Pages

பனியில்லாத மார்கழியா? மழை இல்லாத பதிவர் சந்திப்பா?




  சென்ற வெள்ளிக்கிழமை ஷார்ஜாவில் ஆஸிஃப் மீரான் வீட்டில் நடந்த பட வெளியீடு மற்றும் பதிவர் சந்திப்புக்கு நானும், என்னவரும் போயிருந்தோம். பதிவில் மட்டுமே படித்திருந்த மற்றும் இதுவரை படித்திராத பல பதிவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

வீட்டு வாசலிலும், வீட்டினுள்ளும் சுவர்களே தெரியாமல் படத்தின் கலர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது வேட்டைக்காரனுக்கு வந்துவிட்டோமோ என்று நினைக்க வைத்தது.

ஜெஸீலாவும், கலைச்சாரல் மலிக்காவும் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை, விருந்தினர் வருகை போன்ற காரணங்களால் சஃபீனா, ஜலீலா, பிரியாணி நாஸியா ஆகியோர் வரமுடியவில்லை. அமீரகத்தில் வேறு பெண்பதிவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்).

உணவுக்குப்பின் பட ரிலீஸ் தொடங்கியது. உண்ட பிரியாணி, படத்தில் கடி அதிகமாக இருந்தால் தாங்கிக் கொள்ளும் தெம்பு தரும் அல்லது மொக்கையாக இருந்தால் தூக்கம் தரும் என்ற நம்பிக்கையுடன் வசதியாக ஸோஃபாவில் அமர்ந்துகொண்டோம். விருந்தினர்களான எங்களுக்கு ஸோஃபா டிக்கட்டும், விசில் அடித்து, கைதட்ட அழைத்து வரப்பட்டவர்களுக்கு தரை டிக்கட்டும் கொடுத்து நாங்களும் ஒரு பேரரசு-விஜய் கூட்டணிதான் என்று உணர்த்தினர் கீழை ராஸாவும், ஆஸிஃப் மீரானும். ரசிகர்களும் போட்ட பிரியாணிக்கு மேலேயே கைதட்டி, விஸிலடித்து நாங்களும் விஜய் ரசிகர்களுக்கு சளைத்தவர்களல்ல என்று நிரூபிக்கத் தவறவில்லை.  சில இடங்களில் வசனங்களே கேட்காத அளவிற்குப் போக, அண்ணாச்சி, வாத்தியார் போல டேய், உஷ் என்று அதட்டிய பிறகுதான் சத்தம் குறைந்தது!!

படம் அருமையாக இருந்தது. குத்துப் பாட்டும், ஸ்டண்டும் இல்லாத குறையே தெரியாமல் ஒரு முழுநீளக் காமெடிச் சித்திரம். அவற்றைச் சேர்த்துவிட்டால் உலக அரங்குகளிலேயே  வெளியிடலாம். (படம் பார்க்க இங்கே செல்லுங்கள்).

பட இயக்குனரான கட்டிடக்கலையாளர் (ஆர்க்கிடெக்ட்) கீழை ராஸாவிடம் திரைப்படக் கல்லூரியில் படித்தீர்களா என்று ஒருவர் கேட்க (இதெல்லாம் ரொம்ப ஓவர்), இன்னொருவர்  ஆர்கிடெக்ட் என்றாலும், இயக்குனர் என்றாலும் படம்  காட்டுவதுதான் வேலை. அதனால் தனிப்படிப்பு தேவையில்லை, அவரது வேலை அனுபவமே போதுமானது என்று “உண்மை”யை உரக்கச் சொன்னார்.

பிரியாணி பாத்திரம் எடுத்துப் போகும்போது “எங்கே செல்லும் இந்தப் பாதை” பாட்டு போட்டது நல்ல டைமிங் சென்ஸுக்கு ஒரு உதாரணம். பிரியாணியைப் பரிமாறக் கரண்டி எடுத்துச் செல்ல மறந்ததால், தண்ணீர் பாட்டில் கரண்டியாக உருவெடுத்தது புதுமை.


படத்தை உருவாக்கக் கடுமையாக உழைத்திருப்பது நன்றாகத் தெரிந்தது. படக்குழுவினர் எல்லாருக்குமே பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!  என்னவரும் மிக ரசித்துப் பாராட்டினார்.

