காதலர் தினமாம் இன்னிக்கு. காதல்ங்கிறது கல்யாணத்துக்கு முன்னாடி மட்டுமே செய்ற விஷயமா இருந்தது போய், இப்ப கல்யாணத்துக்கு அப்புறமாவும் செய்ற விஷயமா ஆகிடுச்சு!! சரிதானே, கல்யாணத்துக்கு அப்புறந்தானே கணவன் - மனைவியிடையே காதல், புரிதல் அதிகமா இருக்கணும்னு பின்னூட்டம் போட ரெடியானீங்கன்னா, ஸாரி, நீங்க ரொம்ம்ம்ப அப்பாவியாருக்கீங்க இன்னும் - என்னை மாதிரியே!!
கல்யாணத்துக்கப்புறம் அடுத்தவரைக் காதலிப்பதுதான் இப்ப அதிகமாகிட்டிருக்கு. சில ‘பெரீய்ய்ய மனசுள்ள’ இளைஞர்களும் கல்யாணமாகி, பிள்ளைகள் பெற்றாலும் பரவாயில்லை; என்னோடு வந்துடுன்னு பெண்கள் முன்னே தியாகியாகிடுறாங்க!! அப்பேர்ப்பட்ட தியாகிகள் கிடைத்தவுடன், இவுங்களும் தன் தற்போதைய கணவன் -பிள்ளைகளை விஷம் வச்சுக் கொன்னுட்டு, கிளம்பிடுறாங்க!! ஆண்களைப் போல குடும்பத்தை அம்போன்னு விட்டுடாமப் போறாங்களாமாம்!!
இப்ப லேட்டஸ்டா உள்ள ட்ரெண்ட் என்னன்னா, காதலர் தினம்கிறது, தன் முன்னாள் காதல்(என்ற தவறான புரிதல்)களை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கவிதைகள் எழுதுவதுற்குத்தானாம்!! அதிலும், மூணாங்கிளாஸ் படிச்சப்போ, பக்கத்து பெஞ்ச் மகேஸ்வரி, ஒழுகும் மூக்கைத் துடைத்த கையைத் துடைக்காமலே தந்த தேன்மிட்டாயை, நீ தொட்டுத் தந்ததால்தான் தேன்மிட்டாய் இனிப்பு இன்னும் என் நாவில் தித்திக்கிறதோ (கருமம், அதுக்கப்புறம் பல்லே விளக்கலையோ?? தொடாமத் தந்தாலும் தேன்மிட்டாய் இனிக்கத்தானேடா செய்யும்?)ன்னு கவிதையெழுதத்தான் காதலர் தினமாம்!!
அநேகப் பதிவர்களின் பதிவுகளைப் பாத்தீங்கன்னா, பழைய காதல்களை, அல்லது சிறுவயது பெண் நட்புகளை காதலா அர்த்தப்படுத்தி, அதைப் பாராட்டி, சிலாகித்து, அல்லது ஏங்கி, கவிதை/கதை/பதிவு எழுதுறாங்க. ஏன் பழசுலயே உழண்டுகிட்டிருக்காங்க இன்னும்? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை அமைந்த பின்னும் பழசை நினைச்சுகிட்டிருந்தா வாழ்க்கை எப்படி சுகிக்கும்?
பெண்கள், தற்காலத்துலே, எல்லா ஆண்களுக்கும் இப்படியொரு முன்கதை இருக்கும்னு புரிஞ்சுகிட்டாலும், அது ஒரு சின்ன வயசு infatuationதான்; தன்னைத்தான் தன்னவர் முழுமையா விரும்புறாருன்னுதான் நம்பிகிட்டிருக்காங்க. ஆனா, திருமணம் செஞ்சு செட்டிலாகி பலவருடங்கள் ஆன பின்னும் இப்படி பழங்கதைகள் பேசினா, நிச்சயம் பிரச்னைதான் வரும். அப்புறம், அரசனை நம்பி, புருஷனைக் கைவிட்ட கதைதான்!!
இப்போ ஆணுக்கு நிகர் பெண்ணென்று சொல்வதாலயோ என்னவோ, இப்போவெல்லாம் கதைகளில் (நல்லவேளை கதைகளில் மட்டும்) பெண்களும் அப்படி முந்தைய ஆண் நட்பைத் தம் கணவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதாகக் கதைகளில் எழுதுகிறார்கள். கல்லானாலும்.. புல்லானாலும்... என்ற ரகமல்ல நான். எனினும், இது பொறுக்க முடியாததாக இருக்கிறது.
