Pages

பொண்ணு பாக்க வந்தாங்களா, எப்போ?
muslimformarriage.net

இது தொடர்பதிவுகள் மாதம் போல!!  பிடித்த பத்துப் பெண்கள், பேருந்துக் காதல், பிடித்தப் பின்னூட்டங்கள், பிடித்த கதைசொல்லிகள்,  பொண்ணு பாக்க வந்து நொந்த கதை என்று தொடர்ப் பதிவுகள் களைகட்டி வருகின்றன. என் ஞாபகம் யாருக்கும் வந்துடக்கூடாதேன்னு பயந்துட்டே இருந்தேன்; ஆனா பாருங்க, யாரும் மறக்கமுடியாத அளவு நான் ரொம்ப நல்லவளாப் போயிட்டேனா, நம்ம புதுகைத் தென்றலும், அநன்யாவும் அழைப்பு வச்சிட்டாங்க, மறுக்க முடியுமா? வேற வழியேயில்ல, நீங்க படிச்சுத்தான் ஆகணும்!!

எங்க ஊர்ல பொதுவா ஊருக்குள்ளயேதான் சம்பந்தம் பண்ணுவாங்க. ரொம்ப அபூர்வமாத்தான் வெளியூர்ல பண்றது. அதுமட்டுமில்ல, எங்கூர்ல ”பொண்ணு பாக்கிற” சடங்கெல்லாம் கிடையாது. பொண்ணைப் பாக்கணுன்னா, நமக்கே தெரியாம, நம்மளை நம்ம வீட்டிலயே வந்தோ அல்லது வெளியே எங்கயாவது போய்வரும்போதோ, மாப்பிள்ளை வீட்டு ரெப்ரசண்டேடிவ் பெண் ஒருத்தர் பாத்துடுவாங்க!! இதுக்காக நம்ம நடவடிக்கைகளை உளவு சொல்றதுக்குன்னே அக்கம்பக்கத்துல அவங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது  இருப்பாங்க!!

அதனால, எனக்குத் தெரியாம எத்தனை பொண் பாக்கிற சம்பவங்கள் நடந்ததுன்னு தெரியல!! ஆனா, பாத்த யாருமே கேட்டு வரலங்கிறதுதான் விஷயமே!! எங்கப்பாவும், மூத்த பொண்ணுன்றதுனால, ரொம்ப விசேஷமா மாப்பிள்ளை தேடினாங்க. உள்ளூர் மாப்பிள்ளையெல்லாம் என் தகுதிக்கு ரொம்ப குறைச்சல்னு சொல்லி, வெளியூர்ல தேட ஆரம்பிச்சாங்க. (என் வீட்டுக்காரர்  “உள்ளூர்ல விலைபோகாத மாட்டை, வெளியூர்ச் சந்தைலதான் விக்கணும்”பார்!!). ஊர்லயும், அண்டைஅசல்லயும் என் வாப்பாவுக்கு ரொம்ப நல்ல பேர் உண்டுன்னாலும், என்னவோ மூணு வருஷமாகியும் ஒண்ணும் அமையல!! என் “புகழ்” அவ்வளவு பரவியிருந்துது போல!! இதுக்கிடையில என் தங்கையை, தூரத்து உறவினர் வீட்டில விரும்பி கேட்டு உறுதி செஞ்சுகிட்டாங்க!! (அவ ரொம்ப அமைதியா இருப்பா).

அப்புறம், எப்படியோ, பக்கத்தூர்லருந்து ஒரு மூணு பேர் என்னைப் பாக்க வந்தாங்க. பட்டுச்சேலை, நகைல்லாம் போடமாட்டேன்னு நான் பாவாடை தாவணியில் இருக்க, வந்தவங்களோ தூக்கமாட்டாம பட்டும், நகையுமா போட்டுகிட்டு வந்தாங்க!! வந்த அம்மணீஸ் ரெண்டுபேரும் ஒண்ணுமே பேசாம, என்னைப் பாத்துகிட்டே சும்மா உக்காந்திருக்க, எனக்குப் போரடிச்சுப் போய், நானே அவங்ககிட்ட அவங்க குடும்ப டீடெய்ல்ஸ் கேக்க ஆரம்பிச்சுட்டேன். அப்படியே நைஸா மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்க, அது எங்க காலேஜில பார்ட்-டைமா ஒரு மூணு மாசம் வேலை பாத்தவர்னு தெரியவர, நான் ஒரு ஆர்வக்கோளாறுல, “அட, மன்சூர் சாரா”ன்னு சத்தமா சொல்ல, அவங்க விட்ட லுக்குலயே ரிஸல்ட் தெரிஞ்சுபோச்சு!!

அதுக்கப்புறம் யாருமே வரலை!! என் வாப்பா, தின்னவேலி இஞ்சினியரிங் காலேஜில புரஃபசரா வேலை பாக்கிற நண்பர்கிட்ட சோகத்தைச் சொல்ல, அவரும் பரிதாபப்பட்டு, தன்கிட்ட படிச்ச மாணவமணி ஒருத்தரோட டீடெயில்ஸ் சொல்லி, இந்தப் பையனை வேணா விசாரிச்சுப் பாருங்களேன்னு சொல்லிருக்கார்!! வாப்பாவும் தன் நாகர்கோவில் ஃபிரண்ட்கிட்ட கேட்டப்போ அவங்களுக்கும் தெரிஞ்ச ஃபேமிலியா இருக்க, அப்படியே ரூட் பிடிச்சு உறுதி செஞ்சாச்சு இவரை!! (இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)

