Pages

டிரங்குப் பொட்டி - 19

சில நாட்களுக்குமுன் ஒரு அமீரகச் செய்தித்தாளில், வாசகர் ஒருவர் ஒரு பெரிய  ஹோட்டலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருந்தார். அதாவது, அவர் முழு சைவமாம். ஹோட்டலில் நடந்த ஆஃபீஸ் பார்ட்டியின்போது,  சைவ, அசைவ சமோசா இரண்டையும் ஒரே ப்ளேட்டில் வைத்துப் பரிமாறினார்களாம். சர்வரைக் கூப்பிட்டுக் கேட்டபோது, இரண்டையும் ஒரே எண்ணெயில் பொறிக்கும்போது, ஒரே ப்ளேட்டில் வைப்பதில் என்ன தவறுன்னு திருப்பிக் கேட்டாராம். முன்பே கேட்டுக் கொள்ளப்பட்டாலொழிய, தனி எண்ணெயில் பொறிப்பதில்லையாம்!! எல்லா ஹோட்டல்களிலும் இப்படித்தானா என்று தெரியவில்லை.  சரியாகவும் படவில்லை. அசைவ ஹோட்டல்களில் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் உண்டே? இங்கேயே இப்படின்னா, இந்தியாவில்?

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

கூகிள் பிளஸ்ஸைத் திறந்துவிட்டாலும் விட்டார்கள், தினமும் அதிலிருந்து, “இன்னார் உங்களைச் சேர்த்துக் கொண்டார்” என்று தவறாமல் ஐந்தாறு “added you" மெஸேஜ் வந்துவிடுகிறது. இவர்களில் யாரையும் அறிந்திருக்கவுமில்லை. ஒவ்வொருவராக ஆராய்ந்துகொண்டிருக்கவும் முடியவில்லை. ஃபேஸ்புக்கிலாவது “friend request"தான் வரும்.  ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் நம் விருப்பம். முன்பு, “LinkedIn, Quepasa" போன்ற தளங்களிலிலிருந்து அனுப்புனரின் அனுமதியில்லாமலேயே “Invited"னு  ஸ்பாம் மெயில்கள் வரும். இப்போ இது!! ”ஙே”னு நான்!!

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
துபாயில், மக்களின் கவனத்தை ஈர்த்து, நகரைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்யும் ஒரு புதின முயற்சியாக, குப்பைத் தொட்டிகளின்மீது அழகிய வண்ணக் காட்சிகளை தீட்டி வைத்துள்ளார்கள்.  இப்படியெல்லாம் செய்துதான், நம் கடமையைச் செய்ய வைக்க வேண்டியிருக்கிறது என்பது வருத்தமானது என்றாலும், அப்படியாவது மக்கள் மாறிடமாட்டாங்களான்னு ஒரு ஆசை.  தொட்டதுக்கெல்லாம் அபராதம் விதிக்கும் துபாய் நகராட்சியின் இந்த மென்மையான அணுகுமுறை ஆச்சர்யம் தந்தாலும், இதுக்கும் அபராதம் விதிக்கப்படும்னு அறிவிச்சிருந்தா கண்டிப்பாக் கூடுதல் பலன் இருந்திருக்கும்!! குப்பைத் தொட்டிக்கு ஆன பெயிண்ட் செலவும் மிச்சமாகியிருக்கும் இல்லையா? முதல்ல, இவ்ளோ ‘அழகான’ குப்பைத் தொட்டியில் குப்பை போட மனசு வருமா?

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

அமீரகத்தில் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் இளைய தலைமுறையின் அதிவேகம்தான்னு இன்னொரு முறை நிரூபித்துள்ளது, அடுத்தடுத்த நாட்களில் இறந்திருக்கும் இரு கால்பந்துவீரர்களின் மரணம். அமீரக அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்கள் இருவரும். இதில், சமீபத்தில் “back heel penalty kick"  என்ற முறையில் பின்னங்காலால் கோல் போட்டுப் பரபரப்பு ஏற்படுத்திய “தியாப் அவானா” என்ற 21 வயது வீரரும் ஒருவர். முன்தினம் விபத்தில் இறந்த இன்னொரு கால்பந்து வீரரான 19 வயது சயீத் அல் நூபியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து!! இரண்டுமே பயங்கர வேகத்தினால் நடந்தவை என்பதால், இளைஞர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும்; விபத்துக்கு மிகச் சற்றுமுன் எஸ்.எம்.எஸ்.-ம் அனுப்பியிருக்கிறார் என்பதால், வண்டியோட்டும்போது மொபைல் பயன்பாடு குறித்தும் குரல்கள் எழுந்துள்ளன.  எப்பவும் சொல்வதுதான் என்றாலும், இம்முறை கொஞ்சமாவது பலன் இருக்கும் என்ற நம்பிக்கை.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

உண்ணாவிரதம் - இந்த வார்த்தையைக் கேட்டாலே எரிச்சல் வருமளவுக்கு ஒரு நல்ல போராட்ட முறையை இப்படி காமெடியாக்கிட்டாங்க. தெலுங்கானாவுக்கும் உண்ணாவிரதம் இருக்கப் போறதா இப்ப யாரோ அறிவிச்சிருந்தாங்க. இந்தத் தெலுங்கானாவால ஆந்திரத்து மக்கள் படுற பாட்டை நினச்சா, பரிதாபமா இருக்கு.

