அமீரகத்தில் இருந்துகொண்டு பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கக்கூடாதோ என்று தோன்றுகிறது பல சமயங்களில்!!
தாய்மொழியில்தான் பேச வேண்டும் மற்றும் இந்தியா செல்லும்போது உறவினர்களுடன் தடையில்லாமல் பேச வேண்டும் என்பதற்காகவே வீட்டில் ஆரம்பம் முதலே பிள்ளைகளுடன் தமிழில்தான் பேசி வருகிறோம். (ஆங்கிலத்தில் எனக்குச் சரளமாகத் திட்ட வராது என்பதும் ஒரு காரணம் என்று சொல்லலாம்!!) பேசினால் மட்டும் போதாது, எழுதப்படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தாய்மொழிப்பற்று கொஞ்சம் அதிகமாகிப் போனதால் இரு பிள்ளைகளையும் தமிழ் படிக்கச் செய்தேன்/ செய்கிறேன்.
சின்னவனை அபுதாபியில் தமிழ் கற்றுக் கொடுக்கும் இரண்டே பள்ளிகளில் ஒன்றில் சேர்த்திருக்கிறேன். பள்ளியின் தரம் ஒன்றும் ஆஹா, ஓஹோ என்றில்லாவிட்டாலும் நம்முர் அரசுப் பள்ளிகளை விட மோசமில்லை. ஆனால் தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை ஒரு மலையாளி (நாகர்கோவில்வாசி)!! அதிலும் தமிழைத் தாய்மொழியாகப் படித்திராதவர் போல் தெரிகிறது. நோட்டில் அவர் எழுத்தைக் கண்டால் எரிச்சலாக வருகிறது. அதனால் இப்போ நானே தனியாக அவனுக்கு எழுதிக்காட்டி அதன்படி எழுதச் சொல்கிறேன். முதலில் ஆசிரியைக்குப் பயந்து மறுத்தவன், நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டான்.
அந்த ஆசிரியை அதே வகுப்பில் தமிழ் படிக்கும் வேறு சில மாணவியரின் பெற்றோருக்கு வருட ஆரம்பத்தில் ஃபோன் செய்து தனக்குத் தமிழ் சரியாகத் தெரியாதென்பதால், தமிழை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டாம் என்று சொன்னாராம். அவரின் நல்லவேளை என்னிடம் பேசவில்லை!!
அவரின் கையெழுத்தைக் கண்டுப் பொறுக்க முடியாமல், இன்னும் சில விஷயங்களைக் குறித்தும் பேசலாம் என்றும் அவரை நேரில் சந்தித்தேன். தனக்குத் தமிழில் ஆர்வமில்லை என்றும், நிர்வாகத்தின் கட்டாயத்தால்தான் தமிழ் பாடம் எடுப்பதாகவும், நான் முன்பு சூபர்வைசரிடம் செய்த புகார்களால் அவருக்குக் கிடைத்த எச்சரிக்கைகளையும் அழமாட்டாமல் கூறினார். பிறகென்ன சொல்ல அவரிடம்? நிர்வாகத்திடம் பேசிப் பயனில்லை என்பது என் பெரிய மகன் அங்கு படித்தபோதே தெரிந்துகொண்டேன்.
பெரிய மகனும் இதே பள்ளியில் தமிழுக்காகவும் இரண்டு வருடங்கள் படித்தான். மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புகள். அப்பொழுதும் தமிழ் படித்துக் கொடுத்தது மலையாள ஆசிரியைகளே!! ஆனால் அவர்கள் பிறந்ததிலிருந்தே சென்னையில் இருப்பவர்கள். அதனால் ஓரளவு பரவாயில்லை.
