Pages

Showing posts with label சுற்றம். Show all posts
Showing posts with label சுற்றம். Show all posts

விருந்தாடல்





கொஞ்ச நாள் முன்னாடி, ஒரு புதுமணத் தம்பதியரைப் பார்க்கப் போயிருந்தேன். தனக்கு இன்னும் சுவையாக டீ போடும் பக்குவம் கைவரவில்லை என்று வருத்தப்பட்டார் அந்தப் பெண். சரினு நானே போட்டு (demo) சொல்லிக் கொடுத்தேன். ரொம்ப நல்லாருக்குனு ரசிச்சுக் குடிச்சுட்டுச் சொன்னார், ’உங்களுக்குச் சமைக்கிறதுல நிறைய எக்ஸ்பீரியன்ஸ், அதான் இவ்வளவு ஈஸியா நல்லா டீ போடுறீங்க, இல்லையா?’னு அப்பாவியாக் கேட்டார். நான் சொன்னேன், “அப்படியில்லை. 15 வருஷமாச் சமைக்கிறவங்கிறதால, நான் சமைச்சா நல்லாருக்கும்னு (புதுசாச்) சாப்பிடுறவங்களுக்கு ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னோட பலம். எப்படி சமைச்சாலும், டேஸ்டாருக்குன்னு சாப்பிடுக்கிடுவாங்க. பெரிய பெரிய படிப்பு படிச்சிருந்தாலும், புதுசா படிச்சுமுடிச்ச டாக்டரவிட, ஆயிரம் பேரக் கொன்னாத்தான்  அரை வைத்தியன்னு, கொஞ்சம் அனுபவமுள்ள டாக்டர்கிட்டதானே வைத்தியம் பாக்க விரும்புவோம்? !!”

14 வருஷம் முன்னே, ஒரு கையில ஆறுமாசப் பிள்ளையும், இன்னொரு கையில என் மைனி (அவங்க தம்பி நலனைக் கருதி) எழுதித் தந்த சமையல் குறிப்புகளுமா அபுதாபி வந்து இறங்கினப்போ நானும் இந்த நிலைமையிலத்தான் இருந்தேன். அதுவும் அப்பல்லாம், அபுதாபியில குடும்பத்தோட இருக்கவங்க ரொம்ப ரொம்ப அரிது. ஒரு சந்தேகம் கேக்கணும்னாகூட, ஊருக்கு ஃபோன் பண்ணி அம்மாகிட்டத்தான் கேக்கணும். இலவச இணைப்பா, ”கூடமாட நின்னு வேல செஞ்சாத்தானே”ன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டும்  பாடித் தருவாங்க எங்கம்மா!! இப்பப் போல இணையமோ, சமையல் தளங்களோ கிடையாதே. எல்லா டிவி சேனல்களிலும் வர்ற சமையல் நிகழ்ச்சிகளை (மட்டும்) ஒண்ணுவிடாமப் பார்ப்பேன் - மறு ஒளிபரப்பா இருந்தாலும்!!

நான் அமீரகம் வந்தப்போ, ஒவ்வொரு வார இறுதியிலயும் குறைஞ்சது 10-15 பேரு விருந்தினர்கள் வருவாங்க - எல்லாரும் பேச்சிலர்ஸ்தான். ரெண்டுபேருக்குச் சமைக்கவே திண்டாடிகிட்டிருக்கும்போது, 15 பேர்னா.. அழுகை அழுகையா வரும்...  இப்பப் போல ஹோட்டல்களோ, “ஃப்ரீ ஹோம் டெலிவரி”யோ கிடையாது. ஆனாலும் சமாளிச்சு நான் செஞ்ச சாப்பாடு, பெரும்பாலும் எனக்கே ஒண்ணும் மிஞ்சாது. அவ்வளவு ருசியான்னு சந்தேகம் வந்தாலும், ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கர’யும் ஞாபகம் வரும்.  இன்னொரு உண்மையும் சொல்லணும், சரியான அளவு தெரியாம குறைச்சுச் சமைச்சிருப்பேன். ரெகுலரா வர்ற சில (சமைக்கத் தெரிஞ்ச) பேச்சிலர்ஸ், எனக்கு நிறைய டிப்ஸ் சொல்லித் தந்தாங்க. இப்படித்தான் சமையல் வளர்த்தேன்.

அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சு நிறைய குடும்பங்கள் அமீரகத்துக்கு வர ஆரம்பிச்சுது.  சந்தேகம் கேக்க, வேற யாராவது சமைச்சதைச் சாப்பிட, புது ரெஸிப்பிகள் கேக்கன்னு வாய்ப்புகள் அமைஞ்சுது. ஆனா ரொம்பவே நடுக்கம் தந்த விஷயம், யாராவது குடும்பத்தோட விருந்துக்கு வர்றாங்கன்னு சொன்னாத்தான். பின்ன, பேச்சிலர்ஸ்னா என்னத்த போட்டாலும், அவங்க சாப்பிடுற ஹோட்டல்/மெஸ் சாப்பாட்டுக்கு இது அமிர்தம்னு சாப்பிட்டுகிடுவாங்க. ஆனா, சமையல்ல எக்ஸ்பர்ட் ஆன சீனியர் பெண்கள் வரும்போதுதான் தர்மசங்கடமாயிருக்கும். சிலர், பெருந்தன்மையா சாப்பிட்டு, நம்மை என்கரேஜ் பண்ணி, நிறைய டிப்ஸ்கள் தருவாங்க. இவங்க வந்தாலே சந்தோஷமாருக்கும்.

ஒருசிலர் இருக்காங்க, நாம செஞ்சு வச்சிருக்க மெனுவைப் பாத்துட்டு, “அய்ய, சப்பாத்திக்கு வெஜ் குருமாவா? எங்க வீட்டுக்காரர் தொடவே மாட்டார். மட்டன் முழம்புதான் வேணும்பார்”, “என் பொண்ணுக்கு சப்பாத்தியே பிடிக்காது. பரோட்டாதான் பிடிக்கும்” “குருமால கரம் மசாலா போடலையா, வாசனையே இல்லியே”னு என்னென்னவோ சொல்லுவாங்க.  அப்பல்லாம் எனக்கு அவ்வளவு விவரம் தெரியாதா, (நிஜம்ம்மாங்க) அதனால கண்ணுல தண்ணி முட்ட, அவங்க சொல்றதக் கேட்டுகிட்டு சும்மா நிப்பேன்!! அப்புறம் கொஞ்ச கொஞ்சமாத் தேறி,  யாராவது அப்படி சொன்னாங்கன்னா, “வழக்கமா மட்டன்தானே சாப்பிடுறீங்க, இன்னிக்கு வெஜ் குருமா சாப்பிட்டுப் பாருங்க. இனி மட்டன் பக்கமே போகமாட்டீங்க. உடம்பும் குறையும்”, “சப்பாத்தி நீங்க செய்ற மாதிரி இருக்காது. அதனால உங்க பொண்ணு கண்டிப்பா விரும்பி சாப்பிடுவா பாருங்க” அப்படின்னு ஒரு “உள்குத்தோட” பதில் சொல்லிடுவோம்ல!!

விருந்துக்குப் போனா, வழக்கமா வீட்டில சாப்பிடறதா இல்லாம, வித்தியாசமா வகைகளையும், டேஸ்டையும் சாப்பிடணும், செய்முறை கேக்கணும்னுதான் நிறைய பேரு விரும்புவோம் - என்னைப் போல. அப்படியில்லாம, வீட்டில சாப்பிடுற அதே வெரைட்டிதான் விருந்துக்கும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறவங்களப் பாத்தா எனக்கு ஆச்சரியமாவும், கடுப்பாவும் இருக்கும். எங்க பக்கம் ஒருத்தங்க இருக்காங்க, அவங்க வர்றாங்கன்னா ஃப்ரைட் ரைஸும், சில்லி சிக்கனும்தான் செய்யணும். இது அவங்க வீட்டிலயும் அடிக்கடி செய்றதுதான். கொஞ்ச நாள் ’கட்டுப்பட்டு’ செஞ்சேன்,  இப்ப எனக்கே அலுத்துப் போயி வேற எதாவது செஞ்சிடுவேன்.