இந்த உண்ணாவிரத முறைய ஆரம்பிச்சு வந்த காந்தி இப்போ இருந்தா, யாரும் இனி உண்ணாவிரதம் இருக்கக்கூடாதுன்னு உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ? இன்னொரு ஆச்சர்யத் தகவல், காந்தி ஒருமுறைகூட (ஆங்கிலேய) அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கவில்லை.  ஒவ்வொரு முறையும் தனக்கான தண்டனையாகவோ அல்லது இந்திய மக்களின் நடவடிக்கைகளைக் கண்டித்தோதான் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்!!

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஒளியின் வேகம்தான் அதிகபட்ச வேகம்; அதை மிஞ்சவே முடியாது என்ற ஐன்ஸ்டீனின் கூற்றும், தொடர்ந்த theory of relativityயும்தான் இன்றைய பல அறிவியல் ஆய்வுகளுக்கு ஆதாரம். ஆனால், சென்ற வாரம் விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வில் ஒளிவேகத்தை மிஞ்ச முடியும் என்று நிரூபிக்கத்தக்க வகையில் ஆதாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பிரபஞ்சப் பெருவெடிப்பை மறுநிகழ்வு செய்வதற்கென்று ஜெனிவாவில் பெருவெடிப்பு உலை செய்தார்களே நினைவிருக்கிறதா - CERN, Large Hadron Collider - இதெல்லாம் சொன்னால் நினைவு வரலாம். அங்கிருந்து, இத்தாலிக்கு அனுப்பிய அணுவைவிடச் சிறிய நியூட்ரினோ நுண்துகள்கள், 60 நேனோ செகண்டுகளில் 730 கி.மீ. தூரத்தைக் கடந்ததாம். (ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்கள். கணக்கு சரியான்னு போட்டுப் பாத்துச் சொல்லுங்க)

இது மட்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டால், ஐன்ஸ்டீனின் பிரபலமான சார்புக் கோட்பாடும் (theory of relativity) கேள்விக்குள்ளாகும் என்பதால் அதை அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆர்வத்தோடு கவனித்து வருகின்றனர்.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

பெரியவன், இப்போது(தைக்கு) கிளாஸ் லீடராம். மற்ற மாணவர்களைப் பேசாமல் இருக்கச் செய்வது ரொம்பக் கஷ்டமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். (உன்னாலயே பேசாம இருக்க முடியாதேடா?) வெளியே திட்டிகிட்டாலும், அம்மாவாச்சே, சும்மா இருக்க முடியுமா, பிள்ளை கஷ்டப்படுறதைப் பார்த்து? (செண்டிமெண்ட் சீன்) ஆக்கப்பூர்வமா, அறிவுப்பூர்வமா யோசனை சொல்லலாம்னு (நினைச்சு), “நீ சும்மா, பேசாதே, பேசாதேன்னா யாரும் பேசாம இருக்க மாட்டாங்க. கிளாஸ் முன்னாடி நின்னு இண்ட்ரெஸ்டிங்கா அன்னிக்கு நடத்துன ஏதாவது ஒரு பாடத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணு”னு சொல்லிகிட்டிருக்கும்போதே குறுக்கேப் பாஞ்ச சின்னவன், “அப்போ எல்லாரும் தூங்கிடுவாங்க. அப்புறம் உனக்கு ஜாலி!!”ன்னானே பாக்கணும்!!

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()


Post Comment

நட்பூமனோ அக்கா அழைத்திருந்த நட்புகள் குறித்த தொடர்பதிவு.ழக்கமாக பெண்களுக்கு மட்டுமே அவர்களின் சிறுவயது/கல்விகால நட்புகள் திருமணத்திற்குப் பின் தொடர்வதில்லை என்று சொல்லப்படுவதுண்டு.  ஆனால்,  இன்றைய உலகில் இருபாலருமே, கல்வி, வேலை என்று பல ஊர்/நாடுகளுக்குப் பந்தாடப்படுவதில், எல்லா நட்புகளுமே தொடர்பு குறைந்து, வேலையிடத்தில் கிட்டும் நட்புகளே தொடர்கின்றன.  ஆனாலும் பால்யகால பள்ளி/கல்லூரி நட்பில் உள்ள ஆத்மார்த்த அன்பு இதில் மிஸ்ஸிங் என்றுதான் தோன்றும் எனக்கு. வளர்ந்திருக்கும் இணையத் தொழில்நுட்பத்தால் சில சிறுவயது நட்புகளைத் தற்போது கண்டெடுத்துத் தொடர்ந்தாலும், அந்தக் கால களங்கமில்லா நட்புக்கு இணையவழித் தொடர்பு ஈடில்லை என்றே தோன்றுகிறது.

