Pages

க்ரூப் ஸ்டடி!!
ள்ளி, கல்லூரியில் படிக்கும்போது வகுப்புகளில் படித்த நாட்களைவிட, பரீட்சை காலங்களில் தோழிகளோடு சேர்ந்து “க்ரூப் ஸ்டடி” செய்த நாட்கள்தான் இனிமையானவை!! யாராவது ஒருவர் வீட்டில், கூட்டமாகச் சேர்ந்து,  படிக்கிறோம் என்ற பெயரில் கூத்தடித்து... இடையிடையே கொஞ்சம் படிக்கவும் செய்து....  இதெல்லாம் தெரியாத அம்மாக்கள் “பிள்ளைங்க என்னமா படிக்குது..” என்று கவலைப்பட்டு அவ்வப்போது பஃப்ஸ், வடை முதல் கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய் வரை படைத்து, டீயும் போட்டுக் கொடுக்க அதைச் சாப்பிடுவதற்கென்று தனியாக ப்ரேக்குக்கு நடுவிலேயே ஒரு பிரேக் எடுத்து....  மிக மிக இனிய நாட்கள்!!  

அந்த “கம்பைண்ட் ஸ்டடி” சமயங்களில், நமக்குப் புரியாத பாடப்பகுதி மற்றவர்களுக்கும் புரியவில்லை என்பதில் சந்தோஷம் அடைவதும்; மற்றவர்கள் எல்லாம் ஏற்கனவே படித்து முடித்திருப்பார்களோ என்று கவலைப் பட்டுக் கொண்ட நேரத்தில் யாரும் படிக்க ஆரம்பிக்கக் கூட இல்லை என்று நல்ல சேதி சொல்லும்போது சற்று நிம்மதி கொள்வதும்..... அதெல்லாம் ஒரு காலம்....

கஷ்டமான ஒரு பாடத்தை “அறிவாளியான” ஒரு தோழி சொல்லிக் கொடுக்க முன்வரும்போது, அவளைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவளுக்குத் தெரிந்ததையும் தெரியாமல் ஆக்கி, மண்டையைக் குழப்பி “சேது” லெவலுக்கு ஆக்கிவிட... சொல்லிக் கொடுக்க வந்தவளைக் கெடுத்ததற்காக மற்றவர்கள் நம்மை திட்ட....  ”புரியாமத்தானேப்பா கேட்டேன்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கோண்டு பரிதாபமாகப் பதில் சொல்வதும்.. அடடா... அடடா....
 
பள்ளி - கல்லூரி நாட்களைவிட அதிகமாக நினைவு கூறுவது இந்நாட்களைத்தான்!! அந்த நாட்களெல்லாம் இனி வரவே வாய்ப்பில்லை என்று ஆசைகளைப் பரணில் போட்டு வைத்திருந்த சமயத்தில்தான்.... நான் மறுபடியும் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன்... 

டந்த இரு வருடங்களாக குர் ஆன் விளக்க வகுப்புகளுக்குச் செல்கிறேன். ஆரம்பத்தில் போய்த்தான் பார்ப்போமே என்று போன நான், இன்று ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆர்வத்தோடு செல்கிறேன். முன்பு போல, கல்லூரி போன்ற அட்மாஸ்ஃபியர் தரும் ஆனந்தம், ஆனால் கல்லூரிப் பாடம் போல வருடாந்திர பரீட்சைக்காக மட்டும் படிப்பதாக அல்லாமல்,  இப்போது படிக்கின்ற பாடத்தில் கிடைக்கும் புதிய  கண்ணோட்டங்களும், விளக்கங்களும், அறிவை விசாலமாக்குவதோடு அன்றாட வாழ்க்கைக்கும் பயன்படுகின்றன என்பதால்  வகுப்புக்குத் தவறாமல் செல்லும் உந்துதலைத் தருகிறது.
 
இந்த வகுப்புகள் தரும் உற்சாகமும் புதிது. அன்று பொறுப்புகள் ஏதுமில்லா இளவயது. இன்றோ காலையில் வகுப்புக்கு வருமுன் அன்றைய வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து, குழந்தைகளின் பராமரிப்புக்கும் ஏற்பாடுகள் செய்துகொண்டு, ”வீட்டுப் பாடங்களை”யும் செய்துவிட்டு பரபரப்போடு வகுப்புக்கு வரும் அனுபவமும் புதிது. 
 
ஓரிரண்டு வகுப்புகளுக்குத் தொடர்ந்து லேட்டாக வந்தால், “அட்டெண்டஸ் கட் செஞ்சிடுவேன்”, “ஃபைன் கட்டு” “அப்பாவைக் கூட்டிட்டு வா” என்ற பயமுறுத்தல்கள் இல்லாமல், நாம் இழக்கும் பாடங்களைச் சுட்டிக் காட்டி, அவற்றைத் தவற விடுவதன் பாதிப்பைச் சொல்வது, அடுத்த வகுப்புக்குச் சீக்கிரம் செல்ல வைத்துவிடுகிறது. வீட்டுப் பாடத்தை, “உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம்” என்று சொல்லிவிடுவதால் செய்யாமல் போவதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. (இஸ்லாத்தில் அமானிதம் காப்பது - ஒப்படைக்கப்பட்ட பொருள்/ வாக்கு - காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமை)


ப்படியாகப் போகும் படிப்பில், பரீட்சை என்று ஒன்று வரும்போதுதான் சற்று கலக்கம் வரும். அதைத் தவிர்க்கத்தான் நாங்கள் பயன்படுத்தும் யுத்தி, “கம்பைண்ட் ஸ்டடி”!! ஆனால், கல்லூரி கால கம்பைண்ட் ஸ்டடிக்கும் இப்போதைய கம்பைண்ட் ஸ்டடிக்கும் நிறைய வித்தியாசங்கள். அப்போது எல்லாரும் ஒரே வயதினராகத்தான் இருப்போம். இப்போதோ, 20+, 30+, 40+, 50+ என்று பல ஏஜ் குரூப்புகளில் மாணவிகள்!! ஒரே வயதில் படித்தாலே களை கட்டும்; இப்போது கதம்பமாகக் கலந்து படிப்பதால், இன்னும் செம ரகளையாக இருக்கிறது!!
 