இப்ப விஷயம் என்னன்னா, வீட்டில் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசும் நண்பர்களையும், சரளமாக ஆங்கிலத்தில் பேசும் அவர்களின் சிறு வயதுக் குழந்தைகளையும் பார்க்கும்போது தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் “இந்த ஸ்கூல்ல போய் ஏன் சேத்தீங்க” என்ற கேள்வி வரும்போதும், தமிழ் காரணமாக, வசதி இருந்தும், தரமில்லாத பள்ளியில் பிள்ளையைப் படிக்க வைக்கிறோமோ என்ற குற்ற உணர்வு வருகிறது. “அதெல்லாம் தேவைன்னு வரும்போது படிச்சுப்பாங்க; நாமெல்லாம் கவர்மெண்ட் பள்ளிக்கூடத்திலதானே படிச்சோம்? இப்ப நல்லால்லையா? சின்ன வயசுலயே புள்ளைங்கள ஹை ஸ்டாண்டர்டா உள்ள ஸ்கூல்ல சேத்து கஷ்டப்படுத்தக் கூடாது” என்றெல்லாம் மழுப்பினாலும், எனக்குள் அந்தக் குற்ற உணர்வு எழாமலில்லை.
இருந்தாலும் “பேரனோட பேசுறதுக்காக இந்த வயசுக்கு மேலயா இங்கிலீஸ் படிக்க முடியும்?” என்ற கேள்வியோடு கண்களில் நீர் தளும்ப நின்ற அந்தப் பாட்டியைப் பார்த்தபோது குற்ற உணர்வு கொஞ்சம் குறைந்தது!!
***************
பத்திரிகைகள்தான் இந்த புவனேஸ்வரி மேட்டரை ஏதோ பெரிய விஷயம் போல் எழுதி புண்ணியம் கட்டிக் கொள்கின்றன என்றால், இந்தப் பதிவர்களுமா?? அநேகமாக எல்லா ஆண்பதிவர்களும் இந்த வரலாற்றுச் சிறப்பைப் பற்றி ஒரு பதிவு எழுதி விட்டார்கள். (நாந்தான் மொத பெண் பதிவரோ?) இதைப் பற்றி எழுதாதவர்(ஆண் பதிவர்)கள் மிகக் குறைவே!!
ம்.. மேட்டர் பஞ்சமா அல்லது ஆர்வக் கோளாறா?
****************
நான் அமீரகம் வந்த புதிதில் கேள்விப்பட்ட ஒரு ஜோக்:
ஒரு பயணிக்கும், டாக்ஸி டிரைவருக்கும் நடந்த உரையாடல்: (பயணி ஒரு வழுக்கைத் தலை இந்தியர் மற்றும் டா. டி. பாகிஸ்தானி என்பதும் உபரித் தகவல்கள்).
டா.டி.: துமாரா நாம் கியா ஹே?
பயணி: பாலகிருஷ்ணன்
டா.டி: சிர்ப்பே ஏக் பால் பி நஹி ஹே, துமே கிஸ்னே ஏ நாம் தியா?
பயணி: ??? .... @#$%^&*
ஹிந்தி தெரியாதவர்களுக்காக (இதுக்குத்தான் ஹிந்தி படிச்சுருக்கணுன்னு சொல்றது), கடைசி வசனத்திற்கு மட்டும் மொழிபெயர்ப்பு: ஹிந்தியில் “பால்” என்றால் முடி. “தலையில் ஒரு முடி கூட இல்லை, உனக்கு யார் “பால்” கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது?”
|
Tweet | |||
10 comments:
எனது குழந்தைகள், இங்கே ஜித்தாவில் உள்ள பள்ளியில் சேர்த்தோம், பள்ளி தொடங்கி முதல் இரண்டு ஆண்டுகள் வரை தமிழ் பாடம் கொண்டு வரவில்லை, அதனால் ஹிந்தி எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம், அதிர்ஷ்டவசமாக தமிழ் கொண்டு வந்தார்கள், நாங்களும் மாற்றி விட்டோம். தரமான் எம்.எட், படித்த ஆசிரியர்கள் தற்பொழுது இருக்கின்றார்கள். ஹிந்தி பேச மட்டும் தெரிந்தால் போதுமென்பது என்னுடைய கருத்து. நான் ஹிந்தி கற்றது சவூதியிலுதானுங்க!!
என் வயித்தில இப்பவே புளிய கரைக்கிறீங்களே...
