Pages

வில்லன் இல்லாத சினிமா
படம் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல ஒரு ஹீரோ, ஹீரோயின், வில்லன் கதைதான். வில்லனை ஜெயித்து, ஹீரோ ஹீரோயினைக் கைப்பிடிக்கும் கதை. இந்தப் படங்களிலெல்லாம் வில்லன் ஏன்தான் வர்றானோ? எப்பப் பாரு ஒரே மாதிரி கதை. ஒரு ஹீரோ, அவனுக்கு பிரச்னை கொடுக்கிறதுக்குன்னே ஒரு வில்லன்.

அதென்ன எல்லாப் படத்துலயும் ஒரு வில்லன்? வில்லன் இல்லாம ஏதாவது படம் வந்திருக்கா? ஆனா வில்லன் இல்லாத படத்துல என்ன சுவாரஸ்யம் இருக்கும், இல்லையா? வில்லன் இருந்தாத்தான் ஹீரோ அவனோட தீய எண்ணங்களையும், திட்டங்களையும் முறியடிச்சு, அவனை ஜெயிச்சு வெற்றி வாகை சூடி காதலியையோ, கம்பெனியையோ, நாட்டையோ கைப்பற்ற முடியும்.

இதுவே, வில்லன்னு ஒரு கேரக்டரே இல்லாம, ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சு, கல்யாணமும் பண்ணி, குடும்பம் நடத்தி, வயசாகி.... இதுல என்ன சுவாரசியம் இருக்கு? படம்னா, ஒரு வில்லன் இருக்கணும், இருந்தாத்தானே விறுவிறுப்பு? அந்த வில்லன், எதிரி நாட்டவனா இருக்கலாம், இல்ல, சொந்த அக்கா புருஷனாவும் இருக்கலாம், ஏன், உடன்பிறந்த அண்ணனாகக் கூட இருக்கலாம். ஆனா வில்லன் வேணும்.

நிஜ வாழ்வில் வில்லன்கள் உண்டா? இருப்பாங்களே, எதிர்வீட்டுக்காரி, செட் பண்ணி வச்ச ஃபிகரை தள்ளிக்கொண்டுபோகும் நண்பன், மேனேஜரிடம் போட்டுக்கொடுத்தே பேர் வாங்கும் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட், இப்படி விதம்விதமாக... யாருமே இல்லையென்றாலும், நம்மனமே நம் வில்லனாய் பல சமயங்களில்!!

ஆம், மனம்தானே நமக்கு வில்லனாய் நிற்கிறது பலபோதும்!! சரியான பாதை அறிவுக்குத் தெரிந்தாலும், மனம் வில்லனாய் மாறி, நம்மைத் தவறிழைக்க வைக்கிறதே!! மனதைக் கொண்டு, தீய எண்ணங்கள் எனும் வில்லனை ஜெயிக்க முடிந்தால், நாம் ஹீரோ!! வில்லனை ஜெயிக்காமல், அதன் பாதையில் நடந்தால், எனக்கு நானே வில்லன்!!

ஆக, நான் வில்லனாக இருப்பதும், ஹீரோவாக இருப்பதும் நம் கையில், அதாவது என் மனதில்!! மீண்டும் அந்தக் கேள்வி வந்தது. வில்லனின் அவசியம் என்ன? ஏன் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கக்கூடாது? அப்படி இருந்தால் உலகம் அமைதியான இடமாக இருக்குமே!!

ஏதோ மெல்ல மெல்ல புரிந்தது. இதோ, நன்மையின் வடிவாக நான் இருக்கிறேன்; தீமையின் வடிவாக ஷைத்தான் இருக்கிறான். உனக்கென்று நான் கொடுத்த உன் ஆறாவது அறிவும் இருக்கிறது; அதனைக் கொண்டு, நன்மை, தீமை தெளிந்தாராய்ந்து, அதன்படி நட என்று சொல்கிறானோ வல்ல இறைவன்?

ஏன் ஷைத்தானைப் படைக்க வேண்டும்? அவன் இல்லையென்றால் எல்லாருமே நல்லவர்களாக இருப்பார்களே; உலகில் கொலை, கொள்ளை, வஞ்சம், துரோகம், அழுகை, கோபம் எதுமே இருக்காதே. இவை இல்லாத பூவுலகில் வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கும்? சுகமாக இருக்கும்;  ஆனால் எல்லாருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? அடிமைகள் அல்லவா, சுய விருப்பு, வெறுப்பு இல்லாது, உடையவன் இட்ட கட்டளைப்படி நடக்கும் நிர்பந்தத்தில் இருப்பர்.  அதாவது, சுய பகுப்பு என்ற ஒன்றே இல்லாது,  கிட்டத்தட்ட ஐந்தறிவு படைத்த விலங்குகள் போலவே மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மனிதர்களுக்கு மட்டும் ஆறாவது அறிவு எதற்கு? நன்மை, தீமை பகுத்தறிந்து, சரியானதைத் தேர்ந்தெடுத்து, அதன் வழி நடக்கவே இந்த ஆறாவது அறிவு!!

நம்முன், பலவகை உணவுகளையும் வைத்து, இதில் உன் விருப்பப்படியும், தேவைப்படியும் உணவைத் தேர்ந்தெடுத்து உண் என்று சொல்வதற்கும்; ஒரே வகை உணவை மட்டும் வைத்து, இதுதான் உன் அன்றாட உணவு என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?

ஆக, ஷைத்தானைப் (தீய சக்தியை) படைத்ததன்மூலம் மனிதர்களுக்கு நியாயமே செய்துள்ளான் இறைவன். வாய்ப்பே கொடுக்காமல், நல்லவர்களாக இருக்க வைப்பதைவிட, ஆப்ஷன்ஸ் கொடுத்து, Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்!!Post Comment

நம்பிக்கையே மாமருந்து
இந்தப் பதிவில் சொல்லியிருந்த என் மகனின் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் சமயத்தில் நடந்தவைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

போன வருடம் ஜூலையில் நானும், பிள்ளைகளும் பாண்டிச்சேரியில் வேலை நிமித்தம் தங்கியிருந்த என் வாப்பாவோடு ஒரு நாலு நாள் தங்கிவிட்டு, பின் திருநெல்வேலி போவதாக ப்ளான். ப்ளான் படி பாண்டிச்சேரி  போன உடனே பெரியவனுக்கு வயிறு வலியும் ஆரம்பிச்சிட்டுது. நானும் பயணக் களைப்பு அல்லது வாயுவாக இருக்கும் என்று ஓமம், மிளகு என்று கைமருந்து கொடுத்தேன். குறையவில்லை. அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்.
 

