Pages

டிரங்குப் பொட்டி - 22

ராஜஸ்தான் ஹவா மஹல் - இதன் இன்னொரு பெயர், “பிங்க் மஹல்”. பேருக்கேத்த மாதிரி பிங்க் கலர்ல இருக்கிற இத வச்சுத்தான் ஜெய்ப்பூருக்கே “பிங்க் சிட்டி”னு பேர் வந்தது. இந்த மஹல், அப்போதைய அரசக் குடும்பத்துப் பெண்கள் நகரை வேடிக்கை பார்க்கப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது. புராதனச் சின்னமான இக்கட்டிடம் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்நகரில் நடந்த NRIக்களின் தினமான ‘ப்ரவாசி பாரதிய திவஸ்”க்காக இந்நகரை அழகுபடுத்தினர். அப்போது, புறா எச்சங்களும் தூசியுமாய் இருந்த ஹவா மஹலையும் சுத்தம் செய்ய, தீயணைப்புக் குழாயால் நீரை வேகமாகப் பீச்சியடித்ததில், அதன் வெளிப்புறச் சுவரின் சில இடங்களில் காரை பெயர்ந்துவிட்டதாம்.

ஒரு புராதனக் கட்டிடத்தின்மீது இப்படிக் கடுமையான அழுத்தத்தில் நீரை அடித்துச் சுத்தம் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொல்பொருள் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இதுகூடத் தெரியாத குழந்தைகளா என்று ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
______________

காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்காக 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான EU, கடந்த ஜனவரி முதல் தம் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களைப் பயன்படுத்தும் விமானங்கள் வெளியிடும் புகையில் உள்ள நச்சுப்பொருளான கார்பன் அளவைப் பொறுத்து "Carbon tax" கட்ட வேண்டும் என்று EU சட்டம் நிறைவேற்றியுள்ளதற்கு, பல்வேறு விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை ஐரோப்பிய யூனியன் கண்டுகொள்ளாததால், விமான நிறுவனங்கள் இக்கட்டணத்தை விமான டிக்கட்டுகளில் ஏற்றி, பயணிகளின் தலையில் கட்டிவிட்டன!!

உலகில் வாகனப் பெருக்கம் அதிகமாகிவிட்டதன் ஒரு விளைவு இந்த “கார்பன்” emissions. இவை மிகக் கெடுதலானவை என்பதால், இதைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் அத்தியாவசியமாகி வருகின்றன. இதற்கான இன்னொரு  நடவடிக்கையான "Carbon capture and storage" குறித்து WFES - 2011 பதிவில் முன்பே பார்த்திருக்கிறோம்.
______________________

ங்கே அமீரகத்தில் சமீபகாலமாக, பூட்டியிருக்கும் வீட்டில் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பாதிக்கப்படுபவை குறிப்பாக இந்தியர்களின் வீடுகளே மிகமிக அதிகம். அதுகுறித்து அமீரகக் காவல் துறை தலைவர் பேசும்போது குறிப்பிட்டதாக செய்தியில் படித்த விஷயத்தைப் பகிரவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தேன். ஆனால், அந்தச் செய்தியின் லிங்கைச் சேமித்துவைக்க மறந்துவிட்டதால், தற்போது தேடியபோது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை அறியக் கிடைத்தது.

அதாவது அமீரகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும்கூட, இந்தியர்களின் வீடுகளே பெரும்பாலும் திருடர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. காரணம், ஒன்றுதான்!! அதாவது, பெரும்பான்மையோர் தம் வீட்டுக்கதவுகளில் தாம் இந்தியர் என்று தெரியும் விதமான அடையாளங்களைச் செய்கின்றனர். அதாவது, கதவில் ஸ்வஸ்திக் வரைவது, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, கோலங்கள் போடுவது போன்றவை மூலம் அது இந்தியர்களின் வீடுகள் என்று உறுதியாகத் தெரிய வருகிறதாம்.

சரி, அதனால் என்ன என்று தோன்றும். இந்தியர்களுக்குத்தான் நகைப் பற்று அதிகம். அதுவும் 22 காரட் நகைகளை இந்தியர்கள் மட்டுமே வாங்குவர். ஆங்கிலேயர்கள் 12 காரட், 14 காரட் நகைகளே பெரும்பாலும் வாங்குவர். அதன் மதிப்பு 22 காரட்டுக்கு முன் ஒன்றுக்கும் தேறாது. அதனால்தான்!!

தொடர்புடையச் சுட்டிகள்: 
1. http://aathimanithan.blogspot.com/2012/01/blog-post_08.html
2. http://uberdesi.com/blog/2009/08/12/burglarizing-ganesh/
3. http://www.dailymotion.com/video/xhohy3_homes-with-religious-symbol-meaning-good-targeted-by-burglars_news
 ___________________________

பெரியவனின் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி, வகுப்புகளில் சில அலங்கார வேலைகளைச் செய்யச் சொல்லியிருந்தனர். இவன் வகுப்பில், இவன் பொறுப்பெடுத்துச் சகமாணவர்களிடம் காசு வசூலித்துச் செய்தான். அப்போது வேலைகளையும், அதற்கான பணத்தையும் மாணவர்களோடு வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டி வந்ததில், பலரும் காசையும், வாங்கிய பொருட்களையும் ஆட்டையைப் போடுவதிலேயே குறியாக இருப்பதைப் பார்த்து நொந்துபோய் இருக்கிறான். “நீ தந்த காசைப் பையில் வச்சிருந்தேன். வகுப்பில் வச்சுக் காணாமப் போயிடுச்சு. அதனால் நான் பொறுப்பில்லை”; “வாங்கின ரிப்பனை வீட்டுல வச்சிருந்தேன்; தம்பி எடுத்துக் கிழிச்சிட்டான். ஒண்ணும் செய்ய முடியல”; “இன்னிக்கு லீவாயிருந்தாலும், உனக்கு உதவத்தான் வந்தேன், அதனால பெப்ஸி, சிப்ஸ் வாங்கக் காசு கொடு” - இதெல்லாம் சொல்லப்பட்டச் சில காரணங்கள். எதிர்கால இந்தியா!!

இதை மிஞ்சுற மாதிரி இன்னொன்ணு நேத்து கேள்விப்பட்டேன். திருச்சியில் முதலாமாண்டு பொறியியல் தேர்வில் மூன்று பாடங்கள் ஃபெயிலானதால் மாணவன் தற்கொலை செய்துகொண்டான். அதுவல்ல விஷயம் (!!). அவன் இறந்த சில நிமிடங்களில், அவனின் மொபைல் ஃபோன் காணாமல் போய்விட்டதாம்!!
__________________

”நண்பன்” படத்தில் எஸ்.ஜே. சூர்யாக்குப் பதிலாக விஜய் படிச்சு, பரிட்சை எழுதுவதை ரசித்துப் பாராட்டினோம். கல்வி முறை மாற வேண்டும் என்றெல்லாம் வீராவேசமாக வாதாடுகிறோம். ஏங்க, புதுச்சேரி மினிஸ்டரும், படிக்கக் கஷ்டமாயிருக்கப் போய்த்தானே ஆளு வச்சு பரிட்சை எழுதினார்? இத ஏன் யாரும் அந்தக் கோணத்துல யோசிக்கவேயில்லை? பாவம் அவரு!! :-)))))
________________

கடலூர்!!
ம்ம ஊர்ல சிலர், அவங்க விளைபொருட்களின் கொள்முதல் விலையைக் கூட்ட வேண்டும்னு போராட்டம் பண்றாங்க. உதாரணமா, பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தணும்; அரிசிக்கும் அதேபோலன்னு. எல்லாம் சரிங்க. ஆனா அதுக்கு ஏன் அந்தப் பாலையும், நெல்லையும், அரிசியையும் ரோட்டில கொட்டுறீங்க? முன்னெல்லாம் சினிமாவில் சண்டைக் காட்சியில்தான் இப்படி அநியாயம் பண்ணுவார்கள். இப்ப நிஜத்திலேயே!! :-((((
 

Post Comment

எதிர்கால சக்தி

அபுதாபியில்  சில வருடங்களாக நடந்துவரும்  World Future Energy Summit (உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு) போன வருஷம் முதன்முறையா போய்ப் பார்த்துட்டு வந்ததிலருந்து, இந்த வருஷம் எப்படா வருதுன்னு வெயிட் பண்ணிகிட்டிருந்தோம்.இந்த வருஷம் ஜனவரியில நடந்துது. மாநாடுன்னவுடனே, நமக்கு வழக்கமா லாரி, மேடை, பிரியாணி, கூட்டம், ப்ளெக்ஸ் போர்டு இதெல்லாம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, இது நிஜமான “அறிவுஜீவிகள்” கலந்துகொள்ளும் மாநாடு + கண்காட்சி + கருத்தரங்கம்.

 சுருக்கமா இந்த மாநாடு பத்தி சொல்லணும்னா:  குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம்

விரிவான விளக்கத்திற்கு இங்கே போகவும்: WFES 2011  (இது என் போன வருட பதிவுதான், தைரியமாப் படிக்கலாம்)

வழக்கம்போல, கண்காட்சி முழுதும் சோலார் பேனல்கள், காற்றாலைகள், பேட்டரி கார்கள், ஸ்கூட்டர்கள்னு போன வருஷம் பார்த்தவைதான். குறிப்பிடத்தக்க புதிய பொருட்கள் அறிமுகங்கள் எதுவும் இல்லை.  ஆனா,  பழைய அறிமுகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
உதாரணமா, வழக்கமான சோலார் பேனல்கள் ஒரே இடத்துல நிலையா இருக்கும்படி இருக்கும். இப்போ, சுழலும் பேனல்கள் வந்திருக்கு. அதாவது, சூரியன் செல்லும் திசைக்கு இந்தப் பேனல்களும் திரும்பும் - சூரியகாந்தி மாதிரி!! இதனால, உற்பத்தி அதிகமாகும். படத்தில் இருப்பதுபோல ஒரு செட் வச்சா, ஒரு குடும்பத்துக்குப் போதுமான அளவு மின்சாரம் தாராளமாக் கிடைக்குமாம். விலை என்னான்னு கேட்டேன். நேரடியாச் சொல்லாம, மொத்தமா ஒரு குடியிருப்புக்குத் தேவையான அளவுக்காவது வச்சாத்தான் செலவுகள் பலன் தரும்னு சொல்லிட்டார்!! :-( 

மேலும், இந்த சோலார் பேனல்கள் அதிக சூரிய ஒளியை உறிஞ்சுவதற்காக வேண்டி பேனல்களின் அளவைச் சுருக்கி, பின்னர் இரண்டு, மூன்று பேனல்களை ஒன்றிணைத்து, அதன்மேல் ஒரு கண்ணாடியை (total internal reflection lens) அதன்மீது வைத்திருக்கின்றனர். இதனால், உள்ளே வரும் ஒளி, வெளியே செல்லமுடியாததால்,  முழுதும் கிரகிக்கப்படும்.இப்ப சோலார் பேனல்களை எங்கும், எதிலும் வைக்கலாம்கிறதுக்கு உதாரணமா, இந்த மாடல். ஒரு கார் பார்க்கிங் ஷெட் மீது சோலார் பேனல்.

  இது எங்க துபாய்ல வரப்போற “சோலார் பார்க்”கின் மாடல்.

 
இது எங்க ஊர் “கூடங்குளம்” - ஆமாம், வரப்போகும் அணுமின் நிலையத்தின் முன்மாதிரி. என்னது, போராட்டமா, உஷ்!!


இந்த பெரீய்ய தொட்டி பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களுக்கானது. மிஞ்சின உணவை இதில போட்டா, அது உரமாகிடுமாம்!! ஜீபூம்பா!

