Pages

Showing posts with label அபுதாபி. Show all posts
Showing posts with label அபுதாபி. Show all posts

நானும் பார்த்தேன் “உலக சினிமா”!!!





”உலக சினிமாக்கள்” என்ற பதமே நமக்கு ஒரு அந்நியப்பட்ட விஷயம் போலத் தோன்றும். அதுவும் இணையம் வந்து, அதைக் குறித்து இங்கு சில பெரிய தலைகள் - பின்நவீனத்துவ வாதிகள் என்றும் சொல்லலாம் 😂😀 -  உலக சினிமா, உலக சினிமா என்று பேசி, அதை பற்றி ரொம்ப ஆழமா விவாதித்துக் கொள்ளும்போது இதெல்லாம் நமக்கு எட்டாத - புரியாத விஷயங்கள் என்று ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், இங்கு அபுதாபியில், ஒரு அமைப்பினால் இது போல “உலக சினிமாக்கள்”, வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று  படங்கள்- அதுவும், இலவசமாகத் திரையிடப் படுகிறது என்று தெரிய வந்த போது ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டன!!

  

"CINEMA SPACE" என்ற அமைப்பு பல்வேறு உலக மொழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான திரைப்படங்களை, ஆங்கில சப் டைட்டில்களோடு திரையிடுகின்றனர்.  யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம், ஆனால் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  அவர்களது வலைத்தளத்தில் நம் பெயரைப் பதிவு செய்து கொண்டால், வாரா வாரம் திரையிடப்படும் படங்களைப் பற்றி முன்பே தகவல் வந்துவிடும். அதன் ட்ரெய்லர் மற்றும் கதைச் சுருக்கத்தைப் பார்த்து விட்டு, இயன்றவற்றைப் போய்ப் பார்ப்பதுண்டு. இதுவரை பத்து படங்கள் கூட பார்க்க முடிந்ததில்லை... :-(

ல்லாமே நல்ல படங்கள் என்றாலும், நம் தேர்வு சில சமயம் ஏமாற்றிவிடுவதுண்டு.  சில மாதங்கள் முன்,  பிறந்த குழந்தையை சர்வாதிகாரிக்குப் பயந்து ஆற்றில் விடுவதாக வந்த ட்ரெய்லர் பார்த்து, மூஸா (மோசஸ்) நபியின்  கதை போல இருக்கிறதே என்று ஆவலோடு போனால்... குள்ள மனிதர்கள், சூனியக்காரி, மந்திரவாதி என்று  சூர மொக்கைப் படமாகிவிட்டது அது!!

இருந்தாலும் பல நல்ல படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் இரண்டைப் பற்றிப் பகிர ஆசை. ஒன்று இன்று...

LEAVE NO TRACE:


கரத்தை விட்டு ஒதுங்கி வாழ நினைக்கும் ஒரு அப்பா-மகள்; இவர்களை அமெரிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தி நகரத்தில் தங்க வைக்கிறது என்று சொன்ன இந்தப் படத்தின் ட்ரெய்லர்/ கதைச் சுருக்கத்தைப் பார்த்து, அமெரிக்கர்கள் சிவப்பிந்திய பழங்குடி மக்களின் பிள்ளைகளைப் பிடித்து வந்து கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரில், அவர்களது இயல்பான வாழ்வையும், நிலத்தையும் ஆக்கிரமித்த கதையை ஒத்திருக்குமோ என்ற ஆவலில் படம் பார்க்கச் சென்ற எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்...  ரொம்ப ஓவர் திங்கிங் ஆகிப்போச்சு இப்பலாம்...😎

ஒரு அப்பா, தன் 12-13 வயது மகளோடு, காட்டுப் பகுதியில் இயற்கை வாழ்வு வாழ்கிறார். அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே எப்போதாவது ஒரு முறை நகரத்திற்குச் சென்று வருகிறார். ஏன் அவ்வாறு இருக்கிறார் என்பதற்கான காரணம் எதுவுமே படத்தில் கடைசி வரை சொல்லப்படவில்லை. ஆனால் நிறைய க்ளூக்கள் கொடுத்து நம்மையே ஊகிக்க வைக்கிறார்கள்.

வசனங்களும் மிகக் குறைவு. ஆனால், ஒவ்வொன்றும் ஆணியடித்தது போன்று கருத்து கூறுகிறது.  அவர்களின் பயணத்தில், வழியில்  சின்னச் சின்ன நிகழ்வுகளாகத் தெரிபவை சொல்லும் சேதிகள் பெரிது. 

அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். அமெரிக்கா, பல நாடுகளின் மீது தொடுத்த போர்களில் பங்கெடுத்துள்ளார். பலஸ்தீனியர்கள் அணியும் வெள்ளை-கறுப்பு கட்டம் போட்ட ஸ்கார்ஃபை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார். ராணுவ வீரர்களுக்கான  சலுகையாக Post-traumatic stress disorder (PTSD) மாத்திரைகள் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. அவற்றைப் பிறருக்கு விற்று தன் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்.

காட்டிலேயே ஒரு மிகச்சிறிய கூடாரத்தில் தங்கி உணவு தயாரித்துக் கொள்கிறார்கள்.  தன் மகளுக்கு கல்வியுடன், சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களும் கற்றுக் கொடுக்கிறார். இப்படியே போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களைப் பிடித்துக் கொண்டு செல்ல வரும் அமெரிக்க சமூக நல அலுவலர்களால் தடைபடுகிறது. அமெரிக்க சட்டப்படி, அதன் குடிமக்கள் வாழ்விடம், கல்வி, அடிப்படை மருத்துவ உதவி எல்லாம் கிடைக்கப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிப்படி அவர்களை அழைத்துச் சென்று, விசாரணை செய்கிறார்கள்.

அவர் காட்டுக்குள் வாழ்வதால், மரம் செடிகளோடு வாழ விரும்புகிறார் என்று முடிவு செய்து, அவருக்கு அதே போன்றதொரு காடு சார்ந்த பெரும்  தோப்பில் வேலையும், வீடும் கொடுக்கிறார்கள். விருப்பமின்றி அங்கு தங்குகிறார் அவர். பதின்மத்தில் நுழையும் மகளுக்கோ இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று ஆச்சரியம். அங்கே தொடங்குகிறது சின்னஞ்சிறிய விரிசல்.

அவளை முறைப்படி பள்ளியில் சேர்க்க அரசு ஏற்பாடு செய்கிறது.அதுவரை அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்து அங்கிருக்கும் சக வயதினருடன் நட்பு கொள்கிறாள். ஒரு முறை வீடு வர நேரமாகும்போது, அப்பாவிடம் ஒரு மொபைல் இருந்தால் நான் உங்களைத் தொடர்பு கொள்ள வசதியா இருந்திருக்கும் என்று சொல்ல,  “இவ்வளவு வருடங்கள் நாம் அது இல்லாமல்தானே தொடர்பில் இருந்தோம்”  என்கிறார் தந்தை!!

ன்னொரு சமயத்தில்,  அடிக்கடி நண்பர்களைச் சந்திக்கச் செல்வது பற்றி தந்தை கேள்வி எழுப்ப, பள்ளிக்குச் செல்லுமுன் தேவையானவற்றைக் கற்றுக் கொள்வதற்காகச் செலவதாகவும், ஒன்றும் தெரியாமல் பள்ளிக்குப் போனால், சக மாணவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மகள் பதில் சொல்ல, “மற்றவர்களின் அபிப்ராயம் நம்மை எப்படிக் கட்டுப்படுத்தும்?” என்று தந்தை கேட்கிறார்!! நகரத்தில் வாழும் மக்களின் மனநிலை ஒற்றை வரியில் சொல்லப்படுகிறது!!

அங்கிருந்து தப்பிச் செல்கிறார்கள் இருவரும் - மகள் அரை மனதோடு உடன் வருகிறாள்.  பல தடங்கல்கள், போராட்டங்கள் தாண்டி, அடர்ந்த காட்டு வழி செல்லும்போது, தந்தை ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்.  எப்படியோ சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு பண்ணையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு பிழைக்கிறார். உடல் தேறும் வரை அங்கு தங்கி இருக்கிறார்கள். மகள் பண்ணை வேலைகளில் உதவுகிறாள்.

உடல் தேறியதும், தந்தை வேதாளமாய் மீண்டும் முருங்கை மரம் ஏற, மகள் மறுக்கிறாள். மிகப் பெரிய வாக்குவாதம், கூச்சல் களேபரமெல்லாம் இல்லை.... ஒரு சில வரிகள் மட்டுமே...  இருவரும் அமைதியாய்ப் பேசிக் கொள்கிறார்கள்... பின்னர் தந்தை மட்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!!

அந்தக் கடைசி உரையாடலில் மகள் சொல்லும் ஒரு வாக்கியம்... “What is wrong with you is not wrong with me!!" படம் முழுவதையும் விளக்கி விடுகிறது.

ப்படம், ஒரு தந்தை-மகள் உறவு, இயற்கை வாழ்வு குறித்த படம் என்பதைவிட அமெரிக்காவின் போர்களில் பங்கு பெறும் இராணுவ வீரர்களின் மனச்சிக்கல்கள் குறித்த கதை என்பதே என் கருத்து. 


தனக்குக் கொடுக்கப்பட்ட Post-traumatic stress disorder (PTSD) மாத்திரைகளை, தன்னைப் போன்ற ஓய்வு பெற்ற சக இராணுவ வீரர்களிடம் விற்க முயலும்போது அதில் ஒருவர் சொல்கிறார், “இந்த மாத்திரைகளால் எந்தப் பயனும் இல்லை. பல வருடங்கள் பயன்படுத்திப் பார்த்து விட்டேன். இரவுகள் இன்னும் பயங்கரமானவைகளாகவே இருக்கின்றன” என்பார்!!

வலுக்கட்டாயமாகத் தொடுக்கப்படும் போர்களில் பலி கொடுக்கப்படும் வீரர்கள்... “எல்லையில் இராணுவ வீரர்கள்...” என்று சொல்லியே வளர்க்கப்படும் தேச பக்தியுடன் மக்களும்...


ட்ரெய்லர்: https://youtu.be/Y28oII_G688

Post Comment

புதிய பார்வை






ள்ளிகளுக்கு, ஜூலை-ஆகஸ்ட் இரண்டு மாத கோடை விடுமுறை ஆரம்பித்ததும், எங்க குர் ஆன் வகுப்புக்கும் லீவு விட்டுட்டாங்க. சின்னவனும் நானுமா நல்லா தூங்கி தூங்கி எழுஞ்சுகிட்டு இருந்தப்பதான், அந்த ஃபோன் வந்தது!!

குர் ஆன் வகுப்பு நடத்துகிற நிறுவனத்திலிருந்து, நடத்தும் பதின்பருவ மாணவிகளுக்கான இரு வார கால கோடை வகுப்புகளில் பணிபுரிய “தன்னார்வலர்கள்” தேவைப்படுவதாக வந்த அழைப்பு அது. என்ன, அட்டெண்டன்ஸ் எடுக்கச் சொல்வாங்க, அதோடு போர்டைக் க்ளீன் பண்றது போன்ற ஆஃபீஸ் வொர்க் செய்யலாம்னு நெனச்சு போனா, பாடம் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க!! அவர்களின் ஆஸ்தான ஆசிரியைகள் விடுமுறைக்குச் சென்றிருந்த நிலையில், முடியாதுன்னு பின் வாங்கவும் முடியலை….

என்னடா இது என் தூக்கத்துக்கு வந்த சோதனை… என்று சோகமாக இருந்தாலும், நல்ல விஷயம்தானே முயற்சி செய்வோம்… என்று மனதைத் தேற்றிக் கொண்டு, குர் ஆனின் கடைசிப் பகுதியில் வரும் சில சிறிய அத்தியாயங்களை எடுத்து, தஃப்ஸீர் - விளக்கம் தயாரித்துக் கொண்டேன். பத்து நாட்கள் நடக்கும் வகுப்புகளில் பத்து அத்தியாயங்களை எளிதாக நடத்திவிடலாம் என்று நினைத்த எனக்கு, ஐந்தைக் கூட முழுதாக முடிக்க முடியாத அளவுக்கு விரிந்து கொண்டு போன விளக்கவுரை பிரமிப்பைத் தந்தது!! இத்தனைக்கும் ஒவ்வொன்றும் மூன்று முதல் பத்து வாக்கியங்கள் உள்ள சிறுசிறு அத்தியாயங்களே. ஒவ்வொரு வகுப்பிலும், முடித்தாக வேண்டுமே என்று விரைவுபடுத்தினாலும் முடிக்க முடியாத அளவுக்கு விரிவான விளக்கங்கள்!!

குர் ஆன் என்றால் வழக்கமாக அரபியில் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்ற அளவிலேயே அதுவரை பயின்று வந்த மாணவிகளுக்கு,  அதன் பிண்ணனி நிகழ்வுகள், உள்ளார்ந்த விளக்கங்கள், காரண காரியங்கள், சமகாலத்திற்கான படிப்பினைகள் ஆகியவை மிகவும் புதிதாக இருந்தமையால் மிகவும் ஆர்வத்தோடு வகுப்பில் ஒன்றியிருந்தார்கள்.