ஸ்கேன் செய்ததில் குடல்வால் நீக்க அறுவைசிகிச்சைதான் செய்யணும் என்று தெரிந்தது. எனக்கோ பதற்றம்; என்னவரோ அபுதாபியில். என் அம்மாவும் தங்கையின் பிரசவத்துக்காக ஊர் சென்றிருந்தார். துறுதுறுவென்று நிற்கும் சின்னவன் வேறு. வாப்பாவுக்கும், அலுவலக நண்பர்களை மட்டுமே தெரியும். சின்னவனைக் கவனிக்க யாரும் இல்லாததால், பாண்டிச்சேரியில் செய்யாமல் திருச்சியில் செய்யலாம் என்று நினைத்தேன். அங்கிருந்து காரில் மூன்று மணிநேரம்தான்; மச்சினர் குடும்பம் அங்கு இருப்பதால் சின்னவனையும் பார்த்துக் கொள்வார்கள். எனக்கும் தைரியமாக இருக்கும்; இருந்தாலும் டாக்டரிடம் கேட்டுக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். தலைமை மருத்துவர் மாலை ஆறு மணிக்கு வந்தார். அவரும் அறுவை சிகிச்சையை உறுதிபடுத்திக் கொண்டு மறுநாள் காலை எட்டு மணிபோல செய்யலாம் என்றார்.

நான் அவருக்கு என் நிலைமையை விளக்கமாகத் தெரியப்படுத்தி, திருச்சிக்குப் பயணம் செய்யலாமா  என்று கேட்டதுதான் தாமதம், பயங்கரக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. “கொண்டு போங்க; ஆனா வழியிலயே வெடிச்சிரும். அப்புறம் என்ன வேணா நடக்கும். பரவாயில்லையா?” என்றாரே பார்க்கலாம். நான் அப்படியே விதிர்விதிர்த்து விட்டேன். பிள்ளையைப் பார்த்துப் பேசுகிற பேச்சா அது? அதுவும் ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர்!!  நானோ இன்னும் பொறுமையாகப் பேசினேன். அவரோ சாபம் கொடுப்பதுபோல இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என்றே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் நோயாளியைக் குறித்த அக்கறை தெரியவில்லை. மருத்துவமனையை விட்டு நாங்கள் போவதைத் தடுக்கும் எண்ணம் மட்டுமே தெரிந்தது. எமர்ஜென்ஸியாக உடனடியாகச் செய்ய வேண்டியிருந்தாலும் அவர் கையால் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். அவரிடம் டிஸ்சார்ஜ் செய்ய வலியுறுத்தினேன்.

டிஸ்சார்ஜ் செய்வதற்காக அவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் தமிழில், அவர் பேசியதைவிடக் கொடூரமாக எழுதியிருந்தார்கள் (அந்தக் கையெழுத்து அதைவிடக் கொடுமை!!).
அதில் எழுதியிருந்த வாசகங்களை இப்போ நினைத்தாலும் நடுங்குகிறது!! அதில் கையெழுத்திடச் சொன்னார்கள். என்னால் முடியாதென்று சொல்லி சண்டைக்குப் போனேன்.   ஆனால் என் வாப்பா, இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும்; தாமதப்படுத்துவது நல்லதல்ல என்று எடுத்துச் சொல்லி தானே கையெழுத்திட்டார்கள். பின் அங்கிருந்து காரில் திருச்சி வந்து உடனே அங்கு ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். இங்கும் மருத்துவர் காலை பத்து மணிக்கு செய்யலாம் என்று சொன்னார்.

பாண்டிச்சேரியில் அந்த மருத்துவமனையில் நான் செய்யக்கூடாது என்று முடிவுசெய்ததின் காரணம், இவ்வாறு
நோயாளியையும் முன்வைத்துக் கொண்டே ஈவிரக்கம் இல்லாமல் பேசுபவரிடம் நான் எப்படி மனநிம்மதியுடன் என் மகனை ஒப்படைக்க முடியும்? சிகிச்சைக்குமுன்பே இப்படிப் பேசுபவர், நாளைபின்னே ஏதாவது பிரச்னை என்றால் எப்படி விளக்கம் தருவார்? மருத்துவர் என்றால் அவரின் பரிமாற்றங்கள் நமக்கு மனநிம்மதியைத் தரவேண்டாமா? அதனால் பாண்டியிலேயே வேறு மருத்துவமனையில் செய்யலாம் என்று நினைத்தேன். பின்னர் திருச்சி மருத்துவரிடமும், திருநெல்வேலியில் ஒரு டாக்டர் நண்பருடனும் கலந்தாலோசித்து, திருச்சி செல்லலாம் என்று முடிவு செய்தோம். மேலும் இங்கும் அவர் மறுநாள் காலை எட்டு மணிக்குத்தானே செய்வதாகச் சொன்னார். மகனும் சம்மதித்திருந்தான். மேலும் திருச்சி - புதுவை சாலையும் புதிதாகப் போட்டது; நன்றாக இருக்கும். கரடு முரடான பயணமில்லை.

மறுநாள் காலை மயக்கமருந்து கொடுப்பவர் (அனஸ்தீஸிஸ்ட்)  டிராஃபிக் ஜாமில் (!!!) மாட்டிக்கொண்டு லேட்டாக வந்ததில், 12.30க்கு சிகிச்சை தொடங்கியது. டாக்டரிடம் ஏற்கனவே விபரங்கள் கேட்டிருந்தேன். 
அப்பெண்டிக்ஸ் பகுதியில் இன்ஃபெக்‌ஷன் அளவைப் பொறுத்து, அரைமணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் சிகிச்சை முடிந்துவிடும் என்று சொல்லியிருந்தார். லேப்ரோஸ்கோபி முறை என்பதால் நேரமும் அதிகமாகாது என்பதோடு, அடுத்த நாளே வீட்டுக்கும் சென்று விடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் மூன்றரை மணிநேரம் ஆகும் என்று நினைக்கவில்லை.

அந்த மூன்றரை மணிநேரமும் என் வாழ்நாளில் மிகக் கொடிய நேரம்!! ஆபரேஷன் முடிய ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் தவித்த தவிப்பு!! இப்படி ஆகியிருக்குமோ, அப்படி ஆகியிருக்குமோ, இந்த மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வேற சின்னப் பையனா இருந்தாரே, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பத்து மணி  ஆபரேஷனுக்கு பன்னென்டரைக்கு வந்தாரே, அவர் ஏதாவது தப்பு பண்ணிருப்பாரோன்னு கற்பனை செய்து... அழுது,.. ரூமில போய் உக்காந்து அழவும் முடியாது, அங்க வாப்பா இருக்காங்க. நான் அழறதைப் பாத்தா அவங்களும் பதறி அழ ஆரம்பிச்சுடுவாங்க. மச்சானும், அழாதே, அழாதேன்னு சொல்லி அலுத்துப் போயிட்டார்.

நேரம் போகப் போக, அனஸ்தீஷியா கொடுப்பதில் தவறு நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட நடிகை விஜி, விளையாட்டு வீரர் சந்திரசேகர், இன்னும் பல சம்பவங்கள் திடீர் திடீரென்று நினைவுக்கு வந்ததில் ரொம்பவே பயந்துவிட்டேன்.

செவிலியர்கள் மட்டுமல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி, செருப்பை மட்டும் கழட்டிவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக, வர இருக்கிறார்கள். அவ்வாறு வெளியே வந்த ஒரு நர்ஸ், இன்னொரு நர்ஸிடம் சொன்னது இது: “கேமரா பிடிக்க ஆள் வேணுமாம்; அதான் மேடத்தைப் போய் கூப்பிடப்போறேன்”!! ஆத்தீ, என்னது கேமரா பிடிக்க ஆளா? என்னதான் நடக்குது இங்க? அவரே சொன்னார், டாக்டரால் கேமராவையும், சிகிச்சையையும் ஒருசேர கையாள முடியவில்லையாம். அதனால், ஒரு கை எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். இப்ப இப்படிச் சொல்லிட்டேன், அங்க நான் நடுங்கின நடுக்கம் இருக்கே!! அப்புறம் டாக்டரம்மா (டாக்டரின் மனைவி, குழந்தைப் பேறு மருத்துவர்) வந்தார்.

