அந்த தம்பதியர் ஆவலோடு காத்திருந்தார்கள், தங்களுக்கு தாத்தா, பாட்டி என்ற மகிழ்ச்சியான பதவி உயர்வு தரக்கூடிய தம் பேரன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்க. முதல் குழந்தை ஆண் என்றால்தான் பெருமை, கௌரவம், அந்தஸ்து. இவையெல்லாம் தமக்கும் கிடைக்கப் போகும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். முதலில் பெண் என்றால் ஊர்மக்களில் சிலரின் அவமான/எள்ளல் பார்வை தவிர்க்க முடியாது.
ஆனால், ஸ்கேன் வசதிகள் இல்லாத 70-களில் எப்படி பேரன்தான் என்று உறுதியாக இருந்தார்கள்? அந்தத் தம்பதியருக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. ஏனென்றால், பரம்பரை பரம்பரையா அந்தக் குடும்பத்தில் தலைப்பிள்ளை ஆண்தான். இப்ப மட்டும் மாறிடுமா என்ன? பெயர் கூட ரெடி. ஆமாம். பெயருக்கென்ன, இப்போப் போல நெட்டில் தேடி, யாரும் வைக்காத ஸ்டைலான புதுப்பேரா தேடப்போறாங்க? பரம்பரை பரம்பரையா, முதல் ஆண்குழந்தைக்கு தாத்தாவின் தாத்தா பெயர்தான்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் வேரோடு அழித்து, இத்துப்போன பழைய வழக்கங்களையெல்லாம் அறுத்தெரிய, பெண்ணின் பெருமை சொல்ல, ஆணாதிக்கத்தை ஒழிக்க, அந்தப் புதுமைப்பெண் பூலோகத்தில் அவதரித்து பிறப்பிலேயே புரட்சி செய்தாள்!!
அவர்களுக்கு வருத்தம்தான் என்றாலும், தங்களை தாத்தா-பாட்டியாக்கியதால் பேத்தியை ஒதுக்கவில்லை. ஆனால், அந்த அதிர்ச்சியில் அவளுக்குப் பெயர் வைக்கத்தான் மறந்துவிட்டார்கள். அவளை, செல்லமாக குட்டிம்மா, பாப்பா என்பதுபோல ஒரு பெயரில் அழைத்து வந்தார்கள். அழைக்க ஏதோ ஒரு பெயர் இருந்ததால் யாரும் முறைப்படி பெயர் வைக்காதது பற்றி கவலைப்படவில்லை. அப்போவெல்லாம் பர்த் சர்டிஃபிகேட்டிலும் பெயர் தேவையில்லையே. மூன்று வயதானதும் பள்ளியில் சேர்க்க அழைத்துப் போனார்கள். பள்ளியில் பேரென்னவென்று கேட்டதன் பிறகே அஃபீஷியல் பெயர் வைக்காதது ஞாபகம் வந்து தாத்தா முழிக்க, ஆசிரியர் மீண்டும் அதட்ட, வேறு பெயர் யோசிக்க அவகாசம் இல்லாமல் போக, தம் தாத்தாவின் பெயரிலேயே ஒரு “ஆ” (a) (அகில்-அகிலா என்பதுபோல்) சேர்த்து பெண் பெயராக்கிச் சொன்னார்கள்.
நல்லவேளை அவர்கள் அந்தப் பெயரை அவளுக்கு வைத்தார்கள், இல்லையெனில் அதன்பிறகும் அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்ட வாய்ப்பு கிடைக்காது போயிருக்கும். அத்தோடு, அப்பெயரில் இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் அறிந்ததில்லை. ஆக, எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது!!
எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துது, அமீரகம் வரும்வரை. இங்கே வந்ததும் முதல் பெயரான ‘முஹம்மது’வும், இரண்டாவது பேரான ஆ-சேர்த்த ஆண் பெயரும் போகுமிடமெல்லாம் விசித்திரப் பார்வைகளையும், கேள்விகளையும் சந்திக்க வைத்தது. அதிலும் கடைசில உள்ள அந்த 'a'-ய எல்லாருமே கரெக்டா மிஸ் பண்ணி கூப்பிட்டுட்டு, நான் போய் நின்னா“உன்ன யாரு கூப்பிட்டா”னு பாப்பாங்க. சரி, நாமதான் புரட்சிப் பெண்ணாச்சே, அப்ப நமக்கு எப்பவுமே எல்லாம் ஏறுக்குமாறாத்தானே இருக்கும், அதான் இப்படின்னு பொறுத்துப் போயிட்டே இருக்கேன்!!
