சில வருடங்களுக்கு முன், இதுபோல பெய்த ஒரு பேய்மழையில், என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது. செய்திகளில் மட்டுமே அதுவரை கண்டுவந்த ஒரு நிகழ்வு, முதன்முதலாக தெரிந்த ஒருவருக்கும் நிகழ்ந்தது என்றபோது, அதன் நடைமுறைத் தாக்கங்கள் தெரிய வர அதன் அதிர்ச்சியிலிருந்து நான் - நேரடியாகப் பாதிக்கப்படாத நான் - மீளவே பல காலமாயிற்று.
பெய்யும் மழையின் நீர் சுத்தமானது என்றாலும், அது கொண்டு வரும் வெள்ளம் மிக மிக அசுத்தமானது. அதில் வீட்டுப்பொருட்கள் மூழ்கும்போது, ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல. வீட்டினுள் மழைவெள்ளம் புகுவது என்பது மனம், உடல், பொருள், உறவு என எல்லா வகைகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்!!
வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் சகதி படியும்!! எவ்வளவு சுத்தம் செய்து கழுவினாலும் நாற்றம் எளிதில் போகாது. துண்மணிகளை துவைத்த பின்னரும் உடுத்த மனம் வராது. எதிர்பாராமல் வந்த வெள்ளம் என்பதால், குழந்தைகளின் பள்ளிப்பைகள் முதல் பாஸ்போர்ட் வரை தண்ணீரில் ஊறிப் போயின. பள்ளிப் புத்தகங்களைக் கூட பின்னர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், பாஸ்போர்ட் மாற்றுவதைவிட மறந்துவிடுவதுதான் நல்லது.
இப்போது எல்லார் மனதிலும், “ஏரி, குளம் இருந்த இடத்துல வீடு கட்டுனா வெள்ளம் வராம வேறென்ன வரும்?” என்று ஒரு எண்ணம் தோன்றும்!! இந்த இடங்களில் வீடு கட்டியவர்கள் எல்லாம் அனுமதி வாங்காமல் கட்டவில்லை! அது புறம்போக்கு நிலமும் அல்ல! படிப்பறிவு மிகுந்துவிட்ட இந்த காலத்தில், அரசின் அப்ரூவல் இருக்கிறதா என முறையாக எல்லாம் பரிசோதித்துத்தான் வாங்குகிறார்கள். எனில் இதில், மக்களைக் குறை சொல்வது என்ன நியாயம்?
புறநகர்ப்பகுதி என்பதால் இன்னும் குடிநீர், கழிவுநீர் வசதிகள் ஏன், பேருந்து வசதிகூட இல்லை என்றபோதும், விலை குறைவாகக் கிடைப்பதால், அத்தனை வசதிக்குறைவுகளையும் பொறுத்துக் கொண்டு, வாழ்க்கையில் பாதியை அலுவலகம்/பள்ளி சென்று வருவதிலேயே தொலைக்க நேரிட்ட போதும், சொந்தமாக இருக்க ஒரு சிறு வீடு வேண்டும் என்ற ஒரு எளிய குடும்பத்தின் கனவு இல்லம் அது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, ஏரியா கவுன்சிலர்களுக்கும்கூட கப்பம் கட்டி, கட்டிய வீடு அது.
இடத்திற்கான அப்ரூவல், கட்டும் வீட்டிற்கான அப்ரூவல் எல்லாம் அரசாங்கம்தானே தருகிறது? பிறகேன் கட்டியவர்கள் மீது பழி?
இன்னொரு பழி, கழிவுநீர் வடிகால்கள் எல்லாம் பிளாஸ்டிக்கால் அடைபட்டு விட்டன என்பது. அதுவும் உண்மையே. ஆனால், இந்த ப்ளாஸ்டிக் கவர்கள் எல்லாம், பயனீட்டாளர்கள் தம் வீட்டில் சொந்தமாக உருவாக்கிக் கொண்டவையா என்ன?
ப்ளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது என்றால், அதை உற்பத்தி நிலையிலேயே தடுக்கும் வாய்ப்பு அரசுகளுக்கு இல்லையா? தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல, ப்ளாஸ்டிக் கவர்கள் உற்பத்திக்கு தடையில்லை. பயன்படுத்த மட்டுமே தடை என்றால்?