அப்புறம் ”பெண் காணல்”க்கு வர்றோம்னு தகவல் வர, நாங்களும் அது பொண்ணு பாக்கிற நிகழ்ச்சிதான்னு நினைச்சு, வழக்கம்போல நான் சாதாரணப் புடவைல நிக்க, அவங்க வந்தப்புறம்தான் தெரியும், அவங்க ஊர்ல “பெண் காணல்”னா அதுதான் நிச்சயம் செய்றதாம்!! அவங்களே பட்டுச்சேலை, அஞ்சு பவுன் மாலை, பூ கொண்டுவந்து என்னை அலங்காரம் பண்ணி உறுதி செஞ்சுட்டுப் போனாங்க!! ஆனா மாப்பிள்ளை வரலை!! (ரொம்ப ஏமாத்தம் எனக்கு). இதுல விஷயம் என்னன்னா, போன தடவை நடந்தத வச்சு என்னை எங்கம்மா கடுமையா இன்ஸ்ட்ரக்ட் பண்ணிருந்தாங்க, கேட்டதுக்கு மட்டும்தான் (ஒழுங்கா) பதில் சொல்லணும், அதுக்குமேல வாயத் திறக்கக் கூடாதுன்னு!! நானும் கஷ்டப்பட்டு அப்படியே இருந்தேன்.

இன்னொரு இண்டெரஸ்டிங் மேட்டர், ரெண்டு பக்கமும் பேசிமுடிவானப்பறம், ஒரு மாசமா நானும், அவரும் ஃபோன்ல பேசிக்க ஆரம்பிச்சிருந்தோம்!! அம்மாவுக்குத் தெரியும்னாலும், ரொம்ப கண்டுக்கலை. அவர் அப்ப வட இந்தியாவுல சுத்திகிட்டிருந்தார். “பெண் காணல்” அன்னிக்கு கரெக்டா போஸ்ட்மேன் ஃபோன் பில் கொண்டு தந்திட்டுப் போனார். பிரிச்சுப் பாத்த எங்கம்மாக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை!! எப்பவும் மாசா மாசம், எழுநூறு, எண்ணூறுன்னு வர்ற பில், அந்த மாசம் ஐயாயிரம் ரூபாய் வந்திருந்துது!! என்னைத் திட்ட ஆரம்பிக்கப் போற சமயம், கரெக்டா மாப்பிள்ளை வீட்டுக் காரங்க உள்ளே வர, நான் தப்பிச்சேன்!! எல்லாம் நலமா நடந்த சந்தோஷத்துல, அப்புறமா லேசா அதட்டிட்டு விட்டுட்டாங்க.

அப்புறமென்ன, கல்யாணம்தான்!! அது ஆச்சு இப்போ 14 வருஷம்!! எப்படி இருக்கோம்னு கேட்டீங்கன்னா என்ன சொல்றது? என் சின்னவன் எல்.கே.ஜி. படிச்சப்போ, ஃபிரண்ட்ஸ்னா கல்யாணம் பண்ணிக்கனுனு அப்பாவியா நினைச்சு, கூடப் படிக்கிற ரெண்டு பொண்ணுங்க பேரச் சொல்லி, ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல, கேட்டுகிட்டிருந்த பெரியவன் (10 வயசு) சொன்னான், “டேய், டேய், ரெண்டு கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!!

Post Comment

79 comments:

மின்மினி said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

ஹூசைனம்மா அக்கா,அருமையான பகிர்தல்.

நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தருவீங்களா..

நாஞ்சில் பிரதாப் said...

//இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)//

So sad...

எங்க ஊர்ல பொறந்தவங்க இதுவரைக்கும் சோடைபோனதே இல்லங்க... பொறுமை,ஒழுக்கம், புத்திசாலித்தனம் எல்லாம் இயற்கையாகவே இருக்கும்... இல்லன்னு ஒத்துக்கமுடியுமா??? :))

இராகவன் நைஜிரியா said...

// (இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)//

புலம்பிகிட்டு தானே இருக்கார்... விடுங்க... கணவன் என்றாலே இதெல்லாம் சகஜம்தான்..

// “டேய், டேய், ரெண்டு கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!!//

ஹா...ஹா... புள்ளையாண்டான் சூப்பரா கமெடி அடிப்பார் போலிருக்கு

கண்ணா.. said...

//நாஞ்சில் பிரதாப் said...

எங்க ஊர்ல பொறந்தவங்க இதுவரைக்கும் சோடைபோனதே இல்லங்க//

வாஸ்தவம்தான்.. அதான் எங்க ஊர்ல இருந்து பொண்ணு எடுத்துருக்காங்க...

நீயும் வாழ்க்கைல உருப்படணும்னா... கேரளா, நார்த் இண்டியா, பிலைப்பைனின்னு அலையாம, திருநெல்வேலி போய் பொண்ணு தேடு...

கண்ணா.. said...

லே அவுட் மாத்தியாச்சு போல...இன்னும் ஓட்டு பட்டை இணைக்கலயா..


என்னா.. வியாபாரம் பாக்குறீங்க நீங்க..

அத்திரி said...

//இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)
//

:)))))))))

ஹுஸைனம்மா said...

ஓட்டுப் பட்டைகள் சேர்க்க மறந்தே போயிட்டேன். ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி கண்ணா.

இந்தப் பிரதாப் கூட ஒரு வார்த்தை சொல்லல பாருங்க, இதுல அவங்கூர்க்காரங்க பெருமை மட்டும் பேசறார். இப்பத் தெரியுதா?

Hyder said...

very good one......nice to read....

சுல்தான் said...

மாஸா அல்லாஹ் விவரமான பையன் போலிருக்கு. :))

கண்ணா.. said...

//ஹுஸைனம்மா said...

இந்தப் பிரதாப் கூட ஒரு வார்த்தை சொல்லல பாருங்க, இதுல அவங்கூர்க்காரங்க பெருமை மட்டும் பேசறார். இப்பத் தெரியுதா?//

சும்மா பெருமை பேசுறதுதானே அவங்க வேலை. திருநெவேலி காரவுகதான் செயல்ல இறங்குவாங்க.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹஹ்ஹா.. கலக்கல் ஹுசைனம்மா.. இதுல அந்த அடைப்புக்குறியில் போட்டிருக்க்ற விசயம் எல்லாம் எங்க வீட்டுக்காரங்களும் சொல்றது அதே அதே :))

நாஞ்சில் பிரதாப் said...

//வாஸ்தவம்தான்.. அதான் எங்க ஊர்ல இருந்து பொண்ணு எடுத்துருக்காங்க...//


வே கண்ணா...அடிங்...சின்ன திருத்தம்... நாகர்கோவில்லேருந்து மாப்பிள்ளை எடுத்துருக்காங்கறதான் சரி...
உள்ளுர்ல விலைபோலைன்னு ஹூசைனம்மாவே வாக்குமூலம் கொடுத்துருக்காங்க...
சார் எவ்ளோ பெரிய தியாகம் பண்ணிருக்காங்க அதுவுட்டுட்டு திருநெல்வேலி நெய்வேலின்னு ஊர்பெருமை பேசிகிட்டு...கனட்ரி ப்ரூட்

kadar said...

interesting real story. i liked most the matters in the ( )

kadar oli

அண்ணாமலையான் said...

haa haa haa

நாஞ்சில் பிரதாப் said...

//நீயும் வாழ்க்கைல உருப்படணும்னா... கேரளா, நார்த் இண்டியா, பிலைப்பைனின்னு அலையாம, திருநெல்வேலி போய் பொண்ணு தேடு...//

வுட்டா தெருவுக்கு ஒண்ணை கட்டிக்சொல்லிவீரு போலருக்கே...... இங்க ஒண்ணுக்கே வழியைக்காணோம்... ஆமா இதுல நார்த் இன்டியா சேர்க்க யாருவே ஐடியா கொடுத்தது... நற ..நற...நற...

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

ஹுசைனம்மா,ஆனாலும் ரொம்ப சுவாரஸ்யமாக,தெளிவாக சுவைபட விவரித்து இருக்கின்றீர்கள்.கல்யாணம் முடியும் வரை உங்கள் ஆள் உங்களை நேரில் பார்க்கவே இல்லையா?போன் பில் மேட்டர் செம காமெடி.

Jaleela said...

நல்ல எதார்த்தமா சொல்லி இருக்கீங்க, படிக்க படிக்க ரொம்ப இன்ரெஸ்ட்டா இருந்தது.நாஞ்சிலார் பொண்ணு தேடி அலைந்து கொன்டு இருக்கும் போது உங்கள் ஓட்டு பட்டை எல்லாம் கண்ணுக்கு தெரியுமா?

Jaleela said...

புது வீட்டு வலை டிசைன் நல்ல இருக்கு

ஹுஸைனம்மா said...

பிரதாப்பு, வேணாம், நான் ரொம்பக் கஷ்டப்பட்டு என் வீட்டுக்காரருக்கு, அதான் உங்க ஊர்க்காரருக்கு, ஒரு நல்ல இமேஜ் பில்ட்-அப் பண்ணி வச்சிருக்கேன். என் வாயால அவர் பெருமையைச் சொல்லப்போக, அப்புறம் உங்க ஊர் பெருமையையும் சேந்து தண்டவாளத்துல ஏறும்!!

அப்புறம், அந்த “உள்ளூர் சந்தை” அவர்தான் சொன்னது, நான் ஒண்ணும் சொல்லல!! தியாகமாம் தியாகம், நல்லா வருது வாயில!!

ஸாதிகா said...

///உள்ளூர் மாப்பிள்ளையெல்லாம் என் தகுதிக்கு ரொம்ப குறைச்சல்னு சொல்லி, வெளியூர்ல தேட ஆரம்பிச்சாங்க///.ம்கும்..


///என் வீட்டுக்காரர் “உள்ளூர்ல விலைபோகாத மாட்டை, வெளியூர்ச் சந்தைலதான் விக்கணும்”பார்!///த்சோ

Mrs.Menagasathia said...

அருமையான பகிர்வு!! புது வீடு நல்லாயிருக்கு..

நாஞ்சில் பிரதாப் said...

சரி..சரி.. இப்படித்தான் நானும் பில்டப் பண்ணிட்டு இருக்கேன்... அதை வெளியவுட்டு நாறடிச்சிராதீங்க... .என்னோட ஊர் பெருமையும், ஊர்காரர் பெருமையையும் காப்பாத்தறது என்னோட கடமை....அப்படியே இருக்கட்டும்...

ஹுஸைனம்மா said...

@பிரதாப்: அது, அப்படித்தான் இருக்கணும். வெரிகுட், கீப் இட் அப்!!

@கண்ணா, போதும் வேண்டாம். என்ன இருந்தாலும், பாவம், பிரதாப் எங்க வீட்டுக்காரரோட ஊர்க்காரர் இல்லியா? அதனால விட்டுடுவோம் சரியா? :-))

கண்ணா.. said...

//@கண்ணா, போதும் வேண்டாம். என்ன இருந்தாலும், பாவம், பிரதாப் எங்க வீட்டுக்காரரோட ஊர்க்காரர் இல்லியா? அதனால விட்டுடுவோம் சரியா? :-))//

டீல் ஓகே...:)

அக்பர் said...

அருமையான பகிர்வு.

அபுஅஃப்ஸர் said...

//“உள்ளூர்ல விலைபோகாத மாட்டை, வெளியூர்ச் சந்தைலதான் விக்கணும்”பார்!!//

கதை இப்படிதான் போவுதா

//நானே அவங்ககிட்ட அவங்க குடும்ப டீடெய்ல்ஸ் கேக்க ஆரம்பிச்சுட்டேன்//

அன்னிக்கு எஸ்கேப்பூ ஆனவங்கதானாம், ஊருபேரைக்கேட்டாகூட‌ அல‌ர்ஜியாச்சாம்

//இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!//

க‌ண்கெட்ட‌ பிற‌கு சூரிய‌ந‌ம‌ஸ்கார‌ம்னு நினைச்சிருப்பார்

//கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” //

ஒன்னும்சொல்ற‌துக்கில்லை

ந‌ல்ல‌ காமெடிப்போங்க‌, ர‌சித்தோம்

அஹமது இர்ஷாத் said...

இயல்பான நடை எழுத்தில், கலக்கல்மா..


http://bluehillstree.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா said...

நகைச்சுவை (உண்மைக்) கதை நல்லா இருக்கு.

துபாய் ராஜா said...

//வந்த அம்மணீஸ் ரெண்டுபேரும் ஒண்ணுமே பேசாம, என்னைப் பாத்துகிட்டே சும்மா உக்காந்திருக்க, எனக்குப் போரடிச்சுப் போய், நானே அவங்ககிட்ட அவங்க குடும்ப டீடெய்ல்ஸ் கேக்க ஆரம்பிச்சுட்டேன். அப்படியே நைஸா மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்க, அது எங்க காலேஜில பார்ட்-டைமா ஒரு மூணு மாசம் வேலை பாத்தவர்னு தெரியவர, நான் ஒரு ஆர்வக்கோளாறுல, “அட, மன்சூர் சாரா”ன்னு சத்தமா சொல்ல, அவங்க விட்ட லுக்குலயே ரிஸல்ட் தெரிஞ்சுபோச்சு!!//

ஹா...ஹா..ஹா. சிரிச்சு முடியலை. மச்சானுக்குதான் லக்கு அடிச்சிருக்கு.
நம்ம அனுபவம் நாளைக்கு...

தமிழ் பிரியன் said...

சுவாரஸ்யம்! மச்சான் கல்யாணத்துக்கு முன்னாடியே போனில் பேசியும் ஏமாந்து இருக்காங்களே.. பாவம் ரொம்ப அப்பாவி போல இருக்கு.. ;-))

malar said...

ஹுஸைனம்மா அப்பம் நீங்க நாகர்கோயில் ஆளுன்னு சொல்லுங்க..

யார் அந்த அப்பாவி புரொஃபசர்...

ரொம்ப கிட்ட வந்த மாதிரி இருக்கு....

kavisiva said...

யாருப்பா அது எங்க ஊர்க் காரரை வம்பிழுக்கறது? பாவம் கல்யாணம் ஆக வேண்டிய பிள்ளை(?!). எங்க ஊர்த் தம்பிங்க எல்லாம் தங்க கம்பிகளாக்கும்.

ஹுசைனம்மா அப்போ நீங்க எங்க ஊர் மருமகளா? ஃபோன் பில் மேட்டர் சூப்பர். எங்க ஊர்க்காரர்கள் ரொம்ப விவரமாத்தான் இருப்போம். இல்லேன்னா அவர்வீட்டு பில்லுல்ல ஏறியிருக்கும்.

கோமதி அரசு said...

”பெண் காணல்” நிகழ்ச்சி ரொம்ப அருமை.

மாப்பிள்ளை வராமல் ஏமாற்றி விட்டாரே!

ஜெய்லானி said...

//“டேய், டேய், ரெண்டு கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!! //

இதாங்க உண்மையான அனுபவம்.

ஜெய்லானி said...

//இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)//

தான் மாட்டிகிட்டோமேங்கிற கவலையா இருக்கும்.

ஜெய்லானி said...

நல்ல வேளை தொடர் பதிவுன்னு நீங்களும் யாரையும் கூப்பிடாம விட்டீங்களே அதே போதும்..

இராகவன் நைஜிரியா said...

நானும் இந்த ஓட்டுப் பட்டை இல்லாததை கவனிக்கவில்லை. சாரி... இப்ப ஓட்டு போட்டுட்டேன்..

☀நான் ஆதவன்☀ said...

//வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!! //


:))))))))

இந்த மாதிரி எத்தனை பேர் பயமுறுத்தினாலும் நாங்க கேட்க மாட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ல :)

☀நான் ஆதவன்☀ said...

//வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!! //


:))))))))

இந்த மாதிரி எத்தனை பேர் பயமுறுத்தினாலும் நாங்க கேட்க மாட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ல :)

Adirai Express said...

//எங்க ஊர்ல பொதுவா ஊருக்குள்ளயேதான் சம்பந்தம் பண்ணுவாங்க. ரொம்ப அபூர்வமாத்தான் வெளியூர்ல பண்றது.//
எங்க ஊருலையும் இதே தாங்க

//எனக்குப் போரடிச்சுப் போய், நானே அவங்ககிட்ட அவங்க குடும்ப டீடெய்ல்ஸ் கேக்க ஆரம்பிச்சுட்டேன். அப்படியே நைஸா மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்க, அது எங்க காலேஜில பார்ட்-டைமா ஒரு மூணு மாசம் வேலை பாத்தவர்னு தெரியவர, நான் ஒரு ஆர்வக்கோளாறுல, “அட, மன்சூர் சாரா”ன்னு சத்தமா சொல்ல, அவங்க விட்ட லுக்குலயே ரிஸல்ட் தெரிஞ்சுபோச்சு!!//
தப்பிச்சாருய்யா அந்த மனுசன்,

//“டேய், டேய், ரெண்டு கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!! //
என்னத்த சொல்ல
------
பதிவுக்கான இமேஜ்(மேலே), நல்லா இருக்கு

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.....

ரொம்ப இயல்பான நடையில் சூப்பரா இருக்கு!

அதானே ....அந்த ப்ரொஃபஸர்க்கு உங்க அவரைக் கண்டால் பிடிக்காது போல. காத்திருந்து பழி வாங்கிட்டார் இல்லே:-)))))

எம்.எம்.அப்துல்லா said...

கலக்குறீங்க ஹூசைனம்மா.

புது இடுகை.

புது டெம்ப்ளேட்டு.

பிரம்மாதம்..

:)

கண்ணகி said...

சுவாரஸ்யமாச் சொல்றீங்க..

செந்தில்குமார் said...

செந்தில்குமாரின் வாழ்த்துகள்
நல்ல அனுபவம் அக்கா

நுலை போல சேலை தாயை போல பிள்ளை

இங்கே அது லேசாக உன்மை வெளிப்படுகிரது

Chitra said...

உங்கள் பிள்ளைகளின் கலாய்ப்பு ஒன்றே போதுமே..... உங்கள் வீடு எப்படி கலகலக்கிறது என்று நாங்கள் தெரிந்து கொள்ள. அருமையான பகிர்வுங்க.

மதார் said...

////நானே அவங்ககிட்ட அவங்க குடும்ப டீடெய்ல்ஸ் கேக்க ஆரம்பிச்சுட்டேன்///

நானும் இதையேதான் பண்ணேன் . திருநெல்வேலி ஸ்டேஷன்ல பொண்ணு பாக்க வராங்க . வந்தவங்க ஏதாவது பேசணும் .சும்மா உக்காந்து என் தலைமுடிய பார்த்துட்டு இருந்தாங்க . கூட வந்த மாப்பிள தம்பிகிட்ட அவர் அண்ணா பத்தி நானே விசாரிக்க ஆரம்பிச்சுட்டேன் . தம்பியே M .Sc யாம் அப்போ அண்ணா வயசு !!!!!!!! விடு ஜூட் அம்மாகிட்ட நானே வேண்டாம்னு சொல்லியாச்சு . எனக்கு நடந்த முதல் காமெடி இது இன்னும் எவ்வளவு நடக்குமோ ??????? ஹுஸைனம்மா உங்க ஸ்டோரி கலக்கல் . வாண்டுங்க காமெடி சூப்பர் .


அப்புறம் பொண்ணு தேடுற மாப்பிளைகளா நாகர்கோவில் பக்கம் போங்க . மலை, வீடு ,கார் இன்னும் உண்டு .

வல்லிசிம்ஹன் said...

நெல்லைக்காரங்கன்னு எப்படி நிருபிச்சுட்டீங்க ஹுசைனம்மா.
இப்படி வெளிப்படையாப் பேசியே ,
வாய் மெல்லறவங்களுக்கு அவலாயிடறோம் சில சமயம்.
மகா சூப்பர் காமெடி.
அது யாரு மன்சூர் சார்:)
அவருக்குக் கல்யாணமாச்சா:))) வெகு விறுவிறுப்பு.
பெண்காணலை நீங்க எழுதின மாதிரி நான் மாப்பிள்ளைகாணல் பதிவு மூணு வருஷம் முன்னாடி போட்டதை ''தேவதை'' பத்திரிகைக்காரங்க மார்ச் 15 இதழ்ல போட்டு இருக்காங்க.
ச்சும்மா ஒரு தம்பட்டம் தான்:)

ஜெயந்தி said...

உங்கள் எழுத்து நடை படிக்க சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.

கண்மணி/kanmani said...

நல்ல பகிர்தல்
டெம்ப்லேட் ப்ளீஸிங்

அன்புத்தோழன் said...

ஹ ஹ... எங்க ஊருலயும் ஊர்க்குள்ள தான் குடுப்பாங்க, எடுப்பாங்க பெரும்பாலும்... ஆனா எங்க குடும்பத்துல மட்டும் குடும்பத்த தாண்டி வெளிய போனதே இல்ல.... அதென்னவோ அப்டி தான் ஹுஸைனம்மா.... எங்க குடும்பத்துக்குள்ள ஒரு ஆண், ஒரு பெண்ணுன்னு combinationoda தான் பிறக்கும்... பெரும்பாலும் பொண்ண நாங்கல்லாம் சின்னதுலையே கரெக்ட் பண்ணிருவோம்... ஹி ஹி...

நீங்க சொல்றது ஒரு வித்யாசமா தான் இருக்கு கேட்க.... புது ஆளுங்க... புது உலகம்... ஹ்ம்ம்... நிறைய பேச வேண்டி இருக்கும், நிறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கும்... பட் எங்களுக்கு பெருசா வித்யாசம் ஒன்னும் தெரியாது.... சின்ன பிள்ளைலேருந்தே யாராவது குடும்பத்துல ஓட்டுவாங்க ஒரு பொண்ண சொல்லி... அப்போ சைட் அடிக்க ஆரம்பிக்கறது தான் அப்டியே டெவலப் ஆய்டும்.... ஹ ஹ....

கண்மணி/kanmani said...

//எப்பவும் மாசா மாசம், எழுநூறு, எண்ணூறுன்னு வர்ற பில், அந்த மாசம் ஐயாயிரம் ரூபாய் வந்திருந்துது!!//

ஐய்யே இப்படி பொழைக்கத் தெரியாம இருந்தீங்களா?மிஸ்டு கால் குடுத்திருக்கலாமில்ல?

அன்புத்தோழன் said...

//எனக்குத் தெரியாம எத்தனை பொண் பாக்கிற சம்பவங்கள் நடந்ததுன்னு தெரியல!! ஆனா, பாத்த யாருமே கேட்டு வரலங்கிறதுதான் விஷயமே!!//

அந்த அளவுக்கு இமேஜு டெவெலப் பண்ணி வெச்சுருந்திருகீங்க போல.... ஹ ஹ...

ஷாகுல் said...

// (இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)//

எப்படி மாட்டி விட்டுடாரு. இத விட final sem ல பெயில் ஆக்கிருக்கலாம்.

// “டேய், டேய், ரெண்டு கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!!//

அவ்வ்வ்வ்வ்! No comments

தொடர்ந்து அப்படியே இருங்க

அன்புத்தோழன் said...

//ரெண்டுபேரும் ஒண்ணுமே பேசாம, என்னைப் பாத்துகிட்டே சும்மா உக்காந்திருக்க, எனக்குப் போரடிச்சுப் போய், நானே அவங்ககிட்ட அவங்க குடும்ப டீடெய்ல்ஸ் கேக்க ஆரம்பிச்சுட்டேன்//

:-) இது ஒரு விதமான சைகாலஜி டெஸ்ட் ஹுஸைனம்மா... எங்கயோ படிச்ச ஞாபகம் வருது... பொறுமைய டெஸ்ட் பண்றதுக்கு சில பேரு இப்டி தான் பேசாம குறு குறுன்னு பாத்துட்டே இருப்பாங்களாம்...

நீங்க நம்ம கட்சியாச்சே.... எம்புட்டு நேரம் தான் சும்மாவே இருக்க முடியும்.... ஹ ஹ.... ஆனாலும் நீங்க சொன்ன....

//நான் ஒரு ஆர்வக்கோளாறுல, “அட, மன்சூர் சாரா”ன்னு சத்தமா சொல்ல, அவங்க விட்ட லுக்குலயே ரிஸல்ட் தெரிஞ்சுபோச்சு!!//

ச்சான்ஸே இல்ல.... ஹ ஹ ஹ....

ஷாகுல் said...

//அப்புறம் பொண்ணு தேடுற மாப்பிளைகளா நாகர்கோவில் பக்கம் போங்க . மலை, வீடு ,கார் இன்னும் உண்டு .//

எக்கா!ஐ யம் ஆல் சோ எலிஜிபில் பேச்சிலர். :))))))))

மின்மினி said...

ஹூசைனம்மா அக்கா, உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.

புதுகைத் தென்றல் said...

உங்க பசங்க கமெண்ட் சூப்பர் ஹுசைனம்மா

அன்புத்தோழன் said...

//எப்பவும் மாசா மாசம், எழுநூறு, எண்ணூறுன்னு வர்ற பில், அந்த மாசம் ஐயாயிரம் ரூபாய் வந்திருந்துது!! //

ரொம்ப கம்மியா பேசிருக்கீங்க.... ஹ ஹ... ஒ... 14 வருஷம் முன்னாடி இந்த அமவுன்ட்டா... ஆஹா.... சரி தான்.... ஆமா அவருக்கு எவ்ளோ வந்துச்சுன்னு சொல்லலியே.... :-)

அன்புத்தோழன் said...

//“டேய், டேய், ரெண்டு கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” //

இந்த பினிஷிங் டச் தான் ஹுஸைனம்மா உங்க பதிவுல... எவ்ளோ பெருசா படிச்சாலும் கடைசில எல்லார் முகத்திலும் சந்தோஷம் தவழ்ற மாதுரி ஒரு மேட்டர சொல்லி முடிச்சுருகீங்க... மொத்ததுல A1.... பையன் ரொம்ப வெவரம் தான்... :-)))

ராமலக்ஷ்மி said...

அருமையா எழுதியிருக்கீங்க:)! தலைப்பு சூப்பர்.

Anonymous said...

அருமை ஹுசைனம்மா

ஹுஸைனம்மா said...

வாங்க மின்மினி - நன்றி.

பிரதாப் - வாங்க. உங்க ஊர்க்காரவுங்களுக்கு புத்திசாலித்தனம்னு சொல்றதைவிட, ”பிழைக்கத் தெரிஞ்சவங்க”ன்னுதான் சொல்லணும். கொஞ்சம் மலையாளிகளின் பாதிப்பு உண்டு.

ராகவன் சார் - வாங்க. அதானே புலம்பறது கணவர்களின் வழக்கம்தானே!! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!! அப்புறம், நீங்க வந்து, பின்னூட்டங்கள் போடறதே சந்தோஷம். ஓட்டுப் போடலைங்கிறதைத் தவறா நினைக்கவே இல்லை சார்.

வாங்க கண்ணா - நன்றி. எப்பவும் பக்கபலமா இருக்கதுக்கும் நன்றி (பிரதாப்பைச் சமாளிக்கறதில). ஆனா, பாவம், பிரதாப் மறந்தாலும், நீங்க ஃபிலிப்பைன்ஸை ஞாபகப் படுத்திகிட்டே இருக்கீங்க போல. வேண்டாம், விட்டுருங்க.

அத்திரி - வாங்க; நன்றி கருத்துக்கு.

ஹைதர் - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

சுல்தான் பாய் - வாங்க; ஆமாங்க, அல்ஹம்துலில்லாஹ், ரொம்ப விவரமான பசங்க, வாப்பாவைப் போலவே!!

முத்துலெட்சுமி அக்கா - வாங்க; நன்றி. அடைப்புக்குறிக்குள் அகப்பட்டவங்க வீட்டுக்கு வீடு உண்டு போல!!

காதர் - வாங்க; நன்றி.

அண்ணாமலை சார் - வாங்க; நன்றி.

ஸாதிகாக்கா - வாங்க; அதெல்லாம் ஆளப்பாக்காம ஒத்துக்குவோமா? நாங்க பாத்துகிட்டதனாலத்தான் மேலே பேச்சுவார்த்தையே நடந்தது.

ஜலீலாக்கா - வாங்கக்கா; நன்றி. பிளாக் டிஸைன் நல்லாருக்காக்கா? சந்தோஷம்.

மேனகா - வாங்க; நன்றி பாராட்டுக்கு.

அக்பர் - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

அபுஅஃப்ஸர் - நன்றிங்க; ரசித்தது சந்தோஷம்.

இர்ஷாத் - வாங்க; முதல் வருகை!! நன்றி. தொடர்ந்து வாங்க.

சைவக் கொத்ஸ் - வாங்க. நன்றி.

துபாய் ராஜா - மச்சானுக்கு அடிச்சது லக்குன்னா சொல்றீங்க? நிஜமாவா? நன்றி.

தமிழ்ப்பிரியன் - வாங்க, நன்றி. மச்சான் அப்பாவியா, நீங்க நினைச்சுக்கணும்!!

மலரக்கா - வாங்க. ம்ஹூம், நான் தின்னவேலிக்காரிதான்; கட்டிகிட்டது நாகர்கோவில்காரரை; அவ்வளவுதான்!! அப்றம், அந்த புரஃபசருக்கு நாகர்கோவில் இல்லைக்கா, அதான் மாட்டிவிட்டுட்டார்!!

கோமதி அக்கா - வாங்க, நன்றி. மாப்பிள்ளையைத்தான் நான் முன்னாடியே பாத்துட்டேனே!!

ஹுஸைனம்மா said...

கவிசிவா - வாங்க, வாங்க. //எங்க ஊர்க்காரர்கள் ரொம்ப விவரமாத்தான் இருப்போம். இல்லேன்னா அவர்வீட்டு பில்லுல்ல ஏறியிருக்கும்// அது உண்மைதான்; நாங்கல்லாம் வெகுளி!!

ஜெய்லானி - வாங்க; நன்றி. பிள்ளைங்க ரொம்ப விவரம்தான். இந்தத் தொடர்பதிவுக்குக் கூப்பிட்டு, ஏன் எல்லாருக்கும் சோக நினைவுகளைக் கிளப்பி விடணும்னுதான்!!

ஆதவன் - பட்டுத்தான் திருந்துவேன்னா, என்ன செய்ய!! வாழ்த்துகள், சீக்கிரமே பட!! அதுவும் ரெண்டு தரம் பின்னூட்டதிலிருந்தே பதட்டமா இருக்கீங்கன்னு தெரியுது!!

அதிரை எக்ஸ். - நன்றிங்க. அவர் தப்பிச்சாரா? நாந்தான் அந்தக் கூட்டத்துலருந்து தப்பிச்சேன்!! படம், வழக்கம்போல கூகிள் தந்ததுதான்.

துளசி டீச்சர் - வாங்க, வாங்க, வராதவங்க வந்துருக்கீங்க, ரொம்ப சந்தோஷம். நன்றி பாராட்டுக்கு. நல்ல ஸ்டூடண்டா இருக்கப் போய்தான் ரெகமண்ட் செஞ்சிருக்காரு!!

அப்துல்லா - வாங்க, நன்றி. கலக்குறேனா? நம்புறேன்!! சந்தோஷமாருக்கு.

கண்ணகி - வாங்க; நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

செந்தில்குமார் - வாங்க; நன்றி. ஹலோ, எங்க வீட்டில “Like father, like Sons"தான்!!

சித்ரா- வாங்க; நன்றி பாராட்டுக்கு. ஆனா, to be honest, எங்க வீட்டில நான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பேன்; அவர்தான் இப்படி கலகலன்னு இருப்பார்.

மதார் - வாங்க. ஆமாங்க, எனக்கெல்லாம் சும்மா பேசாம இருக்கவே முடியாது. இதுல நம்மள உக்காத்தி வச்சு கொலுபொம்மை மாதிரி பாத்துகிட்டே வேற இருந்தாங்க. நல்லவேளை நான் மாட்டலைப்பா!!

ஆமா, நாகர்கோவில்ல பொண்னு எடுத்தா, லைஃப்ல செட்டில் ஆகிடலாம்; கேரளான்னா இன்னும் நல்லது, அதுக்கப்பறம் வேலைக்குக்கூடப் போகணுன்னு அவசியமில்ல!!

வல்லிம்மா - வாங்க, வாங்க. ஆமா, நெல்லைக்காரங்க படபடன்னு பேசிடுவோம். அந்த மன்சூர் சார் என்ன ஆனார்னு தெரியல அப்புறம். “தேவதை” இதழ் முறித்து நீங்க வேற என்கியோ எழுதியிருந்ததையும் பாத்தேன். அதை ஸ்கேன் பண்ணி உங்கப் பக்கத்துல போட்டா என்னை மாதிரி அந்தப் புத்தகம் வாங்காதவங்களுக்கும் படிக்க வசதியாருக்கும். (இந்த சம்பவம் நீங்க முன்னாடி உங்க பிளாக்ல எழுதியிருந்ததா இல்லை இது வேறயா?)

ஜெயந்தி - வாங்க; நன்றி. தொடர்ந்து வாங்க.

ஹுஸைனம்மா said...

கண்மணி - வாங்க; டெம்ப்ளேட் நல்லாருக்கா? பிங்க் கலர்னால, ரொம்ப யோசிச்சுதான் எடுத்தேன்.

அப்ப எங்கங்க மொபைல்? பீப்பர் (பேஜர்)கூட கிடையாது. அதுலயும் இவர் வட மாநிலங்கள்ல எஸ்.டீ.டீ. பூத் கூட இல்லாத, ஏதோ பெயர்தெரியாத கிராமங்கள்ல சுத்திகிட்டிருந்தார். அதனாலத்தான். பில் வந்தவுடனே சுதாரிச்சுட்டன்ல!!

ஹுஸைனம்மா said...

அன்புத் தோழன் - உங்க ஊர்க்காரங்களுக்குன்னு எப்படித்தான் காம்பினேஷன் செட் ஆகுதோ?? எங்க ஊர்ல சொந்தத்துல பண்ண ரொம்ப யோசிப்பாங்க. நல்லவேளை எனக்கும் இப்படி சின்ன வயசுல யாரையாவது சொல்லிவச்சிருந்தா, நிச்சயம் அவனும் ஓடிப்போய் சன்னியாசம் வாங்கிருப்பான்!!

என்னது, பேசாம சும்மா இருக்கது சைக்காலஜி டெஸ்டா? ஒருநாளும் என்னால இந்த டெஸ்டுல பாஸாக முடியாதுப்பா!!

ரொம்ப புகழ்றீங்க, பாத்து, எனக்கு குளிர்ஜுரம் வந்துடக்கூடாது!! (இல்லை, அதுக்குத்தான் சதி பண்றீங்களா?)

ஷாகுல் - விவரம் தெரிஞ்சுகிட்டீங்கள்ல, வீட்டில சொல்லி, நாகர்கோவில் பக்கம் பாக்கச் சொல்லுங்க!! //தொடர்ந்து அப்படியே இருங்க// என்னா நல்ல மனசு தம்பிக்கு!!

தென்றல் - வாங்க; நன்றி. பசங்க இப்படித்தான் என்னைக் கவுக்கறதுன்னா அப்படியொரு சந்தோஷம்; வாப்பாவோட டிரெய்னிங் அப்படி. ;-))

மின்மினி - விருதுக்கு நன்றி.

அம்பிகா said...

ஆஹா!
பெண் பார்க்கும் வைபவம் மிக அருமை
//இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)//
:-}}

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அழகான நகைச்சுவை இழையோடும் வரிகள்!! தொடருங்கள்!!!!

பகிர்வுக்கு நன்றி!!

ஸ்ரீராம். said...

திருமணமாகாத பதிவர்களெல்லாம் இந்தத் தொடர்பதிவை ஓடி ஓடி படித்து அனுபவம் தேடிக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

princerajan C.T said...

//இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)// நானும் நாகர்கோவில் தானுங்கோ

அன்புடன் மலிக்கா said...

பாவந்தான் அண்ணாதே படும்பாட்டை பையனே பாக்குறானே ஹும்

பில் எகுரும்போதே!நினைக்கவேனாமா அண்ணாத்தே இங்கயே இப்படின்னா அங்க எப்படியிருந்திருக்கும். சூப்பர்

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

thenammailakshmanan said...

அருமை -ஹுசைனம்மா கலக்கிட்டீங்க தோழி அப்புறம் இப்படியா எல்லார் வீட்டு விஷயத்தையும் போட்டு உடைப்பது :))

அநன்யா மஹாதேவன் said...

ஹுஸைன்னம்மா, நீங்க எழுதின அன்னிக்கே படிச்சுட்டேன். அதுல பாருங்க பின்னூட்டம் போடுற நேரத்துக்கு ஃபாண்ட் ஒர்க் பண்ணலை. அதான் பிரச்சினை. இப்போ சரிபண்ணிட்டேன்.

உங்க எழுத்து நடை சூப்பரு! உங்க எக்ஸ்பீரியன்ஸ் தூள்தான் போங்க!
எல்லாத்துக்கும் மகுடம் வெச்சாப்புல உங்கள் குழந்தைகளின் கமெண்ட்! கலக்கலோ கலக்கல்! தொடர் பதிவு எழுதினத்துக்கு நன்றி!

ஜெஸ்வந்தி said...

அருமையான இடுகை.இயல்பான நடை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நகைச்சுவையோட அருமையா சொல்லியிருக்கீங்க! புன்சிரிப்போட ரசிச்சேன்!! ஐயாயிரம் ரூபா கொஞ்சம் இல்ல - ரொம்பவே அதிகந்தான்!!