Pages

Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

வியாபாரமாக்கப்படும் புனிதப் பயணம்




ஏப்ரல் 2012 சமரசம் இதழில் வெளியான கட்டுரை:

                  
ஐம்பெருங்கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை இனிதே முடித்து,
வந்த ஹாஜியாரிடம்,  “ஹஜ் கடமைகள் சிறப்பாக முடிந்ததா? மக்கா ஹரமில் எல்லா நாளும் ஐவேளையும் தொழுதீர்களா? தங்குமிடம், பயணங்கள் வசதியாக இருந்தனவா?” என்று நலம் விசாரிக்க முற்படுகையில், அவரது கண்களில் பல்வித உணர்ச்சிகளும் கலவையாய்க் காணலாம். பின்னர், வலிந்து, மகிழ்ச்சியை மட்டுமே கண்களில் காட்டி, “எல்லாம் இறையருளால் சிறப்பாய் நடந்தது” என ஒற்றைவரியில் பதிலை முடித்துக் கொள்வார். இதை வாசிக்கும் நீங்கள், ஒருவேளை ஹஜ் கமிட்டி வழி சென்ற ஹாஜியோ என நினைப்பீர்கள். இல்லை, அதைவிட அதிகம் பணம் வசூலிக்கும் தனியார் ஹஜ் சேவை நிறுவனம் மூலம் சென்று வந்தவர்தான் இவரும்!!

இன்று ஹஜ் பயணம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் அறுபது வயதைக் கடந்த முதியவர்களே என்பதால், அவர்களைப் பொறுப்பேற்று அனுப்பிவைக்கும் அவர்களது உறவினர்களும், பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை. முதியவர்களுக்கு தரமான கவனிப்பும், சேவையும், பாதுகாப்பும் வேண்டும் என்பதற்காகவே, அரசு-சார் ஹஜ் கமிட்டியினைத் தவிர்த்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்த நிறுவனங்கள் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில்லை என்பதே வருத்தமான உண்மை.

சில காலம் முன்பு, தனியார் ஹஜ் பயண நிறுவனங்கள் என்பவை மிக அரிதாகத்தான் இருந்தன. ஆனால், புற்றீசல் போல, இன்று தெருவுக்கொன்றாக முளைத்துவிட்ட தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கைகளே சொல்லும், ஹஜ் பயணம் என்பது எவ்வளவும் லாபம் கொழிக்கும் பிஸினஸாக மாறிவிட்டது என்பதை.  ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் கடமையாகக் கருதும் ஹஜ்ஜை நிறைவேற்ற உதவுவதை, இவர்கள் லாப நோக்குடன் தொழிலாகச் செய்வது தவறில்லை என்றாலும், அதில் நியாயத்துடன் செயல்படுவது மிக அவசியமல்லவா? கிட்டத்தட்ட, வெளிநாட்டு வேலை பெற்றுத் தர உறுதியளிக்கும் ஏஜெண்டுகள் போல இவர்களும், சொல்வதொன்று, செய்வதொன்றாக மாறிவருவது வேதனையிலும் வேதனை.

ஹஜ் பயணம் செல்லும் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகும் தருணங்கள்:

1. மக்காவில் தங்குமிடம்:

தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் பொதுவாக 40 நாட்கள் பயணமாக கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பணம் செலவழித்து, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செல்லக்கூடியதாக இருப்பதால், கிடைத்த வாய்ப்பிலேயே அதிக நாட்கள் மக்காவில் தங்கி அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து, அதிகம் நன்மைகள் பெற்றுக் கொள்ளலாமே என்ற ஆவல்தான் காரணம். ஆனால், அங்ஙனம் அழைத்துச் செல்லப்படும் பயணிகள், மக்காவில் ஹரமில் இருந்து ஏழெட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் அஸீஸியா, ருஸைஃபா போன்ற இடங்களில்தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அங்கிருந்து கஃபா ஆலய ஹரமிற்குத் தினமும் ஐவேளை வந்து தொழுவதற்கு உரிய போக்குவரத்து வசதிகளும் நிறுவனத்தாரால் செய்துதரப்படுவதில்லை. ஹஜ் பயணி தன் தனிப்பட்ட ஆர்வத்தால், வாடகைக்கார் பிடித்து சென்றுகொண்டால் உண்டு.  அதுவும் ஹஜ் காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஹரத்திற்கு வர இலகுவில் சம்மதிப்பதும் இல்லை; சம்மதித்தாலும் பெருந்தொகை - 50 ரியால் முதல் 100 ரியால் வரை கேட்பர்!!

மொழி தெரியா ஊரில், ஒரு முதியவர் எப்படி தினமும்  சென்று வர முடியும்? உடல்நிலையோடு, பொருளாதார நிலையும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அது பெரும்பாலும் முடியாததாகையால், வாரத்தில் ஒருமுறையோ இருமுறையோ மட்டும் சென்றுவிட்டு, மீதி 20 நாட்கள் வரை ரூமில் அடைந்து கிடக்கின்றனர். வேளா வேளைக்கு உணவுண்டு, உறங்கி ஓய்வெடுப்பதற்காகவா 2 முதல் 3 லட்சம் கொடுத்து அவர்கள் தனியார் ஹஜ் நிறுவனத்தில் புனிதத்தலமான மக்கத்திற்கு வந்தனர்?

இதிலே, மக்காவின் எல்கைக்குள் எங்கு தொழுதாலும், ஹரத்தில் தொழுவதற்கு ஈடாக ஒரு லட்சம் நன்மைகள் கிட்டும்  என்று சொல்லி ஏமாற்றுபவர்களும் உண்டு; அதை நம்பி ஏமாறும் அப்பாவிகளும் உண்டு!!

2. முஜ்தலிஃபாவிலிருந்து மினா வருகை:

ஹஜ்ஜின் 10-ம் நாளன்று, முஜ்தலிஃபாவில் ஃப்ஜ்ர் தொழுதுவிட்டு, மினாவுக்கு சுமார் 3 முதல் 5 கிமீ தூரம் நடந்து வரவேண்டும். நடப்பதில் சிரமம் இல்லை. ஆனால், வரும் வழியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில், கல் எறிய ஜமராத்தை நோக்கிச் செல்லும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கடந்து வரவேண்டும். இது மிகவும் அபாயகரமான நெரிசல் ஏற்படும் இடம் என்பதால், கூட்டத்தில் மாட்டி ஹாஜிகள் பலர் தொலைந்து போவதும் இந்த இடத்தில்தான். அப்படிப்பட்ட இடத்தில், இவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, திடகாத்திரமானவர்களைக் கொண்டு சங்கிலி வளையம் அமைத்து,  ஜனத்திரளைக் கடக்க வைக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், முதிர்ந்தவர்களையும், பெண்களையும்கூட தம் பொறுப்பில் ஏற்காமல் விட்டுவிடுகின்றனர். நெரிசலில் சிக்கி, நைந்து போய் தப்பி வருகிறவர்கள் சிலரென்றால், பலர் தொலைந்தே போய்விடுகிறார்கள். அவர்கள் வழி அறியாமல், எங்கெங்கோ அலைந்து, திரிந்து வந்து சேருவார்கள். இரண்டு நாட்கள் கழித்து வருபவர்களும் உண்டு. அதிலும், பிபி, சுகர் உள்ளவர்கள் என்றால் வந்துசேரும்போது அவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

அவர்களின் பாதுகாப்புக்கும் சேர்த்துத்தானே பொறுப்பேற்று, பணம் பெறுகிறார்கள் இந்நிறுவனத்தினர்?