எந்த அளவுக்கு என்றால், முதல் பரீட்சையின்போது மூன்று பேரோடு தொடங்கிய க்ரூப் ஸ்டடி, மூன்றாவது பரீட்சையில் ஆறு பேர் ஆகி, தற்போது “அட்வான்ஸ்ட் டெக்னாலஜி”  உதவியால், ஸ்கைப்பிலும் ஒருவர் இணைய.... ஆஹா... ஓஹோதான்....
 
கல்லூரி கால க்ரூப்  ஸ்டடிக்கும், இப்போதைய கூட்டுப் பிரார்த்தனைக்கும்.. ச்சே... (இதுக்குத்தான் தமிழ்ல எழுதுறது இல்லை, ஆங்கிலத்திலேயே சொல்லிட்டுப் போறேன்... ) க்ரூப் ஸ்டடிக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா... முன்பு விளையாட்டுப் பேச்சில் நிறைய நேரம் போகும். இப்போதோ, அடுத்தடுத்த கடமைகள் காத்திருப்பதால், அதிக நேரம் - நாட்கள் ஒதுக்க இயலாமையால் - நேரத்தை வீணாக்காமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிறைய பாடங்களைப் படித்துவிட வேண்டுமென்ற முயற்சி எல்லாரிடமுமே இருக்கிறது.
 
தப்பித் தவறி அப்படி யாரேனும் ஏதேனும் கதைகள் பேச ஆரம்பித்தால், மீதி அனைவரும் சேர்ந்து அவரை சுற்றி வளைத்து “ஏய்... “ என சவுண்டு விட்டு மிரட்டும் அபாயத்தால், யாரும் கோட்டைத் தாண்டிப் போக முயற்சிப்பதே இல்லை. என்னைப் பொறுத்த வரை, இதையெல்லாம்விட  பெரும் சோகம் என்னன்னா, இடையிடையே நொறுக்குத் தீனி - பண்டங்கள் - டீ - காஃபி வேணும்னா நாமளே போட்டுக்க வேண்டியிருப்பதுதான்!!

இப்படியாகப் படித்துத் தயாரான பின்னும், பரீட்சைக்கு முந்திய நாள் இடைவிடாமல் ஃபோன் கால்கள் வருவதும் போவதுமாயிருக்க, “எக்ஸாமுக்கு முந்தின நாள்தான் உங்களுக்கெல்லாம் டவுட் வருமா?” என்ற அவனுக்கான என் டயலாக்கை, என்னை நோக்கி என் சின்னவன் கேட்டே விட்டான்!!! என்ன செய்ய.... வழிந்து கொண்டேன்...  பரீட்சை முடிந்து வந்ததும்  ”உங்களுக்கெல்லாம் Open House ஏன் வைக்க மாட்டேன்கிறாங்க?”  என்று  கேட்கவும் செய்தான். பழி வாங்க முடியலையே என்ற கவலை!!
 
ரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் வரும் இயந்திரத்தனமான வாழ்க்கை சிலருக்கு போரடித்துப் போகும்போது, அதிலிருந்து மீள, அவரவருக்கு ஆர்வமுள்ள ஒன்றைக் கற்றுக் கொள்வது - கற்றுத் தருவது சிறந்த வழி. சிலர் பணம் சம்பாதிப்பது மட்டுமே உற்சாகம் தரும், ஆகவே வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அதைவிட,  உங்களை இளமைக்குத் திரும்ப வைக்கக் கூடிய ”கற்றலே” சிறந்த வழி.
 
ஏனெனில், நம்மால் இனி புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதெல்லாம்  முடியாத காரியம் என்ற எண்ணம் ஊறியிருக்கும்போது, அதை மீறி புதிதாக ஒன்றைக் கற்று, அதன்வழி மறைந்துள்ள நம் திறமை வெளிப்படும்போது, கிடைக்கும் உற்சாகம் தனி!! அது மட்டுமல்ல, நம் தன்னம்பிக்கையையும் வலுப்படுத்தி, வாழ்க்கையை "Refresh" செய்து விடுகிறது!!

Post Comment

நாற்பதில் நாய்க் குணம் ஏன்?
நாற்பதில் நாய்க் குணம்” என்றொரு பழமொழி(!!!) உண்டு!! நாற்பது வயதில் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், ஒருவரின் குணநலன்களில் வரும் மாற்றங்களைக் குறிக்க இவ்வாறு கூறுவதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால், இப்பழமொழியின் சரியான பொருள் வேறு. ஒரு நாய் தூங்கும்போதுகூட விழிப்போடு இருக்கும். மனிதர்களும், இதுவரை எப்படி இருந்தாலும், நாற்பது வயது முதல்  அதிகபட்ச விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையே இப்பழமொழி வலியுறுத்துகிறது என்ற விளக்கத்தை ஒரு தளத்தில் கண்டபோது வியப்பு மேலிட்டது. உண்மைதானே!
ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் 40-45 வயதுக்கு மேல் உடல்நலம், குடும்பம் இரண்டிலுமே மிகப் பெரும் சவால்கள் உண்டு.

டல்நலம் என்று வரும்போது, வயதாவதின் பலவீனங்கள் - கால், கை, முதுகு வலிகள் போன்றவற்றோடு, மெனோபாஸ் பிரச்னைகளும் சேர்ந்து உடல் மற்றும் மனதை நலிவடையச் செய்யும். மெனோபாஸ் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். வழக்கமான ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சமயங்களில் வரும் மனநிலை மாற்றத்தையே குடும்பத்தில் யாருமே அறிந்து, புரிந்து கொள்வதில்லை. நிறைய பெண்களுக்கே அதைக் குறித்து தெரியாது!! அப்படியிருக்கும்போது, மெனோபாஸினால் வரும் ஹார்மோன் பிரச்னைகள் எங்கே தெரிந்திருக்கும்??!!

குடும்பத்தில், சரியாக அந்த காலகட்டத்தில்தான், அவர்களின் பிள்ளைகள் டீனேஜில் அல்லது காலேஜில் இருப்பார்கள்.  டீனேஜ் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டாகும் மனநிலை மாற்றத்தால், அவர்களில் சிலரும் தம் பங்குக்கு தாயை வெறுப்பேற்றுவார்கள்.
சீக்கிரமே மணமுடித்த பெண்களாயிருப்பின், அவர்களின் மகள்களுக்கும் திருமணம் முடித்து மாமியார்கள் ஆகியிருப்பார்கள். மகளின் புதுவாழ்வு சீராக இருக்கவேண்டி, மகளின் புகுந்த வீட்டார்களிடம் பணிந்து போக வேண்டிய அழுத்தத்திற்கும் ஆட்பட்டிருப்பார்கள்.
குடும்பத்தில் மாமனார்-மாமியாரும், முதுமையடைந்து, ‘இரண்டாம் குழந்தைப் பருவத்தைஎட்டிப் பிடித்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு சிறு குழந்தையைப் போன்றே அவர்கள் மனநிலையும் மாறி விட்டிருப்பதால்அவர்களும் தம் பங்குக்கு பிடிவாதம், கோபம், அடம் பிடிக்கும் மனநிலையில் இருப்பார்கள். அவர்களுக்கென தனி சமையல், அவர்களின் உடல்நலன் பேணுதல், பராமரிப்பு என்ற கூடுதல் சுமைகளும் பெண்களின் மீதே.
 
அதே காலகட்டத்தில், தம் பெற்றோரும் முதுமையை எட்டியிருப்பார்கள் என்பதால், அவர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய பொறுப்பும் பெண்கள் மீது உண்டு. ஆனால், மாமனார் – மாமியார் அளவுக்குப் பெற்றவர்களை உடனிருந்து கவனிக்க முடியாத நிர்பந்தங்கள் உள்ள சிலருக்கு, கூடுதல் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
 
தவிர என்றுமே குழந்தையாக இருக்கும் கணவனையும் கவனிக்க வேண்டும். கணவனோ 40-ன் நாய்க் குணத்தைக் கடந்து “பேய்க் குணத்தின்” எல்லையான 50களில் இருப்பார். பிரஷர், ஷுகர் போன்றவை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ள அவரின் உடல்நலத்தைப் பேணும் பொறுப்போடு, உடல் தேவைகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயம்.
 
ஒருவேளை வேலை பார்க்கும் பெண் என்றால், அலுவலக வேலை, வீட்டு வேலை என்று இரண்டையும் செய்ய வேண்டிய அதிகப் பொறுப்பும், குழந்தைகள் தம் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கமுடியாத காரணத்தால் ஏற்படும் குற்ற உணர்வும், அவர்கள் சரியான நட்பு வட்டத்தில் இருக்கிறார்களா என்ற படபடப்பும் உடல்-மனநலத்தைப் பாதிக்கும் சூழல்.
 
இப்படி, பெண்ணின் வாழ்க்கையில் டீனேஜ் ஒரு முக்கியமான கட்டம் என்றால், அதைவிட மிகக் கடினமான பருவம் நாற்பதுகள்தான். ஆங்கிலத்தில் இதை Mid-life Crisis என்பார்கள். 
 
ஏன் பெண்ணுக்கு மட்டும் இது கடினமான கட்டம்? 
தொடர்ந்து படிக்க....

Post Comment

என் குத்தமா, உங்குத்தமா

சில வருடங்களுக்கு முன், இதுபோல பெய்த ஒரு பேய்மழையில், என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது.  செய்திகளில் மட்டுமே அதுவரை கண்டுவந்த ஒரு நிகழ்வு, முதன்முதலாக தெரிந்த ஒருவருக்கும் நிகழ்ந்தது என்றபோது, அதன் நடைமுறைத் தாக்கங்கள் தெரிய வர அதன் அதிர்ச்சியிலிருந்து நான் - நேரடியாகப் பாதிக்கப்படாத நான் - மீளவே பல காலமாயிற்று.

பெய்யும் மழையின் நீர் சுத்தமானது என்றாலும், அது கொண்டு வரும் வெள்ளம் மிக மிக அசுத்தமானது. அதில் வீட்டுப்பொருட்கள் மூழ்கும்போது, ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல. வீட்டினுள் மழைவெள்ளம் புகுவது  என்பது மனம், உடல், பொருள், உறவு என எல்லா வகைகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்!!

வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் சகதி படியும்!!  எவ்வளவு சுத்தம் செய்து கழுவினாலும் நாற்றம் எளிதில் போகாது. துண்மணிகளை துவைத்த பின்னரும் உடுத்த மனம் வராது. எதிர்பாராமல் வந்த வெள்ளம் என்பதால், குழந்தைகளின் பள்ளிப்பைகள் முதல் பாஸ்போர்ட் வரை தண்ணீரில் ஊறிப் போயின. பள்ளிப் புத்தகங்களைக் கூட பின்னர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், பாஸ்போர்ட் மாற்றுவதைவிட மறந்துவிடுவதுதான் நல்லது.

ப்போது எல்லார் மனதிலும், “ஏரி, குளம் இருந்த இடத்துல வீடு கட்டுனா வெள்ளம் வராம வேறென்ன வரும்?” என்று ஒரு எண்ணம் தோன்றும்!! இந்த இடங்களில் வீடு கட்டியவர்கள் எல்லாம் அனுமதி வாங்காமல் கட்டவில்லை! அது புறம்போக்கு நிலமும் அல்ல! படிப்பறிவு மிகுந்துவிட்ட இந்த காலத்தில், அரசின் அப்ரூவல் இருக்கிறதா என முறையாக எல்லாம் பரிசோதித்துத்தான் வாங்குகிறார்கள். எனில் இதில், மக்களைக் குறை சொல்வது என்ன நியாயம்?