 பிறகு பதிவர்கள் அறிமுகம் நடந்தது. நான் ஹுஸைனம்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டதும் எழுந்த ஆரவாரமும், கைதட்டலும் இளையதலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு என்முன்னே இருப்பதை எனக்கு உணர்த்தின. பின்னர்,  பினாத்தல் சுரேஷும், சென்ஷியும் என்னிடம் “நீங்க வர்றதை ஏன் முன்னாடியே சொல்லலை” என்று மீண்டும் மீண்டும் கேட்க,  அருகேயிருந்த ஆஸிஃப் அண்ணாச்சி, “சொல்லியிருந்தா மட்டும்?” என்று அவர்களிடம் கேட்டு, எனக்கென ஒரு கோஷ்டி காங்கிரஸ் உருவாகியிருக்கக் கூடிய சாத்தியத்தை முளையிலேயே கிள்ளினார். ஆனாலும், அழகாக இருகைகளால் கும்பிட்டு “வணக்கம் ஹுஸைனம்மா” என்று சொன்ன ஆதவனும்,  சிநேகமாய்ச் சிரித்த குசும்பனும் (நமபலாமா?), ”ஹுஸைனம்மா என்றவுடன் ஒரு வயதான, அதிக எடை கொண்ட ஒருவரை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே” என்ற மூத்தப் பதிவரும் எனக்கும் பதிவுலக அரசியலில் ஒரு எதிர்காலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையைத் தந்தார்கள்.  நாஞ்சில் பிரதாப், நான் வருவதாகச் சொன்னதால் பயந்து வரவில்லை போல. என்னவருக்குத்தான் ரொம்ப வருத்தம், அவருக்கென ஆதரவுக்குரல் கொடுக்கும் அவரது ஊர்க்காரரைச் சந்திக்க முடியவில்லையே என.

பின்னர் சிறப்பு விருந்தினரான திரு. ஜின்னாஹ் சர்புதீன் அவர்கள் உரையாற்றினார். தமிழின் பெயரால் மதங்களை மறந்து தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே ஒன்றுக்கூடி வாழ்வதைப் பெருமைபடுத்தினார். அவர் சுவைபடப் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பதிவர் சத்தமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தது நிரடலாக இருந்தது.

பதிவர் சந்திப்பென்பதால் மழை பெய்யுமோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு மழை பெய்யாதது ஆறுதலாயிருந்தது. ஆனால், நான் கிளம்பி அபுதாபி  வரும்போது  சொன்னார்கள், ஷார்ஜாவில் நல்ல மழை (படத்தைப் பாத்துட்டு இயறகையே கதறிடுச்சு) என்று. உடனே “நல்லார் ஒருவர் உளரேல்..”னு ஆரம்பிச்சிராதீங்க. இப்பல்லாம் மழை பெய்ஞ்சா நகரமே வெள்ளக்காடா மாறிப் போகிற  நிலவரப்படி, நாம இருக்கிற ஊர்ல மழை பெய்யலன்னாதான் நாம நல்லவங்க. அதனால நானும் நல்லவதான்!!

Post Comment

33 comments:

Prathap Kumar S. said...

சந்தடிசாக்குல ராஸாவை கலாய்ச்சுட்டீங்க... ரைட்டு

//வாத்தியார் போல டேய், உஷ் என்று அதட்டிய பிறகுதான் சத்தம் குறைந்தது!!//

வாத்தியாரு மாதிரியா... அண்ணாச்சி எங்ககெளுக்கெல்லாம் வாத்தியார்தான்...

என்னால வரமுடில...நீங்க வந்தீங்கன்னு நேத்து இஸ்மத் அண்ணன் பதிவை பார்த்தப்புறம்தான் தெரிஞசுது. அடுத்ததடவை சாரை மீட் பண்ணுறேன்.

அண்ணாமலையான் said...

அதனால நானும் நல்லவதான்!!”
ரொம்பவே...

SUFFIX said...

//படத்தின் கலர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன//

ஹா..ஹா.. நீங்க உள்ளே நுழையும்போதா அத ஒட்டணும்?

//அவரது வேலை அனுபவமே போதுமானது என்று “உண்மை”யை உரக்கச் சொன்னார்.//

அடுத்த சந்திப்புக்கு உங்களுக்கு அழைப்பு வரும்னு நினைக்கிறீங்க?

SUFFIX said...

