Pages

முளைச்சு மூணு இலை விட்டாச்சு


1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

    1. எங்கள் குடும்பம்
    2. நான் சமைக்காத சாப்பாடு
    3. இணைய இணைப்புடன் கூடிய ஒரு லேப்டாப்

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

1.  சிகரெட் நாற்றம்
2.  பிள்ளைகளிடம் கோபப்படும் என்னை
3.  சமைப்பது -  என்ன சமைக்க என முடிவு செய்யமுடியாத நாளில்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

1. மருத்துவமனை வாசம் செய்ய வேண்டிய நிலை
2. கேஸ் சிலிண்டர் மாற்றுவது (ஒவ்வொரு முறையும் பாம் ஸ்குவாட் போல திக் திக்தான்)
3. மரணம் மற்றும் மரணத்தின் பின்னான நிலைகுறித்து

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

1. குடிப் பழக்கத்தைப் பெருமையாகப் பறைசாற்றுபவர்கள்
2. உறவு வகைகளில் ‘முறுக்கு’ காட்டுவது
3. இந்திய அரசியல்வாதிகளின் அடங்காத பண ஆசை

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1. செல் ஃபோன், லேண்ட் லைன் கார்ட்லெஸ்
2. இன்றைய செய்தித்தாள்
3. பதிவு எழுதும் லேப்டாப்

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

1. இடம், காலம், பொருள் பாராமல், ’புச் புச்’ என்று கிடைக்கும் முத்தங்கள் - என் சின்னவனிடமிருந்து
2. டாம் & ஜெர்ரி
3. நகைச்சுவைப் பதிவுகள்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

1. இந்தப் பதிவின் 8வது கேள்விக்கு என்ன பதில்னு யோசிக்கிறேன்.
2. இந்தப் பதிவின் 9வது கேள்விக்கு என்ன பதில்னு மூளையைக் கசக்கிகிட்டிருக்கேன்..
3. ஹப்பாடா, இந்தக் கேள்விக்கு மூணு பாயிண்ட் கண்டுபிடிச்சுட்டோம்னு  சந்தோஷப்படுறேன்!!

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)
1. என் பிள்ளைகளுக்கு இஸ்லாம் கூறும் இறைநம்பிக்கையை முழுதாக ஊட்டிவிடவேண்டும்.
2. ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் - பண்ணைவீடு உட்பட
3. என் உறவுகளின் ஸகாத் (நோன்பு மாதத்தில் சொத்தின்மீது கணக்கிடப்படும் இஸ்லாமிய வரி) அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வழிகள் நோக்கல்.
   
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

(அல்ஹம்துலில்லாஹ் - புகழனைத்தும் இறைவனுக்கே)
1. நானே சமைப்பேன்
2. நானே மூச்சு விடுறேன், நடக்கிறேன், நிக்கிறேன், படுக்கிறேன் - இப்படியே என்றும் தொடர இறைவன் அருள் நாடுகிறேன்.
3. இந்தப் பதிவை முடிச்சுடுவேன் - எப்படியாவது. (கேள்வி கேக்கிறது ரொம்ப ஈஸி..)
   

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

1. ஃபயர் இஞ்சின்/ ஆம்புலன்ஸ் சைரன்
2. என்னிடம் யாராவது என் வீட்டிற்கு வழி கேட்பது. (ஹி.. ஹி.. வர்றது பிடிக்காம இல்லை; எனக்கு வழி சொல்லத் தெரியாது.. ஆனா, எங்க தெருமுனைக்கு எப்படியாவது வந்துட்டீங்கன்னா,  அதுக்கப்புறம் கரெக்டாச் சொல்லிடுவேன்.)
3.  ”எனக்கு லேப்-டாப்பில் வேலை இருக்கு. இப்பத் தரமுடியாது” என்ற என்னவரின் கூற்று!!