வழக்கமான, “Vending machines"ல, காசு போட்டா தண்ணி பாட்டில் வரும். இதுல காலி பாட்டிலைப் போட்டா, காசு(க்கான கூப்பன்) வரும்!! பிளாஸ்டிக் மறுசுழட்சியை ஊக்கப்படுத்த வரப்போவுது எங்கூர்ல!!


பெரியவன் உள்ளே, சின்னவன் வெளியே
இது Shell நிறுவனம் வச்சிருந்த ரேஸிங் கார் (மாதிரி). ஆனா, இதுல என்ன விசேஷம்னா, வழக்கமான ரேஸிங் கார்ல வேகமாப் போய் முதலிடத்துக்கு வந்தாப் பரிசு கிடைக்கும். ஆனா, இதில் "Fuel-intelligent" ஆகப் போகணும். அதாவது, மெதுவாகவும் போகக்கூடாது, வேகமாகவும் போகக்கூடாது. அதே சமயம், எரிபொருளும் வீணாகக்கூடாது. (அவ்வ்வ்வ்...)

என் பெரியவன் ஓட்டி, முதல் பரிசு வாங்கினான். வெளியே முன்பக்கம் வைத்திருக்கும் டிவி திரையில் கார் போகும் சாலை, வேகம், எரிபொருள் செலவு விவரங்கள் தெரியும். (அதாவது வீடியோ கேம் மாதிரி) கண்காட்சியில் அந்த வண்டிய ஓட்டுவனங்கள்லயே அவன்தான் ரொம்ப "Fuel-intelligent"- ஆம்.

ந்த மாநாட்டில், உலகம் முழுவதும், எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வளம் பேணுதல் இந்த மாதிரி காரணங்களுக்கானக் கண்டுபிடிப்பு மற்றும் பங்களித்தலுக்காக சிறப்புப் பரிசு "Sheik Zayed Energy Prize" என்று வழங்கப்பட்டது. (பரிசுத் தொகை $500,000-ங்கோவ்!!)

இந்தப் பரிசின் “வாழ்நாள் சாதனையாளர்” பிரிவில் வெற்றி பெற்றவர் இயற்பியலாளரான, டாக்டர். அஷோக் கேட்கில் என்பவர். இவர் பிறந்தது இந்தியாவில், வசிப்பது அமெரிக்காவில். இவரது “தர்ஃபூர் ஸ்டவ்” என்கிற கண்டுபிடிப்புக்குத்தான் இந்தப் பரிசு.

சாதாரண ”மூணு கல்” அடுப்பும், “தர்ஃபூர்” அடுப்பும்
பின்தங்கிய பல நாடுகளில் இன்றும் சமையல் என்பது விறகு அடுப்புகளில்தான். அதற்கான விறகைச் சேகரிக்கக் காட்டிற்குச் செல்லும் பெண்கள் பல்வேறு ஆபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது; மேலும் அதிலேயே நேரமும் அதிகம் செலவாகிறது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில், தர்ஃபூர் நகரில் இதுபோல அவதிப்படும் பெண்களுக்கு உதவத் தயாரிக்கப்பட்ட அடுப்புதான் “தர்ஃபூர் ஸ்டவ்”. இதன் விசேஷ வடிவமைப்பால், 55% குறைந்த எரிபொருளே தேவைப்படுகிறது என்பதால் அங்கே பெண்களுக்கு கொஞ்சம் விடிவுகாலம்!! மரங்களையும் காப்பாற்ற முடிகிறது.

இந்தப் பரிசின் இன்னொரு பிரிவான, லாபநோக்கில்லாத சிறுதொழில் பிரிவில், ”Carbon Disclosure Project” என்கிற இங்கிலாந்து நிறுவனம் வென்றுள்ளது. இவர்கள் மற்ற நிறுவனங்கள்/ ஆலைகளின் கார்பன் வெளியீட்டையும் (carbon emissions), தண்ணீர் பயனீட்டையும் கணக்கிடவும், அவற்றை முறைப்படுத்திக் குறைக்கவும் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள்.  இவ்வாறு சுற்றுச் சூழலுக்கு உதவுவதால் இந்தப் பரிசு பெறுகிறார்கள்.

இந்தக் கண்காட்சியில, "How energy  industry works"னு ஒரு புக் கிடைச்சுது. ஒவ்வொரு விதமான எரிசக்தி, மின்சக்தி கிடைக்கப் பெறும் முறைகளும் பற்றி விளக்கமாக் கொடுத்திருக்கு. வாசிக்கவும் ஈஸியா இருக்கிறதனால், மீ த வாசிச்சிங். அதைபத்தி இன்னொரு பதிவுல. (இன்ஷா அல்லாஹ். ஆனா உடனே &ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்) நானும் இதுவரை புத்தக விமர்சனம் எதுவும் எழுதுனதில்லை. இதை வச்சுப் போட்டுத் தாக்கிற வேண்டியதுதான்!!

நீர்க் கோலங்கள்:


தண்ணியாலேயே படங்காட்டுறாங்க. பாத்து எஞ்சாய்!!
மேலேயிருந்து விழுற தண்ணி கீழே ஒரு சொட்டுகூட வெளியே விழாத மாதிரியான அமைப்புதான் என்னைக் கவர்ந்தது. (ஹி.. ஹி..)


தொடர்புடைய பதிவுகள்:

Post Comment

பர்தாஃபோபியா
ஃபோபியாக்களில் பலவகை உண்டு. ஆனால், உடை வகைகளில் ஃபோபியா தருவதென்பதில் பர்தாவுக்குத்தான் தனிச்சிறப்பு. சேலைஃபோபியா, சுடிதார்ஃபோபியா, ஸ்கர்ட்ஃபோபியா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோமா என்ன? ஆனாலும், நிறைய பேருக்கு இந்த ஃபோபியா இருக்கிறது. இதைப் போக்குவது பற்றிப் பார்ப்போம்.

முன்காலத்தில், எல்லாப் பெண்களுமே சேலை அல்லது தாவணித் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள்.  முஸ்லிம் பெண்கள் கூடுதலாகத் தலையையும் மறைத்துக் கொள்வார்கள், இஸ்லாமிய வழிகாட்டுதல் அவ்வாறு என்பதால். மேலும், அப்போதெல்லாம் பெண்கள் எப்போதாவதுதான் வெளியே வருவதால், இம்முறையே பின்பற்றத் தோதுவாக இருந்தது. ஆனால், நாளாக நாளாகப் பெண்கள் படிப்பதும், பல துறைகளில் கால்வைத்து, வேலைக்குச் செல்வதும் அதிகரித்தது. பல வெளிவேலைகளுக்கும் உறவினர்களைச் சார்ந்திராமல், தாமே செய்துகொள்ளவும் ஆரம்பித்தனர்.

சேலையில் பல அவஸ்தைகள் உண்டு, உடுத்துவது முதல். என்னதான் பார்த்துப் பார்த்து அங்கங்கு பின் குத்தி வைத்தாலும், கவனமாக இருக்க வேண்டும். இருபாலர் படித்த என் கல்லூரியில், சேலை மட்டுமே பெண்களுக்கான கட்டாய  உடையாக இருந்தவரை, மாணவிகளின் வலதுபுறம்தான் மாணவர்களுக்கு இருக்கைகள் என்பது எழுதப்படாதச் சட்டமாக இருந்தது. ( ஒரு திருமணப் புகைப்படக்காரர் கல்யாண வீட்டில் கிடைத்த அனுபவங்களை, திட்டுகளை வைத்து, சேலையின் சிரமங்களைப்  பதிந்திருந்தார். அந்தப் பதிவை இப்போக் காணோம், காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு போல!!)

பிறகு, சுடிதார் சல்வார் அறிமுகமாச்சு. அறிமுகமான வேகத்துல, அது கிட்டத்தட்ட தமிழ்நாட்டு கலாச்சார உடை மாதிரி எல்லாரிடமும் இறுகப் பரவிப்பிடிச்சுடுச்சு. என்ன காரணம்? உடையின் எளிமை மற்றும் சௌகரியம். ஆமாம், சேலையைவிட இது மிகவும் வசதியான உடை!! பிறகு வந்த “நைட்டி”யும் பிரபலமடைவதற்கு அதன் வசதிதானே காரணம்.

அதேபோலத்தான், ‘பர்தா’வும். 90களின் நடுவேதான் இஸ்லாமிய விழிப்புணர்வோடு,  பர்தாவும் தமிழ்நாட்டில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் பெண்களும் பொது இடங்களில் அதிகம் புழங்கத் தொடங்கியிருந்தனர். பணிக்குச் செல்லும் பெண்கள் அன்றாட உடையாக சேலை அணிவது சிரமமானதே என்பது நான் கல்லூரி ஆசிரியையாகப் பணிபுரிந்ததில் கிடைத்த அனுபவம். அப்போது, பர்தா முறையிலான சேலை (முழு நீள ப்ளவுஸ் + ஸ்கார்ஃப்) அணிவேன் அச்சமயத்தில்.

பர்தா என்ற உடை, நைட்டியை ஒத்து இருப்பதுதான் அது பிரபலமானதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.  நைட்டியின் வசதியைத் தரும் அதே சமயம், சுடிதார்/நைட்டியில் குனிந்து நிமிர்வதில் உள்ள சங்கடம் இதில் இல்லை. பொதுவாகவே இப்ப பர்தா உலகமுழுதுமே ரொம்பப் பரவியிருக்கு, பல நாடுகளுக்கே  ”ஃபோபியா” தாக்குமளவுக்கு!!

என்னிடம் சமீபத்தில் ஒருவர், “பிரதீபா பாட்டீல், இந்திரா காந்தியெல்லாம் போட்ட மாதிரி முழுக்கை சட்டை போட்டு, முக்காடு  போட்டுகிட்டாலும் பர்தாதானே. அப்புறம் ஏன் தனியா பர்தா போடணும்?” என்று கேட்டார். உண்மைதான், நானும் அப்படித்தான் சேலையானாலும், சுடிதாரானாலும் முழுக்கை உடையும், ஸ்கார்ஃபும் அணிந்து வந்தேன். ஆனாலும், அவற்றில் இருக்கும் நடைமுறை சிரமங்கள் பல. அவரிடம் சொன்னேன், “அக்கா, பிரதீபா பாட்டீல் அம்மாவுக்கும், இந்திரா காந்திக்கும் சேலைத் தலைப்பைப் பிடிப்பது மட்டும்தான் வேலை. நமக்கோ,  கையில் நாலஞ்சு பையும் பிடிச்சுக்கணும்; அங்கேயிங்க ஓடுற பிள்ளையையும் பாக்கணும்; பேரம் பேசணும்; ஆட்டோவோ, பஸ்ஸோ நிறுத்தி, ஓடி ஏறணும், இறங்கணும். இவ்வளவுத்துக்கும் நடுவுல சேலையைப் பிடிக்கவா, பையைப் பிடிக்கவா, பிள்ளையப் பிடிக்கவா? இதுக்கு பர்தாவே பெஸ்ட்னுதான் நான் மாறி இப்போ அது ஆச்சு பன்னெண்டு வருஷம்” என்று சொன்னேன்.

இஸ்லாம் எந்த இடத்தில் நாம் இன்று ’பர்தா’ என்று சொல்லும், அரேபியப் பெண்கள் அணியும் ‘அபாயா’ போன்ற முழு நீள அங்கி போன்ற
ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஆனால், அங்க அவயங்கள் வெளியே தெரியாமல் முறையான ஆடை அணிய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது. அதனால்தான், உலக முழுதுமுள்ள முஸ்லிம் பெண்கள் அவரவர் வசதிக்கேற்றபடி, விருப்பப்படி முழு உடலையும் மறைக்கும்படி ஆடை அணிந்துகொள்கிறார்கள். அது பர்தா, ஸ்கர்ட்-டாப்ஸ்-ஸ்கார்ஃப், கால்சராய்-சட்டை-ஸ்கார்ஃப், முழுக்கை சுடிதார்-ஸ்கார்ஃப், சேலை-முழுக்கை சட்டை-ஸ்கார்ஃப் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படித்தான் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இதில் உலகெங்கும் பர்தா என்ற அங்கி அதிகமாகப் பரவியிருக்கிறதென்றால், காரணம் சிம்பிள்: It's more comfortable, that's all!!