//பிறகு பதிவர்கள் அறிமுகம் நடந்தது. நான் ஹுஸைனம்மா//

நடத்திய இவ்ளோ லொல்லுக்கு அப்புறமும், அறிமுகப்படுத்தி தான் தெரின்ஞ்சக்கணுமா?

SUFFIX said...

//தமிழின் பெயரால் மதங்களை மறந்து தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே ஒன்றுக்கூடி வாழ்வதைப் பெருமைபடுத்தினார்//

பாராட்ட வேண்டிய கருத்து, தொடருட்டும் இது போன்ற நல்ல நட்புகள்.

SUFFIX said...

Well done!! நல்ல observe செய்து அருமையாக எழுதியிருக்கிங்க‌. பாராட்டுக்கள்.

கண்ணா.. said...

//ஸோஃபா டிக்கட்டும், விசில் அடித்து, கைதட்ட அழைத்து வரப்பட்டவர்களுக்கு தரை டிக்கட்டும் கொடுத்து //

இதுக்குத்தான் நான் கலைட்ட படிச்சு படிச்சு சொன்னேன்..

”பிரியாணி போடுறாங்ன்னா ’ஆ’ ன்னு வாயை பொளந்துட்டு போகாதேன்னு..”


இப்போதான பிரியுது அவனை எதுக்கு கூட்டுருக்காங்கன்னு..


மற்றபடி நான் நிறைய நண்பர்களை சந்திப்பதை மிஸ் பண்ணிட்டேன்..

அடுத்த முறை பார்க்கலாம்

SUFFIX said...

//கமெண்ட் வழியா வைரஸும் அனுப்பித் தர்றாங்களாம் இலவசமா..அதனால உஷாராயிட்டம்ல..//

இந்த டிப்ஸ மீட்டிங்கல சொன்னிங்களா..ஹீ..ஹீ?

S.A. நவாஸுதீன் said...

அருமையான சந்திப்பு, அழகா எழுதியிருக்கீங்க.

////விருந்தினர்களான எங்களுக்கு ஸோஃபா டிக்கட்டும், விசில் அடித்து, கைதட்ட அழைத்து வரப்பட்டவர்களுக்கு தரை டிக்கட்டும் கொடுத்து நாங்களும் ஒரு பேரரசு-விஜய் கூட்டணிதான் என்று உணர்த்தினர் கீழை ராஸாவும், ஆஸிஃப் மீரானும்.////

ஹா ஹா ஹா. இதுக்கு என்ன எஃபெக்ட்டுன்னு தரைடிக்கெட் மக்கள் கமெண்ட் வந்தாதான் தெரியும்.

////திரு. ஜின்னாஹ் சர்புதீன் அவர்கள் உரையாற்றினார். தமிழின் பெயரால் மதங்களை மறந்து தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே ஒன்றுக்கூடி வாழ்வதைப் பெருமைபடுத்தினார்.////

உண்மைதான். இதுதான் இந்த பதிவுலகத்தின் மிகப்பெரிய வெற்றி.

நாஸியா said...

என்னடா வெள்ளிக்கிழமை சந்திப்பை பத்தி இன்னும் ஒண்ணும் காணலியேன்னு பாத்தேன்.. ரொம்ப நல்லா இருந்திருக்கும்போல.. எங்க வீட்டுல உள்ளவங்கள நச்சரிச்சிருக்கனுமோ.. :(
ஆகா மிஸ் பண்ணிட்டேனே!!

கிளியனூர் இஸ்மத் said...

”ஹுஸைனம்மா என்றவுடன் ஒரு வயதான, அதிக எடை கொண்ட ஒருவரை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே”

உண்மையா.. வயசான ஒரு அம்மா வருவாங்கன்னு தான் பார்த்தோம்....எங்களை ஏமாத்திட்டீங்களே.

அ.மு.செய்யது said...

தினமலர் முதல் பக்கத்தில் செய்தி:

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3807&Country_name=Gulf&cat=new

சார்ஜாவில் அமீரகத் தமிழ் பதிவர்கள் பட வெளியீடு.

எப்படியெல்லாம் பில்டப் கொடுக்கிறாய்ங்கப்பா ??? அவ்வ்வ் !!!

ஷாகுல் said...

பேசாமல் நீங்களே தொகுத்து வழங்கியிருக்கலாம். நல்லாயிருக்கு.

எல்லாரையும் ஓட்டி இருக்கீங்க. அடுத்த தடவை உங்கள ஓட்டாம இருந்தா சரி.