சென்ற வருடம், கல்லூரித் தோழி பூரணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தன் வேலையிட நட்புகள் குறித்துச் அவள் இதையேச் சொன்னபோது, “படிக்கும் காலத்தில் பொறுப்புகளேதுமில்லாச் சுதந்திரம் இருந்தது. எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. அதனால் எதிர்பார்ப்புகளற்ற நட்பு கொள்ள முடிந்தது. அதனால்தான் நண்பர்கள் என்று வரும்போது நம் சிறுவயது நட்புகளையே நாம் அதிகம் நினைத்து ஏங்குகிறோமோ?” என்று நான் கேட்க அவளும் அதை ஆமோதித்தாள்.

”எதிர்பார்ப்பு இல்லாத” என்பதற்கு அவரவர் விருப்பப்படி அர்த்தங்கள் கொள்ளலாம். குடும்பம், வேலை, உறவுகள், சுற்றம் என்று பல வட்டங்களில் சுழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு நட்பு என்பது ஒரு இளைப்பாறுதலாக இருக்க வேண்டும். பல கட்டங்களில், நட்பா, உறவா என்று வரும்போது, வாய்ப்பே கொடுக்கப்படாமல் உறவுதான் என்று தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலைகளில், அதைப் புரிந்துகொள்ளும் நட்புகள்தான் பெண்கள் எதிர்பார்ப்பது.

பார்க்கும், பழகும் பலரிடம் நட்போடிருந்தாலும், நமக்கென்று நெருக்கமாக ஓரிருவர்தான் இருக்க முடியும். அமீரகம் வந்த பின் நான் கண்டெடுத்த என் பள்ளித் தோழி பர்வீனும், அடிக்கடி பார்க்கவோ, தொலைபேசவோ இல்லை என்றாலும்கூட தற்போதும் மனதில் கல்லூரிக் காலத்திற்குச் சற்றும் குறைவில்லா நெருக்கத்தை உணரும் தோழி ஞானமும்தான் முதலில் நினைவுக்கு வருபவர்கள்.

துபாய்த் தோழி பர்வீன், பண வசதியில் மிகவும் உயர்ந்தவள் என்றாலும், அதைச் சற்றும் வெளிக்காட்டாத எளிமைதான் இவளோடான நட்பை இன்றும் தொடரவைக்கிறது. இன்னும் பல விஷயங்களில் எனக்கு நல்ல ஆலோசகர். நாங்களிருவருமே குடும்பத்துக்கு ‘மூத்த மகள்’ என்பதாலும் புலம்பிக்கொள்ள நிறைய உண்டு. எங்களிடையே. எங்களிருவர் எண்ணங்களும் அநேக சமயங்களில் ஒருபோல்ஒத்தே இருக்கும்.

நாங்களிருவரும் எப்படி ஒரே ‘நேர்க்கோட்டில்’ சிந்திக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம்:
ஒருமுறை துபாயில் நான் மட்டும் அவளுடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். காரை ஓட்டிவந்த அவளின் கணவர், அவர் வீட்டிற்குச் செல்லும் வழிகளை எனக்கு விளக்க முற்பட்டார். நான் அவரிடம், “இல்லை. நீங்க சிரமப்பட்டு வழி சொல்லித் தர வேண்டாம். அதுக்குன்னே பெர்மணண்டா ஒரு(டிரை)வரை வச்சிருக்கதுனால, இதெல்லாம் நான் ஞாபகம் வச்சிருக்கதில்லை”ன்னேன். அவர் கொஞ்சம் ’ஜெர்க்’ ஆகி, அப்புறம் தன் மனைவிகிட்டே சொன்னார், “இப்போத்தான் புரியுது, உங்க ரெண்டுபேருக்கும் எப்படி இவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங்”னு!!”


ஞானம் எனது கல்லூரி வகுப்புத் தோழி. இருவருக்கும் முதற்பெயர் “எம்”மில் ஆரம்பிப்பதால், அருகருகே அமர்ந்து, அப்படியே தொடர்ந்த எங்களின் நட்புக்குக் காரணமாய் பொதுவான ஒரு காரணமும் காணேன் நான்.   ஏனெனில், பார்ப்பதற்கு மட்டுமல்ல, குணத்திலும் நாங்கள் நேரெதிர்!! லாரல்-ஹார்டி போல, ஒல்லியாய் நெடுப்பமாய் நான்; பூசினாற்போல, என் தோளுக்கருகில் அவள்.  கலகலப்புக்குப் பஞ்சமில்லாத வாய்மூடா பேச்சுக்குச் சொந்தக்காரி அவள். நானோ ’எண்ணிப்’ பேசத் தெரியாததால், ‘எண்ணி எண்ணி’ பேசுபவள்!! (என்னா பில்டப்பு!!) இளகிய மனம் அவளுக்கு;  ’வெட்டு ஒண்ணு; துண்டுகள் பல’ கேஸ் நான்!! இருந்தும், எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவதைப் போல, இணைபிரியாத் தோழிகளானோம்.

மூன்று வயது மொட்டு முதல் முதியவர்கள் வரை யாரானாலும் தன் அன்புப்பேச்சினால் மணிக்கணக்கில் கட்டிப் போடும் திறமுடையவளின் திருமண வாழ்வு நாலே வருடங்களில் கலைந்தது எனக்குப் பேரதிர்ச்சி.  ’எல்லாரையும் பிரிஞ்சு அமெரிக்கா போணுமா?’ என்று  தயங்கியவளை, திருமணத்துக்குச் சம்மதிக்க வைக்க அவளின் பெற்றோர் முயற்சியோடு, நானும் நாலு அதட்டுப் போட்டேனே என்ற குற்ற உணர்ச்சி இன்றும் உள்ளது.

தற்போது அவள் அமெரிக்காவில். சென்ற வருடம் இந்தியா செல்லும் வழியில் அபுதாபி வந்திருந்தாள். பழைய நினைவுகளில் நீந்திக்கரைசேர முயன்று, முயன்று முழுகியேப் போனோம்.  கையில் ஒருமாதக் குழந்தையோடு அவளை வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்ட கதைகேட்டுக் கலங்கிப் போனேன். இன்னும் பலப்பல சோகங்கள். முத்தாய்ப்பாய் அவள் சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது, “எல்லா சந்தோஷமும் அதோட முடிஞ்சு போகும்னு தெரிஞ்சுதான் கடவுள் எனக்கு காலேஜிலேயே நிறைய சந்தோஷத்தைத் தந்துட்டார்போல!!”.  முன்னர் அமெரிக்கா போகத் தயங்கியவள், தற்போது அங்கிருந்து நிரந்தரமாக ஊர்திரும்பவும் தயங்குகிறாள்.


ரைப்போல, நாட்டைப்போல தினமும் பார்த்து, பேசி, சிரித்துமகிழவும், அழுகையைப் பகிரவும் நமக்கென்று ஒரு நட்பு அருகில் இல்லையே என்ற வருத்தம் எனக்குண்டு. முக்கியமா, ரங்ஸோடு சண்டை வரும்போது அவரைத் திட்டுறதையும், ரெண்டு நாள்லயே ‘இந்திரன்சந்திரன்’னு புகழ்றதையும் ’ஆமாஆமா’ன்னு கேட்டுக்கிட ஒரு ஆள் வேணும். (பீர்பாலின் ‘நான் கத்திரிக்காயிடமா பணிபுரிகிறேன்’ டயலாக் ஞாபகம் வருதா?)

எனினும் ஆழிசூழ்உலகில் பிரச்னைகளால் சூழப்பட்ட மனிதர்களே (நான் உட்பட)  அதிகம்  காணப்படுகையில், புதிதாக நட்புக் கரம் நீட்டவும் தயக்கமாக இருக்கிறது. ’செயற்கரிய யாவுள’வாக என் நட்புகொள்பவருக்கு, ‘ஒல்லும்வாய் ஊன்றும் நிலையாகவும்’ இருக்க வேண்டுமே!!

Post Comment

வாக்கிங்

ஆகஸ்ட் 21 திண்ணையில் வெளிவந்த கதை.

காசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார்.  இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.  இல்லையென்றால் ஹார்ட் அட்டாக் வந்தேவிடுமென்று பயங்காட்டியதால், அவர் பேச்சைக் கேட்டே ஆகவேண்டியதாகிவிட்டது.  இல்லையென்றால், காசிம் ஹாஜியாராவது நடக்கிறதாவது?  பக்கத்து தெருவிலிருக்கும் அவருடைய ஜவுளிக் கடைக்கே காரில்தான் போவார்.

இப்பக் கூட டாக்டர் காண்பிச்ச அந்தப் படம் மனக்கண்ணில் வந்து நின்றது. அதாவது இரத்தக் குழாயில் கொழுப்பு அடைச்சா எப்படியிருக்கும், அது இதயத்தை எப்படி பாதிக்கும் எல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குப் பூச்சாண்டியைக் காட்டிக் கதை சொன்ன மாதிரி விலாவாரியா படங்காட்டி கதைசொன்னார் டாக்டர். ஹாஜியாருக்கு, அது பயமாத்தான் இருந்துது. ஆனா, அதைவிட அவர் தோஸ்து ‘காயலான்கடை’ மஸ்தான் சொன்ன பிராக்டிகல் பூச்சாண்டி கதைதான் இன்னும் பயங்கரமா இருந்துது. மஸ்தானுக்கு சமீபத்திலதான் அட்டாக் வந்து ஆஞ்சியோ பண்ணாங்க. “காசிமு, மத்த வலியெல்லாம் தாங்கிகிடலாம்ல. ஆனா, அந்த எழவு ஆஞ்சியப் பண்ணும்போது ரெண்டு கையையும், காலையும் அசைக்காம ஆடாம இருக்கணுன்னு மணிக்கணக்குல கட்டிபோட்டுறாங்கலே, அதாம்லே பயங்கர வலி” என்று கண்கள் விரிய பீதியோடு சொன்னதுதான் பேதியாகிவிட்டது!! அதனால் யோசித்து யோசித்து நடந்தேவிடலாம் என்று முடிவு பண்ணிவிட்டார்.

இருந்தாலும், நடப்பது சிரமம் என்பதோடு, போரடிக்கும் விஷயமாச்சே. கூட துணைக்கு யாராவது வந்தால், பேச்சுத்துணைக்கும் ஆச்சு; நடப்பதும் நடக்கும். யாரை அழைக்கலாம் என்று பார்த்தார் காசிம் ஹாஜியார். ஹாஜியாருக்கு ஊரெல்லாம் நண்பர்கள் என்பது மட்டுமல்ல, எந்த இரண்டு நண்பர்கள் சேர்ந்தாலும் உடனே மாலிக் டீக்கடைக்குப் போய் ஜமா வைத்து, டீ, வடை என்று தொடங்கி, புரோட்டா, ஆம்லெட், சிக்கன்65 என்று அளவு தெரியாமல் தொடருமளவு பேசிக்கொண்டிருப்பார்கள். தொந்தி வளர்ந்ததுக்குப் பாதிகாரணம் அதுதானே? ஆக, நண்பர்களைக் கூட்டுச் சேர்த்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று புரிந்துகொண்டு, அந்த நினைப்பைக் கைகழுவினார்.

“இந்தாங்கோ சாயா” என்று காரச்சேவுடன் பாசமாகச் சாயா கொண்டு தந்த மனைவி தவுலத்தைப் பார்த்ததும் ஒரு ஃப்ளாஷ்!! ஏன், இவளையே கூட்டிப் போனால் என்ன நடக்க? இவளும் கிட்டத்தட்ட தன்னைப் போல பருமனாகத்தான் இருக்கீறாள். என்ன ஒரு வித்தியாசம், தனக்கு தொந்தி தனியே தெரியுமளவு உடல்வாகு. தவுலத்தோ, மேலிருந்து கீழ் வரை ஒரே சமச்சீராகப் பருமன். தன்னைவிட அதிக எடை இருப்பாளோ என்றுவேறு டவுட்டாக இருந்தது. பேச்சில்தான் மிஞ்ச முடியவில்லை; இதிலாவது தான் அவளை மிஞ்ச வேண்டும் என்று தோன்றியது. மேலும், இப்படியே விட்டால், இவளுக்கு ஏற்கனவே இருக்கும் சுகர், பிரஸர் எல்லாம் சேந்து தன்னைப் போல வேறு பிரச்னைகளைக் கூட்டி வரலாம். அத்தோடு தன் ‘தொந்தி’ வளர,  லுஹர் தொழ வந்த உச்சிவெயில் நேரத்தில் சாயாவும், காரச்சேவும் தருமளவுள்ள இவளது பதிபக்தியும் ஒரு காரணம்தானே? !! அதற்குப் பழி வாங்கியது போலுமாச்சு. ஒரே கவளத்தில் ரெண்டு துண்டு மண்ணீரல்!! (எவ்வளவு காலந்தான் கல்-மாங்காய் உதாரணம் சொல்வது?)

மனைவியிடம் சொன்னபோது, ‘என்னது, நடப்பதா, அதுவும் நானா?’ என்று தவுலத் பீவி அதிர்ந்தார்.  டாக்டரின் எச்சரிக்கைகளைக் கணவர் சொல்லக் கேட்டு, தான் உடன்செல்லாவிட்டால் அவர் நடக்கமாட்டார் என்பதையும் உணர்ந்தார். அங்ஙனம் செல்லாவிட்டால், அசம்பாவிதமாக ஏதும் நடந்துவிடுமோ என்று நினைப்பு தோன்றியதில் பதறி, “ரப்பே!! காப்பாத்துப்பா” என்று மனதில் சொன்னவள், “நா வாறேன், நா வாறேன்” என்று அவசரமாக ’நடை’ஒப்பந்தம் போட்டார். அன்று தொடங்கியது, இவர்கள் ‘நடைப்பயணம்’. என்னது, ஊர்விட்டு ஊர் செல்வதுதான் நடைப் பயணமா? எனில், இவர்கள் ஊர்ப்பள்ளிக்கூட மைதானத்தை ஒருமுறை சுற்றி வருவதற்குள் நீங்கள் ஒரு நடைப்பயணமே போய் வந்து விடலாம்.

எப்படியோ, நடக்க ஆரம்பித்து, பல தடங்கல்கள் வந்தபோதும் - தனியாக நடந்தாலே வரும்- இதிலே கணவன், மனைவி சேர்ந்து நடந்தால் கேட்கணுமா? - வெற்றிகரமாக ஒரு மாதம் கடந்துவிட்டது. .  எப்படியோ, எதுவோ - உயிர்ப்பயமோ என்னவோ, நடப்பது தொடர்ந்தது.