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

1. பொறுமை
2. நீச்சல்
3. ஸ்கேட்டிங்
   
12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பிடிக்காததுன்னு கேட்டிருந்தா கடகடன்னு சொல்லிருப்பேன். ஸோ, இந்தக் கேள்வியைச் சாய்ஸில் விடுறேன்!!


13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

முணுமுணுப்பதுலாம் இல்லை; அடிக்கடி விரும்பிக் கேட்கிறதுன்னு வேணா வச்சிக்கலாம்.

1. இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

2. ‘நஷீத்’ எனப்படும் இசையில்லாப் பாடல்களில், தற்போது “Give thanks to Allah"

3. 'நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்

   
14) பிடித்த மூன்று படங்கள்?

1. சதிலீலாவதி
2. காதலிக்க நேரமில்லை
3. பாமா விஜயம்

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

     1. உயிர், மூச்சு, சுய நினைவு (எல்லாமே ஒண்ணு மாதிரிதானே?)
     2. என் குடும்பம்
     3. தினமும் செய்தித்தாள்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

1. ஜெய்ஹிந்த்புரம் பீர் - பாஸ், உங்க ரேஞ்சுக்கு இந்தத் தொடர்பதிவுகளெல்லாம், ஷங்கருக்கு லோ-பட்ஜெட் படம்போலன்னு தெரியும். இருந்தாலும், ’தீவிர அரசியலிலிருந்து’ ஒதுங்கி இருக்கும் உங்களை ஃபீல்டுக்குள்ள மறுபடி கொண்டுவர ஏதோ என்னாலான ஒருவழி. :-))))

2. ஸாதிகா அக்கா - எத்தனை தரம் என்னை மாட்டி விட்டிருப்பீங்க?

3. அப்பாவி தங்கமணி - எங்கே ஆளைக் காணோம்? தொடர்கதைய முடிக்கக்கூடாதுன்னு யாரும் கடத்தி வச்சிருக்காங்களா? :-)))))
Post Comment

டிரங்குப் பொட்டி-17
 மறுபடியும் மும்பையில் தீவிரவாதம். மும்பைன்னா பாலிவுட்னு அடையாளம் இருந்ததுபோய், குண்டுவெடிப்புனு ஆகிடுமோன்னு பயம்மா இருக்கு. முந்தைய வழக்குகளில் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்காமல் வைத்திருப்பது, வழக்கு விசாரணையை இன்னும் முடிக்காமல் அல்லது ஆரம்பிக்காமலேயேகூட வைத்திருப்பது - இதெல்லாம்தான் இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக அமைகிறது. இதுபோன்ற ’தீவிரமான’ வழக்குகளையாவது சீக்கிரம்  சரியா விசாரிச்சு முடிவுக்குக் கொண்டுவந்து, கடும்தண்டனைகள் வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு நியாயமாவது கிடைத்ததுபோல் இருக்கும். இப்பவும், விசாரிக்கக் கூட்டிப் போன ஒருத்தர், மர்மமா மரணமடைஞ்சிருக்கார்.

செத்தா இத்தனை லட்சம், காயமடைஞ்சா இத்தனை ஆயிரம் (அது எந்த மூலைக்குக் காணும்?)னு அறிவிக்கிறதோட அரசின் பங்கு முடிஞ்சதாவே நினைச்சுடுறாங்க.

________________________

வழக்கம்போல, பாகிஸ்தானை நோக்கியும் விரல்கள் நீட்டப்படுகின்றன. தன் மண்ணில் ’தினம் தினம் தீபாவளி’யாக  வெடிக்கும் குண்டுகளையே கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தானின் மீது இப்போதெல்லாம் பரிதாபம்தான் வருகிறது!! மேலும், பாகிஸ்தான் தொடர்பு தீவிரவாதிகள் என்று அவர்கள் மீதே கவனம் மையம் கொண்டிருப்பதால், உண்மையான குற்றவாளிகளை கோட்டை விட்டுவிடுகிறோமோ என்னவோ? (சீனாவும் நமக்கொன்னும் பெஸ்ட் ஃப்ரண்ட் இல்லியே?)