அதே சமயம், சிலருக்கு சில உணவு ஒத்துக்காது. அதக் கேட்டுத் தெரிஞ்சுகிடறது அவசியம்தான். பிபி, சுகர் இப்பவெல்லாம் ரொம்ப சகஜமாகிட்டது. அதனால, அதுக்கேத்தமாதிரி மாற்று உணவும் வச்சிருக்கணும். அப்படிப்பட்டவங்க சிரமம் பாக்காம, விருந்து சமைக்கறவங்ககிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறது நல்லது. அப்புறம், “எனக்கு பிபி இருக்குனு தெரிஞ்சே, பிரியாணியும் சிக்கன் ஃப்ரையும் செஞ்சு வச்சிருந்தா”னு குத்தம் மட்டும் சொல்லக் கூடாது!! ஒரு உறவினர், இப்படித்தான் ஹை பிபி, வீட்டில உணவுக் கட்டுப்பாடு இருந்துதுன்னு, கல்யாண வீடு வந்தா முத ஆளா போயிடுவாங்க. அப்புறம், வாதம் வந்து, படுக்கையில கஷ்டப்பட்டு.. எதுக்கு அதெல்லாம்..

என் வாப்பாவோட சிறுவயது நண்பர் ஒருவர், அவரே எழுதின கவிதை(!!) ஒண்ணை அடிக்கடி சொல்வார்:
               பருப்புன்னா வெறுப்பு
              பொறியல்னா மறியல்
              சட்டினின்னா பட்டினி
              கறின்னாதான் சரி!!
சில சமயம் கரெக்டா (உரிமையா) சாப்பாட்டுவேளையில் என் பாட்டி வீட்டிற்கு வந்தாலே புரிந்துவிடும்!! :-)))))

இன்னொரு கஷ்டம், எத்தனை பேரு வர்றாங்கன்னு தெரிஞ்சுக்கிறது. சில சமயம், சிலர் நண்பர்களையோ, குடும்பத்தையோ உடன் அழைச்சுகிட்டு வருவாங்க. நேரா கேக்கவும் தயக்கமாருக்கும். சிலர், அப்படிக் கேக்கறதையே குத்தமா எடுத்துக்குவாங்க!! எத்தினி பேர் வந்தாலும் நிமிஷத்துல சமைச்சுப் போடத் தெரியணுமாம்ல குடும்பப் பொண்ணுக்கு?! பல சமயம், அளவு தெரியாம நிறைய சமைச்சு, மிஞ்சுனத ரெண்டு நாள் சாப்பிட்டு, அப்புறமும் காலியாகாம, மனசில்லாம தூரப் போட வேண்டிய நிலையும் (ராப்பிச்சை கிடையாதே இங்கே) வந்ததுண்டு. அதுக்குப் பயந்து, நாலு பேர் வருவாங்கன்னு அளவாச் சமைச்சா, எட்டு பேர் வந்து நிப்பாங்க!! இப்பல்லாம் இதுக்கொரு வழி கண்டுபிடிச்சுட்டேன்.. வரமுன்னாடி விருந்தாளிக்கு ஃபோன் பண்ணி, “எல்லாரும் கண்டிப்பா வரணும். அத்தை, மாமா, சித்தி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க”னு மனசார  அழைச்சா, அவங்க மனசும் குளிரும்; “இல்லைம்மா, மாமாவுக்கு கால் வலி. அதனால வரமுடியாது. அத்தை அவங்க துணைக்கிருப்பாங்க. நானும், மச்சானும், பிள்ளைகளும் மட்டும் வர்றோம்”னு துல்லியமா சமைக்கிறதுக்கு அளவும் தெரிஞ்சிடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!!