கீழை ராஸா said...

//நாங்களும் ஒரு பேரரசு-விஜய் கூட்டணிதான் என்று உணர்த்தினர் கீழை ராஸாவும், ஆஸிஃப் மீரானும்.//
நல்ல ஒப்பீடு...உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு...

//ரசிகர்களும் போட்ட பிரியாணிக்கு மேலேயே கைதட்டி, விஸிலடித்து நாங்களும் விஜய் ரசிகர்களுக்கு சளைத்தவர்களல்ல என்று நிரூபிக்கத் தவறவில்லை. சில இடங்களில் வசனங்களே கேட்காத அளவிற்குப் போக//

நீங்க என்ன ஆர்ட் பில்மா பார்க்க வந்தீங்க ரசிகர் காட்சின்னா அப்படித்தான் இருக்கும்..:-))

//என்னவரும் மிக ரசித்துப் பாராட்டினார்.//

இது போதும் எங்களுக்கு...

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னமா. என்னடா டிரெங்கு பெட்டிய இன்னும் திறக்கலையேன்னு நினைச்சேன்..

நல்லவேலை முகத்தை மூடிக்கிட்டு வந்தேன் இல்லைன்னா எல்லாரும் எழுந்து ஓடிப்போயிருப்பாங்க இல்ல ஹுசைன்னமா..

அட்டகாசம் அசத்தல் பதிவர்கூட்ட சந்திப்பு. மிகுந்த மகிழ்வு..

சென்ஷி said...

//நல்லார் ஒருவர் உளரேல்//

நல்லார் ஒருவர் உளறேல் :)

சென்ஷி said...

//ஹுஸைனம்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டதும் எழுந்த ஆரவாரமும், கைதட்டலும் இளையதலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு என்முன்னே இருப்பதை எனக்கு உணர்த்தின//

பேமெண்ட் இன்னும் வந்து சேரலை ;)

Jazeela said...

எல்லாத்தையும் சரியாவே கவனிச்சிருக்கீங்க. ஆனா படம் ஆரம்பிக்க போறாங்க வாங்க என்றதற்கு நீங்களும் மலிக்காவும் தயங்கியதும் நான் பயந்தே போயிட்டேன். வெளிப்படையா ‘பதிவர் படம் பார்க்க தானே வந்திருக்கீங்க’ என்று நான் கேட்டதும் நீங்க தயங்கிய படி வந்தீங்க இல்லாட்டி இதையெல்லாம் பார்த்திருக்க முடியுமா இல்லாட்டி இப்படியான பதிவுதான் வந்திருக்குமா? பதிவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியமென்று எழுதியிருக்கீங்க ஆனா அங்க வந்த போது அவர்களாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்டவர்களை புன்முறுவலோடு அப்படியான்னு கேட்டுக்கிட்டீங்களே தவிர இது யார் அது யாரு என்று கேட்கும் ஆர்வத்தை நான் பார்க்கவில்லையே?

சந்திப்பில அமைதியா உட்கார்ந்துட்டு போய்ட்டு இப்போ விஜய் கூட்டணியாம், கோஷ்டி காங்கிரஸாம் - ஆஹா உங்கள பார்த்த மாத்திரத்தில் நம்பக் கூடாதுன்னு புரியுதுங்க. அதெப்படி இஸ்மத் அண்ணனை பார்த்ததும் மிக சரியாக அவர் வயதை வைத்து ‘மூத்த பதிவர்’ என்று தைரியமா எழுதிட்டீங்க :-). வாழ்த்துகள்.

☀நான் ஆதவன்☀ said...

////ஸோஃபா டிக்கட்டும், விசில் அடித்து, கைதட்ட அழைத்து வரப்பட்டவர்களுக்கு தரை டிக்கட்டும் கொடுத்து //

அவ்வ்வ்வ் வயசானவங்களுக்கெல்லாம் ஸோஃபாவுல உட்கார இடம் கொடுங்கன்னு சொன்னனால தானே எல்லாரும் கீழையே உட்கார்ந்தாங்க :)

//அழகாக இருகைகளால் கும்பிட்டு “வணக்கம் ஹுஸைனம்மா” என்று சொன்ன ஆதவனும்//

:)

அபுதாபியில் இருந்து சார்ஜா வந்து விழாவை சிறப்பித்தமைக்கு நன்றி :)

ஷங்கி said...