அன்றும் நடந்துகொண்டிருந்தார்கள். காலை சுபுஹு தொழுதுவிட்டு, இளங்குளிரில் நடப்பதும் ஒரு சுகம்தான். உலக நடைமுறை வழக்கப்படி, காசிம் ஹாஜியார் முன்னே செல்ல, தவுலத் பீவி பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். கணவன் -மனைவி இருவரும் ஒன்றாக நடந்துசெல்கிறார்கள் என்றால், ஒன்று, புதுசாக் கல்யாணமான கணவன், மனைவி கைப்பிடித்துச் செல்வதாக இருக்கவேண்டும். அல்லது வயோதிகத்தில் நடக்க முடியாத கணவனை, கைப்பிடித்து மனைவி அழைத்துச் செல்வதாய் இருக்க வேண்டும். இது இரண்டும் அல்லாது, லோகத்தில் கணவன் -மனைவி ஒருசேர நடந்துப் பார்த்ததுண்டோ நீங்கள்? எப்பவும் கணவன் முன்னே, மனைவி பின்னேதான். அதுவும் கணவர்மார்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடப்பார்கள். தொலைந்து போய்விட்டாளா அல்லது இன்னும் வந்துத்தொலைகிறாளா என்று பார்ப்பார்கள்போல!!

அதுவும், இந்த ட்ராஃபிக் நிறைந்த சாலையைக் கடக்கும் சமயத்தில் கணவன், மனைவியை விட்டு, தனியே முன்னே பாய்ந்தோடுவதைப் பார்க்க வேண்டுமே! எதிர்ப்பக்கம் போய்நின்று, மனைவி தட்டுமுட்டி சாலையைக் கடந்து வெற்றிகரமாய் மறுபக்கம் வந்துசேர்வதை ஒருவித  ஏமாற்றத்தோடு பார்ப்பார்கள். 

அதேபோல இங்கும் முன்னே சென்றுகொண்டிருந்த காசிம் ஹாஜியார்,  “கடகடன்னு நடயேன்” என்றும் அதட்டிக் கொண்டே அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டுவந்தார். அப்போது எதிரில் சைக்கிளில்  ஜமீல் வருவதைப் பார்த்தவர், அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு பார்க்காதவரைப் போல நடந்தார். இருந்தாலும், அவன் விடாமல்,  “அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜ்ஜியார்ரே” என்று ஸலாம் சொன்னான். அவனின் “ஹாஜ்ஜியார்ரே” என்ற அழுத்தத்தை உணர்ந்தவராக,  முகம் சிவந்து ”வ அலைக்கும் ஸலாம்” என்று மெல்ல அவருக்கே கேட்காமல் வேறு பக்கம் பார்த்து முணுமுணுத்துவிட்டு, எட்டி நடையைப் போட்டார்.

ஜமீல் நிறைய சீர்திருத்தம் பேசுவான். ஃபாத்தியா ஓதுவது, மௌலூது, கந்தூரி, தர்ஹா எல்லாம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாதது என்று வாதம் செய்வான். சரி, அத்தோடு இருந்தால், தொலைகிறான் என்று விட்டுவிடலாம்தான். ஆனால், அவரது ஹாஜியார் பட்டத்துக்கும் அல்லவா வேட்டு வைக்கப் பாக்கிறான்? “ஹஜ் செய்யப் போயிருக்கவங்களை, சவூதில ஏர்போர்ட் ஆஃபிஸர்களும், போலிஸூம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தறதுக்காக ‘ஹாஜி’னு விளிப்பாங்க. படிக்கிற பிள்ளையள ‘ஸ்டூடண்ட்ஸ்”னு சொல்வோமில்லியா, அது மாதிரி. அதுக்காக, நீங்க எதோ படிச்சு வாங்குன பட்டம் மாதிரி பேருக்குப் பின்னாடி ‘ஹாஜியார்’னு போட்டுக்கிட்டு இருக்கீங்க? இஸ்லாத்துல அப்படி எங்க சொல்லிருக்கு? சவுதிக்காரன் எத்தனை ஹஜ் செஞ்சாலும் அப்படியா போட்டுக்கிறான்?”னு விதண்டாவாதம் பண்ணுவான். காசிம் ஹாஜியாருக்கோ அது தன் பேரின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது போல  உணர்கிறார். தன் அந்தஸ்தின் பிரதிபலிப்பாகவும் அதைக் கருதினார். அதை விடுவதாவது? அதனால்தான் ஜமீலின் ‘ஹாஜ்ஜியார்ரே’ என்ற சீண்டல்!! தன் மனைவியையும் ‘ஹாஜிமா’ என்றுதான் அழைப்பிதழ்களில் போடுவார். இப்பவெல்லாம் ஹஜ்ஜுக்கு மக்காவுக்குப் போய்வந்தவர்களைப் பேரப்பிள்ளைகள், ‘மக்காமா’ ‘மக்காப்பா’ என்று அழைக்கிறார்கள். அதற்கு இது பரவால்லை.