இல்லை, பர்தா அரபு நாட்டு உடை; தமிழ் கலாச்சாரத்தில் திணிக்கிறார்கள் என்றெல்லாம் (அதுவும், பேண்ட்-ஷர்ட் போட்டவர்கள்) சொல்வதைப் பார்த்தால், சிரிப்புதான் வரும். தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிகளில், பட்டிதொட்டிகள் இருப்பவை உட்பட அநேகமாக எல்லாவற்றிலும் சீருடையாகப்பட்டிருக்கின்றதே  சுடிதார், அதென்ன சங்ககாலப் பெண்கள் போட்டிருந்த உடையா? ஏன், அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் (இந்திய & மேற்கத்திய) பெண்கள்  உடல் முழுமையாக மறையும்படி அணியும்  பிஸினஸ் சூட் கூட பர்தா வகைதானே!!  எந்த உடையும் நிலைத்திருப்பதற்கு அதன் வசதிதான் காரணம். இந்தப் பதிவில் சொல்லியிருப்பதையும் படித்துப் பாருங்கள்.  இத்தகைய ஆபத்துகள் நிறைந்த உலகில் உடையில் கவனமாக இரு(க்க நினை)ப்பதில் என்ன தவறு?

என் நண்பர் ஒருவர், சில முஸ்லிம் பெற்றோர் பர்தாவைக் கட்டாயப்படுத்துவதாகவும்; பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டியதுதானே  என்றும் கேட்டார். அவரிடம், ‘ப்ளஸ் டூ படிக்கிற உங்க தம்பி கடைத்தெரு டீக்கடையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தபின், அவனுக்கு உங்கள் வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் சுதந்திரத்தைத் தராமல், ஏன் கண்டித்தீர்கள்?’ என்று கேட்டேன்.

ஒரு பெற்றோராகத் தன் மகன்/ளுக்கு, உணவு, உடை, உறைவிடம், கல்வி அளிப்பது மட்டும் பெற்றோரின் கடமையல்ல;  பாதுகாப்பான பழக்கவழக்கங்கள் சொல்லித் தருவதும் கடமையே. வயது வந்த பிறகு மட்டுமல்ல, சிறுவயதிலிருந்தே முறையான ஆடைகள் அணிவதும் அவசியமே என்று இந்நாளைய ஆபத்துகளை அறிந்த நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவர்கள் முழு உடல் மறைக்கும் ஆடையே பாதுகாப்பென்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

சுடிதார், சேலை, ஸ்கர்ட் உட்பட விரும்பும் உடைகளையே பர்தா முறையில் அணியலாம். தவறில்லை. என்றாலும், ’கலர்’களைக் கண்டுகொள்ளாமல், கருப்பு (அங்கி) பர்தாவுக்கு மாறுவதற்குக் கொஞ்சம் உரமான மனது வேண்டும். இதில் இருக்கும் வசதிகளாக நான் கருதுவது,  என் அழகு, அந்தஸ்து, ஆபரணம், ஆடை, அளவுகள் ஆகியவற்றிற்காக நான் மதிக்கப்படாமல், பர்தாவை மீறி வெளியே தெரியும் என் அறிவு, அன்பு, பண்பு, குணம், கல்வி ஆகியவற்றிற்காக மட்டுமே மதிக்கப்படுவேன். அதாவது பள்ளிகளில் சீருடை போல என்று சொல்லலாம். மேலும்,  இயல்பாகவே விலையுயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் மீது ஆர்வமின்மை ஏற்பட வைக்கிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, வெளியிடங்களில், நான் என் உடையின்மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லாததால், என் செயல்களின்மீது மட்டுமே கவனம் செலுத்தினால் போது. இதற்காகவே புர்கா போடலாமா என யோசிப்பதாக இங்கே ஒரு பெண் யோசிக்கிறார் பாருங்கள்.

நான் ஏன் முழு ஆடை அணிகிறேன்? ஆரம்பகாலங்களில் அம்மா சொன்னார், இஸ்லாம் சொல்கிறது என்பதே எனக்குத் தெரிந்த காரணம். பின்னாட்களில் செய்தித் தாட்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கண்ட நிதர்சனங்கள் பெண்ணுக்கு முழுஆடைதான் முதல் கவசம் என்பது புரிந்தது. இப்போதும் பலரின் பதிவுகளில் பெண்களைக் குறித்தான எழுத்துக்கள் என் எண்ணங்களுக்கு வலு சேர்க்கவே செய்கின்றன. ”ஆள் பாதி, ஆடை பாதி” என்பதன் உண்மையான அர்த்தம் புரிகிறது.

ஆரம்ப காலங்களில் எல்லாப் பெண்களுமே கண்ணியமான ஆடைதான் உடுத்தியிருந்தார்கள். ஆனால், காலப்போக்கில், அறிவை வெளிப்படுத்துவதாக எண்ணி உடலையும் வெளிக்காட்டும் உடைகள் புழக்கத்தில் வந்துவிட்டன. எவ்வளுக்கெவ்வளவு இறுக்கமாக, இறக்கமாக உடை அணிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் அவர்களுக்குக் கிடைப்பதாக இப்பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். எப்படி வந்தது இந்த எண்ணம்?

பர்தாவை எதிர்க்கிறோம், அது சுதந்திரத்தை முடக்குகிறது என்று சொல்லும் இவ்வெதிர்ப்பாளர்கள் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதைத்தான்.  முழுதும் மூடினால் அடிமை; திறந்துபோட்டால்தான் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தைப் பாகுபாடில்லாமல் இளம்பெண்களின் மனதில் பதிய வைத்ததுதான் இவர்களுக்குக் கிடைத்த, இவர்கள் எதிர்பார்த்த வெற்றி.  இதன் தொடர்ச்சியே போட்டிருந்தாலும் போடாததுபோல உடலின் பெரும்பகுதியை வெளிப்படுத்துவதான இன்றைய மாடர்ன் உடைகள்!!

இவையெல்லாவற்றையும் விட அதிர்ச்சியான விளைவு ஒன்று உண்டு என்று சொன்னால், சின்னச் சிறார்களுக்கும் இதுபோன்ற உடைகள் அணிவிப்பதுதான்!!  இதனால், நம் உடல் தெரிய உடை அணிவது தவறொன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பிஞ்சு மனதில் பதிய வைப்பது மட்டுமல்லாமல், எத்தனை அபாயகரமான விளைவுகளுக்கு அச்சிறுமியை உள்ளாக்கும் சாத்தியங்களைத் உருவாக்குகின்றோம் என்பது பெற்றோர்களுக்குப் புரியாமல் போயிருப்பது - அதுவும்  பல கொடூரங்களைக் கண்டபின்னும் - ஏன்? அவர்களுக்குள்ளும் உடைகுறித்தானத் தவறான புரிதல் பர்தா-எதிர்ப்பாளர்களாலும் ஆழப் பதிய வைக்கப்பட்டிருப்பதுதான்.

இன்று, குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவை தவறில்லை என்ற அபிப்ராயம் மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதுபோல, மீடியாவினால் பெண்கள் "commoditise" ஆக்கப்பட்டிருப்பதும், உடையைக் குறைப்பது தவறில்லை என்ற எண்ணம் சமூகத்தின்மீது திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். இதைமீறி முழு உடை அணிபவர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்ததுதான் பர்தா-எதிர்ப்பாளர்களால் வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆனால் முழுமையான கண்ணியமான உடை என்றுமே அறிவிற்கும், திறமைக்கும் தடையாகாது, மாறாக கவனத்தைச் சிதறாமல் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் முன்னேறவே உதவும் என்பது சாதித்தவர்களுக்குத் தெரியும்.


பர்தா அல்லது முழு ஆடையை எதிர்ப்பதைவிட, பல பெண்கள்மீது உடலைக் காட்டிப் பிழைக்கும் நிலை ”திணிக்கப்படுவதை” முதலில் எதிர்த்து, தடுப்பதே கட்டாய அவசியம். அவர்கள்தான் மிகமிகப் பாவப்பட்டவர்கள், பரிதாபத்திற்குரியவர்கள்.

பெண்ணுக்கு மட்டும்தான் முறையான ஆடை அவசியமா, ஆண்களுக்கில்லையா என்றால், எப்படி இல்லாமல் இருக்கும்? ஆண்களுக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு உண்டு. இதோ அதுகுறித்த வழிகாட்டுதல்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தரையில் கிடக்கும் அவரது கீழாடையைக் கணுக்கால்களின் பாதியளவுக்கு உயர்த்திக் கட்டச் சொன்னதாகச் சொல்வதாக ஸஹீஹ் முஸ்லிம் 4238 கூறுகிறது. அதாவது இந்த ஹதீத் சொல்வது ஆண்களுக்கும் முழு ஆடை அவசியம் என்றே.

ஆண்கள் ஆடைக்குறைப்பில் வியாபார உலகம் ஆர்வம் காட்டாததாலேயே  இது மிகவும் வலியுறுத்தப்படவில்லையோ என்னவோ.

பொது இடங்களில் ஆண்களுக்கும் உடையில் கட்டுப்பாடு வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படவேண்டியதே. எனவேதான் என் மகன்களுக்கும் கையில்லா சட்டைகளோ, அரை/முக்கால்/காலேஅரைக்கால் கால்சட்டைகளோ அணிவிப்பதில்லை. ஏன் என் கணவர், தந்தை, கஸின்ஸ் உட்பட என் குடும்பத்து ஆண்கள் யாரும் இவ்வாறு அணிவதில்லை.  பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் எந்தச் சமூகத்து ஆணும் இதே போல அரைகுறை ஆடை அணிவதில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். (& vice-versa)

நான் கல்லூரியில் வேலை பார்க்கும்போது, என் சக ஆசிரியை கேட்டார், “உங்க மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா பர்தா (முறையிலான ஆடை) போட்டிருக்கீங்க?” என் பதில்,” என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், என் எதிரில் வருபவர்கள் எல்லாரையும் நான் நம்பிவிட முடியாது என்பதால்தான் பர்தா அணிகிறேன்”.

Post Comment

பூவோடு சேர்ந்த நார்...

எங்க வீட்டுல அன்னிக்கு மட்டன் குழம்பு. ( யார்றா இவ, இவளை எழுதவிட்டதே தப்பாப்போச்சு. என்ன எழுதன்னு தெரியாம, இன்னிக்கு மட்டன், நேத்திக்கு சிக்கன், நாளைக்கு மீனுன்னு எழுதிகிட்டு...ன்னு அலம்பல் பண்ணறவங்களுக்கு: மேலே, ஐ மீன், கீழே மீதியயும் படிச்சுட்டுச் சொல்லுங்க.)

எங்க வீட்ல மட்டன் குழம்புன்னா, அன்னிக்கு ஸ்பெஷல் சமையல்னுதான் அர்த்தம். ஏன்னா, மட்டன்லாம் அடிக்கடி வைக்கிறது கிடையாது. எனக்குச் சமைக்கத் தெரியாததுதான் இதுக்குக் காரணம்னு நினைப்பீங்க. ஒரு விஷயம் தெரியுமா, நான் -வெஜ்ஜை எப்படி சமைச்சாலும் டேஸ்டாத்தான் இருக்கும். வெஜ் சமைக்கறதுக்குத்தான் கொஞ்சம் தெறம வேணும்! பேக் டூ பாயிண்ட், எங்க வீட்டில மட்டன் அடிக்கடி வைக்கிறதில்லை. எல்லாம் இந்த டயட் பிரச்னையாலத்தான்.