உதாரணமாக, சில நல்லவைகள் பாகிஸ்தானால் நடந்தாலும்கூட கண்டுகொள்வதில்லை. மீடியாக்களும் வெளிக்கொணர்வதில்லை. சமீபத்தில் MV SUEZ என்ற கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டபோது, இந்தியா அதை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தக் கப்பலில் இருந்த 6 இந்தியர்களும் கூறியுள்ளனர். மாறாக, பாகிஸ்தானின் ஒரு தொண்டு நிறுவனம்தான் $2.1 மில்லியன் பணயத்தொகைக்கு ஏற்பாடு செய்துகொடுக்க, விடுவிக்கப்பட்டனர். மேலும் மூழ்கவிருந்த MV SUEZ கப்பலிலிருந்து பாக் கடற்படைதான் அனைவரையும் மீட்டது என்றும் கூறியுள்ளனர்.

_________


ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நகரான மனிலாவில், வீட்டில் வெளிச்சம் கிடைக்க ஒரு எளிய முறையைக் கடைபிடிக்கிறார்கள். என்னன்னா, ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது. இதையே, கூரையில் ஒரு துளையிட்டு கண்ணாடி போட்டால் என்ன என்று கேட்கலாம். அப்படிச் செய்தால், அது அந்தத் துளையின் நேரே மட்டும்தான் ஒளிபாய்ச்சும். இந்த ‘பாட்டில் முறை’யிலோ, அறை முழுவதுற்குமாக, 55 வாட்ஸ் அளவு வெளிச்சம் கிடைக்கிறதாம். தண்ணீரில் பாசி பிடிக்காமலிருக்க, நான்கைந்து ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் கலந்துவிட்டால், சுமார் நான்கு வருடங்கள் வரை இந்த ஒற்றை பாட்டில் தொடர்ந்து மங்காமல் வெளிச்சம் தருமாம்!! ஒரே அறைக் கூரையில் நான்கைந்து பாட்டில்களை மாட்டிவிட்டால், வெளிச்ச வெள்ளம்தானாம். ஆஃப்-ஆன் பண்ணும் சிரமமில்லை. மின்சாரக் கட்டணக் கவலையில்லை!!

நம்ம ஊரப் போல இலவச மின்சாரம் எல்லா இடத்துலயும் இருக்குமா என்ன?
______________

சுற்றுலாவுக்கெனவே படைக்கப்பட்ட ஊராகிவிட்ட கோவாவில், கடல் தண்ணீர் குளிக்கும் தரம் கொண்டதில்லை என ஆய்வுகள் தெரிவிக்குமளவு மாசுபட்டு விட்டனவாம். இந்த அதிர்ச்சி செய்தி வெளிவந்த அதே சமயம், அங்கே உள்ள 450 வருட பாரம்பரியம் நிறைந்த மஹால்ஸ நாராயணன் கோவிலில் டூரிஸ்டுகள் முறையான ஆடை அணிந்து வராவிட்டால், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள பிரபல ”The Basilica of Bom Jesus” சர்ச்சிலும், அரைகுறை ஆடை அணிந்து வருபவர்களுக்கு போர்வைகள் தரப்படும்; அதை அணிந்துதான் சர்ச்சினுள் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"desigual" என்ற பிரபல ஸ்பானிஷ் ஆடை நிறுவனம், ஐரோப்பிய நகர்களில் தன் கடைகளில் ஒரு சிறப்பு திட்டத்தை ஒரு நாள் மட்டும் அறிவித்து நிறைவேற்றியது. அது, "Arrive Half-naked; Leave fully-dressed"  என்பதுதான்!! முதலில் வரும் 100 பேருக்கு இலவசமாம். ரிஸஷனால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்களும் உதவியா இருந்துச்சாம் இந்தத் திட்டம்.

