Pages

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

கவன ஈர்ப்பு




கவனத்தை ஈர்த்த சில செய்திகள்!!


ஊறிய கால்கள்!!




 சத்தியாக்கிரகம் தெரியும்; “ஜல சத்தியாக்கிரகம்” தெரியுமா?

மத்திய பிரதேசத்தில், கோங்கோல் என்ற ஊரில், நர்மதா ஆற்றின் இந்திரா சாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால், தம் ஊரிலுள்ள வீடுகள், பயிர்நிலங்கள் மூழ்கப் போவதை எதிர்த்தும், அதற்குரிய நிவாரணங்களை முறையாக வழங்கக் கோரியும் அம்மக்கள் ஆற்றில் நின்று போராட்டம் நடத்திவருகிறார்கள். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் அல்ல; 15 நாட்களுக்கு மேலாக, நாள்முழுதும் தண்ணீரிலேயே நின்றுக் கொண்டிருக்கிறார்கள்!! 

முதலில் நெஞ்சுவரை இருந்த நீர்மட்டம், தற்போது கழுத்து அளவு வந்துவிட்டது. மழையும் பெய்துவருகிறது. என்றாலும், மனம்தளராமல் நின்று போராடி வருகிறார்கள்.  மாநில பிஜேபி அரசு, 15 நாட்களுக்குப் பின்னரே தன் மந்திரிகளை அனுப்பி விசாரித்துள்ளது. எனினும் தம் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை, காலவரையற்ற போராட்ட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

மகாராஷ்டிர மாநில தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த  அமைச்சர் லட்சுமணராவ் டோப்லே, ”கற்பழிப்புக்கு ஆளானவர்களுக்காக நியாயம் கேட்டு, நேரத்தை வீணடிக்கும்  போராட்டங்கள் நடத்துவதால், எந்த பயனும் இல்லை. பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு, முறையான கல்வியும், சட்ட நடைமுறைகளையும் கற்றுத்தர வேண்டும். பின்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இதைவிடுத்து, போராட்டங்கள் நடத்துவது என்பது, வழக்கின் தீவிர தன்மையை குறைத்து விடும்” என்று கூறியுள்ளார்.

ரஜினி-சத்தியராஜ் நடித்த ’என்னம்மா கண்ணு சௌக்கியமா’ பாடல் இடம்பெற்ற   ”மிஸ்டர். பாரத்” படம் மாதிரியான நடவடிக்கைகள்தான் இந்த நாட்டுக்குச் சரிவரும்னு சொல்றாரு அரசாங்க மந்திரி!! :-(((

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக போராட்டக் குழுவினர், போராட்டத்தின்போது இறப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது உண்மையெனில், என்ன சொல்ல வருகிறார்கள் இதன்மூலம்? 

விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதுக்குன்னே காத்திருக்கும் அரசாஙகமே ஓடிவந்து உடன்ன்ன்னே பணம் தருமே. பின், இவர்களுக்கும் அரசிற்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் அரசு வழங்கிய நிகழ்ச்சியில், ஒரு சிறுமி, “பணம் வேண்டாம்; என் அப்பாதான் வேணும்” என்று அழுதாளாம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

சிவகாசி வெடிவிபத்து நடந்த இடத்திற்கு வெகுஅருகில் அரசு பள்ளி ஒன்று இருக்கிறது. முதல் வெடிச்சத்தம் கேட்ட நேரம்,  உணவு இடைவேளை நேரம் சமீபத்திருந்தது என்பதால் குழந்தைகளை வெளியே விடாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டனர். விட்டிருந்தால், ஆர்வத்தின் காரணமாக விபத்தை வேடிக்கை பார்க்கச் சென்றிருப்பர். அடுத்து நடந்த வெடிப்பில் இவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்!! 

மேலும் வெடிவிபத்தின் அதிர்வால் பள்ளி கட்டிடத்திலும் விரிசல் விழுமென்று எதிர்பார்த்து, மாணவர்களை கட்டிடத்தைவிட்டு வெளியேற்றி மைதானத்தில் வைத்துப் பாதுகாத்துள்ளனர் ஆசிரியர்கள்!! எதிர்பார்த்ததுபோலவே, விரிசலும் விழுந்துள்ளதாம்.

இதற்கிடையே  சாலை மோசமாக இருந்ததால், தீயணைப்புப் படையினர் வந்துசேரத் தாமதமாகியிருக்கிறது. இதுவும் நல்லதுக்குத்தானாம். ஒருவேளை சீக்கிரம் வந்திருந்தால், கடைசி வெடிப்பின்போது தீயணைப்பு வீரர்கள், அதனருகே இருந்திருப்பார்கள்!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
 
அமெரிக்கா, தன் நாட்டில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று சொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றி வருகிறது.  மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாட்டினரே இவ்வாறு குடியறியவர்களில் பெரும்பான்மை. என்றாலும், இவர்கள் அமெரிக்கா வந்தபின் பெற்ற பிள்ளைகள் அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர்கள் என்பதால், பல குடும்பங்களில் பெற்றோர் வெளியேற்றப்பட்டு, குழந்தைகள் அமெரிக்காவில் என குடும்பங்கள் பிரிக்கப்படுவதும் நிகழ்கிறது.

இந்நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்களிடையே  “அமெரிக்கர்கள் செய்யத் தயங்கும் கீழ்மட்ட வேலைகளை இவர்கள் செய்தார்கள். அவர்களை வெளியேற்றுவது துரோகச் செயல்” என்று ஆதரவும், “இவர்களால்தான் நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டது; குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலை பார்க்க முன்வருவதன்மூலம் மற்றவர்களின் வேலைவாய்ப்பில் குறுக்கிட்டார்கள். எனவே வெளியேற்றுவது சரியே” என்று எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இதெல்லாம் மற்ற நாடுகளில்தான் உள்ளது என்ற நினைப்பு இருந்தது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கில்லைபோல!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இந்தியாவிலும், பிற நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்து குடியேறுபவர்களைக்கூட வெளியேற்ற வேண்டும் என்று சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்க, நம் அண்டை நாடான “பூடான்” சத்தமேயில்லாமல், 31 இந்தியர்களை தன் நாட்டிலிருந்து இதே சட்டவிரோதக் குடியேற்றக் காரணத்தால்  வெளியேற்றியுள்ளது!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

நீதி தாமதமானாலும் சாகாது என்பதை மெய்ப்பிக்கும்விதமாக இரண்டு தீர்ப்புகள்: கசாப் மரணதண்டனை மற்றும் நரோடா பாட்டியா தீர்ப்புகள். என்ன, கசாப்  இனி அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புற சாத்தியக்கூறுகளைத் தடுக்கணும்.

 -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment