Pages

வாழ்வும், சாவும்
ரணம்... உலகப் பற்று நீங்கிய துறவியோ, அல்லது அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரோ அல்லது இடைப்பட்டவரோ - எப்பேர்ப்பட்டவரையும் கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிடும். நிகழ்வாக இல்லாவிடினும், இந்த வார்த்தையே போதும் நெஞ்சைக் கொஞ்சம் ஆட்டி வைக்க. 

மரணமில்லா வீடு உலகில் இல்லையென்றாலும், நம் வீட்டை அது தொட்டுவிடுமோ என்கிற அச்சமும்தான் நம்மைக் கொஞ்சமாவது 
நல்லவர்களாக இருக்க வைக்கிறது என்றால் மிகையில்லை. மரணங்களில் சில, மரணித்தவருக்கோ அல்லது வேறு சிலருக்கோ விடுதலையாக இருக்கும். சில மரணங்கள் இருப்பவர்களின் வாழ்வை சுமையாக்கும். எதுவாகிலும், எல்லாருக்குமே மரணம் பல கேள்விகளை எழுப்புகின்றது. 

சென்ற வாரங்களில் தொடர்ச்சியாக இரு மரணச் செய்திகள். ஒன்று பிறந்து இரு நாளே ஆன சிசு. கருவிலேயே ஏற்பட்ட, பிறக்கும்வரை அறியப்படாத குறைபாடுகளால் மரணம். இன்னொன்று, சில குறைபாட்டுகளுடன் பிறந்து, 17 வருடங்கள் வாழ்ந்த ஒரு குழந்தை - ஆம், அவன் அப்போதும் குழந்தைதான். 

இந்தக் குழந்தை ஏன் பதினேழு வயது வரை வாழ்ந்து மரணிக்க வேண்டும்? அந்தக் குழந்தை ஏன் இரு நாட்களிலேயே வாழ்வை முடித்துக் கொண்டது? அவன் போட்ட புதிர்களின் விடை அவனன்றி யாருக்குத் தெரியும்?

திர்பாராத இந்த இரண்டுமே மனதைப் பாதித்திருந்த வேளையில், இன்னுமொரு தகவல். வெகுநாட்களாக ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு உறவினர் - இளைஞர்- கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர்காக்கும் கருவியால்தான் மூச்சு இருக்கிறது, இன்னும் சில மணிநேரங்களே... என்றெல்லாம் கேட்டபோது... மற்ற இரண்டைவிட இத்தகவல் பேரதிர்ச்சியைத் தந்தது.


மரணித்துவிட்டார் என்பதைவிட, இதோ இன்னும் சில மணிநேரங்களே என்கிற தகவல் தரும் வேதனை மிக மிகக் கொடுமையானது. வெளிவட்ட உறவினரான நமக்கே இத்தனை பதைபதைப்பைத் தருகிறது என்றால், அருகே இருக்கும் பெற்றோர், மனைவி, உடன்பிறந்தோரின் நிலையைக் கற்பனை செய்யக்கூடப் பயமாக இருந்தது. ஏதேதோ நினைவுகள், எண்ணங்கள், கவலைகள்... பழைய நினைவுகளில் மூழ்கி, இப்படியிருந்தோமே, அப்படியெல்லாம் இருந்தானே என்று கலங்கி.. 

சிறு வயது என்பதால்தான் இத்தனைக் கலங்குகிறோமோ என்று தோன்றலாம். கல்லூரியில் படிக்கும்போது, சக தோழியின் தாத்தா இறந்துவிட்டார். இரண்டு நாள் கழித்து கல்லூரிக்கு வந்த அவளிடம், ஒரு நண்பன் “வயசானவர்தானே?” என்கிற ரீதியில் பேச கொதித்துப் பாய்ந்துவிட்டாள் தோழி!! நல்லவேளை நான் வாயைத் திறக்கவில்லை. ஏனெனில் நானும் கிட்டத்தட்ட அப்படி நினைத்திருந்ததால்தான் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அச்சம்பவம், பாசத்திற்கு வயதில்லை என்று கற்றுக் கொடுத்தது. 

இன்னொரு சம்பவம் என் தாயார் சொன்னது. 16 வருடங்களாகப் படுக்கையில் இருந்த தன் பாட்டி இறந்தபோது, அவரின் 16 வயதுப் பேத்தி, கதறிக் கதறி அழுததாகச் சொல்லி வியந்தார். எந்தளவுக்கு அவர்களுக்குள் பாசமும், நேசமும் இருந்திருந்தால் பிரிவு துயரம் வாய்ந்ததாக இருந்திருக்கும்? 

ந்த இளைஞரின் மனைவியை முன்பொருமுறை ஒரு ஐ.சி.யூ. வாசத்தின்போது ஆறுதல் கூறலாம் என்று சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து நான் அறிவுரை பெற்று வந்தேன்!! “எங்களுக்கு இந்நிலை இறைவனால் தரப்பட்டது. ’எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி துன்புறுத்துவதில்லை’ என்று அவன் கூறியுள்ளான். எனவே நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இவ்வுலகில் படும் சிரமங்களுக்கான நற்கூலிகள் மறுமையில் தரப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆகையால் எங்களை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே இறைவா என்று ஒருபோதும் நாங்கள் எண்ணியதில்லை” என்றார். அவரின் மன உறுதி, திண்மை என்னை வாயடைக்கச் செய்தது!! 

ருத்துவர்கள் இனி காத்திருப்பதில் பயனில்லை, உயிர்காக்கும் கருவியை எடுத்துவிடலாம் என்று வற்புறுத்த, மனைவி மறுக்க, மற்றவர்கள் அதிர்ச்சியில்... விபரம் கேள்விப்பட்ட அனைவரும் - உறவுகள், உறவுகளின் உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரும் - பிரார்த்தித்தோம். 

அதிசயிக்கத்தக்க திருப்பமாக, மறுநாளே- இறைவன் கருணை - அவருக்கு நினைவு வந்து செல்ல, தன் தேவைகளை எழுதிக்காட்டுமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவர்களே இது மெடிக்கல் மிராக்கிள்  என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க, “அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும்” என்கிற விதமாக நிரந்தரமாக இறைவனிடத்து மீண்டுவிட்டார். அவர் நோயால் பட்ட துன்பங்களுக்குப் பகரமாக இறைவன் அவரது பாவங்களை மன்னித்து, மறுமை வாழ்வைச் சிறப்பித்துத் தருவானாக.

மேற்சொன்ன மூவரும் உறவுகள் என்பதால் அவர்களின் மறைவு என்னைப் பாதித்தது என்றால், டெல்லி துயரச்சம்பவத்தினால் மறைந்த ஜோதி ஏன் நம் அனைவரையுமே வருத்தப்படவைக்கிறார்? குழந்தை  விளையாடும்போது  கீழே விழுந்து காயப்பட்டு வந்தால்,  பதற்றமான தாய் “எதுக்கு ஓடுனே? ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே?” என்று அடிபட்ட குழந்தையின் முதுகிலே ரெண்டு போடுவதைப் போல,  மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு-காவல் துறையினரைக் கேள்வி கேட்கமுடியாத கையாலாகாத்தனத்தில், ஜோதியைப் பாத்து “ஏன் சினிமாவுக்குப் போனாய் - அதுவும் இரவில்?” என்று கேட்கத் துணிகிறேன்.

எனில், அதே டெல்லியைச் சேர்ந்த மூன்றரை வயதுச் சிறுமியிடமும், தமிழ்நாட்டின் மாணவி 13-வயது புனிதாவிடமும் “ஏன் பகலில் பள்ளிக்குப் போனீர்கள்?” என்று கேட்பதா!! இன்னும் கூட்டாகவும், தனியாகவும், வீட்டினுள்ளும் வெளியேயும், வன்புணரப்பட்ட எத்தனையோ பெண்களிடம் என்ன கேட்பது?  “ஏன் பிறந்தீர்கள்?” என்றா!!

எனது உறவுகளுக்கு, சுற்றங்கள் சூழ நேர்ந்த அமைதியான மரணங்கள்,  உற்றாருக்கு ஏற்படுத்தும் சோகத்தை, பாதிப்பை நினைத்துத்தான் வருந்த வைக்கின்றன. ஜோதி-புனிதாக்களின் மரணங்கள் மரணம் வந்த வழியை நினைத்துப் பதறிப் பரிதவிக்க வைக்கிறது. குற்றங்கள் செய்து, அவை நிரூபிக்கப்பட்ட பிறகும், தேசிய மரியாதையோடு மரணிப்பவர்களும் இருக்கும் இதே மண்ணில்தான்; ஒரு பாவமும் அறியாத, இன்னும் மண்ணில்கூட கால் வைக்காத சிசுவாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூராயுதத்தால் கிழிக்கப்பட்டுக் கொல்லப்படுபவர்களும் உண்டு.

வாழ்வு மட்டுமல்ல, சாவும் நல்லதாக இருக்கவேண்டும் என்கிற பயம் வருகிறது. இறைவா!! வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல, இறப்பையும் துன்பமில்லாததாக, நிறைவானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக!!


Post Comment

விதியின் “மாய” சதி
வாழ்க்கையில நாம நெறய கொள்கை, வைராக்கியம் வச்சிருப்போம் - இதச் செய்யணும், அதச் செய்யவேக் கூடாது, இப்படித்தான் வாழணும்னு என்னவெல்லாமோ. ஆனா, எல்லாருக்கும் எல்லாமே நிறைவேறுவது இல்லை அல்லது விரும்பாததைச் செய்யாமல் இருக்க முடிவதில்லை. பல காரணங்கள். 

உதாரணமா, சின்ன வயசுல வீட்டுல உள்ளவங்க மீன் கழுவ படுற பாட்டைப் பாத்து - முழுமீன் நழுவி ஓடும், அது பின்னாடியே ஓடி பிடிக்கணும், அப்புறம் சாம்பலால தேச்சு சலாம்பு, செதிள் எடுக்கிறதுன்னு பாத்து நொந்து, நான் சமைக்கும்போது மீனே சமைக்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்தேன். (கவனிக்க, மீன் சமைக்கக்கூடாதுன்னுதான், சாப்பிடக்கூடாதுன்னு இல்லை!!) ஆனா, ஆண்டவன் விதிச்சதைப் பாருங்க, நான் வாக்கப்பட்டது வாரத்தில ஏழு நாளும் மீன் சாப்பிடுற ஒரு கடலோரக் குடும்பத்துல!! அப்புறமென்ன கொள்கை காத்துலதான்...

என்னடா, கொள்கை வைராக்கியம்னு பெரிய்ய லெவல்ல ஆரம்பிச்சிட்டு, சமையல், சாப்பாடு, மீனுன்னு லோ-க்ளாஸாப் பேசுறாளேன்னு யோசிக்கிறீங்க இல்லியா? எவ்ளோ பெரிய மேட்டர்னாலும், அன்றாட நிகழ்ச்சிகளை உதாரணமாச் சொன்னா, மனசுல நல்லாப் பதியும். நாங்கள்லாம் டீச்சரா இருந்தவங்களாக்கும்!!

அதே மாதிரி, பதிவு எழுத வரும்போது எடுத்த முடிவுகளில் ஒன்று, சமையல் பதிவே எழுதக்கூடாதுன்னு. எல்லாம் வாசகர்கள் நலம் கருதித்தான். நான் சமையல் குறிப்பு எழுதினால் எப்படி இருக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்.

ஜலீலாக்கா ”பேச்சிலர்ஸ்க்கான ஈஸி சமையல் குறிப்புகள்”னு ஒரு சமையல் போட்டி நடத்துறாங்க. அந்த அறிவிப்பைப் பாத்ததுமே என் கையில் அரிப்பு... ஏன்னு அப்புறம் சொல்றேன். இருந்தாலும், கொள்கையை மீறவேக்கூடாதுன்னு பல்லைக் கடிச்சிகிட்டு இருந்த என்னை... என்னாச்சி, தலையில கைவச்சிட்டீங்க??!! 

நான் வேண்டாம்னுதான் மறுபடி மறுபடி சொன்னேங்க, இந்த ஜலீலாக்காதான் எனக்கே எழுதுற ஆசையைத் தூண்டி விட்டுட்டாங்க. சரி, அன்பிற்காக விட்டுக் கொடுக்கிறது தப்பேயில்லைன்னு நானும் துணிஞ்சிட்டேன். ஆனா, கண்டிப்பா இதான் கட்டக்கடைசி. சமைக்கிறதைவிட சமையல் பதிவு எழுதுறதுதான் கஷ்டம்னு இன்னிக்கு டபுள் கன்ஃபர்மாகிடுச்சு.
சரி, விஷயத்துக்கு வருவோம். முதல்ல “பேச்சிலர் சமையல்”னா  என்னன்னு பார்ப்போம். எல்லாத்திலயும் தெளிவா இருக்கணும்லே? 
(பேச்சிலர் - க்கு தமிழ்ல என்னங்க? ’பேச்சிலர்’னு ஆங்கிலத்திலயே தமிழில் எழுதும்போது, ‘பேச்சுரிமை இல்லாதவர்கள்’னு நேரெதிரா அர்த்தம் வருது!!)

வேலை நிமித்தம் தனியாக வசிக்கும் ஆண்களுக்கு சமையல் செய்றதுக்கான நேரமும், ஆர்வமும் குறைவு என்பதால், எளிதான செய்முறைகள் அவங்களுக்கு வேலையை இலகுவாக்கும். அதே சமயம், உணவு தரும் சத்துக்களும், சக்தியும் (nutrient value) குறைவில்லாம முழுமையா இருக்கணும். அதாவது ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...

ஆங்கிலத்தில் “one pot meal” என்று சொல்வாங்க. அதாவது, சாதம், குழம்பு, பொரியல்னு பல பாத்திரங்களில் தனித்தனியே சமைப்பது கடினமானது மட்டுமல்ல, நேரத்தை விழுங்கும் வேலை. அதையே, எல்லாம் சேர்த்து ஒரே பாத்திரத்தில் ”கலந்த சாதம்”னு செய்தா அதான் “one-pot meal"!! இதுக்கு சைட் டிஷ் தனியா எதுவும் வேண்டாம். அப்பளம், வற்றல், ஊறுகாய் போன்ற ஏதேனுமொன்று இருந்தாலே போதும்.