சரி, ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யலாம்தான். ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவையாக, எளிதில் அணுகக்கூடியவையாக எத்தனை மறுசுழற்சி மையங்கள் உள்ளன? அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கே நேரம் போதாத சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு வலிந்து மறுசுழற்சிக்கு ஒதுக்க ஏது நேரம்?
உற்பத்திக்கு அனுமதி கொடுத்த அரசின் கடமையல்லவா உரிய முறையில் அகற்றலும், மறுசுழற்சியும்? எல்லாவற்றையும் மக்களே பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருந்தால், அரசாங்கம் எதற்கு?
ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மீது எந்த பொறுப்புமில்லை; ஆனால் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தாம் அந்தப் பொறுப்பு என்பது என்ன நீதி?
மேலை நாடுகளில், ப்ளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், தமது உற்பத்திகளில் ப்ளாஸ்டிக்கைப் பயன்படுத்தினாலும், அந்நிறுவனங்கள் மீது கூடுதல் வரி போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமது தயாரிப்புகளில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்த அல்லது பொருட்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின், கன்ஸ்யூமர்களிடமிருந்து அப்பொருளை மறுசுழற்சிக்கு வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இம்முறைக்கு Extended producer responsibility என்று பெயர்.
நம் தமிழ்நாட்டிலேயே, முன்பு காளிமார்க் போன்ற உள்நாட்டுத் தயாரிப்பு குளிர்பானங்கள் வாங்கும்போது, அந்த போத்தலைத் திருப்பிக் கொடுத்தால்தான் அதை வாங்கும்போது அதிகப்படியாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010 முதல் சில வருடங்கள் மட்டும் கடுமையான ப்ளாஸ்டிக் தடை இருந்தது. இந்தியாவில் சில சுற்றுலா தளங்களிலும் தடை உண்டு. அங்கெல்லாம் சாத்தியம் என்றால், பிற இடங்களிலும் சாத்தியமே. நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையே. ஆனால் அக்கடமைகள் இங்கு பயனாளிகளின் மீது ஒருதலைபட்சமாகத் திணிக்கப்படுகின்றன.
அதைப்போலவே, ஒரு இடம் விற்பனைக்கும், வீடு கட்டுவதற்கும் உரிய இடம்தான் என்று ஒப்புதல் அளித்து ஒப்பிட்ட அரசு அலுவலர், அதன் விற்பனையைப் பதிவு செய்த அலுவலர், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான வரைபடத்தை சரிபார்த்து ஒப்பிட்ட அலுவலர் ஆகியோருக்கும், கொள்கை வரைந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா இதில்? ஒரு சாதாரண பொதுஜனம் - காமன் மேன் - தான் வாங்கும் இடம் முன்பு ஏரியாகவோ, குளமாகவோ இருந்ததா என்பதை அறிந்து கொள்வதொன்றும் சுலபமில்லை. அரசு அந்த இடத்தை விற்க அப்ரூவல் கொடுத்திருக்கிறது என்பதுதான் பொதுஜனத்திற்கு இருக்கும் ஒரே உத்தரவாதம்.
மக்களின்மீது எந்தத் தவறுமே இல்லை என்றோ, மக்களுக்கு எந்தப் பொறுப்புமே இல்லை என்றோ வாதிடவில்லை. தனியொரு மனிதன் எல்லாவற்றையும் சுயமாக ஆராய்ந்தறிந்து சரியாக வாழ்ந்திட முடியும் என்றால், அரசாங்கம் எதற்கு, ஆட்சியாளர்கள் எதற்கு, அரசாங்கப் பணியாளர்கள்தான் எதற்கு?
மக்கள்தான் சுயபொறுப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்றால், ஏன் டாஸ்மாக்கை மூடச் சொல்லிக் கேட்கிறோம்? மக்கள் கட்டுப்பாட்டோடு இருந்துகொண்டால் போதுமே?