ஸ்ஸப்ப்பா.. இதான்ப்பா அவளுக்கு பெத்தவங்க பேர் வச்ச கதை!! இனி அவளே அவளுக்குப் பேர் வச்சுகிட்ட கதையப் பாப்போம்!! (இனி யாராவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுவீங்க?)
கல்யாணம் ஆனதும், கொஞ்ச நாள் கழிச்சு என் ரங்க்ஸ், என் பேரில எந்த மாற்றமுமில்லாததைக் கவனிச்சு, “ஏன் நீ என் பேர உன் பேர்கூடச் சேத்து எழுதலை?”ன்னு (பாவமாக்) கேட்டார். அப்ப நான் கொடுத்த லெக்சர்லயும், கேட்ட கேள்விகளிலும் அரண்டுபோய், மன்னிப்பு கடிதம் கொடுக்கற லெவலுக்கு வந்துட்டார். ஹா.. ஹான்னு வெற்றிக் களிப்போட சிரிச்சேன், நானே எனக்கு வச்சுக்கப்போற ஆப்பு காத்திருக்கிறது தெரியாம.
அப்புறம் இ-மெயில் புழக்கத்திற்கு வந்துது. அப்புறம் சாட் தளங்கள் வந்தன. அதிலெல்லாம் நான் போறதில்லை. (நல்ல பொண்ணு + முன் ஜாக்கிரதை) அதனால எந்தப் புனைபெயருக்கும் அவசியமில்லை. அப்பத்தான், என் தங்கச்சிக்கு கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சுது. மூத்தப் பொண்ணு என்ற பொறுப்பான பதவியால மேட்ரிமோனியல் தளங்களில் மாப்பிள்ளை தேடும் பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சாங்க. அப்பத்தான் யோசிச்சேன் - அதுல என் பேரையும், ஊரையும் சொன்னா எங்க குடும்பத்த ஊர்ல ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ஸோ, பேரைச் சொல்லாம, மிஸஸ். ஹுஸைன்னு ரிஜிஸ்டர் செஞ்சேன். இப்ப ரங்ஸ்க்கு அடிச்சுது சான்ஸ், என்னை நக்கல் பண்ண. அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா!!
அப்புறம், அதே பெயரில் “அறுசுவை” என்ற தளத்தில் ஃபோரம்களில் உரையாடும்போது, மிஸஸ்.ஹுஸைன்னு டைப் பண்ண சிரமமா இருக்குன்னு சிலர் சொன்னதால, ஹுஸைனம்மாவா மாறினேன். அப்படியே வலைப்பூவிலும்!! பிளாக் மூலம் பழக்கமான சிலரிடம் என் பெயரை ஏற்கனவே சொல்லியிருந்தாலும், ஃபோனில் பேசும்போது என் பெயரைச் சொன்னால், “அது எந்த லூஸுப்பா?”ன்னு பேய்முழி முழிக்கிறது மறுமுனையில் உள்ள எனக்கே தெரியுமளவு, ‘ஹுஸைனம்மா’வாத்தான் எல்லாருக்கும் பரிச்சயமாகியிருக்கிறேன்!!
இன்னொரு பெயரில் இருப்பது, எனது வலைப்பூ சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை, மெயில்கள், பின்னூட்ட ஃபாலோ-அப்கள் போன்றவற்றை, மற்ற இணைய நடவடிக்கைகள், மெயில்களிலிருந்து பிரித்து பரிபாலனம் செய்ய எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது.
எந்தப் பெயரானாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன். பெயருக்கொன்றாக என் கருத்துகள் மாறுவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சொலவடை உண்டு, “பூவுன்னும் சொல்லலாம்; புஷ்பம்னும் சொல்லலாம்; மலருன்னும் சொல்லலாம்; ஃப்ளவருன்னும் சொல்லலாம்". அதுபோல.
|
|
Tweet | |||