என் தோழியின் மாமியார், திடீர்விருந்தினர்களுக்காகன்னு தினமும் சமைக்கும்போது இரண்டு கப் அரிசி சேர்த்துத்தான் சமைப்பாராம். அவர்கள் இருப்பது நகரத்தில் என்பதால், விருந்தினர்கள் அவ்வப்போது வருவதுண்டு என்றாலும், தினமும் வருவதில்லை. அரிசி விலை கிலோ முப்பத்தாறு ரூபாய். இதிலே தினமும் அதிகமா சமைத்து பழையது சாப்பிடவோ அல்லது வேலையாளுக்குக் கொடுப்பதோ ஏன்? அருகிலே நிறைய உணவகங்கள் உண்டு. அதுவுமில்லாமல், பழைய காலம் போலல்லாமல், இப்போ அலைபேசி வசதி இருப்பதால், தெரிவிக்காமல் யாரும் வருவதில்லை எனும்போது பணமும், உணவும் ஒருசேர வீணாக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்லியதில், மாமியார் புரிந்துகொண்டார்.

உண்மைதானே? ஹோட்டல்களும், வேகத்தகவல்தொடர்பு முறைகளும் இல்லாத அக்காலங்களில் விருந்தோம்பல் என்று காரணம் சொல்லி, ஒருபடி அரிசி அதிகமாகவே சமைப்பார்கள். அப்படி யாரும் வரவில்லையென்றாலும், அந்த உணவு வீணாகாதபடிக்கு, இரவிலும் சாதம் உண்ணும் பழக்கமோ, அல்லது பணியாளர்கள், உறவினர்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள். இப்போவெல்லாம் மாலையில் டிஃபன்தான் பெரும்பாலான வீடுகளில். பணியாளர்களும் சரி, இரப்பவர்களும் சரி, மீந்த சாதம் பெற விரும்புவதில்லை.  கால மாற்றத்திற்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

இன்னும் சிலர், சும்மா அவங்க வீட்டுக்கு நட்புரீதியில் (அறிவிக்காமல்) பார்க்கப் போனாக்கூட, சாப்பிட்டுட்டுத்தான் போணும்னு அடம்பிடிப்பாங்க. வீட்டில் அதற்கான பொருட்கள் இருக்கிறதா, கைக்குழந்தை வைத்திருக்கும் மனைவிக்குச் சமைக்க வசதிப்படுமா, உடல்நலக்குறைவு இருக்கிறதா என்று எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. அதற்குமேலே செல்ல மிரட்டலும் விடுப்பார்கள், “எங்கவீட்ல சாப்பிடாட்டி, உங்க வீட்லயும் நாங்க சாப்பிடமாட்டோம்” - சின்னப் பிள்ளைகள் ‘உன் பேச்சு கா’ என்பதுபோல..

இன்னும் சிலரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகவே பயமாருக்கும். எக்கச்சக்க வகைகளில் உணவு செய்து/வாங்கி வைத்துக் கொண்டு, எல்லாத்தையும் சாப்பிட்டே ஆகணும்னு அன்புத் தொல்லை செய்வாங்க. ஒருசாண் வயித்துல எவ்வளவுதான் திணிக்க முடியும்? வேண்டாம்னு மறுத்தா, ‘பந்தா’ பண்றோம்னு நினைக்கிறாங்க. அப்படித்தான் ஒரு நண்பர் வீட்டில், கட்டாயப்படுத்த, ‘வேணும்னா பார்சல் கொடுத்திடுங்க. ரெண்டு வேளை உங்க பேரைச் சொல்லிச் சாப்பிட்டுக்கிறேன். ஆனா, இப்ப என் வயித்துல துளிகூட இடமில்லை”னு கெஞ்ச வேண்டிய நிலைமையாகிடுச்சு.

அதேபோல, விருந்துக்கு வர்றவங்களையும் இப்படிக் கட்டாயப்படுத்தணும்னு சிலர் எதிர்பார்ப்பாங்க.. எனக்கு நிஜமாவே அதல்லாம் வரமாட்டேங்குது. எப்படி நான் விருந்தினராகப் போகும்போது, எனக்குப் பாசாங்கு பண்ணத் தெரியாதோ, அதேபோல, வந்த விருந்தினர்கள் ‘வேண்டாம்’னு ரெண்டுதரம் சொல்லிட்டா, நிஜமாவே போதும்போலன்னு விட்டுடுவேன். எனக்கு அப்படிக் கட்டாயப்படுத்தத் தெரில.. இதுக்கும் ஒருத்தர் இருக்கார், இடியாப்பம் (அல்லது வேற எதாவது) வைக்கட்டுமா என்று கேட்டால், ‘ஒண்ணே ஒண்ணு வை’ என்று சொல்லிக் கொண்டே ‘முன்று விரல்’ காட்டுவார்!!