நல்ல உதாரணம் சொல்லணும்னா, நம்ம பிரியாணியே ஒரு one-pot mealதான். ஆனா, அதுக்கே, தாளிச்சா, எண்ணெய்க் கத்தரிக்காய், பொறிச்ச கறி, சிக்கன் ஃப்ரை, அப்பளம், தயிர்ப்பச்சடி, தக்காளி ஜாம்னு “சைட் டிஷ்கள்” சேர்த்து உண்ணும் ‘ரசனைக்காரர்கள்’ நாம!! :-(((

தனியே சமைக்கும் ஆண்களுக்கு இந்த கலந்த சாதம் எனப்படும் “வெரைட்டி ரைஸ்” மிகப் பொருத்தமான உணவு. சத்துக்களும், சக்தியும் ஒருசேரத் தருவது மட்டுமல்ல, உடல் பருமனுக்குக் காரணமான ’கார்போஹைட்ரேட்’ அதிகம் சேராமலும் தடுக்கிறது. தனியாக குழம்பு, கூட்டு வைத்துச் சாப்பிடும்போது சாதம் அதிகமாகவும், காய்கள் குறைவாகவும் வைத்துச் சாப்பிடுவோம். இதுவே எல்லாம் சேர்த்த கலந்த சாதம் என்றால், கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!! 

குழம்பு, கூட்டு என்று தனியே இல்லாததால், குழந்தைகளுக்கும் சாப்பிடப் பிடிக்கும். ஆக, பல நன்மைகள் ஒன்றாகச் சேர்ந்த கலவைதான் “வெரைட்டி ரைஸ்”!! 

பேச்சிலர் சமையலில் இன்னொரு முக்கிய அம்சம், “தேவையான பொருட்கள்”!! ஸ்ட்ரிக்டா இன்னின்ன சாமான் இருந்தாத்தான் இந்தச் சமையலைச் செய்ய முடியும்னு இல்லாம, அடிப்படைப் பொருட்கள் இருந்தாப் போதும், மீதிக்கு இருப்பதை வைத்துச் சமாளிச்சுக்கலாம் என்கிற மாதிரியா இருக்கணும். அதுவும், இந்த கலந்த சாத வகைகளுக்குப் பொருந்தும். ஏன்னா, பொதுவாவே ஆண்கள் “ஷாப்பிங்” போறதை விரும்பமாட்டாங்க - புடவை, நகை மட்டுமில்லை, காய்கறி, மளிகைக்கும் அப்படித்தான்!! 

இப்ப புரிஞ்சிருக்குமே, “பேச்சிலர் சமையல் போட்டி”ன்னதும் ஏன் எனக்கு கை அரிச்சுதுன்னு? ஏன்னா, நாங்களாம் மட்டன் இல்லாமலே மட்டன் குழம்பு வைக்கிறவங்களாக்கும்!! சரி, சரி, இப்போ சமையலைப் பாப்போம். இன்னிக்குத்தான் போட்டியோட கடைசி தேதி!! ஏற்கனவே லேட்டு, இதிலே வளவளன்னு என்ன பேச்சு...

இன்னிக்கு நாம செய்யப்போற “ராஜ்மா புலாவ்” மேலே சொன்ன எல்லா definitionக்கும் ஒத்து வரும் சமையல். 


என்னடா, முதல்லயே “final product"-ஐக் காட்டாறாளே, ‘தேவையான பொருட்கள், செய்முறை’யெல்லாம் அம்போவான்னு யோசிக்கிறீங்களா?  கடைகளில், முதல்ல நீங்க புடவையப் பாருங்க, அப்புறம் விலை பேசுவோம்னு சொல்வாங்கள்ல, அதுபோல எல்லாம் ஒரு “வியாபாரத் தந்திரம்” தான். அப்பத்தானே உங்களுக்கும் என்மேல ஒரு நம்பிக்கை வரும். :-)

தேவையானவை: (இரண்டு பேருக்கு)
* ராஜ்மா என்கிற சிவப்பு கிட்னி பீன்ஸ் - ஒரு கை அளவு
* பச்சரிசி - 300 கிராம் (சுமார் இரண்டு டிஸ்போஸபிள் கப் அளவு)
  தேங்காய்ப் பால் - 2 கப்
* தண்ணீர் - 2 கப்
  வெங்காயம் - 1
* இஞ்சி - சிறு துண்டு
  பூண்டு - 4 பெரிய பல்
  பச்சை மிளகாய் -4
* பெருங்காயம் - ஒரு மிகச்சிறிய துண்டு அல்லது கால் டீஸ்பூன் 
   (பெருங்காயம் இல்லையென்றால் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட்; அதுவுமிலைன்னா ஒரு நாலு பல் பூண்டு
  கேரட் - 1 (அல்லது பட்டாணி, பீன்ஸ், ஸ்ப்ரிங் ஆனியன் எது இருக்கோ அது)
  மல்லி இலை

தாளிக்க:
* நெய் அல்லது எண்ணெய் - 4 டீஸ்பூன்
   ஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
இதென்னடா, ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்களில் *-Required fieldsனு போட்டிருக்கிற மாதிரி, இங்கேயும்  போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா? ஆமாம், * -போட்டிருப்பதெல்லாம் கண்டிப்பா வேணும். மத்ததெல்லாம் இருந்தா ஓக்கே, இல்லையின்னா டோண்ட் வொர்ரி!! :-))
 

        

ராஜ்மா வேக வைத்தல்:
ராஜ்மா பீன்ஸை ஒரு ஆறு மணிநேரம் ஊறப் போட்டுக்கோங்க. ஊறிய தண்ணீரை வடிகட்டிடுங்க. எப்பவுமே பயறு வகைகளை ஊறப்போட்டத் தண்ணீரை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. வாயுத் தொல்லை வரும். பயறு, பருப்பு வகைகளை வேக வைக்கும்போது உப்பு போடாமல் வேக வைத்தால் சீக்கிரம் வேகும். பிறகு குக்கரில் பயறு  மூழ்குமளவு தண்ணீர் வைத்து, பெருங்காயம் அல்லது இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிய தீயில் வைத்து, 20 நிமிடங்கள் வேக விடவும். வெந்தத் தண்ணீரைப் பத்திரமாக வச்சுக்கோங்க. தேவைப்படும்.

 இல்லைங்க, பயறு ஊறப்போட மறந்துட்டேன் அல்லது அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு சொல்றவங்க, பீன்ஸோடு ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கலாம்.  இதில், வேக வைத்தத் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.

இதுக்கும் சோம்பப்படுறவங்க, ரெடிமேட் டின்களில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸ் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக்கோங்க. அதிலுள்ள தண்ணீரும் வேண்டாம்.


அரிசியை அளந்து பாத்துட்டு, கழுவி  ஊறப்போடுங்க. பச்சரிசிக்குப் பதிலா, புழுங்கலரிசியும் பயன்படுத்தலாம். அப்படின்னா, அரிசியை அரைமணி நேரமாவது கண்டிப்பா ஊறப்போடணும். அரிசி வேகவைக்க (மொத்த) தண்ணீரும், மூணரை மடங்கு வேணும்.

மற்ற எல்லாம் வெட்டி ரெடியா வச்சுக்கோங்க. பாத்திரத்தை அடுப்பில் வச்சு, எண்ணெய் ஊற்றி, ஏலம், கிராம்பு, பட்டை, சீரகத்தைப் போடுங்க. ஒரு அரை நிமிஷம் ஆனதும், வெட்டி வச்சிருக்கிற எல்லாத்தையும் ஒண்ணாப் பாத்திரத்தில் போடுங்க. என்னது? ஒன் பை ஒன்னா? அதெல்லாம் டைம் வேஸ்ட்!! நாம செய்றது “பேச்சிலர் குக்கிங்”, ஞாபகம் இருக்கட்டும். ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே சின்ன தீயில் வதங்கட்டும்.

அதுக்குள்ளே தேங்காய்ப் பால் ரெடி பண்ணுங்க. தேங்காயிலிருந்து ஃப்ரெஷ்ஷாப் பால் எடுத்தாலும் சரி, ரெடிமேட் தேங்காய்ப் பொடியைக் கலக்கினாலும் சரி. தேங்காய்ப் பால், பயறு வேக வைத்த தண்ணீர், அரிசி ஊற வச்ச தண்ணி எல்லாம் சேர்த்து அரிசி அளந்த அதே கப்பினால் அளந்து பாருங்க. அரிசிக்கு இருமடங்கு வரணும். இல்லைன்னா தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைங்க.

இப்ப வடிகட்டிய அரிசி மற்றும் வெந்த பீன்ஸை வெங்காயக் கலவையோடு  சேர்த்து ஒரு நிமிஷம்போல வதக்குங்க. இப்ப கொதிக்கிற தண்ணியை இதில ஊத்துங்க. உப்பு போட மறக்க வேண்டாம். ஒரு கொதி கொதிச்சதும் தீயை குறைச்சு வச்சு, மூடி போட்டு ஒரு இருபது நிமிஷம் வைங்க. அப்புறமென்ன, “சாப்பாடு ரெடி”ன்னு போர்டு வச்சிரலாம்!!

ழுத ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயம் நெருடலா இருந்துது!! நான் இன்னிக்கு சமையல் பதிவு போடுறதுக்கும், நாளை உலகம் அழியப்போவுதுன்னு வந்த வதந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ??

Post Comment

கேள்வியின் நாயகன் - 4

மூணு-மூணரை வயசான (அப்போ) என் பெரியவனுக்கும், உடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் 4 வயது மகளுக்கும் சண்டை வந்தது.

அவள்... “நான் எங்கப்பாகிட்ட சொல்றேன், பாரு..”

இவன்... “ஏஏஏய்ய்.. நான் எங்கம்ம்மாகிட்ட சொல்லிடுவேன்..”

நண்பர் என் கணவரைப் பார்க்க, அவர்..”அமெரிக்காவுலயும் ஜனாதிபதி இருக்காரு... இந்தியாவிலயும் ஜனாதிபதி இருக்காரு... ஐ யம் இண்டியன்!!”

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இன்னொரு குடும்ப நண்பரின் குடும்பமும், நாங்களும் ஒரே காரில் சுற்றுலா போயிருந்தோம்.  அரையே அரை நாள் கழிந்ததும் நண்பர் என்னிடம் “இல்ல.. பொதுவா இந்த வயசுப் பசங்க இவ்வளவு அமைதியா இருந்து நான் பாத்ததில்லை.  உங்க பையன் குணமே அப்படித்தானா, இல்லை மிரட்டி வச்சிருக்கீங்களா?” என்றார்.

நான் என்ன சொல்லன்னு.. அதாவது எப்படி பாலீஷாப் பதில் சொல்றதுன்னு  யோசிச்சுகிட்டிருக்கும்போதே, என் சின்னவன் பாஞ்சுகிட்டு, “மிரட்டிதான் வச்சிருக்காங்க மாமா!” என்றான்.

அவ்வ்வ்வ்... இந்த மாதிரி எல்லார் முன்னாடியும் புத்திரர்கள் உண்மை விளம்பிகளாகும் சமயத்துல, அவங்களைத் திட்டவும் முடியாம... குட்டவும் முடியாம அசடு வழியறது இருக்கே...

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

சின்னவனுக்கு அவ்வப்போது பல் விளக்கி விடுவது உண்டு. ஒருமுறை ’பல் விளக்கும் படலம்’ முடிந்தவுடன்:

“ம்மா... அதெப்படிம்மா நீ தேச்சா மட்டும் பல் க்ளீனா ஆகுது?  நீ இப்ப சும்மாதானே இருக்கே..  பேசாம ‘டெண்டிஸ்ட் டாக்டர்’ ஆகிடு. அப்புறம், எல்லார் பல்லையும் க்ளீன் பண்ணி விடலாம். ”

அடேய்......

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

”Adjectives" படித்துக் கொண்டிருக்கிறான். பள்ளியில் பயிற்சிக்காக வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார்கள். Tea, sun, sea, wind, girl என்று கொடுக்கப்பட்டிருந்த வார்த்தைகளுக்கு நான் நினைத்ததுபோலவே முறையே hot, bright, blue, cool என்று எழுதிக் கொண்டு வந்தவன், அடுத்த வார்த்தையான “girl"க்கு “beautiful" என்று எழுதுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் “a clever girl"  என்று எழுதினான்!!

நான் வளர்த்த புள்ளை வேற எப்படி இருப்பான்!! பெருமை தாங்கலை எனக்கு!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

அவனின் Social science பாடத்தில், “brown rice"தான் நல்லது என்று கொடுத்திருக்கிறது. Brown rice என்றால் என்ன, ஏன் நல்லது, எப்படி எல்லாம் கேட்டுக் கொண்டான்.

“அப்ப ஏன் நாம அந்த அரிசி வாங்குறதில்லை?”

“பிரவுன் ரைஸ் நல்லது. ஆனா, ரொம்ப டேஸ்டா இருக்காது.  நீங்கல்லாம் டேஸ்டா இருந்தாத்தானே சாப்பிடுறீங்க. உங்களுக்கெல்லாம் பர்கர், பீட்ஸாவெல்லாம்தானே பிடிக்குது. அதெல்லாம் வெள்ளை அரிசிச் சோறு மாதிரி பார்க்கவும் சாப்பிடவும் நல்லாருக்கும். ஆனா ஹெல்த்தி ஃபுட் கிடையாது.  ஹெல்த்தியான சாப்பாடு டேஸ்டா இருக்காது. அது எங்கே புரியுது உங்களுக்கு?”

ஒரு அரை நிமிஷம்போல யோசிச்சுட்டுச் சொன்னான், “நீ சமைக்கிற எல்லா சாப்பாடுமே ஹெல்த்தி ஃபுட், இல்லியாமா?”