எழுத்து, எள்ளலுடன் அருமையாக இருக்கிறது.

செ.சரவணக்குமார் said...

அருமை ஹீஸைனம்மா, கலக்குறீங்க.

ஹுஸைனம்மா said...

//ஜெஸிலா Says:

படம் ஆரம்பிக்க போறாங்க வாங்க என்றதற்கு நீங்களும் மலிக்காவும் தயங்கியதும்//

மலிக்கா தயங்கியதால், அவருக்கு கம்பெனி கொடுத்து, அதனால் படத்தை மிஸ் பண்ணி விடுவோமோ என்று கவலையில் நான் நின்றது உங்களுக்கு தயக்கமாகத் தெரிந்தது.

//இது யார் அது யாரு என்று கேட்கும் ஆர்வத்தை நான் பார்க்கவில்லையே?//

பலரையும் சுற்றுலாப் பதிவில் பார்த்திருந்தேன். அதோடு நான் வரும் முதல் சந்திப்பு. அதனால் அடக்கி வாசித்தேன்.

//ஆஹா உங்கள பார்த்த மாத்திரத்தில் நம்பக் கூடாதுன்னு புரியுதுங்க.//

என்னை மட்டுமல்ல; யாரையுமே!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜஸீலா.

அப்துல்மாலிக் said...

ஆகா தடாலடி அதிரடி விமர்சன‌

நானும் கலந்துக்கிட்டதில் மிக்க மகிழ்ச்சி

Anonymous said...

//இளையதலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு என்முன்னே இருப்பதை எனக்கு உணர்த்தின. //

ஆவ்வ் , ஹுசைனம்மா, பயங்கர பில்டப்பா இருக்கு :)

ஸாதிகா said...

ஹுசைனம்மா,ஒரு வழியாக பதிவர் சந்திப்புக்கு வெற்றிகரமாக சென்றுவந்ததை அழகாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

தராசு said...

கலக்குங்க

பாத்திமா ஜொஹ்ரா said...

??????????

தாரணி பிரியா said...

//இளையதலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு என்முன்னே இருப்பதை எனக்கு உணர்த்தின. //

ஆஹா இளைஞரணி தலைவி வாழ்கன்னு சொல்லிடலாமா :)))

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா நல்ல தெளிவாக எழுதி விட்டீர்கள், இதை படித்ததே போய் வந்த மாதிரி இருக்கு.


டேஸ்டி பிரியாணி என்று கேள்வி பட்டேன், கடைசில பிரியாணி போட்ட அண்ணாச்சி தோசைய ஆர்டர் செய்து சாப்பிட்டதா கேள்வி.




//தினமலர் முதல் பக்கத்தில் செய்தி:

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3807&Country_name=Gulf&cat=new///

அ.மு.செய்யத் நெசமா சொல்றீங்க அதுக்குள்ள தினமல்ர் முதல் பக்கத்தில் போட்டுட்டாஙகளா?

ஹுஸைனம்மா said...

//அ.மு.செய்யத் நெசமா சொல்றீங்க அதுக்குள்ள தினமல்ர் முதல் பக்கத்தில் போட்டுட்டாஙகளா?//

ஜலீலாக்கா, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே. அது தினமலர் முதல் பக்கமெல்லாம் இல்லை. தினமலரில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நிகழ்ச்சிகளின் பக்கத்தில் வந்திருக்கிறது, அதுவும் இணைய இதழில் மட்டும்தான் வரும்.

"உழவன்" "Uzhavan" said...

உலகெங்கும் நடக்கும் தமிழ் இணைய எழுத்தாளர்களின் சந்திப்பு கண்டு மகிழ்ச்சி :-) தொடரட்டும்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

//இளையதலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு என்முன்னே இருப்பதை எனக்கு உணர்த்தின. //

நடத்துங்க ;)

கீழை ராஸா said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
//இளையதலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும்பொறுப்பு என்முன்னே இருப்பதை எனக்கு உணர்த்தின. //

நடத்துங்க ;)//

அமிர்தவர்ஷினி அம்மா இவ்வளவு அப்பாவியா இருக்கீயளே..?
ஹுசைனம்மா பதிவுலகத்திற்கு "குழந்தை" அவங்கதான் அப்படி சொல்லுறாங்கன்னா நீங்களும் அதை நம்பிக்கிட்டு...ஹய்யோ ஹய்யோ...:-))