ஆக்சுவலி,  குழப்பம் மட்டன்ல இல்லை. ஹலால் முறையில வெட்டப்படுவதால், அதிலிருக்கும் இரத்தம் நீக்கப்பட்டுவிடுகிறது.  மட்டனில் இருக்கும் கொழுப்பையும் நாம் சுத்தம் செய்யும்போது நீக்கிவிடுகிறோம். அதனால, நாம சமைக்கிற முறையிலத்தான் தவறு இருக்குன்னு நான் நினைக்கிறேன். ப்யூர் வெஜிட்டேரியன்களுக்கே பிபி, சுகர், கொலஸ்ட்ரால், ஹார்ட் ப்ராப்ளம்ஸ்னு வர்றதுக்கும் இதுவும் ஒரு காரணம்.  (தென்)இந்தியச் சமையல்ல பாத்தீங்கன்னா, எண்ணெய், நெய், வெண்ணெய், தேங்காய், முந்திரி போன்றவற்றின் ஆதிக்கம் அதிகம். அதுவும் என்ன மாதிரி ஆட்கள் தைரியமா சமைக்கவும் செய்றோம்னா, அது இதைல்லாம் நம்பித்தானே? அதோட, வழக்கமா ‘லிமிடட் மீல்ஸ்’ சாப்பிடுறவங்களும், மட்டன்னா ’ஃபுல் மீல்ஸ்’ அடிச்சுடுறாங்களா, அதுவேற எக்ஸ்ட்ரா ப்ராப்ளம் ஆகிடுது!!

அதனால, விருந்தாளிங்க வந்தா மட்டும்தான் மட்டன் வாங்குறது. அப்பவும் எண்ணிப் பாத்து, கரெக்டா தேவைக்கு எண்ணி எண்ணிதான் வாங்குவேன். ஆனாலும், சிக்கனம் பாக்கிற நம்ம கை சும்மா இருக்குமா, அதுல ரெண்டுமூணு  எலும்பை உருவி ஃப்ரீசர்ல வச்சுகிட்டா, இன்னொரு நாள் மட்டன் குழம்புக்கும் ஆச்சு, வீட்ல (பெரீய்ய) குழந்தை(ங்களு)க்கும் சந்தோஷம்!! ஒரே கல்லுல...

கல்யாணம் ஆன புதுசுல, என் மாமியார் வீட்டுச் சமையலைப் பாத்து எனக்கு ஒரே ஆச்சர்யம். ரொம்பவே டேஸ்டா இருக்கும். நானும் சமையல்கட்டு போயே ஆக வேண்டிய நிலையில, எப்படி சமைக்கிறாங்கன்னு பாத்தப்போதான் புரிஞ்சுது, ஏன் இவ்ளோ டேஸ்ட் வருதுன்னு!! தேங்காய், தேங்காய் எண்ணெய் ரெண்டும் கணக்கு வழக்கிலாம சேருது சமையல்ல. பொறியல் வச்சிருப்பாங்க, நானும் ’தேங்காய் பொறியல்’னு நினைச்சு சாப்பிடுவேன். பாத்தா, நடுவுல அங்கங்க ரெண்டுமூணு பீன்ஸ் அல்லது கேரட் தென்படும். எங்க வீட்ல பீன்ஸைப் பொறியல் வச்சு, அதில தேங்காய் தூவுவோம். இங்க தேங்காயப் பொறியல் செஞ்சு, அதுல பீன்ஸ் தூவிருக்காங்களேன்னு அப்பாவியா நினச்சுகிட்டு மாமியார்கிட்ட கேட்டா, அது பீன்ஸ் பொறியலேதானாம்!!

இப்படியே போனப்போதான் இறைவன் கணக்கு புரிஞ்சுது!! நல்லா சமைச்சுப் போடுற என் மாமியாரோட மகனுக்கு ஏன் ஆண்டவன் சமைக்கத் தெரியாத என்னை மனைவியாக்கினான்? அம்மாவைப் போலவே மனைவியும் நல்ல ருசியா, விதவிதமாச் சமைச்சுப் போட்டுகிட்டிருந்தா உடம்பு என்னத்துக்காகும்? இப்பத்தான் கணக்கு டேலியாகுது பாருங்க!! இத நான் அடிக்கடி எங்கூட்டுக்காரர்கிட்ட சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக்குவேன்: “பாருங்க, நீங்க எம்பூட்டு நல்லவரா இருக்கப் போய், உங்களுக்கு ரொம்ப நல்ல மனைவியா நான் வாய்ச்ச்சிருக்கேன்?” கரெக்ட்தானே?

அதான், அத அப்படியே மெயிண்டெய்ன் பண்ண ஆரம்பிச்சேன்.   எப்படின்னா, சமையல் கத்துகிட்டாத்தானே சமைக்கணும். அதனால, ரொம்ப கத்துகிடாம, ஏதோ தேவைக்கு - பசிக்குச் சாப்பிட்டுக்கிற மாதிரி - கொஞ்சமா சமைக்கக் கத்துகிட்டேன். (என்ன சத்தம்னு கேக்கிறீங்களா, அது இந்த ரங்க்ஸ்தான் “ஆமா, இன்னும் கையை வெட்டாம காய் நறுக்கவே கத்துக்கலன்னு சும்மா ஜோக் (நறநற....) அடிக்கிறார்...)

சரி, அப்படியே அந்த “டார்டாய்ஸ்” கொசுவத்தியக் கீழவச்சிட்டு, (பத்திரம், இனியும் தேவைப்படும்), “ஆல் அவுட்”டைக் கையில் எடுத்துக்கோங்க. அதாவது, ஃப்ளாஷ்பேக் முடிஞ்சுது, நிகழ்காலத்துக்கு வாங்கன்னு சொல்றேன். என்ன சொல்றீங்க? பவர்கட்டால, ’ஆல் அவுட்’ நிஜமாவே அவுட் ஆனதால, இப்பவும் ‘டார்டாய்ஸ்’தானா? அய்யோ பாவம்!!

ட்டன் குழம்பு வச்சு, (எண்ணெயில்லாத) சப்பாத்தி சாப்பிட்டுகிட்டிருந்த ரங்ஸ், இருந்தாப்ல  ”உங்க வீட்ல முன்னாடி மாட்டுப் பண்ணை வச்சிருந்தீங்களோ?”ன்னு கேக்கவும் எனக்கு அப்பிடியே ஜிவ்வுனு இருந்துச்சு. ஏன்னு கேப்பீங்களே? மறுபடி அந்த டார்டாய்ஸ், சரி, சரி..

நீங்க சில படங்கள்ல பாத்திருப்பீங்க, பட்டணத்துல பிறந்து, வளர்ந்த கதாநாயகியைக் கிராமத்துல பண்ணையார் வீட்டுல கட்டிக் கொடுப்பாய்ங்க. அந்தப் பொண்ணு, இலையில சாப்பிட ஸ்பூன், ஃபோர்க் கேட்கும்.
கல்யாணம் ஆகி வரும்போது என் நிலைமையும் அப்படித்தான் - ஆனா, தலைகீழா!! நான் கிராமம், கட்டுனது பட்டணத்துக்காரரை. (நோ, நோ, ஐயம் நாட் லைக் அருக்காணி!! ஐயம் எ கிராஜுவேட்,  யூநோ?)   ஒரு சின்ன உதாரணம் சொல்லணும்னா, அப்ப எங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் வாங்கி மூணு வருஷந்தான் ஆச்சு. ஆனா, அவங்க வீட்டுல ப்ரிஜ்ஜுக்கும் இருவத்தேழு வயசு, நான் கட்டிகிட்டவருக்கும் இருவத்தேழு வயசு!! இப்படி ஒவ்வொண்ணாப் பாத்து, அப்பவே நான் “டெக்னாலஜி இஸ் ஸோ இம்ப்ரூவ்ட் யா!!”ன்னு மூக்கில விரல் வச்சு ஆச்சர்யப்பட்டேன்னாப் பாருங்களேன்!

அப்புறம் சில வருஷத்துல, இயற்கை உணவு, சூரிய சக்தி, ஆர்கானிக் ஃபார்மிங் அப்படின்னெல்லாம் புரட்சி வந்துதா, எனக்குள்ள இருந்த கிராமத்தான் முழிச்சுகிட்டான்(ள்). முன்னொரு காலத்துல எங்க சொந்த வயல்ல இருந்தே நெல் வந்தது, வீட்டுல கோழி முட்டை போட்டது,  சொந்தமா மாடு வச்சிருந்தது இதெல்லாம் பத்திப் பேசிப்பேசியே, அப்படியே கொஞ்சகொஞ்சமா என்னவருக்கு வேப்பிலை அடிச்சு, ப்ரெய்ன் வாஷ் செஞ்சேன். அப்புறம் என்ன,  பூவோட சேந்த (கிழிஞ்ச)  நாரா,  இயற்கை முறைவாழ்வு நமக்குத் தேவைங்கிற அளவுக்கு இப்ப ”கொள்கையளவுல” ஒத்துகிட்டார். எனக்கும் ரொம்ப சந்தோஷம் ஆகிப்போயி,  ஒரு பத்து ஏக்கரா வயல் வாங்கி, அதுல அவர் மாட்டை ஓட்டிகிட்டே, தோள்ல மண்வெட்டியோட “விவசாயி... விவசாயி..”ன்னு பாடற மாதிரி கனவெல்லாம் கண்டுகிட்டேன். கனவு மட்டும்தான் இப்போதைக்கு...

பேக் டூ ”ஆல் அவுட்”!! (ஐயோ, எல்லாரும் வெளியே போங்கன்னு சொல்லல) இப்படி இந்த எண்ணங்கள்லயே இருந்ததுனால, அவர் “மாட்டுப் பண்ணை வச்சிருந்தீங்களா”ன்னு கேட்டதும், ரொம்ப உற்சாகமாகிப் போய் “எங்க ஆத்தா ஆடு வளத்தா, மாடு வளத்தா, கோழி வளத்தா”ன்னு ரொம்பப் பரவசமாச் சொல்லிகிட்டே வந்தேன். திடீர்னு, “கட்!! கட்!! கட்!! ஸ்ஸ்ஸப்பா.......!!  மாட்டுக்கு வைக்கோல்ல செஞ்ச கன்னுகுட்டியைக் காட்டி, பாலைக் கறப்பாங்களே. அதுமாதிரி, நாலே நாலு எலும்பைப் போட்டுட்டு, இதை மட்டன் குழம்புன்னு சொல்றியேன்னு கேட்க வந்தா.....!!”

???? !!!!! ???? !!!!! ???? !!!!! ???? !!!!!

Post Comment

Gகத்தாமா - 2
"Gகத்தாமா - 1": 

அச்சமயம் என் சின்னவன் எல்கேஜி படித்துக் கொண்டிருந்தான். நான்கே வயதுச் சிறுவன், மதியம் 12 மணிக்கு பள்ளிவிட்டு வந்தபின் மாலை ஏழு மணிவரை பணிப்பெண் பொறுப்பில்தான் இருக்கவேண்டும் எனும்போது, அதற்கேற்ற குணமும், பொறுமையும், தமிழ் தெரிந்தவராயும் இருத்தல் வேண்டும். வேலைக்காரரை ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவேக் கருதி, நடத்துவேன். அப்போதுதான் அவருக்கும் நம் குழந்தையின்மீதும், குழந்தைக்கு அவரின்மீதும் ஒட்டுதல் வரும்.  எனவே, வேலைக்காரர்களை அடிக்கடி மாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அடிக்கடி ஆள் மாறுவது என்பது சிறுகுழந்தையின் மனதை பாதிக்கவும் செய்யுமே. (பள்ளியில் அடிக்கடி ஆசிரியர் மாறினாலே நல்லதில்லை என்று சொல்வோமே). பெரியவனுக்கும் 10 வயதுதான் ஆகியிருந்தது.