3.  ஹஜ்ஜின் தவாஃப்:

துல் ஹஜ் 10-ம் நாள் அல்லது 11-ல் ஹஜ்ஜின் பகுதியாக தவாஃப், சயீ செய்ய ஹாஜிகள் மினாவிலிருந்து மக்கா வரவேண்டும். சுமார் 10 முதல் 12 கி.மீ. தூரமுள்ள இந்தப் பயணத்திற்கும், ஹாஜிகள் தாங்களே வாகனம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அல்லது நடந்து வர வேண்டும். ஹஜ்ஜிற்கு வந்த அனைத்து லட்சக்கணக்கான மக்களும் இந்நாட்களில் தவாஃப், சயீ செய்ய மினாவிலிருந்து செல்வார்கள் என்பதால் வாகனங்கள் வாடகைக்கு கிட்டுவதும் மிக மிகச் சிரமம். அதனால் அடையும் தாமதத்தின் காரணமாய், மினாவில் இரவின் பெரும்பகுதியைச் செலவழிக்க வேண்டும் என்ற ஹஜ்ஜின் விதியை மீற வேண்டிய சூழலும் சிலருக்கு ஏற்பட்டு, ’தம்’ கொடுக்க வேண்டியவர்களாகிறார்கள்.

கட்டணம் வாங்கிக் கொண்டாவது,  நிறுவனத்தினர் இந்நாட்களில் தம் குழுவினருக்காக வாகனம் ஏற்பாடு செய்து தரலாமே என்பதே வயதான ஹாஜிகளின் ஏக்கக் கேள்வி.

4. மஹரமில்லாப் பெண்கள்:

ஹஜ்ஜின் விதிகளில், தகுந்த மஹரமில்லாமல், பெண் பயணிகளைத் தனியே அழைத்து வரும் பாவத்திற்கு பணத்திற்கு ஆசைப்பட்டு உடந்தையாகிறார்கள் நிறுவனத்தினர் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் முதிய பெண்கள் என்றால், அது பெருங்கொடுமை!!  மேற்சொல்லிய மூன்று சூழல்களிலும் அதிகமதிகப் பாதிப்பிற்குள்ளாவது தனியே வரும் முதிய பெண்கள்தான்!! அவர்களால் தனியாகவும் செல்லமுடியாது; அழைத்து வரும் நிறுவனமும் பொறுப்பேற்காது; குழுவில் உடன் வருபவர்களும் அப்பெண்களின் உடல்நிலை அல்லது தத்தம் சூழ்நிலை காரணமாய் உதவிட முடியாத நிலை எனும்போது, ஹஜ்ஜின் கட்டாயக் கடமைகளிலேயே குறை ஏற்பட்டு, ஹஜ் முழுமையடைவதே கேள்விக்குறியாகிறது!! பெரும்பாலும் இப்பெண்களின் ஹஜ்ஜை முழுமையாக நிறைவேற்ற உதவுவது, மனிதாபிமானமுள்ள சக பயணிகளே தவிர அழைத்துச் சென்ற நிறுவனமல்ல!!

5. தவறான வழிகாட்டுதல்கள்:

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக, ஹஜ்ஜின் கிரியைகள், பிரார்த்தனைகள் சிலவற்றில் ஒருசில நிறுவனங்களின் ஹஸரத்துகள் தவறுதலாக வழிகாட்டுவதும் நடக்கிறது. உதாரணமாக, அரஃபா தினத்தன்று, மதியம் லுஹர் வேளையிலேயே லுஹர் மற்றும் அஸரைக் கஸராகச் சேர்த்துத் தொழுதுகொள்வதுதான் நபி காட்டிய வழி. ஆனால், சிலர் லுஹரையும், அஸரையும் தனித்தனியே அவற்றின் வேளைகளில் தொழச் செய்கின்றனர்!! மேலும், இஹ்ராம் துணியை கபன் துணியாகப் பயன்படுத்த வேண்டி ஜம்ஜம் நீரில் நனைத்து வைத்துக்கொள்ளச் சொல்லும் ஃபித்-அத்தான அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன!!

6. கூடுதல் பணம் கேட்பது,  கடைசி நேரத்தில் பயணம் கேன்ஸலாவது:

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போக, கிளம்பும் நேரத்தில் கூடுதல் தொகையாக 25,000 முதல் 50,000 கேட்பதும் ஒரு புதிய பழக்கமாக உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே லட்சங்களில் பணம்புரட்டி கட்டிய வசதியற்றவர்கள், கடைசி நேரத்தில் அவசரமாகக் கேட்கப்படுவதால், கடன் வாங்கித்தான் கொடுக்க நேரிடுகிறது. இதனால், ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கடன்களை அடைத்துவிடவேண்டும் என்ற விதியை மீறும் நிலை ஏற்படுகிறது!!

பயணிகள், சவூதியில் மேல்செலவுக்காகக் கொண்டுபோகும் பணத்தை நிறுவத்தினர் இங்கு ரூபாயாக வாங்கி, சவூதி வந்து ரியாலாகத் தந்துவிடுகிறோம் என்று வாங்கிவிட்டு, சொன்னபடி தராமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு!!

முறையான திட்டமிடுதல் இல்லாமை, நிறுவனத்திற்கு உரிய லைசன்ஸுகள் இல்லாமை, தமக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அளவுக்கதிகமான ஆட்களை ஓவர்புக்கிங் செய்வது போன்ற காரணங்களால் கடைசி நேரத்தில் பலரின் பயணங்களை ரத்து செய்வதும் ஆண்டுதோறும் நடந்து  வருவதைப் பார்க்கிறோம். ஆவலோடு தம் வாழ்நாள் கடமைப் பயணத்திற்குத் தயாராகி, கடைசி நிமிடத்தில் இல்லையென ஆகும்போது அவர்களின் ஏமாற்றம் சொல்லமுடியாதது. ”இந்த வருடம் அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ஜை நாடவில்லை போல! அடுத்த வருடம் நாங்களே அழைத்துச் செல்கிறோம்” என்று சால்ஜாப்பு சொல்கின்றனர். அடுத்த வருடம்வரை, அப்பயணிகளின் உயிருக்கோ, உடல்நிலைக்கோ உத்தரவாதம் தர முடியுமா இவர்களா?

ஏன் இப்படி?

இவற்றையெல்லாம் குறித்து, ஹாஜிகள் அவர்களிடம் கேள்வி கேட்பார்களானால், அவர்களின் பதில் இப்படித்தானிருக்கும்: “ஹஜ் என்பது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி நிறைவேற்ற வேண்டிய கடமை. உங்கள் ஈமானைச் சோதிக்க இறைவன் தரும் சோதனைகள் இவை. எவ்வளவுக்கெவ்வளவு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு, சோதனைகளைக் கடந்து, கடமைகளை நிறைவேற்றுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் ஹஜ் சிறப்புறும்; உங்கள் ஈமான் உறுதி பெறும். உறுதியில்லாத ஈமான் உள்ளவர்கள்தான் இவையெல்லாம் சிரமம், சிரமம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.” என்று அவர்கள் வாயை அடைப்பார்கள்!! தம் ஈமானையே கேள்விக்குறியாக்கும்பொழுது, அவர்கள் பின் வாயைத் திறப்பார்களா?

எனில், “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை” என்று தன் வேதத்திலும்(2:185);   ”(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்” என்று இறைத்தூதரும்(ஸல்)   ஏன் சொன்னார்கள்? வல்ல இறைவனும், அவன் தூதரும் இஸ்லாமை எளிமையாக்கியிருக்க, இவர்களோ கடினமானதாகக் காட்ட  முயல்கிறார்கள். இறைவன் ஒருவனே நம் ஈமானை அறிபவன். அவனே நம் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றையும் அறிபவன். அப்படியிருக்க,  இவர்கள் தம் தவறுகளை மறைப்பதற்காக, ஹாஜிகளின் ஈமானுக்கு அக்னிப் பரிட்சை நடத்துகிறார்களா?