ஆகையால், விளக்கங்களோடு, மாணவிகளின் கேள்விகளும், சந்தேகங்களும், பிரமிப்புகளும், அனுபவங்களும், பகிர்வுகளும் என்று நேரம் போவதே தெரியாமல் அதிக சுவாரசியமாக இருந்தது. 

ந்த மாணவிகள் மட்டுமல்ல, நம்மில் பலரும் குர் ஆன் என்றால், அதை அரபியில் ஓதுவது மட்டுமே அவசியம் என்று நினைக்கிறோம். அதிகபட்சமாக, அதன் வாக்கிய அர்த்தங்களைத் தமிழில் வாசிப்பதோடு நமது கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறோம். ஆனால், விரிவான விளக்கங்கள் எனப்படும் “ஃப்ஸீர்” மிக மிக அவசியம். இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்வதுதான், குர் ஆனோடான நமது உறவை வலுப்படுத்தும். இதைத் தெரிந்து கொண்டவர்களால்தான் குர் ஆனை நமது அன்றாட வாழ்வில் வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியும்.

இஸ்லாம் குறித்து பொது தளங்களில் விவாதம் எழும்போதெல்லாம், முஸ்லிமல்லாதவர்கள் குர் ஆனில் இருக்கும் குறிப்பிட்ட சில வசனங்களைச் சுட்டிக்காட்டி சர்ச்சை எழுப்புவது வழக்கம். அதன் பின்புலங்கள் அறிய முற்படாமல், மேம்போக்கான பொருளை மட்டுமே எடுத்துக் கொள்வதுதாம் இதற்குக் காரணம்.

தஃப்ஸீரைக் கற்பவர்களுக்கு ஒரு இனிய எச்சரிக்கை:  தஃப்ஸீரைக் கற்கத் தொடங்கினால், மீள முடியாமல் அதில் மூழ்கி விட வாய்ப்புண்டு!! :-D அத்தனை விறுவிறுப்பு, சுவாரசியம், திகில், பயம், பரவசம், மகிழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு வழிகாட்டி… குர் ஆன்!!

மாணவிகளில் பெரும்பான்மையோர் இந்தியர், ஒரு பாகிஸ்தானி, ஒரு அரபி மாணவியும் இருந்தனர். அவர்களில் பாகிஸ்தானி மாணவியும், அருகில் அமர்ந்திருந்த இந்திய மாணவியும் எப்போதுமே பேசிக் கொண்டிருந்ததால் அவர்களிடம் “நீங்கள் இருவரும் உறவினரா?” என்று கேட்டேன். அதற்கு அந்த இந்திய மாணவி, படபடவென அவசரமாக, “ஒரு பாகிஸ்தானி எப்படி எனக்கு உறவினராக முடியும்?” என்று கேட்டாளே பார்க்கணும்!!

ஏன் இருக்க முடியாது என்று விளக்க முற்பட்டேன். அதற்கு அவள், “டீச்சர், நான் இந்தியா போகும்போது எனக்கு பாகிஸ்தானி தோழிகள் இருக்கிறார்கள் என்று நான் சொன்னாலே, என்னை தேசத் துரோகி போல பார்த்து, “எப்படி உன்னால் அது முடிகிறது” என்று கேட்கிறார்கள்.” என்று வருத்தத்துடன் சொன்னாள்!! :-( 
 
ஒரு நாள், அந்த பாகிஸ்தான் மாணவி, ”இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவார்களாமே?” என்று கேட்க, அதே இந்திய மாணவி, “அதெல்லாம் கிராமங்களில் படிக்காதவர்கள்தான் அவ்வாறு செய்வார்கள்” என்று தற்காப்பு செய்தாள். “ஆம், படித்தவர்கள் கருவிலேயே கொல்வார்கள், படிக்காதவர்கள் பிறந்தபின் கொல்வார்கள்” என்று சொல்ல நினைத்ததை நான் சொல்லவில்லை.

இன்னொரு இந்திய மாணவி, தனது பள்ளியில் சிலர் bullying செய்வதாகவும், அரபி மாணவர்கள்தாம் அப்படிச் செய்தாகவும் தன் அருகில் இருந்த அரபி மாணவியைப் பார்த்துக் கொண்டே குற்றம் சாட்டுவது போல கூற, நான் “எந்தவொரு நாட்டினரையும் பொதுவாகக் குற்றம் சொல்வது தவறு; எல்லா நாட்டிலும் நல்லவர்களோடு கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” என எடுத்துரைக்க அந்த அரபி மாணவி முகத்தில் புன்னகை. இன்னொரு இந்திய மாணவி, “Thank you for saying that teacher” என்றாள். 

இன்னொரு மாணவிக்கோ, தன் தாய் தன்னை ஃபோன் பேச விடுவதில்லை – லேப்டாப் பயன்படுத்த விடுவதில்லை என்ற குறை!! அவ்வ்வ்…… என் மகன்களும் இப்படித்தான் அவர்களின் ஆசிரியர்களிடம் குறை சொல்லியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். 

ப்படிப் பல கலவையான நிகழ்வுகளுடன் மிகவும் இனிமையாக வகுப்புகள் முடிந்தன. தங்களுடைய “feedback form”-ல் அவர்கள் அனைவருமே, “இவ்வகுப்பு, குர் ஆனை தாங்கள் இதுவரை பார்த்திராத வேறொரு கோணத்தில் பார்க்க உதவியதாகவும், தொடர்ந்து கற்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும்” குறிப்பிட்டிருந்தனர்.

ஆசிரியப் பணி எத்தனை சக்தி வாய்ந்தது, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது என்பதை முழுமையாக உணர்ந்தேன். இளம் சமுதாயத்தினரிடம் இருக்கும் அறியாமைகளைக் களைந்து அவர்களை நெறிப்படுத்த வேண்டியதன் அத்தியாவசியமும் – ஆனால், அதில் நாம் எத்தனை அலட்சியமாக இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது. 

அதே சமயம், இளைய சமுதாயத்தினை ஆசிரியர்களிடம் மட்டும் ஒப்புவித்துவிட்டு பெற்றோர்கள் தம் பொறுப்பைத் துறந்துவிட முடியாது. அவர்கள் தம் பிள்ளைகளுக்கு ஒரு உதாரண ஆசிரியராகவும் இருக்க வேண்டும். இதனால்தான், “உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோதனைகள்” என்று இறைவன் குர் ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறான் போல!!

Post Comment

பசுமை நிறைந்த நினைவுகளே!!






தொடர்புடைய பதிவுகள்:

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.... 
பார்வைகள்

என் முதல் தோட்டத்தின் ஒரு பகுதி
 
 சுமார் 17 வருடங்களுக்கு முன் அமீரகம் வந்தபோது வசித்த முதல் வீட்டில்,  தோட்டவளத்துறையில் பணிபுரிந்த உறவினர் ஒருவர் பரிசளித்த செடிகள், கொடுத்த ஆலோசனைகளால், என் “முதல் தோட்டம்” உருவானது!!

வீடு முழுக்க செடிகளால் நிறைந்து பார்க்கவே மனதுக்கு இதமாகஇருக்கும்.  எல்லாரும்  அலங்காரப் பொருட்கள், நகை, புடவைன்னு ஷாப்பிங் போனா,  என் ஷாப்பிங்கோ, செடிகொடி, தொட்டி, மண் என்று இருக்கும். ‘விசித்திரமான பிறவி’ன்னு எங்கூட்டுக்கார் நினைச்சிருப்பார்.  ஆனாலும், செலவு குறைவா இருந்ததால ஆரம்பத்துல விட்டுட்டார்.

ஆனா, அந்தத் தொல்லை தொடர ஆரம்பிச்சு, ‘சிறுதுளி பெரு வெள்ளமா’ முழுக வைக்கும் லெவலில் போகத் தொடங்கவும்... வீட்டுக்குள்ள தொட்டி வாங்கிவச்சா சரிவராது, உனக்கு தோட்டம் இருக்கிற வீட்டுக்கே குடிவைக்கிறேன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனார். பாத்தா ஆளேயில்லாத ஒரு குக்கிராமத்துல பங்களா மாதிரி வீடு!!  தோட்டத்துக்காக அதையும் சகிச்சுகிட்டு இருந்ததுல அஞ்சு வருஷம் போனதே தெரியலை!!


கிராமத்துத் தோட்டம்.. நகரத்தில் பால்கனித் தோட்டம்...
அஞ்சு வருஷம் கழிச்சு, வீட்டைக் காலி பண்ண மாட்டேன்னு நானே சொல்லுமளவு தோட்டம், துரவு, வேம்பு, அகத்தி, கருவேப்பிலை, முருங்கை, வெண்டை, தக்காளி, லவ் பேர்ட்ஸ், முயல், ஊஞ்சல்னு ஒரு  மினி-ஜமீன்தாரிணியா வாழ்ந்த வசந்த காலம்!! பொறுக்குமா.... மறுபடி ஒரு ஃப்ளாட்டுக்குள்ள பிடிச்சுப் போட்டுட்டாங்க. அங்கயும் பால்கனில செடிகள் வச்சிருந்தேன், ஆனா, சுற்றுவட்டார கட்டுமானப் பணிகளால் செடிகள் எல்லாம் போயிடுச்சு!! :-(((

தோட்ட ஆசை மறுபடி தலைதூக்க... அடிச்சுப் பிடிச்சு இந்த வீட்டுக்கு வந்தோம்.  புறநகர்ப்பகுதியில் இருந்தாலும் விஸ்தாரமான வீடு, சுற்றி தோட்டம் வைக்க நிறைய இடம்,  முன்னாடி விளையாட இடம், ஊஞ்சல்... எல்லாத்தையும்விட  பார்க்கிங் பிரச்னை இல்லை!! என்னவரின் உதவியால், வெறும்தரையாக இருந்த தோட்டத்தில், மண் மாற்றி,  காய்கறிக் கழிவுகளைக் கொண்டு வளப்படுத்தி அப்படி இப்படின்னு,  மூணு வருஷத்துல இப்பத்தான் முருங்கை, வேப்பிலைனு நாங்க வெச்ச கன்றுகள் மரமாகி வருது... இப்ப மறுபடியும் ‘பெட்டியைக் கட்டு’ன்னுட்டார்!!!


வேப்பங்கொழுந்துக்கு பஞ்சமில்லை!
இதனருகில் காலையில் தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்!!
வலது ஓரத்தில் கற்பூரவல்லி...

முன்பு ஜமீந்தாரிணி என்றால், இம்முறை ‘பண்ணையாரம்மா’வாகக் கொடிகட்டிப் பறந்தேன். ’ஜன்னலைத் திறந்தால் வேப்பமரக்காற்று’ என்ற என் இலட்சியம் இந்த வீட்டில் நிறைவேறியது. சொந்த மண்ணில் சொந்தமாக ஒரு விளைநிலம் என்பது இதுவரை கனவாகவே இருப்பதால், கிடைத்த இந்த வாய்ப்பை  முழுதாக அனுபவித்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும்.


Damas tree பிண்ணனியில்...
மரம் வளர்க்கும் ஆசையில், இங்கே சமீபகாலமாக அதிகம் வளர்க்கப்படும் ‘டமாஸ்’ என்ற மரக்கன்றுகளையும் வாங்கி நட்டுவைத்தோம். அசுர வேகத்தில் வளர்ந்த அவற்றை ஆச்சரியத்தோடு பார்த்தபோதுதான், செய்தி தெரிந்தது. இதுவும் சென்ற பதிவில் நாம் பார்த்த ‘யூகலிப்டஸ்’ மரம்போல, வேர்கள் ஆழமாகச் சென்று நீரை கபளீகரம் பண்ணுமாம். இருந்தாலும், வளர்ந்து நிழல் தரும் மரத்தை வெட்ட மனசில்லாமல் தவித்த நிலையில், வீட்டு ஓனர், காலி செய்யுமுன் அந்த மரங்களை வெட்டச் சொல்லி ஆணையிட்டார்!! அவர் கவலை நிலத்தடி நீரைக் குறித்தல்ல, அந்த மரம் அதிகமாக இலைகள் உதிர்க்கிறதாம்!! வெட்டிட்டோம்... :-(

இரண்டு தங்கைகளும், ஒரு கஸினும் இதே ஏரியாவில் இருப்பதால், அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இந்த வீட்டை விட்டுப் போவதால், இந்த வாய்ப்பும் குறையும் வருத்தமும்.
தொட்டிகளில் ‘சேமிப்பு’!!

இந்தச் செடி பூக்கும்னே தெரியாது; ஃப்ரீயா கிடைச்சதால், சும்மா அலங்காரத்துக்கு வச்சிருந்தோம். திடீர்னு போன வாரம் இதில் ஒரு அழகான பூ!! செடிக்கு பேரேல்லாம் தெரியாது. (ராமலக்ஷ்மிக்காவுக்குத் தெரிஞ்சுருக்கலாம்! :-) )

கரத்தினுள் குடியேறணும் என்ற அவசியத்தால் தோட்ட ஆசை மீண்டும் கனவாகும் நிலை. நகரமையத்தில் கிடைக்கும் வீட்டில் தோட்டத்தைவிட பார்க்கிங்கிற்கு இடம் இருந்தால் போதும் என்ற நிலையாகிவிட்டது!! என்றாலும்,  தொட்டிகளில் செடிகள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் முடிந்த வரை தொட்டிச் செடிகளைச் சேகரித்திருக்கிறேன்.  இப்போப் பார்த்திருப்பதும் நல்ல வீடுதான் என்றாலும், வீட்டு ஓனர் பக்கத்து வீட்டிலேயே குடியிருக்கிறார் என்பதுதான் கொஞ்சம் கிலியேற்படுத்துகிறது!! எந்த நாடானால் என்ன, ஹவுஸ்  ஓனர்கள் ஒரே மாதிரிதான்ப்பா இருக்காங்க!


ந்த பதினேழு வருட அமீரக வாசத்தில், எனக்கு அண்டைவீட்டுக்காரர்கள் என்ற ஒன்று வாய்த்ததே இல்லை. எப்போதும் பக்கத்து வீடுகளில் கம்பெனி அல்லது பேச்சிலர்ஸ்தான் இருப்பார்கள். பகல்முழுதும் தனிமை, அமைதிதான்!  இந்த வீடும் அப்படித்தான், ஆனாலும் பகல் நேரத்தில் தனியே இருக்கிறோம் என்ற நினைவே வரவிடாத அளவு பறவைகள் ஒலி இருந்துகொண்டே இருக்கும்! காலை எழுந்தது முதல் மாலை மங்கும் வரை  “கீச்.. மூச்... கிய்யா.. முய்யா...” என்று விதவிதமாகச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். மரங்களைவிட இதைத்தான் நான் அதிகம் மிஸ் பண்ணுவேன்!!


Post Comment

பக்கத்து வீடு




பக்கத்து வீட்டிற்கு மீண்டும் வாகனம் வந்த சத்தம் கேட்டது. சில மாதங்களாகவே காலியாயிருந்த  பக்கத்து பங்களாவிற்கு வரப்போவது யாராக இருக்கும் என்று ஆர்வமாக இருந்தது.  இரண்டு மூன்று நாட்களாக க்ளீனிங், பெயிண்டிங், மெயிண்டெனன்ஸ் எல்லாம் முடிந்து, இன்று வீட்டு உபயோகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் - அதுவும், “ராயல் ஃபர்னிச்சர்”, “ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்”, “ஜஷன்மால்” போன்ற உயர்ரகக் கடைகளிலிருந்து!! நான் நினைத்தது போலவே வரப்போவது ஒரு அமீரகக் குடும்பம்தானாம், என்னவர் சொன்னார்.

பெரிய குடும்பமில்லையாம், புதுமணத் தம்பதியராம். ஓ, அதான் புதுப்புது சாமான்செட்டு வருதா? எல்லாம் பெண்வீட்டு சீதனம் என்று நினைச்சிட்டீங்களா? இல்லை, இங்கே தலைகீழ்!!

இத்தனை வருஷமா இங்கே அமீரகத்தில் இருந்ததில், அமீரக மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓரளவு தெரிஞ்சுகிட்டேன்.  அமீரக அரசு, தன் குடிமக்களை எப்படித் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறதுன்னு விலாவாரியாச் சொல்லி உங்களையும் புகைய விட்டாத்தான் எனக்கும் மனசு ஆறும்!! :-)

அமீரகத்தில் ஒரு திருமணம் முடிவானதும், மணமகன் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஒரு தொகையும், இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்குத் தனியே “மஹர்” என்ற தொகை அல்லது அசையாச்சொத்து கொடுக்க வேண்டும். கல்யாணம் என்பது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறு வைபவம்; அதன்பிறகு
ஒருநாள் மணமகன் தன் செலவில் இருவீட்டு உறவுகளுக்கும் பெரிய விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். பிறகே தனிக்குடித்தனம்.

மணமகளுக்கான திருமண உடை தொடங்கி, fully-furnished தனி வீடு, உதவிக்கு பணிப்பெண், வெளிநாடுகளுக்குத்  தேனிலவுப் பயணம், சிலசமயம் மனைவிக்குத் தனிக் கார் உட்பட எல்லாச் செலவுமே முழுசா மணமகனோடதுதான். நம்ம ஊர்ல கட்டுன சேலையோட வர்றதுன்னு சொல்வாங்களே -  அது இங்கே நிஜம்! கண்ணுமுழி பிதுங்குதா??!! இவ்வளவுக்கும் சம்பாதிச்சுட்டு கல்யாணம் பண்றதுன்னா, வழுக்கை விழுந்திடுமேன்னு தோணுதா?

அப்படியெல்லாம் இல்லை. அமீரகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் பலவித சலுகைகள் தரப்படுகின்றன. கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம். தவிர தேவையைப் பொறுத்து வீடு கட்ட நிலம்+பணம் அல்லது கட்டிய புதுவீடே இலவசமாகக் கொடுக்கப்படும். வீடுகளில் தண்ணீர், மின்சாரமும் இலவசம்!! மேலும், படித்து முடித்தவுடன், தகுதிக்கேற்றவாறு அரசாங்க நிறுவனங்களில்  வேலை அல்லது தனியே தொழில் தொடங்க அரசு முதலீடு தரும்.  அப்புறமென்ன, திருமணத்துக்கு சேமிச்சு ரெடியாகிடலாம். இதுதவிர, மணமகனுக்கு அரசாங்கமே “திருமண உதவித் தொகை” என்று ஒரு பெருந்தொகையைக் கொடுக்கிறது. பெற்றோர்களும் முடிந்தால் உதவலாம். அப்புறமென்ன?

ஒருமுறை ஒரு அரபுத் தாயிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “எனக்கு மூன்று மகள்கள்; நல்லவேளை ஒரே ஒரு மகன். இறைவனுக்கு நன்றி.” என்றார்.

முன்பு என்னுடன் வேலை பார்த்த அமீரகப் பெண்ணின் தங்கையின் திருமணத்திற்குச்  சென்றிருந்தேன். நிகழ்வுகளைப் பார்த்துக் கொஞ்சமல்ல, ரொம்பவேப் பொறாமையாக இருந்தது. முக்கியமாக, பெண்களுக்கான மண்டப வாசலில், இரு தரப்பு அம்மாக்கள், சகோதரிகள் இணைந்து நின்று, வருபவர்களை வரவேற்கிறார்கள்.  ”மாப்பிள்ளையோட, மச்சானோட சின்னம்மாவோட ரெண்டு விட்ட அண்ணனை உங்க அம்மா வாங்கன்னு சொல்லலை” என்று எந்தக் கம்ப்ளெயிண்டும் கிடையாது!!

அரங்கம் ஓரளவு நிரம்பியதும், மணமகளை அழைத்து அமர வைக்கிறார்கள்.  மேடைக்குப் போய் மோதிரம் போடுறது, டின்னர் செட் கொடுக்கிறது,  மொய் எழுதுறது - ஊஹும்... எதுவ்வும் இல்லை!! போலவே விருந்துக்கும் எல்லாரும் ஒரே மாதிரி அழைக்கப்பட்டு அமரவைக்கப்படுகிறார்கள். மேசைகளில் உணவு பரிமாறப்பட்டு ரெடியாக இருக்கிறது. மைனிகளுக்கும், அவர்களின் மாமியார்களுக்கும் தனியாக ஸ்பெஷல் பொறிச்ச கறியெல்லாம் கிடையாது!!

இவ்வளவுதான் திருமண விழா!! கல்யாணமும் முடிஞ்சுது, கத்தரிக்காயும் காய்ச்சுதுன்னு கிளம்ப வேண்டியதுதான். நம்ம ஊர் ஜமாத்களிலிருந்து மக்களை இந்த ஊர் கல்யாணங்களுக்கு அழைச்சு வந்து காமிக்கணும்!! :-(

நம்ம ஊர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் காணப்படுற உணவு வீணடித்தல் இங்கும் இருக்கிறது. நேற்று செய்தித்தாளில், மிக முதிய அமீரகப் பெண்மணி ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி,  ”எங்கள் காலங்களில் நாங்கள் தேவைக்கு மட்டும் சமைத்து உண்டோம். இன்றோ உணவு பெருமளவு வீணடிக்கப்படுகிறது.” என்று வருத்தப்பட்டுக் கண்டித்திருந்தார்.

உண்மைதான், நம் நாட்டைப் போலவே இளந்தலைமுறையினரிடம் அதிகப் பணப்புழக்கம் இருப்பதால், உயர்ரகக் கார்கள், எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் பயன்பாடு அதிகம் உள்ளது. பணத்தின் அருமை முதியவர்களுக்குப் புரிந்ததுபோல,  இளையவர்களுக்கு இன்னும் புரிபடவில்லை.

எனினும், இளைய தலைமுறையினர் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நம் நாட்டுக் இளைஞர்களைப் போலவே, மேலைநாடுகளில் படித்து பட்டம்/முதுநிலைப் பட்டம் பெறுகிறார்கள். மேலும், இங்கே அமீரகத்திலேயே நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்  கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவின் பிட்ஸ்-பிலானி கிளைகூட உண்டு தெரியுமா?

பெண்கள் முன்னேற்றமும் - படிப்பு, வேலை, தொழில்கள் ஆகியவை நம் நாட்டுக்கு இணையாகவே உள்ளது. அநேகம் பெண்கள் படிச்சு, நல்ல வேலைகளில் இருக்காங்க அல்லது சுயதொழில் செய்றாங்க.  ஆனால் இதனால் வீட்டில் பணியாளர்களை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியிருப்பதால், குழந்தைகள் வளர்ப்பில் இதன் பக்க விளைவு எதிரொலிப்பதாகவும் அமீரகப் பெரியவர்கள் வருத்தப்படுறாங்க.  இன்னொன்று,  இந்தியாவைப் போலவே இங்கும் லேட் மேரேஜ், விவாகரத்து விகிதம், விவாகரத்தான பெண்கள் தனித்து வாழ விரும்புவது ஆகியவை அதிகரித்து வருகிறது. நாட்டுக்கு நாடு வாசப்படி!!!

நான் கேட்டு வியந்த ஒரு சம்பவம் உண்டு. ஒரு நண்பருக்கு அறிமுகமான அமீரகக் குடிமகன் ஒருவருக்கு (முதல்)  திருமணம் ஆனது. திருமண ஒப்பந்தம் கையெழுத்தான ஒருசில தினங்களில் அப்பெண் விவாகரத்து வாங்கிக் கொண்டாள். அப்பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம், முதல் முறையும் இதேபோலவே ஒப்பந்தம் கையெழுத்தானதும் விலகினாளாம்!! இதில் யார் பக்கம் சரியோ, தவறோ. ஆனால், அப்பெண் துணிச்சலாக இருமுறை உடனடி விவாகரத்து கோரும் சாதகமான சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்!!

ஆம், இங்கு விவாகரத்து அதிகம் இருந்தாலும்,  விவாகரத்தான பெண் மறுபடி முதல் தாரமாகவே வாழ்க்கைப் படுமளவுக்கு, மறுமணம் என்பதும் மிக சகஜமான ஒன்று.

ஒரு குடும்பத்தில் பல சகோதர சகோதரிகள் இருந்தால், முதலில் அக்காவுக்குக் கல்யாணம், பிறகு தங்கைக்கு என்றெல்லாம் கிடையாது. யாரைப் பெண் கேட்டு வருகிறார்களோ, அது கடைசிப் பெண்ணாக இருந்தாலும், உடன் திருமணம். போலவே சகோதரர்களுக்கும் - சகோதரிகளின் திருமணம் முடிந்துதான் அண்ணனுக்குக் கல்யாணம் என்கிற சம்பிரதாயங்களெல்லாம் கிடையாது.  இதற்கு வரதட்சணை, சீர்கள், கூட்டுக்குடும்பம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

ஆண்கள் திருமணமானதும் (பொருளாதாரத்தைப் பொறுத்து) உடனே தனிக்குடித்தனம் போய்விடுவார்கள்!! இதனாலேயே மாமியார்/நாத்தனார்-மருமகள் பிரச்னைகளெல்லாம் இல்லையோ என்னவோ. அதற்காக பிள்ளைகள் தம் பெற்றோரை அப்படியே விட்டுவிடுவதில்லை. வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை!! அமீரகக் குடும்பங்களில் தாய்க்கே அதிகாரம் அதிகம். பல அமீரகத் தொழிலதிபர்கள் பேட்டி கொடுக்கும்போது, தன் தாய்க்கு இன்றும் கட்டுப்படுவதுண்டு என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். மேலும், வீடு, மருத்துவம், உதவித் தொகை உள்ளிட்ட பெரிய செலவுகளுக்கெல்லாம் அரசே பொறுப்பேற்றுக் கொள்வதால், பணத்திற்காக பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் அவசியமும் இல்லை!!

எங்கள் பக்கத்து வீட்டுத் தம்பதியரும் வாரம் தவறாமல், வேறு மாநிலமான ராஸ்-அல்-கைமாவில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுவர். கணவர், விண்வெளித் துறையில் வேலை பார்க்கிறார். மனைவியும் ஒரு அரசு நிறுவனத்தில்.

உறவுமுறைத் திருமணங்கள் அதிகம் என்பதால், அவசியத்தை உணர்ந்து, திருமணத்திற்குமுன் மருத்துவப் பரிசோதனைகள் பல வருடங்களுக்குமுன்பே கட்டாயமாக்கப்பட்டுவிட்டன.  இந்நாட்டு மக்கள் மனவளர்ச்சிக் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளை ”இறைவனின் நன்கொடையாகக்” கருதுகிறார்கள் என்று செய்தித்தாளில் வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் மரணத்தை மிக இலகுவாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இங்கும் கிராமங்களும், அங்கு வாழும் எளியவர்களும் உண்டு. ஏன் நாகரீகம் பெரிதும் எட்டாத மலைவாழ் மக்கள்கூட உண்டு. ஆனால், சுகாதாரம், கல்வி வசதிகள் எட்டாத இடம் இல்லை.

விவசாயம் பெரிதும் போற்றப்படுகிறது. மானியங்களும், இலவச தண்ணீர்-மின்சாரம், உற்பத்திப் பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் எல்லாம் உண்டு. புதிய முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார்கள். இதனால், கடும் கோடையிலும் குறையாத உற்பத்தி தரும் Green-house farming பயன்பாட்டில் உள்ளது. மண் இல்லாமல், தண்ணீரில் பயிர் செய்யும் Hydroponics முறையும்  ஒரு (படித்த) விவசாயி மேற்கொள்கிறார்!!

கல்வி, மருத்துவத்துறைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது அரசு. அரசுப் பள்ளிகளில், பாடங்கள் அரபிமொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, எல்லா ஆசிரியர்களுக்கும் தற்போது ஒரு வருட பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் புலமையை அதிகரிக்க பிரைமரி வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆங்கிலேய ஆசிரியையும் பிரத்தியேகமாக வரவழைத்து நியமித்துள்ளார்கள்.

அரசு மருத்துவமனைகளும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் போன்ற பிரபல மருத்துவமனைகளோடு இணைந்து செயலாற்றும்படி சீரமைக்கப்பட்டு, பல அரிய சிகிச்சைகள் இங்கேயே கிடைக்குமளவு தரம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.  



நாட்டின் வளர்ச்சிக்குரிய இத்தனை ஏற்பாடுகளும், நாட்டின் பெட்ரோலிய மற்றும் இதர வருமானங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. தனிநபர் வருமான வரிகள் உட்பட பல வரிகள் இங்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அமீரகத்தின் தொடர் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்நாட்டின் தொலைநோக்குள்ள ஆட்சியாளர்களே காரணம். மக்களோடு மக்களாகக் கலந்து பழக முனையும் முயற்சியாகவும், நிர்வாகத்தைக் கண்காணித்து முறைப்படுத்தவும் ஆட்சியாளர்கள் அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சேவை மையங்களுக்கு திடீர் வருகைகள் தருவதுண்டு. அமீரக “தேசிய தினமான” நேற்று (டிசம்பர் 2) வெளிநாட்டு மக்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் மொபைல் ஃபோனில் வாழ்த்துச் சொல்லி, உப ஜனாதிபதியான துபாய் ஆட்சியாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி!! 




நேற்றைய தேசிய தினத்தின் கொண்டாட்டங்களில், இந்நாட்டு குடிமக்களுக்கு இணையாக, வெளிநாட்டினரும் குறைவில்லாத உற்சாகத்துடன் தம் வீடுகள், கார்களை அலங்கரித்துக் கலந்துகொண்டது ஒன்றே சாட்சி, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நாடு இது என்பது!!

Post Comment

மேலே.. மேலே... மேலே....




போன வாரம், என் நெருங்கிய கல்லூரித் தோழி கலிஃபோர்னியாவிலருந்து இந்தியா போற வழியில இங்க என்னோட ரெண்டு நாள் தங்கிட்டுப் போனா!! 14 வருஷம் கழிச்சு சந்திக்கிறோம்னா சந்தோஷத்துக்குக் கேக்கணுமா? துபாயில இருக்கிற இன்னொரு தோழரும் (’அந்தத்’ தோழர் இல்லீங்கோ!) சேந்துகிட்ட கடைசி நாள்ல, கலகலப்புக்குப் பஞ்சமேயில்ல!!

அவளோட ரெண்டு நாள் அபுதாபி, அல்-அய்ன், துபாய்னு ஒரே ஊர்சுத்தல்தான்.  ஊர்சுத்திட்டு, படங்களோட பதிவு போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரான்னு பதிவுலகம் பல்லுமேல நாக்கைப் போட்டுக் கேட்டுடாது?  அதனால, எடுத்த படங்களோட, சுட்ட படங்களையும் வச்சு ஒரு பயணக்கட்டுரை இதோ!!

         இது அபுதாபில உள்ள பிரமாண்ட ஷேக் ஸாயத் பள்ளிவாசல்  (arabnews.com)


இதுதான் தலைநகர வாசல் (Capital Gate) - உலகின் மனிதனால் கட்டப்பட்டமுதல் சாய்ந்த கட்டிடம் (கட்டுமானம் முடியலை இன்னும்.(ameinfo.com)

அல்-அய்ன்ல  வழக்கம்போல ஜபல் ஹஃபீட் மலையேறிட்டு,  அதன் அடிவாரத்துல உள்ள கொதிநீர் ஊற்றுகளையும் பாத்துட்டு (மட்டும்தான், கொளுத்துற வெயிலுக்கு சாதா தண்ணியே கொதிக்குது!!)   மறக்காம மினி ட்ரெயின்லயும் ஒரு த்ரில் சவாரி போய்ட்டு வந்தோம். 
(படம் மகன் எடுத்தது; அதில் நிக்கிறவங்க யாருன்னு தெரியாதுங்கோ!)

நிறைய பேருக்கு இந்த மாதிரி ஒரு ட்ரெயின் இருக்கிறதே தெரியாது. இதுல போனா சூப்பரா இருக்கும். இருவர் இருக்ககூடிய இதில், மேனுவல் கண்ட்ரோல் பயன்படுத்தி, மலையடிவாரச் சரிவுகளில் அமைக்கப்பட்ட பாதையில் சறுக்கி வந்தா  ஒரு சின்ன ரோலர்-கோஸ்டர் அனுபவம் கிடைக்கும்.

அப்புறம், மிருகக் காட்சி சாலையில இரவுப் பறவைகள் காட்சிகள் பாத்துட்டு,  டைனசர் Animatrons பாத்துட்டு மறுநாள் துபாய் வலம்!! இந்த டைனசர் Animatrons-ஐ இரவு நேரத்துல பாத்தா நல்லாருக்கும். சிறுவர்களுக்கான இவற்றைப் பெரியவங்க போய்ப் பாத்துட்டு “இத நாங்க ஜுராஸிக் பார்க்லயே பாத்துட்டமே”ன்னு கமெண்டக் கூடாது!!

