Pages

சுரங்கமே வீடாக..




 
 
தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் அமைந்துள்ள பல்வேறு தாமிரம், தங்க சுரங்கங்களில் ஒன்றான ஸான் எஸ்டீபன் சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான சுரங்கத்தில் ஆகஸ்ட் 5 அன்று நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வழிகள் அடைக்கப்பட்டதால், அதனுள்ளே 2300 அடி ஆழத்தில் பணியில் இருந்த 33 பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டதில், 17 நாட்கள் கடந்த நிலையில் அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் 22 அன்று அவர்கள் உயிரோடு இருப்பதை அறிந்த போது, அவர்களின் உறவினர்களோடு, உலகமும் உற்சாகமடைந்தது.

சுரங்கத்தில் அவசரத் தேவைக்கென வைத்திருந்த 2 நாளுக்கான உணவை, 33 பேரும் 17 நாட்கள் கட்டுப்பாட்டோடு பகிர்ந்து உண்டதில் பிழைத்து இருந்தனர்!! சுரங்கத்தில் அவர்கள் இருக்கும் இடத்தில் 2 கி.மீ. பரப்புக்கு புழங்குவதற்கு இடம் இருந்தாலும் பாதுகாப்பு கருதி 50 ச.அடி. உள்ள பாதுகாப்பான இடத்தில் குழுமி இருக்கின்றனர்.  தம்மில் ஒருவரை குழுத் தலைவராகக் கொண்டு, அவரது ஆலோசனைகளின்படி கட்டுக்கோப்பாக நடந்து கொண்டுள்ளனர்.


 www.bbc.co.uk

இப்போதான் கண்டுபிடிச்சாச்சே, வெளியே வந்துடலாமேன்னு நினைக்கிறீங்களா? ம்ஹூம்.. அதுக்கு இன்னும் 3 - 4 மாதங்களாகும்!! 2300 அடி (700 மீ) ஆழத்திலிருக்கும் அவர்கள் வெளிவர இருந்த ஒரே வழியும் அடைபட்ட நிலையில், அவர்களின் இருப்பைக் கண்டுபிடிக்க போடப்பட்டது 12 செ.மீ. அளவுள்ள துளை மட்டுமே. அவர்கள் வெளிவருமளவு பெரிதாக துளையிடுவதென்பது சாமான்ய காரியமில்லை. கல்லைக் குடைந்து, வரும் தடங்கல்களைக் கடந்து பாதை ஏற்படுத்த இந்தக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதறகான வேலைகள் துவங்கப்பட்டு விட்டாலும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் முன்னிருக்கும் கவலை, அதுவரை சுரங்கத்தில் இருப்பவர்களை உடல்நலத்தோடும், மனநலத்தோடும் வைத்திருப்பது!!

ஆமாம். மீட்பு நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டினாலும், அனல் தெறிக்கும் பாலைவனத்தில் இருக்கும் சுரங்கத்தில், வெளியுலகத் தொடர்பு இல்லாமல், இனியொரு அசம்பாவிதமும் நேராமல் இருக்க வேண்டுமே என்ற பயத்தோடு, வெப்பமான சூழ்நிலையில் நான்கு மாதங்கள் அவர்கள் இருக்க வேண்டுமே? அதற்குமுன் சீனாவில் ஏற்பட்ட ஒரு சுரங்க விபத்தில், அதன் பணியாளர்கள் கரியைத் தின்று, கலப்பட நீரைக் குடித்து 25 நாட்கள் வரை உயிரோடிருந்தனர்.  இவர்கள் அந்த சாதனையையும் முறியடித்து விட்டார்கள்.

தற்போது, முதலில் போட்ட துளையைப் போன்று, மேலும் இரு துளைகள் போடப்பட்டுள்ளன. ஒன்று, அடர்த்தியான ஆக்ஸிஜன் அனுப்ப, இன்னொன்று வீடியோ தொலைத்தொடர்புக்கு. முதலில் போட்ட துளை வழியாக, அவர்களுக்குத் தேவையான மருந்துகள், உடை, பாய் போன்ற தேவைகள், உணவுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் இருக்கும் முக்கிய சவால், துளையின் சிறிய அளவு (12 செ.மீ.) காரணமாக, எதை அனுப்பினாலும் அதை விட சிறிய அளவில் செய்து அனுப்ப வேண்டும்!! அதற்கெனவே நிபுணர்களை அமர்த்தியிருக்கிறது அரசு!! இவர்களது நிலை, விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பவர்களின் நிலையை ஒத்திருப்பதால், நாஸாவும் ஆலோசனை வழங்க தனது உறுப்பினர்களை அனுப்பி வைத்துள்ளது!!

www.bbc.co.uk

பாலும், குளுக்கோஸும் மட்டுமே உண்டு வந்த அவர்களுக்கு, இன்று முதல் முறையாக சோறு, மட்டன், சிக்கன் போன்றவை அவர்களுக்கு அனுப்பப்படது!! (படத்தில் காண்க).

