Pages

Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

அப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா?!!




 கமலுக்கு ரஜினி பரிசளித்த ஓவியம்

இங்கே அமீரகத்தில் திரையரங்குகளில் அதே டிக்கட் விலை; எந்த இந்திரன், சந்திரனுக்காகவும் விலை கூடாது என்பதால் விலைவாசி, வன்முறை கவலையில்லாமலும், விசில் சத்தம், ஆட்டம் பாட்டம் தொந்தரவில்லாமலும்  எந்திரன் படம் பார்த்தோம்!!

ஆக, கதை என்னான்னா, பத்து வருஷம் உழைச்சு  நாட்டுக்காக ஒரு ரோபோ செஞ்சா, அது காதல் செய்யப் போயிடுதாமே? முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல!! (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம்!!)

அவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ரோபா, காதலிக்காக ‘கொசு’ பிடிக்கப் (!!) போறதைப் பாத்து, நான்கூட ஆசையா, காதலியைக் கடிச்சதுக்காக உலகத்துல கொசு இனமே இனி இருக்கக்கூடாதுன்னு ‘வீரவசனம்’ பேசி அழிக்கப் போறாப்புல; இப்படி(படத்துல)யாவது கொசு அழியட்டும்னு நினைச்சா... சீ..ன்னு ஆகிடுச்சு..


சிட்டியோட சில சாகசக் காட்சிகளின்போது, ‘சக்திமான்’ பாக்கிற எஃபெக்ட் வருது!! மின்னல் தாக்குனதும் ரோபோக்கு உணர்ச்சிகள் பெருகுவதும்... முத்தம்  கொடுத்தா காதல் வர ரோபோக்கு தொடு உணர்ச்சி இருக்கான்னு கேள்வி வர்றதும்... ரோபோவின் ’நட்’டை ஸ்குரூவால் டைட் செய்ததும், அதன் குரல் மாறுபடுவதும்...

சரி, சரி, விடுறா கைப்புள்ள, இப்படியே சந்தேகம் கேக்க ஆரம்பிச்சா, இந்தப் பதிவு  முழுசும்கூட பத்தாது!! எவ்வளவோ படம் பாத்தோம், அப்பல்லாம் ‘லாஜிக்’ பாத்தோமா என்ன?

ஆனாலும், ஷங்கர் டீம் & ரஜினியின் உழைப்பு அபாரம்!! ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்’ முதல் ’எந்திரன்’ வரை வில்லன் வேஷம்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது!!

இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? ரயில்ல ஐஸ்வர்யாவை வில்லன் நெருங்குனதும், சுத்தியிருக்கவங்க எல்லாரும் மொபைல் ஃபோன் காமிராவை ஆன் செய்யுறதும்... அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...

இந்தப் படத்துக்காக ரசிகர்கள் செய்ற ஆர்ப்பாட்டங்கள் ரொம்ப ஓவராத்தான் போகுதுபோல!! இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது!! இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ?! (பத்த வெச்சுட்டியே பரட்டை... )

4000 லிட்டர் பாலாபிஷேகம் என்றெல்லாம் கேட்கும்போது மனம் கனக்கிறது. ஒரு படம் பார்த்தோம், வந்தோம் என்றில்லாமல் இப்படி கலைஞர்களை ‘தெய்வம்’ லெவலுக்குக் கொண்டாடும் மாயையிலிருந்து ரசிகர்களும் என்றைக்கு விடுபடப் போகிறார்களோ? எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜினியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது.  ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரமாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ? அரசியல் தலைவர்கள்தான் தொண்டர்களைப் பலியாடாக்குவர்.


சன் டிவி குழுமம் செய்வதும் எரிச்சல் பட வைக்கிறது என்றாலும், அவர்களது வியாபாரத் தந்திரம். அவசியமேயில்லாத பொருட்களையும்  ’அதிரடித் தள்ளுபடி’ என்ற பெயரில் நம்மை வாங்க வைக்க முயற்சிக்கும் வியாபாரிகளின் தந்திரம் அது. ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல் நமது தேவை,  வருமானம், சூழல்களைக் கவனத்தில் இருத்தி ’விரலுக்கேத்த வீக்கமாக’ வாழ்வது நம் சாமர்த்தியம்!!  ம்க்கும்.. அப்படில்லாம் விவரமானவங்களா இருந்துருந்தா இப்படி ‘இலவச’ உலகத்துல இருக்க வேண்டி வந்துருக்குமா என்ன!!

மொத்தத்துல ஒரு நல்ல படமா கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதை, அளவுக்கதிகமான விளம்பரம் மற்றும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால், முகம் சுளிக்க வைத்து கண்டனத்திற்குள்ளாக வைத்ததுதான் சன்- ஷங்கர்-ரஜினி கூட்டணியின் சாதனை!!
 
 

Post Comment