______________________

அமீரகத்தில் தமிழ் ரேடியோ என்பது மலையாள ஏஷியா நெட் ரேடியோவில், தமிழர்கள்மீது பரிதாபப்பட்டு,  தினமும் இரவு அரைமணி நேரம் ஸ்லாட் கொடுத்து, பாடல்கள் ஒலிபரப்பாவது மட்டும்தான். இடையே ‘சக்தி எஃப்.எம்.’ என்ற பண்பலை தொடங்கப்பட்டு, சீக்கிரமே முடிந்தும்விட, பழையபடி ஏஷியாநெட்டே கதி என்று ஆனது. அதிலும், சமீபகாலமாக, அதிலே ஒரு நாளில் ஒலிபரப்பப்பட்ட பாடல்களே, ஓரிரு வாரமாக மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் ஒலிபரப்பாக, ஒருவேளை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆஸிஃப் மீரானும், பதிவர் என்பதால் “மீள் பதிவு” செய்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. அதுவும், வார வேலை நாட்களில் இரவில், நாளைக்கு மறுபடி ஆஃபிஸ்/ஸ்கூல் போகணுமேன்னு கவலையோடு இருக்கும் நேரத்தில், ”இந்த வார இறுதி நாளை மகிழ்ச்சியோடு கழிக்க வாழ்த்துகிறோம்’னு தொகுப்பாளர் (ரெக்கார்டட்) சொல்லும்போது ரேடியோவைத் தூக்கிப் போட்டு உடைக்கலாம்போல வரும்!!

நல்லவேளை, இப்போ ‘ஹலோ எஃப்.எம்.’ வந்துடுச்சு. (கார்ப் பயணங்களின்போது மட்டுமே கேட்க முடிகிறது). இதன் நிகழ்ச்சிகள் ஒரு வழக்கமான பண்பலை ரேடியோ போலத்தான் இருக்கு. நான் முழுநேரம் கேட்பதில்லை என்பதால், விசேஷமான நிகழ்ச்சிகள் என்னன்னு தெரியலை. ஆனா, பெரும்பாலும், இரவுப் பயணங்களின்போது ஒரு நிகழ்ச்சியை வழக்கமாகக் கேட்க நேருகிறது. அதன் விளம்பரம் என்ன தெரியுமா? “நல்ல நிகழ்ச்சிகளின் நடுவே ஒரு திருஷ்டிப் பொட்டு”!! நிகழ்ச்சியின் பெயர் “லாஸ்ட் பெஞ்ச்”. ஆமாம், அதுக்கேத்த மாதிரி நிகழ்ச்சியும் இருக்கும். ஜோக் சொல்கிறோம் என்ற பெயரில், நம் கழுத்தை ரேடியோவிலிருந்தே எட்டிப் பிடித்து இழுத்து அறுத்துவிடுகிறார்கள்.

இரவு நெடுநேரப் பயணங்களில் தூக்கம் வராமலிருக்க பெரிதும் உதவுகிறது   இந்த நிகழ்ச்சி.  அவங்க கடிக்கிற கடி கொசுக்கடியைவிட கொடுமை!!

Post Comment

பட்டிக்காடா பட்டணமா
ஸாதிகாக்கா அழைத்த தொடர்பதிவுக்காக, எங்க ஊரைப் பத்தி எழுதுறேன். பிறந்த ஊரா, புகுந்த ஊரா, வாழும் ஊரான்னு இத்தனை நாளா மனசுக்குள்ள  பட்டிமன்றம் நடத்தியதில் சொந்த ஊர்தான் ஜெயித்தது!! (ஹி.. ஹி.. லேட்டாகிடுச்சுன்னு நேரடியாச் சொல்லமாட்டோம்ல!!)

தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் தின்னவேலிச் சீமைதான் எங்க ஊர். கடல் போல பெருக்கெடுத்து ஓடும் தாமிரவருணி ஆறு உள்ள ஊர். கடல் இல்லாததால், சுனாமி ஆபத்து இல்லைன்னு நிம்மதியா இருந்தோம்; பொறுக்க முடியாம, கூடங்குளம் அணு ஆலையை அந்தப் பக்கம் கொண்டு வந்து வச்சிட்டாய்ங்க!!

