பள்ளியில் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்னு சொன்னா, அது பெரும்பாலும் டான்ஸ்தான். அப்பவெல்லாம் “ஜெயிக்கப் போவது யாரு”களோ, இல்லை அதற்காக உயிரை விட்டு உழைக்கிற பெற்றோர்களோ இல்லாத காலம்!! நடன நிகழ்ச்சிகள் வழங்குவதற்கென்றே குறிப்பிட்ட சில திறமையான மாணவியர் உண்டு. ஒவ்வொரு முறை விழாவின்போது ஆசிரியைகளிடம் அவர்களுக்கு கிடைக்கும் மதிப்பும், வகுப்புகளைக் கட் அடிக்க சிறப்பு அனுமதிகளும் என்று அவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்.
குழுவாக ஆடும் நடனங்களில் வாய்ப்புகள் கிட்டவேண்டுமென்றாலும், கொஞ்சமாவது நிறமும், அழகும் இருக்க வேண்டும். அதனால் எனக்கு அதுவும் அமையவில்லை. ஏன், நாடகங்களில்கூட வாய்ப்பு கிட்டவில்லை; பேச்சு, ஓவியம், கட்டுரை, பாட்டுன்னு மற்ற போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அறவே இல்லை - சட்டியில இருந்தாத்தானே அகப்பையில்??!! ஆக ஆண்டுவிழா வாய்ப்பு ஒரு ஏக்கமாகவே இருந்தது.
இப்படியிருக்கையில நாலாம் வகுப்பில கிறிஸ்மஸை ஒட்டி நடந்த விழாவுல என்னையும் ஒரு குரூப் டான்ஸ்ல சேத்துகிட்டப்போ அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. “கிங்கிணி கிங்கிணி என வரும் மாதா கோயில் மணியோசை” என்ற, சிவாஜி மாலைக்கண் நோய் உடையவரா நடித்த படத்தில் இடம்பெற்ற பாட்டுக்கு,(இது சினிமாப் பாடல்னு ரொம்ப வருஷங்கள் கழிச்சுதான் தெரியும் எனக்கு) அழகான பிரைட் பேபி பிங்க் கலர்ல, ஸாட்டின் துணியில, அடுக்கடுக்கா ஃப்ரில் வச்ச ஃப்ராக்தான் டான்ஸ் காஸ்ட்யூம்!! அதுக்கு ரிகர்ஸல் நடந்துகிட்டிருந்தப்போ, ஒருநாள் என் டீச்சரை முந்திகிட்டு நான் ஏதோ ஐடியா சொல்லப்போக, டீச்சருக்கு என் மேல பயங்கர கடுப்பாகி, அந்த வருஷமுடிவு வரை அதைச் சொல்லியே திட்டிகிட்டு இருந்தாங்க.
இந்த அனுபவமும், உடைக்குரிய பணத்தை அம்மாகிட்ட வாங்கிறதுக்குள்ள பட்ட பாடும் என் டான்ஸ் ஆர்வத்தையே மூட்டை கட்ட வச்சுடுச்சு!!
அப்புறம், ஒரு நீண்ட இடைவேளைக்கப்புறம், பதினொன்றாம் வகுப்புல ஒருநாள் பி.டி. டீச்சர் வகுப்புக்கு வந்து, சில மாணவிகளை அவங்களா எழுப்பி விட்டு, பேர்களைக் கேட்டு எழுதிட்டுப் போய்ட்டாங்க. என்ன ஏதுன்னு ஒண்ணு சொல்லல. மறுநாளும் அதே போல வந்து நான் உட்பட இன்னும் சிலரை எழுப்பிவிட்டு பேர்களை எழுதிகிட்டாங்க. அப்ப கிளாஸ் டீச்சர் அவங்ககிட்ட என்னன்னு விவரம் கேட்க, “இண்டிபெண்டண்ட்ஸ் டேக்கு வ.உ.சி. மைதானத்துல கலெக்டர் கொடியேத்தையில நம்ம ஸ்கூல் சார்பா டான்ஸ்க்கு பிள்ளைங்க செலக்ட் பண்றோம். கொஞ்சம் கலரா உள்ள பிள்ளைங்களா மட்டும் பாத்து எடுத்தா பத்த மாட்டேங்குது; அதான் கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவால்லன்னு இன்னிக்கு இன்னும் கொஞ்ச பேர செலக்ட் பண்ணேன்”னு பி.டி.டீச்சர் சொன்னாங்க!!