இப்ப நோன்பு நேரம்கிறதால, ‘இஃப்தார்’ விருந்துகள் களைகட்டும் காலம்!! (’இஃப்தார்’ விருந்துன்னா, நோன்பு திறக்கும் விருந்து - அரசியல்வாதிகள் நோன்பு கஞ்சி குடித்தார்கள்னு செய்திகள்ல படிச்சிருப்போமே - அதுபோல!!) மற்ற நேரங்களிலாவது கொஞ்சம் அதிகப்படியா சாப்பிட முயற்சிக்கலாம். ஆனா, நோன்பு நேரத்துல  அப்படி முடியாது. பசிச்சிருந்த வயிறைக் கவனமாப் பாத்துத்தான் உணவு கொடுக்கணும். ஒரேடியாத் திணிச்சா, மக்கர் பண்ணிடும் - வயிறு மட்டுமில்லை, முழு உடம்பும்!!  நோன்பினால் உண்டாகக்கூடிய உடல் சூட்டையும், வாய்வையும் குறைக்கக் குடிக்கும் நோன்புக் கஞ்சியைக் கூட சிலர் கறி போட்டு, பிரியாணி ரேஞ்சுக்குச் செஞ்சிருப்பாங்க!! அதுமட்டுமில்லை, பொறித்த அயிட்டங்களும் கணக்கில்லாம சேத்துப்பாங்க சிலர்.  இறைவனுக்காகப் பசித்திருக்கிறோம். அதேசமயம், இறைவன் தந்த உணவையும், உடலையும் வீணாக்காமல் பராமரிக்க வேண்டியதும் நம் கடமைதானே.

மற்ற சமயங்களில் வீணாகும் உணவு அளவைவிட, நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் வீணாக்கும் உணவு அதிகமோன்னு தோணுது. இதுக்கு எச்சரிக்கை தர, சோமாலியாவைப் பாருங்கன்னு சொல்ல மாட்டேன். நம்ம அண்டை, அயல்களைப் பார்த்தாலே போதும்!! பசியைக் கட்டுப்படுத்த நாம் பெறும் பயிற்சி, சரிவிகித உணவை அளவோடு உண்பதிலும் இருக்க வேண்டும். உணவை வீணடித்தலைவிட பெரிய பாவம் இல்லைன்னுதான் சொல்லணும். அளவோடு சமைத்து, அளவோடு உண்டு, அவசியமானவர்களுக்குப் பகிர்வோம்.

Post Comment

எப்படி இருந்த நான், இப்படி..




  
 
”பாடினியார்” ஜெயந்தி  மூணுமாசம் முன்னாடி ”திருமணத்தில் உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள், தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை பற்றி எழுத அழைச்ச தொடர்பதிவு இது; ஸாரி ஃபார் த லேட் கமிங்!!

கல்லூரியில் படிக்கும்போதுதான் பெண்ணீயம், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்   எல்லாம் குறித்தும் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பெண்கள் சுதந்திரம் குறித்த மீட்டிங்குகள் கல்லூரியிலோ, சுற்று வட்டாரத்திலோ (வெளியூர்னா வீட்டில விடமாட்டாங்கல்ல)  நடக்கும்போதெல்லாம் நானும் ஆஜர்!! அதுவுமில்லாம எங்கம்மாவுக்கும் மாமியார்-நாத்தனார் கொடுமைகள் நடந்ததுண்டு. இன்னும் சில நெருங்கிய உறவுகளில் மாமியார் கண்டிப்பினையும் கண்கூடாகக் கண்டு வந்ததால், புகுந்த வீட்டினர் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல என்று புரிந்துகொண்டேன். பத்திரிகைகள், கதைகள், சினிமாக்களிலும் சித்தியைப் போல மாமியாரும் கொடுமையானவராகவே இருந்தது இன்னும் பயம் ஏற்படுத்தியது.

அதனாலேயே இன்னுமதிகம் பெண்ணுரிமைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன்.  இந்தப் பெண் விடுதலை குறித்த சந்திப்புகளும் எனக்கு நல்ல தைரியத்தையும் ஊட்டி, முற்போக்கு எண்ணங்களையும் வளர்த்து, எனது உரிமைகளையும் தெளிவாக அறியவைத்த அதே சமயம், மாமியார், நாத்தனார்கள்தான் பெண்களின் எதிரிகள் எனவும் அறுதியாகப் புரிய வைத்தன. இப்படியாக நானும் என்னைத் தயார் செய்துகொண்டேன்.

என்ன தயார் செய்துகொண்டாலும், வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம்தான் வேண்டும் என்ற என் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியாத அளவு கட்டுப்பாடான, கண்டிப்பான  அம்மா!!  அப்பாவிடம் சொல்லலாம் என்றாலும், வெட்கமாக இருந்தது. தத்துபித்தென்று ஏதோ கொஞ்சம் சொல்ல, “அப்படியொரு வரன் அமைந்தால் எனக்கும் சந்தோஷம்தான்; ஆனால், அதற்காக அப்படி இடம்தான் வேண்டும் என்று என்னால் காத்திருக்க முடியாது” என்று சொல்லிவிட, எனக்கும் பிடிவாதமாக இருக்க முடியவில்லை. ஏனெனில், வேறுசில காரணங்களோடு, என் படிப்பு மற்றும் வேலையாலும் வரிசையாகத் தட்டிப் போன வரன்களும், என் மூன்று தங்கைகளும்!!

எங்களின் எந்தவித முயற்சியுமில்லாமலேயே, என் விருப்பப்படியே, ஆசைப்பட்ட படியே வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம் அமைந்தது. இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆமா, பின்னே? கஷ்டப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு!! இருந்தாலும் அவங்க வீட்டில உள்ளவங்க எப்படி இருந்தாலும் நான் முதல்ல உறுதியா இருந்து என் உரிமைகளை நிலைநாட்டிக்கணும்னு நினைச்சுகிட்டேன்.

அப்புறம், என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்!! அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல!! இதுவும் “புஸ்”!! அதனால, என் வீட்டு சார்பா வச்ச அலங்காரத் தட்டிகள்ல என் பேரு முதல்ல வர்ற மாதிரி பாத்துகிட்டேன். ஆனா, அதை ஒரு ஈ, காக்கா கூட கண்டுகிடாததினால, அதுவும் ”புஸ்”!!

கல்யாணத்துக்கு முன்னாடி நாத்தனார் கூப்பிட்டு என்ன கலர் புடவை வேணும்னு கேக்க, நான் ”பட்டெல்லாம் வெறும் கலர் பார்த்தா எடுக்க முடியும், டிஸைன், கலர் காம்பினேஷன்லாம் பாத்துதான் எடுக்கணும்”னு பந்தா விட, உடனே அவங்க, “நானும் அப்படித்தான் நினைச்சேன்; ஆரெம்கேவிதானே, பேசாமே நீயும் அங்க வந்துடு, சேந்தே பாத்து எடுத்துக்கலாம்”னு சொல்ல, இதுவும் புஸ்!! “சே, நமக்கு சான்ஸே கொடுக்க மாட்டேங்கிறாங்களே”ன்னு நொந்துகிட்டேன். ஆனாலும் விடாமல், அவங்க எடுக்க நினைச்ச விலைக்கு, கிட்டதட்ட பாதி விலைக்குத்தான் எடுப்பேன்னு அடம்புடிச்சு நிறைவேத்திகிட்டேன்.

இதெல்லாம் ஆரம்ப ஜோர். இதுக்கெல்லாம் மசிஞ்சுடாதே; கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா (போராட) நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு என் மனச நானே சமாதானப்படுத்திகிட்டேன். இன்னும் ஆழமா என்னைத் தயார் பண்ணிகிட்டு, புகுந்த வீட்டுல அடியெடுத்து வச்சேன். ஆனா, நான் எவ்வளவோ தயார் பண்ணிகிட்டு வந்தாலும், அவங்க கையில வச்சிருந்த  ஆயுதத்துக்கு முன்னாடி என்னோட  முன்னேற்பாடுகள் எதுவுமே செல்லுபடியாகலை!! ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு”!! அதற்குமுன் எது செல்லுபடியாகும்? இப்பவும் “புஸ்”!!

இத்தோடு, எந்த பண்டிகைச் சீரும் வேண்டாமென்று மறுத்ததும் என் வேலையைச் சுலபமாக்கியது. ஏன், நானே விரும்பிக் கேட்டும், வளைகாப்புகூட நடத்தவில்லை என் மாமியார். “மற்ற மருமகள்களுக்கும் செய்ததில்லை; உனக்கு மட்டும் செய்தால், அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும்” என்று சொல்லிவிட்டார்.

இப்படி நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி,  இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது! :-)))))

இதனால் எனக்கு புகுந்த வீட்டில் எப்பவும் அன்பு மழைதான் என்று அர்த்தமில்லை; சிலபல சங்கடமான சுழ்நிலைகளும் வரும்; ஆனால், அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, மாமியார், நாத்தனார், ஓரகத்திகளைப் பேணி ஒற்றுமையாய் இருக்கும் பொறுமையை எனக்கு இந்தச் சம்பவங்கள் தருகின்றன.

உதாரணமாக,  திருமணமான சில வருடங்களில் வீடு கட்ட ஆயத்தமான போது, இயற்கை விரும்பியான எனக்கு வேறு விதமாக வீடு கட்ட ஆசை; ஆனால் என் மாமியார் உட்பட மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லையென்று புரிந்துகொண்டேன். என் ஒருத்திக்காக அத்தனை  பேரின் ஆசையை நிராசையாக்குவதைவிட, அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது; இறைவனருளால் வசதிவாய்ப்புகள் வாய்த்தால் என் விருப்பப்படி இன்னொரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அதன் விளைவு, தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு!!

’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!


Post Comment

உள்ளூர் உறவுகள்




"லோ, சாச்சி!! நல்லாருக்கியா?”

“அலோ!  நீயா? நாங்க நல்லாருக்கம். நீ நல்லாருக்கியா? மருமவேன், புள்ளையல்லாம் எப்பிடிருக்காங்க?”

“எல்லாரும் நல்லாருக்கோம் சாச்சி.  சாச்சா சொகமாருக்காங்களா?”

“ஆமா. அதாரு அங்கன இருமுற சத்தம் கேக்குது. சின்னவனா? ஏன் இப்பிடி இருமுறான்? குளுந்ததுகள குடிச்சானா? நாளக்கழிச்சு நம்ம மேலத்தெரு காஜா அங்க வர்றான்; அவன்ட்ட அக்கரா பொடி குடுத்துவுடுறேன், தேன்ல குழப்பி மூணுநாளைக்கி குடு புள்ளைக்கி, சரியாயிடும்.”


லோ, மாமா, நாந்தான் பேசுறேன். எல்லாரும் சொகமா?”

“ஆமாம்மா.  ஏம்மா, அங்க இந்த வருஷம் வெயில் ஜாஸ்தியாமே? மாப்பிளைக்கு இப்பவும் வெளிய சைட்ல வேலை இருக்கா? நிறைய தண்ணி, மோர் குடிக்கச்சொல்லு. பிள்ளைகளுக்கும் தலையில குளுகுளுன்னு நல்லெண்ணை தேச்சு விடும்மா. இங்கன உள்ள வெயிலே நமக்குத் தாங்க முடியலை?”

 ”சரி மாமா...”

“ஏம்மா, முந்தி வாங்கின நிலத்துக்கு வேலி போட்டாச்சுல்ல? இல்லன்னா சொல்லு, ஏற்பாடு செஞ்சிடலாம்.  சொத்து வாங்குறதவிட, அத முறையா பாதுகாக்கணும், அதான் முக்கியம்! ஆமா, அதுக்கப்புறம் ஒண்ணும் வாங்கலியா? கட்டுசெட்டா இருந்து சேத்தாத்தானேம்மா பின்னாடி ஒதவும்? சுதாரிப்பா இருந்துக்கம்மா? ”

லோ, மைனி நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கோம்; பிள்ளைகளுக்குப் பரிட்சைதானே இப்ப?”

“ஆமா மைனி; மைனி, இப்பத்தான் ஞாபகம் வந்துது, ரேஷன் கார்டுல சின்னவன் பேரைச் சேக்கலைன்னு நினைக்கிறேன். அண்ணன்ட சொல்லி கொஞ்சம் பாத்து சேத்துடச் சொல்லமுடியுமா மைனி? இப்ப சென்ஸஸ் வேற எடுக்குறாங்களே, அதுக்கும் வேணும்ல, அதான்..  அண்ணனுக்குக் கஷ்டம் இல்லியே?”

“அதெல்லாம் நீ கவலைப்படாதே. இதில என்ன பெரிய கஷ்டம்? நான் பாத்து  எல்லாம் முடிச்சுட்டு தகவல் சொல்றேன். நீ சின்னவன் முழுப்பேரும், பிறந்த தேதியும் மெஸேஜ் பண்ணு போதும். நேத்துதான் உனக்கும் சேத்து மாசி பொடிச்சேன். யார் வர்றான்னு பாத்து குடுத்து விடுறேன் என்னா?”

லோ, அண்ணே,  வீட்டில எல்லாரும் சுகம்தானே?”

“எல்லாரும் சுகம். அங்க எப்படி? ஆமா, அடுத்த மாசம் லீவாச்சே பிள்ளைகளுக்கு? ஊருக்கு வரலியா? அப்புறம், சொல்ல மறந்துட்டேன், எல்.ஐ.ஸி. பாலிஸி ரெண்டுத்துக்கும் பணம் கட்டியாச்சு. வீட்டுத் தீர்வையும் கட்டிட்டேன். நீ வரும்போது பில்லை மறக்காம வாங்கிக்கோமா!”

“அண்ணே...”

“நீ என்ன சொல்லுவன்னு தெரியும். தாங்க்ஸெல்லாம் சொல்ற அளவுக்கு உன் வீட்டுக்காரரோட எனக்கு மேலோட்டமான ஃப்ரண்ட்ஷிப் இல்லன்னு உனக்கும் நான் எத்தினிவாட்டி சொல்றது?”

லோ சின்னாப்பா, நாந்தான். நல்லாருக்கியளா?”

“அட நீயா? நல்லாருக்கம் மவளே. அங்கன எல்லாரும் சவுக்கியந்தானே? உன் வாப்பா, உம்மாட்ட நான் நெதம் பேசிட்டுதான் இருக்கேன். நீ ஊருக்கு வர்றியாமே? நம்ம ஃபைஸல் இந்த வருஷம் பி.ஈ. முடிச்சிட்டான் தெரியுமா? ”

“ஆமா சின்னாப்பா. என்ன செய்யப் போறானாம்? இந்தப் பக்கம் வர்ற மாதிரி ஐடியா இருக்காமா?”

“இல்லம்மா. அங்கல்லாந்தான் இப்ப நெலம சரியில்லன்னு சொல்றாங்களே. இருக்கிறவங்க வேலைகளுக்கே பிரச்னைன்னு சொல்றாங்க. அதில நீங்க வேற ஏம்மா இவனுக்கு விஸா, வேலைன்னு அலையணும்? இங்கயே எதாவது பாத்துக்கடான்னு சொல்லிட்டேன். சரிதானே? ஆமா, சின்னவனுக்குப் புடிக்கும்னு கோதுமைப் பணியம் கொடுத்துவுட்டேனே, விரும்பிச் சாப்பிட்டானா?”

ருகில் இல்லையென்றாலும் எனையும் மறவாது, உரிய அறிவுரைகளும் தந்து,  பலப்பல உதவிகளும் செய்யும் என் அருமை சொந்தங்களாலும், நட்புகளாலும்தான் என் நிம்மதியான வெளிநாட்டு வாழ்வு சாத்தியப்படுகிறது.  இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன  அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!
  
  

Post Comment