துபாய்ல வழக்கம்போல க்ரீக் பார்க, மால்கள்னு வலம் வந்திருப்போம்னு நீங்க நினைச்சா, ஸாரி, நாங்க “மாகி கெட்ச்-அப்” (அதாங்க, “Its' different boss!!").

 penthouses.com                                                                                                                                            beborealestate.com
முதல்ல போனது,  Palm Jumeirah - ஈச்ச மரம்போல கடலில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு நகர். இதன் கிளைகள் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் பின்வாசலிலும் கடற்கரை!! ம்ம்.. சுனாமி வரும்னு பயமா இருக்காதா இங்க இருக்கவங்களுக்கு??


                              panoramio.com                                                                    2daydubai.com    
அப்புறம், மோனோரெயில் - ஒற்றைப் பாலத்தில் போகிறது. கடல் மேல் போகும்போது கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருக்கிறது. அட்லாண்டிஸ் ஹோட்டல் பக்கத்தில், ரெயில் வரும் திசையைப் பொறுத்து  ரெயில் பாதையில் ட்ராக் மாறுவது கவனித்துப் பார்த்தால்தான் தெரியும்.
வலது படத்துல இருக்கதுதான் பிரமாண்ட அட்லாண்டிஸ் ஹோட்டல். ட்ரெயின்ல இருந்து இறங்கி உள்ளே போய், நம்ம தகுதிக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டுட்டு, திரும்பி அதே ரயிலைப் பிடிச்சு, பட்டணத்துக்கு வந்துட்டோம்.

 wikipaedia.com
அடுத்து, துபாயின் தற்போதைய பெருமையான  உலகின் உயர்ந்த கட்டிடமான “புர்ஜ் கலீஃபா”விற்குச் சென்றோம். ஏறக்குறைய 160 மாடிகள் உள்ள கட்டிடத்தின், 124வது மாடியின் பால்கனியில் நின்று நகரைக் கண்டு ரசிக்கலாம். இதில என்ன பெரிசா இருக்கப்போகுதுன்னு நினைச்சுதான் இதுவரை போகலை. தோழிக்காகப் போனது. ஆனா, ஒரு மிக நல்ல அனுபவம்.   
முதலில் இதன் லிஃப்ட்! தரைத்தளத்திலிருந்து, சரியாக ஒரே நிமிடத்தில் 124வது மாடிக்குச் சென்றுவிடுகிறது. லிஃப்ட் கருப்பு கலரில், வெளிச்சமே இல்லாமல், ஒரு நைட் லேம்ப் மாதிரியான சூழலில் இருப்பது கொஞ்சம் பயம் தருகிறது. ஆனால், லேசான காது அடைப்பு தவிர வேறொன்றும் தெரியவில்லை. ஏன், லிஃப்ட் போகிறதா, நிற்கிறதா என்றுகூடத்  தெரியவில்லை!! போய்க்கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கும்போது நின்று, கதவு திறக்கிறது.


இந்த லிஃப்டில்தான், சில மாதங்கள்முன் பத்து பேர் ஒரு மணிநேரம்போல மாட்டிக்கொண்டார்களாம். ஒரு டார்க் ரூம் போல இருக்கும், நிக்குதா, போகுதா என்றே தெரியாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் மாட்டிக்கொண்டால் பயமாத்தானே இருக்கும்? நல்லவேளை அதற்கப்புறம் அப்படி எதுவும் நடக்காதமாதிரி சரி செய்து கொண்டார்கள்!!

அதிலே  ஏறி மேலே போனா, வாவ்!! ரொம்ப அழகா இருக்கு!! அங்கிருந்து ஊரைப் பார்ப்பது ஒரு தனி அழகு!! போறவங்க, பகல்ல , வானம் தெளிவா இருக்கும்போது போனா, பார்க்க வசதியா இருக்கும்.

படங்கள் ரெண்டும் மகன் எடுத்தது; வலது படத்துல புர்ஜ் கலீஃபாவின் நிழல் தெரியுதா?

இன்னும் தெளிவாப் பார்க்கணும்னா, அங்கே டெலஸ்கோப்புகள் வச்சிருக்காங்க. அதுல விபரங்களோடு பாத்துக்கலாம்.  அங்கிருந்து பார்க்கும்போது, பாம் ஜுமைரா போலவே, கடலில் உருவாக்கத் திட்டமிட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “தி வேர்ல்ட்” - உலக வரைபடம் போன்ற தீவுகள் - மணல் திட்டுகள் மட்டும் தெரிகின்றன.

 gulfnews.com                                                        flashydubai.com

மேலிருந்து, அடுத்துள்ள துபாய் மாலில் நடக்கும் "Dancing Water fountain show" பார்க்கத் தவறாதீர்கள்!! அற்புதமாக இருக்கும்!! இங்கிருந்து பார்த்துவிட்டு, கீழே வந்து மறுபடியும் பார்க்கும்போது, ஒரு புதிய “பரிமாணம்” நிச்சயம் கிடைக்கும்!! இந்த நீர் நடனம்தான் உலகிலேயே மிகப் பெரியதாம். இரவு வரை அரைமணி நேரத்திற்கொருமுறை நடக்கும் இந்த நடனத்திற்கு ஒவ்வொரு முறையும் இசைக்கப்படும் வெவ்வேறு அரபி பாடல்கள் உங்களை ரசித்துத் தாளம் போட வைக்கும். இதற்காகவே இரண்டு, மூன்று முறை பார்க்கலாம் இந்நடனத்தை!!

சொல்ல மறந்துட்டேனே, கீழே இறங்கி, வெளியே வரும்வழியில், புர்ஜ் கலீஃபா உருவான விதம், வடிவமைக்கப்ட்டது, உயரத்தில் காற்றழுத்தம் தடுக்கும் நுட்பங்கள், கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டம், முக்கியப் பங்காற்றியவர்களின் விபரங்களுடன் கூடிய படங்கள் என்று ஒரு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். கட்டிடக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்குத்  தகவல்கள் கிடைக்கும்.

தோழியைப் பார்த்தது மட்டுமல்ல, அவள் காரணமாக, இதுவரை பார்க்காத பல இடங்களைப் பார்த்தது என்று, மொத்தத்தில் ஒரு நிறைவான ஊர்சுற்றல்!!

  டிக்கெட்டக் காமிச்சாத்தான் நம்புவாங்களாம்!!
  
 

Post Comment