இருந்தாலும், இப்படி எத்தனை நாள் இப்படி சமாளிக்க முடியும்? என்னதான் அவசியத்திற்கோ அல்லது ஆர்வத்திற்காகவோ வேலைக்குப் போகிறோம் என்றாலும், குழந்தைகள் முக்கியம் என்பதால்தானே பார்த்துக் கொள்ள ஆட்களை நியமிக்கிறோம்? அங்கீகரிக்கப்பட்ட ”டே கேர்” சென்டர்கள் மிகச்சில இருந்தாலும், அவற்றின் தூரம் காரணமாகவோ, அல்லது அதிகக் கட்டணம் காரணமாகவோ பலரும் அதை விரும்புவது இல்லை. இங்கும் இந்தியாபோலவே பள்ளிக் கட்டணங்கள் மிக அதிகம்தான். அதற்குமேல் டே-கேருக்கெல்லாம் கொடுப்பதற்கு எல்லாராலும் இயலாது. அதே சமயம், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு வீட்டிலும் வேலை உண்டு என்பதால், குழந்தைகளோடு செலவிட நேரம் கிடைப்பது குறைவு. ஆகவே, பணிப்பெண்களை வைத்தால், நாமில்லாத சமயம் குழந்தையைத் தனிப்பட்ட கவனத்தோடு பார்த்துக் கொள்வதோடு, வீட்டு வேலை செய்வதிலிருந்தும் நேரம் மிச்சமாகும்.

இதனால்தான், இங்கு பலரும் பகுதி-நேரப் பணிப்பெண்களை வைத்துக்கொள்ள விழைவது. ஆண்கள் உதவுவார்கள் என்றாலும், அது ‘உதவி’தான் என்பதால் பெண்களின் “பொறுப்பு” பெரியதாக ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. உயிரான குழந்தையைப் பார்த்துக் கொள்வதோடு, வீட்டு வேலைகளிலிருந்தும் விடுதலை தருவதால், பெண்கள் தம் பணிப்பெண்களை மதிப்புடனேதான் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டை விடவும் இங்கு வேலைக்குத் தகுந்த ஆள் கிடைப்பதென்பது அரிதானதால், கிடைத்திருப்பவர்களைத் தக்கவைக்கவேணும் மரியாதையாகவே நடத்தப்படுவர்.

எனினும் பெரும்பான்மையான பணிப்பெண்கள் ஃப்ரீ விஸாவில் இருப்பவர்கள் என்பதால், எந்தக் கட்டுப்பாடும் அவர்களுக்கில்லை. திடீரென காரணமேயின்றிகூட நின்றுவிடுவார்கள். எதுவும் கேட்க முடியாது. எந்த சட்டபூர்வ அக்ரிமெண்டும் கிடையாது. அவர்களின் தொலைபேசி எண் மட்டுமே நமக்கு அவர்களோடான தொடர்பு எனும்போது, திடீரென தொடர்பு அற்றுப் போவது கடினமானது அல்லவே. மேலும், யாரையும் உடனே நம்பி வீட்டில் வைத்துவிட முடியாதே. இந்தமாதிரி வேலைக்கு வருபவர்கள் வீட்டில் உள்ளவற்றைத் திருடிவிட்டு ஓடிப் போவதும், குழந்தைகளைக் காயப்படுத்துவது என்றும் எத்தனை கேள்விப்படுகிறோம்.

இப்படி தொடர்ந்து மூன்று  பேர் அடுத்தடுத்து வேலையை விட்டு நின்றுபோனதால், நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். அப்போதுதான், ஃப்ரீ விஸா என்பதால்தானே இத்தனை சிரமங்கள், அதிகச் செலவு என்றாலும், நாமே ஒருவரை நமது ஸ்பான்ஸரில் கொண்டு வருவோம் என்று முடிவு செய்தோம். அதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து, அதுபோல பணிப்பெண் விஸா எடுத்தவர்களிடம் விசாரித்தால், அனைவரிடமிருந்தும் வந்த முதல் பதில் “வேண்டாம், நீங்கள் விஸா எடுக்காதீர்கள்” என்று அட்வைஸ்! ஃபிரீ விஸா பணிப்பெண்கள் கிடைப்பதின் சிரமங்கள் குறித்துச் சொன்னால், பதில் “இவற்றைவிட அவை எவ்வளவோ பரவாயில்லை” என்று பதில்!! நாமல்லாம் சொன்னாக் கேட்டுப்போமா? பட்டாத்தானே புரியும்!!

ஊரில் ஆளைத் தேடிக் கண்டுபிடித்து, ஆயிரக்கணக்கில் செலவழித்து விஸா (இரண்டு முறை ரிஜக்ட் ஆகி, பின்) எடுத்து, கூட்டியும் வந்தாயிற்று.  ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவர் உடனே ஒரு மொபைல் வாங்கிக் கேட்டார். அமீரகத்திற்கு அவர் புதிது எனவும், அங்கு தன் உறவினர்கள் யாரும் இல்லை என்றும் சொல்லியிருந்தததால், தன் தாய் மற்றும் மகளோடு பேசுவதற்காக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.   திருநெல்வேலிக்கார பெண், ஏற்கனவே பத்து வருடங்கள் சவூதியில் அரபி வீட்டில் பணிபுரிந்திருக்கிறார் என்பதால் இங்கு பழகிக்கொள்ளப் பிரச்னையில்லை. எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது கொஞ்ச நாள்.  பிறகு அவர் ஃபோனுக்கு கணக்கில்லாத அழைப்புகள் வருவதும், நான் அலுவலகத்திலிருந்து அழைத்தால் வீட்டில் இல்லாதிருப்பதும், பிறகு ஒரு நாள் கையுங்களவுமாய் அகப்பட்டதும், போலீஸில் சொன்னதும் என... இரண்டு பதிவுகளுக்கான அளவு உண்டு சொல்வதற்கு.

உடனே அன்றே விஸா கேன்ஸல் செய்து, ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரின் விஸா புதுப்பித்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது என்பதால், எனக்கு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம்.. பெருநஷ்டம்.. ரெண்டு லட்சம் என்பது எனக்கு சிறிய தொகையல்ல. அதைவிட, எனக்கும், என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மன உளைச்சல் எவ்வளவுக்கு மதிப்பிட முடியும்? ஐந்து வயது மகனிடம் என்ன காரணம் சொல்வது? இதுகுறித்துப் பலரிடம் பேசியதிலும், படித்ததிலும், பலருக்கும் என்னைவிடக் கசப்பான அனுபவங்கள் உண்டென அறிந்துகொண்டேன்.

அத்தோடு வேலைக்காரிகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, தங்கைகள் உதவியோடு சிலகாலம் கடத்தினேன். என்றாலும், பிள்ளைகள் பள்ளிவிட்டு வீட்டில் தனியே நிற்பது (சிலமணி நேரமே என்றாலும்) என்பது, மனதளவில் அவர்களுக்கும் பாதிப்பு தரும். தனியே வீட்டில் இருப்பது எத்தனை கொடுமையானது என்று வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் உடைய என் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  எனக்கும் குற்ற உணர்வு. பொறுப்பான, அறிவான பிள்ளைகள் என்றாலும், அவர்களும் சிறுவர்கள்தானே? எப்போது என்ன செய்வார்கள் என்பதை கணிக்க முடியுமா? மேலும், சிறுவர்கள் வீட்டில் தனியே இருப்பதும் பாதுகாப்பல்லவே என்ற பயம் வேறு. என்னதான் அடிக்கொருதரம் ஃபோன் செய்துகொண்டாலும், ஆபத்து நேர்ந்தால் ஃபோன்வழியா காப்பாற்ற முடியும்?

ரெண்டு வருடம் முன்பு ஸ்டெல்லாவைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. தற்போதும் (கிட்டதட்ட 30 வருடங்கள்!!) அதே அரபியின் ஸ்பான்ஸரில்தான் இருப்பதாகவும், அதே மலையாளிக் குடும்பத்தில்தான் வேலை செய்வதாகவும், மேலும் தன் இரு மகள்களையும், மருமகன்களையும் கூட அதே ஸ்பான்ஸரின் உதவியோடு இங்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறினார்.

ன் சந்தேகம் இதுதான்: அரபிகள் கொடுமைப்படுத்துகிறார்கள என்று சொல்கிறார்கள்.  எவ்வளவுக்கு உண்மையோ.  ஆனால், எந்தக் கொடுமைகளும் செய்யாத, பணிப்பெண்களைக் குடும்பத்து அங்கத்தினர் போலப் பாவித்துப் பழகும் எங்களைப் போன்ற சக நாட்டவரை ஏன் இப்பெண்கள் ஏமாற்றிக் கைவிடுகின்றனர்? சொந்தமாக விஸா எடுக்குமளவு வசதி இல்லாதவர்கள், ஃபிரீ விஸா பணிப்பெண்களை வைத்தால், திடீர் திடீரென நின்றுவிடுவது, அல்லது இருப்பதைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது போன்றவையில் ஈடுபடுவது; அதிகச் செலவு செய்து விஸா எடுத்தால், வீட்டில் ஆள் இல்லாததைப் பயன்படுத்தி, தவறான காரியங்களில் ஈடுபடுவது, திடீரென (காரணமேயில்லாமல்) ஊருக்குப் போகணும் என அடம் பிடிப்பது, தூதரகத்தில் பொய்யான புகார் கொடுப்பது - இவையெல்லாம் ஏன்? எங்களைப் போலவே நீங்களும் குடும்பத்திற்காக வருந்தி பணம் சம்பாதிக்க வந்திருக்கிறீர்கள் என்பதாலும், உறவுகளை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதாலும், எங்களுக்கும் உங்கள் சேவை அவசியம் என்பதாலும் உங்களிடம் அன்போடு நடந்துகொண்டும் ஏன் இப்படி வஞ்சகம் செய்து எங்களை நோகடிக்கிறீர்கள்?

இவை என் கேள்விகள் மட்டுமல்ல; என்னைப் போலவே இந்தப் பிரச்னையாலும் “ஆணியே புடுங்க வேண்டாம்” என்று வீட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கானப் பெண்களின் கேள்விகளும்கூட.

Post Comment

Gகத்தாமா - 1
என் பெரியவனுக்கு இரண்டேமுக்கால் வயது ஆனதும், அதுவரை என்னுள் உறங்கிகொண்டிருந்த ’பட்டதாரி’ முழித்துக் கொள்ள, நான் இருக்கும் அபுதாபியிலேயே வேலை தேட ஆரம்பித்தேன். அதற்குரிய முன்னேற்பாடுகளாய், முதலில் மகனை ‘ப்ளே ஸ்கூலில்’ சேர்த்துவிட்டு,   மதியம் ஸ்கூல் விட்டு வந்த பின் அவனைக் கவனித்துக் கொள்ள வேலைக்கு ஒரு பெண்ணைத் தேட ஆரம்பித்தேன். தனியே மகனோடு வீட்டில் இருக்க வேண்டும் என்பதால், நம்பிக்கையான ஆள் வெண்டுமே!! அதனால், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்காமல், தெரிந்தவர்கள் மூலம் தேடிக்கொள்ள நினைத்தோம்.  இந்தியாவில் இருந்தால் யாரிடமாவது பொறுப்பைப் பகிரலாம்.  இங்கே வெளிநாட்டில் அம்மா, மாமியார், அல்லது கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று எல்லாருக்கும் பகரமாவது பணிப்பெண்தான்!!

தொடருமுன், அமீரக வீட்டுப்பணியாளர்கள் மார்க்கெட் நிலவரங்களைப் பார்ப்போம்.  அரபு நாடுகளில் பணிப்பெண்களை “Gகத்தாமா” என்பார்கள்.  இந்நாட்டு குடிமகன்களைப் போலவே, வெளிநாட்டினரும் தம் சொந்த ஸ்பான்ஸர்ஷிப்பில் வேலையாட்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடிந்த பணக்கார expats மட்டுமே வைத்துக் கொள்வார்கள். அப்படியென்ன செலவு? Non-refundable deposit மற்றும் விஸா கட்டணங்கள், விஸாவுக்கான மருத்துவப் பரிசோதனைச் செலவு என்று வருடம் ஒன்றிற்கு - 7000 திர்ஹம்கள் வரை (ரூ. 1 லடசம்) ஆகும். பணிப்பெண் இந்தியர் என்றால், இந்திய தூதரகத்தில் 10,000 திர்ஹம்கள் refundable deposit. மேலும், ஸ்பான்ஸர் செலவில் உணவு, உறைவிடம், சிம்கார்டுடன் செல்ஃபோன் ஆகியவற்றுடன் இந்தியச் சட்டப்படி அவருக்கு 1100 திர்ஹம்கள் மாதச்சம்பளமும் தரப்பட வேண்டும்.

