எவ்வளவு நாள் பதிவர் லெவல்லயே இருக்கிறது? அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா? அதான் என்னோட சில பதிவுகளுக்கே நான் “ஃபாலோ-அப்”பெல்லாம் எழுதி ஒரு டிரையல் எடுக்கலாம்னு... நீங்க டரியல் ஆவாதீங்க..
அதுக்கு மின்னாடி, ஒரு கேள்வி: மார்ச் 22 - இந்த நாளுக்கு என்ன சிறப்புன்னு நெனவிருக்கா? பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம்!! (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே?)
1. சுரங்கமே வீடாக:
சிலி நாட்டில், சுரங்கத்தில் சிக்கிவிட்ட 33 சுரங்கப் பணியாளர்களைப் பற்றி எழுதியிருந்தேன் இந்தப் பதிவில். நேற்று இரவில் அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள்!! மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு!! எல்லோரின் கூட்டுப் பிரார்த்தனையும், உழைப்பும்தான் அவர்களை, எதிர்பார்த்த டிசம்பர் மாதத்தை விட இரண்டு மாதங்கள் முன்பே வெளியே கொண்டுவந்திருக்கிறது.
சிலியின் ஜனாதிபதி நேரில் வந்து, ஒவ்வொருவரையும் வரவேற்றிருக்கிறார். 33 பேரில் ஒருவரான பொலிவியா நாட்டவரை வரவேற்க பொலிவியாவின் ஜனாதிபதியும் பிரத்யேக வருகை தந்திருந்தார்.
சாமான்யர்களான முப்பத்து மூவருக்கும் தற்போது திடீரென கிடைத்திருக்கும் “நட்சத்திர அந்தஸ்தை” அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களின் அடுத்த சவால். அவர்களை மேலே ஏந்திவந்த கூண்டின் பெயர் “ஃபீனிக்ஸ்”!!!
அவர்கள் சுரங்கத்தில் அடைபட்டிருந்த காலத்தில், அவர்களுக்குத் தேவையான மற்றும் அவர்களால் கேட்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் மேலெயிருந்து அனுப்பித் தந்த மீட்புக் குழுவினர் இரண்டு பொருட்களை மட்டும் அனுப்ப மறுத்து விட்டனர்!! அவை என்ன தெரியுமா? வீடியோ கேம்ஸும், ஐ-பாட்/எம்.பி.3 பிளேயரும்!! ஆமாம்., அவற்றைப் பயன்படுத்துவோர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவர்; எதிர்பாராத ஆபத்து நேர்ந்தாலோ, எச்சரிக்கைகளையோ அவர்கள் கவனிக்காது விட வாய்ப்பிருக்கும் என்பதால் அவற்றைத் தரவில்லையாம்!!
2. திருத்தாத தீர்ப்புகள்:
இந்தப் பதிவில் பிறழ்சாட்சிகள் பற்றியும் எழுதியிருந்தேன். அமீரகத்தில், கள்ளச்சாராயத்(!!) தகராறு ஒன்றில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக, 17 இந்தியர்கள் மரணதண்டனை பெற்றிருந்தனர். இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, பலரும் இந்திய அரசாங்கம் இவ்வழக்கில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த வழக்கின் அப்பீலில், முக்கிய சாட்சியானவர், ‘நினைவில்லை’, ’தெளிவாகப் பார்க்கவில்லை’, ‘சம்பவம் நடந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது’ என்றெல்லாம் சொல்லிவிட்டதால், தீர்ப்பு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சீக்கியர்கள்!!
3. டிரங்குப் பொட்டி -10:
இதில், குப்பைத் தொட்டிக் குழந்தைகள் குறித்து எழுதியிருந்தேன். இப்ப நாகரீக வளர்ச்சிக்கேற்ப, ஃப்ளைட் பாத்ரூம்ல குழந்தையைப் போட்டுட்டுப் போறாங்க!! (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில!!) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது!! அப்புறம் விசாரிச்சு, அம்மாவைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திட்டாங்க.
எனக்கு என்ன ஆச்சர்யம்ன்னா, பிரசவம்கிறது பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறப்புன்னும் சொல்றோம். ஆனா, இப்படி சத்தமில்லாம பாத்ரூம்ல பிள்ளையப் பெத்துட்டு, ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான்!! நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள்!! இவங்கள மாதிரி எல்லாருக்கும் ஈஸியா இருந்துட்டா....
4. அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!
இந்தப் பதிவு, ’உலக தண்ணீர் தினத்தை’ ஒட்டி எழுதப்பட்ட பதிவு!! இப்ப ஞாபகம் வந்துருச்சா? மார்ச் 22!! பதிவுலகில் அநேகமா எல்லாப் பதிவர்களும் வரிஞ்சுகட்டிகிட்டு, தண்ணீர் சேமிப்பை, சிக்கனத்தை வலியுறுத்தி தொடர்பதிவுகள் எழுதினோம். ஒருநாள் விழாவா கொண்டாடிட்டு மறந்துபோகாம, அதன் தொடர்ச்சியா, தண்ணீர் சிக்கனத்திற்காக என்ன செய்கிறோம்னு யோசிக்க ஒரு நினைவூட்டல் என் தரப்பிலிருந்து. நான், என் வீட்டில் கிச்சன் சிங்கில் வரும் தண்ணீர் அளவைக் குறைத்து வைத்திருக்கிறேன்.
எச்சரிக்கை: இதேபோல, இனி பதிவில் “ஃபாலோ-அப்” எழுதுபவர்கள், எனக்குரிய ராயல்டியை தவறாமல் தந்துவிடவேண்டும்!!
|
|
Tweet | |||