பிறகு சிகிச்சை முடிந்து, மகனும் இறையருளால் நல்லபடியாக வந்தான். டாக்டரும் வாலை வெட்டமுடியாத காரணத்தை விளக்கினார். ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது.

ஒருவிதத்தில் பாண்டியில் சிகிச்சை செய்யாமல் இங்கு வந்தது நல்லதாகவே பட்டது.  அங்கே செய்திருந்தாலும், இதே பிரச்னை வந்திருக்கும். எனக்கும் அந்த டாக்டர்தான், கோபத்தில் வேண்டுமென்றே அப்படிச் செய்துவிட்டாரோ என்று தோன்றியிருக்கும். மருத்துவர்களுக்கென்று ethics உண்டு, அப்படிச் செய்ய மாட்டார்கள்தான். ஆனாலும், சிஸேரியன் என்றால், வேண்டுமென்றே செய்தார்களோ என்று தோன்றுமில்லையா, அது போலத்தான். அதுவுமில்லாமல் ஒரு வாரம், சின்னவனை வைத்துக் கொண்டு அந்த ஊரில் என்னால் தனியே இருந்திருக்கவும் முடியாது. நல்லவேளை நான் திருச்சி வந்தேன்!! இம்மாதிரி சமயங்களில்தான் உறவினர்களின் அவசியமும், அருமையும் அதிகம் புரிந்து, உறவு மென்மேலும் வலுப்பட உதவுகிறது. 

மேலும், திருச்சி மருத்துவரிடமும், சிலவற்றைக் குறித்த என் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது,  பொறுமையாகத் தன் தரப்பை விளக்கிச் சரிப்படுத்த ஆவன செய்தார்.

நேற்றுகூட பேப்பரில்  படித்தேன், "Placebo" எனப்படும் மருந்துகளின் மாற்று, ஒருவரை மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம். என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால்,  என்ன பயன்? மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.

Post Comment

டிரங்குப் பொட்டி - 6

இந்த வருஷத்தின் முதல் பதிவா நம்ம பிராண்ட் நேம் டிரங்குப் பொட்டி பதிவு போட்டது; அதுக்கப்புறம் போடமுடியாத அளவு மெயின் மேட்டர்ஸ் நிறைய குமிஞ்சிடுச்சு; இப்பவும் கைவசம் நிறைய சமூகசீர்திருத்தக் கட்டுரைகள் இருக்கு, இருந்தாலும் நம்ம பாரம்பரியத்தை ஒரேடியா மறந்துரக்கூடாதுங்கிறதால, உங்களுக்காக இதோ புத்தம்புதிய, இல்லையில்லை, பழம்பெரும் தொன்மை வாய்ந்த டிரங்குப் பொட்டி!

#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

நம்ம மஹாராஷ்டிர சிங்கம் பால் தாக்கரே அவர்களைப் பற்றி சமீபகாலமா நிறைய நியூஸ் வருதே, என்னன்னு விசாரிச்சா, அவர் மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கே, மத்தவங்கள்லாம் வெளியே போங்கன்னு சொல்றாராமே, அதான் சேதின்னாங்க.  மராத்தியர்கள்னா யாருன்னேன்? இப்ப நான் மராத்தி மொழி படிச்சுட்டா வீர மராத்தி ஆகிடுவேனான்னு கேட்டேனுங்க. அப்பச் சொன்னாங்க, தமிழ் தெரிஞ்ச எல்லாரையுமா தமிழர்கள்னு சொல்றோம், தமிழ்நாட்டில பிறந்தாத்தான் தமிழர்கள் அப்படின்னாங்க. 

ஓ, அப்படின்னா மஹாராஷ்டிரத்துல பிறந்தாத்தான் மராத்தியர்கள், கரெக்டான்னேன். புரிஞ்சுதுல்ல, ஆளைவிடுன்னாங்க. இருங்க, இனிதானே முக்கியமான விஷயமே இருக்கு; பாலாசாகிப் தாக்கரே பிறந்தது மத்தியபிரதேசத்துலதானே?  மஹாராஷ்டிரம் மராத்தியர்களுக்கேன்னு சொல்ற இவர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி தன் வாக்கைக் காப்பாற்றுவாரா?ன்னு கேட்டேங்க, அதுக்கு “இந்தா நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு”ன்னு அனுப்பிட்டாங்கங்க!! நீங்க சொல்லுங்க நான் சொன்னது தப்பா? 

தம்பி நீ சொல்லேன், யக்கா நீ சொல்லேன்...


#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

அரசியல்வாதிகள் குறித்து இன்னொரு விஷயம் ரொம்ப வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்: அரசியலில் ஈடுபடுபவர்கள் மூளைக்கு அதிக வேலை கொடுத்து, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்; அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்களாம்.  உண்மைதானே, இயற்கையாக இறந்த அரசியல்வாதிகளில் திரு. ஜோதிபாசு உட்பட பலரும் நூறை எட்டிப் பிடிக்கும் வயதில்தானே மறைந்திருக்கிறார்கள். இப்பவும் திருவாளர்கள்: கருணாகரன், கருணாநிதி, தாக்கரே, வாஜ்பாய் ஆகியோரை வாழும் உதாரணங்களாகச் சொல்லலாமே. 

ஆனா என்ன ஒண்ணு, அந்தக் காலத்துல தேசிய ஒற்றுமை, நாட்டு மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம் பற்றி யோசிச்சு செயல்பட்டு சுறுசுறுப்பா இருந்தாங்க. 


ஸோ, மேட்டர் என்னான்னா,  நூறு ஆயுசுக்கு வாழணுன்னு நினைக்கிறவங்க உடனே அரசியல்ல குதிங்கப்பா!!


#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

இந்த வாரம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான திருமதி. ஹிலாரி கிளிண்டன், இரானின் அணு ஆயுத பலத்தை ஒடுக்கும் விதமாய், அந்நாட்டின்மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் முயற்சிக்கு ஆதரவு திரட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். திங்கட்கிழமையன்று, கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவில் பலகலைக்கழக மாணவர்களோடு கலந்துரையாடினார். அதில் எல்லா மாணவர்களுமே அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு எதிராகவே கேள்வி எழுப்பியுள்ளனர்.  “அமெரிக்காவின் நட்புறவோடு இருக்கும் இஸ்ரேலுக்கு அணு ஆயுதம் வைத்திருக்க உரிமையுண்டென்றால், இரானுக்கு ஏன் அந்த உரிமை இல்லை?”, ”இந்தத் தடை ஏன் இரானுக்கு மட்டும்?”, என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.  ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது, காஸா பேச்சுவார்த்தை என்று சரமாரியாக வந்த கேள்விகள் அவரைத் திகைக்க வைத்தனவாம். ம்ம்ம், மாணவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!!