பலதையும் நினைத்தவாறே நடந்துகொண்டிருந்தவர், ‘ஹாஜிமா’ என்றதும் தவுலத் பீவி நினைவு வந்தவராகத் திரும்பிப் பார்த்தார். அவரோ ஜமீலுடன் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சினந்தார். “ஏளா, சீக்ரம் வாளா. எம்புட்டு நேரமா இங்க காவல் நிக்கேன்?” என்று கத்தினார். அவர் கோவத்தைக் கண்டு, உடனே விறுவிறுவென நடந்து அவரருகே வந்து மூச்சு வாங்க நின்றார். ”வாக்கிங் வந்தா நடக்கத்தான செய்யணும். அங்க என்னவுளா வழியில போறவாரவுகட்ட எல்லாம் பேச்சு? நின்னு நின்னு நடந்தா என்ன ஃபாயிதா?” என்று காசிம் ஹாஜியார் எரிந்துவிழுந்தார்.

“தெரிஞ்சவுக வழில வந்தா பாத்துட்டுப் பேசாம வந்தா என்ன நினைப்பாக நம்மளை?” என்று சமாதானம் சொன்னார்.

“ஆமா,  சும்மாவே எனக்கு ஏழடி பின்னாலத்தான் வருவ. ஒரு நாளாவது சேந்து நடந்துருக்கியா? இதுல அவனையும்இவனையும் பாத்துப் பேசிகிட்டிருந்தா வெளங்கும்.”

“ஆமா, நீங்க என்னிக்கு என்கூட சேந்து நடக்கணுமின்னு நெனச்சிருக்கியோ? எப்பவும் கால்ல கஞ்சியக் கவுத்தா மாதி ஓடத்தான் செய்யுறது.”

“எளா, நாங்கல்லாம் ஜமீன், பண்ணையார் பரம்பரை. அப்படித்தான் முன்னாடி நடந்து பழக்கம். எங்க வாப்பா ஊர்ல நடந்து வந்தா, பின்னாடி வரிசைகட்டி மக்கசனம் நடந்துவரும் தெரியுமா? இப்ப நீ என் பின்னாடி வர்றதும், பண்ணையாருக்குக் குடைபிடிச்சு நடக்க மாதிரித்தான் எனக்குத் தோணுது தெரியுமா?” எக்காளத்துடன் சொல்லிச் சிரித்தார்.

”என்னது பண்ணையாரா? இன்னும் அந்தக் காலக் கனவுலருந்து வெளிய வரலியா நீங்க? ஜமீன், பண்ணையெல்லாம் ஒழிச்சு எம்புட்டு காலமாச்சு? தெரியாதா? இப்பம்லாம் அரசியவாதிக காலம். ஒரு தலைவன் போறான்னா, அவனுக்கு மின்னாடி எம்புட்டு போலீஸு காரு, தொண்டனுவோ காரு போவுது? எனக்கு முந்திகிட்டு நீங்க நடக்கது, எனக்கு ஜெயலலிதா போவும்போது செக்கூரிட்டி முன்னாடி வழிய விலக்கிப் போவாம்ல, அதுதான் நாவகம் வருது!!” அடிபட்ட புலியாய் சீறினாள் தவுலத் பீவி. வழக்கம்போல மௌனமானார் காசிம் ஹாஜியார்.

Post Comment

டிரங்குப் பொட்டி - 18

ஹாய், ஹலோ, எல்லாரும் நல்லாருக்கீங்களா? திடீர் புரட்சி மழையில் நனைஞ்சு, ஜலதோஷம் பிடிச்சு, மெழுவத்தி சூட்டில ஆவிபிடிச்சு, இப்ப ‘எல்லாம்’ சரியாயிருக்கும்னு நம்புறேன். புரட்சி மழை பெய்ஞ்சுகிட்டிருக்கும்போதே, இடையில ஒரு இன்கம்டாக்ஸ் ஆப்பிசர் கையும் களவுமா பிடிபட்டது, ஒரு நீதிபதி இம்பீச்மெண்ட், தன் மாநிலத்தில் லோக்யுக்தாவை நடைமுறைத்தப்படுத்த முயன்ற கவர்னரைத் திரும்பப் பெறக் கோரும் முதல்வர்னு சில சம்பவங்களும் கேள்விப்பட்டோமே? சரி, அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!!   ஆனா மக்கள் எந்த அளவுக்கு லஞ்சம், ஊழல்களால் பாதிக்கப்பட்டு, வெறுப்படைந்து இருக்கிறார்கள் என்பதற்கு நாடுமுழுதும் கூடிய கூட்டங்கள் சாட்சி.