அவர்களின் உடல்நலத்தைப் பேண, அவர்களுக்கு முதல் கட்ட நடவடிக்கையாக டெட்டனஸ் மற்றும் டிப்தீரியாவுக்கான தடுப்பூசிகள், அவர்களில் ஒருவரைக் கொண்டு எல்லோருக்கும் போடப்பட்டுள்ளன. வெப்பம் காரணமாக சிலருக்கு தோல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதற்கான மருந்துகளும் தரப்பட்டுள்ளன. மேலும் ஆலோசனைகளும், மருந்துகளும், க்ளுகோஸும் கொடுக்கப்பட்டுள்ளன.

www.guardian.co.uk

அவர்கள் உற்சாகமாக, உத்வேகமாக இருந்தால்தான் இந்த நாலுமாத காலத்தை அவர்களால் மனநல பாதிப்பு ஏதுமில்லாமல் கடந்து வர முடியும். அதற்கான முயற்சிகளாக, மனநல மருத்துவர்கள் அவர்களுடன் உரையாடவும், குடும்பத்தினருடன் தினமும் பேசவும் தொலைத்தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு அட்டைகள், பைபிள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறு உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, மேலும் நிலச்சரிவு ஏற்படாமல் இருப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் போன்ற வேலைகளை, அவர்கள் தம்மைக் குழுக்களாகப் பிரித்துக் கொண்டு,  பகிர்ந்து செய்கின்றனர்.

www.bbc.co.uk

இதனிடையே, பெரிய துளை தோண்டும் திங்களன்று வேலையும் தொடங்கி, ஒரு நாளைக்கு 20மீ என்ற அளவில் நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு குறுகிய துளையிட்டு, பின் அதனை அகலமாக்கி, அதன் வழியே ஒரு கூண்டு ஒன்றை அனுப்பி, ஒவ்வொருவராக வெளியேற்ற திட்டம்.  துளையிடும்போது, டிரில் பிட் உடைவது போன்ற வேறு தடங்கல்கள் வராமல் இருக்க வேண்டும் என்பதோடு,  மேலும் நிலச்சரிவு ஏற்படுத்தாத வகையிலும், உள்ளிருப்பவர்களுக்கு பாதிப்பேற்படுத்தாத வகையிலும் செயல்படவேண்டிய கட்டாயத்தில் மீட்புப் படையினர் உள்ளனர். எனினும் உள்ளே விழும் மணல், கற்களை உள்ளிருப்பவர்கள் அகற்ற வேண்டியதிருக்கும்.

இதற்கு நாலு மாதங்கள் ஆகும் என்பது இன்னும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை!! எனினும், சில நாட்களில் பக்குவமாகத் தெரிவிக்கப்படுமாம். வெளியே இருக்கும் மீட்புப் படையின் உழைப்பு மட்டுமின்றி, உள்ளே சிக்கியவர்களின் முழு ஒத்துழைப்பும் வெற்றிக்குத் தேவைப்படுவதால், இது அனைவரின் கவனத்தையும், கவலையையும் ஈர்த்துள்ளது. எல்லாம் இனிதே நடக்கப் பிரார்த்திப்போம்.

 

Post Comment

28 comments:

தமிழ் உதயம் said...

படித்த செய்தி ஒன்றை, அத்தோடு மறந்து விடாமல், அதை பதிவிட்டமைக்கும், பாதிக்கப்பட்டோருக்காக பிராதித்தமையும் மனதை நெகிழ்வடைய செய்தது. பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா

நட்புடன் ஜமால் said...

வல்ல ஏகனிடம் பிரார்த்திப்போம்

இன்ஷா அல்லாஹ்

Prathap Kumar S. said...

//டித்த செய்தி ஒன்றை, அத்தோடு மறந்து விடாமல், அதை பதிவிட்டமைக்கும், பாதிக்கப்பட்டோருக்காக பிராதித்தமையும் மனதை நெகிழ்வடைய செய்தது. பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா//

ரிப்பிட்டே.....
இது மனிதனுக்கும் இயற்கைக்குமான போட்டி...நல்லதேநடக்கட்டும்

சுந்தரா said...

இன்னும் நாலுமாதம் ஆகுமா??!

பத்திரமாக எல்லாரும் திரும்பிவரப் பிராத்தனைசெய்வோம்.

Menaga Sathia said...

அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்திப்போம்..பகிர்வுக்கு நன்றி ஹூசைனம்மா!!

முகுந்த்; Amma said...

Good post, When I read the story, I also felt very sorry for the miners. Hope they will come back safely home.

வடுவூர் குமார் said...

என்னை மிகவும் உலுக்கிய நிகழ்வு இது.தொலைக்காட்சியில் காட்டிய போது மிகவும் டென்ஷன் ஆனேன்.
நானும் ஒரு முறை சுரங்கத்தில் வேலை பார்த்திருப்பதால் அங்கு என்ன நிலமை என்று ஓரளவு தெரியும்.தரைக்கு கீழ் ஓரளவுக்கு மேல் போனாலே ஒரு இனம் தெரியாத அழத்தம் இருக்கும்.
4 மாதம் என்றவுடனே குப் என்று வேர்க்க ஆரம்பித்துவிட்டது.