#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

தற்காப்புக்கு மிளகாய்ப்பொடி உபயோகிக்கலாம் என்று தெரியும். ஆனால், மிளகாய்ப்பொடி பாக்கெட்டைக் கைப்பையிலிருந்து எடுத்து, பிரித்து, கையில் எடுத்து தூவுவதற்குள் திருடன் ஓடிவிடக்கூடாதே!! அப்படியே தூவினாலும், எதிர்க்காற்றில் நம் கண்ணிலேயே விழுந்துவிட்டால் திருடனுக்கு இன்னும் கொண்டாட்டம் ஆகிவிடுமே! சரி, கரெக்டாக தூவி, திருடன் கண்ணிலேயே விழுந்து, அவனைப் பிடிச்சாச்சு என்றாலும், பின்னர் நம் கையும் எரியுமே? என்றெல்லாம் நினைத்திருந்தேன்.  

அதிரை எக்ஸ்பிரஸ் எனும் பதிவர் தற்காப்பு எனும் பதிவில் ஒரு சுவையான முறையைச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். ஜவ்வரிசியைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தலாமாம். எப்படி என்று போய்ப் பாருங்கள்.

#%#%##%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%#%

என்ன திடீர்னு தற்காப்பு ஆயுதங்கள் பத்தியெல்லாம் பேசிருக்கேனேன்னு யோசிக்கிறீங்களா, பின்ன, உள்நாட்டிலருந்து, தேசிய, உலக அரசியல் வரை பேசியிருக்கேனே, எங்கயிருந்து தாக்குதல் வருமோ, யாருக்குத் தெரியும்? அதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!


Post Comment

இ-மெயிலும், பேப்பரும்
காடுகளைப் பாதுகாப்போம்; சுற்றுச்சூழல் பேணுவோம்; பிளாஸ்டிக் தவிர்ப்போம்; மின்சார சிக்கனம் கடைபிடிப்போம்... இப்படி எத்தனையோ வாசகங்களை நாம் தினந்தோறும் பார்க்கிறோம், படிக்கிறோம். ஆனால் நடைமுறையில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா?

மரங்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கச் சொன்னாங்க. அதனால பல அலுவலகங்களில் காகித வழித் தொடர்பைக் குறைத்துவிட்டு, பேப்பரில்லா இணைய வழி தொடர்பைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தாங்க. இது, காகிதத்தைக் குறைக்க பயன்படுதோ இல்லையோ, விரைவான செயலாக்கத்திற்கு வழிவகுப்பதால் இம்முறை எல்லோராலும் விரும்பப்பட்டது.

ஆனா, அதே சமயம் இத்தொடர்பு முறை காகிதப் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறதான்னு பார்த்தோம்னா, இல்லங்கிறதுதான் உண்மை. அட, குறைக்கலைன்னா கூடப் பரவால்லைங்க, அதிகப்படுத்தித்தான் இருக்கு!!

உதாரணமா, எங்க ஆஃபீஸ்ல, வரைபடங்கள் (design drawings) கணிணியிலேயே உருவாக்கி, அதைச் சம்பந்தப்பட்ட பொறியாளர், கிளையண்ட், கன்சல்டண்ட் ஆகிய நிறுவனங்களில் பலரின் (ஒவ்வொரு நிறுவனத்திலயும் குறைந்தது மூவருக்கு) ஒப்புதலுக்கு அனுப்புவாங்க. அவங்க என்ன பண்ணுவாங்க, அதைக் கணிணியில் பார்த்தாலும், தெளிவான பார்வைக்காகவும், விவாதத்திற்காகவும் ஆளுக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுப்பாங்க.  அதைப் பார்த்துட்டு,  பொறுப்பா மறு-சுழற்சித் தொட்டியில் (re-cycling bin) கடாசிருவாங்க.

அதுவும் அந்த ஒருமுறை மட்டுமல்ல, எப்போவெல்லாம் தேவையிருக்கோ, அப்போவெல்லாம் பிரிண்ட் அவுட்தான். இதுவே காகித வழி தொடர்பு முறையா இருந்தா, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒன்று அல்லது இரண்டு நகல்கள் அனுப்புவோம். அவசியப்படும்போதெல்லாம் அதையே எடுத்துப் பார்த்துக்கிடுவாங்க.  இது வரைபடங்களுக்கு மட்டுமல்ல, கடிதங்கள் மற்றும் இன்னபிற வகைகளுக்கும் இதே நிலைமைதான்!! அதிலும் காகிதங்களின் ஒருபக்கம் மட்டுமே அச்சிடப்பட்டு, அடுத்த பக்கம் பயன்படுத்தப்படாமலே ரீ-சைக்ளிங் தொட்டியில் போடப்படும்!!

அலுவலகத்தில்தான் இப்படி என்றால், பிள்ளைகளின் பள்ளியில் இதைவிட அதிகம் பேப்பர் சீரழிகிறது!! ஒன்றாம் வகுப்பு படிக்கும் சின்னவனுக்கு,  30+ நோட்டுப் பத்தகங்கள்!! இதில வருஷ முடிவில, பத்து நோட்டுகள் கூட முழுசாக் காலியாகியிருக்காது!! மீதி பத்துல, கால்வாசி பேப்பர்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். மறு வருஷம் மீதி நோட்டுக்களைப் பயன்படுத்த முடியாதபடி, மறுபடியும் 30+ நோட்டுகள் கண்டிப்பா வாங்கியாகணும். இதுவரை என் ரெண்டு பசங்களுக்கும் மீதியான நோட்டுகளே குமிஞ்சிருக்கு. எங்க காலத்திலெல்லாம் பாடப் புத்தகங்கள் கூட சீனியர்ஸ்,ஜூனியர்ஸுக்கு நடுவில வித்துடுவோம். (Re-use)

இன்னொன்று, மின்சார விரயம்.வீட்ல கரண்ட் பில்லுக்குப் பயந்தாவது கவனமா இருக்கிற நாம, அலுவலகம்னா கண்டுக்கறதேயில்லை.  இப்ப மின்சாரப்பயன்பாட்டைக் குறைக்க ஃப்ளூரசண்ட் விளக்குகள்  பயன்படுத்துகிறோம். ஆனா, பயன்பாட்டுக்குப்பின் எறியப்படும்போது அதிலிருக்கும் பாதரசம் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்பதால், சில நாடுகளில் இந்த வகை விளக்கைப் பொது குப்பைத் தொட்டியில் எறிவது தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல, இக்காலங்களில் மிண்ணனு சாதனங்களின் பயன்பாடு அளவில்லாமல் அதிகரித்திருக்கிறது. தினம்தினம் புதுப்புது மாடல்கள் வரவும் செய்கின்றன. விலையும் வெகுவாகக் குறைந்துவருவதனால், வாங்குவதற்கு  யாரும் யோசிப்பதில்லை. அப்படியே தூக்கிப் போட்டுடற பழசுல, இருக்கிற பிளாஸ்டிக், காரீயம் (Lead) ரெண்டுமே சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கக்கூடியவை. (எலெக்ட்ரானிக் ரீ-சைக்ளிங் இன்னும் முழு பயன்பாட்டுக்கு வரலை).