புறநகர்ப்பகுதி என்பதால் இன்னும் குடிநீர், கழிவுநீர் வசதிகள் ஏன், பேருந்து வசதிகூட இல்லை என்றபோதும், விலை குறைவாகக் கிடைப்பதால், அத்தனை வசதிக்குறைவுகளையும் பொறுத்துக் கொண்டு,  வாழ்க்கையில் பாதியை அலுவலகம்/பள்ளி சென்று வருவதிலேயே தொலைக்க நேரிட்ட போதும், சொந்தமாக இருக்க ஒரு சிறு வீடு வேண்டும் என்ற ஒரு எளிய குடும்பத்தின் கனவு இல்லம் அது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, ஏரியா கவுன்சிலர்களுக்கும்கூட கப்பம் கட்டி, கட்டிய வீடு அது.

இடத்திற்கான அப்ரூவல், கட்டும் வீட்டிற்கான அப்ரூவல் எல்லாம் அரசாங்கம்தானே தருகிறது? பிறகேன் கட்டியவர்கள் மீது பழி?

ன்னொரு பழி, கழிவுநீர் வடிகால்கள் எல்லாம் பிளாஸ்டிக்கால் அடைபட்டு விட்டன என்பது. அதுவும் உண்மையே. ஆனால், இந்த ப்ளாஸ்டிக் கவர்கள் எல்லாம், பயனீட்டாளர்கள் தம் வீட்டில் சொந்தமாக உருவாக்கிக் கொண்டவையா என்ன?

ப்ளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது என்றால், அதை உற்பத்தி நிலையிலேயே தடுக்கும் வாய்ப்பு அரசுகளுக்கு இல்லையா? தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல, ப்ளாஸ்டிக் கவர்கள் உற்பத்திக்கு தடையில்லை. பயன்படுத்த மட்டுமே தடை என்றால்?

சரி, ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யலாம்தான். ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவையாக, எளிதில் அணுகக்கூடியவையாக எத்தனை மறுசுழற்சி மையங்கள் உள்ளன? அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கே நேரம் போதாத சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு வலிந்து மறுசுழற்சிக்கு ஒதுக்க ஏது நேரம்?

உற்பத்திக்கு அனுமதி கொடுத்த அரசின் கடமையல்லவா உரிய முறையில் அகற்றலும், மறுசுழற்சியும்? எல்லாவற்றையும் மக்களே பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருந்தால், அரசாங்கம் எதற்கு?

ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மீது எந்த பொறுப்புமில்லை; ஆனால் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தாம் அந்தப் பொறுப்பு என்பது என்ன நீதி?

மேலை நாடுகளில், ப்ளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், தமது உற்பத்திகளில் ப்ளாஸ்டிக்கைப் பயன்படுத்தினாலும், அந்நிறுவனங்கள் மீது கூடுதல் வரி போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமது தயாரிப்புகளில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்த அல்லது பொருட்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின், கன்ஸ்யூமர்களிடமிருந்து அப்பொருளை மறுசுழற்சிக்கு வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இம்முறைக்கு Extended producer responsibility  என்று பெயர்.

நம் தமிழ்நாட்டிலேயே, முன்பு காளிமார்க் போன்ற உள்நாட்டுத் தயாரிப்பு குளிர்பானங்கள் வாங்கும்போது, அந்த போத்தலைத் திருப்பிக் கொடுத்தால்தான் அதை வாங்கும்போது அதிகப்படியாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010 முதல் சில வருடங்கள் மட்டும் கடுமையான ப்ளாஸ்டிக் தடை இருந்தது. இந்தியாவில் சில சுற்றுலா தளங்களிலும் தடை உண்டு. அங்கெல்லாம் சாத்தியம் என்றால், பிற இடங்களிலும் சாத்தியமே. நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையே. ஆனால் அக்கடமைகள் இங்கு பயனாளிகளின் மீது ஒருதலைபட்சமாகத் திணிக்கப்படுகின்றன.

தைப்போலவே, ஒரு இடம் விற்பனைக்கும், வீடு கட்டுவதற்கும் உரிய இடம்தான் என்று ஒப்புதல் அளித்து ஒப்பிட்ட அரசு அலுவலர், அதன் விற்பனையைப் பதிவு செய்த அலுவலர், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான வரைபடத்தை சரிபார்த்து ஒப்பிட்ட அலுவலர் ஆகியோருக்கும், கொள்கை வரைந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா இதில்? ஒரு சாதாரண பொதுஜனம் - காமன் மேன் - தான் வாங்கும் இடம் முன்பு ஏரியாகவோ, குளமாகவோ இருந்ததா என்பதை அறிந்து கொள்வதொன்றும் சுலபமில்லை. அரசு அந்த இடத்தை விற்க அப்ரூவல் கொடுத்திருக்கிறது என்பதுதான் பொதுஜனத்திற்கு இருக்கும் ஒரே உத்தரவாதம்.

மக்களின்மீது எந்தத் தவறுமே இல்லை என்றோ, மக்களுக்கு எந்தப் பொறுப்புமே இல்லை என்றோ வாதிடவில்லை. தனியொரு மனிதன் எல்லாவற்றையும் சுயமாக ஆராய்ந்தறிந்து சரியாக வாழ்ந்திட முடியும் என்றால், அரசாங்கம் எதற்கு, ஆட்சியாளர்கள் எதற்கு, அரசாங்கப் பணியாளர்கள்தான் எதற்கு?

மக்கள்தான் சுயபொறுப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்றால், ஏன் டாஸ்மாக்கை மூடச் சொல்லிக் கேட்கிறோம்? மக்கள் கட்டுப்பாட்டோடு இருந்துகொண்டால் போதுமே?

தாம் எடுக்கும் முடிவுகளுக்கும், போடும் கையெழுத்துகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் ஒரு போதும் தான் ஜவாப்தாரி இல்லை என்ற தைரியம்தான் தொடர்ந்து இத்தவறுகள் நடக்க வாய்ப்பாகின்றன.  வழக்கமாக, அனுமதி பெற்ற அளவைவிட அதிக இடம் ஆக்கிரமித்து விட்டார்கள் அல்லது கூடுதல் தளங்கள் கட்டிவிட்டார்கள் என்று அரசு தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதேபோலே,மழைநீர் புகுந்த வீடுகளின் உரிமையாளர்களில் ஒருவராவது இவ்வாறு ஏரி-குளமாக இருந்த இடத்தை விற்கவும், வீடுகட்டவும் அனுமதித்தது தவறு என்று, கையொப்பமிட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளின்மீது வழக்குத் தொடர வேண்டும்!!

Post Comment

பெண்ணிய பேலியோ!!
ழக்கமா, மட்டன் வாங்கிட்டு வரும்போதெல்லாம் எங்கூட்ல எனக்கும் எங்கூட்டுக்காரருக்கும் ஒரே வாக்குவாதமாத்தான் இருக்கும்.(வாங்காட்டியும் இருக்கத்தான் செய்யுங்கிறதைச் சொல்லணுமா என்ன.... காரணத்துக்கா பஞ்சம்?)

”கொழுப்பைக் கழிக்கிறேன்னு இம்புட்டு  கழிக்கிறே... கொஞ்சமாச்சும் கொழுப்பு இருந்தாத்தான் ருசி இருக்கும்...”

“அப்படியொண்ணும் ருசியாத் திங்க வேணாம்... ஏற்கனவே பிறப்பிலேயே இருக்கிறது காணாதுன்னு சாப்பாடுலயும் கொலஸ்ட்ரால் சேர்க்கணுமா...”

ருசியைச் சொன்னால் வழிக்கு வரமாட்டேன் என்று, உடனே பொருளாதாரம்  பேசுவார். விலையைச் சொன்னா, நகையைக் கூட வேண்டாம்னு சொல்றவ நான் என்ற தந்திரம் அறிந்தவர்!!

“மட்டன் என்ன விலை தெரியுமா? இப்படி ஒரு கிலோவுல கால்கிலோவை கொழுப்புனு கழிச்சா எவ்வளவு பணம் வேஸ்டாகுது?” 

“ம்ம்.. டாக்டருக்குக் கொடுக்கிற பணம் மிச்சமாகுதே... அதுக்கு இது சரியா வரும்... போங்க பேசாம...”
 
ப்படித்தான், ”Red Meat” வகைகள் உடலுக்கு நல்லதில்லை என்ற “ஆரோக்கியக் குறிப்பை” நம்பி மட்டன் வங்குவதே அரிதாகி வந்த நிலையில்... பேலியோவுக்கு வந்தபின், மட்டன் நிறைய உண்ணலாம் என்ற உண்மை தெரிந்ததும், அதுவும் கொழுப்போடு சேர்த்து உண்ண வேண்டும் என்று தெரிந்து கொண்டதும், அதற்கும் குற்ற உணர்ச்சி வந்தது!!
 
பேலியோவுக்குப் பின், கடைக்குப் போயிருந்த போது, மட்டன் செக்‌ஷனில் ஆர்டர் கொடுத்து விட்டு கடைக்காரர் கறியை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். நான் பேலியோவுக்கு வந்தபின் “திருந்திய” கதையெல்லாம் பக்கத்துல நின்ன என்  ட்டுக்காரருக்கு தெரியாது.

பரிதாபமா, “பாரு, இங்கயே எவ்ளோ கொழுப்பைக் கழிக்கிறாரு பாரு.. அதோடு சேந்து எவ்ளோ மட்டன் வேஸ்டாகுதுன்னு பாரு... அவர்கிட்ட சண்டை போட்டு கொழுப்பைக் கழிக்கச் சொல்லி வாங்கிட்டு வந்தா, சரியாவே வெட்டி வாங்கலைன்னு நீ என்கிட்ட சண்டை போடுற. அதுக்கு மேலே நீயும் கொழுப்பைக் கழிக்கிறேன்னு கழிச்சு, ஒரு கிலோ மட்டனை அரைகிலோவா ஆக்குறது மட்டுமில்லாம, டேஸ்டா இல்லாம ஆக்கிடுற...” என்றார்.
 
”மனம் திருந்திய மனைவி”யாக நான் என் மனதிற்குள், “இல்லங்க, இனிமே கொழுப்பை வெட்ட வேணாம்னு சொல்லுங்க.. கொழுப்பு நல்லதாம்..” என்று நினைத்துக் கொண்டாலும், சொல்ல நா எழவில்லை. தயங்கியே நின்றேன்... 
 
ந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்... 18 வருடங்கள் முன்பு....
 
கல்யாணமான புதிதில் என் மாமியார் ஒருமுறை என்னிடமும், என் மச்சினர் மனைவியிடமும் , “சாயாக்கு இஞ்சி போடும்போது, தோலைச் சுரண்டிட்டு போடுங்கோ.. தோல் நல்லதில்லை” என்றார். நாங்க ரெண்டு பேரும் பெரிசா கண்டுக்கலை. பின்னர் ஒரு நாள் வீட்டுக்கு வந்த என் பெரிய மைனி, “இஞ்சியோட தோல் விஷமாம். தோல் சேர்க்காமதான் டீயில போடணுமாம். அந்தப் பத்திரிகையில் போட்டிருந்தாங்க. வெளிநாட்டுல இன்ன ரிசர்ச் செண்டர்ல ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க” என்று ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியைப் புள்ளி விபரத்தோடு சொன்னார். 

அதிலிருந்து நாங்கள் ஒழுங்காக தோலைச் சீவிவிட்டுப் போட ஆரம்பித்தோம். அதைப் பார்த்த என் மாமியார், “படிக்காத கிழவி சொன்னா ஏத்துக்க முடியலை. படிச்சவ வந்து இங்லீஷ்ல சொன்னவுடனே கேட்டுகிடுறீங்க என்ன?” என்று கிண்டல் செய்தார்.
 