பக்கத்து ஊரான நாகர்கோவில் முதல் பக்கத்து மாநிலமான கேரளம் வரை எங்க ஊரைத் தேடிவர வைக்கும் ஆரெம்கேவி, போத்தீஸ் போல அரசன் ஐஸ்கிரீம்ஸும் திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்று!!  நகரில் தனியார் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்களோடு போட்டி போடும், மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியும், அரசு சித்த மருத்துவமனையும் உண்டு.

 இது பாரதிராஜா பட கிராமமில்லை;  நெசமா எங்க ஊருதான்!!

திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் டவுண் ஆகியவற்றிலிருந்து 5-6 கிமீ தூரத்தில் உள்ள எங்க ஊரில், தாமிரவருணியின் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. வாய்க்காலின் ஒருகரையில் வரிசையான தெருக்களில் வரிசையாக அமைந்த வீடுகள், மறுகரையில் வயல்கள், மலைத் தொடர், அதையொட்டி ரயில் பாதை என்று அழகான ரம்மியமான பசுமைக் காட்சிகள் கொண்ட ஊர்.  அந்த வாய்க்கால்தான் விவசாய ஆதாரமாக மட்டுமின்றி, குளிக்க, குடிக்கவும் ஆகியிருந்தது - அப்போ!!

முற்காலங்களில் விவசாயம், நெசவு, பர்மா/சிலோன் வியாபாரங்கள் ஆகியவையே வருமான வழிகளாக இருந்து, பின்னர் அவற்றின் அழிவினால், பீடி சுற்றுதலில் வந்து நின்றாலும், வறுமை குறையவில்லை எங்க ஊரில். மக்கள் கல்வியின் சிறப்பை அறிந்திருக்கவில்லையாதலாலும், உடன் பசிதீர்க்கவேண்டிய அவலமிருந்ததாலும், பதின்மப் பருவத்திலேயே அரபு நாடுகளில் கீழ்நிலை வேலைகள் செய்யத் தொடங்கி, அதில் பல சிரமங்களை அனுபவித்தபின், கல்வியின் சிறப்பை உணர்ந்து, தற்போது எப்பாடு பட்டேனும், தம்மக்களை - ஆண்-பெண் பேதமில்லாமல் - ஒரு பட்டம் பெற வைத்துவிடுகிறார்கள்.

எங்கள் ஊரும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஊர்களைப் போலவே,  கல்வியிலும் சிறந்து விளங்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இவ்வருடம் 10ம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடமும், +2 தேர்வில் மாநிலத்தில்  நான்காம் இடமும் பெற்றதே சாட்சி. இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், மென்பொருளாளர்கள், கடுபொருளாளர்கள் (ஹி.. ஹி.. hardware specialists!!), கணக்காளர்கள் என்று பல்வேறு துறையிலும் இளைய தலைமுறையினர் சிறந்து விளங்குகின்றனர். கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாகத் தெரிந்தாலும், சிலர் இருக்கிறார்கள். அத்தோடு மருத்துவக் கல்லூரியில் சேர்பவர்களது எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.  (கலெக்டர்தான் இன்னும் யாரும் ஆகலை :-((   ) ஊருக்குள்ளேயே பல பள்ளிகள், ஒரு பெண்கள் கல்லூரி, இஸ்லாமிய கல்லூரிகள் இருப்பதும் வளர்ச்சியின் அறிகுறிகள். இவையெல்லாவற்றோடு இஸ்லாமிய விழிப்புணர்வும் வளர்ந்து வருகிறது, புகழனைத்தும் இறைவனுக்கே.