இதுனாலேயே பழசை என்ன செய்யறதுன்னு தெரியாமலேயே, நான் இன்னும் பழைய மாடல் மிக்ஸி, மைக்ரோ ஓவன், அடுப்பு, கிரைண்டர், கம்ப்யூட்டர், மொபைல்னு வச்சுகிட்டிருக்கேன். பார்ப்பவர்கள், கைநிறைய சம்பாதிச்சாலும், இப்படி கஞ்சத்தனமா இருக்கியேங்கிற மாதிரி லுக் விட்டுட்டுப் போறாங்க. இப்படித்தான் கண்ணுக்கு நல்லதுன்னு பிளாஸ்மா டி.வி.யும்,  எல்.ஸி.டி. மானிட்டரும் வாங்கினப்புறம், பழைய 21” டி.வி.யும், 14” மானிட்டரும் இன்னும் அப்படியே இருக்கு. சும்மா தரேன்னாகூட யாரும் வாங்கிக்க ரெடியாயில்ல!! அதனாலேயே பழைய மாடல் மொபைலையும் பலரின் ஏளனப் பார்வைகளை அலட்சியப்படுத்திவிட்டு வைத்துக் கோண்டிருந்தேன். புதுசு வாங்கச் சொல்லிக்கிட்டிருந்த என்னவரையும் மிரட்டி வச்சிருந்தேன். நேத்து சொல்லாம கொள்ளாமப் போய் புது மொபைல் வாங்கித் தந்தவர்கிட்ட,  இந்தக் காரணத்தினாலேயே ஏன் வாங்கினீங்கன்னு கோபப்பட்டுட்டேனேன்னு வருத்தமா இருக்கு.

இதுக்கு தீர்வுன்னு நாம சொல்ற "Reduce, Reuse, Recycle", அதாவது பயன்பாட்டைக் குறைத்தல், மீள் பயன்படுத்துதல், மறு சுழற்சி - இதில ரீ-சைக்ளிங்குக்கு நாம கொடுக்கிற முக்கியத்துவத்தை, மற்ற இரண்டுக்கும் (Reduce & Reuse)  கொடுக்கலங்கிறதுதான் வருத்தமான உண்மை!! இந்த மாதிரி வசதிகள் இல்லாத காலத்தில சிக்கனமாத்தானே இருந்தோம், இப்ப மட்டும் ஏன் சிக்கனம்கிறது அவசியமில்லாததா ஆகிடுச்சு? காலண்டர் ஷீட்டைக்கூட விடாம சேகரிச்சு எழுதுன பெரியவங்களும் உண்டே!! என் வீட்டினரை ஓரளவு என் வழியில் கொண்டுவந்துவிட்டேன். ஆனா ஆஃபீஸ்லயும்,  உறவுகள் மத்தியிலும், இப்படி சிக்கனம் பேண நான் செய்யும் சில முயற்சிகள் ஏளனமாகவே பார்க்கப்படுகின்றன. வருத்தமிருந்தாலும் என்னளவில் நான் முயற்சிகளைத்  தொடர்கிறேன், அவை கடுகளவே என்றபோதிலும்!!

Post Comment

வாழ்த்தலாம் வாருங்கள்
பற்றுடன்
சுதந்திர தின வாழ்த்துக்கள்

வாசத்துடன்
ரம்ஜான் வாழ்த்துக்கள்

பாசத்துடன்
தீபாவளி வாழ்த்துக்கள்

உடன்வந்த
பக்ரீத் வாழ்த்துக்கள்

இடைவெளிவிட்டு
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

கூடவே
புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழரல்லோ,
பொங்கல் வாழ்த்துக்கள்

கையோடு
குடியரசுதின வாழ்த்துக்கள்

கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கலாம்னா
அதுக்குள்ள வந்திடுச்சு

காதலர் தினம்
வாருங்கள் வாழ்த்துவோம்

குட் ஃப்ரைடேக்கும், மே டேக்கும்
இன்னும் ரெண்டு மாசமிருக்கு நல்லவேளை.


Post Comment

பிஸ்கட்டும், பழமும்
அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தட்டும்போது “யாரோ”வாக இருப்பவர், திறந்தபின்,  அக்கா, அண்ணன், பெரியப்பா, நண்பன் என்று உருவெடுப்பார்கள். யோசித்துக்கொண்டே இருக்கும்போது மகன்தான் போய்க் கதவைத் திறந்தான். ஒரு பெரியவர், திருமண் அணிந்து, கையில் சுருட்டிய மஞ்சள் பையோடு நின்றிருந்தார். நூல்கரை போட்ட வெள்ளை வேஷ்டியும், வெளிர்நீல நிற அரைக்கைச் சட்டையும் பளிச்சென்று இருந்தாலும், அயர்ன் செய்யப்படவில்லை.கையில் சிறு துண்டு பேப்பர் வைத்திருந்தார். அவருக்கு எப்படியும் அறுவத்தஞ்சு, எழுபது வயசாவது இருக்கும்.

இந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து இன்றோடு பத்து நாள் ஆகிறது. வாப்பாவும், உம்மாவும்தான் கூட இருக்கிறார்கள். அவர் லீவு கிடைக்காததால் வரவில்லை. புது வேலை வேறு. பெரியவனும் உடனிருந்தான். அப்போ இருந்ததே இவன் ஒருத்தன்தானே, அப்புறம் என்ன ’பெரியவன்’?

மூன்றரை வயது மகனை குடும்ப நண்பர் வீட்டில் விட்டிருந்தாலும், அவ்வப்போது அழைத்து வருவதுண்டு. குளிக்க, துணி துவைக்க என்று உம்மாதான் நண்பர் வீட்டுக்கு போய்விட்டு, வரும்போது கூட்டி வந்தால், ராத்திரி வாப்பா அங்கே படுக்கப் போகும்போது கூட்டிப் போய்விடுவார்கள். எல்லா நாளும் இல்லை. சில நாட்கள் தான்.

பாவம் அவர்களுக்கும் என்னால் சிரமம். அபுதாபியில் கூடப் பழகிய பாவத்துக்குப் பரிசாய் எங்களது தொந்தரவு. மழை, குளிர் என இருக்கக்கூடிய டிசம்பர் மாதத்திலும் தண்ணீர்ப்பஞ்சம் வாட்டும் சென்னை மாநகரம். சென்னையில் இருக்கும் ஒன்றிரண்டு உறவினர்களும் ஒண்டுக் குடித்தனத்தில். இதில் நாம் எங்கே போய் ஒண்டுவது. நண்பர்தான் தனி வீட்டில் இருக்கிறார்.

எல்லாம் சரி, வந்தது யார்? தெரிந்த முகமாகவே இல்லையே. அதுவும் திருமண் அணிந்த பெரியவர் எப்படி இங்கே? ரூம் நம்பர் தெரியாமல் வந்திருப்பாராயிருக்கும். வாப்பாவின் முகத்திலும் அதே கேள்விகள். “வாங்க. யாரைப் பார்க்கணும்?” தயக்கத்தோடே கேட்க, பெரியவரோ, பேப்பரைப் பார்த்து, என்னவரின் பெயரைச் சொல்லி, ”அவரின் மனைவி இருப்பது இந்த ரூம்தானே?” என்று கேட்டார். அப்ப சரியாத்தான் வந்திருக்கார். ஆனா, யாருன்னு தெரியலையே?