தேபோல, இப்போ அவர் சொல்லி கேட்க இந்த விஷயத்தை பேலியோ க்ரூப்ல பாத்து தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னா, ”புருஷன் சொல்லி பொண்டாட்டி கேட்டதா சரித்திரம் உண்டா”ன்னு கிண்டல் பண்ணக்கூடாதே.... அதனால வெளியே சொல்லிக்காம, திருந்துன விஷயத்தை உள்ளுக்குள்ளயே வச்சுகிட்டேன்.  

முன்னல்லாம் ஒரு கிலோ மட்டனை அக்குவேறா ஆணிவேறா பிரிச்சு சுத்தம் பண்ண எனக்கு குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும்!! இப்பலாம், கை துறுதுறுன்னு வந்தாலும் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணி - 18 வருஷப் பழக்கத்தை திடீர்னு விட்டுட முடியுமா? - அரைமணி நேரத்துல க்ளீன் பண்ணி முடிச்சுடுறேன்.
 
டுத்து, அரிசி கோதுமை தவிர்ப்பதால், இட்லி, தோசை, சப்பாத்தி, நாண், இடியாப்பம், ரொட்டி, பாலாடைன்னு அதிக நேரம் எடுத்து செய்ய வேண்டியிருந்த வேலைகள் இப்போ இல்லை. ஏதாச்சும் ஒரு க்ரில், வறுவல், பொரியல்,குழம்புன்னு சமையல் இப்ப ரொம்ப ஈஸியா முடியுது!! (இது குடும்பத்தில் எல்லாருமே பேலியோவாக இருந்தால்தான் சாத்தியம்) இப்படியாக, பேலியோவுக்கு வந்ததன் முதற்பயனாக நேரமும், உழைப்பும்(!!!) மிச்சப்படுகிறது.
 
ன்னுமொரு முக்கியமான விஷயம், முந்தைய பதிவில் சொன்னதுபோல, பெண்களின் சரிவிகித உணவு. சாதாரணமா, பெண்கள் மட்டன் சிக்கன் போன்றவைகளை, வீட்டில் சமைச்சாலும் அதிகமா சாப்பிடமாட்டாங்க.  ஏன்னா, பிள்ளைங்களுக்கு, புருஷனுக்குன்னு எடத்வச்சுடுவாங்க. ஆனா இந்த டயட்ல இது மட்டுமே சாப்பிட்டாகணும் என்பதால், சத்துக்கள் முறையா கிடைக்கும். 

ப்படி எல்லா வகையிலும் சமைக்கும் பெண்களுக்கு முழு ஆதரவாக இருக்கும் பேலியோ டயட்டைக் கண்டுபிடித்தவர் கண்டிப்பாக ஒரு பெண்ணாக இருக்க முடியாது. ரசம் காய்ச்சி, பொறியல் வைக்கவே நேரம் சரியாக இருக்கும்போது, எங்கே ஆராய்ச்சி - அறிவியல் செய்ய... பெண்களுக்கு உதவும் மிக்ஸி, க்ரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவைகளைக் கண்டுபிடித்ததும் ஆண்கள்தான்.  தப்பித்தவறி, அந்த வேலையைச் செய்ய நேர்ந்ததுதான் காரணமாக இருக்கலாம்.

 என் தோழி, அவர் கணவரிடம் வெந்நீர் போட கெட்டில் வாங்கிக் கேட்டார், கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து, அவருக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாதபோது, அவரது கணவர் டீ போட அடுக்களைக்குப் போனார். முதலில் அடுப்பில் வெந்நீர் வைத்தார். அது சூடாகுது, சூடாகுது, சூடாகிகிட்டே இருக்குது. கொதி வரதுக்குள்ளே வெறுத்துப் போ அவர் செய் முல் வேலை, உடனே ஒரு கெட்டில் வாங்கிக் கொடுத்ததுதான்!!

 அதே போல, இந்த டயட்டைக் கண்டுபிடித்ததும், ஒரு நாள் - ஒரே ஒரு நாள் - கரண்டியைக் கையில் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்த ஒரு ஆணாகத்தான் இருக்குமோ???!!

Post Comment

இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்


1857 - சிப்பாய்க் கலக வருடம். பரபரப்பான போர்க்களத்தில், போர் உடை தரித்து, தன் நாட்டு போர் வீரர்களுக்குத் தலைமையேற்று, கையில் வாளுடன் குதிரை மீதமர்ந்து தீரத்துடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படையினர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தாள் அப்பெண்.  நீங்கள் நினைப்பது போல, ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் அல்ல அப்பெண்.

ரந்து விரிந்த முகலாய அரசுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டி ஆட்சி நடத்தி வந்த சிற்றரசுகள் இந்தியாவில் ஏராளம் உண்டு. இம்மாதிரியான சிற்றரசுகளை, முகலாய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றுத் தருகிறோம் என்று நயவஞ்சகம் பேசி,  தம் பக்கம் இணைத்துக் கொண்டது கிழக்கிந்திய கம்பெனி அரசு. இணைந்த பின்னர் அவர்கள் விதித்த கெடுபிடிகளைக் கண்டு, தாம் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து நொந்து போயிருந்தன அச்சிற்றரசுகள். விலகி வரமுடியாதபடிக்கு பிரிட்டிஷாரிடமிருந்து நவீன ஆயுதங்கள் வாங்கிய வகையில் கடன்சுமை அந்த அரசுகளின்மீது ஏற்றப்பட்டிருந்தது.உலக வங்கிடெக்னிக் அப்போதே ஆரம்பித்துவிட்டது!! கடனைத் திருப்பிக் கட்டமுடியாத சிற்றரசுகளை அதன் மன்னர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைத்துக் கொண்டார்கள்.

த்தரப் பிரதேசத்தில் லக்னோவின் அருகில் இருந்தஔத்என்ற குறுநில அரசு, ”வஜீர் அலி ஷாஎன்ற குறுநில மன்னரால் ஆண்டுவரப்பட்டது.  ஆங்கில அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து,  பட்ட கடனைத் திருப்பிக் கட்ட முடியாததால், 1856-ல் கிழக்கிந்திய கம்பெனியின் நெருக்குதலைத் தாங்கமுடியாமல் அரசர் நாட்டை விட்டு வெளியேறினார்.
  
அரசர் வஜீர் அலி ஷாவின் மனைவிகளுள் ஒருவர்இஃப்திகருன் னிஸாஎன்ற இளம்பெண். வெளியேறத் துணிந்த கணவரை, கோழைபோல நாட்டைவிட்டுச் செல்வதை விட, வீரமாகப் போரிட்டு போர்க்களத்தில் மடிவதே மேல் என்று இவர் தடுத்துப் பார்த்தார். ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அந்த பெண்ணுக்கிருந்த வீரதீரம், அரச குடும்பத்தில் பிறந்து போர்ப்பயிற்சிகள் பல பெற்று வளர்ந்த அரச குலத்தைச் சேர்ந்த அந்த ஆணிடம் இல்லை!!

அரசவையைச் சேர்ந்தவர்கள், அரச பொறுப்பை ஏற்று, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட தமது மகன்களில் ஒருவருக்குப் பட்டம் சூட்டுமாறு அரண்மனையின் அனைத்து பட்டத்து அரசிகளிடமும் வேண்டுகோள் விடுக்க, அவர்களோ ஆங்கிலேயருக்கு அஞ்சி மறுத்தார்கள். இஃப்திகருன் னிஸாஒருவரே தைரியமாக முன்வந்தார்!!

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பொறுப்பு தற்போது, பேகம் ஹஸ்ரத் மஹல் என்று பட்டம் சூட்டப்பெற்றஇஃப்திகருன் னிஸாவசம் வந்தது. இவர்  பிர்கிஸ் கத்ர்என்ற தனது 12 வயது மகனுக்கு ஔத் நாட்டு அரசனாகப் பட்டம் சூட்டினார். மகன் அறியாச் சிறுவன் என்பதால், மன்னரின் பிரதிநிதியாக (regent)  நாட்டை அவரே ஆட்சி செய்தார். அதே சமயம், கிழக்கிந்திய கம்பெனி ஔத்-தை பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க சர் ஜேம்ஸ் ஔட்ராம் என்ற ஜெனரலை நியமித்தது. 

சர் ஔட்ராம், ஔத்-ன் படைகளை கிழக்கிந்திய படைகளோடு இணைத்து மற்ற சிற்றரசுகளை எதிர்த்துப் போரிட அனுப்பினால், ஔத் அரசுக்கு தன்னாட்சி அளிப்பதாக ஆசை காட்டினார். பேகம் ஹஸ்ரத் மஹல் அதற்குப் பணிய மறுத்துவிட்டார். தன் சக நாட்டினரைக் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இப்படிப் பலவிதங்களில் ஆசைகாட்டிப் பார்த்தும், மிரட்டிப் பார்த்தும் , ஔட்ராம் மற்றும் அவருக்குப் பின் அப்பணிக்கு நியமிக்கப்பட்ட ஜாக்ஸன் மற்றும் அதன்பின் வந்த சர் ஹென்றி லாரன்ஸ் ஆகியோரால், பேகம் ஹஸ்ரத் மஹலின் தீவிர எதிர்ப்பு காரணமாக, இணைப்புப் பணியை நிறைவேற்ற முடியவில்லை.

கிடைத்த இடைவெளியில், பேகம் ஹஸ்ரத் மஹல், கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவிடம் தன் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, தன் மகனை ஔத்-ன் அதிகாரபூர்வ ஆட்சியாளராக அறிவிக்கச் செய்தார். தன் ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளைக் களையெடுத்தார். தன் படைகளைப் பலப்படுத்தினார். ‘ராஜா ஜெய் லால் சிங்என்பவரை படைத்தளபதி ஆக்கினார்.

ச்சமயம், 1857-ல் சிப்பாய்க் கலகம் தொடங்கியது.  படை வீரர்கள் வாயில் வைத்து கடித்து பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றிகளின் கொழுப்பைத் தடவி வைத்தது இதன் முக்கியக் காரணமாக இருந்தது. டெல்லியில் தொடங்கிய பொறி, நாடெங்கும் பற்றிக் கொண்டது. போராட்டத்திலிருந்து உயிர்தப்பி, ஆங்கிலேய அதிகாரிகள் அங்கங்கு பதுங்கி இருந்தனர். லக்னோவில், 37-ஏக்கர் பரப்பில் ரெஸிடென்ஸிஎன்ற பிரிட்டிஷ் தூதரகம் ஒன்று இருந்தது. அதனுள் சுமார் 600 ஆங்கிலேயர்கள் அபயம் பெற்று இருந்தனர்.
 
பேகம் ஹஸ்ரத் மஹல், துணிச்சலாக, ”ரெஸிடென்ஸிதூதரகம் மீது தாக்குதல் நடத்தினார். ஜூலை 1857 முதல் செப்டம்பர் வரை 90 நாட்கள் தூதரகத்தின் மீதான முற்றுகை தொடர்ந்தது.  பல முக்கிய ஆங்கிலேயர்களின் உயிரைப் பறித்த இந்த முற்றுகை ஆங்கிலேயர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாய்ப் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆங்கிலேயே அரசு ஒரு தனி படை அனுப்பி அந்த 90-நாட்கள் முற்றுகையை முறியடித்து, பேகம் ஹஸ்ரத் மஹலின் படையினரை லக்னோவைவிட்டு வெளியெற்றியது. ஒரு பெண் தலைமையிலான ஒரு சிற்றரசு, தனியே  நீண்ட நாட்கள் ஆங்கிலேயரை முற்றுகையிட்டது ஒரு பெரும் சாதனை ஆகும்.

ல வழிகளில் முயன்றும், இணைப்புக்கு வழிகிட்டாததால், மார்ச் 1858-ல் கிழக்கிந்திய கம்பெனி  படைகள், பேகம் ஹஸ்ரத் மஹலின் அரண்மனையைத் தாக்க பெரும்படை ஒன்றை அனுப்பியது. அப்போரில்,  9000 வீரர்களுக்குத் தலைமையேற்று தானே களத்திலிறங்கிப் போரிட்டார் பேகம் ஹஸ்ரத் மஹல். அந்தக் காட்சிதான் நாம் இக்கட்டுரையின் ஆரம்ப வரிகளில் கண்டது. “முஸாபக் யுத்தம்என்றழைக்கப்பட்ட இந்தப் போரில், அவருடைய படைவீரர்கள் சுமார் 5000 பேர் துரோகம் செய்துவிட்டனர். எனினும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போரிட்ட அவர்,  தோல்வியடைந்த போதும் சரணடைய மறுத்தார்.

சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து  இந்திய நாடு,  ராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. அதையொட்டி விக்டோரியா மகாராணி, நவம்பர் 1858-ல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்-பிரகடனம் (Counter- Proclamation)ஒன்றை பேகம் ஹஸ்ரத் மகல் வெளியிட்டார்.  மகாராணியாரின் பிரகடனத்தையே எதிர்க்கத் துணித்த அவரின் இத்தைரியம் கண்டு பிரிட்டிஷாரே வியந்தனர்.  அந்தப் பிரகடனம் விளக்கமாக இந்த வலைப்பக்கத்தில் இருக்கிறது: http://oudh.tripod.com/bhm/bhmproc.htm. அதன் சாராம்சத்தைக் கண்டால் அவரது அறிவுக் கூர்மையும் தீரமும் விளங்கும்.

அதைத் தொடர்ந்து, நாய்க்கு எலும்புத் துண்டுகள் வீசுவதைப் போல, மானியங்கள் அளிப்போம் என்று ஆசை காட்டியோ அல்லது மிரட்டியோ அனைத்து சிற்றரசுகளும் வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைக்கப்பட்டன.  பிரிட்டிஷாரின் பல வாக்குறுதிகளுக்கும் மானியங்களுக்கும் மசியாமல், அவற்றின் பின்னிருந்த நயவஞ்சகத்தைக் கண்டுணர்ந்து, தாய்நாட்டுக்குச் சுதந்திரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட பேகம், அவற்றை ஏற்க மறுத்தார்.

1859-ம் வருட இறுதி வரை அவர் ஔத்-ன் ராணியாகவே இருந்தார். அதன் பின் ஆங்கிலேயரின் எதிர்ப்புகள் கடுமையானதால், காடுகளில் மறைந்து தாக்குதல்கள் மேற்கொண்டார். மானியங்கள் பெற்று இராஜ அந்தஸ்தோடு அரண்மனையில் சேவகர்களோடு வசதியாக  வாழ வாய்ப்புகள் இருந்த போதும், அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு கம்பீரமாக அடங்க மறுத்த சுதந்திரப் பறவையாகவே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அண்டை நாடான நேபாளுக்குச் சென்று 20 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தன்னோடு கொண்டு சென்ற செல்வங்களை, தன்னுடன் அகதிகளாக நாடு விட்டு வந்தோருக்காகவே செலவழித்தார். வறுமையில் உழன்ற அச்சமயத்திலும், பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், பேகம் திரும்பி வந்தால் பதினைந்து இலட்ச ரூபாய் ஒவ்வொரு மாதமும் மானியமாகத் தருவதாக ஆசைகாட்டியும் மறுத்து விட்டார். கடும் ஏழ்மை வாட்டிய போதும், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், மன்னிப்புக் கடிதங்கள் எழுதாமல், சுயமரியாதையோடு கடைசிவரை ஆங்கிலேயேரை எதிர்த்தவராகவே நாட்டுப் பற்றோடு வாழ்ந்து 1879-ல் மறைந்தார்.
  
க்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் என்ற இடத்தில், 1962-ஆம் ஆண்டு இவ்வீரப்பெண்மணியின் பெயரில்ஹஸ்ரத் பேகம் மஹல்என்ற பூங்கா அன்றைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டுள்ளது1992-ல் உத்ர்பிரேசத்ின் பாஜ.. ஆட்சியில் இப்பூங்காவின் பெயர்ஊர்மிளா பூங்காஎன்று மாற்றப்பட்டதாகவும், அதைக் கண்டித்து போராட்டங்களும்,  பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பும் எழுப்பப்பட்டது என்றாலும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பே பின்னர் பெயர் மாற்றம் நீக்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு.இவரது நினைவாக 1984-ம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. இவ்வம்சத்தைச் சேர்ந்த இளவரச் அஞ்சும் குதர் என்பவர், “தம் அரச வம்சத்தின் முகங்களில் வழிந்த கோழைத்தனத்தைத் துடைத்து எறிந்தவர்” என்று பேகத்தைப் புகழ்கிறார்.

கௌகப் கத்ர் என்ற வரலாற்றாசிரியர், “ஃப்ரான்ஸின் ஜோன் ஆஃப் ஆர்க்கைப் போல பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்தை எதிர்த்து நின்றார். அதன்மூலம் அவநம்பிக்கையில் முழுகிப் போயிருந்த உள்ளங்களில் நம்பிக்கை ஜோதியை ஏற்றினார்; எங்கிருந்தோ திடீரென்று வரும் விண்கல்லைப் போல வந்து ஔத் நாட்டின் ஒவ்வொரு அடியிலும் சுதந்திர வேள்வியை மூட்டினார்” என்று புகழ்கிறார்.

கார்ல் மார்க்ஸ், ரஸ்ஸல் உள்ளிட்ட இன்னும் பல வரலாற்றாசிரியர்களும் பேகம் ஹஸ்ரத் மஹலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இவரது தீரத்திற்கு எடுத்துக்காட்டு. 

(”டீக்கடை”  முகநூல் குழுமத்தில் நடத்தப்பட்ட “சுதந்திரப் போரில் முஸ்லிம்கள்” என்ற போட்டீக்காக எழுதியது)

Post Comment