தாயகம் திரும்பிய ஹாஜிகள் இதுகுறித்து யாரிடமும் ஒரு வார்த்தையும் சொல்வதுமில்லை. வேறு யாரேனும் ஹஜ் பயணம் செல்லும்போது இதுகுறித்துக் கூறி அவர்களை எச்சரிப்பதுமில்லை. சிரமப்பட்டேன் என்று சொன்னால், எங்கே தன் ஈமான் சந்தேகத்திற்குள்ளாக்கப்படுமோ என்ற பயத்தால் அமைதி காக்கிறார்கள். இதுவே இந்நிறுவனத்தினருக்கு வசதியாகி, கேள்வி கேட்போரில்லாமல் தம் ”சேவை”களை வழக்கம்போலத் தொடருகின்றனர்.

எனவே பொதுமக்களாகிய நாமே நம்மைத் தயார் செய்து கொள்வோம். முதிய வயது வரை காத்திருக்காமல், உலகக் கடமைகளின்மீது பழி போடாமல், உடல் உறுதியாய் இருக்கும் காலத்தே ஹஜ் செய்வோம். முதியவர்களை, குறிப்பாக  பெண்களைத் தனியே அனுப்பாமல், உரிய துணைகளோடு, உண்மையான சேவைநோக்கோடு பணிபுரியும் நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம். இறைவன் நம் முயற்சிகளுக்கு பலம் சேர்த்து, பயன் அளிப்பானாக!!

Post Comment

பகிர்ந்துப் பதித்தல்




சவூதிக்கு ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்தபோது கிடைத்த சில சுவாரசியமான அனுபவங்கள். இங்கே பதிவாகத் தந்து பகிர்ந்து கொள்வதோடு, நினைவுப் பதிப்பாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று டூ-இன்-ஒன்னாக.....

(படங்கள்: கூகிளுக்கு நன்றி!!)

*^*  மக்கா, மதீனா இரண்டு பள்ளிவாயில்களிலும் அனுதினமும் ஐந்து வேளைகளிலும் தொழுகை முடிந்தவுடன், ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. (இறந்தவர்களுக்கான பாவமன்னிப்பு வேண்டி நடத்தப்படும் சிறப்புத் தொழுகை ‘ஜனாஸாத் தொழுகை’ எனப்படும்.) அங்கிருந்த நாட்களில் ஒரு வேளைகூட மரணமடைந்தோருக்கான இத்தொழுகை நடத்தப்படாமல் இல்லை. வாழும் வாழ்க்கைக்கான தொழுகையும், மரணத்திற்கானத் தொழுகையும் அடுத்தடுத்து நடக்கும்போது வரும் உணர்ச்சிக் கலவைகளினூடே, ’ஒரு நாள் நமக்காகவும் இப்படி தொழுகை நடக்கும்’ என்ற நினைப்பும் தவறாமல் வரும்.

 
  *^* ஹஜ்ஜிற்குரிய ஐந்து நாட்களில், முதல் நாள் மக்கள் தங்கவைக்கப்படுவது ஏஸி, மெத்தை  வசதியோடு கூடிய தீப்பிடிக்காத டெண்டுகளில்.  அடுத்த நாள், அரஃபா என்ற இடத்திலோ, மின்சார வசதி இல்லாத - ஷாமியானா வகை டெண்டுகள். அடுத்து, முஜ்தலிஃபா என்ற இடத்திலோ, அதுவும் கிடையாது. வானமே கூரை, பூமியே மெத்தை!! வசதிகள் படிப்படியாகக் குறைந்து வரும்போது, அதன்மூலம் கிட்டும் பாடங்கள் படிப்பினையாகும்.

மினா - டெண்ட் நகரம்..
*^* மினாவில் ஒரு வயதான தம்பதியினர் என்னை மிகவும் கவர்ந்தனர். மனைவியால் நடக்கவோ, தரையில் கிடக்கவோ இயலாதென்பதால், ஹஜ்ஜின் ஐந்து நாளும் வீல்சேரிலேயேதான் இருந்தார். அவரது கணவர் அவரைவிட்டு நகராமல் அருகிலிருந்து கவனித்த விதம்... சொல்லிமுடியாது.

யாரோ..
*^* என் மாமியாரை வீல்சேரில் வைத்துக் கூட்டிப் போனதில் கிடைத்த அனுபங்கள் தனி. வீல் சேர் தள்ளி, முன்அனுபவமில்லாததால்(!!!) முதல் நாள் பலரின் காலில் இடித்துவிட்டு, அசடு வழிந்த அனுபவங்களும் உண்டு. அப்புறம் சுதாரிச்சுட்டோம்ல!!  (வீல் சேர் காலில் இடித்தால், அடிபடுவது கரண்டைக் காலுக்குப் பின் உள்ள எலும்பில் என்பதால் பயங்கரமாய் வலிக்கும்#அனுபவம்) என் மாமியாரோ மிஞ்சிப் போனால் 45 கிலோதான் எடை இருப்பார். அவரை வைத்துத் தள்ளுவதே ஏற்றமான சில இடங்களில் சிரமமாக இருந்தது. ஆனால், மிக அதிக எடை கொண்டவர்களைச் சிலர் வீல் சேரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.


*^*  பள்ளிவாசல்களில் மாடி ஏற வேண்டிய இடங்களிலெல்லாம் எஸ்கலேட்டர் எனப்படும் ‘தானியங்கிப் படிகள்’தான். வளரும் நாடுகளிலிருந்து வரும் பலருக்கும் அதை முறையாக உபயோகிக்கத் தெரிவதில்லை. வயதானவர்கள் பலர் தடுமாறி விழுவது வாடிக்கையாக இருக்கிறது.

*^* எங்கே பார்த்தாலும் ஜனத்திரள் என்பதால், கூட்டத்தில் யாரேனும் தொலைந்து போவதும், பின் அலைந்து திரிந்து தங்குமிடம் வந்து சேர்வதும் அவ்வப்போது நடக்கும். அதைத் தவிர்க்க, குழுவாகச் செல்பவர்கள் யூனிஃபார்ம் போல ஒரே நிற ஆடை அணிந்துகொள்வார்கள்.  வெள்ளைவெளெரென்ற கூட்டத்தின் நடுவே கண்ணைப் பறிக்கும் பளீர் நிறங்களில் அவ்வப்போது ஒரு கூட்டம் போவதை,  மாடியிலிருந்து பார்க்க வெள்ளைத்தாளில் வர்ணத் தீற்றல்கள் போல, அழகாய் இருக்கும்.

*^* அதிலும், எப்பேர்ப்பட்டக் கூட்டமானாலும் இந்தோனேசியா, சீனா, புருனே போன்ற கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் மட்டும் ஒருவர்கூட பிரிந்துவிடவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் போட்டிருக்கும் ஒரே மாதிரியான கண்ணைப்பறிக்கும் பளீர்வண்ண உடை ஒரு காரணம் என்றாலும், இன்னொன்று, கூட்டத்தின் நடுவே ஒருவர் கையை ஒருவர் விடாமல், நெளிந்து நுழைந்து செல்வது. “நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள், அதைப் போலவே கூட்டத்தினுள் வளைந்து நுழைந்து நெளிந்து சென்றுவிடுகிறார்கள்” என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.

*^* எங்கள் குழுவில் அம்மா-மகள்-மருமகன் கொண்ட இன்னொரு தமிழ் குடும்பமும், நாங்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், எங்களிருவரையும்  அக்கா-தங்கை என்றே நிறைய பேர் நம்பிவிட்டனர்!! என் மாமியாரை அவரது குடும்பமும் கவனித்துக் கொண்டது மிகவும் உதவியாக இருந்தது.

*^*  நமக்குத்தான் பாகிஸ்தானியர்கள் எதிரி!! (& vice-versa) ஆனால், சவூதியினர், இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் ஒரே நாட்டு மக்கள் போலத்தான் பாவிக்கின்றனர்!! பள்ளிவாயில்களில் விளக்கப் பிரசங்கங்கள் நடத்தும்போதெல்லாம் இரு நாட்டினரையும் அழைத்து ஒன்றாகத்தான் வைத்து பிரசிங்கிக்கின்றனர். அதேபோல, மினா, அரஃபா என்ற இடங்களில் இரு நாட்டினரையும் (பெரும்பாலும்) ஒன்றாக ஒரே கேம்பில்தான் தங்க வைக்கின்றனர். 