அவரே சொன்னார், அபுதாபியில் என்னவரோடு பணிபுரியும் சங்கரன் சாரின் தந்தையாம். சொன்னதும் வாப்பா பரபரப்பாகிவிட்டார். ”வாங்க, உள்ள வாங்க” என்றழைத்து, சேரை இழுத்துப் போட்டு உட்காரச் சொன்னார். எனக்கும் ஆச்சர்யமாயிருந்தது. சங்கரன் சார் எங்களுக்கு நெருங்கிய நண்பர். நண்பர் என்பதைவிட ஒரு அட்வைஸர் என்று சொல்லலாம். வயதில் மூத்தவர்.வாப்பாவுக்கும் சங்கரன் சார் நல்ல பழக்கம்.

அவரின் தந்தை இருப்பது திருச்சி ஸ்ரீரங்கமல்லவா? அங்கிருந்தா இங்கு வந்திருக்கிறார்? உடல்நலமும் சிறிது சீராக இல்லை என்று சொன்னாரே? நான் நினைக்க, நினைக்க வாப்பா அவரிடம் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சென்னையில் இருக்கும் இன்னொரு மகனைப் பார்க்க வந்தாராம். அபுதாபியிலிருந்து மகன் அழைத்து, முடிந்தால் போய்ப் பார்த்துவரும்படிச் சொன்னாராம். சென்னையில் என்றாலும், இந்த மருத்துவமனை இருப்பது சற்று ஒதுக்குப் புறமாகத்தான். புதிதாக வருபவர்களுக்குக் கண்டுபிடிப்பது சிரமம்தான். க்டைகளும் ஒன்றும் கிடையாது. ஒவ்வொரு நாளும் சாப்பாடு வாங்குவது சிரமமாத்தான் இருந்தது.

பாவம், அவரும் அலைந்துதான் கண்டுபிடித்தாராம். “தப்பா நெனச்சுக்காதீங்க, இடம் கண்டுபிடிக்கவே சிரமமாகிவிட்டது; பக்கத்துல கடை எதுவும் இல்ல. அதுனால பழவஸ்து எதும் வாங்கிவர முடில. சின்னக் கொழந்த வேற இருக்கான். வெறுங்கையோட வந்துட்டனேன்னு சங்கடமா இருக்கு” என்று சொல்ல, வாப்பாவோ, “நீங்க வயசுல பெரியவங்க. அலைஞ்சு வந்திருக்கீங்க. அதுவே போதும். வாங்கிட்டெல்லாம் வரணும்னு இல்ல” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் காஃபி சாப்பிடறீங்களா என்று கேட்க, அவர் பரவால்ல, எதுவும் வேண்டாம் என்று சொன்னார். மீண்டும் கேட்கும்போது, அதே பதிலைச் சொல்ல, பிறகு வற்புறுத்தவில்லை. இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மகன் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துக் கொண்டிருந்தான். சங்கரன் சாரின் மிஸஸ் சொன்னது ஞாபகம் வந்தது. சென்னையிலிருக்கும் மகனும், தாங்களும் சொல்லியும் ஸ்ரீரங்கத்தை விட்டு வர அவர்கள் விருப்பப்படவில்லையாம் .  திடீரென்று மகன், என்ன நினைத்தானோ, அவரிடம் சென்று, ”இந்தாங்க, பிஸ்கட் சாப்பிடுங்க” என்று நீட்டினான். அவரோ, “வேண்டாம்ப்பா, நீ சாப்பிடு” என்று சொல்ல, அவனோ விடாமல், “பரவால்ல, ஒண்ணே ஒண்ணு சாப்பிடுங்க” என்று தொடர்ந்து வற்புறுத்த, அவரும் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். பின் எங்களுக்கும் பிஸ்கட் தந்தான் மகன்.

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார். இதற்குள் மூன்று, நான்கு முறை பழம் வாங்கிவராததற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அவர்போன பிறகு, கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு, தூங்கலாம் என்று நினைத்தபோது, மீண்டும் கதவு தட்டும் சத்தம். சங்கரன் சார் அப்பாதான் இப்பவும்!! வழி எதும் மிஸ்ஸாயிடுச்சோ, இல்ல எதும் விட்டுட்டுப் போயிட்டாரா, என்னன்னு தெரியலயேன்னு பாத்திட்டிருக்கும்போதே, மகன் கையில் அவர் கொண்டுவந்த சில பைகளைக் கொடுத்தார். “சின்னக் குழந்த, எனக்கும் தந்து சாப்பிடுறான். வழில கடை ஒண்ணு பாத்தேன், அதான். வர்றேன்.” போய்விட்டார்.

Post Comment

ஓரம்போ.. ஓரம்போ..


டீனேஜ்ங்கிறது 13 லருந்து 19 வயசுவரைதானே? அதாவது எட்டாங்கிளாஸ்லருந்து காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் வரைக்கும்.  இப்பத்தான் அந்த வயசெல்லாம் ரொம்ப உற்சாகமான வயசு, சிறகடிக்கும் வயசு, பட்டாம்பூச்சி வயசு, ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும், (அளவோட) சுதந்திரமா விடணும், அவங்க கருத்துக்களையும் கேட்கணும், ஃபிரண்ட்லியாப் பழகணும் அப்படி இப்படின்னு சொல்றாங்க. நான் அந்த வயசுல இருந்தப்போல்லாம் அது ஒரு டெரர் வயசாத்தான் இருந்துது, பொண்ணப் பெத்தவங்களுக்கு!! கிராமத்துல வளர்ந்ததுனால,   உறவினர்கள் தயவால எங்கம்மாவுக்கும் அந்த டெரர் அதிகமாத்தான் இருந்துது . வாப்பாவின் ஆதரவால் தொடர்ந்து படித்தாலும் சிலபல எழுதப்படாத சட்டங்களும் கடைபிடித்தாக வேண்டிய கட்டாயம்.

உள்ளூர்ல சில பள்ளிகள் இருந்தாலும், ஆங்கில வழிப் படிப்புக்காக பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில்தான் படித்தது. அப்போ எங்க தெருவில கார்ப்போரேஷன் குழாய் கிடையாது. அதனால, காலையில பக்கத்துத் தெருக்கள்ல போய் ஒரு ஏழெட்டு குடம் தண்ணி பிடிச்சு வச்சிட்டு,  தெருக்கடைசியில ஓடுற வாய்க்கால்ல குளிச்சு, துணி துவைச்சிட்டு, வந்து சாப்பிட்டுட்டு, சாப்பாடு எடுத்துட்டு ஸ்கூலுக்குப் போகணும். எதில? மாட்டு வண்டியில!! சிரிக்காதீங்க!! பஸ்ல போறேனேன்னு லேசா கேட்டுப் பாத்ததுக்கே,  ”இதுல போய் படிச்சுக் கிழிச்சாப் போதும்”னு வந்த பதில்ல அதுபத்திப் பேசுறதே கிடையாது.

