிய நாமே நம்மைத் தயார் செய்து கொள்வோம். முதிய வயது வரை காத்திருக்காமல், உலகக் கடமைகளின்மீது பழி போடாமல், உடல் உறுதியாய் இருக்கும் காலத்தே ஹஜ் செய்வோம். முதியவர்களை, குறிப்பாக  பெண்களைத் தனியே அனுப்பாமல், உரிய துணைகளோடு, உண்மையான சேவைநோக்கோடு பணிபுரியும் நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம். இறைவன் நம் முயற்சிகளுக்கு பலம் சேர்த்து, பயன் அளிப்பானாக!!

Post Comment

10 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,இறை நல்வழி காட்டட்டும்.மனம் துயரப்படுகிறது.
நம் இந்திய ட்ராவல்ஸ் சிலர் அவர்கள் கூட்டிச் செல்லவேண்டிய இடங்களுக்கு முறைப்படி அழைத்துச் செல்வதில்லை.
ஒரு சில நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன.
எங்கள் குருவாக்ச் சொல்லிக் கொடுத்தவர் கண்,காது,உடல் நன்றாக இருக்கும் போதே பிரார்த்தனைகளை முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
சிறு வயதில் குடும்பமே பிரதானமாக இருந்ததால் போக முடியவில்லை. இப்பொழுது கைகால் சோர்ந்து இருக்கும்போது மனத்தில் தான் பிரார்த்தனையெல்லாம்.

ஸ்ரீராம். said...

இந்தக் காலத்தில் எதுதான் வியாபாரமாகவில்லை? கல்வி முதல் கோவில் வரை எல்லாம் வியாபாரம்தான்.

suvanappiriyan said...

விழிப்புணர்வூட்டும் கட்டுரை! என் தாயார் ஹஜ் பயணத்துக்காக வாங்கிய பணம் பயணம் கேன்சல் ஆனதால் பாதி அமௌண்டை திருப்பி கொடுத்தனர். இன்னும் பாதி பணம் 6 மாதம் கழித்து தருவதாக சொல்லியுள்ளனர். இதுவும் வியாபாரமாகி விட்டது.

அப்பாதுரை said...

விவரமான பதிவு.
கடவுள் பக்தி போன்ற விஷயங்கள் கொள்ளைக்கூட்டத்துக்கு மிகவும் விருப்பமானவை. எல்லா மதங்களிலும் இந்த அக்கிரமம் நடக்கிறது.

நீங்கள் சொல்வது போல் ஏதோ ஒரு நாட்டுக்கு வந்து மொழியும் தெரியாமல் அவதிப்படுவது போதாதென்று வந்த நோக்கம் நிறைவாக இல்லையென்றால் மிகவும் வருத்தம் தான். இதை மறந்து 'எல்லாம் நன்றாக முடிந்தது' என்று சொல்லப் பரந்த மனம் வேண்டும்.

Roomil said...

அஸ்ஸலாமுஅலைக்கும் (வ வ )
காலத்துக்கு ஏற்ற பொருத்தமான பதிவு இது
எங்கள் நாட்டில் ஹஜ் செல்வோருக்கான தேர்வு இடம்பெறும் நேரம் இது.
இப்பெல்லாம் ஹஜ் ஐ ஒரு ஆன்மீக சுற்றுலாவாகவே அறிமுகப்படுத்துகிறார்கள் என்ன செய்ய பணத்தாசை பொருளாசை படுத்தும் பாடு. எனக்கும் இந்த வருடம் நிய்யத் உண்டு துணையுடன் சென்றுவர. பிராதியுங்கள்
நன்றி
அன்புடன் ரூமில்

சசிகலா said...

குறிப்பாக பெண்களைத் தனியே அனுப்பாமல், உரிய துணைகளோடு, உண்மையான சேவைநோக்கோடு பணிபுரியும் நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்// கோவிலுக்கு போகவும் விழிப்புணர்வு தேவை என்பதை உணர்த்தும் பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி .

enrenrum16 said...

//ஹஜ் என்பது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி நிறைவேற்ற வேண்டிய கடமை. உங்கள் ஈமானைச் சோதிக்க இறைவன் தரும் சோதனைகள் இவை. எவ்வளவுக்கெவ்வளவு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு, சோதனைகளைக் கடந்து, கடமைகளை நிறைவேற்றுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் ஹஜ் சிறப்புறும்; உங்கள் ஈமான் உறுதி பெறும். உறுதியில்லாத ஈமான் உள்ளவர்கள்தான் இவையெல்லாம் சிரமம், சிரமம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்//

அட மக்கா...இப்படியெல்லாம் சொல்லிக்கூட பயங்காட்டுறாங்களா?

வருடா வருடம் இத்தனை மில்லியன் மக்கள் ஹஜ் யாத்திரை செய்திருக்கிறார்கள் எனும் செய்தியைப் படிக்கும்போது சந்தோஷமாயிருக்கும். ஆனால் அந்த நெரிசலில் இருக்கும் கஷ்டங்கள், அதுவும் முதியவர்களுக்கு, சொல்லி மாளாததுதான்.

ஈமானை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நமது கடமைகளில் ஒன்று இப்படி வியாபரமயமாக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கோமதி அரசு said...

எனவே பொதுமக்களாகிய நாமே நம்மைத் தயார் செய்து கொள்வோம். முதிய வயது வரை காத்திருக்காமல், உலகக் கடமைகளின்மீது பழி போடாமல், உடல் உறுதியாய் இருக்கும் காலத்தே ஹஜ் செய்வோம். முதியவர்களை, குறிப்பாக பெண்களைத் தனியே அனுப்பாமல், உரிய துணைகளோடு, உண்மையான சேவைநோக்கோடு பணிபுரியும் நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம். இறைவன் நம் முயற்சிகளுக்கு பலம் சேர்த்து, பயன் அளிப்பானாக!!//

அருமையாக சொன்னீர்கள் ஹுஸனம்மா.
நானும் கைலாஷ் யாத்திரை போக என்னும் எல்லோருக்கும் சொல்லும் அறிவுரை இது தான்.(உடல் நலத்தோடு இருக்கும் போதே போய்வரவேண்டும் தகுந்த துணையோடு)
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.
வலைச்சரத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

உங்களின் இந்தப் பகிர்வை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன், பகிர்வுக்கு நன்றி.