என் கணவரைவிட மிகைத்தவர்கள் இருக்கலாம்; இருப்பார்கள்; எனினும், என்னவரிடம் உள்ள சிறந்த குணங்களை நினைத்துப் பார்த்து, திருப்தியடைந்து மகிழ்ச்சிகொண்டு, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
சில நாட்களுக்குமுன் ஒரு பிரபல பதிவில் ஒரு கதை வாசித்தேன். தன் கணவர் நல்லவரேயாயினும், தன் நண்பனிடம் தான் ரசித்த சில கலகலப்பான குணங்கள் இல்லாததால், அந்நண்பனின் நினைவோடே வாழ்கிறாள். அவனைச் சந்திக்க நேரும்போது, அதை அவனிடம் குறிப்பால் உணர்த்தவும் செய்கிறாள். இக்கதையை அநேகர் பாராட்டி, சிலாகித்து எழுதியிருந்தனர். நல்ல எழுத்தோட்டமுள்ள கதை. எழுதியவர் திறமையானவர், அதனால் வசீகரமான எழுத்துக்கும், ரசனைக்கும் கேட்கவேண்டுமா?
நான் அவரின் திறமைக்குமுன் ஒன்றுமில்லைதான். விமர்சிக்கக்கூடத் தகுதியில்லையென சிலர் வாதிடலாம். எனினும், இக்கதைக்கருவை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இதேபோல, இன்னொரு பதிவர், தன் எழுத்தார்வமில்லா மனைவியை, தன் நண்பரின் எழுத்தாள மனைவியோடு ஒப்பிட்டிருந்தார் ஒரு பதிவில். இதைச் சுட்டிக்காட்டி நான் எழுதிய பின்னூட்டத்தை வெளியிடாமல், ”என்னைப் பற்றிய முன்முடிவோடு எழுதுகிறீர்கள்” என்று பதில் அனுப்பினார்!! அவரை எனக்கு அவரின் பதிவு மூலம்தான் தெரியும். அவர் மனைவியையும் அவர் எழுதிய பதிவுகளின் மூலம்தான் தெரியும். அப்புறம் எப்படி முன்முடிவு செய்ய முடியும்?
ஒப்பிடுதல் என்பது குழந்தைகளுக்கே செய்யக்கூடாது என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஏன், சொந்த சகோதரன்/சகோதரியோடுகூட ஒப்பிடாதீர்கள் என்கிறார்கள். எனில், கணவன்/மனைவியை ஒப்பிட ஆரம்பித்தால்? ஒரு மனைவி, “எங்க அப்பா வீட்டில..”ன்னு ஆரம்பிச்சாலே வீட்டு ஆணுக்கு எகிறும். அதுவே, பிற ஆணோடு ஒப்பிடுவதென்பது எதில் கொண்டு விடும் என்று தெரியாதா?
அதேபோலத்தான் பெண்களுக்கும் இருக்கும். “என்னவானாலும் எங்கம்மா கைப்பக்குவம் உனக்கு வராது”ன்னு அம்மாவோட தன்னை ஒப்பிடுவதே வீட்டில் வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தும். அப்படியிருக்க, விவரமில்லா வயதில் கண்ட பெண்களோடு ஒப்பிட்டால்? இல்லை, இது ஒப்பு இல்லை; அது ஒரு அனுபவம், சம்சார சாகரம் இன்னொருவித அனுபவம் என்பவர்களுக்கு - நீங்க சொல்றது என்னன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா? நீங்க இப்ப நினைச்சுப் பார்க்கிற அந்தக் கால காதலி இன்னிக்கு இன்னொருவருக்குச் சொந்தமானவர். பிறன்மனை நோக்கா பேராண்மைங்கிற ஒழுக்கம், உங்க மனைவியைப் பார்க்கிறவங்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தேவையே!!
ஒன்றிருக்கும்போதே நாம் இன்னொன்றை நினைவு கூறுகிறோம்னா, அதற்கு நாம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவில்லை, அல்லது கிடைத்திருப்பதின் அருமையை அறியவில்லை என்றே பொருள். பொருளுக்கே இப்படின்னா, கவனமாக் கையாளப்படவேண்டிய உறவுகளுக்கு?
|
|
Tweet | |||