ஏழாங்கிளாஸ் வரை அதில்தான். அதிர்ஷடவசமாக, எட்டாம் வகுப்பில், தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் (மாதிரி ஒண்ணு) வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தது.  ஆனால் போன பிறகுதான் தெரிந்தது, அதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லைன்னு. பிறகு வாடகை கட்டுப் படியாகாமல் அவரே நிறுத்திவிட, அடுத்து ஆட்டோ பயணம் ஆரம்பித்தது.  அது சுவாரசியமாகவே இருந்தது. ஊரெல்லாம் சுற்றி, ஒவ்வொருத்தர் வீட்டிலும் சென்று பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு, கதை பேசிக் கோண்டே போனதும் சுவாரசியம்தான் என்றாலும்,  ஜனநெருக்கடி அதிகமானது கடுப்பாக இருக்கும். இறங்கும்போது கை, காலை உருவித்தான் எடுத்து வரவேண்டியிருக்கும்.

காலேஜ் வரை இந்த ஆட்டோ பயணம்தான்.  இடையிடையே சில காரணங்களால்,  பஸ் பயணம் வாய்க்கும். பஸ்ஸுக்குக் காத்திருத்தலும், கூட்டத்தில் நசுங்குவதும், வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு 15 நிமிடம் நடக்க வேண்டும் என்பதும் அலுப்பைத் தந்தன.  ஆனாலும் அரிதாகவே வாய்த்ததால், பஸ் பயணம் சுவையாகவே இருந்தது.

இதுக்கிடையில எங்க தெருவுக்கும் முனிசிபல் தண்ணிர் விநியோகம் ஆரம்பிச்சதுல தண்ணி எடுக்குற வேலையும் மிச்சமாச்சு. வீட்டிலயே துணி துவைக்கற அளவு தண்ணியும் வந்தது. நேரம் அதிகம் கிடைத்தது. எண்பதுகளின் நடுவில் சென்னைத் தொலைக்காட்சி, கொடைக்கானல் ரிலே மூலம் தென்மாவட்டங்களுக்கும் ஒளிபரப்பு சேவையைத் தொடங்க, அந்த அதிகப்படி நேரம் அதில் செலவழிந்தது.

 படிச்சது கிறிஸ்தவப் பள்ளிகள்ங்கிறதால பைபிள் கதைகளும், துதிப் பாடல்களும் மனப்பாடமாயின. இடையில் இரண்டு வருடம் ஒரு இந்துப் பள்ளியில் படித்ததால் (ஓரளவு) மஹாபாரதமும் கேட்கக் கிடைத்தது. டி.வி.யில் பின்னாளில் மஹாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது பார்ப்பவர்களுக்கு நான் முன்கூட்டியே கதையைச் சொல்லி சஸ்பென்சை உடைத்துத் திட்டு வாங்கினேன்!!

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கு டீச்சர், என்னையும், நல்லா படிக்கும் சில தோழிகளையும், நீங்கல்லாம் எஞ்சினியரிங் போகணும்னா இந்த மார்க்கெல்லாம் காணாது; உங்களுக்குள்ள கோட்டாவில கிடைக்க இந்த மார்க்கெல்லாம் பத்தாது என்று திட்ட, என்னவென்றே புரியாமல் தோழிகளிடம் விசாரித்ததில் FC, BC, MBC, SC எல்லாம் விளக்கினார்கள்.

வேறு ஒன்றும் சுவாரசியமாய் நடக்கவில்லை (நீங்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல). எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் கூட petals, sepal, anther, stamen என்று அதன் அனாட்டமியும், பாட்டனியும் பேசுபவர்களாக அமைந்ததில் நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!!

இந்த பதிவு என் சிறுவயசு நினைவுகளை ரொம்பவே ஞாபகப்படுத்திவிட்டது.  நன்றி அம்பிகா!! 

Post Comment

கண்ணுபடப் போகுதையா..
”என்னடா நான் சொல்றது புரியுதா? இனியாவது வீட்டுக்கு நேரத்துக்குப் போகப்பாரு. பாவம் உன் வைஃபும் ஊருக்குப் புதுசு. ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லாத ஊர்ல அவங்களுக்கும் நேரம் போக வேண்டாமா? என் வைஃப்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டு கிட்டாங்களாம்பா”

நண்பன் சொல்லச் சொல்லப் பத்திக் கொண்டு வந்தது ஷகீலுக்கு. சரி சரியெனத் தலையை ஆட்டிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான்.  எனக்கு அறிவுரை சொல்லும் இவன் என்றைக்காவது ஒன்பது மணிக்கு முன் வீடு போயிருப்பானா என்ற கோபத்தினூடே மனைவியின்மீது எரிச்சல் வந்தது.

’என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி எல்லாரிடமும் என்னைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள்?  வீடு விட்டால் ஆஃபீஸ், ஆஃபீஸ் விட்டால் வீடு என்றிருக்கும் என்னைப் பற்றி ஏன் நண்பனின் மனைவியிடம் தவறாகச் சொன்னாள்?’

‘நேற்றும் இப்படித்தான் ஊரில் உம்மாவுக்கு ஃபோன் செய்தால், அவர்களும்  “வீட்டுக்கு வந்தா டி.வி. முன்னாடியே காலை நீட்டி உக்காந்திருக்காம, அவளுக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணுப்பா. சின்னப் பொண்ணு. புது இடம்வேற.” என்று அறிவுரை மழை பொழிந்து தள்ளிவிட்டார்கள். இத்தனைக்கும் முடிந்த அளவு அவளுக்கு உதவி செய்வதுண்டு. ஒவ்வொருத்தரப் போல பேப்பரும் கையுமாவா உக்காந்திருக்கேன் வீட்டில?’

’அக்காகிட்டயும் குறை சொல்லிருக்கா; கல்லூரித் தோழன், பக்கத்துவீட்டு மாமின்னு ஒருத்தர் விடாம என்னைப் பத்தி என்னவாவது குத்தம் சொல்லிகிட்டிருக்காளே, என்ன பிரச்னை இவளுக்கு? இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துட வேண்டியதுதான்’ கருவிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

சமீரா ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாம்ம்மா, அதெல்லாம் என் மேல ரொம்பப் பாசமா இருக்கார். சின்னச் சின்னதா வேலையெல்லாம்கூட செஞ்சுத் தருவார். அடிக்கடி வெளியே கூட்டிட்டுப் போறார். நீ விரும்புன மாதிரியே நான் நல்லா சந்தோஷமா இருக்கேன்மா. வாப்பாட்டயும் சொல்லிடு.”

கேட்டுக்கொண்டே வந்த ஷகீல் குழம்பிநின்றான். ஆனாலும் விடக்கூடாது என்று நினைத்து அவளிடம் வந்தான். “சமீரா, உண்மையச் சொல்லு. நீ என்னோட சந்தோஷமாத்தானே இருக்கே?”

“என்னதிது புதுசா? எனக்கென்ன குறைச்சல்? நான் ரொம்ப கொடுத்துவச்சவ.”

“அப்புறம் ஏன் என் ஃப்ரண்ட்ஸ், என் அம்மா, அக்கா, ஏன் பக்கத்து வீட்டு மாமின்னு எல்லார்கிட்டயும் என்னப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிருக்க?”

