Pages

சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் மேலானவன்...




முஸ்லிம்களின் குழு ஒன்று உம்ரா செய்வதற்காக மதீனாவிலிருந்து கிளம்பியது.  ஆனால் அவர்களை மக்காவில் நுழைய விடாமல், எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர் மக்காவாசிகள். காரணம் கொரோனா அல்ல. ஏனெனில் இது நடந்தது 1400 ஆண்டுகளுக்கும் முன்பாக. 

மக்கா, அப்போது சிலைகளை வணங்கும் குறைஷி வம்சத்தினர் வசம் இருந்தது. தமது ஆட்சி, அதிகாரம், ஆள்பலம், ஆயுதங்கள் தந்த ஆணவச் செருக்கில் திளைத்திருந்த குறைஷிகள், இறையில்லத்தைக் காணும் ஆசையோடு, பக்தியுடன் ஆயுதங்கள் இன்றி வந்த முஸ்லிம்களை, உள்ளே வரக்கூடாது என்று தடுத்தனர். திரும்பிப் போய்விட்டு, அடுத்த வருடம் வாருங்கள் என்று ஆணையிட்டனர்.

அது மட்டுமின்றி, பற்பல நிபந்தனைகள் அடங்கிய ஒரு ஒப்பந்தத்தில் அக்குழுவின் தலைவரான முஹம்மது நபி(ஸல்)-ஐக்   கையெழுத்திட வைத்தனர்.  முஸ்லிம்களை அவமானப் படுத்துவதாகவும்,  பலவீனப் படுத்தக் கூடியதாகத் தெரிந்த அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதிற்காக நபியின் மீது வருத்தம் கொண்டனர் முஸ்லிம்கள். தைரியசாலியான உமர்(ரலி) அவர்களோ ஒரு படி மேலே போய், உணர்ச்சிக் கொந்தளிப்பில் ”நாமென்ன தவறு செய்தோம்? ஏன் பணிந்து போக வேண்டும்? ஆணையிடுங்கள், போர் செய்கிறோம்” என்று நபியிடமே கேள்வி எழுப்பினார்.

சாந்த நபியோ அனைவரையும் ஆற்றுப் படுத்தினார்கள். “இது பலவீனமல்ல. அடங்கிப் போவதுமல்ல. பொறுத்தார் பூமியாழ்வார்” என்று ஊக்கமளித்தார். இறைவனும் இது வெற்றி என்றே தன் வேதத்தில் உறுதியளித்தான். அதைக் கேட்டுக் கொண்டு, எதிர்ப்பைக் கைவிட்டாலும், மனதில் குழப்பமும் கொந்தளிப்புமாகவே இருந்தனர் முஸ்லிம்கள்.  
வெகு விரைவாகவே காட்சிகள் மாறத் தொடங்கின. குறைஷிகள் முஸ்லிம்களுக்கு விதித்த நிபந்தனைகள் அனைத்துமே, அவர்களுக்கு எதிராகவே திரும்பின.  முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தும் நயவஞ்சகத் திட்டத்தோடு போட்ட அந்த ஒப்பந்தம், அவர்களையே அடியோடு பலவீனப்படுத்தி, மக்காவை எந்த எதிர்ப்புமில்லாமல், முஸ்லிம்கள் வசம் சமர்ப்பித்தார்கள்!! கத்தியின்றி, இரத்தமின்றி மக்கா வெற்றி கொள்ளப்பட்டது!! 

பெருவெற்றி பெற்ற நிலையிலும் முஹம்மது நபியோ(ஸல்) முஸ்லிம்களோ ஆடவில்லை, ஆர்ப்பரிக்கவில்லை, கொண்டாடவில்லை,  பழி தீர்க்கவில்லை. மாறாக, இறைவனுக்கு சிரம் தாழ்ந்து நன்றி கூறிவிட்டு, மக்கத்து குறைஷிகளிடம்,  “எங்கள் சகோதரர்கள் நீங்கள். எங்கள் ஆட்சியின் கீழ் நிம்மதியாக இருக்கலாம்” என்றே அரவணைத்தார்கள்!!

இது வரலாற்றின் தொடக்கக் கால சம்பவம். தொடரும் வரலாறுகளும் அவ்வாறே!! எப்போதெல்லாம் முஸ்லிம்களை அடக்கியாள்வது போன்ற நிலை ஏற்படுகிறதோ, அது முஸ்லிம்களுக்கு நன்மையையே ஏற்படுத்தித் தரும். இறைவன் ஒருபோதும் அவனை வணங்குபவர்களைக் கைவிடுவதில்லை!!

இதோ... #கொரோனா_ஜிஹாத் செய்கிறார்கள் என்று முஸ்லிம்களைப் பழித்தார்கள்; இப்போது குணமான முஸ்லிம்களின் பிளாஸ்மாவை சிகிச்சைக்குக் கேட்கிறார்களாம்!!

#68:35. நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா? (குர் ஆன்)


Post Comment