ஏன் இத்தனை காஸ்ட்லி என்றால், அதற்குக் காரணமும் நம்மவர்கள்தான்!! அறிந்தோர், தெரிந்தோரையெல்லாம் காசு வாங்கிகிட்டோ, வாங்காமலோ Maid விஸாவில் அமீரகம் அழைத்து வருவதனால் வந்த வினை. இவர்கள் செய்யும் தவறால், கஷ்டப்படுவது அவசியத்தில் இருப்பவர்களே. இத்தனைச் செலவுகளும் செய்வதற்கு ஒன்று அவர் அரபியாக இருக்கவேண்டும்; அல்லது மிகப் பெரியப் பொறுப்பில் இருப்பவராக இருக்க வேண்டும்.  குடும்பத் தேவைகள் கருதி அவசியத் தேவைகளைக் கூட மிச்சம் பிடித்து, “ஷேரிங்” முறையில் ஒரு வீட்டின் ஒரே அறையில் பிள்ளை, குட்டிகளுடன் குடித்தனம் நடத்தும் மிடில் க்ளாஸ் குடும்பங்களே இங்கே அதிகம். அவர்கள் இத்தனைச் செலவுக்கும் எங்கே போவார்கள்? அதனால், அவர்கள் தேடுவது, “ஃப்ரீ விஸா” பணிப்பெண்களை!! அதென்ன ஃப்ரீ விஸா?

மேற்சொன்ன அத்தனைச் செலவுகளையும் செய்து ஒருவரால் (இவர் ஸ்பான்ஸர் என்று அழைக்கப்படுவார்) அழைத்து வரப்பட்ட ஒரு பணிப்பெண், அழைத்து வரப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு வேலை செய்யாமல், வெளியாட்களுக்கு வேலை செய்வதுதான் ஃப்ரீ விஸா!! இது எப்படி சாத்தியம்?  ஒன்று, அந்தப் பணிப்பெண், தம் ஸ்பான்ஸருடன்  ஒரு வாய்மொழி ஒப்பந்தம் செய்து கொள்வார், ’விஸாவுக்கானச் செலவைத்  தந்துவிடுகிறேன். ஆனால், வெளியே தனிப்பட்ட முறையில் வேலை செய்துகொள்கிறேன்’ என்று.   

இரண்டாவது முறை: மேற்சொன்ன முறையில் ஸ்பான்ஸருக்குப் பணம் தரவேண்டுமே, அந்தச் செலவைத் தவிர்க்க இந்த முறை. அதாவது, கொஞ்ச நாள் ஸ்பான்ஸர் குடும்பத்தில் சிலகாலம் வேலை செய்யவேண்டியது. பிறகு, அவர்கள் அசந்த நேரத்தில், வெளியேயுள்ள தம் நண்பர்கள் உதவியோடு வீட்டை வெட்டு வெளியேறி, வெளியே தங்கிக்கொண்டு, வேலை தேடிக்கொள்ள வேண்டியது.

சரி, ஸ்பான்ஸரைத் தவிர இன்னொருவருக்கு வேலை செய்வது சட்டப்படி தவறில்லையா? குற்றம்தான். ஆனாலும், போலிசில் பிடிபட்டால், தண்டனையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை.  அவரது ஸ்பான்ஸரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமிருந்தே, இப்பணிப்பெண்ணுக்கான டிக்கட் தொகையை வசூலிக்கும்வரை, அரசாங்கச் செலவில் ஜெயிலில் சிலநாட்கள் வைத்திருப்பார்கள். ஸ்பான்ஸர் செலவிலேயே விஸாவைக் கேன்ஸல் செய்துவிட்டு, டிக்கட்டும் வாங்கி, ராஜமரியாதையோடு - அதான் போலீஸ் காவலோடு - விமான நிலையம் கூட்டிவந்து, விமானத்தில் ஏற்றியும் விடுவார்கள்!! மேலும், இவர்களை (சட்டத்திற்குப் புறம்பாக) வேலைக்கு வைத்திருந்தார்களே அவர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம்!! ஆக, அந்தப் பணிப்பெண்ணுக்கோ ஒரு செலவுமில்லை - விஸாவும் ஃப்ரீ, டிக்கட்டும் ஃப்ரீ, இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த பணமும் கிடைச்ச மாதிரி ஆச்சு!! இங்கே வீட்டு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஏன் மிக அதிகம் என்பதன் சூட்சுமம் இதுதான்.

முதல் முறையாக அரபுநாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களில், பெரும்பாலும் அதிகப் பணிச்சுமை, சம்பளம் தராதது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே ஸ்பான்ஸர் வீட்டைவிட்டு வெளியேறுபவர். அப்படி வெளியேறினாலும், அதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் இவர்களது நோக்கம் எப்படியாவது ஊர் போய் சேர்ந்தால் போதும் என்பதாகத்தான் இருக்கும் என்பதால், பிறர் உதவியுடன் நேராகத் தம் நாட்டு தூதரகத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோதான் செல்வார்கள். இப்படி வெளியே வேலைபார்க்க முன்வருவது மிக அரிது.

ஏற்கனவே ஒரு ஸ்பான்ஸர் குடும்பத்தில் பல வருடங்கள் வேலைபார்த்து அனுபவம் பெற்றவர்கள், தம் நண்பர்கள் மூலம் வெளிமார்க்கெட் நிலவரத்தைக் கண்டு, இங்கிருந்து வெளியேறினால் நிறையச் சம்பாதிக்கலாம் என்று மனப்பால் குடித்து, வெளியேறுவதே அதிகம் நடக்கிறது. பின்னர், அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகி விடுகிறது. ஏனெனில்,  ஸ்பான்ஸரோடு இருந்த வரை, உணவு, உறைவிடம், உடை, அத்தியாவசியப் பொருட்கள், டிக்கெட், டாக்டர் செலவு எல்லாமே கிடைத்துவிடும்.  ஏன் ஃபோன் செலவுகூட பெரும்பாலும் அவர்களே தந்துவிடுவார்கள். வெளியே வந்தா, தனிக்குடித்தனம் வந்த கதையாக, வரவுக்கு மிஞ்சிய செலவு ஆகும்கிறதை பின்னர்தான் உணர்கிறார்கள்.  

சரி, இப்ப என் கதைக்கு வருவோம்.  அங்கேயிங்கே விசாரித்து, சில மாதங்களில் ஒரு (நண்பரின்) நண்பர் வீட்டில் வேலை செய்துவந்த இலங்கைத் தமிழரான ஸ்டெல்லா,  வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இவர் நான் சொன்ன முதலாம் வகை ஃப்ரீ விஸாவில் - அதாவது, ஸ்பான்ஸர் அனுமதியோடு - வெளியே வேலை செய்பவர். அவர் அமீரகம் வந்து (அப்போதே) 16 வருடங்கள் - அதுவும் ஒரே ஸ்பான்ஸரின் விஸாவில்தான் - ஆகிவிட்டது என்பது எனக்கு ஆச்சர்யத் தகவல்.

அப்படியே ஆறு வருடங்கள் என்னோடு இருந்தார். (வந்து செல்வார்).  பின்னர், என் கணவரின் பணி இட மாறுதல் காரணமாய் வேறு ஊர் சென்றபோது, என் வேலையையும் விட நேர்ந்தது. ஸ்டெல்லாவும் வேறு வேலை தேடிக்கொண்டார். பின்னர் மீண்டும் அபுதாபி வந்து, மீண்டும் வேலை+பணிப்பெண் தேடும் படலம் ஆரம்பித்தபோது, அவரைத்தான் முதலில் தொடர்பு கொண்டேன். என்னைவிட்டுப் போனதிலிருந்து, ஒரு மலையாளக் குடும்பத்தோடு இருப்பதாகவும், திடீரென அவர்களைவிட்டு வருவது முறையல்லவே என்றும் வருத்தம் தெரிவித்தார்.

பிறகு, நண்பர்களிடம் விசாரித்தும் ஆள் கிட்டாததால், பேப்பரில் விளம்பரம் கொடுத்து, (யப்பா... விளம்பரம் வெளிவந்த முணுநாளும் என் ஃபோனுக்கு ஓய்வில்லை!!) அதன்மூலம் ஒரே வருடத்தில் மூன்று பேர் அமைந்தும், மாறியும் விட்டார்கள்.மூவருமே ஃப்ரீ விஸாக்காரர்கள்தான்.

பிறகு என்ன செய்தேன்? நாளை தொடரும்....
Gகத்தாமா - 2

Post Comment

பயணங்கள்
சமீபத்தில் என் கல்லூரித் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தபோது,  பிள்ளைகளின் படிப்பு, பள்ளி பற்றிப் பேச்சு வந்தது. (இரண்டு பேர் சந்தித்தால், வால் ஸ்ட்ரீட், ஒபாமா, கன்கார்டியா, க்ரீஸ்& யூரோன்னு ‘வெட்டிப்பேச்சு’ பேசுறது ஆம்பளைங்கதான், பெண்கள் இல்லை,  தெரிஞ்சுக்கோங்க!!)

ம்.. என்ன சொல்லிட்டிருந்தேன், ஆங்.. பள்ளிக்கூடம் பத்தி பேசிகிட்டிருந்தப்போ, ஸ்கூல் வேன் டிரைவர்கிட்டருந்து எஸ்.எம்.எஸ். வந்துதுன்னு சொன்னா. வேன் இன்னிக்கு வராதுன்னு சொல்றதுக்கான்னு கேட்டேன். இல்லையாம், வேன் ஃபீஸ் 1000 ரூபாவை,இந்த மாசத்துலர்ந்து 1100 ரூவா ஆக்கியிருக்குன்னு மெஸேஜாம். ஃபோன் பண்ணாலோ, நேரில் சொன்னாலோ,  சண்டை போடுவோம்; பேரம் பேசுவோம். அதெல்லாம் எதுக்குன்னு, இப்ப எல்லாமே மெஸேஜ்லதான்! என்று சொன்னாள். 5 கிமீ தூரத்துல இருக்க ஸ்கூலுக்கு ஆயிரத்து நூறான்னு நான் திகைச்சு... ம்ம்.. உடனே உங்களுக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிருக்குமே - என்னைப் போல!!