(’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எதிர் துருவங்களான இரு குட்டி பத்மினிகளும் சண்டை போடும்போது, ஆசிரியர் ஒரே அறையில் போட்டு பூட்டி வைப்பாரே, அதுதான் ஞாபகம் வருது)

*^* அப்படி தங்கவைத்திருந்தபோது, பாகிஸ்தானியர்கள் நம்மைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், (தென்) இந்தியர்களால்தான் அவர்களைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை - காரணம்,  அவர்களின் (சீக்கியர்களைப் போன்ற) ஓங்குதாங்கான உடலமைப்பும், உறுதியும்!!

*^* சவூதி அரேபியர்களில்கூட சிலர் தற்போது ஓரளவு ஆங்கிலமும், சில ஹிந்தி வார்த்தைகளும் பேசுகின்றனர்.  பள்ளிவாசல்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நிற்பவர்கள் இந்திய பெண்களையும் “பாஜி” என்று அழகாக அழைத்து, “அந்தர் மகான் நஹி” என்று சொல்ல,  நம் பெண்களோ முழிக்கின்றனர்!!

*^*  எங்களை அழைத்துச் சென்ற தனியார் ஹஜ் நிறுவனம் சவூதி சென்றதும் எங்களைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.  எங்கள் குழுவில் இருவருக்கு அரபி மொழி சரளமாகத் தெரிந்திருந்ததால், விமான நிலையம், அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் எங்களின் வசதிகளுக்கு நாங்களே ஏற்பாடு செய்துகொள்ள முடிந்தது.

*^* ஹஜ்ஜின் முக்கிய விதிகளில் ஒன்று, பெண்கள் தகுந்த ஆண்துணை இல்லாமல் வரக்கூடாது என்பது. ஆனால், தனியார் ஹஜ் நிறுவங்கள் இந்த விதியை மதிப்பதேயில்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு, வயதான பெண்களையும் தனியாக அழைத்து வந்துவிடுகின்றனர்.

*^* எங்கள் குழுவிலும் அப்படியொருவர் முதிய பெண்மணி இருந்தார் -  கீழக்கரை சாராம்மா.  இன்னும் மறக்க முடிவில்லை. மிக ஏழையான அவரது ஹஜ் செலவுக்கே அவரது உறவில் ஒரு செல்வந்தர் உதவியதால், உடன் குடும்பத்தினர் யாரும் வர முடியாத நிலை.  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கடும் மறதி உள்ள அவரை உடன் வந்த பயணிகளும் தம் பொறுப்பில் எடுக்கத் தயங்கினர். அடிப்படை ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதே பெரும்பாடாகி விட்டது. அதற்கு உதவியதும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சமையல்காரரும், மனிதாபிமானமுள்ள சக பயணிகளும்தான்!!

*^* எங்களை அழைத்துச் சென்ற நிறுவனம் செய்த பல குளறுபடிகள் காரணமாக,  இலங்கையைச் சேர்ந்த சமையல்கார இளைஞர் சித்தீக், அவரது குழுவின் துணையோடு,  எங்களுக்காக, தனிப்பட்ட முறையில் எடுத்த ரிஸ்க்குகள் பல.  மறக்கமுடியாதவர். 

*^* சவூதியில் ஹஜ் காலத்தில் டாக்ஸி சார்ஜ் கன்னாபின்னாவென்று ஏறிவிடுகிறது. 5 - 10 ரியால் வாங்கற இடத்துல, 100 - 200 ரியால் கேக்கறாங்க!!  ஏன்னு கேட்டா, இந்த நாலு மாசம்தான் எங்களுக்கு சீஸன், இப்ப சம்பாதிச்சாத்தான் உண்டுங்கிறாங்க. சவூதி அரசாங்கம் பஸ் சேவையை அதிகப்படுத்தினா நல்லாருக்கும். (அதுக்கும் அங்கே ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பிட்டோமில்ல!!) கடைகள், ஹோட்டல்களிலும் இதேபோல ரேட்டு எகிறிக்கிடக்கிறது.

*^* சென்னையிலிருந்து கிளம்பும்போது, விமானத்தில் எங்களோடு வரவேண்டிய ஒரு தனியார் ஹஜ் குழுவினர், விமானத்திற்கு "final boarding call" அறிவிப்பு பலமுறை வந்தபின்னும், ஏர்போர்ட்டில் நின்று கூட்டாகக் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். விமான நேரமும், தொழுகை நேரமும் முன்பே தெரியும். எனில், அதற்கேற்றாற்போல் சீக்கிரம் வந்திருக்க வேண்டும்; அல்லது, தாமதமாகிவிட்டால் விமானத்தில் இருந்தே தொழலாம் என்பதையாவது அறிந்திருக்க வேண்டும்.  பொதுச் சேவை நிறுவனங்களிடத்தில் ஒழுங்கை எதிர்பார்க்கும் நாமும் நம் கடமைகளில் உரிய முறையோடு இருத்தல் வேண்டாமா?


தூணும் நானே...
குடையும் நானே...
*^* மதீனாவில் பள்ளிவாசலைச் சுற்றிப் பரந்துகிடக்கும் திறந்தவெளி மைதான இடத்தில் நின்று தொழுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவ்விடங்களில் பகல் நேர வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, அரசு தற்போது மெகா சைஸ் குடைகளை அமைத்துள்ளது. இரவு நேரத்தில் ஒரு சாதாரணத் தூண் போல நிற்கும் இந்தக் குடைகள், காலை 6 மணியளவில் விரியும். ஒரு குடை 625 m² பரப்பளவிற்கு நிழல் தரும்.  இவை விரியும், சுருங்கும் விதத்தைப் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், ஸ்லோமோஷனில் நடக்கும் என்பதால் பார்க்கப் பொறுமையும் தேவை. 

*^* குடை வெயிலிலிருந்து காக்கும். ஆனால், வெக்கையினால் வரும் புழுக்கத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? இதற்கும் தண்ணீரைப் பன்னிராகத் தெளிக்கும் ராட்சஸ ஃபேன்கள் அமைத்திருக்கிறார்கள்!!





*^* மில்லியன் கணக்கில் ஆட்கள் புழங்கினாலும், இரவில் சின்னக்கடைகள் அடைக்கப்படுவது இப்படித்தான்!! ஜஸ்ட் ஒரு பெட்ஷீட்!!





*^* கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்பே சின்னவன் ஒரே புலம்பல், “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்"னு. சென்னையில் அம்மாவிடம் என் சின்னவனை விட்டுட்டுப் கிளம்பினப்போவும் ஒரே அழுகை. திரும்பி வந்தபோது அவனைப் பார்த்த என் உறவினர் அடித்த கமெண்ட், “அவ்ளோ புலம்பி அழுதானே, நானும் அம்மாவக் காணாம ஒரு மாசத்துல புள்ளை ஏங்கிடுவானோன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா, பய அஞ்சு கிலோ வெயிட்டும் கூடி, பளபளன்னுல்ல இருக்கான்!!”
என் பதில்: “நான்தான் அவன் அப்படியே அவங்கப்பா மாதிரின்னு சொன்னேனே!!”

*^* ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சோகமாக இருந்த என்னிடம் ஏனென்று கேட்டார் என்னவர். ”ப்ச்... ஒரு மாசமா மணியடிச்சா சோறுன்னு இருந்தாச்சு. இனி நானே சமைக்கணுமேன்னு கவலையா இருக்கு”ன்னேன்.  “அத நான் சாப்பிடணுமே. என் நிலைமையை யோசிச்சிப் பாரு!!”

Post Comment

பேபி... மாதாஜி!!!





வந்தாச்சு... இறையருளால் நல்லபடியா எல்லாம் நலமே முடிச்சு வந்தாச்சு. என்னாலும் முடியுமா என்றிருந்தேன்.. ஏகனை நோக்கிய எல்லாரின் பிரார்த்தனைகளும் உறுதுணையாய் இருந்து உதவின என்றுதான் சொல்ல வேண்டும்.

போய் வந்து ரெண்டு வாரமாகுது. ஆனாலும் இன்னும் அந்த பிரமிப்பு, பரவசம், மகிழ்ச்சியிலிருந்து விடுபட முடியவில்லை. பதிவு எழுதலாம் என்று நினைத்தால், எங்கு தொடங்க, எதை எழுத, எதை விட என்று பிடிபடாத நிலை. எல்லாவற்றையும் எழுதினால் தொடராகவே ஆகிவிடும்.

இந்த வருட நோன்பில் (ஆகஸ்ட்) திடீரென ஒரு நாள் ஹஜ்ஜுக்குப் போவோம்னு முடிவெடுத்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களில் விசாரித்து,  பதிவு செய்து, விஸா வரத் தாமதமாகி, புறப்படும் நாள் வரை இந்த வருடம் போவோமா மாட்டோமோ என்று சஸ்பென்ஸாகவே இருந்து, பின் இறைநாட்டத்தால் எல்லாம் கைகூடி... இதோ போய்ட்டு வந்தும் ஆச்சு. ஹஜ் செய்ய ஆசைப்பட்டு, வருடக்கணக்கில் காத்திருப்பவர்கள் இருக்க, ஒரே நாளில் எங்களை முடிவெடுக்க வைத்து, புறப்படச் செய்த இறைவனின் கருணை... என்னவென்று சொல்ல...


முதலில் மதீனா... ஒரு ஏகாந்த அமைதியுடன் காணப்படும் நகரம். நான்கு நாட்கள் அங்கு தங்கிவிட்டு, பின் மக்கா. எப்பொழுதும் பரபரப்பும், சுறுசுறுப்புமாய் இருக்கும் தூங்கா நகரம். இரு நகர்களிலும் முக்கியமான பள்ளிவாசல்கள் உண்டு. ஹஜ் காலங்களில், இரண்டிலும் தினமும் தொழுகைக்காக, ஐந்து நேரமும் மில்லியன் கணக்கில் மக்கள் வெள்ளம் காணப்படும். என்றாலும், பள்ளி வளாகங்களில் எங்கு நோக்கினும் சுத்தம், சுத்தம், பளிச்சிடும் சுத்தம்தான்!! (பிரார்த்தனைகளைப் பத்திச் சொல்லாம, சுத்தத்தைப் பத்தி ப்ரஸ்தாபிக்கிறாளேன்னு நினைப்பீங்க. சுத்தம்தானே பிரார்த்தனையின் முதல் பகுதி!! "Cleanliness is next to Godliness" இல்லையா? )


கூட்டம், கூட்டமாய் மக்கள். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஆட்கள் உண்டு. மொழி, உணவு, உடை, பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் வேறுபட்டவர்களாயிருந்தும், ஒரே இறைவனை நோக்கிய ஒரே பிரார்த்தனை முறை எனப் பிரமிக்க வைத்தனர்!! அரசாங்கக் குறிப்பின்படி, வெளிநாட்டினர் மட்டுமே 30 லட்சம்பேர் என்றாலும், மொத்தம் 35 லட்சம்பேருக்கும் அதிகம்  இருந்திருக்கலாம். எனினும்,  அலங்கார வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள், சீட்டுக்கச்சேரி, டாஸ்மாக் அலம்பல்கள், காதைச் செவிடாக்கும் ஸ்பீக்கர்கள், பெண்களைக் குறிவைக்கும் கும்பல்கள்,  கேமராக் கோணங்கள், நாராசக் காலர் ட்யூன்கள்,  முன்னுரிமை சிபாரிசுகள், முதல் மரியாதைகள், டொனேஷன் புக், உண்டியல் குலுக்கல்கள், பிரியாணிப் பொட்டலங்கள் என்று கவனத்தைச் சிதறடிக்கும் எதுவும் இல்லாமல், மனதை பிரார்த்தனையில் மட்டுமே ஒருமுகப்படுத்தத் தோதானச் சூழல். 

வருடாவருடம் பெருகிவரும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சவூதி அரசு செய்யும் பிரம்மாண்டமான வசதிகள் வியப்பளிக்கின்றன. நெரிசலைத் தவிர்க்க செய்யப்படும் அவர்களின் முயற்சிகள் பலனளித்து வருவதும் மகிழ்ச்சி.   இந்த வருடமும், வந்த இடத்தில் உடல்நலமில்லாமல் போன ஹஜ் பயணிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்திருக்கின்றனர்.  மருத்துவமனையில் படுக்கையில் இருப்பவர்களில் பலரை அரசே  தன் செலவில், ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர்களிலேயே ஊழியர்கள் துணையோடு  ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற உதவியுள்ளது. சும்மா இல்லை சவூதி அரசாங்கம் செல்வத்தில் கொழிப்பது - தொட்டனைத் தூறும் மணற்கேணி!!

கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் - முதியவர்கள்!! நெகிழவும், பல சமயங்களில் கலங்கவும் வைத்தனர். தம்பதியராய் வந்திருந்த முதியவர்கள், ஒருவருக்கொருவர் கைப்பிடித்து ஆதரவாய் தாங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சி. தனியே வந்திருந்த முதியவர்கள் - ஆண்களே பெரும்பாலும் - தட்டுத்தடுமாறிச் செல்லும்போது நம்மைத் தவிக்கவும் வைக்கின்றனர். ஒருமுறை என்னருகே சென்ற முதியவரொருவர், பெருந்தொலைவு நடந்த களைப்பினால் நிலைதடுமாறி விழப்போக, நான் இருமுறை பிடித்துத் தூக்கிவிட்டும், தள்ளாடியவாறே நடந்து சென்றது இன்னும் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.

உடன் வந்திருந்த என் மாமியாரை நாங்கள் வீல்சேரில் அழைத்துச் செல்லும்போதெல்லாம், வழியில் காணும் பல முதியவர்களின் பார்வைகளில் ஏக்கம் வெளிப்படையாகத் தெரியும். சிலர் என் கணவரைத் தட்டிக்கொடுத்து, அவர்கள் மொழியில் பாராட்டவும் செய்தனர்.

அடுத்த அதிசயம் - ஸம்ஸம் ஊற்று நீர்!! வந்திருந்த 35 மில்லியன் மக்களும் திரும்பிச் செல்லும்போது, குறைந்த பட்சம் 10லி ஸம்ஸம் நீர் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். மேலும், ஒவ்வொருவரும் அங்கிருக்கும் அனைத்து நாட்களும் (10 முதல் 40 நாட்கள்) அந்நீரையே பருகவும் பயன்படுத்துவார்கள். எனினும்  வற்றாத இறைவன் கருணையாய் அந்த ஊற்றும்!!

இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்!! ஹஜ்ஜின் ஐந்து நாட்களில் மினா என்ற இடத்தில் கூடாரத்தில் தங்க வேண்டும். ஜனத்திரள் காரணமாய், ஒருவருக்கு ஆறடி இடமே கிடைக்கும். அதாவது படுத்துறங்க மட்டும்!!  உலகில் நீ எவ்வளவு இடம் சேர்த்தாலும், கடைசியில் தேவைப்படுவது ஆறடி நிலமே என்று உணர்த்துவது போலிருந்தது. இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். மொத்தத்தில், அந்த ஐந்து நாள் பரதேச வாழ்வு ஒரு பற்றற்ற நிலை வரவைக்கும்.

இதைச் சொல்லும்போது சென்ற வாரம் பேசிய ஒரு தோழி கேட்டது நினைவுக்கு வருகிறது. “ஹஜ்ஜுக்குப் போய்ட்டு வந்தப்புறம் கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கைத்தான் வாழணுமாமே? டிவிகூடப் பார்க்கக் கூடாதாம். நீங்கவேற சின்ன வயசிலேயே போய்ட்டீங்க. கஷ்டமாருக்குமே?” என்று கேட்டார்!!  அவ்வ்வ்... விட்டா என்னையும் “மாதாஜி” ஆக்கிடுவாங்க போலன்னு பதறி, ”அப்படிலாம் இல்லை. ஹஜ்ஜுக்குப் போனாலும் போகலையின்னாலும் எப்பவுமே வாழ்க்கையில ஒரு கட்டுப்பாடு இருக்கணும். நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கறது எப்பவுமே அவசியம்தான்”னு  அவசரமா  விளக்கம் சொன்னேன்.

ஆனாலும், என் சின்னவன் “ம்மா, நீ இப்ப ஒரு நியூ பேபி மாதிரி, தெரியுமா?”வென்று கேட்டது, கூடுதல் கவனம் வேண்டுமென்பதையே உணர்த்தியது.


குறிப்பு:  ஒருவர் செய்த ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவரது பாவங்கள் மன்னிக்கப்பெற்று, அன்று பிறந்த குழந்தையைப் போல ஆகிவிடுவார் என்பது நபிமொழி.

Post Comment

விடை பெறுகிறேன் - 2




தலைப்பைப் பாத்ததும் என்னவோ ஏதோன்னு  அடிச்சுப் பிடிச்சு, “எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு, இப்ப என்னாச்சு?”னு கேள்வியோட பதட்டமா வந்திருப்பீங்க. ஒண்ணுமில்ல நல்ல விஷயந்தான். ஜந்தோஜமா வந்தவங்களுக்கு “ஆசை தோசை அப்பளம் வடை”!!  சீரியல் மாதிரி எபிசோட் நம்பரெல்லாம் ஏன்னு கேக்கிறவங்களுக்குப் பதில்  "விடை பெறுகிறேன்-1"-ல் இருக்கு!!

ஏற்கனவே மக்காவுக்குச் சென்று, இறைவனருளால், இரண்டுமுறை “சின்ன ஹஜ்” எனப்படும் “உம்ரா” செய்திருந்தாலும் முழுமையான ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. சரி, சின்னவன் வளரட்டும், அதுக்குள்ள நமக்கும்  மனசுல ஒரு பக்குவம், maturity, ஒரு முதிர்ச்சி, பொறுப்புணர்ச்சி வந்துடும் அப்படின்னு நினைச்சுக் (நம்ம்ம்ம்ம்பி) காத்திருந்தோம்.

முதல் கண்டிஷன்படி, அல்ஹம்துலில்லாஹ், சின்னவன் நல்லபடியா வளந்துட்டான். ஆனா, அடுத்ததுதான்.... பக்குவம், முதிர்ச்சிக்கு எல்லாம்  அளவுகோல் ஏது?   மேலும், போன பதிவுல சொல்லியிருந்த மாதிரி, நாளை என்ன நடக்கும்கிறது நம்ம கையிலயா? அதனால, அலை எப்ப ஓயறது, தலை எப்ப முழுகுறதுன்னு காத்திருக்காம, ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுக் கிளம்பிட்டோம். ஆமா, நாங்க இந்த வருட ஹஜ்ஜுக்குப் போறோம், இன்ஷா அல்லாஹ். 
முன்னே ரெண்டு முறை உம்ராவுக்காகப் போனப்போ, ஹஜ் போல  அதிகக் கூட்டமில்லை என்றாலும், அதற்கே அங்கு வந்திருக்கும் பல நாட்டு மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், தனித்துவங்கள்னு நிறைய வேறுபாடுகள் இருந்த போதிலும், பிரார்த்தனைநேரம் என வரும்போது அனைவரும் ஒரே மாதிரி, ஒரே இறைவனை நோக்கி ஒருமுகப்பட்டு நிற்பது ஆச்சர்யமாக இருக்கும். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையோ!!!




ஒருமுறை கஃபா அருகில் திறந்த வெளியில் நின்று நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது, மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே சுற்றிலும் உள்ள மூடிய பகுதிக்கு எல்லாரும் வர முற்பட்டுக் கொண்டிருந்தபோது, தடதடவென போலீஸ்காரர்கள் நிறைய பேர் கஃபாவின் ஒரு பகுதியில் சென்று அரண் போல வளைத்து நின்று கொண்டார்கள். நாங்கள் அதைக் கண்டு, ஒருவேளை அரச குடும்பத்தைச் சார்ந்த அல்லது வேறு நாட்டுத் தலைவர்கள் யாரும் வரப்போகிறார்கள் போல (நம்ம ஊர்ப் பழக்கதோஷம்!!)  என்று  நினைத்துக் கொண்டே, மழையிலிருந்து பாதுகாப்பாக கூரையடியில் நின்றுகொண்டே வருவது யாராக இருக்கும் என்று உடன்வந்த உறவினரிடம் (சவூதியில் கிட்டத்தட்ட 20-25 வருடங்களாக இருப்பவர்!!) கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, “கஃபா மேல விழுற மழைத்தண்ணி வடிகால் வழியா வழியும்போது அதைப் புனித நீர்னு சிலர் பிடிச்சுக்க ஓடி வருவாங்க. அதைத் தடுக்கத்தான் போலீஸ்காரங்க சுத்தி நிக்கிறாங்க” என்றார்!! 


இப்படிப் பல சுவாரசியங்கள் நிறைந்த படிப்பினைகள் கிட்டும் இடம். இந்த முறை பதிவராகவும் இருப்பதாலும், ஹஜ்ஜுக்குப் பெருந்திரள் வருமென்பதாலும், அலைபாயும் கவனத்தைக்  கட்டி இழுத்து பிரார்த்தனையில் செலுத்தமுடியுமா என்று பயமாருக்கிறது என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ”அங்கே எப்பேர்ப்பட்ட ராஜாவானாலும் ஒரே மாதிரி எளிய ஆடையில் கூடாரங்களிலும், மைதானங்களிலும் பாலைவன மணல்தரையில் தங்கி, செருக்கு மறைந்து ஏக இறைவனைப் பிரார்த்திப்பதைக் காணும்போது நீ யார் எவரென்றெல்லாம் மறந்து, அந்த மனிதக் கடலில் நீ ஒரு துளி மட்டுமே என்பதை உணரும் தருணத்தில், கவனம் வேறு எதிலும் போகமுடியாது” என்றாள். இறைவன் நாட்டம்.
 

நட்புகளுக்கு என் மனமார்ந்த தீபாவளி மற்றும் பெருநாள் வாழ்த்துகள். நவம்பர் இறுதியில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்!!

(பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்யவோ, பதிலளிக்கவோ நேரமில்லை என்பதால் பின்னூட்டப் பெட்டி இந்தப் பதிவிற்கு மட்டும் இல்லை!! நன்றி.)

Post Comment

கடைசிக் கடமை




அலுவலகமானாலும், வீடானாலும், நாம் நமக்குரிய கடமைகளை, அல்லது அன்றாட வேலைகளைச் செயல்படுத்தும்போது, அவற்றை வரிசையாக முன்னுரிமைப் படுத்தி, முதலில் செய்ய வேண்டுவனவற்றை முதலில், மற்றவற்றை அடுத்தடுத்து என அவற்றின் காரணகாரியங்களைப் பொறுத்துச் செய்வதுண்டு. எனினும், எதையும் செய்யாமல் விடுவதில்லை. சிலவற்றை செய்துமுடிக்க, வேறு தொடர்புடைய ஆவணங்கள் தேவைப்படலாம். எனில், அவற்றைக் கேட்டுப் பெற்று, செய்து முடிப்போம்.

இதேபோலத்தான்  நாடு, மொழி, இனம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், இளையவர், முதியவர் என எந்தப் பேதமுமில்லாமல் கடைபிடிக்க வேண்டிய முஸ்லிம்களின் ஐந்து கடமைகளும்.

1  ஒரு முஸ்லிமாக இருப்பவர் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகளில், முதலாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்ற இறை நம்பிக்கை. 24x7 கடைபிடிக்க வேண்டியது.

2. இரண்டாவதான தொழுகை: தினமும் ஐந்து முறை தொழுவது எல்லாருக்கும் கட்டாயமான  கடமை.

3. மூன்றாவதான நோன்பு:  வருடத்தில் குறிப்பிட்ட தினங்களில், சூர்யோதயம் முதல் சூர்ய அஸ்தமனம் நோன்பிருப்பது எல்லாருக்கும் கடமை. ஆனால் உடல் நலமில்லாதவர்களுக்கு மட்டும் சலுகைகளுண்டு. எனினும், பின்னர் உடல்நலமடைந்தவுடன் விட்ட நோன்புகளை நிறைவேற்றுவது அல்லது பசித்தோருக்கு உணவளிப்பது என்று பரிகாரங்கள் உண்டு.

4. நான்காவதான ஸகாத் எனப்படும் தர்மம்: குறிப்பிட்ட அளவுக்குமேல் செல்வம் உடையோருக்கு மட்டுமே உரிய கடமை.

5. அதுபோலத்தான் ஐந்தாவதான ஹஜ்ஜும்.  கடைசிக் கடமையாய் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே புரியும்,  பல நிபந்தனைகளுக்குட்பட்டது என்று.

1. நிபந்தனைகள்:

மற்ற கடமைகளெல்லாம் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே செய்யக்கூடியவை. ஆனால், ஹஜ் என்பது, ஒரு குறிப்பிட்ட மாதத்தில், சவூதி அரேபியா நாட்டில் உள்ள “மக்கா” என்ற நகருக்குச் சென்று நிறைவேற்ற வேண்டிய கடமை. அதனால்தான், அந்நாட்டிற்குச் சென்றுவருமளவு பணவசதியும், உடல்நலமும் உள்ளவர்கள்மீதே இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது.

உடல்நலம்: தூரதேசப் பயணம் மற்றும் அலைச்சல் ஆகியவற்றைத் தாங்கி,  பிரார்த்தனைகளைத் தடங்கலின்றி நிறைவேற்றித் திரும்புமளவு குறைந்த பட்ச உடல் மற்றும் மனநலம் அவசியம்.

பணவசதி: சவூதிக்குச் சென்று வருவதற்கு மட்டுமல்லாமல், அங்கிருக்கும் நாட்களில் தனக்கு வேண்டிய பராமரிப்பு மற்றும் அச்சமயத்தில் தன் குடும்பத்திற்குரிய பராமரிப்பு  ஆகியவற்றைக் குறைவின்றி நிறைவேற்றத் தேவையான பணம் இருக்கவேண்டும்.

இவையிரண்டும் ஒருவரிடம் இருந்தால்தான், அவருக்கு ஹஜ் செய்ய வேண்டிய கடமையாக ஆகின்றது.

இன்னும் சில உண்டு:

* அதாவது, ஹஜ்ஜைவிட முன்னுரிமைப்படுத்த வேண்டியத் தேவைகளை/ கடமைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். உதாரணம்: அடைக்கப் படவேண்டிய அவசியமான கடன்கள், தான் இல்லாத சமயத்தில் குடும்பத்தின் பாதுகாப்பு, தேவைகள் நிறைவேற்ற வழிகள் கண்டு, பொறுப்பாளரை நியமித்தல் .

* ஒருவரின் ஹஜ்ஜை நிறைவேற்ற அவரேதான் பொறுப்பாளி. அதாவது, பெற்றோர் தன் மகனையோ, மனைவி தன் கணவனையோ அதற்கான செலவிற்கு எதிர்பார்த்தல் கூடாது. அதே சமயம், அன்பினால் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் தவறில்லை.

* அதேபோல, வசதியில்லாதவர்கள், பக்திமேலீட்டால் யாசகம் பெற்றாவது ஹஜ் செய்ய வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. எனினும், தான் எதிர்பாராமல் அவ்விதம் ஒரு உதவி தன்னைத் தேடி வந்தால், விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

* ஹஜ்ஜிற்கான பணத்தை நேர்வழியில் சம்பாதிருத்தல் அவசியம்.

* பணமிருந்து, உடல்நலமில்லை என்றால், தனக்காக உறவினரை தனது செலவில் செய்து வருமாறு கேட்கலாம். ஆனால், அவ்வுறவினர் தனக்கான ஹஜ்ஜை ஏற்கனவே செய்தவராக இருக்க வேண்டும்.

* நிபந்தனைகள்படி ஒருவர்மீது, ஹஜ் கடமையாக இருந்து, ஆனால் செய்யாமல் இறந்துவிட்டாரானால், அவரது வாரிசுகளின்மீது  பெற்றவருக்காக அதை நிறைவேற்றும் கடமை உண்டு. இதற்கு இறந்தவரின் சொத்திலிருந்தே பணம் எடுக்க வேண்டும்.

* ஒருவரின் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் ஹஜ் செய்யவேண்டியது கட்டாயக் கடமை. எனினும், விருப்பப்பட்டு, நிபந்தனைகளுக்குட்பட்டு, பலமுறைகள் செய்வதில் தவறில்லை.

”மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

இறைவன் இஸ்லாமை பின்பற்ற எளிமையானதாகவே ஆக்கித் தந்திருக்கிறான் என்பதை இவையெல்லாம்  மேலும் உறுதிப் படுத்துகின்றன.

2. எப்பொழுது:

இஸ்லாமிய காலண்டர்படி, 9-வது மாதமான ”ரமலான்” மாதத்தில் நோன்பு முடிந்ததிலிருந்து, 12-வது மாதமான ”துல் ஹஜ்” மாதத்தின் 8-13 தேதிகளில் நிறைவேற்ற வேண்டியது ஹஜ்.  இவ்வருடம், ஆங்கிலக் காலண்டரில் நவம்பர் முதல் வாரத்தில் வரும்.

இப்போது ஹஜ்ஜுப் பயண காலம் தொடங்கிவிட்டது.  இந்தியாவிலிருந்தும் பல குழுக்களாக ஹாஜிகள் (ஹஜ்ஜு செய்பவர்கள்) சவூதி சென்று இறங்கத் தொடங்கிவிட்டார்கள்.

3.  ஹஜ்ஜின்போது என்ன செய்வார்கள்:



1. ஹஜ் செய்வதற்காக “இஹ்ராம்” எனப்படும் உடை, செயல் மற்றும் மனக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல்.  ஆண்கள் தைக்கப்படாத ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் தங்கள் இயல்பான உடையை அணிந்துகொள்ளலாம்.

2. மக்காவை அடுத்துள்ள ‘அரஃபா’ என்ற இடத்திற்கு 9-ம் நாள் சென்று தங்கியிருத்தல்.

3. பின்னர் மக்கா வந்து,  கஃபா எனப்படும் இறையில்லத்தை ஏழு முறை வலம் வரவேண்டும். இதற்கு தவாஃப் எனப்பெயர்.

4. பின்னர் முடியிறக்க வேண்டும். ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வது சிறந்தது. பெண்கள் ஒருவிரல் நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவேண்டும்.

இவை தவிர,

1. ஸயீ - மக்காவில் ஸஃபா, மர்வா என்ற இரண்டு சிறு குன்றுகளுக்கிடையில் ஏழு முறை நடத்தல். 