ஹூம்... எனக்கு வில்லன் வெளியே இல்லை...

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

பக்கத்து வீடு
பக்கத்து வீட்டிற்கு மீண்டும் வாகனம் வந்த சத்தம் கேட்டது. சில மாதங்களாகவே காலியாயிருந்த  பக்கத்து பங்களாவிற்கு வரப்போவது யாராக இருக்கும் என்று ஆர்வமாக இருந்தது.  இரண்டு மூன்று நாட்களாக க்ளீனிங், பெயிண்டிங், மெயிண்டெனன்ஸ் எல்லாம் முடிந்து, இன்று வீட்டு உபயோகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் - அதுவும், “ராயல் ஃபர்னிச்சர்”, “ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்”, “ஜஷன்மால்” போன்ற உயர்ரகக் கடைகளிலிருந்து!! நான் நினைத்தது போலவே வரப்போவது ஒரு அமீரகக் குடும்பம்தானாம், என்னவர் சொன்னார்.

பெரிய குடும்பமில்லையாம், புதுமணத் தம்பதியராம். ஓ, அதான் புதுப்புது சாமான்செட்டு வருதா? எல்லாம் பெண்வீட்டு சீதனம் என்று நினைச்சிட்டீங்களா? இல்லை, இங்கே தலைகீழ்!!

இத்தனை வருஷமா இங்கே அமீரகத்தில் இருந்ததில், அமீரக மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓரளவு தெரிஞ்சுகிட்டேன்.  அமீரக அரசு, தன் குடிமக்களை எப்படித் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறதுன்னு விலாவாரியாச் சொல்லி உங்களையும் புகைய விட்டாத்தான் எனக்கும் மனசு ஆறும்!! :-)

அமீரகத்தில் ஒரு திருமணம் முடிவானதும், மணமகன் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஒரு தொகையும், இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்குத் தனியே “மஹர்” என்ற தொகை அல்லது அசையாச்சொத்து கொடுக்க வேண்டும். கல்யாணம் என்பது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறு வைபவம்; அதன்பிறகு
ஒருநாள் மணமகன் தன் செலவில் இருவீட்டு உறவுகளுக்கும் பெரிய விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். பிறகே தனிக்குடித்தனம்.

மணமகளுக்கான திருமண உடை தொடங்கி, fully-furnished தனி வீடு, உதவிக்கு பணிப்பெண், வெளிநாடுகளுக்குத்  தேனிலவுப் பயணம், சிலசமயம் மனைவிக்குத் தனிக் கார் உட்பட எல்லாச் செலவுமே முழுசா மணமகனோடதுதான். நம்ம ஊர்ல கட்டுன சேலையோட வர்றதுன்னு சொல்வாங்களே -  அது இங்கே நிஜம்! கண்ணுமுழி பிதுங்குதா??!! இவ்வளவுக்கும் சம்பாதிச்சுட்டு கல்யாணம் பண்றதுன்னா, வழுக்கை விழுந்திடுமேன்னு தோணுதா?

அப்படியெல்லாம் இல்லை. அமீரகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் பலவித சலுகைகள் தரப்படுகின்றன. கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம். தவிர தேவையைப் பொறுத்து வீடு கட்ட நிலம்+பணம் அல்லது கட்டிய புதுவீடே இலவசமாகக் கொடுக்கப்படும். வீடுகளில் தண்ணீர், மின்சாரமும் இலவசம்!! மேலும், படித்து முடித்தவுடன், தகுதிக்கேற்றவாறு அரசாங்க நிறுவனங்களில்  வேலை அல்லது தனியே தொழில் தொடங்க அரசு முதலீடு தரும்.  அப்புறமென்ன, திருமணத்துக்கு சேமிச்சு ரெடியாகிடலாம். இதுதவிர, மணமகனுக்கு அரசாங்கமே “திருமண உதவித் தொகை” என்று ஒரு பெருந்தொகையைக் கொடுக்கிறது. பெற்றோர்களும் முடிந்தால் உதவலாம். அப்புறமென்ன?

ஒருமுறை ஒரு அரபுத் தாயிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “எனக்கு மூன்று மகள்கள்; நல்லவேளை ஒரே ஒரு மகன். இறைவனுக்கு நன்றி.” என்றார்.

முன்பு என்னுடன் வேலை பார்த்த அமீரகப் பெண்ணின் தங்கையின் திருமணத்திற்குச்  சென்றிருந்தேன். நிகழ்வுகளைப் பார்த்துக் கொஞ்சமல்ல, ரொம்பவேப் பொறாமையாக இருந்தது. முக்கியமாக, பெண்களுக்கான மண்டப வாசலில், இரு தரப்பு அம்மாக்கள், சகோதரிகள் இணைந்து நின்று, வருபவர்களை வரவேற்கிறார்கள்.  ”மாப்பிள்ளையோட, மச்சானோட சின்னம்மாவோட ரெண்டு விட்ட அண்ணனை உங்க அம்மா வாங்கன்னு சொல்லலை” என்று எந்தக் கம்ப்ளெயிண்டும் கிடையாது!!

அரங்கம் ஓரளவு நிரம்பியதும், மணமகளை அழைத்து அமர வைக்கிறார்கள்.  மேடைக்குப் போய் மோதிரம் போடுறது, டின்னர் செட் கொடுக்கிறது,  மொய் எழுதுறது - ஊஹும்... எதுவ்வும் இல்லை!! போலவே விருந்துக்கும் எல்லாரும் ஒரே மாதிரி அழைக்கப்பட்டு அமரவைக்கப்படுகிறார்கள். மேசைகளில் உணவு பரிமாறப்பட்டு ரெடியாக இருக்கிறது. மைனிகளுக்கும், அவர்களின் மாமியார்களுக்கும் தனியாக ஸ்பெஷல் பொறிச்ச கறியெல்லாம் கிடையாது!!

இவ்வளவுதான் திருமண விழா!! கல்யாணமும் முடிஞ்சுது, கத்தரிக்காயும் காய்ச்சுதுன்னு கிளம்ப வேண்டியதுதான். நம்ம ஊர் ஜமாத்களிலிருந்து மக்களை இந்த ஊர் கல்யாணங்களுக்கு அழைச்சு வந்து காமிக்கணும்!! :-(

நம்ம ஊர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் காணப்படுற உணவு வீணடித்தல் இங்கும் இருக்கிறது. நேற்று செய்தித்தாளில், மிக முதிய அமீரகப் பெண்மணி ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி,  ”எங்கள் காலங்களில் நாங்கள் தேவைக்கு மட்டும் சமைத்து உண்டோம். இன்றோ உணவு பெருமளவு வீணடிக்கப்படுகிறது.” என்று வருத்தப்பட்டுக் கண்டித்திருந்தார்.

உண்மைதான், நம் நாட்டைப் போலவே இளந்தலைமுறையினரிடம் அதிகப் பணப்புழக்கம் இருப்பதால், உயர்ரகக் கார்கள், எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் பயன்பாடு அதிகம் உள்ளது. பணத்தின் அருமை முதியவர்களுக்குப் புரிந்ததுபோல,  இளையவர்களுக்கு இன்னும் புரிபடவில்லை.

எனினும், இளைய தலைமுறையினர் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நம் நாட்டுக் இளைஞர்களைப் போலவே, மேலைநாடுகளில் படித்து பட்டம்/முதுநிலைப் பட்டம் பெறுகிறார்கள். மேலும், இங்கே அமீரகத்திலேயே நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்  கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவின் பிட்ஸ்-பிலானி கிளைகூட உண்டு தெரியுமா?

பெண்கள் முன்னேற்றமும் - படிப்பு, வேலை, தொழில்கள் ஆகியவை நம் நாட்டுக்கு இணையாகவே உள்ளது. அநேகம் பெண்கள் படிச்சு, நல்ல வேலைகளில் இருக்காங்க அல்லது சுயதொழில் செய்றாங்க.  ஆனால் இதனால் வீட்டில் பணியாளர்களை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியிருப்பதால், குழந்தைகள் வளர்ப்பில் இதன் பக்க விளைவு எதிரொலிப்பதாகவும் அமீரகப் பெரியவர்கள் வருத்தப்படுறாங்க.  இன்னொன்று,  இந்தியாவைப் போலவே இங்கும் லேட் மேரேஜ், விவாகரத்து விகிதம், விவாகரத்தான பெண்கள் தனித்து வாழ விரும்புவது ஆகியவை அதிகரித்து வருகிறது. நாட்டுக்கு நாடு வாசப்படி!!!

நான் கேட்டு வியந்த ஒரு சம்பவம் உண்டு. ஒரு நண்பருக்கு அறிமுகமான அமீரகக் குடிமகன் ஒருவருக்கு (முதல்)  திருமணம் ஆனது. திருமண ஒப்பந்தம் கையெழுத்தான ஒருசில தினங்களில் அப்பெண் விவாகரத்து வாங்கிக் கொண்டாள். அப்பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம், முதல் முறையும் இதேபோலவே ஒப்பந்தம் கையெழுத்தானதும் விலகினாளாம்!! இதில் யார் பக்கம் சரியோ, தவறோ. ஆனால், அப்பெண் துணிச்சலாக இருமுறை உடனடி விவாகரத்து கோரும் சாதகமான சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்!!

ஆம், இங்கு விவாகரத்து அதிகம் இருந்தாலும்,  விவாகரத்தான பெண் மறுபடி முதல் தாரமாகவே வாழ்க்கைப் படுமளவுக்கு, மறுமணம் என்பதும் மிக சகஜமான ஒன்று.

ஒரு குடும்பத்தில் பல சகோதர சகோதரிகள் இருந்தால், முதலில் அக்காவுக்குக் கல்யாணம், பிறகு தங்கைக்கு என்றெல்லாம் கிடையாது. யாரைப் பெண் கேட்டு வருகிறார்களோ, அது கடைசிப் பெண்ணாக இருந்தாலும், உடன் திருமணம். போலவே சகோதரர்களுக்கும் - சகோதரிகளின் திருமணம் முடிந்துதான் அண்ணனுக்குக் கல்யாணம் என்கிற சம்பிரதாயங்களெல்லாம் கிடையாது.  இதற்கு வரதட்சணை, சீர்கள், கூட்டுக்குடும்பம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

ஆண்கள் திருமணமானதும் (பொருளாதாரத்தைப் பொறுத்து) உடனே தனிக்குடித்தனம் போய்விடுவார்கள்!! இதனாலேயே மாமியார்/நாத்தனார்-மருமகள் பிரச்னைகளெல்லாம் இல்லையோ என்னவோ. அதற்காக பிள்ளைகள் தம் பெற்றோரை அப்படியே விட்டுவிடுவதில்லை. வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை!! அமீரகக் குடும்பங்களில் தாய்க்கே அதிகாரம் அதிகம். பல அமீரகத் தொழிலதிபர்கள் பேட்டி கொடுக்கும்போது, தன் தாய்க்கு இன்றும் கட்டுப்படுவதுண்டு என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். மேலும், வீடு, மருத்துவம், உதவித் தொகை உள்ளிட்ட பெரிய செலவுகளுக்கெல்லாம் அரசே பொறுப்பேற்றுக் கொள்வதால், பணத்திற்காக பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் அவசியமும் இல்லை!!

எங்கள் பக்கத்து வீட்டுத் தம்பதியரும் வாரம் தவறாமல், வேறு மாநிலமான ராஸ்-அல்-கைமாவில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுவர். கணவர், விண்வெளித் துறையில் வேலை பார்க்கிறார். மனைவியும் ஒரு அரசு நிறுவனத்தில்.

உறவுமுறைத் திருமணங்கள் அதிகம் என்பதால், அவசியத்தை உணர்ந்து, திருமணத்திற்குமுன் மருத்துவப் பரிசோதனைகள் பல வருடங்களுக்குமுன்பே கட்டாயமாக்கப்பட்டுவிட்டன.  இந்நாட்டு மக்கள் மனவளர்ச்சிக் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளை ”இறைவனின் நன்கொடையாகக்” கருதுகிறார்கள் என்று செய்தித்தாளில் வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் மரணத்தை மிக இலகுவாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இங்கும் கிராமங்களும், அங்கு வாழும் எளியவர்களும் உண்டு. ஏன் நாகரீகம் பெரிதும் எட்டாத மலைவாழ் மக்கள்கூட உண்டு. ஆனால், சுகாதாரம், கல்வி வசதிகள் எட்டாத இடம் இல்லை.

விவசாயம் பெரிதும் போற்றப்படுகிறது. மானியங்களும், இலவச தண்ணீர்-மின்சாரம், உற்பத்திப் பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் எல்லாம் உண்டு. புதிய முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார்கள். இதனால், கடும் கோடையிலும் குறையாத உற்பத்தி தரும் Green-house farming பயன்பாட்டில் உள்ளது. மண் இல்லாமல், தண்ணீரில் பயிர் செய்யும் Hydroponics முறையும்  ஒரு (படித்த) விவசாயி மேற்கொள்கிறார்!!

கல்வி, மருத்துவத்துறைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது அரசு. அரசுப் பள்ளிகளில், பாடங்கள் அரபிமொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, எல்லா ஆசிரியர்களுக்கும் தற்போது ஒரு வருட பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் புலமையை அதிகரிக்க பிரைமரி வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆங்கிலேய ஆசிரியையும் பிரத்தியேகமாக வரவழைத்து நியமித்துள்ளார்கள்.