சிரித்தாள். “அதுவா? உங்க ஃப்ரண்ட் ஒருநாள் கூட ஒம்போது மணிக்குமின்ன வீடு வந்ததில்லையாமே? அவர் வீட்டம்மா என்கிட்ட ரொம்ப புலம்புனாங்க. பக்கத்து வீட்டு மாமியோட மருமவன் குடிகாரனாம். அவ்ளோ வருத்தப்படுறவங்ககிட்ட என் புருஷன் உத்தமன்னு பெருமையடிச்சா,  கண்ணு பட்டுறாது உங்கமேல? அத்தோட அவங்களுக்கு வருத்தம் அதிகமாகுமே தவிர தீராது.

உங்கம்மாவும், அக்காவும்கூட உங்க அண்ணனை அவர் பொண்டாட்டி முந்தானைல முடிஞ்சுகிட்டதா வருத்தப்பட்டாங்க.அதனாலத்தான் உங்களப் பத்தி அவங்ககிட்டயும் புகார் சொன்னேன். பொய்னாலும் அவங்களுக்கு சந்தோஷம் தருமே?

இருங்க இருங்க. நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது.  நான் சந்தோஷமா இருந்தாத்தான் என்னைப் பெத்தவங்களுக்கு நிம்மதி. அதனால அவங்ககிட்ட மட்டும் உண்மையச் சொல்லவேண்டியதாப் போச்சு. அதோட அவங்க சந்தோஷத்தால நமக்கு திருஷ்டி படாதில்ல!! என்ன சொல்றீங்க?”


Post Comment

அம்மா பொண்ணும், அப்பா பையனும் பெண் குழந்தைகளுக்கு அப்பா மீது ரொம்பப் பாசம் இருக்கும்; ஆண் பிள்ளைகள் அம்மா மீது பாசம் அதிகம் கொள்வார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கும் சிறுவயதில் என் வாப்பா மீதுதான் பாசம் அதிகம் என்பதால் நானும் அதை உண்மை என்றே நம்பினேன். வளர வளர ஒரு விஷயம் புரிந்தது; அம்மா எப்பவும் கூடவே இருக்காங்க; வாப்பா சவூதில இருக்கதுனால, ஊருக்கு வர்ற சமயம் ரொம்பவே அன்பா இருப்பாங்க. அதனால் கண்டிப்பும், அறிவுரைகளும் அதிகம் இருக்காது. அம்மா, எல்லா அம்மாக்கள் மாதிரியே (இப்ப என்னை மாதிரியும் கூட) கண்டிப்பா இருக்கதுனால அம்மாமீதான என் பாசம் கொஞ்சம் கம்மியாச்சுங்கிறதும் புரிஞ்சுது.

ஆனாலும் பெண்குழந்தைகள்னு பாராம, எங்களையெல்லாம் படிக்க வச்சதுனால வாப்பாமீதான பாசம் கொஞ்சம் அதிகமாத்தான் ஆச்சு. ஆனாலும் ஏதாவது வாக்குவாதம் வந்தால் நாங்க நாலுபேரும் அம்மா பக்கம்தான், நியாயம் எந்தப் பக்கமானாலும்!!ஒரு தோழிக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும் இருக்காங்க. அவங்க சொன்னாங்க, சண்டை வர்ற நேரம், பையன் கிச்சன்ல இவங்க பக்கத்தில இருந்துகிட்டு, “நீ பேசாதம்மா. ஏன் பதிலுக்குப் பதில் பேசிகிட்டே இருக்கே”ன்னு சொல்வானாம். பொண்ணு, ஹால்ல அப்பாட்ட, “சும்மா சும்மா சத்தம்போட்டுகிட்டே இருக்காதீங்க”ன்னு சொல்வாளாம்.


இப்ப எனக்கு ரெண்டும் பசங்கன்னதும், எல்லாரும், பையன்களுக்கு அம்மா மேலத்தான் பாசம் அதிகம்; கொடுத்து வச்சவன்னெல்லாம் சொன்னாங்க. அதே மாதிரி நல்லா பாசமா  நேசமாத்தான் இருக்காங்க. ஆனா எனக்கு சப்போர்ட்டெல்லாம்  பண்றதே இல்லை. சப்போர்ட் பண்ணாட்டியும் சும்மா இருக்கிறதுதானே. அதில்லாம எனக்குத்தான் அட்வைஸ் பண்றாங்க, நீ அமைதியா இரும்மான்னு.

இன்னொரு தெரிஞ்ச அக்காவுக்கு மூணுமே பையன்! இதப் பத்தி பேசும்போது அவங்களும் புலம்புனாங்க, மூணு பேரும் சேந்துகிட்டு “நீ பேசறதுதான் சரியில்ல”ன்னு இவங்ககிட்டதான் கடுப்படிப்பாங்களாம். ஆனா, அம்மாவுக்கு இங்லீஷ், கம்ப்யூட்டர், இ-மெயில் எல்லாம் சொல்லிக் கொடுத்ததும் அவங்க பசங்கதான்!!

என் தங்கை மகளைக் கவனித்ததிலும் ஒரு விஷயம் தெரிந்தது. அவளுக்கும், அம்மாவுக்கும் ஏழாம் பொருத்தம்னாலும், அப்பாவைத் தன் கண்ட்ரோலில்தான் வைத்திருக்கிறாள்.

ஏன் நானே இப்ப உம்மா, வாப்பாட்ட ஃபோன் பேசும்போது அம்மாட்ட நலங்கள் விசாரிச்சுட்டு, வாப்பாட்டதானே அட்வைஸ் பண்றேன்!! ஃபோனை வைக்கிறதுக்கு முன்னாடி தவறாம சொல்ற வாக்கியம், “அம்மாட்ட சண்டை போடாதீங்க. அம்மா கோவத்துல எதும் சொன்னாலும் நீங்க பதில் பேசாதீங்க”ங்கிறதுதான். ஒருதரம் இப்படி சொல்லும்போது பொறுக்கமுடியாம என் வாப்பா சொன்னாங்க, “இல்லம்மா, நானே தனியாவேற இருக்கேன் இங்க. நான் சாப்பிட மட்டும்தான் வாயத் திறப்பேன்மா.  அதனால நீ கவலைப் படாதே.”  அதுலருந்து ரொம்பச் சொல்றது இல்ல.

என்னமோ எனக்கு இப்பல்லாம் சின்ன வயசில அடிக்கடி எங்கம்மா புலம்பினதுதான் ஞாபகம் வருது. “நாலு பொண்ணான்னு எல்லாரும் கவலப் பட்டாங்க. ஆனா நான், நாலும் பொண்ணு,  என்னை அடுக்களையிலயே விடாம எல்லா வேலையையும் அவளுகளே செஞ்சுடுவாங்கன்னு சந்தோஷப் பட்டேனே. ஒருத்தியக் கூட இந்தப் பக்கம் காணோமே” ன்னு சொல்வாங்க. அதனாலத்தான் என்னையும் புலம்ப வச்சிட்டானோ என்னவோ?

என்ன புரியுதுன்னா, பெண்குழந்தைகள் அப்பாமேலே ரொம்பப் பாசம்னாலும், அம்மாவுக்குத்தான் ஆதரவா இருப்பாங்க. அதே மாதிரி, ஆண்பிள்ளைங்க, அம்மாகிட்ட பாசம்னாலும், சண்டைன்னு வர்றப்ப கட்சி மாறிடுவாங்க!!

Picture source: www.donnabellaas.com

Post Comment