Chitra said...

I read about this news. It is an interesting situation and it is amazing to know how they are handling it.

கோமதி அரசு said...

ஹீஸைன்ம்மா,33 பணியாளர்கள் இறைவன் அருளால் நல்லபடியாக வெளியே வந்து அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

கூட்டு பிரார்த்தனையில் நலமாக வருவார்கள்.

நோன்பு நாளில் அடுத்தவர்களுக்காக செய்யும் பிரார்த்தனை நிச்சியம் பலிக்கும்.

பகிர்வுக்கு நன்றி.

Thamiz Priyan said...

இறைவனின் கிருபையால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

Thenammai Lakshmanan said...

இறைவன் அருளால் சீக்கிரம் வழி கிடைக்க வேண்டும்.. எந்தத்தடங்கலுமில்லாமல் மன நலத்தோடு அவர்கள் திரும்ப வேண்டும் என்ற் ப்ரார்த்திப்போம் ஹுசைனம்மா..

ரமேஷ் சொன்ன பாராட்டுத்தான்.. பதிவிட்டமைக்கு நன்றீ

சிநேகிதன் அக்பர் said...

நலமுடன் அவர்கள் வெளி வர நம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம். வல்ல இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக.

பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடவுளே.. எல்லாரும் நல்ல படியா திரும்பி வரணுமே..

ராஜவம்சம் said...

படிக்கும் போதே பக்குன்னு இருக்கு நலமுடன் மீட்டெடுக்க இறைவனைப்பிரார்திப்போம்
பகிவுக்கு நன்றி.

GEETHA ACHAL said...

சீக்கிரமாக அவர்கள் வெளிவர வேண்டும் என்று வேண்டி கொள்வோம்...பகிர்வுக்கு நன்றி...

நாடோடி said...

4 மாத‌ம் ஆகும் என்று சொல்லும் போது தான் கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌மாக‌ இருக்கிற‌து.. எல்லாம் ந‌ல்ல‌தாக‌ ந‌ட‌க்க‌ வேண்டுவோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிரார்த்திப்போம் பதிவிட்டமைக்கு
நன்றி ஹுஸைனம்மா

பவள சங்கரி said...

பத்திரமாக அனைவரும் திரும்பி வர பிரார்த்திப்போம்..... பகிர்வுக்கு நன்றிங்க......

ஸாதிகா said...

படிக்கவே கலக்கமாக இருக்கின்றது.இறைவன் இவர்கள் அனைவரையும் காப்பாற்றி,நலமுஇடன் திரும்ப அனைவரும் பிரார்தனை செய்வோம்.

ரிஷபன் said...

அவர்கள் பத்திரமாகத் திரும்பி வர பிரார்த்தனையுடன்.

மனோ சாமிநாதன் said...

படிக்கும்போதே கலக்கமாகவும் திகிலாகவும் இருக்கிறது. இந்த பயங்கரத்தை அனுபவிக்கும் அவர்களுக்கு எப்படி இருக்கும்! இதுவரை இருந்த மன தைரியம்தான் இனி வரும் நாட்களுக்கும் வழி காட்ட வேண்டும்!

நல்ல பதிவு இது ஹுஸைனம்மா!

pudugaithendral said...

என்னுடைய பிரார்த்தனைகளும்

கிளியனூர் இஸ்மத் said...

அவர்கள் மீண்டுவருவதற்கு பிரார்த்திப்போம்....இதை பகிர்ந்தமைக்கு நன்றி.!

ஜெய்லானி said...

அவர்கள் இடத்தில் நம்மை நினைத்து பார்த்தால் ....நினைக்கவே நடுங்குகிறது..நலமாக வர எனது பிராத்தனையும்....!!!

எம் அப்துல் காதர் said...

நிச்சயமாய் நலமுடன் அனைவரும் வெளியே வருவார்கள்.. வரணும்!! என்றே வல்லவனை வேண்டுவோம்!!

அன்புத்தோழன் said...

இப்படி ஒரு சூழலிலும் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட்டு ஒற்றுமையாக செயல்படும் அவர்களின் பண்பு மிகச்சிறந்த முன்னுதாரணம்... எஞ்சிய நாட்களிலும் இறைவன் அவர்களுக்கு இதே ஒற்றுமை உணர்வையும், மனோதிடத்தையும் அளித்து, பாதுகாப்பாக இச்சோதனையில் இருந்து மீண்டு வர உதவி புரிவானாக.... தெளிவான விளக்கப்படத்துடன் பதிவிட்டமைக்கு நன்றி ஹுஸைனம்மா.....

அன்புடன் மலிக்கா said...

அனைவரும் நலமுடன் இருக்க வல்ல ஏகனிடம் பிரார்த்திப்போம்..

ஹுஸைனம்மா said...

கருத்துரைத்து, பிரார்த்தனையும் செய்யும் எல்லாருக்கும் நன்றி. நிச்சயம் நல்லதே நடக்கும் என நம்புவோம்.