அரசு மருத்துவமனைகளும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் போன்ற பிரபல மருத்துவமனைகளோடு இணைந்து செயலாற்றும்படி சீரமைக்கப்பட்டு, பல அரிய சிகிச்சைகள் இங்கேயே கிடைக்குமளவு தரம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.  நாட்டின் வளர்ச்சிக்குரிய இத்தனை ஏற்பாடுகளும், நாட்டின் பெட்ரோலிய மற்றும் இதர வருமானங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. தனிநபர் வருமான வரிகள் உட்பட பல வரிகள் இங்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அமீரகத்தின் தொடர் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்நாட்டின் தொலைநோக்குள்ள ஆட்சியாளர்களே காரணம். மக்களோடு மக்களாகக் கலந்து பழக முனையும் முயற்சியாகவும், நிர்வாகத்தைக் கண்காணித்து முறைப்படுத்தவும் ஆட்சியாளர்கள் அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சேவை மையங்களுக்கு திடீர் வருகைகள் தருவதுண்டு. அமீரக “தேசிய தினமான” நேற்று (டிசம்பர் 2) வெளிநாட்டு மக்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் மொபைல் ஃபோனில் வாழ்த்துச் சொல்லி, உப ஜனாதிபதியான துபாய் ஆட்சியாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி!! 
நேற்றைய தேசிய தினத்தின் கொண்டாட்டங்களில், இந்நாட்டு குடிமக்களுக்கு இணையாக, வெளிநாட்டினரும் குறைவில்லாத உற்சாகத்துடன் தம் வீடுகள், கார்களை அலங்கரித்துக் கலந்துகொண்டது ஒன்றே சாட்சி, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நாடு இது என்பது!!

Post Comment

வீட்டு வேலை

”ஏய் ரகுமத்து... என்னா செய்றே? இங்க வா.. வந்து இந்த துணியளக் கொண்டு போய் வாஷிங் மெஷின்ல போடு!!”

“என்னம்மா... இப்பத்தான் பரிச்சை முடிஞ்சு லீவு ஆரம்பிச்சிருக்கு... அதுக்குள்ள வேலை சொல்ல ஆரம்பிச்சுட்டியா... கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க விடும்மா..”

“வயசுப் புள்ளைக்கு என்ன ரெஸ்ட் வேண்டிக் கிடக்கு? அப்படி என்ன வெட்டி முறிச்சுட்ட? சும்மாவே இருந்துகிட்டு ரெஸ்ட் வேற வேணுமாக்கும்? என்னவோ கையாலேயே துவைக்கப்பொற மாதிரிதான்...”

“ம்மா... சும்மா தொணதொணங்காதே... துணிய வாஷிங் மெஷின்லதான போடணும்.. அவளவ்தான? அப்புறமாப் போட்டுக்கிறேன்.. ஆள விடு...”

”ஆமாமா... நானெல்லாம் பேசினா உனக்கு அப்படித்தான் இருக்கும். என் பேச்சைக் கேட்டா, ஒனக்குத்தான் நல்லது. இல்லாட்டிப் போனா, நாள பின்ன நீயி போற வீட்டுல அம்புட்டுப் பேரு வாயிலயும் வுழுந்து எந்திக்கணும். அதுக்குத்தான் சொல்லுறேன்....”

அதைக் கண்டும் கொள்ளாமல், பதிலும் சொல்லாமல், கையில் மொபைலும், காதில் ஹெட் ஃபோனுமாய் ரஹமத் சோஃபாவில் புதைந்து கொள்ள, ஜன்னத் ஆயாசமாய் புலம்ப ஆரம்பித்தாள். சரியாய் அந்நேரம் ஜஃபருல்லா பாய் வீட்டினுள் நுழைய, பஞ்சாயத்துத் தலைவரைக் கண்டது போல பிராது கொடுக்கத் தொடங்கினாள்.

எல்லா வேலயும் நானேதான் பார்க்கணுமா? கொஞ்சம் கூட மாட ஒத்தாச செஞ்சா, அப்படியே எல்லா வீட்டுவேலையும் படிச்சுக்கலாம்ல? உங்க அருமந்த புள்ளைகிட்ட நீங்களாவது கேளுங்க... எம்பேச்சையெல்லாம் யாரு மதிக்கிறா இங்க..?”

”புள்ளைக்கு இப்பத்தானளா பரிச்சை முடிஞ்சிருக்கு. ஒரு வாரம் போவட்டும். அப்புறம் வேலையெல்லாம் டாண்டாண்னு செஞ்சுத் தருவாப்ல... நீயே அசந்துட மாட்டே”

“ஆமா... புஸ்தவத்தைப் படிச்சதுலயே களச்சு போயாச்சு உங்க வாரிசு... நா என்ன அம்மி அரைக்க, ஆட்டுரல ஆட்டவாச் சொல்லுறேன்... மாடு மாதிரி வளந்து நிக்கிது.. மிக்ஸில ஒரு தேங்கா அரக்கத்  தெரியுமா? அட கிரைண்டர் ஆன் பண்ண சுச்சு எங்கருக்கான்னாவது தெரியுமா உங்க புள்ளக்கி?”

“எளா... இதெல்லாம் பெரிய்ய விசியமா.. அதெல்லாம் தேவைன்னு வரும்போது தன்னால படிச்சிக்கிடும்... வுடுளா...”

“ஆமா... இப்படியே என்னயேச் சொல்லுங்கோ... நாள பின்ன, எட்டுப்பத்து பேரு இருக்க வூட்ல ஒருவேலையும் தெரியாம முழிச்சுகிட்டு நின்னா தகப்பனையா கொற சொல்லுவாங்க? அம்மக்காரி வளத்த லச்சணத்தப் பாருன்னு எந்தலயல்ல ஊர்ல உருட்டுவானுவோ?”

”அதெல்லாம் உருட்ட மாட்டாங்க. இத்தன வருசம் படிச்சிட்டிருந்த புள்ளக்கி வூட்டு வேல செஞ்சுபடிக்க நேரம் இருககாதுன்னு தெரியாதா என்னா அவுகளுக்கு? அந்த வூட்ல இருக்கவுகளும் ஆரம்பத்துல இப்படிச் சின்னஞ்சிறுசா அறியாம புரியாம வாழ வந்தவுகதானே? அதெல்லாம் அஜ்ஜஸ் பண்ணிப்பாவோ... நீ சும்மா இரு..”

”இப்படியே என் வாயை அடைக்கிறதிலியே குறியா இருங்கோ...  நானெல்லாம் இந்த வயசுல..”

“எளா... சும்மாயிருளா.. எல்லாரும் எல்லா வேலயும் படிச்சிகிட்டா பொறந்து வர்றோம். நானும் மொதல்ல ஹாஜியார் இரும்புக் கடைல வேலைக்கிச் சேந்தோடனே கல்லாவுலயா ஒக்காந்தேன்? டீ வாங்கியாறது... தண்ணி பிடிக்கது, கடயத் தூத்து வார்றதுன்னுதான் ஆரம்பிச்சேன்... இப்பம் நம்ம கடேலயும் அஞ்சாறு பேருக்கு டிரேனிங் கொடுக்கோம்ல? அத மாரி...”

“அட அதத்தான நானுஞ் சொல்றேன்... எல்லா வேலயும் படிச்சுகிட்டு போனோம்னா இந்த மாரி எடுபுடி வேலயெல்லாம் செய்ய வேணாம். நேரா மெயினான வேலைல ராசாவாட்டம் ஒக்காந்துக்கலாம்.  நம்ம ரகுமத்தும் அடுப்பு வேல எல்லாந்தெரிஞ்சுகிட்டுப் போனா, போற இடத்துல பகுமானமா அடுப்புல நின்னு தாளிச்சுக் கொட்டிட்டு நவுண்டுடலாம். இல்லயினா, வூடு தூத்து துடைக்கிறது, சாமாஞ்செட்டு கழுவுறது, அடுப்பங்கரையை கழுவிவுடுறதுன்னு கஸ்டமான வேலையெலாம் புதுசா வந்தவந்தலயில போட்டுடுவாஹ.. ”

“வாட் ரப்பிஷ்!! அம்மா!!  நான் எம்.எஸ். படிக்க ஸ்டேட்ஸ் போப்போறேன்!! அங்க ஆல்ரெடி  ஒரு வீட்டுல
ஷேர் பண்ணி ஒண்ணா சேந்து சமச்சு குடியிருக்கிற என் சீனியர் ஃப்ரண்ட்ஸ் கூட நானும் ஜாயின் பண்ணிக்கப் போறேன். ஏதோ வேலையில ஜாயின் பண்ணப்போற மாதிரி, இதுக்குமா ”எக்ஸ்பீரியன்ஸ்”  தேவை?” என்று கத்தினான் ரஹ்மத் என்கிற ரஹ்மத்துல்லா கான்.

Post Comment

ஈயம் பித்தளை
அமீரகத் தமிழ் மன்றம், மகளிர் தினத்தையொட்டி சென்ற ஏப்ரல் மாதம் “பெண்ணியம் எனது பார்வையில்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தியது. அதற்கென அனுப்பி வைத்த எனது கட்டுரை, மூன்றாம் பரிசைப் பெற்றது. 

அதற்காக வழங்கப்பட்ட ஷீல்ட் (பட்டயம்??): 

கட்டுரையைக் குறித்து, நடுவர்களில் ஒருவர் தெரிவித்திருந்த கருத்து: 

பெண்ணியம் பற்றிய ஆராய்வை தர முயற்சித்திருப்பது கொஞ்சம் திருப்தியாய் இருக்கிறது. ஆனாலும் பெண்ணியத்தை பரந்த அணுகுமுறையில் யாருமே பார்க்கவில்லை அதில் இந்த கட்டுரைக்குரியவரும் விதிவிலக்கல்ல. ஆனாலும் எழுத்தாக்கம் கொஞ்சம் சிறப்பானதாக இருக்கிறது மற்றைய கட்டுரைகளை விட என்பது எனது கருத்து. ஆகையால் 3வது இடம்.

இனி, கட்டுரை:  
பெண்ணியம் - எனது பார்வை

முன்னுரை:

பெண்ணியம் - இந்த வார்த்தையை வாசிக்கும்போதே சிலருக்குப் பரிகாசப் புன்னகை தோன்றும்; சிலருக்கு உணர்ச்சிகள் பொங்கும்; சிலரோ இதற்குரிய சரியான பொருளைத் தேடும் முயற்சியில் இறங்குவர். நானும் இறங்கினேன். கிட்டியவற்றைப் பகிர்கிறேன் உங்களோடு. 

இது “பெண்”ணியம் என்பதால், பெண்தான் இதைக் குறித்து ஆராயவேண்டும், பேசவேண்டும் என்ற எண்ணம் முதலில் மாற வேண்டும். ஆணும், பெண்ணும் இயைந்து வாழ்வதே சமூகம். ஆகவே, பெண்ணைக் குறித்து ஆணும், ஆணைக் குறித்துப் பெண்ணும் அறிந்து கொண்டால் மட்டுமே நல்லிணக்கம் கிட்டும். அதன் ஒரு வழியே ‘பெண்ணியம்’ பேசுதல்!! 

பெண்ணியம் - வரைமுறை: 
 
‘பெண்ணியம்’ (Feminism) என்றால் என்ன? ”ஆண்களுக்குச் சமமான, அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் பெண்களுக்கு வழங்குவது” என்றும், ”பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் தருவது” என்றும், இதற்குப் பல வரைமுறைகள் தந்திருக்கும் விக்கிபீடியா, ”பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு” என்றும் சொல்கிறது. கட்டுரையின் போக்கில் இதன் சரியான வரைமுறையைப் பார்ப்போம். 

பெண்ணீயத்தின் வரலாறு: 

ஆதிகாலத்தில், ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்தே பிழைப்புக்கான வழிகளைத் தேடுவார்களாயிருந்திருக்கும். பிறகு, குழந்தைகள் வந்ததும், அவற்றை மிருகங்களிடமிருந்தும், இயற்கைப் பேராபத்துகளிடமிருந்தும் காத்துக் கொள்ளவென்று பெண் மட்டும் வேட்டையாடுதலைவிட்டு குகைக்குள் தங்கவேண்டி வர, அப்படியே காலப்போக்கில் சமையல், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட ‘குடும்பப் பொறுப்புகள்’ அவள் தலையில் வீழ்ந்தன. 

உணவுக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் வெளியே பல இடங்களுக்கும் சென்று வர வாய்ப்புகள் கிடைத்த ஆண், அனுபவங்கள் தந்த அறிவினாலும், உழைப்பு தந்த உடல் வலுவினாலும் பெண்ணைவிடச் சிறப்பானவனாகிவிட, அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் பெண்ணின்மீதான ஆணின் ஆதிக்கமும், அதிகாரமும்!! உணவு இன்னபிற இன்றியமையாத தேவைகளுக்காக ஆணையே, பெண் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், ஆணின் அடக்குமுறைகளுக்கு அவள் பணிந்தே ஆக வேண்டிய சூழல் இருந்தது. 

மேலும், பெண்களும், குழந்தைகளும் ஆணின் பராமரிப்பில் இருந்ததால், அவர்கள் ஆணின் உடமைகளாகவே பார்க்கப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஏற்றமும், தாழ்வும் சம்பந்தப்பட்ட ஆணின் பெருமைக்கு அணி சேர்ப்பதாகவோ, இழுக்காகவோதான் நோக்கப்பட்டன. 

அதனால் காலப்போக்கில், இரு ஆண்களுக்கிடையே சண்டை வந்தால், அவர்களின் எதிரியின் பொருட்களுக்கு மட்டுமின்றி, ’உடமை’களான பெண்களையும் சேதப்படுத்த முனைந்தனர். இந்த ‘சேதம்’ உரிமையான ஆணிற்குத் தோல்வியாகக் கருதப்பட்ட சமயத்தில்தான் ‘கற்பு’ என்ற கருத்து களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். 

இப்படியாக, பொருளாதாரப் பலமில்லாத பெண், ஆணுக்கு அடிமைப்பட்டவள் ஆகிப்போனாள். உலக அறிவோ, உடற்பலமோ இல்லாத நிலையில், இந்த அடிமைத் தளையிலிருந்து அவளால் மீள முடியவில்லை. இதற்குள் “குடும்பம்” என்ற அமைப்பும் ஏற்பட்டிருக்க, ”மீள வேண்டும்” என்று நினைத்தாலும் குடும்ப பந்தங்கள் என்ற நிர்பந்தத்தால் தளையிலேயே தொடரவேண்டியவளானாள். 