நாங்க எல்லாருமே ரொம்ப அனுபவிச்சு செஞ்ச நிகழ்ச்சி அது!! உடைக்குன்னு பெருசா செலவு எதுவும் இல்லைங்கிறதும் ஒரு காரணம். கலர்ப் பேப்பர் வாங்கி, யூனிஃபார்ம் பாவாடை, சட்டையில் அடுக்கடுக்காக ஃபிரில் போல சுருக்கு வைத்து தைத்துக் கொண்டால் உடை ரெடி!! அலை போல எழுந்து அடங்கும் டான்ஸ் அது. டான்ஸ் ரிகர்ஸல், உடை தயாரிப்பு என்று வகுப்புகளைக் கட் அடிக்கவும் முடிந்ததால் மிகவும் மகிழ்ச்சியான காலம் அது.
நிகழ்ச்சி அன்று, எங்களை அழைத்துச் செல்ல இரண்டு பெண் காவலர்களுடன் வந்திருந்த அரசு வாகனத்தில் (ஹி.. ஹி.. போலீஸ் வேனேதான்!!) ஏறப்போனபோது, ஒரு காவலர் என்னிடம், “ஏம்மா மேக்கப் போடல? கொஞ்சம் பவுடராவது தேச்சுருக்கலாம்ல?”னு அப்பத்தான் பவுடர் போட்டுட்டு வந்த என்னைப் பாத்து கேட்டாரே பார்க்கலாம்!! பி.டி. டீச்சர் செஞ்சது தப்பேயில்லைன்னு தோணுச்சு.
அடுத்தது, பன்னிரெண்டாம் வகுப்பு ஆண்டுவிழாவில், தமிழாசிரியை எழுதிய தமிழ் வரலாற்று நாடகத்தில் நான்தான் மெயின் ரோல் - அரசர் வேஷம்!! வீராவேசமான வசனங்கள் வேற!! ராஜா உடைக்காக, நல்ல கிராண்டாகப் பட்டுச்சேலை வேண்டுமென சொல்ல, நான் அம்மா, சித்திகளின் கல்யாணச்சேலையைக் கொண்டு வந்தால், எதுவுமே கிராண்டாக இல்லை என்று ரிஜெக்ட் செய்துவிட்டார்!! சேலை கிடைக்கலைன்னா, அரசர் பதவி போய்டுமேன்னு நான் கலங்க, அம்மா, வசதியான வீட்டிலிருந்து வந்த அவரது அண்ணியிடம் போய்க் கேட்கச் சொன்னார்; அத்தைக்கு மனசேயில்லை; என்றாலும் கேட்பது நாத்தனார் மகளாச்சே, முடியாதுன்னு சொல்லமுடியுமா? “நிறைய பின் குத்தாதே”ன்னு ஒரு நூறுதரம் சொல்லித் தந்தாங்க.
நிகழ்ச்சியன்னிக்கு, தேசமில்லா ராஜாவா நான் கம்பீரமான உடையலங்காரத்தோட எங்க முறையை எதிர்பார்த்து நிக்க, அவசரமா டீச்சர் வந்து சொன்னாங்க, “நேரமாகிடுச்சு, அதனால நம்ம நாடகம் கேன்ஸல்!!”. கைக்கெட்டினது...
அப்புறம், கல்லூரி இறுதியாண்டுல நாங்க பொறுப்பெடுத்து நடத்துன ஆண்டுவிழாவில், ஒரு நிகழ்ச்சியிலாவது பங்குபெறணும்னு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி “விளம்பரம் செய்வது”. நாங்க நாலு தோழிகள் சேர்ந்து, கான்செப்ட் ரெடிபண்ணி, வசனமெல்லாம் எழுதி ரெடி பண்ணியாச்சு. இப்ப ஒரே ஒரு “ஹீரோ” வேணும்!! 24 பெண்கள் + 6 ஆண்கள் உள்ள எங்க வகுப்பில உள்ள ஆறு ஆண்கள்ல யாருமே முடியாதுன்னுட்டாங்க. அப்புறம், அடுத்த டிபார்ட்மெண்ட்ல உள்ள ஸ்மார்ட்டான ஒரு பையன் சரின்னு வந்தான். ஒத்திகையெல்லாம் பாத்துகிட்டிருக்கும்போது, ஒரு நாள், எங்க டீம்ல உள்ள ஒரு பெண்ணை, அவளின் அடர்ந்த நிறத்தையும் அழகையும் குறிப்பிட்டு அவன் டீஸ் பண்ண, கோவம் வந்து நாங்க மூணுபேரும் அவன்கிட்ட சண்டை போட, நிகழ்ச்சி கேள்விக்குறியானது. அப்புறம், சில “நல்ல நாட்டாமை”களின் உதவியோடு அவன் மீண்டும் எங்கள் டீமில் வந்து நடித்துத் தந்தான். அதுக்கு ரெண்டாவது பரிசும் வாங்கிட்டோம்!!
என்னவோ ஆண்டுவிழாக்கள் (கூட!!) எனக்குத் தகராறாவே ஆகிப்போச்சு. பசுமையான நினைவுகளை அசைபோட வச்ச அழைப்புக்கு நன்றி தீபா!!
|
|
Tweet | |||