இப்ராஹீம் நபியின் மனைவி ஹாஜராவும், குழந்தை இஸ்மாயிலும் பாலைவனத்தில் இம்மலைகளின் அருகில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தை தாகத்தால் தவித்து அழ, தண்ணீர் தேடி ஹாஜரா அவர்கள்  ஓடினார்கள். ஒரு மலையின் புறமிருந்து பார்க்கும்போது இன்னொரு மலையில் நீர் தெரியும். தண்ணீரென்று நம்பி ஓடினால், அது கானல் நீர்!! இவ்வாறு ஏழு முறை பரிதவித்து ஓடிய பொழுது, குழந்தையின் பாதத்தினடியிலேயே இறைவன் ஒரு நீரூற்றை வரச் செய்தான். வழிந்து ஓடும் நீரைக் கண்ட ஹாஜரா அவர்கள், குடிப்பதற்குமுன் தண்ணீர் முழுதும் வழிந்தோடிவிடுமோ, குடிக்கக் கிடைக்காதோ என்ற அச்சத்தில் “நில் நில்” என்று பொருள்படும் “ஸம் ஸம்” எனக் கூறியபடி நீரை நோக்கி ஓடினார்கள். அந்த நீரூற்றுதான் இன்றும் - பல ஆயிரமாண்டுகள் கழிந்தும் - வற்றாத ஊற்றாக இருக்கும் “ஸம் ஸம்” என்ற ஊற்று. இது கஃபாவின் அருகிலேயே உள்ளது.

2. ஷைத்தானின் மீது கல்லெறிதல்.

இப்ராஹீம் நபிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் இஸ்மாயீல் நபி. எனினும், அவரைப் பரிசோதிக்க எண்ணிய இறைவன், இஸ்மாயீலைப் பலியிடுமாறு இப்ராஹீமுக்குக் கட்டளையிட, அவரும் இறைகட்டளையை ஏற்று, பலியிடச் செல்லும்போது, ஷைத்தான் மூன்று முறை அவரின் உறுதியைக் கலைக்க முயலுகிறான். எனினும், அவனைப் புறந்தள்ளி இறைவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றச் செல்கிறார். அவரின் நம்பிக்கையால் திருப்தியடைந்த இறைவன், ஆடு ஒன்றைப் பலி கொடுக்கச் செய்கிறான்.

இதேபோல, நாமும் தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு ஆட்படாமல் இருக்க வேண்டி, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மூன்று தூண்கள் மீது கல்லெறிதல் வேண்டும்.

3. மினா, முஜ்தலிஃபா ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் தங்கியிருத்தல்.

4. ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஏதேனும் ஒன்றை குர்பானி கொடுத்தல்.

ஆக மொத்தம் இவையே ஹஜ் எனப்படும் புனிதப் பயணத்தில் செய்ய வேண்டியவை. ஹஜ் நிறைவேற்ற 5 நாட்களே தேவைப்படும் என்றாலும், புனித பூமியான மக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததோடு மேலும் பல நாட்கள் இருந்து, அதிகப்படியான தொழுகைகள், ‘உம்ரா’ எனப்படும் ’சிறிய ஹஜ்’, மதினா சென்று சிறப்பு வாய்ந்த நபி பள்ளியில் பிரார்த்தித்தல்,  இன்னும் சில வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற இடங்களைக் கண்டு வருதல் ஆகிய காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து செல்பவர்கள் இதை ஒரு மாதப் பயணமாக மேற்கொள்கிறார்கள்.

இனி, ஹஜ் செய்ய விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளைப் பர்க்கலாம்.

4. செல்லுமுன்:

* ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:19) 
அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். (அல்குர்ஆன் 3 : 97)

ஆகிய குர் ஆன் வசனங்களின்படி, நாம் செய்யும் ஹஜ் இறைவனுக்காக மட்டுமே செய்யப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்க.

*ஏறக்குறைய ஒரு மாத காலம், லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில், அதுவும் புதிய நாட்டில் இருக்க வேண்டும் என்பதால் கவனமெடுத்து நம் உடல்நலத்தைப் பேணிக் கொள்வது நல்லது.

*பிரார்த்தனைகள் பலவும் நடந்தே சென்று நிறைவேற்ற வேண்டியவை என்பதால், செல்வதற்குப் பல மாதம் முன்பே நடைப் பயிற்சி மேற்கொள்ளுவது சிரமத்தைக் குறைக்கும்.

* முன்சென்றவர்களிடம் கேட்டறிந்து, என்ன மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

* ஹஜ் செல்வதன் பெயரால் விருந்துகள், சம்பந்திச்சீர்கள் போன்ற அநாச்சாரங்களைச் செய்யவோ, ஏற்கவோ கூடாது. மேலும், அரசியல்வாதி போல, ரயில், விமான நிலையங்களுக்கு தம் உறவு, நட்புக் கூட்டங்களுடன் வந்து மற்ற பயணிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் சிரமத்தைத் தரக்கூடாது. மற்றவர்களிடையே இஸ்லாம் குறித்த முகச்சுளிப்பு ஏற்பட வைக்கக் கூடாது.

5. சென்ற பின்:

* அங்கு சென்றிருப்பது, இறைகடமைக்காக மட்டுமே என்பதை மனதில் வைத்து பிரார்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம். கஃபாவின் சுவர்களைத் தேய்த்துத் தடவுவது, முத்தம் கொடுப்பது, ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட விரும்பி கூட்டநெரிசலில் அடித்துப்பிடித்து நுழைவது, நபி(ஸல்) அடக்கஸ்தலத்தில் அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற, மற்றவர்கள் அறியாமையில் செய்யும் அநாச்சாரங்களைக் கண்டு, நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட வேண்டாம்.

* லட்சக் கணக்கானோர் கூடியிருக்கும் இடத்தில்  பல அசௌகரியங்கள் இருக்கலாம். எனினும், அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல் இருத்தல் அல்லது அதற்கேற்றவாறு மாறிக் கொள்ளுதல் அவசியம். ’டில்லிக்கு ராஜான்னாலும், பள்ளிக்குப் பிள்ளைதான்” - மறக்க வேண்டாம். பிரார்த்தனையே நமது முதல் இலட்சியம்.

* நம்மால் எந்த சிரமமும் மற்றவர்களுக்கேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பள்ளிகளில் மக்கள் செல்லும் பாதைகளில் அமர்வதைத் தவிர்ப்பது; குப்பைகளை உரிய இடத்தில் போடுவது; சுத்தத்தைப் பேணுவது.

* தேவையான மாத்திரை, மருந்துகளை உரிய மருந்துச் சீட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மக்கள் கூட்டத்தால் ஜலதோஷம் போன்ற தொற்று நோய்கள் பரவுவது எளிது. அதைத் தடுக்க “மாஸ்க்” அணியலாம்.

* சவூதியில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இருப்பார்களாயின், அதிகம் உரிமையெடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். நீங்கள் வந்து சென்றது அவர்களுக்கு நல்ல நினைவாக இருக்கும்படி நடந்துகொள்ள வேண்டும்.

6. செல்வதன் பலன்?

ஹஜ்ஜின் கடமைகளைச் சரியாக, குறைவில்லாமல், முழுமையாகச் செய்து, இறைவன் அந்த ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாயின், அவரை அன்று பிறந்த பாலகன்போல பாவங்களிலிருந்து மன்னித்து விடுவான்.

7. சென்று வந்த பின்:

ஒருவர் செய்த ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவரது அதுவரையான பாவங்கள் மாத்திரமே மன்னிக்கப் பெறும். அதன் பின்னர் அந்நிலையைத் தன் நல்ல நடத்தைகளினால் தக்கவைத்துக் கொள்வது அவர் பொறுப்பு.

அதனால்தான், அந்தக் காலங்களில், பக்குவம் அதிகம் வந்திருக்கும் வயதான காலத்தில்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்போல. எனினும், வாய்த்திருக்கும் வசதியும், வாழ்க்கையும் (உயிர்) என்றுவரை நிலைத்திருக்கும் என்பதை நாம் அறியமுடியாதே! ஆகையால், உரிய காலத்திலேயே இக்கடமையை  நிறைவேற்ற முனைவோம், இன்ஷா அல்லாஹ்.

Ref: www.ourdialogue.com/pilgrimage

Post Comment