னினும், ஒரு கட்டத்தில் பெண்ணினத்தின்மீதான அடக்குமுறைகள் - வன்முறை, அடிமைத்தனம், பாலியல் சுரண்டல், பால்ய விவாகம், கல்விமறுப்பு, வாக்குரிமை மறுப்பு - என்று பல்வேறு அவதாரங்களெடுத்து அளவின்றி போனதால், பெண் தடைகள் உடைத்துப் பொங்கி எழுந்தாள். முதல்படியாக, பொருளாதாரத்தில் ஆண் உயர்ந்து இருப்பதால்தானே, அவன் கை ஓங்கியும், பெண்கள் கை தாழ்ந்தும் இருக்கிறது என்று எண்ணி, தானும் கல்வி கற்று, பொருளீட்டும் முயற்சிகளில் இறங்கினாள். இத்தருணங்களில்தான் பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் ஆகியவை உருப்பெற்று விவாதக் களமாகின. 

இன்று அநேகமாக ஆணுக்குச் சமமாகவே பெண்களும் பொருளாதாரத்தில் மேன்மை பெற்று விளங்குகின்றனர். எனில், அப்பெண்கள் விடுதலை அடைந்துவிட்டனரா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி!! 

தற்காலப் பெண்ணியம்: 

ஒருமுறை, தொலைக்காட்சியில் ஒரு பிரபல கலந்துரையாடல் நிகழ்வில், பெண்களிடம் “ஏன் சிகரெட் புகைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “ஆண் மட்டும்தான் புகைக்கலாமா? எங்களாலும் முடியும் என்று காட்டவே புகைக்கிறோம்” என்று சில பெண்கள் சொன்னதைக் கேட்டபோது மூச்சடைத்தது!! இதிலே ஒரு பிரபல பெண் பத்திரிகையாளரும் உண்டு என்பது கூடுதல் அதிர்ச்சி. 

இதே தவறைத்தான் பல பெண்கள் இன்று செய்து வருகின்றனர். “அதென்ன ஆம்பளை மட்டும்தான் குடிப்பது, இரவுபகல் பாராமல் நண்பர்களோடு ஊர்சுற்றுவது? நாங்களும் செய்வோம்” என்று இளம்பெண்களும்; “ஆண் நேரங்காலம் பார்க்காமல் அலுவலகப் பணியில் ஈடுபடவில்லையா? எங்களாலும் முடியும்” என்று பால்குடி மாறா குழந்தையைப் புறக்கணிப்பது; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் பெண்ணியம் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், ஒன்று புரியவில்லை; ஆண்கள் உடலை வெளிக்காட்டும் விதமாக ஆடை அணிவதில்லை. பின் ஏன் எல்லாவற்றிலும் ஆண்களோடு போட்டி போடும் இந்தப் பெண்கள் மட்டும் இப்படி அணிகிறார்கள்? பெண்ணை வேடிக்கை, விளம்பரப் பொருளாக்கும் வியாபார உலகின் தந்திரங்களுக்கு இவர்கள் இரையாகிப் போனதுதான் இதற்குக் காரணம். வேதனையிலும் வேதனையான உண்மை!! உதாரணத்திற்கு, பெண்களுக்கான ’ஊசி உயர் குளம்பு’ (பென்சில் ஹைஹீல்ஸ்) செருப்பு வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகிறார்: ” ஹை ஹீல்ஸ் அணிவது பெண்ணுக்கு அதிகாரம் தருகிறது; அவளைப் பெண்ணாக உணர வைக்கிறது” என்று!! வெறுமே உயரத்தைக் கூட்டும் ஒரு செருப்பு என்ன அதிகாரத்தைத் தந்துவிடப் போகிறது? மருத்துவ உலகமோ ஹை ஹீல்ஸை முற்றிலும் தவிர்த்து உடல்நலம் காக்க அறிவுறுத்துகிறது. இதையும் மீறி, அவ்வியாபாரி போன்றவர்களின் லாப நோக்குகளைப் புரிந்துகொள்ளாமல் ஹைஹீல்ஸ் அணிந்து உடல் சீர்கேட்டை வருந்தி வரவழைத்துக் கொள்பவர்களைத்தான் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம். 

இங்ஙனமே, பெரும்பாலான பெண்கள், குடும்பத்திற்குக் கூடுதல் பொருட்தேவை இல்லாத பொழுதிலும், பொருளாதாரத்தில் ஆணைப் போலாகிவிடவேண்டுமென்ற போட்டி மனப்பான்மையுடனும், பொருளாதாரச் சுதந்திரமும் பெற்றிருப்பதே பெண்ணியம் என்ற தவறான கணிப்பினாலும் குழந்தைநலத்தையும், குடும்பநலனையும் பின்தள்ளிவிடுகிறார்கள். இந்தப் போட்டியில், தான் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும் ஆக்கப்பட்டிருப்பதை உணராமல், தன் நலனையும், ஏன் சுதந்திரத்தையும்கூட இழந்து, வாழ்வை ரசிக்க நேரமில்லாமல் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டேயிருக்கிறாள். 

ஒரு காலத்தில் அதீதமாய் அடக்கியாளப்பட்டிருந்த காரணத்தால், விடுதலை கிடைத்ததும் கரைகள் உடைத்த காட்டாற்று வெள்ளமாய்ப் பயணிக்க முனைகின்றனர் இவர்கள். தறிகெட்ட காட்டாற்று வெள்ளம் அழிவையேத் தரும் என்பதை உணராமல் போனதேனோ? 

ஒருபுறம், இப்படியானப் பெண்கள் என்றால், சமூகத்தின் இன்னொரு புறம் தன் உரிமைகள் என்னவென்றே தெரியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் அடித்தட்டுப் பெண்கள்!! படிப்பறிவும், சுய அறிவும் இல்லாமல் தன் வீட்டு ஆணின் பங்கையும் சேர்த்துத் தானே உழைத்துப் பொருளீட்டி, அந்த ஆண் உட்பட குடும்பத்தின் மொத்தப் பாரத்தையும் மட்டுமல்லாமல், அந்த ஆணின் வன்முறையையும் அடக்குமுறையையும்கூட தன் மெல்லிய தோள்களில் தாங்கிக்கொண்டிருக்கும் இவர்களிடம் பெண்ணியம், பெண்ணுரிமை என்று பேசிப்பாருங்கள் – பேந்தப் பேந்த விழிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது அவர்களுக்கு!! 

நுனிநாக்கு ஆங்கிலமும், நாகரீக உடையும் அணிந்து கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்ட அறைகளில் உயர் உத்தியோகம் பார்க்கும் பெண்களைப் பார்த்து, பெண் முன்னேற்றம் என்று பெருமைப்படும் நாம், நைந்த உடையும், பஞ்சடைத்த கண்களுமாய் மண்சட்டி சுமக்கும் அந்த அடித்தட்டுப் பெண்களைப் பார்த்து ஏன் பரிதாபப்படுகிறோம்? அவர்களும் உழைத்துப் பொருளீட்டுபவர்கள்தானே? 

பெண்ணியம் - எனது பார்வை: 

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது; இதில் அர்த்தம் உள்ளது” என்றார் கண்ணதாசன். அதேபோல, ஆணோ, பெண்ணோ அவரவர் பொறுப்பு, கடமை அறிந்து நடந்துகொள்ளவேண்டும். 

ஆணுக்கென்று கடமைகள் உண்டு; அவற்றில் அவன் வழுவாது இருத்தல் ஆண்மைக்குப் பலம் சேர்க்கும். அதேபோல பெண்ணிற்கான இயற்கையான கடமைகளை முதற்கண் பேணி நடத்தலே பெண்ணினத்தின் பெருமை. 

ஆணுக்குச் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளைப் பெண்ணுக்கு வழங்குவதுதான் பெண்ணியம் என்பது சிலரின் கருத்து. இல்லவே இல்லை. பெண்ணுக்கு யாரும் எந்த உரிமையும் தரத் தேவையில்லை. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதாக எந்த இனமானாலும், அதனதன் உரிமைகள் அவற்றுடன் உடன்பிறந்தவையே. பெண்ணினத்துக்கும் அதுபோல உரிமைகள் உண்டு. அந்த உரிமைகளை – சமூக, கல்வி, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் - அவளிடமிருந்து பறித்துப் பிடுங்காதிருப்பதே பெண்ணியம் என்பதே என் பார்வை. 

இதை ஒரு உதாரணத்துடன் விளக்கிச் சொன்னால் எளிதாகப் புரியும். சமீபத்தில் மேலைநாட்டு பள்ளி ஒன்றில், ஆண்-பெண் சமத்துவம் பேணுவதற்காக என்று ஒரு விநோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதைப் படிக்க நேர்ந்தது. குழந்தைகளை பிறப்புமுதல் அவர்களுக்கு ஆண்-பெண் என்ற பேதமே தெரியாதவாறு வளர்க்கிறார்களாம். எப்படியெனில், பெயர், ஆடை, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும், இது ஆண்குழந்தை, இது பெண் குழந்தை என்று மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அக்குழந்தைகளுக்கே வித்தியாசம் தெரியாதவகையில் வளர்ப்பார்களாம்!! அதாவது, ஒரு பெண் குழந்தைக்குத் தான் பெண் என்ற அடிப்படை விஷயமே தெரியாது!! (போலவே ஆண் குழந்தைக்கும்) 

பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ இயல்பாகவே பிறப்புமுதலே அவர்களுக்கென்று தனி ஆர்வங்கள் இருக்கும். அதைப் பறிக்கும் அதிகாரத்தை இவர்கள் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே சொல்லிக் கொடுக்காமலேயே (பெரும்பான்மையாக) ஒரு பெண்குழந்தைக்குப் பொம்மை பிடிக்கும்; ஆண்குழந்தைக்கு விளையாட்டுக் கார் பிடிக்கும். இவற்றை அவர்களிடமிருந்து பிடுங்கி, மாற்றிக் கொடுப்பதுதான் இவர்களின் ”சமத்துவ” வளர்ப்பியல்!! இந்த அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? 

இது தொடருமாயின், எதிர்காலத்தில் “பெண்ணைப் பெண்ணாக இருக்க விடுங்கள்” என்பது பெண்ணியத்தின் புதிய வரைமுறையாகலாம்!!

பெண்ணியம் பேணுதல்: 

ஏற்கனவே சொன்னதுபோல ஆண், பெண் என்ற தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் குடும்பம், சமூகம் எல்லாம். தனிமரங்கள் தோப்பானால்தான் பெருத்த அறுவடை!! அதுபோலத்தான், ஆண், பெண் என்ற தனிமனிதர்களைவிட, இவர்கள் இணைந்த குடும்பங்களே சமூகங்களுக்கு அதிகப் பயனளிக்கும். 

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் 'பெண்கள், ஆண்களைப் போலவே நடையுடை தோற்றத்தில் போலியாக நடிப்பதால் ஆண்களுடன் போட்டியிட முடியும்தான். ஆனால், ஆண்களைப் போல பாவனை காட்டுவதன் மூலம் அவள் தனக்குரிய உயரிய நிலையை எட்ட முடியாது. பெண்கள், ஆண்களோடு இணைந்து நிறைவு செய்பவர்களாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய ஆண்களாகவே மாறிவிடக்கூடாது' என்று கூறியுள்ளார். 

திருவள்ளுவரும், “இல்வாழ்க்கை” என்ற தலைப்பில் ஆணுக்கும், “வாழ்க்கைத் துணைநலம்” என்ற தலைப்பில் பெண்ணுக்கும் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறியுள்ளார் என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். இருவரில், பெண்ணுக்கு மட்டுமோ அல்லது ஆணுக்கு மட்டுமோ என்றில்லாது, இருவருக்குமே தனித்தனி அதிகாரம் படைத்ததிலிருந்தே நல்ல இல்லறம் இருவரின் பொறுப்புமே என்பது அறியவரும். 

இதற்கு, முதலில் ஆண், பெண்ணின் மதிப்பையுணர வேண்டும். உடல்ரீதியாகச் சற்றுப் பலவீனமானவள் என்பதாலேயே அவள் தன்னைவிடத் தாழ்ந்தவளாகிவிடமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ள ரீதியாகவும், அறிவுரீதியாகவும் அவள் ஆணுக்குச் சற்றும் சளைத்தவளல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவளுக்குரிய மரியாதையைக் கொடுத்தேயாக வேண்டும். 

இல்லறம் நல்லறமாவதற்கான அடிப்படைகள், திருமணத்திற்குப் பிறகல்லாது, அவ்விருவரின் வளர்பருவத்திலேயே ஊன்றப்படவேண்டும். அதாவது, இளையவராய் இருக்கும்பொழுதே, ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் என ஒருவரையொருவர் மதிக்கக் கற்பித்தல் வேண்டும். பெண்ணைப் பற்றிக் குறைவாகப் பேசுதல் தவிர்த்தல் வேண்டும். சில பெற்றோர் தம் குழந்தைகளிடையேகூட, ஆண்குழந்தை, பெண்குழந்தை என்று பாரபட்சம் காட்டுவர். உதாரணமாக ”அவன் ஆம்பளப்புள்ளை, வீட்டு வேலைகளில் உதவிடத் தேவையில்லை” என்று சொன்னால், ஆணுக்கு “தான் வலியவன்; உயர்ந்தவன்” என்ற எண்ணம் மனதில் பதியும். இதுவே, அவன் வளர்ந்துவரும்போது பெண்களைக் குறைவாக மதிப்பிட்டு, அவமதிக்கும் எண்ணத்தைத் தரும். அதே சமயம் பெண்ணுக்கு, தாழ்வு மனப்பான்மையையும், ஆண்கள் மீதான வெறுப்பையும் தோற்றுவிக்கும். 

இரு பாலருக்கும் தத்தம் உரிமைகளையும், கடமைகளையும்கூட வளர்பருவத்திலேயே போதிக்கப்பட்டால், பசுமரத்தாணிபோலப் பதிந்து, தம் காலத்தில் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்து, சுயமரியாதையும் பேணிக்கொள்வர். 

சுருங்கக்கூறின், பிள்ளைவளர்ப்பில் பெரிதும் ஈடுபடுவது பெண்களே என்பதால், வளரும் தலைமுறையினரிடையில் பெண்ணியம் போற்றப்படுவதும் அவர்கள் கைகளிலேதான்!! மேலும் தாம் சந்திக்க நேருகின்ற துன்புற்று கிடக்கும் கீழ்த்தட்டு பெண்களிடமும் பெண்ணியம் பரப்ப வேண்டியதும் பெண்களின் பொறுப்பே!! 

முடிவுரை: 

ஒரு நண்பர் நக்கலாகச் சொன்னார், “அதென்ன பெண் ஈயம், ஆண் பித்தளைன்னுகிட்டு...”. நான் பதில் சொன்னேன், “ஆண் எனும் பித்தளையோ, குடும்பம் எனும் செம்போ, சமூகம் எனும் வெண்கலமோ, எதுவானாலும், பெண் எனும் ஈயம் சரிவிகிதத்தில் பூசப்பட்டாலன்றி, இவையாவும் பயன்படுத்த லாயக்கற்றவைகளாகிவிடும்!”. 

Post Comment

டிரங்குப் பெட்டி - 28
கேரளாவில் சமீபத்தில் நடந்த விமான “ஹைஜாக்” நாடகம் குறித்த செய்திகள் படித்திருப்பீர்கள். ஏர் இந்தியாவின் தாழ்ந்துபோன சேவைத் தரத்திற்கு இன்னுமொரு சான்று.  மலையாளிகளைப் பற்றிப் பலரும் குறை கூறுவார்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வு போற்றத்தக்கது. சம்பவம் நடந்தபொழுது, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை மற்ற பயணிகள் விட்டுக்கொடுக்காதது அங்குமட்டுமே நடக்கக்கூடிய அதிசயம்.  கேரள முதல்வர், அமைச்சர்களும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டு வரும் “ஏர் கேரளா” விமான சேவையும், இச்சம்பவத்தால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுரை விமான நிலையம் சர்வதேச சேவைக்கான தரத்திற்கு மாற்றப்படுவதற்கு இன்னும் எத்தனை வருடமாகுமோ? அங்கே இத்தணூண்டு “நாட்டில்” மூணு சர்வதேச விமான நிலையங்கள்!!                                    
                                        -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்”  - 1999 முதல் 2005 வரை ஏழு வருடங்கள் தொடர்ந்து “டூர் டி ஃப்ரான்ஸ்” (Tour De France) சைக்கிள் போட்டியில் வென்றவர். குறைந்தபட்சம் 3200 கி.மீ தூரத்தை, ஃபிரான்ஸ் மற்றும் சுற்றுப்புற நாடுகள் வழியே சைக்கிளில் 21 நாட்களில் கடக்க வேண்டும். இந்தப் பாதையில் இருக்கும் ஏற்றங்கள் அனைத்தும், மூன்று முறை இமயத்தில் ஏறுவதற்குச் சமம் என்று சொல்லப்படுமளவு கடினமான போட்டி.

சென்ற மாதம், அவர்மீது போதை மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது பட்டங்கள் திரும்பிப் பெறப்பட்டன. ஆயுட்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் தொடங்கியபோது, அவர்மீது குற்றம் இல்லாதவராகவும், அமெரிக்க போதைத் தடுப்பு நிறுவனம் USADA “ஓவர்-ரியாக்ட்” செய்வது போலவும்தான் சூழல் இருந்தது. ஆனால்,
தொடர்ந்து USADA வெளியிட்ட மருத்துவப் பரிசோதனை குறிப்புகள் மற்றும் சில ஆவணங்கள், பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்பதாலும், கேன்ஸர் ஃபவுண்டேஷன் ஒன்றை நிறுவி நடத்திவருவதாலும்,  விளையாட்டு தாண்டி அவர் செய்துவரும் பல நல்ல காரியங்களாலும் அவர்மீது பெரும் மதிப்பு இருந்துவந்தது. அதனாலேயே அவர்மீதான குற்றங்களை வெளிப்படுத்தி வரும் தகவல்கள் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் இருக்கின்றன.

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 
இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர், திருமதி. ஜூலியா கில்லார்ட்,  காந்தி நினைவிடத்தின் புல்வெளியில் நடந்து வரும்போது கால் இடறிக் கீழே விழுந்தார். பின் சுதாரித்துக் கொண்டார். அவரது ஹை-ஹீல்ஸ் காலணி, புல்லில் மாட்டிக் கொண்டதால் விழ நேரிட்டதாகச் சொன்னார். அவரது காலணி, காலை வாரிவிடுவது, இது மூன்றாவது முறை. பின்னர் நடந்த சந்திப்பில் ஹை-ஹீல்ஸைத் தவிர்த்து, தட்டையான ஷூ அணியலாமே என்று ஒருவர் கூறியதற்கு, அவர், “ஸ்கர்ட்டுடன் flat shoe  அணிந்தால், ஆஸ்திரேலியாவினர் மத்தியில் தமது ஃபேஷன் குறித்த விமர்சனம் எழுப்பப்படும் என்பதால், அது சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார்!!!

அதற்கு முந்தைய வாரம், எதிர்க்கட்சித் தலைவரை “misogynist" என்று சொல்லி, பார்லிமெண்டில் வாங்கு வாங்கென்று வாங்கியதும் இவரேதான்!!                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
அபீர் ஹம்ஸா - ஏழு வில்
 தாலிபானால் சுடப்பட்ட பாகிஸ்தானின் மலாலா யூஸுஃப்ஸாயி,
பிரிட்டனில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிவருகிறார். உலகம்

முழுவதும் பிரபலமாகிவிட்ட மலாலா எனக்கு “அபீர் ஹம்ஸா”வை  நினைவுபடுத்துகிறார். ஈராக்கைச் சேர்ந்த அபீர் ஹம்ஸாவும், மலாலாவைப் போல 14 வயதே நிரம்பிய சிறுமிதான் அப்போது. ஆனால், அவள் மலாலாவைப் போலப் பிழைத்துவிடவில்லை. அவளைத் திட்டமிட்டு வேட்டையாடிக் குதறிய ஐந்து அமெரிக்கப் படைவீரர்களும் அவளை உயிர்தப்ப விடவில்லை. குடும்பத்தோடு கொன்றொழித்தார்கள்.  அந்த வகையில், மலாலா கொஞ்சம் அதிர்ஷ்டக்காரிதான், உயிரை மட்டுமே குறிவைத்தார்கள்.                                           -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
இரத்த தானம் என்பதை ஒரு அரிய சேவையாகவே பார்த்துவருகிறோம்.  மற்ற சிறந்த சேவைகளைப் போல, இதற்கும் விழிப்புணர்வு ஊட்டி வரும் கட்டுரைகள் அதிகம். எனவேதான், இதன் மறு பக்கம் - மாற்றுப் பார்வை (?) குறித்த ”இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!” என்கிற இந்தக் கட்டுரையை வாசித்தபோது, திகைப்பாகவே இருந்தது. சில கேள்விகள் சரியாகவும், சில அபத்தமாகவும் தெரிந்தாலும், “யாருக்கேனும் தேவைப்படும்போது மட்டுமே இரத்த தானம் செய்வதே சரியான வழிமுறை” என்பது சரியெனவேப் படுகிறது. 

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-
 விகடனில் ஒரு சிறுகதை படித்தபின்அநேகம் பேருக்கு, “பரீட்சைக் கனவு” வருகிறது என்று தெரிந்து, ரொம்ப மகிழ்ச்சியாயிருந்தது.  பின்னே, பரீட்சைன்னே தெரியாம வகுப்புக்குப் போய் பேயறைந்து நிற்பது, கனவில்தான் என்றாலும், அதுவும் பள்ளி-கல்லூரி எல்லாம் தலைமுழுகியபின், மிகக் கொடுமையான அனுபவம்.

இப்போதும் ஒரு பரீட்சைக் கனவு வந்தது.  வழக்கம்போலத்தான், தேர்வு என்று தெரியாமலே போய் நிற்கிறேன். எப்போதும் யாராவது புத்தகம் தருவார்கள் கடைசி நிமிட பிரஷ்-அப்புக்காக, இப்போ அட்வான்ஸ்ட் டெக்னாலாஜியாக ஒரு கை  “Kindle"-ஐ நீட்டுகிறது. ஆனால், அதிலும் சோதனை - நான் வாங்கியவுடன் அது ஹேங் ஆகிவிடுகிறது!!

                                             -=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-

Post Comment

மரியாதையாப் பேசுங்க..

கிராமங்களில் சித்தப்பு, வா, போலாம்; யத்தே, எங்கிட்டுப் போற; தாத்தா, கஞ்சி குடிச்சிட்டியா என்று, வயசானவங்களையும் சின்னவங்க நீ, வா, போன்னு பேசறதைப் பாத்திருக்கோம். 

சிலர்,  தங்களிடம் பணிபுரியும் முதியவர்களை நீர் வாரும், இரும், பாரும் என்று பேசக் கேட்டிருக்கிறோம். எங்கள் வீட்டில் வேலைபார்த்த உழவர்களும் வீட்டினரை  இதேபோல, ”ஏயம்மா, இங்கன வாரும்; இதை எடுத்துத் தாரும்” என்றுதான் விளிப்பார்கள். எங்கள் ஊருக்கு மிகவும் அன்னியமான பேச்சு வழக்கு என்பதால் அதையெல்லாம் ரசித்துக் கேட்டதுண்டு.

சினிமாப் படங்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்காக  மிகைத்துப் பேசப்பட்ட அந்த காலகட்டத்தில், வீட்டிற்கொரு ‘ஜிவாஜி’, ‘ரஜினி’, கமலாசன்’ அவதாரங்கள் உண்டு. ஆங்காங்கு திண்ணைகளில், வயதுபேதம் இல்லாமல் “ரஜினி என்னா மாதிரி ஃபைட்டு பண்ணான் தெரியுமா?” “கமலாசன் ஆடற மாதிரி எவனுக்குலே ஆட வரும். அவந்தாம்லே டாப்பு” என்ற பேச்சுகள் நடக்கும்.

நானும் கிராமத்தில் என் அம்மா வீட்டில், உறவினர்கள் சூழ சிறுவயதில் வளர்ந்தவள்;  மூத்தப் பேத்தி என்பதால் செல்லம் அதிகம். அம்மா தன் உடன்பிறப்புகளை எப்படி அழைப்பாரோ அதேபோலவே நானும் அழைத்து உரையாடுவேன். அம்மாவின் அண்ணன் எனக்கும் “காக்கா”தான்!! அம்மாவின் தம்பி, தங்கைகள் எல்லாரும் எனக்கும் அப்படியே என்பதுபோல, பெயர் சொல்லியே அழைத்து வந்தேன்.

நான் ஒரே பேத்தியாக, தனிக்காட்டு ராணியாக இருந்தவரை இது யாருக்கும் பெரிய தவறாகத் தெரியவில்லை. பெரிய சாச்சிகளுக்கும் பிள்ளைங்க பிறந்து, வளந்து, அந்த நண்டு-சிண்டுகளெல்லாம் அழகா மரியாதையா “சாச்சி”, “மாமா”ன்னு கூப்பிட ஆரம்பிச்சதும் என் மவுசு கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது!! ”சின்னப் புள்ளையே சாச்சினு கூப்பிடுது, நீயென்ன பேர் சொல்லிக் கூப்பிடுறே”ன்னு எப்பவாவது யாராவது கேட்டாலும்,  அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிறதில்ல. ஏன்னா, நான்தான் அப்பவே ஒரு காதுல ‘entry' போர்டும்,  இன்னொன்னுல 'exit' போர்டும் மாட்டி வச்சிருந்தேனே!!

மேலும்,  தாய்மாமா, சாச்சிகளில் என் வயதையொத்தவர்களும் இருந்ததால், எல்லாரையுமே ஒருமையில் அழைப்பதில் பெரிய தவறொண்ணும் இருக்கிறதாப் படலை எனக்கு. அவங்களும் யாரும் எதுவும் அப்ப சொல்லலை.

ன் அம்மாவும் கண்டிக்கலையான்னு கேப்பீங்க. கிராமங்களில் ஆண்களுடன் பேசும்போது “லே” என்கிற மரியாதையான விகுதி சேர்ப்பதுபோல, எங்க ஊரில், பெண்களுக்கு “ளா” என்கிற அதிவிசேஷ விகுதி உண்டு #சமத்துவம்!!  அதுல என்ன ஒரு வித்தியாசம்னா, (மகன், தம்பி போன்ற) தங்களைவிட இளையவயது ஆண்களுக்கு  மட்டுமே இந்த “லே” விகுதி பொருந்தி வரும். ஆனால், பெண்களுக்கோ, வயது வித்தியாசமே இல்லாமல் (“பெரிம்மா, இங்க வாயேம்ளா”) எல்லாருமே சர்வசாதாரணமாக “ளா” போட்டு அழைக்கப்படுவர். (மாமியார்கள் மட்டும் விதிவிலக்கு... க்ர்ர்ர்... ) நான் அந்தமாதிரி யாரையும் மரியாதைக் குறைவாகப்  பேசாமல் பழக்கியது என் அம்மாதான். அப்போ அதுவே பெரிய விஷயம்.

அப்புறம், மாமாக்களுக்கு கல்யாணம் ஆகி, மாமிகள் வந்தாங்க. இப்ப நானும் காலேஜ் ஸ்டூடண்டாகி, ‘ஒரு பொறுப்புள்ள குடிமகள்’ ரேஞ்சுக்கு வளந்து, பெண்ணுரிமைல்லாம் பேச ஆரம்பிச்சிட்டதால, மாமிகளை (மட்டுமாவது) மரியாதையா ”வாங்க-போங்க மாமி”ன்னு சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். இல்லைன்னா, “படிச்ச புள்ளையளே இப்பிடித்தான்”னு ஒட்டுமொத்த பெண் படிப்பாளிகளோட மரியாதையும்  காத்துல பறந்துடுமே!!