இத்தோடு, வணிக முறையிலும், எங்கள் ஊர் மிகுந்த வளர்ச்சி கண்டிருக்கிறது.  ஒரு பட்டிக்காடு பட்டணம் ஆனது என்று சொல்லுமளவு, முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் திருநெல்வேலி ஜங்ஷன் அல்லது டவுண் செல்ல வேண்டிய நிலை மாறி, தற்போது எல்லாமே ஊருக்குள்ளேயே கிடைக்கிறது. முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ள ஊர் என்றாலும், எல்லா தரப்பினரும் வாணிபம் செய்கிறார்கள் எங்கள் ஊரில். உள்ளுர்லயே தரமான மருத்துவர்களும் உண்டு. எனினும், சில சிறப்பு தேவை/சேவைகளுக்கென்று நகருக்குச் செல்வோம்.

மற்றபடி, என் சொந்த ஊர் மிகவும் எளிமையான ஊர். நிறையப் பதிவர்கள் அவரவர் ஊரின் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்ததுபோல, விதவிதமான சாப்பாட்டு வகைகளென்று லிஸ்ட் போட்டு எழுதுமளவு இல்லையென்றாலும் மற்ற ஊர்களில் உள்ளதுபோல, மருந்துச் சோறு, சேமியா பிரியாணி, தக்கடி, மடக்குப் பணியாரம், ஓட்டுமாவு, எனச் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி, உணவைப் போலவே, எங்கள் ஊரின் பல எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம் என்று நினைப்பதால், அவற்றைப் பகிர்கிறேன்.

 #%#  ஊருக்குள்ளேயேதான் கல்யாண சம்பந்தம் செய்துகொள்வார்கள். மிக மிக அரிதாகத்தான் வெளியூர் சம்பந்தம் செய்வது.

 #%#  எல்லாருமே உள்ளூர்க்காரர்கள் என்பதால், யார் வீட்டுக்குச் சென்றாலும், தேநீர்/ஹார்லிக்ஸ்/பூஸ்ட் மட்டுமே பரிமாறப்படும். நெருங்கிய உறவுகளாக இருந்தால், அல்வா, மிக்சர் போன்ற ஸ்நேக்ஸும் பரிமாறப்படும். விருந்துக்கென்று பிரத்யேகமாக அழைக்கப்பட்டாலொழிய உணவருந்துவதில்லை. (அதுவே வெளியூர்க்காரர்களாக இருந்தால், எந்நேரமானாலும் விருந்துடன் பலமான கவனிப்பு இருக்கும்). 

 #%#  கல்யாணத்திற்கு அல்லது விசேஷங்களுக்கு அழைப்பதும் இன்னார்தான் போய் அழைக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் இல்லை. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பள்ளியிறுதி/கல்லூரி மாணவர்கள்தான் இதற்குப் பொறுப்பு. வீட்டுப் பெரியவர்கள் தெருவாரியாக லிஸ்ட் போட்டுக் கொடுக்க, இவர்கள், அழைக்கப் போவார்கள். குடும்ப வகையறாக்களை அடையாளம் சொல்ல, உடன் ஓரிரண்டு நடுத்தர வயதுப் பெண்களும் செல்வார்கள்.

#%#  அழைக்கச் செல்லும் வீட்டில் யார் இருந்தாலும் பத்திரிகையைக் கொடுத்து விபரம் சொல்லிவிட்டு வந்துவிடலாம். பெரியவர்களை நேரில் பார்த்துத்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. “என்கிட்டே நேரில சொல்லல” அல்லது “எம்பொண்டாட்டிய அழைக்கலை” என்றெல்லாம் வீம்பு பிடிக்க வழியில்லை!!
 
#%#   ஆனால், அழைக்கப்படும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, உங்களை கல்யாணத்திற்கு மட்டும் கூப்பிடுகிறார்களா அல்லது விருந்திற்கும் அழைக்கிறார்களா என்பதை!! ஆமாம், “இந்த நாள், இந்த நேரம் ஆண்-பெண் அனைவரும் சாப்பிட வாங்க” என்று அழைத்தால்தான் விருந்துண்ண செல்லவேண்டும்!! அதிலும், உறவின் நெருக்கத்தைப் பொறுத்து, ஆண்-பெண் அனைவரும், ஆண்கள் மட்டும் அல்லது குடும்பத் தலைவர் மட்டும் என்று விருந்து அழைப்புகள் அமையும். ரொம்பக் கவனமாக் கேக்கணும்!!

#%#    வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயம், சிறுவயதினர் மட்டும் இருந்தால், இதைக் கவனிக்கத் தவறிவிட்டால், பெரியவர்களிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும்!! (நாங்களும் வாங்கிருக்கோம்ல!!) ஏனெனில், கூப்பிட்டும் விருந்துக்குப் போகவில்லையென்றால், நமது அதிருப்தியைத் தெரிவிப்பதாகக் கருதப்படும்.

#%#    இது உங்களுக்கு வியப்பைத் தந்தாலும், மிகவும் வசதியான முறையாக எனக்குத் தெரிகிறது. முதலில், விருந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்துவிடுமாகையால், உணவு தயாரிக்கும் அளவை முடிவு செய்வது எளிது. வீணாகும் அளவு வெகுவாகக் குறையும். மேலும், விருந்துக்குச் செல்லவிலையென்றாலும், உறவின் நெருக்கத்தைப் பொருத்து, விருந்து முடிந்தபின், உணவை நம் வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள். வரமுடியாத வயதானவர்கள், வர வசதிப்படாத நிலையில் உள்ளவர்கள் இருப்பது முன்பே தெரிந்தால், விருந்து தயாரானதும் உடன் அவர்களுக்கு வீட்டிற்கே கொடுத்துவிடுவார்கள்.

#%#    வெளியூர்க்காரங்களுக்கு இந்த விதி பொருந்தாது. உங்களை எங்க வீட்டு கல்யாணத்துக்கு அழைச்சோம்னா, அது கல்யாணத்தன்று நடக்கும் விருந்துக்கும் சேர்ந்த அழைப்புதான்!! ஆனா, வராதவங்களுக்கு பார்ஸல் அனுப்பப்படமாட்டாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்!! ;-)))))

 #%#   எவ்வளவு பெரிய ஆளானாலும், கல்யாணம், விருந்து எல்லாம் வீட்டில்தான். நோ கல்யாண மண்டபம்!! ஒரு வீட்டில் விசேஷம் என்றால், விருந்து வைப்பதற்கு, வட்டாரத்தினர் (பக்கத்து வீடுகள்) தம் வீட்டின் முன்னறை/ஹாலைக் காலி செய்து தரவேண்டியது கட்டாயக்கடமை. சமையலும் நடுத்தெருவில் வைத்துதான் நடக்கும். சமையலுக்கு தயார்செய்வதிலும், கலத்தில் (பந்தியில்) பரிமாறுவதிலும் வட்டாரத்துக்காரர்கள்  உதவவேண்டும்.

#%#    கல்யாணம் முடிந்தபின், பெண் தினமும் மதியம் தன் தாய் வீட்டிற்கு  வந்துவிட்டு, அந்தியில்தான் கணவன் வீட்டிற்குச் செல்வாள். கூட்டுக் குடும்பங்கள் என்பதாலும், முன்பு தனியறைகள் இல்லா மணமகன் வீட்டில் பெண்ணுக்கு ஓய்வு எடுக்க வசதியிருக்காது என்ற காரணத்தாலும் ஏற்படுத்தப்பட்ட பழக்கமாக இருக்கலாம். இப்போதும் தொடர்கிறது.

#%#    திருமணமான புதிதில் முதல் ஒருவாரம் வரை மணமகன் வீட்டினர் வந்து மாலையிலும், அடுத்த நாள் மதியம் பெண்வீட்டினரும் வந்து பெண்ணை  அழைத்துப் போவார்கள். ஏன்னா, புதுமணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை வீடு போய்வர வழிதெரியாதே? அதன்பிறகு பெண்களே சென்றுவருவார்கள். இப்போல்லாம், (பெரும்பாலும்) பைக் வைத்திருக்கும் சகோதரனிடமும், கணவரிடமும் இந்த ட்யூட்டி தரப்படுகிறது!!