திருநெல்வேலியில் கிராமத்துலருந்து பாளையங்கோட்டை பள்ளிக்கு கிட்டத்தட்ட 5 கி.மீ. தூரம்.  பஸ்ல போனா அஞ்சு நிமிஷந்தான். ஆனா, பஸ் ஸ்டாண்டுக்கு 15 நிமிஷம் நடக்கணும். அதனால, புள்ளை கஷ்டப்படக்கூடாதேன்னு, வாப்பா (சொன்னதால் என் உம்மா) வண்டி ஏற்பாடு பண்ணாங்க. என்னா வண்டி? “மாட்டு வண்டி”!! சிரிக்குமுன், அது ”லூனா மொபட்” காலம் என்பதை நினைவில் கொள்க. (இப்போ வெளிநாட்டு டூரிஸ்டுகளை மாட்டு வண்டியில ஊர்சுத்தி காமிக்கிறாங்களாம்!!)

http://arunachalagrace.blogspot.com

ஒரு எட்டு மணிக்குக் கிளம்பினா, ஆடி ஓடி ஒன்பது மணிக்கு ஸ்கூல் வாசல்ல இறங்கலாம். போகும்போதும், வரும்போதும் வண்டியின் பின்சீட்டில உக்காந்து காலைத் தொங்கப் போட்டுகிட்டு வர்றதுக்கு அடியே நடக்கும். அதில மூணுபேர்தான் உக்காரமுடியும். அதுவும் பெரிய பொண்ணுங்களுக்குத்தான் முன்னுரிமை. அஞ்சாங்கிளாஸ் வரை உள்ள சின்ன பிள்ளைகள் உள்ளுக்குதான் கூட்டத்தில் நசுங்கிக் கொண்டு இருக்கணும். அதுவும் உள்ளுக்கு உட்காரும்போது சம்மணம் போட்டெல்லாம் உக்கார முடியாது. வண்டி ஆடி ஆடி போகும்போதெல்லாம் தலை நங்கென்று பக்கவாட்டுக் கூரையில் உள்ள கம்பில் இடிக்கும். ரொம்ப வலிக்கும். இட நெருக்கடி வேறு. இப்ப ஆட்டோவில் அடைப்பதுபோல அப்போ மாட்டு வண்டியில்!!

முன்பக்கம் வண்டிக்காரர் பக்கத்தில் உக்கார ஆண்பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதி. அந்த இருக்கைக்கு ஒரு பெயர் உண்டு, மறந்துவிட்டது.  சில சமயங்களில் சண்டை போட்டோ அல்லது யாராவது வராத அன்றோ எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். முன் பக்கம் உட்காருவது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். பித்தளையால் செய்யப்பட்ட இருக்கை என்பதால் வழுக்கும். மேலும், மாடு தன் வாலைச் சுழட்டி  வீசும்போது, நம் காலில் படும்.  அருவெறுப்பாக இருக்கும். ஆனாலும் உள்ளே உள்ள நெருக்குதலைக் காட்டிலும் இது சுகம்.  சில சமயம் வண்டிக்காரர் கையிலிருந்து சாட்டையை வாங்கி, ஓட்டி வருவதாய் பாவனை செய்வதும் உண்டு. சாட்டை மட்டும்தான் நம் கையில்; மாட்டோடு கம்யூனிகேஷன் & கண்ட்ரோல் அவர் கையில்தான்!

ஸ்கூல் ட்ரிப் அடிக்கும் மாட்டு வண்டிகளிடையே போட்டியும் சில சமயம் நடக்கும். பிள்ளைகள்  ’வண்டிக்காரரே, சீக்கிரம் போங்க’ என்று  கத்த, வண்டிக்காரர் மாட்டை விரட்ட... செம ஜாலி!! (இதுல ஒரு டிராபேக் என்னன்னா, வண்டி வேகமாப் போனா, உள்ளே இருக்கவங்களுக்குத் தலைல இன்னும் அதிகம் அடிபடும்!!) ஆனால், சில சமயம் வண்டிக்காரர் போட்டிக்கு ஒத்துக் கொள்ள மாட்டார். “சும்மாவே மாடு சுணங்கி சுணங்கிப் போவுது. இப்பம் வெரட்டுனா படுத்துக்கிடும். சும்மாருங்க பிள்ளையளா”ன்னு சொல்லிடுவார்.

ஏழாங்கிளாஸ் வரை அதில்தான். எட்டாங்கிளாஸ் வரும்போது, டீனேஜ் ஆகிவிட்டதால், மாட்டு வண்டியில் போவது கேவலமாகத் தெரிந்தது. ஆனால், மறுப்பெல்லாம் சொல்ல முடியாது. அதிர்ஷடவசமாக, அப்போது தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தில் மனம் றெக்கை கட்டிப் பறந்தது.
கிட்டதட்ட இப்படித்தான் அந்த வேன் இருந்துச்சு!

ஆனால், அந்த வேனைப் பார்த்த முதல் நாள் அந்த சந்தோஷம் பொட்டென்று போய்விட்டது. இதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லை என்றிருந்தது. ஒரு சின்ன வேன். முன்பக்கம் மூடிய டிரைவர் கேபின்; பின்பக்கம் லக்கேஜ் சேம்பர்போல ஒரு பகுதி; அதில் இருபுறமும் சீட் போட்டிருந்தது. நல்லவேளையாய், பிறகு வாடகை கட்டுப் படியாகாமல் (ஆளே சேரலை) ரெண்டு மாசத்தில் அவரே நிறுத்திவிட, (எப்படியோ தைரியம் வந்து) மறுபடி மாட்டு வண்டியில் போக மறுத்ததால் ஆட்டோ பயணம் ஆரம்பித்தது. 


ஆட்டோவிலும் நெருக்கம், இடிபுடிதான்.  மேலும் மடியில் ஒரு வாண்டையும் உக்கார வச்சுக்கணும். அந்த வாண்டு நம்ம கால்ல உக்காந்துகிட்டுதான் யார்கிட்டயாவது ‘ரஜினி ஃபைட்’ போடும்!! கால் கிட்டதட்ட உடைஞ்சிடும்.  ஆனாலும், பள்ளிக்கு ஆட்டோவில் போய் இறங்குவது கொஞ்சம் ‘கௌரவமாக’ இருக்கும் என்பதால் அதையெல்லாம் தாங்கிக் கொண்டேன். அப்போதான் தமிழ்நாட்டில் ஆட்டோக்கள் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. அதனால், எங்கள் வீட்டிலேயே ஸ்கூல் ட்ரிப்புக்கு 4 டிக்கட்; மேலும், கடைகண்ணி போக வர, டாக்டரிடம் போக, உறவுகள் வீட்டுக்கு போக என்று ஆட்டோவுக்கு என்று தனி தொகை செலவாக ஆரம்பித்தது. (ஹி.. ஹி..  அப்பல்லாம் நாந்தான் எங்க வீட்டுக் கணக்கப்பிள்ளை!!)

இவ்ளோ தொகையை வெளியே ஏதோ ஒரு ஆட்டோக்காரனுக்குக் கொடுக்கிறதுக்கு, நாமே ஏன் சொந்தமா ஆட்டோ வாங்கக் கூடாதுன்னு “பிஸினஸ் ப்ளான்” போட்டு வீட்டில் சொந்தமா ஆட்டோ வாங்க, அதற்கு கணக்கு வழக்கெல்லாம் பார்ப்பதும் என் தலையில் விழுந்தது.

அப்ப நானும் காலேஜ் சேந்தாச்சு. மூணு தங்கச்சிக்கும் ஸ்கூலுக்கும் ஆட்டோ; எனக்கு காலேஜுக்கும் ஆட்டோதான். ரெண்டும் எதிரெதிர் திசையில்!! பள்ளியைப் போலவே, கல்லூரிக்கும் ஆட்டோவில் போவது கௌரவமாக இருக்கும் என்று நம்ம்ம்பி, கெத்தாகப் போன எனக்கு அதிர்ச்சி!! என் ஆட்டோ சீனியர்களிடையே மட்டுமல்லாமல், என் நண்பர்களிடமும் நகைச்சுவைப் பொருள் ஆனது. அன்போடு தந்த பட்டங்கள் என் இமேஜை “சொர்ணாக்கா” ரேஞ்சுக்கு “உயர்த்தியது”. (அப்பல்லாம் “ஆட்டோ அனுப்பிடுவாங்க” என்ற டயலாக் புழக்கத்தில் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.)

ஆனாலும், இதுக்கெல்லாம் பயந்து, ஆட்டோவில் வருவதை விடவில்லை. மேலும், ஊரைவிட்டுத் தள்ளி இருக்கும் எங்க காலேஜிலிருந்து பஸ் வசதி மிகவும் குறைவு. ரெண்டு பஸ்ஸைப் பிடிச்சு வீடு போய் சேரணும்னா, ரெண்டு மணி நேரமாவது ஆகிடும். அதனால், என் ஆட்டோ, எனக்கு மட்டுமில்லாமல் தோழிகள் பலருக்கும் உதவியிருந்திருக்கு - முக்கியமா தேர்வுகள் சமயத்துல. 

இதுக்கிடையில, நம்ம ஆட்டோதானேன்னு,  எங்க வீட்ல சொந்த உபயோகத்துக்கு ஆட்டோவைப் பயன்படுத்துவதும் அதிகமாச்சு. அதோட, உறவுகளும் எங்க ஆட்டோவையேக் கூப்பிட ஆரம்பிச்சாங்க.  (ஆனா, சொந்தக்காரங்ககிட்ட கறாரா இருக்க முடியாதில்ல!) இப்படியே வாடகை ஓட்டத்தைவிட, ஓன் யூஸ் அதிகமானது.

அத்தோட, மத்த ஆட்டோவெல்லாம் ஜம்முனு இருக்கும்போது, எங்க ஆட்டோ மட்டும் அடிக்கடி வொர்க் ஷாப்ல நிக்கும்.  அப்படி, இப்படின்னு, கடைசியில் நஷ்டமே மிஞ்சியது. அப்புறம் எங்க ஆட்டோ டிரைவர் சொந்தமா ஆட்டோ வாங்கிட்டதால, எங்க ஆட்டோவை வித்துட்டு, அவர் ஆட்டோவிலயே வாடகைக்குப் போக ஆரம்பிச்சோம். இப்பவும் இந்தியாபோனா ஊர்சுத்துறது அந்த ஆட்டோவிலத்தான்.

தலைப்பை ”மாட்டு வண்டியிலிருந்து  A380வரை” ன்னு வச்சிருக்கலாமோ?

Post Comment

நம்மை நாமல்லாது வேறாரறிவார்?
 
நாம் உண்ணும் உணவு, நமது பழக்க வழக்கங்கள், வாழும் சுற்றுப் புறங்கள் ஆகியவற்றில் கேன்ஸர் தரக்கூடிய சூழ்நிலைகள் பல உண்டு. (இவை குறித்துச் சென்ற பதிவில்  பார்த்தோம்). அவற்றுள், எந்த வகையிலும் நான் வரவில்லை என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாதபடிக்கு, ஒன்றில்லாவிட்டால், ஒன்றில் எல்லாரும் அடங்கிவிடத்தான் செய்கிறோம்.  உணவும், பழக்க வழக்கங்களும் நல்லதாகவே இருப்பினும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களாலும் பாதிப்புகள் வருவதுண்டு.

நம் உடலில் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கண்டு அல்லது உணர்ந்து அறியும்போதுதான் ஒரு உடல்நலக்குறைவு நமக்கு ஏற்பட்டிருப்பதை தெரிய முடிகிறது. இது எல்லா நோய்க்கும் பொருந்தும். நோய்க்கான உரிய சிகிச்சையைப் பெறுவதற்கு இந்த “அறிகுறிகளே” முதல்படி.  அந்த வகையில் இந்த அறிகுறிகள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வரம் என்றுதான் சொல்லவேண்டும். இவை இல்லாவிட்டால், நோய் வந்திருப்பதை அறியாமலே இருந்துவிட நேரிடுமே? அறியாமல் இருந்துவிட்டால் நோயின் விளைவுகள் முற்றிய பின்புதானே தெரியவரும்! எனவே, நோயின் அறிகுறிகள் நமக்கு வரமே!!

இங்கு, கேன்ஸருக்கான அறிகுறிகள், அவற்றின் தன்மைகள், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்ப்போம்.

நோய்க்கான “அறிகுறிகள்” (Symptoms) என்றால் என்ன?

எந்தவொரு நோய்க்கும் அதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் எனப்படும் Symptoms  என்று ஒன்று இருக்கும்: அது வலியாகவோ, அல்லது புண்ணாகவோ, இருமல், காய்ச்சல் என்று ஏதேனும் ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு மாற்றம் நம் உடலில் காணப்படும்.  அதே சமயம் அந்த அறிகுறி, குறிப்பிட்ட ஒரு நோய்க்கான அறிகுறியாக மட்டுமல்லாமல், வேறு சில நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

உதாரணமாக, ஒரு குழந்தைக்கு உடல்முழுதும் தோலில் தடிப்புகள் காணப்பட்டால், அது அம்மை, தோல் தொற்றுநோய், உணவு அலர்ஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம். உடன் காணப்படும் வேறு அறிகுறிகள் மற்றும் தொடர்ந்த பரிசோதனைகளின் மூலம் இது எதனால் ஏற்பட்டது என்பது மருத்துவரால் கண்டறியப்படும்.

அறிகுறிகளைக் கண்டறிவது ஏன் அவசியம்?

ஒருவருக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவு எளிது அதைக் குணப்படுத்துவது. 
கேன்ஸருக்கு மட்டுமல்லாது, எல்லா நோய்களையுமே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்தான் சிறந்த மருத்துவம் தந்து, விரைவில் குணப்படுத்த முடியும். இதனால், உடல் நலம் சிதைவதிலிருந்தும், பல்வேறு இழப்புகள் (காலம், பணம், உடல் உறுப்புகள் உட்பட) ஏற்படுவதிலிருந்தும் தப்பிக்கலாம்.

மேலும், கேன்ஸரை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்தான் உரிய மருத்துவம் செய்து முழுமையாக குணப்படுத்த முடியும்.  அதன்மூலம் வாழும் காலத்தையும் அதிகரிக்க முடியும்.

ஆகவே, கேன்ஸருக்கான அறிகுறிகள் என்று சந்தேகிக்கப்படுவன எவையெவை என்று அறிந்துகொள்வதோடு, அவற்றை அலட்சியப்படுத்தாமல், சுய மருத்துவத்தை நம்பியிராமல், தகுந்த தேர்ச்சி பெற்ற மருத்துவரிடம் முறையான சிகிச்சைகளை, அவசியமான கால அளவு எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

தற்காப்பு:

கேன்ஸருக்கான அறிகுறிகளைப் பார்ப்பதற்குமுன், (முந்தைய பதிவில் பார்த்ததுபோல) ஒருவரது வாழ்க்கை முறையில் கேன்ஸர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா - அதாவது கேன்ஸர் ஏற்படுத்தும் புறக் காரணிகளால் சூழப்பட்டுள்ளாரா என்பதை சுய ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக, சிகரெட் அதிகம் புகைப்பவர்கள் என்றால் கேன்ஸர் வரும் வாய்ப்பு அதிகம் என்பதை உணரவேண்டும். அல்லது, ஆஸ்பெஸ்டாஸ் ஆலை, கதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களும் கேன்ஸர் அறிகுறிகள் எவையெவை என்றறிந்து இருப்பது அவசியம். அப்படியான அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காது அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
 
கேன்ஸருக்கான அறிகுறிகள்:
கேன்ஸரின் அறிகுறிகளின் தன்மை என்னவென்றால், அவை கேன்ஸருக்கான தனிப்பட்ட அறிகுறிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பதில்லை. மற்ற நோய்களுக்கான அறிகுறியே சில சமயங்களில் இதற்குமானதாக இருப்பதால், அந்த நோய்க்கான பரிசோதனையின்போது பெரும்பாலும் கேன்ஸர் வந்திருப்பது  “தற்செயலாகத்தான்” கண்டறியப்படுகிறது.

கேன்ஸர் என்ற லத்தீன் வார்த்தைக்கு “நண்டு” என்று பொருள். கேன்ஸர் கட்டிகள் பார்ப்பதற்கு நண்டு தன் கால்களால் மணலில் பரப்பி நிற்பதைப் போன்ற தோற்றம் தருவதாலேயே அந்தப் பெயர் ஏற்பட்டது.

எனவே இந்த அறிகுறிகள், கேன்ஸர் கட்டியின் வகை, வந்துள்ள உடல் பகுதி, ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.   இந்தக் கட்டிகள் வளரும்போது, அருகிலுள்ள இரத்தக் குழாய்கள், நரம்புகள், உடலுறுப்புகள் ஆகியவற்றின்மீது தரும் அழுத்தமே இவற்றின் அறிகுறிகளைத் தீர்மானிக்கின்றன.

ஒருவேளை, அந்தக் கட்டிகளின் அருகில் முக்கிய உறுப்புகள் ஏதும் இல்லாதிருந்தால், அதன் தாக்கம் தெரியுமளவு வளரும்போதுதான் பாதிப்புகள் ஏற்படும்.


பொதுவான முக்கிய அறிகுறிகள்:

கேன்ஸர் கட்டிகள், உடலின் சக்தியை உறிஞ்சி விடுகின்றன. அல்லது மனிதர்கள் உண்ணும் உணவு சக்தியாக உருமாறுவதைத் தாக்குகின்றன. மேலும், மனித உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தைத் தடுமாற வைக்கின்றன. இதனால், கேன்ஸர் வந்தவர்களுக்கு காய்ச்சல்,  உடல் அசதி, உடல் எடை குறைதல் ஆகியவை பொதுவாகக் காணப்படும்.

இவை முக்கிய அறிகுறிகள் என்றாலும், இவை யாருக்கும் பொதுவாகக் காணப்படும் உடல்நலக் குறைவுகள் என்பதால் பலரும் இதைக் கவனிப்பதில்லை.  தாமாகவே மருத்துவம் செய்துகொள்கின்றனர். முறையான மருந்துகள் உட்கொண்ட பின்னரும், மீண்டும் மீண்டும் இவை ஏற்பட்டால், தகுந்த மருத்துவரிடம் பரிசோதித்தல் அத்தியாவசியமாகும்.

கவனிக்கத் தவறும் அறிகுறிகள்:

ஏற்கனவே சொன்னதுபோல, புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்ற சாதாரண உடல் வருத்தங்களுக்கான அடையாளங்களை ஒத்து இருப்பதால், இவை கவனியாமல் விடப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம். எனினும், ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும்: இந்த அடையாளங்கள் ஒருவருக்குக் காணப்பட்டால், அது கேன்ஸர்தான் என்று தீர்மானித்துவிடவேண்டியதில்லை. உண்மையாகவே அவை வேறு உடல்நலக்குறைவுகளாலும் ஏற்பட்டிருக்கலாம். அதற்குரிய சிகிச்சைகள் எடுத்துக் கொண்டும், தீராமல் மீண்டும் மீண்டும் வந்தால்தான் சந்தேகம் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு தகுதியான மருத்துவரால் மட்டுமே அறிகுறிகளின் தன்மையை இனங்காண முடியும் என்பதால், சுய மருத்துவத்தையே எப்போதும் நம்பியிராமல் சிகிச்சை எடுப்பதும் அவசியம்!!

                                 

கீழேயுள்ள அறிகுறிகள் அனைத்துமே ஆண், பெண் இருவருக்கும் பொதுவானவை.
 • ஆறாத புண்கள்: தோல், வாய், கால், என்று எந்தப் பகுதியானாலும் ஆறாத புண்கள்

 •  இரத்தப்போக்கு: சளி, சிறுநீர், மலம் இவற்றோடு இரத்தம் போவது. மார்பக முலையில் இருந்து இரத்தம் கலந்த கசிவு, மூக்கிலிலிருந்து இரத்தக் கசிவு.

 • தோலில் ஏற்படும் மாற்றங்கள், தீரா அரிப்பு, தோல் மஞ்சள் அல்லது செந்நிறமாதல் - இவை முகம், கை, கால்களில் மட்டுமல்லாமல், உடலின் எப்பகுதியிலும்.
 •  மச்சங்கள் உருமாறுவது, நிறம் மாறுவது


 •  தலைவலி, முதுகுவலி 

 •  வாய் அல்லது நாக்கில் வெள்ளைநிற படலங்கள்

 •  தொல்லைப்படுத்தும் இருமல் அல்லது குரல் கரகரப்பாக மாற்றமடைவது

 •  அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்று வலி, உணவு விழுங்க சிரமம்

 •  சிறுநீர், மலம் கழிப்பதில் அடிக்கடி மாற்றங்கள்

 •  கட்டிகள் -   கழுத்து, அக்குள், மார்பகம் மட்டுமல்லாமல் உடலில் எப்பகுதியிலும் தோலின் அடிப்பகுதியில் தொட்டால் உணரக்கூடிய வகையிலான கட்டிகள்

 •  மார்பக முலைகளில் திடீர் மாற்றங்கள் - உள்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் போன்றவை, திரவக்கசிவுகள்

 •  ஆண்கள்: விதைப்பைகளில் வலியில்லாத கட்டி தென்படுதல் அல்லது வீக்கம் அல்லது அளவில் மாற்றம்


பெண்களுக்கு:

மாதவிலக்கல்லாத நாட்களிலோ,  உடலுறவுக்குப் பின்னரோ இரத்தக்கசிவு இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.  முக்கியமாக, மெனோபாஸ் காலங்களில் இருக்கும் பெண்கள், வழக்கமல்லாத நாட்களில் இரத்தப்போக்கு இருந்தால், இது மெனோபாஸின் விளைவு என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.

ஆண்களுக்கு:

* மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கானது என்று நினைத்து, அதற்கான அறிகுறிகளை ஆண்கள் அலட்சியம் செய்துவிடுகின்றனர். ஆனால், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியக்கூறுகள் உண்டு  என்பதை நினைவில் கொள்ள
வேண்டும்.

குடும்பத்தில் பெண்கள் யாருக்கேனும் மார்பகப் புற்று வந்திருந்தால், ஆண்களை அது தாக்காது என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், அக்குடும்பத்து ஆண்களுக்கு, மார்பகப் புற்றோ அல்லது வேறு கேன்ஸரோ வரும் வாய்ப்பு உண்டு என்பதால்,  கவனித்துச் செயல்படுதல் அவசியம்.

மேலும், மார்பக வளர்ச்சிக்குக் காரணமாக ‘எஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் இன்று பல்வேறு உணவு மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களிலும் காணப்படும் வேதிப்பொருட்களால் தூண்டப்படுவதால் ஆண்களுக்கும் மார்பகப் புற்று வருவது அரிதானதாக இல்லை இப்போது.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அறிகுறிகளைக் கண்டு, ”சிறிய உடல்நலக்குறைவுக்கான அவஸ்தைகளாகத் தோன்றும் இவைகளுக்கெல்லாம் நான் இனி பயப்பட வேண்டுமா?”  என்று எல்லாருக்குமே மனதில் ஒரு குழப்பம் வரலாம்.  முன்பே சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:  கேன்ஸருக்கான அறிகுறிகள் தனிப்பட்டவை அல்ல. அவை வேறு நோயின் அறிகுறியாகவே இருக்கக்கூடும். அல்லது கேன்ஸருக்கானதாகவும் இருக்கலாம். மேலும், கேன்ஸர் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படவேண்டியது மிக அவசியம். ஆகவே எச்சரிக்கை கொள்வோம் எப்போதும். நம் உடலை, அதன் இயல்பை, தன்மையை நாமே நன்றாக அறிவோம். அதில் வரும் மாற்றங்களைச் சரியாக அவதானித்து வந்தாலே தீர்வுகள் கண்டுவிடலாம்.

Ref:

1. http://www.skpkaruna.com/?p=191
2. http://www.cancer.org/Cancer/CancerBasics/signs-and-symptoms-of-cancer
3. http://cancerhelp.cancerresearchuk.org/about-cancer/causes-symptoms/possible-symptoms-of-cancer
4. http://www.koodal.com/health/interview_guide.asp?id=131
5. http://www.emedicinehealth.com/cancer_symptoms/page2_em.htm
6. http://www.webmd.com/cancer/features/15-cancer-symptoms-women-ignore
7. http://www.webmd.com/cancer/features/15-cancer-symptoms-men-ignore
8. http://www.webmd.com/breast-cancer/tc/breast-cancer-in-men-male-breast-cancer-topic-overview
9. http://www.cancer.gov/cancertopics/understandingcancer/cancer

Post Comment