வெளிநாடுகளில் பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கும் இந்தியர்களின் குழந்தைகள், தாய் மொழி எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் என்கிற நிலை இருப்பதாலும், மேல் வகுப்புகள் ஆங்கிலத்திலேயே தொடர வேண்டும் என்பதாலும் அடிப்படை கல்வியை ஆங்கலத்திலேயே ஆரம்பிப்பது நல்லது என்றே தோன்றுகிறது. தாய் மொழியை வீட்டிலோ அல்லது தனியாக ட்யூசன் வைத்தோ கற்றுக்கொடுக்க வேண்டியதுதான்.
அப்பறம் அந்த புவனா மேட்டர்.. ஹிஹி.. நான் சும்மா ஒரு பத்திதான் எழுதினேன். பதிவுலக கடமைன்னு ஒண்ணு இருக்குதில்லையா?
மலிக்கா,
ஏன் உங்க கருத்தை அழிச்சுட்டீங்க?
//பீர் | Peer Says:
15/10/09 19:05
என் வயித்தில இப்பவே புளிய கரைக்கிறீங்களே... //
எந்த வீட்டில அப்பாக்களெல்லாம் இதைப் பத்தி கவலைப்படுறாங்க? இப்ப இப்படித்தான் சொல்வீங்க, ஆனா அம்மாக்களுக்குத்தான் பொறுப்பு கூடுதல்!!
பதிவுலகக் கடமையெல்லாம் என்னென்னனு எனக்கும் சொல்லுங்க. நானும் கடமை தவறக்கூடாதுல்ல!!
//ஷஃபிக்ஸ்/Suffix Says:
தரமான் எம்.எட், படித்த ஆசிரியர்கள் தற்பொழுது இருக்கின்றார்கள். ஹிந்தி பேச மட்டும் தெரிந்தால் போதுமென்பது என்னுடைய கருத்து. நான் ஹிந்தி கற்றது சவூதியிலுதானுங்க!!//
நல்ல ஆசிரியர் கிடைப்பது அதிர்ஷ்டம்தான்!!
நானும் ஹிந்தி படித்ததில்லை. எனது முதல் ஹிந்தி ஆசிரியர், தூர்தர்ஷன்!!
//தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை ஒரு மலையாளி (நாகர்கோவில்வாசி)!! அதிலும் தமிழைத் தாய்மொழியாகப் படித்திராதவர் போல் தெரிகிறது. //
அப்படியா அட நம்மூரு... அட்ரஸ் விசாரிங்க ஊருக்குபோகும்போது ஒரு வழிபண்ணிர்றேன்..யார்கிட்ட...
// ம்.. மேட்டர் பஞ்சமா அல்லது ஆர்வக் கோளாறா?//
நானும் போட்டேன்...ஹீஹீஹீ...ஆர்வக்கோளாறுதான்...
ஜோக் சூப்பர்.
உங்க பாலோவர் என்சிஸ்டத்துல இப்போ ஆக்டிவ் ஆகமாட்டேங்குது...அப்புறமா வந்து சேர்ந்துக்குறேன்...
// நாஞ்சில் பிரதாப் Says:
14/11/09 20:15
//தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை ஒரு மலையாளி (நாகர்கோவில்வாசி)!! //
அப்படியா அட நம்மூரு... அட்ரஸ் விசாரிங்க ஊருக்குபோகும்போது ஒரு வழிபண்ணிர்றேன்..யார்கிட்ட...//
எங்க வீட்டுக்காரரும் உங்க ஊர்தான்!!
//உங்க பாலோவர் என்சிஸ்டத்துல இப்போ ஆக்டிவ் ஆகமாட்டேங்குது...அப்புறமா வந்து சேர்ந்துக்குறேன்...//
கண்டிப்பா வாங்க; நன்றி பிரதாப்.
ம்ம்ம்ம்ம் - அயலகங்களில் வசிக்கும் அனைவருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. என்ன செய்வது - ஆங்கிலத்திலேயே படிக்கட்டும் - வீட்டில் தமிழ் பேசுங்கள் - கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும் கற்றுக் கொடுங்கள் - பிறகு படிக்கட்ட்டும் -
நல்வாழ்த்துகள் ஹூஸைனம்மா
Post a Comment