#%#    கல்யாணத்தில் பெண்ணுக்குப் போடப்படும் நகைகளின் அளவு என்பது மணமகள் வீட்டினரின் இஷ்டம்!! எந்த டிமாண்டும் வைக்கப்படமாட்டாது!! ஒரே டிமாண்டான வரதட்சணையையும் இப்போல்லாம் பெரும்பாலான இளைய தலைமுறை ஆண்கள் தடுத்துவிடுகிறார்கள்.

#%#    மேலும் கல்யாணச் சீர் என்பது கட்டில்-மெத்தை தவிர்த்து, 11 பாத்திரங்கள் மட்டுமே!! இதில் கும்பா (சின்னக் கிண்ணம்) முதல் பெரிய கொப்பரை வரை அவரவர் வசதிப்படி எவர்சில்வர் மற்றும் வெண்கலத்தில் வாங்கிக் கொடுக்கலாம்.

#%#    கல்யாண விருந்தும், இரு தரப்பும் தனித்தனியே தத்தம் உறவினர்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும், இந்த விருந்து கல்யாணத்திற்கு முந்தைய தினம் “ஊர்ச்சாப்பாடு” என்ற பெயரில் நடத்தப் படும்.

#%#    பொதுவிருந்து என்பதும் - வலியவரானாலும், எளியவரானாலும் -  நெய்ச்சோறு, மட்டன் குழம்பு, தாளிச்சா என்ற எளிமையான ஒரே பொதுமெனுதான்!! அதிலும், மட்டன் குழம்பு மட்டும் ஒருமுறைதான் பறிமாறப்படும். “ரீ-ஃபில்” கிடையாது!!
     #%#   ஆஹா, இவ்வளவு எளிமையா என்று தோணினாலும், இதில் சேமிச்சதையெல்லாம் விருந்துகளில் பெண்வீட்டினர் விட்டுவிடவேண்டிவரும். பெண்வீட்டுத் தரப்பில், மணமகன் வீட்டாருக்கு வைக்க வேண்டிய விருந்துகள் பலவகை உண்டு.  ஏழுநாட்கள் பெண் அழைப்பு விருந்து வைத்து, மணமகன் வீட்டிற்கும் தினமும் கொடுத்து விடுவது, மறுவீடு, மாமி பசியாற, மாப்பிள்ளை பசியாற, இன்னும் என்னென்னவோ பெயர்களில் விருந்து உண்டு. மணமகன் தரப்பிலோ ஏழுநாள் மணமகள் அழைக்க வருபவருக்கு விருந்து தவிர, ஒன்றிரண்டு சிம்பிளான விருந்துகள் மட்டுமே.

    இருந்தாலும், பல ஊர்களின் பழக்க வழக்கங்களைக் கேட்ட/பார்த்த பிறகு, எங்க ஊர் பழக்கங்கள்தான் எளிமையா தெரியுது!! எனினும், இதுவே அதிகபட்சச் சுமையாகத் தெரியுமளவுக்கு வறுமையும், அறியாமையும்  இன்னும் இருக்கிறது ஊரில்.

    தற்போது இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வரதட்சணையைத் தடுத்து வந்தாலும், மற்றவைகளைத் தடுக்க அதிக முயற்சி எடுப்பதில்லை. ஏனெனில் பலருக்கும் இத்தகைய பழக்கவழக்கங்கள் இருப்பதே தெரிவதில்லை என்பதோடு, இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்பதாகக் கருதிவிடுவதாலும் கூட இருக்கலாம். அதேசமயம், சில செல்வந்தர்கள், தம் அந்தஸ்தை நிரூபிக்க எளிமையாக இருக்கும் நடைமுறைகளையும் மாற்றி வருவதால், உண்மையாகவே இவற்றைத் தடுக்க நினைப்பவர்களுக்கும், எளியவர்களுக்கும் தடைக்கல்லாக அமைகிறது.

    எனினும், மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன, மனங்களிலாவது.

    Post Comment