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

கொஞ்ச நாள் முன்னாடி ஒபாமா, தன் குடும்பத்தினருக்காக பீட்ஸா ஆர்டர் பண்றதுக்கு, தவறுதலா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு ஃபோன் பண்ணிட்டார்னு ஒரே கூத்தா இருந்துதே? அதப் படிச்சு என்ன தோணுச்சு உங்களுக்கு? பீட்ஸா கடைக்கும், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷனா அமெரிக்க அதிபர்னு தோணுச்சா? எனக்கு அப்படியில்ல... பீட்ஸா வேணும்னா, ஒரு அல்லக்கையை... ஸாரி ஸாரி... தன்னோட பி.ஏ., செகரெட்டரி, டிரைவர் அட ஏன் ஒரு அமைச்சரைக் கூடக் கூப்பிட்டுச் சொல்லாம இவுரே ஏன் ஃபோன் பண்ணாருன்னுதான்!! நம்மூர்ல இப்பிடியா நடக்கும்? ச்சே.. ஷேம் ஆன் அமெரிக்கா!! ஆனானப்பட்ட அமெரிக்க அதிபரையே இப்படிக் கஷ்டப்படுத்துறாங்களே?!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சரி, அதை விடுங்க. நம்ம இந்தியர்களுக்குத்தான் இந்த விஷயம் பெரிசாத் தெரியுதுன்னு பாத்தா- பக்கத்தூருல பாருங்க.  சீனாவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதர், டூட்டிக்கு ஜாயின் பண்ண சீனா வரும்போது, தன்னோட கைப்பையைத் தானே தூக்கிட்டு வந்திருக்கார். அதுமட்டுமில்ல, அவருக்கு காஃபி வேணும்னு தானே கடைக்குப் போய் வாங்கிக் குடிச்சிருக்கார். அதப் பாத்து சீன மக்களுக்கு ஒரே அதிர்ச்சியாம்!! ஏன் ஏன்? ”எல்லாரும் ஒரே தரம்’னு சொல்லிக்கிற கம்யூனிசம் ஆட்சி செய்யும் நாட்டிலயா இப்படி அதிர்ச்சியாகிறாங்கன்னு எனக்கு ஒரே அதிர்ச்சி!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

“பினாமி” என்பது இந்தியாவில் அதிகம் புழங்கப்படும் வார்த்தை.  தமிழ் வார்த்தை இல்லைன்னாலும், இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவங்க இருக்கமுடியாது. BENAMI என்ற இந்த ஆங்கில வார்த்தையின் மூலம்  - origin - எது தெரியுமா? ‘பேநாமி’ (பெயரிலி) என்ற ஹிந்தி வார்த்தையாம்!! இப்பப் புரியுதா?

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

 சென்னையில், அமெரிக்க துணைத் தூதர் மௌரீன் தனது பேச்சில் ”தமிழர்கள் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள்”னு சொல்லிட்டதா பரபரப்பா இருந்துது. அவர் சொன்னது (அல்லது சொல்ல முனைந்தது) “தன் தோல்  அழுக்கானதால், தமிழர்களைப் போல கறுப்பாகிவிட்டேன்” என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ("skin became dirty and dark like the Tamilians") இதை மீடியாக்கள் அப்படி மாத்திட்டாங்க போல!! ஒருபுறம் “ஃபேர் & லவ்லி” விளம்பரங்களைச் சாடிக்கொண்டே, மறுபுறம் நம்மைக் கறுப்பு என்று யாரும் சொன்னாலும் கோபப்படுகிறோம்!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சே... எல்லாமே அமெரிக்கா நியூஸா இருக்கே!! ஒரு யூ.கே. நியூஸ் பாப்போம். லண்டனில் பல பள்ளிகளில், பள்ளி மாணவிகளின் சீருடை ஸ்கர்ட்-ஷர்ட் என்பதிலிருந்து பேண்ட்-ஷர்ட் ஆக மாற்றிவிட்டார்களாம். ஏனாம்? சில சமயம் பெல்ட்டா, ஸ்கர்ட்டா என்று சந்தேகம் வருமளவுக்கு, ஸ்கர்ட்டின் லெவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறதாம். மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பின் கவனமும் சிதறாமல் இருக்கவும், ஆசிரியர்கள் தம் கடமையில் அதிகக் கவனம் செலுத்தவும் வேண்டி,  ஸ்கர்ட் அணியத் தடை விதிக்கிறார்களாம்.

ம்ம்... இதத்தான் மாமியா உடைச்சா மண்குடம், மருமவ உடைச்சா பொன்குடம்னு சொல்லுவாய்ங்களோ??

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

போன வாரம், அமீரகத்தில் இன்னும் ஒரு இந்தியக் குடும்பம் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்கள்.  ஐந்து நாட்களுக்குமுன் இறந்தது, நேற்றுதான் தெரிய வந்திருக்கிறது -  துர்நாற்றத்தால்!! 8 வயது சிறுமியின் முகத்தைத் துணியால் மூடி தூக்கில் தொங்கவிட்டிருக்கின்றனர். தாய் ஆறுமாத கர்ப்பம்!!

தற்கொலைகளின் காரணம் எதுவாகிலும், ஜீரணிக்க முடிவதில்லை. 

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

Post Comment