என் சாச்சிகளும் ”ஏய், நாங்கல்லாம் இப்ப நாத்தனார் ஆகிட்டோம்.  இன்னுங்கொஞ்ச நாளில் மாமியார் ஆகப்போறோம். இனிமயும் பேர் சொல்லி கூப்பிட்டே...”னு என்னை மிரட்டவே ஆரம்பிச்சுட்டாங்க!! அப்பத்தான் சாச்சிகிட்டே சொன்னேன், “அஞ்சில வளையாதது இருவதில் வளையுமா? நான் சின்னப் புள்ளையா இருந்தப்பவே நீங்கல்லாம் என்னைக் கண்டிச்சிருக்கணும். அப்பம்லாம் பேசாம இருந்து செல்லம்கொடுத்துகிட்டு, இப்பம் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?”. சரிதானே?? இருந்தாலும், கொஞ்சமா என்னை மாத்திக்கிடவும் ஆரம்பிச்சேன்.

காலேஜ்ல, ஒரு நாள் என் நெருங்கிய தோழியிடம் ஏதோ ஒரு படத்தைப் பற்றிப் பேசிட்டிருந்தேன். ரொம்ப ஆர்வமா ஒன்றிப்போய் பேசிகிட்டிருந்தப்போ, “அப்ப சிவாஜி வந்தானா...”ன்னு சொல்ல, உடனே அவ, “வந்தார்” அப்படினு திருத்தினா. அந்தக் காலத் திரைப் படங்களில், அடிக்காமலேயே கன்னத்தில் ‘பளார்’, ’பளார்’னு அடி வுழுற மாதிரி தலையைச் சிலுப்புவாங்களே, அப்படி ஆகிப்போச்சு எனக்கு!! இதுதான் என் கதையின் க்ளைமாக்ஸ். இப்ப முழுசாவே திருந்த முடிவு பண்ணி, முக்கால்வாசி திருந்தியும் விட்டேன்!!

நாம படிக்காம விட்ட படிப்பையும், கத்துக்காம விட்ட கலைகளையும் நம் வாரிசுகளிடம் கடத்திவிடுவதைப்போல,  நாம செஞ்ச தவறுகளையும் அவர்கள் செய்யாமல் பார்த்துக்கணுமே!! என் மகன் பேச ஆரம்பித்தபோதே அவனுக்கு இதேபோல் அனுபவங்கள் ஏற்படாவண்ணம், எல்லாரையுமே மரியாதையாக அழைக்கப் பழக்கினேன் - அவன் பேச ஆரம்பித்த முதல் வார்த்தை, ’அம்மா’ இல்லை, “மாமா”தான்!!

இந்தியாவில், வீட்டில் வேலை பார்த்த ‘ராமு’ என்ற பெண்ணை என் 2 வயது மகன் ‘ராமு மாமி’ என்று அழைத்தபோது அவர் நெகிழ்ந்து சிரித்தது இன்னும் என் நினைவில்.  இங்கே அபுதாபியில் முதலில் வேலைக்கு வந்த ஸ்டெல்லாவை என் இரண்டரை வயது மகன் மாமி என்று அழைத்தபோது அவர், “என் பதினாறு வருட அமீரக வாழ்வில், இன்றுதான் என்னை முதல்முதலில் ஒரு குழந்தை மரியாதையோடு அழைக்கிறது. மலையாளி வீடுகளில்கூட பிள்ளைகள் என்னை ஸ்டெல்லா என்றுதான் கூப்பிடுவார்கள். ” என்று மகிழ்ந்தார்.

வளர்ந்தபிறகு, ‘விஜய் மாமா’, வடிவேலு மாமா’ என்றெல்லாம் சொல்லுவதைப் பார்த்து சில நண்பர்கள், உறவுகள் கிண்டல் செய்யத் தொடங்கியதால், ‘விஜய் நடிச்சிருக்கார்’, ‘வடிவேலு சொன்னார்’ என்ற அளவுக்கு நாசூக்காக தாமே  மாறிக் கொண்டார்கள்.


ல்லாம்சரி,  ஆனால், என்னை என் பிள்ளைகள் இன்றும் நீ,வா, போ என்றுதான் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அதையும்  மாற்ற முயற்சி செய்தேன். என்னதான் நான் அவனிடம் என்னை “நீங்க”னு சொல்லு என்று வற்புறுத்திச் சொன்னாலும், அதை வழிமொழிவதற்கு வீட்டில் ஆளில்லை!! என்னை எல்லாருமே - என் தந்தை, என்னவர், உறவினர்கள் - எல்லாருமே ”நீ” என்று சொல்வதால், அவனுக்கும் அது முழுமையாக வரவில்லை. (மரியாதை தானா வரணும், கேட்டு வாங்கப்படாது).  இரண்டாவது, நானே என் அம்மாவை ‘நீ’ என்றுதான் சொல்கிறேன். நாளை அவன் வளர்ந்து, என்னைப் பார்த்து ”நீ(ங்க) மட்டும் உன்(ங்க) அம்மாவை நீ-ன்னு சொல்றீ(ங்களே)யே?” ன்னு கேட்டா என்ன செய்றதுங்கிற யோசனை வேறு!!  

அதனால, யோசிச்சுப்பாத்து, ”என்னை ’நீ’ன்னே சொல்லிக்கோ”ன்னு ஒரு தாய்க்கேயுரிய கருணையோட (நோ, நோ பேட் வேர்ட்ஸ்!!) அனுமதி கொடுத்துட்டேன்.

இது ஒரு சமாதானமாத் தெரிஞ்சாலும், இன்னிக்கும் சிலரை நாம உரிமையோடு ’நீ’யென்று சொல்வதே அவர்களை மனதுக்கு ரொம்ப  நெருக்கமானவங்களா இருக்கவைக்குதுன்னு சொல்லலாம். சிலர் தன் தந்தையைக் கூட “நீ”ன்னு ஒருமையில் சொல்லி, நண்பர்களைப் போல பழகுறதைப் பார்த்திருக்கேன்.

உலகத்துல உயர்ந்த சிறந்த மனிதர்களை நாம் மரியாதையுடன் அவங்க, இவங்கன்னு சொன்னாலும், அவர்களையும் படைத்த, அவர்களைவிட மேலான எல்லாம் வல்ல இறைவனை ‘அவன்’ என்றுதானே சொல்றோம். அதனால்தானே அவனோடு நம் நெருக்கம் அதிகமாக இருக்கு!!

இன்னும் ஆராஞ்சுப் பாத்தா, நம்ம இந்திய மொழிகளில் மட்டும்தான் நீ-நீங்க என்று ரெண்டு வகையான பதங்களும் இருக்குதுன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சு ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் இப்படி இல்லை. ஆங்கிலத்தில் யாரானாலும் "You" மட்டும்தான். அரபியில் “இன்த” என்று சொல்வார்கள்.

இங்கு அலுவலகங்களில்,  ஆங்கிலேயர்களை "Hi James"  என்று அழைத்துப் பேசமுடிகிறது. அதுவே, இந்தியர்கள் என்றால், ”சார், சார்”!! நாம பேர் சொல்லி அழைச்சாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்கதான், ஆனாலும் அந்தக் கலாச்சாரம் தெரிந்திருப்பதால் (அவமதிப்பாகக் கருதப்படுமோ என்று எண்ணி) அப்படிச் சொல்ல முடிவதில்லை.

ஆனால், ‘சார்’ என்று அழைப்பதால் ஒரு பயன் என்னன்னா, ஒரு  எல்லைக்கோடு வரைந்துகொள்ள வசதியாக இருக்கும்.  ஆங்கிலேயர்களிடம் “Mr.James என்பது இதற்கு உதவும். :-)


ன்று உறவுகளிலும் மரியாதை என்பதும் நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. ஒரு காலம்வரை ஒருவழிப்பாதையாக மட்டுமே இருந்துவந்த மரியாதை, இருவழிப்பாதையாக மாறியிருப்பது  “காலத்தின் கட்டாயம்”!!!

அத்தை-மாமா மட்டுமல்ல, மாமனார்-மாமியாரும்கூட,  அங்கிள்-ஆண்ட்டி என்று ஆகிப்போனது, அவர்களுக்கும் நமக்குமான நெருக்கத்தைக் குறைத்து விட்டதுபோலவே உணர்கிறேன். 

அதே சமயம், ஆண்பிள்ளையானாலும், தொடாமல் இரண்டடி தள்ளி நின்றே,
“அப்பா” என்றழைத்து, கண்டிப்புடன்கூடிய அன்பைத் தம் தந்தையிடம் அன்று பெற்றுக்கொண்ட ”இன்றைய” அப்பாக்களை, “Dad” என்றழைத்தவாறு இளம்பெண்கள்கூட தோள்மீது கைபோட்டுப் பேசும்போது இருவருக்குமிடையில் பாசம் கொஞ்சம் அதிகம்போலத்தான் தெரிகிறது.
 

’ப்ராணநாதா’, ‘ஸ்வாமி’ களில் பதிபக்தியோடு ஆரம்பித்து, அத்தான், மாமா, மச்சான் என்றெல்லாம் பாசமிகு சதி-பதியாகப் பயணித்தாலும், ‘என்னாங்க’, ‘இந்தாங்க’வையும் விட்டுவிடாது ‘ஏங்க’வும் வைத்து நட்புணர்வு பெருகச்செய்து,  பின்னர் 90-களில் பெண்கள், கணவரைப் பெயர் சொல்லி அழைப்பதில் அதிக நெருக்கத்தை உணர்ந்ததுபோல, இக்காலத்து மங்கையர் கணவனை “டேய்” என அழைப்பதில் அன்பு அதிகரிக்கக் காண்கிறார்கள்போல.

நம் தலைமுறையினர், கண்டபொழுதிலெல்லாம் “குட் மார்னிங் மிஸ்” என்று ஆசிரியர்கள்முன் கைகட்டி நின்றபோது, அங்கு மரியாதையைவிட பயமே அதிகம் இருந்தது. இன்றோ, ”ஹாய் மிஸ்” என்று அழைப்பதையும், நண்பர்கள்போல ஜோக் அடித்துப் பேசிக்கொள்வதையும் நாம் வாய்பிளந்து பார்த்தாலும், கூடவே பொறாமையும் வரத்தான் செய்கிறது.


மாறிவரும் உலகில், மரியாதை என்பதன் வரையறையும் மாறிவிட்டது.  சிலருக்கு அது ”மரியாதை மனசிலயாவது இருந்தாச் சரிதான்” என்று புலம்ப வைக்கும். சிலருக்கு “மரியாதை மனசில் மட்டும் இருந்தாப் போதும்” என்று சொல்ல வைக்கும்.

Post Comment

முற்றுப்புள்ளி
சமரசம் 1-15 அக்டோபர், 2012 இதழில் வெளியான கட்டுரை:


இறைத்தூதரை அவமானப்படுத்திய திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகெங்கும் இஸ்லாமியர்களால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதை அறிவோம். நம் எதிர்ப்பை ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவிக்க வேண்டியது அவசியம்தான்.

எனினும், இக்கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மற்றும் அவைசார்ந்து ஆங்காங்கு நிகழ்ந்த வன்முறைகளால் நாம் நினைத்ததை - படத்தை யூ-ட்யூப்பிலிருந்து நீக்கப்படுவதையும், படம் தயாரித்தவன் அரசால் தண்டிக்கப்படுவதையோ - சாதித்துவிட்டோமா என்றால், வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

குறைந்தபட்சம், இனி இத்தகைய அவமதிப்புகள் நிகழாது என்ற நம்பிக்கையாவது கிட்டியிருக்கிறதா என்றால், தலைகவிழ்வதைத் தவிர வேறு பதிலில்லை!! எனில் இதற்கு என்னதான் வழி?

முன்பு டென்மார்க் கார்ட்டூன். இப்போது அவதூறு படம். அந்த எதிர்ப்பலை ஓயும் முன்பே, இதோ ஃப்ரெஞ்சுப் பத்திரிகையில் மீண்டும் கேலிச்சித்திரங்கள்! 


இந்த தொடர்கதைக்கு ஒரு கட்டாய முற்றுப் புள்ளியே இப்போதையத் தேவை.  ஒரு நிரந்தர புரிதலுக்கான வழியை இஸ்லாமிய அறிஞர்களும் தலைவர்களும் கண்டறிய வேண்டும். அது வன்முறையுமல்ல; அடங்கிப் போதலுமல்ல!! நமது உரிமையாக அந்த வழி இருக்க வேண்டும்!! அது சட்டபூர்வமான வழி!! ஆம், இஸ்லாத்திற்கு மாறான செயல்களில் ஈடுபட்டு, இஸ்லாமை இழிவுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்படவேண்டும்.

அதெப்படி சாத்தியமென வியக்கலாம். உதாரணங்களில் ஒன்றைக் கூறுகிறேன். ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய யூத பெரு இனவொழிப்பு (Holocaust) குறித்து அறிந்திருப்பீர்கள். அந்த இனவொழிப்பு சம்பவம் பொய்யென மறுத்து, ஏற்காதவர்கள் பலர் உலகில் உண்டு. அவர்கள்  அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லையென ஆதாரங்களுடன் மறுத்து பேசி, எழுதி வருவதைத் தடுப்பதற்காக, “Laws_against_Holocaust_denial” என்ற யூதர்களுக்கு ஆதரவான சட்டம் இன்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் அமலில் உள்ளது.  


ஹிட்லர் ஆண்ட ஜெர்மனியிலும் இச்சட்டம் உண்டு என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது. அந்த நாடுகளில் இதன்மூலம் தண்டிக்கப்பட்டவர்களும் பலர்.

இன்று தன் குடிமகன் ஒருவன் நபி பெருமானாரின் கார்ட்டூனை வெளியிட்டிருப்பதை “தனிமதச் சுதந்திரம்” ,”பேச்சுரிமை”,  “கருத்துரிமை” என்றெல்லாம் காரணம் சொல்லி தண்டிக்க மறுக்கும் ஃப்ரான்ஸிலும் யூத இனவொழிப்பு எதிர்ப்புச் சட்டம் அமலில் இருக்கிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, இஸ்லாமை அவமதிப்பதைத் தடுக்க ஒரு சர்வதேச சட்டத்தை (International law) உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதே இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அவசரக் கடமை. பலம் வாய்ந்த இஸ்லாமிய அரசுகளின் உதவியைக் கொண்டும், சட்ட அறிஞர்களைக் கொண்டும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டு, சர்வதேச சட்ட-நீதி மன்றங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் மூலம் உலக நாடுகளுக்கு பொது விதியாக்கப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் இன்றே தொடங்கினால்தான், சில ஆண்டுகளில் நடவடிக்கைகள் பூர்த்தியாகி, நடைமுறைக்கு வரும்.

இனி இதுபோல கீழ்த்தரமான தூற்றுதல் வேலைகளில் யாரேனும் ஈடுபட்டால், இஸ்லாமியர்கள் உணர்ச்சிகளால் ஆளப்படாமல், அறிவால் எதிர்கொள்வதே விவேகமான செயலாகும்.  சட்ட ரீதியாக எதிர்கொண்டு, கடுந்தண்டனை வாங்கிக் கொடுப்பதன்மூலம்தான் "Freedom to abuse"  - ”அவமதிக்கும் உரிமை” தொடராமல் தடுக்க முடியும்.  


Post Comment

டிரங்குப் பொட்டி - 27

சமீபத்தில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், இயற்கை விவசாயத்தால் விளைந்த உணவுப்பொருட்களும், ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் ஒரே அளவிலான சத்துக்கள் கொண்டவையே. இயற்கை விவசாயத்தால் அதிகப்படி சத்துக்கள் ஒன்றும் கிடைப்பது இல்லை என்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதையொட்டி,  பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்றவாறு மொத்த உணவு உற்பத்தி செய்வது ரசாயன உரங்களினால்தான் சாத்தியப்படும் என்று ஒரு கட்டுரை New York Times பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதன் வலைத்தளக் கருத்துப் பகுதியில் வாசகர்கள் “அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்” விளாசித் தள்ளிவிட்டார்கள்.

‘சத்யமேவ ஜெயதே’யில் அமீர் கானும், இயற்கை விவசாயத்தை ஆதரித்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அவர், அமீரகத்திற்கு வந்திருந்தபோது, ஒரு பத்திரிகையில் ‘இந்தியா குறுவிவசாயிகளின் நாடு. அதனால்தான் இயற்கை விவசாயம் இங்கு சாத்தியமாகிறது’ என்கிற தொனியில் பேட்டியளித்திருந்தார்.


அப்படின்னா, பலநூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய விவசாய பண்ணைகளில் இயற்கை விவசாயம் சாத்தியமில்லை என்று கூறப்படுவது சரிதானோ?


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Food garnishing & Food carving: ”உணவு அழகுக்கலை” - அப்படின்னு தமிழ்ல சொல்லலாமா? எல்லா சமையலறைகளிலும், இந்த ‘கார்னிஷிங்’ என்பது வேகமாப் பரவிகிட்டு வருது. முன்பெல்லாம், கொஞ்சம் மல்லி இலையை மேலாகத் தூவிவிடுவது என்றளவில் இருந்தது, இப்போ அதுக்குன்னே தனி கருவிகள்,  தனிப் பயிற்சி வகுப்புகள் நடக்குமளவு ‘வளர்ந்து வரும்’ கலையாகிவிட்டது. அழகுணர்ச்சியை வளர்க்கும், பசியைத் தூண்டி ருசிக்க வைக்கும் கலை என்றாலும் இதிலும் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவதே அதிகம்.


இதோ இந்த தர்பூசணியில் ரோஜாப் பூக்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு,  பூ செய்யும்போது  வெட்டிப் போட்ட பழத்தை வேஸ்ட் பண்ணாமச் சாப்பிட்டிருப்பாங்களா, இந்தப் பூ(பழம்)வையும் இப்படியே வச்சு, பிறகு வீணாக்கிடக் கூடாதேன்னுதான் தோணுது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் (food festival) அதுதான் நடக்கிறது.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

நம்ம ஊரில், கட்சிக் கூட்டங்களுக்கு, உண்ணாவிரதத்துக்கு ஆட்களைக் கூட்டி வந்து பலத்தை ’நிரூபிப்பார்கள்’! நம்ம ஊர்லதான் இப்படி, வெள்ளைக்காரங்கள்லாம் அப்படி கிடையவே கிடையாதுன்னு நம்புற வெள்ளை மனசுக்காரங்க நாம.


வெளிநாட்டுக் கட்சிக் கூட்டத்தை விடுங்க. ட்விட்டர்லயே ஆயிர-லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்கள், எல்லோருக்குமே அது ‘தானா’ வந்தவங்க கிடையாதாம். ‘வாங்கின’ கூட்டமாம்!! வாங்கித்தருவதுக்குன்னே
நிறைய தளங்கள் இருக்காம். விலையும் ரொம்ப சல்லிசுதான் - அஞ்சு டாலருக்கு, ஆயிரம் பேர்!!

ப்ளாக்குக்கும் இந்த மாதிரி (தமிழ்) ஃபாலோயர்ஸ் மொத்தமா கிடைப்பாங்களான்னு விசாரிக்கணும்.


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் தனிப்பட்ட படங்களை ஐரோப்பாவில் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதைக் கண்டித்து, அரச குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததில், படம் வெளியிடுவதற்குத் தடை விதித்து, ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரவேற்கவேண்டியது.


அவதூறான செய்தி, படங்கள் வெளியிடுவதென்பதில் இரட்டை நிலை எடுக்காமல், நாடுகளும், நீதிமன்றங்களும் ஒரே நிலையைப் பின்பற்றவேண்டும்.


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


தேக்கடி படகு விபத்து மறந்திருக்காது. நடந்து மூன்று வருடங்களாகியும், இன்னும் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லையாம். காரணம் - அதில் சம்பந்தப்பட்ட இரு
அரசு (சுற்றுலாத்துறை) ஊழியர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கு இன்னும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையின் அனுமதி கிடைக்கவில்லையாம். கிடைச்சுட்டாலும்....

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இப்ப நடக்கிற மோதலுக்குக் காரணம், இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் ஒரு தீவு.  இந்தியா - பாகிஸ்தானுக்கு ஒரு காஷ்மீர் போல!! ஆனா, ஒரு வித்தியாசம், பிரச்னை இருந்தாலும், இரண்டு நாடுகளுமே அதை, காஷ்மீர் என்றுதான் அழைக்கின்றன. அங்கு சீனா பிரச்னைக்குரிய அந்தத் தீவை ‘டையாவூ’  என்ற பெயரிட்டு அழைக்க, ஜப்பான் அதை ‘சென்காகு’ என்றழைக்கிறது.  இப்ப சீனாவில் ஜப்பானிய தூதரகத்தின்முன் போராட்டம், ஜப்பானிய பணியாளர்களைத் திருப்பி அனுப்புவது என்று எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுக்கின்றன்.


நம்மளப் போலவேத்தான் மத்த மெத்தப் படிச்ச நாட்டுக்காரங்க(ன்னு சொல்லிக்கிறவங்க)ளும்னு தெரியும்போது, ஒரு அல்ப சந்தோஷம்.


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


’பர்ஃபி’ ஹிந்தி திரைப்படம்:   வழக்கமாக, படங்களிலும், நிஜத்திலும், ஆணுக்கு மனவளர்ச்சி குன்றியிருந்தாலும், காதல்-காமம் எல்லாம் இருக்கும்; திருமணமும் நடக்கும். ஆனால், அதுவே பெண் என்றால், அந்த உணர்ச்சிகளே இருக்காது - இருக்கக்கூடாது.  அந்த வகையில், நல்ல  முயற்சி.  படம் பார்க்கும்போது, இந்த மாதிரி படங்கள் தமிழில் வருவதில்லையே என்று தோன்றியது.  தமிழில் எடுத்திருந்தால், க்ளைமேக்ஸில் தாலி செண்டிமெண்ட் சீன் அல்லது பிரசவ சீன் வச்சு,  ஜில்மில் (ப்ரியங்கா) குறைபாடு நீங்கி, அக்மார்க் தமிழ்ப் பெண்ணாக ஆகியிருப்பாள்.  படமும், இன்னொரு ‘சின்னத்தம்பி’ ஆகியிருக்கும்.


’பர்ஃபி’ பார்த்து, ரெண்டு நாள் கழிச்சு என்னவர் கேட்டார், “இந்தப் படத்துல ப்ரியங்கா சோப்ரா நடிச்சிருக்காப்லயாமே.  கெஸ்ட் ரோலா? வரும்போது நான் தூங்கிட்டேனோ?”!!!!


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


Post Comment

அவன்

காலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக, வீட்டுக் கதவைத் திறந்தபோதுதான், வாசல் கேட்டின் ஓரமாக நின்றிருந்த அவனைக் கவனித்தாள். பார்க்கவே பரிதாபமான தோற்றத்துடன், கெஞ்சும் பார்வையுடன் நின்றிருந்தான்.

யாருக்கும் மனதில் ஈரத்தை ஏற்படுத்தும் காட்சி. அவளையும் ஒரு நிமிடம் தடுமாறத்தான் வைத்தது. உடலெல்லாம் அங்கங்கே காயங்கள் - இவனைப் போன்று ஊரில் அலையும் சில ரவுடிகளுடன் ஏற்பட்ட தகராறுகள் காரணாமாயிருக்கும். இங்கே அவளோடு வீட்டில் ஒன்றாக இருந்தவரை, புஷ்டியாகத்தான் இருந்தான். ஒருநாள் தன் புத்தியைக் காட்டப் போய், அவள் அவனை விரட்டியடித்தாள்.

அவன் தற்போது அவளுடன் இல்லை என்று தெரிந்ததும், அவ்வப்போது சில அக்கம்பக்கத்துப் பெருச்சாளிகள் வந்து குதறப் பார்க்கத்தான் செய்கின்றன. போன வாரம்கூட, இருட்டியபின் தோட்டத்தில் ஒரு பெருச்சாளி கள்ளத்தனமாக ஒளிந்து நிற்பதைப் பாத்து அலறவும், வழியே போன நல்லவர் ஒருவர் வந்து உதவினார்.  இப்படி எத்தனை நாளுக்கு அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க முடியும்?

இதற்காகவாவது அவனை வீட்டில் சேர்த்துக் கொள்ளலாம்தான். ஆனால், அந்தச் சிட்டுகள்? மகன்கள் பள்ளியிலிருந்து மாலை வரும்வரை, தனியே இருக்கும் அவளுக்கு, பகலில் அவள்வீட்டைத் தேடிவரும் அக்கம்பக்கத்துச் சின்னஞ்சிட்டுகள்தான் துணை. இதோ இன்னும் கொஞ்ச நேரம் போனால் எல்லாரும் வந்துவிடுவார்கள். தோட்டத்தில்தான் அத்தனை ஆட்டங்களும், பாட்டங்களும். இவள் கொடுக்கும் டிஃபனைக் கொறித்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்துக் கொண்டே விளையாட்டுகள் தொடரும்.

ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டும், துரத்திக் கொண்டும், பாடிக் கொண்டும், ஓடிக் கொண்டும், மண்ணைக் கிளறி விளையாடுவதென துறுதுறுவென்று அலையும் அந்த மொட்டுகள்தான் அவளின் நண்பர்கள்.  குறும்புக்கார பயல்கள், பிள்ளைகளைச் சீண்டுவதும், இப்பவே அப்படியா என்று அவள் அவர்களை ரசித்துச் சிரிக்க, அந்தப் பெண்குட்டிகள் நேக்காக  அவர்களைத் தவிர்க்கும் லாகவம் பார்த்து அதிசயப்படுவதுமாக அவள் நாள் கழியும்.  


மதிய நேரம், பக்கத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் இவர்கள் ஆட்டம் தொடரும். அங்கே மரத்தடிகளில் மதிய உணவருந்தும்நேரத்தில், மாணவிகளும் இவர்களோடு சேர்ந்து சிறகடித்து விளையாட,  அவர்கள் உணவையும்  சுவைத்துவிட்டு, பிறகு மீண்டும் மாலையில் இவள் தோட்டத்தில் தஞ்சமடைபவர்கள், இருட்டும்வரை அங்குதான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 

இருட்டத் தொடங்கியதும், எல்லாரும் சிட்டாகப் பறந்து தத்தம் வீடு திரும்புவார்கள். இப்படி இவளுக்கு நேரம் போவதே தெரியாமல், தனிமை பயமில்லாமல் பார்த்துக் கொள்ளும் அவர்களை இவனுக்காக இழக்கவா? இவளிடமே இன்னும் தயங்கியேப் பழகும் அந்த பிஞ்சுகள், இவனைக் கண்டால் இனி இவள் வீட்டுப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

ஏற்கனவே அந்த கயவன் ஒருமுறை இவர்களிடம் எண்ணிப் பார்க்கவே இயலாத மாபாதகத்தைச் செய்யத் துணிந்ததன் விளைவாய்த்தான், விரட்டப்பட்டு, வீடிழந்து தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்தச் சின்னஞ்சிறுசுகளிடம் நம்பிக்கையை மீட்டெடுக்க இவள் பட்ட பாடு!! இப்போது மீண்டும் வந்து நிற்கிறான். அவன் இருந்தால், எச்சில்காக்கைகளிடமிருந்து பாதுகாப்புதான். ஆனாலும், இவர்களை இழப்பதா!! குழம்பினாள்.

ஒரு உறுதியான தீர்மானத்திற்கு வந்தவளாய், கையில் கம்புடன் வாசலுக்கு வந்து, முன்பு குருவியைக் கவ்வித் தின்ற
அந்தப் பூனையை “ச்சூ... ச்சூ...” என விரட்டினாள்.

Post Comment