தாம் எடுக்கும் முடிவுகளுக்கும், போடும் கையெழுத்துகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் ஒரு போதும் தான் ஜவாப்தாரி இல்லை என்ற தைரியம்தான் தொடர்ந்து இத்தவறுகள் நடக்க வாய்ப்பாகின்றன. வழக்கமாக, அனுமதி பெற்ற அளவைவிட அதிக இடம் ஆக்கிரமித்து விட்டார்கள் அல்லது கூடுதல் தளங்கள் கட்டிவிட்டார்கள் என்று அரசு தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதேபோலே,மழைநீர் புகுந்த வீடுகளின் உரிமையாளர்களில் ஒருவராவது இவ்வாறு ஏரி-குளமாக இருந்த இடத்தை விற்கவும், வீடுகட்டவும் அனுமதித்தது தவறு என்று, கையொப்பமிட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளின்மீது வழக்குத் தொடர வேண்டும்!!
|
Tweet | |||
9 comments:
அருமையா எழுதியிருக்கீங்க...
=====================================================================
தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...
முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...
===========================================================================
இங்கு ஒருவர் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியாத நிலை. அரசாங்கத்துக்குத்தான் அதிகப் பொறுப்பு. ஏனெனில் அதிகாரம் அதன் கையில்தான் உள்ளது. ஆற்றுப் படுகைகளிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளுவது, அதுவும் இயந்திரங்களை வைத்து அள்ளுவது அரசாங்கம்தான். தனியாரின் சுரண்டலை கண்டு கொள்ளாமல் விடுவதும் அரசாங்கம்தான்.
அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் ஏரியிலும் இன்னும் நீர் நிலைகளிலும் அரசாங்கக் கட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்தார் என்று படித்தேன்.
வாய்க்கால்கள், நீர் நிலைகள் மீது சாலைகள் அமைத்ததும் அரசாங்கம்தான். எந்த ஒரு வெள்ளமும், அரசாங்கத்துக்கு அறிவைத் தரவில்லை. கர்நாடகாவை விட, ஆந்திராவை விட, கேரளாவை விட அதிக அளவு மழை பெறும் தமிழகம்தான் எல்லாத் தண்ணீரையும் கடலில் கலக்க விட்டு விட்டு, அதே மாநிலங்களிடம் தண்ணீருக்குப் பிச்சை எடுக்கிறது.
மக்களுக்கென்றும்சில பொறுப்புகள் உண்டு. கட்டுப்பாடு இருப்பதும் தவறில்லை. ஒரு மனிதன் நினைத்தால் டாஸ்மாக் செல்லாமல் இருக்க முடியும். தன் குடும்பம், தன் உறவு, தன் ஊர் என்று கட்டுப்பாட்டை வளர்க்க முடியும். அப்படிச் சில கிராமங்களும் தமிழ் நாட்டில் உண்டு.
இத்தனை டாஸ்மாக் இருந்தாலும் நாங்கள் அந்தப் பழக்கத்துக்கு ஆளாகவில்லை.
தம +1
சில பத்திகள் அனைவரும் வாசிக்க :
// மேலை நாடுகளில், ப்ளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், தமது உற்பத்திகளில் ப்ளாஸ்டிக்கைப் பயன்படுத்தினாலும், அந்நிறுவனங்கள் மீது கூடுதல் வரி போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமது தயாரிப்புகளில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்த அல்லது பொருட்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின், கன்ஸ்யூமர்களிடமிருந்து அப்பொருளை மறுசுழற்சிக்கு வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இம்முறைக்கு Extended producer responsibility என்று பெயர்.
நம் தமிழ்நாட்டிலேயே, முன்பு காளிமார்க் போன்ற உள்நாட்டுத் தயாரிப்பு குளிர்பானங்கள் வாங்கும்போது, அந்த போத்தலைத் திருப்பிக் கொடுத்தால்தான் அதை வாங்கும்போது அதிகப்படியாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010 முதல் சில வருடங்கள் மட்டும் கடுமையான ப்ளாஸ்டிக் தடை இருந்தது. இந்தியாவில் சில சுற்றுலா தளங்களிலும் தடை உண்டு. அங்கெல்லாம் சாத்தியம் என்றால், பிற இடங்களிலும் சாத்தியமே. நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையே. ஆனால் அக்கடமைகள் இங்கு பயனாளிகளின் மீது ஒருதலைபட்சமாகத் திணிக்கப்படுகின்றன. //
// தாம் எடுக்கும் முடிவுகளுக்கும், போடும் கையெழுத்துகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் ஒரு போதும் தான் ஜவாப்தாரி இல்லை என்ற தைரியம்தான் தொடர்ந்து இத்தவறுகள் நடக்க வாய்ப்பாகின்றன. வழக்கமாக, அனுமதி பெற்ற அளவைவிட அதிக இடம் ஆக்கிரமித்து விட்டார்கள் அல்லது கூடுதல் தளங்கள் கட்டிவிட்டார்கள் என்று அரசு தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதேபோலே,மழைநீர் புகுந்த வீடுகளின் உரிமையாளர்களில் ஒருவராவது இவ்வாறு ஏரி-குளமாக இருந்த இடத்தை விற்கவும், வீடுகட்டவும் அனுமதித்தது தவறு என்று, கையொப்பமிட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளின்மீது வழக்குத் தொடர வேண்டும்!! //
தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...
முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...
சிறப்பான கட்டுரை! சில பத்திகளை வாசிக்க சிரமமாக உள்ளது! எழுத்துரு சரியில்லை! கவனிக்கவும்!
அபிநயா: நன்றிங்க.
தளிர் சுரேஷ் அவர்கள்: நன்றிங்க.
எழுத்துரு, க்ரோம் உலவியில் பார்க்கும்போது மட்டும் இப்படி பிரச்னை வருகிறது. ஏன் என்று தெரியவில்லை. எப்படி சரி செய்ய வெனப் புரியவில்லை.
@திண்டுக்கல் தனபாலன் அண்ணே: இந்த எழுத்துரு பிரச்னைக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்.
ஸ்ரீராம் சார்: விளக்கமான கருத்துக்கு நன்றி சார்.
//இத்தனை டாஸ்மாக் இருந்தாலும் நாங்கள் அந்தப் பழக்கத்துக்கு ஆளாகவில்லை//
இத்தனை கட்டுக்கோப்போடு இருப்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை என்பதன் தெளிவுதான் இன்று தமிழ்நாட்டில் நாம் தினம் காணும் காட்சிகள்!! ஆகையால், அரசுக்குத்தான் அதிகப் பொறுப்பு உண்டு என்று நம்புகிறேன் நான்.
//தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...//
அப்படியா? நான் இணைக்கும்போது, வாக்களிக்கும்போதும் தாமதம் இருக்கவில்லையே? இருப்பினும், மெயில் அனுப்ப வேண்டிய வாசகங்களைத் தந்தால், அப்படியே அனுப்பி விடுகிறேன்.
எனக்கும் சில பத்திகள் சரியாகத் தெரியவில்லை. சில பத்திகள் தெளிவாக இருகின்றன. டிடி அண்ணாச்சி சரி செய்ய உதவுவார் என்று நினைக்கிறேன்.
அரசின் பங்கு நிச்சயம் தேவை. ஆனாலும் நம் மக்களுக்கு எல்லாமே அரசாங்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கென்று ஒரு பொறுப்பும் கிடையாது! அதுதான் மிகவும் வருத்தமான விஷயம். போலீஸ் இருந்தால் மட்டுமே ஹெல்மெட் போடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களை எப்படித் திருத்துவது?
எத்தனை பேர்கள் வாக்களிக்கிறார்கள்?
மழைநீர் சுத்தமானதாக இருக்கலாம். ஆனால் மழைநீருடன் வரும் வெள்ளம் பொருட்களை பாழாக்கிவிடுகிறது. 2005 இல் பெங்களூரில் பெய்த மழையில் எங்கள் கார், மற்றும் டூவீலர் இரண்டுமே பாழாகிப் போனது பேஸ்மெண்டில் நீர் புகுந்ததால்.
ரஞ்சனி மேடம், பதிவைச் சரி செய்திருக்கிறேன். இப்போது சரியாக இருக்கிறதா?
அரசு, மக்கள் இருதரப்புக்குமே பொறுப்பு உண்டு. ஆனால், மக்கள் செய்யத் தவறும்போது கண்டித்துக் கட்டாயப்படுத்தி செய்யவைக்குமளவு அரசுக்குதான் அதிகப் பொறுப்பு என்பது என் கருத்து.
ஓ, நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா வெள்ளத்தால்.... அதன் சிரமங்கள் உங்களுக்கு அதிகமாகவே தெரியும்.
Post a Comment